கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label பனிக்காலத் தனிமை. Show all posts
Showing posts with label பனிக்காலத் தனிமை. Show all posts

பனிக்காலத் தனிமை - 14

Wednesday, May 13, 2026

 

இலங்கையில் Walk for 'Peace'  

****

அமெரிக்காவில் Walk for Peace நிகழ்ந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பிக்குகள் நடப்பதைப் பார்த்திருக்கின்றேன். அவை குறித்து விரிவாக எழுதவும் செய்திருக்கின்றேன். அந்த நிகழ்வு முடிந்தபோது, அதன் முன்னணி பிக்குவான பன்னங்கார அடுத்து தாங்கள் இலங்கைக்குப் போவதாகத் தெரிவித்திருந்தனர். டெக்ஸஸில் அமைந்திருக்கும் பிக்கு பன்னங்கரா சார்ந்த விகாரைக்கு இலங்கையிலிருந்து அரசமரக்கன்றைக் கொண்டு வருவதே அதன் முக்கிய நோக்கம் என்று தெரிவித்திருந்தனர்.

கடந்தவருடம் இந்த அரசமரக்கன்றை ஏற்கனவே இலங்கையில் தெரிவு செய்து வைத்திருந்தனர். இப்போது அதை உரியமுறையில் அனுரதாபுரத்திலிருந்து அமெரிக்காவுக்கு எடுத்து வருவதே இதன் முக்கிய நோக்கம்.
 

இதன் நிமித்தம் அதே Walk for Peace  ஒருபகுதியினர் அனுராதபுரத்திலிருந்து கொழும்புவரை கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடந்து செல்லத் தொடங்கியிருந்தனர். இந்த நிகழ்வை அறிந்தபோது இது குறித்து பகிர விரும்பியபோதும், இலங்கையின் நிலைமை குறித்து  சரியாகத் தெரியாது பகிருதல் நல்லதல்ல என நினைத்திருந்தேன்.

நினைத்ததுபோலவே முதல் நாளிலிருந்து இலங்கை இராணுவம் சீருடையில் முன்னணியில் நிற்கும்போதே இந்த Walk for Peace எனக்கு எந்த அமைதியையும் தராது என்று விலத்தியிருந்தேன்.

*

இலங்கையைப் பெளத்த நாடென்றுதான் தொடர்ந்து அங்கிருப்பவர்கள் பிரகடனப்படுத்தியபடி இருக்கின்றார்கள். புத்தரும் அங்கே தெய்வந்தான். புத்தரின் படங்களுடன் ஆடையோ, ஏன் எமது உடல் எமது உரிமை என்று நினைத்து புத்தரைப் பச்சை குத்தியிருந்தால் கூட 'புத்தரை அவமரியாதை' செய்ததாக ஜெயிலில் போட்டது கடந்த காலத்தில் நடந்திருக்கின்றது.

பெரும்பான்மை மக்களின் இந்த கடவுள் நம்பிக்கையில் நாம் தலையிடத் தேவையில்லை. அவரவர்க்கு அவரவர் தெய்வம். ஆனால் இன்று வத்திக்கானில் இருக்கும் போப்பாண்டவரே அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பேசும் தைரியம் வந்தபோது கூட, இலங்கையில் 'இடதுசாரி' சார்புள்ள அரசு ஆட்சிப்பீடமேறியபோது மகாசங்கங்களில் ஆசியின்றி ஏதும் செய்ய முடியாத நிலையே இலங்கையின் யதார்த்தமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி போப்பாண்டவரை அவமதிப்பது போல இலங்கையின் இதுவரை எந்த ஜனாதிபதியாலும் 'உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் அரசு  எங்களுக்கு' என்று வாய்திறந்து வெளிப்படையாகப் பேசினால் அவர் அடுத்த நாள் ஜனாதிபதியாக இலங்கையில் இருப்பாரா என்பதே சந்தேகந்தான். அந்தளவுக்கு அரசமரத்து வேர் போல இலங்கையில் பெளத்தம் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே இவ்வாறான இலங்கையில் புத்தர் ஒரு சாதாரண மனிதராக இருந்து நிர்வாணமடைந்தவர் மட்டுமே என்று சொல்ல எவராலும் வெளிப்படையாக முடியாது. இது இலங்கைக்குரிய பிரச்சினையில்லை. இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் என்று சொல்லமுடியாதளவுக்கு கிறிஸ்தவமும் எப்போது நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது.

இப்படியாக கடவுளாக்கி நிறுவனப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து புத்தரும் இயேசுவும் தப்பியோடுவார்களோ தெரியாது, ஆனால் நான் தப்பியோடிவிடுவேன். தப்பியோடுவது என்பதன் அர்த்தம் இவ்வாறான இடங்களில் எனக்கு புத்தரோ இயேசுவோ அமைதியைக் கொண்டு வந்து தரமாட்டார்கள் என்பதாகும்.
இன்று இலங்கையின் பிரபல்யமான காட்டூனிஸ்டான அவந்த ஆட்டிக்கல நான் இலங்கையில் நடக்கும் Walk for Peace  குறித்து சரியாகப் பிரதிபலித்து ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கின்றார்.

*

புத்தருடைய வாழ்க்கை வரலாற்றில், அவர் காசியப்பவைச் சந்திப்பது பற்றி அடிக்கடி நினைவூட்டப்படுகிறது. மகாகாசியப்பாவே புத்தரின் மறைவின் பின் புத்ததர்மாவை நிலைநாட்டியவரும் முதன்மைச் சீடரும் எனச் சொல்லப்படுகின்றார். ஸென் மரபில் 'சங்கம் (சங்கா) அமைத்த தந்தை' என புத்தரல்ல, மகாகாசியப்பதான்  நினைவு கூரப்படுகின்றார்.
ஸென் மரபில் மகாகாசியப்ப புத்தரைச் சந்திக்கமுன்னரே காசியப்ப ஓர் அசிரியராக தனது ஐநூறு சீடர்களுடன் இருந்திருக்கின்றார். எனினும் காசியப்பாவின் வழிமுறை சடங்குகளை நிகழ்த்தி நிர்வாணமடைவதாக இருந்திருக்கின்றது.

புத்தரைச் சந்திக்கும்போது காசியப்பவுக்கு அவர்தான் தான் நிர்வாணமடைவதற்குரிய பாதையைக் காட்டக்கூடிய சிறந்த ஆசிரியர் என்று உணர்ந்திருக்கின்றார். அப்போது ஓரிடத்தில் சடங்குகளா அல்லது அதைத் தவிர்த்த புத்தரின் மத்தியபாதையா நிர்வாணமடைவதற்குச் சரியானது என்ற கேள்விக்கு புத்தர் கொடுக்கும் பதில் சிறப்பானது. ஒருகட்டத்தில் காசியப்பா தனது ஐநூறு சீடர்களுடன் புத்தரின் வழிக்குத் திரும்புகின்றார். 

 


ஸென் (மகாயான புத்தம்) புத்தரை சாதாரண மனிதராக இருந்து நிர்வாணமடைந்தவர் என்று தொடர்ந்து நினைவுபடுத்தியபடி இருக்க, தேரவாதமோ அவரை இன்னுமின்னும் தெய்வமாக்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது. மேலும் இலங்கையில் இருக்கும் தேரவாதபுத்தம் சடங்குகளுடன் அதிகம் பிணைந்திருப்பது. எனவே அதற்குள் கால் வைப்பது என்பது முதலைகள் உள்ள குளத்தில் தாமரைப்பூ பிடுங்கப்போவது போல ஆபத்தானது.

இன்னின்ன முறைதான் சரியென்று வாதிடுவது சரியல்ல. அப்படி விவாதித்தால் 'எனது மத்தியபாதையை மறந்த மூடனே' என்று எங்களை புத்தர் எள்ளி நகையாடக்கூடும். மேலும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் இருமைகள் என்னும் துவிதங்களுக்கும் எளிதாக சிக்கியும் விடுவோம். அது அவ்வளவு எளிதில் வெளியேற முடியாத மர்மச்சூழலும் கூட.

ஆகவே இப்போது இலங்கையில் நடக்கும் இந்த Walk for Peace யும், இலங்கையின் யதார்த்தத்தையும் பிரதிபலித்த இந்தக் கார்ட்டூனையும் கொஞ்சம் மறப்போம் அல்லது தள்ளிவைப்போம்.

*

"புத்தரும் அனைத்து புத்த வழித்தோன்றல்களும் ஞானமுற்று தம் முதல் போதனைகளை வழங்கியபோது, மனவிழைவின் இரு எதிர்த்துருவங்களைச் சுட்டிக்காட்டினர் - இன்பத்தில் திளைத்தல் அல்லது துன்பத்தில் அமிழ்தல். அவற்றுக்கிடையே புலனின்பங்களில் மூழ்குபவர்கள் தாம் திளைக்கும் இன்பத்தால் ஒருபோதும் நிறைவுறாமல் அமைதியிழந்து இறுதியில் துன்பமிக உழன்று நிலைகுலைந்து தவிப்பர். இவ்வாழ் உழல்வு சம்சாரச் சூழல் மயக்கத்தின் பிரதிபலிப்பு.

அனைத்து மனிதர்களும் இவ்விரு எதிர்த் துருவங்களில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களால் தம்மத்தின் நடுவழியை ஒருபோதும் காணமுடிவதில்லை. புத்தர்கள் இவ்விரு எதிர்த்துருவங்களால் விளையும் துயரைச் சுட்டிக் காட்டினர். எனினும் நாம் தொடர்ந்து அத்துருவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவற்றை மேலதிகமாக விழைவுவுறுவதால், மீண்டும் மீண்டும் அவற்றின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறோம். அவ்விரண்டும் மயக்கத்தின் வழிகள், தியானிப்பவரின் வழிகள் அல்ல. அமைதிக்கான வழிகள் அல்ல என்கிறார் புத்தர்."

('புத்த தியானக் கருவூலம்,ப.38, வி.அமலன் ஸ்டேன்லி)

என்று அஜான் சா 'சுதந்திரத்தின் சுவை' நூலில் கூறுவதை நாம் இப்போது நினைவு கொள்வோம்.

***


(கார்ட்டூன்: Peace Walk by Awantha Artigala)

 

பனிக்காலத் தனிமை - 13

Friday, March 06, 2026

 

திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்துக்குச் சென்றபோது ஒருவரைக் கண்டேன். அப்போது அவருடன் பேசவில்லை என்றபோதும் பின்னர் குவாடிசிஸில் உணவருந்தும்போது அவரோடு உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற இந்திய வம்சாவளியின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்றும், அங்கே தானொரு அங்கிலிக்கன் ஃபாதர் எனவும் சொன்னார். ஒரு பாதிரியாருக்கு அருணாச்சலமலையில் என்ன வேலை எனக் கேட்க முன்னரே, அவர் திருவண்ணாமலைக்கு வந்தபோது ஏதோ ஓர் ஈர்ப்பு சிவனில் வந்து, சிவபக்தராகிவிட்டேன் என்றார்.

மனிதர்கள் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலைக்கேற்ப மாறுவது இயல்பு. ஆனால் எப்படி இயேசுவும், சிவனும் ஒருவருக்குள் சரிசமனாக இருக்க முடியும் என்று அவரைப் பார்க்கும்போது வியப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அவரைச் சந்தித்து 10 வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்றும் அவர் இரண்டு நம்பிக்கைகளையும் கைவிடாது தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று மக்களிடம் உரையாடியபடி இருக்கின்றார் என்பதை அவரின் சமூகவலைத்தொடர்பால் அறிந்து கொள்ள முடிகிறது.



இதற்கு நிகரான ஓர் அனுபவத்தை நேற்று அனுபவித்திருந்தேன். இருபது புத்த துறவிகள் 2,300 மைல்கள் 110 நாட்களாக தொடர்ந்து நடந்த Walk for Peace இன்றோடு முடிந்தது. கடந்த சில நாட்களாக அவர்கள் வாஷிங்க்டன் டிசியிலும், மேரிலாண்டிலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களை நடக்கும் பாதைகள் எல்லாம் சூழ்ந்திருந்தார்கள். சாதாரண துறவிகளான அவர்களை என்னைப் போன்று முகநூலில் பின் தொடர்பவர்களே கிட்டத்தட்ட 2.8 மில்லியனைத் தாண்டியிருந்தது.

நேற்று ஒரு பிரமாண்டமான கதீட்ரலில் சமாதானத்தின் பொருட்டு அனைத்து மதக்குருமார்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூடியிருந்தார்கள். இந்த புத்த துறவிகள் கதீட்ரலுக்குள் நுழையும்போது தேவாலயத்துக்குள் இருந்து ஒரு பெண் பியானோவுடன் இயேசுவிற்கான சமாதானப்பாடலைப் பாடிக்கொண்டிருந்தது வார்த்தைகளில் எளிதில் விபரிக்க முடியாத நெகிழ்வாக இருந்தது.

ஊரில் பக்கத்து ஊரில் ஒரு தேவாலயம் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு பயம் காரணமாக, எங்கள் ஊரிலிருந்து போர் நிமித்தம் வெளியேறும்வரை அதற்குள் நுழைந்ததில்லை. அதுபோலவே இலங்கையில் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு புத்த ஆலயத்துக்குள்ளும் போனதில்லை. எவரும் போகக்கூடாது, எவரும் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லாமலே எவ்வாறான இந்தப் பயம்/விலகல் அந்த வயதுகளிலே எம்மைப் போன்றவர்களுக்கு நுழைந்தது என்று இப்போது யோசித்துப் பார்க்க திகைப்பாக இருக்கின்றது.

புலம்பெயர்ந்து கனடா வந்ததன் பிறகு, இங்குள்ள  கோயில்களுக்குப் போனதைவிட, தேவாலயங்களுக்கும், புத்த மடலாயங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும், குருத்துவராக்களுக்குந்தான் அதிகம் போயிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன்.

*

சில மனிதர்களுடனான உரையாடல்களோ, சில இடங்களுக்கான பயணங்களோ அவ்வளவு அற்புதமாக இருக்க, இது ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென மனம் அவாவிக் கொண்டிருக்கும். அப்படித்தான் தினமும் Walk for Peace நடையோடு ஒன்றிக்கொண்டிருந்த எனக்கு இந்த நடைப்பயணம் ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென இதயம் விம்மிக் கொண்டிருந்தது. அவர்கள் நடக்கும்போது மக்களின் முகங்களில் இருந்த அமைதியும், அவர்களுக்காக காத்திருந்த குழந்தைகளின் களங்கமின்மையும் எனது நாட்களுக்கு அவ்வளவு நெகிழ்வைத் தந்திருந்தன.

Uploaded Image

இந்த நடைப்பயணத்தைத் தலைமை தாங்கிய துறவி பன்னங்கராவிடம், இப்பயணத்தில் எது உங்களுக்கு மறக்கமுடியாது இருந்தது எனக் கேட்கப்பட்டபோது, ஒருவகையில் இவ்வளவு மக்கள் எமக்காகத் தெருக்களில் காத்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், இன்னொரு புறத்தில் இவ்வளவு மக்கள் துயரங்களோடு இருக்கின்றார்கள் என்பது கவலையைத் தந்தது என்றார். அதாவது எமக்காய்க் கண்ணீருடன் காத்திருந்து கதைகளைச் சொன்ன மக்கள் அவர்கள் தமது சொந்த வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்தால் எமக்காக இப்படிக் காத்திருக்க மாட்டார்கள் அல்லவா என்றார்.

அப்படி மக்கள் அமைதியுடன் தமக்கான வாழ்வதையே நான் அதிகம் எதிர்பார்க்கின்றேன், விரும்புகின்றேன் என்றார். எமது நடைபவனி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது, எவருமே எமக்காக காத்திருக்காதபோது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று எண்ணி நாங்கள் இன்னும் சந்தோசமாக நடந்திருப்போம்  என்றார் பன்னங்காரா. இதுதான் இப்பயணத்தினூடு நாம் தவறவிடாது எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் எனச் சொல்வேன்.

தனிப்பட்டோ அல்லது சமூகவலைத்தளத்திலோ ஒருவர் தற்பெருமையோடோ/காழ்ப்புணர்வோடோ உரையாடிக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் உண்மையிலே தன்னளவில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இல்லையென எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் புறவயமாக வரும் எந்த சந்தோசமும் உண்மையான மகிழ்ச்சியே அல்ல என்ற புரிதல் வரும்போது நம் வாழ்வு கொஞ்சம் அமைதியடைந்துவிடக்கூடும்.  சிலவேளைகளில் இன்னும் அர்த்தமுடையதாகவும் அது மாறிவிடவும் கூடும்.

துறவி பன்னங்கராவும் அதனால்தான் 'அமைதி என்பது வேறு காரணிகளால் வரக்கூடியது என்றால் அது உண்மையான அமைதியல்ல. அந்த அமைதி எந்தக் கணத்திலும் குழப்பிவிடக்கூடியது'  (Peace with a condition that is not peace) என்று நம்மை எச்சரிக்கின்றார். அதுபோலத்தான் நேசமும் என்பதை நாம் கவனிக்கத் தவறும்போதுதான் நமக்கான நேசமும் நம்மிலிருந்து கைநழுவிப் போவதையும் அவதானித்திருப்போம்.

ஒரு துறவி சிலவருடங்களுக்கு முன் ஒரு உறுதியை (bow) எடுக்கிறார். தனது ஆசிரியரிடம் இதற்காய்த் தலைவணங்கிச் சம்மதம் கேட்கிறார். பிறகு சகோதரத்துவத்துடன் ஏனைய புத்த மடலாயத் துறவிகளிடம் என்னோடு சேர்ந்து இப்படி நடக்கச் சம்மதமா எனக் கேட்கின்றார்.



இறுதியில் பல்வேறு நாடுகள்/நகரங்களைச் சேர்ந்த 20 புத்த துறவிகள் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றனர். அவர்களில் பலருக்கு இதற்கு முன் ஒருவருக்கு ஒருவரைக் கூடப் பழக்கமில்லை. ஆனால் இந்த 2300 மைல்களை, கடந்த நூறு நாட்களாகச் சேர்ந்து  நடக்கின்றனர். இடையில் பெரும் விபத்தைச் சந்தித்து சிலர் காயமடைகின்றனர். ஒரு புத்த துறவி தனது இடது காலை இதன் நிமித்தம் இழக்கின்றார். இவ்வளவு இழப்பு/துயரத்தினூடாக அவர்கள் தொடர்ந்து நடக்கின்றனர்.

கடும் வெயில் எரிக்கும் டெக்ஸலிலிருந்து வாஷிங்டன் டிஸியை அடையும்போது பெரும் பனியைச் சந்திக்கின்றனர். வெறும் கால்களோடு நடந்தவர்கள் பின்னர் பாதணிக்கும், இறுதி நாட்களில் குளிரையும் பொருட்படுத்தாது வெறும் காலுக்கும் (சில துறவிகள்) மாறியிருந்தனர். இதில் தலைமை தாங்கிய பன்னங்கரா உட்பட பலர் பனிக்குளிரில் மிக மோசமான உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆனால் ஒருவர் நோயால் பின்தங்கினாலும்  இன்னொருவர் இக்குழுவைத் தலைமை தாங்கித் தொடர்ந்து நடந்திருக்கின்றனர். அவ்வளவு உறுதியாக தாம் எடுத்துக் கொண்ட பயணத்தில்  தளர்வடைவதில்லை என்று இருந்திருக்கின்றனர்.

ஓரிடத்தில் ஒரு முதிய பெண்மணி (78) தனது வாழ்வில் இந்த நடைபயணத்தைப் பார்த்தது பெரும் ஆசிர்வாதம் எனச் சொல்கின்றார். தனக்கு இந்தப் புத்த துறவிகளால் கொடுக்கப்பட்ட பூக்களை நான் உலர வைத்து காப்பாற்றப் போகின்றேன். எனக்குப் பிறகு எனது பிள்ளைகள் எனது பேரப்பிள்ளைகளிடம் இந்தப் பூக்களைக் கொடுக்க வேண்டும், அந்தப் புதிய தலைமுறை இந்த சமாதானத்துக்கான பயணத்தை அப்போது நினைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். எவ்வளவு ஆழமாக இந்தத் துறவிகள் அந்தப் பெண்மணியின் ஆழுள்ளத்தில் விதையொன்றை ஊன்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறதல்லவா?

இந்த உலகிலிருந்து நாம் நீங்கிப் போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்று நம்மனைவருக்கும் எளிதாகப் புரியும். ஆனாலும் நாம் தொடர்ந்து உலகாயத விடயங்களை நோக்கியே ஈர்க்கப்பட்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றோம். அவ்வளவு எளிதாக இது நாம் பிறந்ததிலிருந்தே conditioned செய்யப்பட்ட மூளைக்குப் புரியப்போவதும் இல்லை. இல்லாவிட்டால் அவ்வளவு தெளிவாகத் தெரிந்த ஒன்றைக் கைவிட்டு, தற்காலிக நிம்மதியைத் தரும் விடயங்களை நோக்கி ஆலாய்ப் பறந்து கொண்டிருப்போமா என்ன?

இந்த நாளை நிம்மதியாக, Today is going to be my peaceful day என்று எழுதிவிட்டு, அதை நாள் முழுதும் கைவிடாது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் என்றால், உங்கள் நாள் அவ்வளவு அழகாக்கிவிடும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விடயங்களையும் mindful ஆகச் செய்யுங்கள், முக்கியமாக multitask என்ற சுழலுக்குள்  மட்டும் விழுந்துவிடாதீர்கள். எதைச் செய்வதாயினும் அந்த விடயத்தை மட்டும் செய்யுங்கள், அதன் பிறகு அடுத்த விடயத்தைத் தொடருங்கள் என்று துறவி பன்னங்கரா மக்கள் குழுமிய ஒவ்வொரும் கூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்படி நமது ஒவ்வொரு நாளையும் அமைதியான நாட்களாக நம்மால் அழகாக்க முடியுமா என்பதுதான் இன்றைய அவசரகதியான உலகில் நம் அனைவர் முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.

***
புகைப்படம்: Walk for Peace

 

பனிக்காலத் தனிமை - 12

Sunday, February 01, 2026

 

எனது ஸென் ஆசிரியரான தாய் ஒருமுறை விமானநிலையத்துக்குப் போனபோது அவரது மாணவர் ஒருவரிடம், 'இப்போது புத்தர் இருந்திருந்தால் விமானமேறிப் போயிருப்பாரா?' எனக் கேட்டிருக்கின்றார். அவரது மாணவர் அதற்குப் பதிலளிக்க முன்னரே, 'நிச்சயமாக புத்தர் விமானமேறி பல்வேறு கண்டங்களுக்கு தம்மத்தைப் போதிக்க சென்றிருப்பார்' என்று தாயே சொல்லியிருக்கின்றார்.


புத்தர் மறைந்தபின் பல்வேறு பிரிவுகள் பெளத்தத்தில் தோன்றியிருந்தன. அதில் தேரவாத பெளத்தம், பாலி மொழியில் இருந்த புத்தரின் போதனைகளை அப்படியே பின்பற்றி ஞானமடைதல் என்ற பாதையில் போக, மகாயான பெளத்தமோ  புத்தரின் போதனைகளை ஒரு வாகனமாக்கி தனியொருவரும் பிறரும் கூட்டாக ஞானமடைதல் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தது.

தேரவாத பெளத்ததில் புத்தர் ஒருவரே மூலவர், மகாயான பெளத்ததில் பல புத்தர்களுக்கும், போதிசத்துவர்களுக்கும் இடமுண்டு. அவர்கள் போதிசத்துவர்களாக இருந்து பிறருக்கு கற்பிப்பதன் பொருட்டு நிர்வாணமடைதலைத் தள்ளிவைக்கவும் முடியும் என்று மகாயானம் கூறுகின்றது.

என்னுடைய ஆசிரியர் தாய் மகாயானப் பிரிவைச் சேர்ந்தவர். எனவே அவர் மகாயானத்துக்குரிய தனித்துவமான Lotus Sutra, Heart Sutra போன்றவற்றை அடிக்கடி பாவிப்பார். அதற்காய் தேரவாதப் பிரிவு பாவிக்கும் பாளி கனன்களை முற்றாக விலத்தி வைத்தவர் என்றில்லை. தேவைக்கேற்ப அந்தப் பாளி கனன்களையும் அவர் பாவிப்பதுண்டு.
*
இன்று அமெரிக்காவிலும், கனடாவிலும் பாரிய பனிப்பொழிவு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 'Walk for Peace' என்று 120 பயணத்தில் 92ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்தபடியிருக்கும் பிக்குகளை (கிட்டத்தட்ட இப்போது 2 மில்லியன் மக்கள் சமூகவலைத்தளத்தில் பின் தொடர்கின்றார்கள்) தயவுசெய்து இன்றாவது நடக்காது ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுங்கள் என்று பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். என்றாலும் தினம் 20-30 மைல்களாவது நடப்பது என்று தீர்மானித்தன்படி இன்றைக்கும் அவர்கள் பெரும்பனிக்குள்ளும், சறுக்கும் தெருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கின்றனர்.

Uploaded Image


இந்தியாவில் நூறுநாட்களுக்கு மேலாக நடந்தபோது அங்கே வயல்கள், சிறுபாதைகளினூடாக எளிதாக குறுக்கே நடந்து செல்ல முடிந்தது. அமெரிக்காவில் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் காணிகளாக(அதனூடாகச் செல்ல அனுமதியில்லை) இருப்பதால் எங்களால் எளிதாகப் போகமுடியாது,  நாங்கள் பெருந்தெருக்களால் மட்டுமே நடக்க வேண்டியிருக்கின்றது என்று ஒரு பிக்கு ஓரிடத்தில் சொல்லியிருப்பார்.

இந்த நீண்ட பயணத்தைத் தொடங்கிய பிக்குவான பின்னங்கரா, தான் இதுகுறித்து மூன்று வருடங்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு மக்கள் அமெரிக்காவிலும், உலகிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதுவே அமைதிக்காக நடப்பதற்கான சரியான தருணமென  நடக்கத் தீர்மானித்தேன் என்று கூறியிருந்தார். அவரின் ஆசிரியர்கள் அனுமதி கொடுக்க, பிற பிக்குகளோடு சேர்ந்து கடந்த புரட்டாதி மாதத்தில் இருந்து நடக்கத் தொடங்கியிருந்தார்.  ஆரவாமின்றித் தொடங்கிய இந்த நடைப்பயணம், இப்போது ஒவ்வொரு நகரின் மக்கள், மேயர்கள், கவர்னர்கள் கலந்துகொள்ள இன்று அது ஒரு பெரும் நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரமோ, 'இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்/ அப்பொழுது எனக்காக பேச எவருமே இல்லை' என்ற மார்ட்டின் மொல்வரின் கவிதைபோல, அரசதிகாரம் குடியேறிகள்/வந்தேறிகளைப் பிடித்து அனுப்பப் போகின்றோமெனத் தொடங்கி, இறுதியில் சொந்தமக்களையே சுட்டுக் கொல்கின்ற கொடுங்காலத்துக்கு அது இப்போது வந்துவிட்டது. எல்லா நம்பிக்கைகளும் இழக்கப்பட்டு கைவிடப்பட்ட மக்களுக்கு இந்த 'அமைதிக்காக நடத்தல்' என்பது கொஞ்சம் கருணையுடன் பற்றிக்கொள்ளும் ஓர்  'ஊடகமாக' இருக்கின்றது.

பிக்குகளும் தொடர்ச்சியாக தனியொருவரின் அமைதியே முக்கியமென தமது உரைகளில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஏதோ ஓரிடத்தில் நீங்கள் ஏன் இந்த அரசியல் அடாவடிகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டபோது, நாங்கள் அமைதிக்காக நடப்பவர்கள், ஒருவகையில் எமது ஆன்மீகப்பாதை அரசியல் பேசக்கூடாது என்பதைத் தடை செய்திருக்கின்றது. ஆனால் எங்களின் 'அமைதிக்கான நடத்தல்' என்பது நாளை நீதிக்காக நடத்தல் (Walk for Justice) என்பதற்கான விதையாக மற்றவர்களிடம் மாறினால் அதுவும் மகிழ்ச்சியானது என்றே அவர்கள் கூறியிருந்தனர்.

இன்னொரு இடத்தில், தனிமனிதர்கள் தாங்கள் கடுமையாக இன்னொருவரால விமர்சிக்கப்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்று கேட்கப்பட்டது. 'உங்கள் மீது ஒருவர் நெருப்புக் கோளத்தை வீசுகின்றார் என்றால், அதை நீங்கள் தாங்கிக் கொண்டால்தான் அந்த நெருப்பு உங்களை எரிக்கும். அதை ஏந்தாமல் கைவிடுங்கள். அப்படி கைவிடும்போது அந்த வினை எறிந்தவருக்கே மீளச் சென்று சேரும். ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அது உங்களுக்கானதாக மாறிவிடும், கவனம்' என்று ஒரு பிக்கு சொன்னார்.

இதற்கு மேலும் வலுவூட்ட, 'நீங்கள் நினைக்கின்றீர்களா, நாங்கள் இப்படி நடந்துவரும்போது எல்லாமே நல்லதுதான் நடக்கின்றது என்று. பல இடங்களில் எங்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கின்றார்கள். ஒருபொழுது காரின் சைலன்சரை அழுத்து எங்கள் முகம் முழுதும் கரியபுகையைப் படரவிட்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து நான் எதிர்வினை புரியவேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கக்கூடும். நாங்கள் அதைச் செய்யவில்லை, வழமைபோல எல்லோரையும் ஆசிர்வதிப்பதுபோல நீங்கள் நலமாகவும், மகிழ்வாகவும், அமைதியாகவும் இருங்கள் எனச் சொல்லிவிட்டுத்தான் அந்த மனதுக்கு உவக்காத சூழலையும் தாண்டி வந்து கொண்டிருக்கின்றோம்' என்று கூறியிருக்கின்றனர்.

இந்த அமைதிக்கான நடத்தலை முன்னின்று வழிநடத்தும்  பன்னங்கரா என்கின்ற துறவி 44 வயதுடையவர். அவரது பதின்மத்தில் அமெரிக்காவுக்கு வந்து பொறியியலில் பட்டம் பெற்றுவிட்டு, இரண்டு வருடங்களாகச் செய்த வேலையை உதறிவிட்டு, பிக்குவாக மாற மடாலயத்தில் சேர்கின்றார். கிட்டத்தட்ட 17 வருடங்களாக  துறவியாக அவர் இருக்கின்றார். ஆக இந்த 17 ஆண்டு தீராத பயிற்சியாலும், தேடலாலும் இந்தப் பிக்கு அவ்வளவு அமைதியாக ஒவ்வொரு விடயத்தையும் எதிர்கொள்ள முடிகின்றது, மக்களின் மனங்களோடு நெருக்கமாக உரையாடத் தெரிகின்றது.

பன்னங்கரா எனது ஆசிரியர் தாயைப் போன்று வியட்னாமியப் பின்னணியில் இருந்து வருகின்றவர். ஆனால் தேரவாதப் பெளத்தப் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவேதான் அவர் தெருக்களில் குழந்தைகளையும், முதியவர்களையும், நோயாளிகளையும் காண்கின்றபோது பிரித் ஓதி, கையில் நூலைக் கட்டி விடுகின்றார். இப்போது ஒவ்வொரு பெரும் கூட்டங்களின் பின்னும் Peace Bracelet எனக்கூறி அந்த நூலை மக்களுக்கும் அதை வழங்குகின்றார்கள். இது நீங்கள் எங்களைப் போன்ற பெளத்த துறவிகளைச் சந்தித்தீர்கள் என்பதற்காக மட்டுமின்றி, எங்களோடு சேர்ந்து  (அபெளதீகமாக) வாஷிங்டன் டிஸிக்கு நடந்து வருவதாக நினைவூட்டவும் மட்டுமில்லாது, உங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களோடு சேர்ந்து அமைதியாக நடந்து வருவதற்கு இது எனச் சொல்லி அந்த நூலினை வழங்குகின்றார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் அழிவின் பின்பாக, "இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், பாடல்கள் இருக்கும், இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்" என்று பிரெக்ட் எழுதியிருப்பார். அப்படி இருண்ட காலங்களைப் பற்றி மட்டுமில்லை, நம்பிக்கை தரும் ஒளியைப் பற்றியும் பாடல்கள் இருக்குமென்பதை இந்த 'அமைதிக்காக நடத்தல்' நமக்குச் சொல்கின்றது. ஹெமிங்வேயோ அல்லது யாரோ, "நாங்கள் எல்லோரும் உடைந்து போனவர்கள், ஆனால் அப்படி உடையும்போதுதான் ஒளி உள்ளே நுழையும்' என்று சொன்னமாதிரி அவநம்பிக்கையான காலங்களில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு எழும் இவ்வாறான கரங்கள்தான் எவ்வளவு இதமானவை.

***

நன்றி: புகைப்படம் (walk for peace fb page)

அமைதிக்காக நடத்தல் (Walk for Peace)

Tuesday, January 27, 2026

 

எனது ஸென் ஆசிரியரான தாய், Engaged Buddism என்பதைத் தொடர்ந்து முன்வைத்தவர். ஆன்மிகத்தில் மட்டுமில்லை, அரசியல், தத்துவம் போன்றவற்றிலும் இந்த Engaged தன்மை இல்லாவிட்டால் அவை கடந்தகாலத்தில் உறைந்து போன நடைமுறைக்கு உதவாத  ஒன்றாகிவிடும். தொடர்ச்சியாக உரையாடல்களால் தன்னைப் புதுப்பிக்காத எந்த விடயமும் வாழ்க்கைக்குப் பயனற்றுப் போய்விடும்.

புத்தர் 35 வயதில் ஞானமடைந்தவர் என்று சொல்லப்படுகின்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கின்றார். புத்தரின் வாழ்க்கையை அவதானித்தால் அவர் வாழ்வில் 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருந்தவர். அப்படி தொடர்ச்சியாக ஓரிடத்தில் தங்காது நடந்து கொண்டிருந்ததால்தான் புத்தம் மிக எளிதாக இந்தியாவெங்கும் பரவியிருந்தது.  புத்தர் தான் மட்டுமில்லாது, தன்னைப் பின்பற்றியவர்களையும் ஓரிடத்தில் தங்காது தொடர்ந்து நடக்க வைத்துக் கொண்டிருந்தவர்.

உணவுக்காக மக்களிடையே இரத்தலும் (பிச்சை எடுப்பதும்), மிகக் குறைந்த உடைமைகளோடு வாழ்வதும் தொடக்கத்திலேயே புத்தரால் கற்பிக்கப்பட்டால், புத்தரைப் பின் தொடர்ந்தவர்களால் இப்படி நெடுங்காலத்துக்கு நடந்து கொண்டிருப்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவும் இல்லை.

Uploaded Image

மழைக்காலத்தில் மட்டும் தொடர்ந்து நடக்கமுடியாது என்பதால் அவர்கள் ஓரிடத்தில் தங்க வேண்டியிருந்தது. அதுவே பிற்காலத்தில் மழைக்கால retreat ஆக மாறியது. இன்றும் எனது ஆசிரியரான தாய் உள்ளிட்ட பல புத்தப் பிரிவுகளில் இந்த மழைக்கால retreat நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க/ஐரோப்பா போன்ற புத்த மடலாயங்களில் இது winter retreat எனப் பெயர் சூட்டப்பட்டது.

*
இன்றைய ஐக்கிய அமெரிக்காவில் உள்நாட்டிலே நடைபெறும் அக்கிரமங்களும், இதே அமெரிக்கா பிறநாடுகளின் இறையாண்மையில் புகுந்து செய்யும் அட்டூழியங்களும் நாமனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி விரித்தெல்லாம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இவ்வாறான இருண்ட காலங்களில் நம்பிக்கை தரும் ஒருவிடயமாக இருபதுக்கு மேற்பட்ட பிக்குகள் டெக்ஸலில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு நடக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அதற்கு 'அமைதிக்காக நடத்தல்' எனப் பெயரிட்டு நூற்று இருபது நாட்களாக நடந்து 2,300 மைல்களைக் கடப்பதாக இருக்கின்றார்கள். இப்போது எண்பது நாட்களின் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு இந்தப் பிக்குகள் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல இடங்களில் நடந்திருக்கின்றனர். இப்போது இப்படியொரு நடையைச் செய்யலாம் என்று டெக்ஸசில் இருக்கும் புத்த மடலாயத்தில் இருந்து ஒரு எண்ணத்தை ஒரு பிக்கு முன்வைத்தபோது தாய்லாந்து, வியட்னாம், இந்தியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து பிக்குகள் இணைந்து இப்போது சமாதானத்துக்காக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

நடத்தல் என்பது எளிதாகத் தெரிந்தாலும், அவர்கள் நடப்பது எப்போதும் பாதுகாப்பான பாதைகள் அல்ல. அவர்களோடு அவர்கள் இந்தியாவில் நடந்தபோது மேற்கு வங்காளத்தில் கண்டெடுத்த தெரு நாயான 'அலோகா' வும் சேர்ந்து நடக்கின்றது.

இந்த நடத்தல் எளிது ஏன் இல்லை என்று சொல்கின்றேன் என்றால், ஒருநாளில் கிட்டத்தட்ட அவர்கள் 20-30 மைல்கள் நடக்க வேண்டும். இப்படி அவர்கள் நடந்தபோது 67வது நாளில் ஒரு பெரும் விபத்தைச் சந்தித்திருக்கின்றார்கள். இதனால் அப்படி நடந்து கொண்டிருந்த சில பிக்குகள் காயமடைந்திருக்கின்றார்கள். அதில் ஒருவரின் இடது கால் வெட்டி எடுக்குமளவுக்கு விபத்து ஆபத்தின் எல்லைக்குப் போயிருக்கின்றது.

எனினும் இந்தப் பிக்குகள் நடந்து கொண்டிருக்கின்றார்கள். தொடக்கத்தில் நடப்பது மட்டுமே குறிக்கோள் என்று நடந்து கொண்டிருந்தார்கள். சின்னதொரு RV அவசரத்தேவைக்காக சென்று கொண்டிருந்ததைத் தவிர, எவ்வித உதவிகளையும் எதிர்பார்த்து அவர்கள் நடக்கவில்லை. தொடக்க நாட்களில் இரவுகளில் யாரேனும் காணிகளில் அனுமதி கேட்டு கூடாரம் அமைத்து தங்கிக் கொள்வார்கள். பின்னர் காலைகளில் எழும்பி நடக்கத் தொடங்குவார்கள்.

இந்த 'அமைதிக்காக நடத்தல்' என்கின்ற விடயம்,  இந்தப் பிக்குகளே எதிர்பார்க்காத அளவுக்கு தீ போல அமெரிக்க மக்களிடையே பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது அவர்களை ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் பாதைகள் எங்கும் நின்று வரவேற்கின்றார்கள். அவர்களின் மதிய/இரவு பேச்சுக்களைக் கேட்க மணித்தியாலக் கணக்கில் இந்த மக்கள் காத்திருக்கின்றார்கள்.

எந்தப் பெரும் பின்புலமும் இல்லாது தொடங்கிய இந்தப் பிக்குகளின் நடை, இப்போது முகநூல், இன்ஸ்டாவில் ஒன்றை மில்லியனுக்கு மேற்பட்ட பின் தொடர்பவர்களால் நிரம்பி வழிகின்றது. அவர்கள் நேரடியாகக் கொடுக்கும் உரைகளைக் கேட்க, தினம் சமூக வலைத்தளங்களில் நான்காயிரம்/ஐயாயிரம் பேர்கள் (நானுட்பட) காத்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு விடிகாலையையும் Today is going to be my peaceful day என எழுதி அன்றைய பொழுதைத் தொடங்குங்கள் என்று இடைவிடாது சொல்கிறார்கள்.

*

இதுதான் ஆர்ப்பாட்டமில்லாத பெரும் மாற்றம். நீங்கள் உண்மையான நோக்கத்துக்காக சுயநலமில்லாது செயற்படும்போது மிகப்பெரும் மக்கள் திரளைக் கவர முடியும் என்பதற்கு இந்த அமைதிக்கான நடத்தல் மிகச் சிறந்த உதாரணம்.  பிக்குகளின் உரைகள் கூட மிக எளிய உரைகள்தான். ஆனால் அது மக்களின் ஆழ்மனதைத் தொடுகின்றது.  அதைக் கேட்டு மனம் நெகிழ்கிறார்கள், கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இந்தப் பிக்குகளோ, தொடர்ச்சியாக எங்களின் உரையை மட்டும் கேட்பதாகவோ அல்லது எங்கள் இந்த நடை 120 நாட்களின் முடிந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு நீங்கள் போவதாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் மனதுக்கு அமைதியைக் கொடுங்கள். தினம் 15 நிமிடங்களாவது தியானம் செய்து உங்கள் நாளாந்தத்தை அழகுபடுத்துங்கள், எனத் தொடர்ந்து சொல்லியபடி இருக்கின்றார்கள்.

இந்த பிக்குகளைப் போலவே, அவர்களோடு தொடர்ந்து நடக்கும் அலோக்கா நாயும் பிரபல்யமடைந்து விட்டது. அதற்கென நிறைய இரசிகர் கூட்டங்கள்.  சமூக வலைத்தளங்களில் அலோக்காவுக்குவென புதிய பக்கங்களைத் தொடங்கியிருக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன் அலோக்கா தொடர்ச்சியாக நடந்த காரணத்தால், ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் போனபோது பலர் கவலையில் மூழ்குமளவுக்கு அலோக்கா இப்போது அமெரிக்காவில் அவ்வளாவு பிரபல்யம். இனி நிறைய நாய்களுக்கு இந்தப் பெயர் அமெரிக்காவில் வைக்கப்படும் என நினைக்கின்றேன்.

நான் இந்த பிக்குகளின் நடைபயணங்களில் உருகி நிற்கும் மனிதர்களையும் அவர்களின் கண்ணீரையும் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் பார்க்கும்போது, இந்த பிக்குகள் எத்தனை தூரம் மக்களின் மனதிற்குள் போயிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்திருக்கின்றேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணம், நான் பிறந்த நாட்டிலும் இதே பெளத்தந்தான் பெரும்பான்மையாக இருக்கின்றது. ஒருவகையில் நாங்கள் அந்தவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் ஒருபோதும் இப்படி நெகிழ்ச்சியாக உணர எங்கள் நாட்டு பெளத்தம் எனக்கு எதையும் தரவில்லையே,  எவ்வளவு துரதிஷ்டசாலிகள் என்றும் நினைத்துக் கொண்டேன்.

ஏன் இப்படியான ஒரு நடையை, இலங்கையில் வடக்கிலிருந்து தெற்கிலிருந்து நடந்தால் கூட 300 மைல்களைத் தாண்டாத சிறுதீவில் புத்த பிக்குகள் சமாதானத்துக்காக நடக்க முன்வரவில்லை என்றும் நினைத்தேன். ஒரு அரசியல்வாதியை/அரசியல் கட்சியை விட, இந்த ஆன்மீகத்துறவிகள் எமது நாட்டை ஒன்றாக்கும் விதைகளை எளிதாகத் தூவ முடியும் அல்லவா?

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர்க்கோ எந்த ஆலமரத்தில் ஒரு புது புத்த விகாரையை ஆக்கிரமித்துத் தொடங்கலாம் என்பதிலே நாளும் பொழுதும் கழிகிறது. அப்படி பலவந்தமாக வைக்கும் புத்த மடலாயங்களிலிருந்து முதலில் வெளியேறுவதே புத்தராகத்தான் இருப்பார் என்கின்ற சிறு ஞானமும் இல்லாத பிக்குகளாக அவர்களும் அவர்களைச் சார்ந்த பெளத்த பீடங்களும் இலங்கையில் இருப்பதுதான் துயரமானது.

அவர்களின் புத்தரையும், புத்தத்தையும் நாம் இப்போதைக்கு ஒருபக்கம் விட்டுவிடுவோம். நமக்கு Engaged Buddism சொல்லித் தந்த தாயிலிருந்து எண்ணற்ற ஸென் துறவிகளும், இப்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் இந்த புத்த பிக்குகளும் சமாதானத்துக்கும், நமது தனிவாழ்வுத் துயரங்களின் மீட்சிக்குமான நம்பிக்கையாக இருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து அமைதியைக் கற்றுக்கொள்வோம்.

***

புகைப்படம்: 'Walk for Peace'

 

பனிக்காலத் தனிமை - 11

Saturday, October 18, 2025

 

மெரிக்காவில் ஸென்னைப் பரவலாக்கிய ஒருவராகிய சூஸிகி ரோஸி சான் பிரான்ஸிற்கோவிற்கு வரும்போது அவருக்கு 55 வயதாகியிருந்தது. சூஸிகி ரோஸியின் குழந்தைப் பருவம் வறுமைக்குள் கழிந்தது. தனது சிறுவயதில் வளர்ந்த தலைமயிரைக் கூட சலூனுக்குச் சென்று வெட்ட முடியாத காரணத்தால், தனது தந்தையார் தனது தலையை நன்றாக மழித்துவிடுவார் என்றும் அதனால் பாடசாலையில் தனது மொட்டைத்தலையை எள்ளல் செய்தபடி சக மாணவர்கள் இருப்பார்கள் எனவும், இதனால் தனது பாடசாலைப் பருவம் மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும் ரோஸி சொல்லியிருக்கின்றார்.

சூஸிகி ரோஸியின் தந்தையார் ஒரு புத்த மடலாயத்திற்குப் பொறுப்பானவராக இருந்தவர் . ஆனால் அன்றைய மெஜி பேரரசர் (Emperor Meiji) பெளத்த மடாலயங்கள் அனைத்தையும் ஷின்டோ (Shinto) மடலாயங்களாக மாற்றி அரசின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தார். ஒருவகையில் வேறிடத்தில் இருந்த பெளத்தம் வேண்டாம், ஜப்பானிய பூர்வீக மதங்களுக்குத் திரும்பவேண்டும் என்ற நோக்கில் இப்படி அனைத்தும் ஷின்டோவாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

சூஸிகி ரோஸி தனது 13 வயதில் தந்தையிடம் அனுமதி கேட்டு இன்னொரு பெளத்த மடலாயத்தில் சென்று சேர்கின்றார். ரோஸி ஆசிரியராக ஸென்னைக் கற்பிக்கும் நிலைக்கு வந்தபோது அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றார். அவருக்கு ஜப்பானில் பெளத்தம் அதன் அசலான நிலைமையிலிருந்து மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. புதிய நிலப்பரப்பில், பெளத்தம் குறித்து எவ்வித முன்முடிவுகளும் இல்லாத இடத்தில் ஸென்னை கற்பிப்பது சிறந்ததென முடிவு செய்கின்றார்.
ஆனால் ரோஸியின் ஆசிரியர் அவரது இந்த முடிவுக்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் அவர் தனது ஐம்பதுகளில் (1959இல்) அமெரிக்காவுக்கு ஒரு ஜப்பானிய மடலாயத்துக்கு குருவாக வருகின்றார். அங்கும் அது ஒரு மதகுருவாக இருந்தாலும் அவரது கனவான ஸென்னை அதன் மூலத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதற்காக காலையிலும் மாலையிலும் 'சடங்குகளுக்கு' வெளியே சொல்லித் தர, பின்னர் சூஸிகி ரோஸி ஒரு முக்கிய ஸென் ஆசிரியராக மாறியது வரலாறு.

சூஸிகி ரோஸி 'ஏன் அமெரிக்காவுக்கு வந்தேன்?' என்று உரையாடியிருக்கின்றார். இத்தனைக்கும் ரோஸி அமெரிக்காவுக்கு வந்து உயிரோடு இருந்த ஆண்டுகள் 12 ஆண்டுகள் மட்டுமே. ஸென் வரலாறுகள் இது ஒரு சொற்பகாலம். ஆனால் ரோஸி தனக்குப் பின் குறிப்பிட்ட மாணவர்களை உருவாக்கியதோடல்லாது, அநேக ஸென் மடலாயங்கள் போல, மாஸ்டர்கள் இறந்துபோக காலத்தில் கரைந்துபோகாது இன்றும் சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி பல நூறு மாணவர்களின் அவர்களின் தலைமுறைகளும் வந்தபடி இருக்கின்றன.

ஒன்றுமே இல்லாது வந்த சூஸிகி ரோஸி அவர் இறந்துபோனபோது மூன்று வெவ்வேறு மடாலயங்களைத் தொடங்குமளவுக்கு அவரது மாணவர்களை வளர்த்துவிட்டிருந்தார். சூஸிகி ரோஸி அமெரிக்கா வந்த இரண்டு வருடங்களில் அவரது மனைவி அமெரிக்காவுக்கு வருகின்றார். சூஸிகி ரோஸி காலையில் மாணவர்களோடு இருந்து தியானம் செய்வது முடிந்தவுடன் உடனேயே மடலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளுக்காக உடையை மாற்றிவிட்டு அந்நிலத்தில் ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார் என்று மனைவி குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு தன்னோடு கொஞ்ச நேரப் பொழுதைக் கழியுங்கள் என்றாலும் எனக்கு இந்த அமெரிக்காவில் ஸென்னை பரப்பும் விருப்பம் இருக்கின்றதெனச் சொல்லி வாரம் ஒரு முறை நடக்கும் ஆங்கில தம்ம உரைக்குத் தயாராக தனது அறைக்குச் சென்று விடுவார் எனச் சொல்கின்றார்.

ன்றைய அநேக ஜப்பானிய ஸென் ஆசிரியர்களைப் போல சூஸிகி ரோஸிக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் உரையாற்ற கடும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார். சிலவேளைகளில் இப்படி வாரம் முழுதும் தயாரித்த உரையைக் கேட்க, ஆரம்ப காலகட்டத்தில் மூன்று/நான்கு மாணவர்கள்தான் வந்தபடி இருந்திருக்கின்றார்கள். இப்படி கடுமையாக உரையைத் தயார் செய்ததற்கு ஒரு பத்துப்பேர் வந்தால் கூட பரவாயில்லை என்று தான் ரோஸியிடம் கேட்டதாக ரோஸியின் மனைவி குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு ரோஸி, ஒருவரா இல்லை ஆயிரம் பேரா , அது எனக்கு பொருட்டில்லை; நான் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் எனச் சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியான கடும் உழைப்பில்தான் சூஸிகி ரோஸி தனது மாணவர்களை உருவாக்கியிருந்தார். அதேபோல அவர் நம்பிக்கையீனங்களையும் தனக்குள் உருவாக்காது, அவரின் வாழ்க்கையில் அறிந்த ஸென்னைத் தீவிரமாக நம்பியிருக்கின்றார். அவரது கடைசிக்கால உரையில் கூட ரோஸி, நான் இன்னும் கூட பெளத்தத்தை ஆழ அறிவுப்புலத்தில் வைத்து வாசித்திருக்கலாம், இன்னும் கூட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் நாளாந்த வேலைகளில் நேரத்தைச் செலவிட்டுவிட்டேன். ஆனால் எனது மாணவர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் என்னை அறிவுப்புலத்திலும் தியானத்திலும் விஞ்சிப்போவார்கள். என் வயதொத்தவர்கள் (60களில் இருப்பவர்கள்) என் மாணவர்களைத்தான் அதிகம் நம்புவோம். நீங்கள் ஏதோ ஒருவகையில் சாதித்துக் காட்டுவீர்கள்' என்றிருக்கின்றார்.

அந்த நம்பிக்கையை வீணடிக்காது அவரின் சிறந்த மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று ஸென்னை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட நிறையப் புத்தகங்களை ஸென் பற்றியும், அவர்களின் ஆசிரியரான சூஸிகி ரோஸி பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சூஸிகி ரோஸியின் நேரடி மாணவர்களுக்கே இப்போது 80 வயதுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்த 80 வயது ஆசிரியர்களின் அடுத்த தலைமுறை மாணவர்கள் கூட தமது ஆசிரியர்களினூடாக சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். ஒரு நீண்ட தலைமுறை இப்போது சூஸிகி ரோஸிக்கு உருவாகிவிட்டிருக்கின்றது.

சூஸிகி ரோஸியை வாழ்வைப் பார்க்கும் நாங்கள் நம்பும் ஓரு விடயத்தை எவ்வளவு உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என யோசித்துப் பார்க்கின்றேன். அதுவும் ஈழத்தமிழர்களாகிய நாம் இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாம். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் ஒரு grassroots இயக்கத்தையும் எந்த நம்பிக்கை/அரசியல் சார்ந்தும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பல்வேறு அரசியல்/ஆன்மீக நம்பிக்கையாளர்கள் புலம்பெயர்ந்த தேசம் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றார்கள். நாம் எல்லோரையும் ஏன் இப்படி தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவில்லை என்று கேட்க முடியாது. ஆனால் இவ்வாறு சமூகத்தில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் அல்லது சொல்லிக் கொள்பவர்கள் ஏன் ஒரு சிறு காலடியைக் கூட உருப்படியாக வைக்க முடியவில்லை என்று அவரவர்கள் சுயவிமர்சனம் செய்யவேண்டும்.

சூஸிகி ரோஸி 1950களில் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஆங்கிலம் கூட ஒழுங்காய்த் தெரியாது. முற்றிலும் புதிய நிலப்பரப்பு மட்டுமில்லை, மனிதர்களும் கூட புதியவர்கள். என்கின்றபோது 12 ஆண்டுகளிலேயே மிகச் சிறந்த மாணவர்களையும், ஸென் மடாலயங்களையும் உருவாக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அவருக்குப் பின்னும் அது உயிர்வாழும் விதைகளையும் ஊன்ற முடிந்திருக்கின்றது. இத்தனைக்கும் ரோஸி தனது ஸென் உரைகளையும், தியானத்தையும் கற்பித்தபோது வந்த மாணவர்கள் நான்கைந்து பேரே.  

ஸென் என்றோ ஒருநாள் அமெரிக்காவில் பரவும் என்கின்ற அந்த மாபெரும் நம்பிக்கை, தொடக்ககால மாணவர்கள் ஒருசில  என்றாலும் அவர்களை அரவணைத்த விதம் இன்றைக்கு சூஸிகி ரோஸியின் மூலம் ஸென் மாபெரும் ஆலமரமாக வேரை மட்டுமில்லை விழுதுகளையும் விட்டு பரவியிருக்கின்றது.

மே
லும் சூஸிகி ரோஸி  ஒருவருக்கு வயது கூட ஒரு பொருட்டேயல்ல என்று நிரூபித்துமிருக்கின்றார். இன்றைக்கு 80களில் ஆயுதப்போராட்டத்தில் பங்காற்றியவர்கள் உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் முடிந்தபோது பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரின்முன் நீங்கள் உண்மையிலே தமிழ்ச் சமூகத்திடம்  கொடுக்க உங்களிடம் எதை வைத்திருக்கின்றீர்கள் என்பதையும், உங்களை அதற்காக எவ்வளவு தயார்ப்படுத்தி நிகழ்காலத்தோடு நிற்க முடிகின்றதா என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் அவை வெறும் வெற்று வார்த்தைகளாக/ வீணான நம்பிக்கைகளாக, தரிசு நிலத்து விதைகளாகவே நீங்கள் விதைக்கும்/பேசும் எதுவும் இருக்கும் என்பதாக அமையும் அவலச்சூழலுக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணரவேண்டும்.

சூஸிகி ரோஸி, அமெரிக்காவிற்கு வந்த புதிதில் அருகிலிருக்கும் கடையில் ரெட்டிஷ்களை சூப்புக்காக வாங்குவாராம். இவர் எப்போதும் பழைய/ வாடிய ரெட்டிஷ்களை வாங்குவதைப் பார்க்கும் கடைக்காரர், புதிதை தேர்ந்தெடுக்கலாமே என்று கேட்பாராம். அதற்கு, புதியதை வாங்க எவரும் வருவார்கள், வாடியதை ஒருவரும் வாங்கமாட்டார்கள் என வாங்கிச் செல்வராம் ரோஸி. அதுபோலவே சூஸிகி ரோஸி தனது கடைசிக்காலத்தில் ஒரு அறுவைச் சிகிச்சையைச் செய்தபின்னும், ஓய்வெடுக்காமல் அவரது தோட்டத்தில் எதையாவது வெட்டிக் கொட்டிக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்த அவரது மனைவி, இப்படியே வேலை செய்தால், உங்கள் ஆயுள் சுருங்கிவிடும் என்று கத்துவராம். அதற்கு சூஸிகி, நான் என் ஆயுளைச் சுருக்காமல் விட்டால்,  எனது மாணவர்கள் வளரமாட்டார்கள் (If i dont cut my life short, my students will not grow) என்று பதிலளிப்பாராம்.

சூஸிகி ரோஸியை தொடக்க காலத்தில் நினைவுபடுத்தும் அவரது பலர் மாணவர்கள் அவர் நன்றாகப் புகைப்பவராகவும், வாரவிறுதிகளில் பார்க்கும் ஜப்பானிய Rom-Com திரைப்படங்களுக்கே கண்ணீர் விடுபவராகவும் இருந்தவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு ஸென் ஆசிரியரை, அதுவும் அமெரிக்காவில் ஸென்னை பரவலாக்கிய ஒரு ஆசிரியரை இப்படி நம்மால் கற்பனை செய்யமுடிகின்றதா? ஆனால் இப்படியெல்லாம் இருந்தபோதும், அவரின் முதன்மை நோக்கான ஸென்னை அமெரிக்க மண்ணில் விதைப்பது என்ற விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது அவரின் இறுதிக்காலம் வரை முயன்றிருக்கின்றார். அதுவே அவரது ஸென், அதுவே அவரது தம்மம்.

*******

கார்காலக் குறிப்புகள் - 110

Thursday, September 04, 2025

 

 
னது ஸென் ஆசிரியரான தாயிடம், யாரோ ஒருவர் 'நீங்கள் அமைதியையா அல்லது பெளத்தத்தையா, எதை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள்' எனக் கேட்கும்போது, தாய் எவ்வித சலனமுமின்றி அமைதியைத் தான் தெரிவு செய்வேன் என உறுதியாகக் கூறியிருக்கின்றார். கேள்வி கேட்டவரோ, தாய் சிறுவயதில் புத்த மடலாயத்தில் இருந்து வந்தவர் என்பதோடு, புத்தரை நெடுங்காலமாகத் தீவிரமாகப் பின்பற்றி, பெளத்தத்தோடு இரண்டறக் கலந்தவர் என்பதை அறிந்தவர்.  ஆகவே தாய் இப்படி பெளத்தத்தைத் தவிர்த்து அமைதியைத் தெரிவுசெய்வேன் என்று கூறியது அவருக்கு வியப்பாக இருந்தது.

இப்படி அமைதியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று சொன்னதன் பிறகு, தாய் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கின்றார். மனதின் அமைதியை அடைவதுதான் பெளத்ததின் அடிநாதம்.  அமைதி இல்லாத பெளத்தம் என்பது பெளத்தமே அல்ல. அசலான பெளத்தம் என்பது மனதின் அமைதியை மட்டுமில்லாமல், புறவுலகிற்கான அகிம்சையையும் போதிப்பது. அவ்வாறான பெளத்தத்தில் பயிற்சியின் மூலம் அமைதியைக் கொண்டுவருவதே முக்கிய கூறாக இருக்கின்றது என்று தாய் பதிலளிப்பார்.

நான் சென்று கொண்டிருக்கும் மடலாயத்தில் தியானம் நடந்து கொண்டிருக்கும்போது வந்திருப்பவர்கள் அடிக்கடி எழுந்து செல்வார்கள். வெளியே யாரேனும் கதவைத் திறக்கும் பூட்டும் சத்தங்கள் கேட்கும். சிலவேளை காலை கறுவாத் தேநீரோ, மதியத்து சுவையான உணவோ சுவையின் நரம்புகளை அருட்டி மனதோடு விளையாடும். இவ்வாறு கவனக்கலைப்பான்கள் பல நிகழ்ந்து கொண்டிருக்கும். இதைவிட நம் மனம் பல நூற்றுக்கணக்கான எண்ணங்களில் சிக்கித் திணறி நம்மை மேலும் அலைக்கழிக்கும்.

இந்தளவுக்குப் பிறகும் தியானத்தின் மூலம் அமைதி வருகையில், இடைவெளியில் யாரோ ஒருவர் இன்னொருவரைப் பற்றி 'கோள்' சொல்லிக் கொண்டிருப்பார்; வேறொருவர் இன்றைக்கு தந்த மதியவுணவு அவ்வளவு உருசியில்லையென மற்றவருக்கு முறைப்பாடு செய்து கொண்டிருப்பார். இது போதாதென்று, ஒரு முழுநாள் தியானம் என்றால், நான்கைந்து புத்தபிக்குகள் வந்து தம்ம உரைகளையோ, பாளியில் எழுதப்பட்டவற்றுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கும்போதோ சிலவேளைகளில் நமது மனதுக்கு உவப்பில்லாதவற்றைச் சொல்வார்கள். அப்போது எழும் எரிச்சலும், கோபமும் இருக்கின்றதே, அதை அடக்காமலோ, கடந்துபோகாமலோ, இது ஏன் இப்படி எழுகின்றது என்று மனதோடு 'அறுவைச் சிகிச்சை' செய்யவும் வேண்டியிருக்கும்.


ருமுறை ஒரு மாணவர், ஸென் ஆசிரியர் பாங்கியிடம், 'ஆசிரியரே என்னிடம் அடக்கமுடியாத கோபம் இருக்கின்றது, அதை  எப்படி நான் குணப்படுத்துவது?' என்று கேட்பார். அதற்கு பாங்கி, 'உன்னிடம் ஏதோ ஒன்று விசித்திரமாக இருக்கின்றது. சரி, அதைக் காட்டு' என்று கேட்பார். 'என்னால் இப்போது காட்டமுடியாது' என்று மாணவர் சொல்ல, பாங்கி 'எப்போது உன்னால் அதைக் காட்ட முடியும்' என்று வினாவுகிறார். 'அது (கோபம்)  எதிர்பார்க்காதபோது எழுகின்றபோது மட்டுமே காட்டமுடியும்' என்று மாணவர் சொல்வார்.  

அதற்கு பாங்கி, 'அப்படியெனில் அது உன்னுடைய உண்மையான  குணாதிசயம் அல்ல. அப்படி அசலான உன் குணமாக இருந்தால், நீ எப்போது வேண்டுமானாலும் எனக்குக் காட்டியிருக்க முடியும். நீ பிறக்கும்போது அதனோடு பிறந்தவன் அல்ல. உனது பெற்றோரும் இதை உனக்குத் தந்தவர்களும் அல்ல. ஆகவே இதைப் பற்றி யோசி' என்கின்றார் பாங்கி.

இதன் நீட்சியில் வருவது, புத்த குணாதிசயம் (Buddha-Nature). நாமெல்லோரும் இப்படியான புத்த குணாதிசயத்தோடு வருபவர்கள். அப்படியெனில் ஒரு முக்கியமான கேள்வி பலரிடமிருந்து வரும். நாம் இயல்பிலே புத்த குணாதிசயத்தோடு இருப்பவர்கள் என்றால் ஏன் நாம் கஷ்டப்பட்டு தியானம் அது இதுவென்று செய்யவேண்டும் என்று. நம்மிடம் இது இருக்கின்றது என்று அறியாமல் இருப்பவர்கள் நாம் என்று ஸென் சொல்கின்றது. அதை எளிதாக தூசு படிந்த கண்ணாடியிற்கு அவ்வப்போது ஸென் ஒப்பிடும். தூசி படிந்த கண்ணாடி நம்மைப் பிரதிபலிக்கும். நமது அசலைப் பார்க்க தூசி படிந்த கண்ணாடியைத் துடைக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறு துடைத்தல்தான் தியானம். அப்போது நமது சிறிய மனது அமைதியடைகின்றது. சிறிய மனது அமைதியாக புத்த குணாதிசயம் என்கின்ற பெரிய மனது செயற்படத்தொடங்குகின்றது. நம் சிறிய மனதும், புத்த குணாதிசயமும் ஒன்றிணையும்போது நமக்கு விழிப்படைவதன் சுவை தெரியத் தொடங்குகின்றது. ஆனால் அதுவே 'பரிநிர்வாணமடைதல்' என்று நம்பவும் இந்தச் சிறிய மனது நம்மை முயற்சிக்கத் செய்யும்.

அதுவல்ல பரிநிர்வாணமடைதல். ஒரு பாலைவனத்தில் பாதை தொலைந்து போய் அலையும்போது சிலவேளைகளில் சிறு தண்ணீர் ஊற்றைக் காணும்போது மனது மகிழ்ச்சியில் திளைக்கும். ஆனால் நீங்கள் அந்தத் நீரூற்றில் தங்கிவிடமுடியாது. நீங்கள் அடைய வேண்டிய பாதை வேறெங்கோ இருக்கின்றது. எனவே தொடர்ந்து நடக்கவேண்டும். அவ்வாறே தியானத்தின்போது அவ்வப்போது நீரூற்றுக்களைப் போல இதமான விழிப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் போகவேண்டிய பரிநிர்வாணம் என்கின்ற பாதை நெடியது. தொடர்ந்து தியானம் செய்துகொண்டிருங்கள் என்கின்றது ஸென்.

கோபம் எங்களுடைய புத்த குணாதிசயம் அல்ல என்றாலும் நாம் கோபம் என்கின்ற உணர்ச்சி நிலைக்கு எளிதில் ஆளாகக் கூடியவர்கள். பலர் 'பரிநிர்வாணமடைதல்' என்பதை நாங்களாகக் கற்பனை செய்துகொண்ட சொர்க்கமாக எமக்குள்ளே வைத்திருக்கின்றோம். உண்மையில் அது அப்படி அல்ல. பரிநிர்வாணமடைந்தவர்கள் கோபம் அடையமாட்டார்கள் என்றெல்லாம் நம்பத்தேவையில்லை. அவர்களுக்கும் கோபம் என்கின்ற உணர்ச்சி வரும். ஆனால் விழிப்படைந்தபின் வரும் கோபம் என்பதை ஒருவர் கையாள்வது என்பது மட்டுமே வேறுவிதமாக இருக்கும். அதாவது கோபம் என்பது ஓர் உணர்வே என்கின்ற தெளிவு வந்து, அந்த உணர்ச்சியிலிருந்து சட்டென்று தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு வாய்த்திருக்கும்.

ஆசிரியர் பாங்கி சொன்னதுபோல, கோபம் என்பது ஒருவரின் புத்த குணாதிசயம் அல்ல, அதை எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். அதனோடு ஒன்றிணைந்து அதற்கு மேலும் எண்ணெய் ஊற்றி எரிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வராதபோது, நாம் அந்த உணர்விலிருந்து எளிதில் விடுபட்டு, வெளியில் நின்று அந்த உணர்ச்சியைப் பார்க்கின்றவர்களாக ஆகிவிடுகின்றோம்.


னக்குத் தெரிந்த நண்பரொருவர் உறவுச்சிக்கலின் ஆழத்தில் இப்போது இருக்கின்றார். அவரைப் போன்ற நிலையில் நான் 10 வருடங்களுக்கு முன் இருந்தவன். எனவே அந்த துயரமும், கையாலாகத்தனமும், தவறிழைப்புக்களும், மன்றாடல்களும், குறைகூறல்களும் எனக்குப் புதியவை அல்ல. இன்று அந்நிலையிலிருந்து மீண்டு, வேறொருவராக நான் அந்தக் காலங்களைப் பார்க்கும்போது ஒரு புன்னகை வந்தாலும், அன்றைய காலங்களில் மிகக் கஷ்டப்பட்டிருக்கின்றேன்; ஒருபோதுமே கடக்கமுடியாத காலத்தில் சிக்கி மூச்சுத்திணறுவதாய் என் மனம் கற்பனை செய்திருக்கின்றது. ஆனால் கோபத்தைப் போலத்தான், அந்த உணர்வுகளும் என் அசலான உணர்ச்சிகள் அல்ல என்று பின்னர் புரிந்தது.

இல்லாவிட்டால் இப்போது நினைத்தாலும், அதே கோபம், வெறுமை, இழப்பெல்லாம் ஒருசேர வந்திருக்கவேண்டுமே; அப்படியில்லாது அந்த உறவின் இனிய நினைவுகள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. எப்போதாவது அந்த கடிய காலம் அருட்டும்போது, சேற்றில் மலர்வதுதான் தாமரை, சேறில்லாமல் எப்படி தாமரையில்லையோ, அப்படியே துயரத்தின் படிப்பினைகள் இல்லாது காதலின் அருமை புரிவதில்லை என்று என் புதிய காதலை அரவணைத்துக் கொள்வேன்.

நண்பரே, உங்கள் மனதிலும் புதிய தாமரை மலரட்டும். நாம் உறவின் நிமித்தம் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று சபதமிட்டுச் சொல்கின்ற நம் காதலிகளின் மனங்களிலும் இதே அழகிய தாமரைகள் விரியட்டும். அவர்களின் வாழ்வும் செழிக்கட்டும்!

*****


(Aug, 2025)

கார்காலக் குறிப்புகள் - 109

Monday, September 01, 2025

 

ங்கிருக்கும் ஒரு புத்த மடாலயத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த மடாலயத்துக்கு எனது மச்சான் ஒருவர்  தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தவர். அவர் சிலாபத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சிங்களப் பாடசாலையில் படித்தவர். அவருக்குத் தமிழ் எழுத/வாசிக்கத் தெரியாது.

அந்த மடாலயத்தில் இருந்த ஒரு புத்த பிக்குவுக்கு, மடாலயத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணோடு காதல் மலர்ந்திருந்தது. ஒருநாள் துறவங்கி உள்ளிட்ட எல்லாவற்றையும் களைந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு அருகிலிருந்த அமெரிக்காவுக்குப் போய்விட்டார் என்று சொன்னார்.

உண்மையில் பிரமச்சாரியத்தில் இருப்பதென்பது மிகக் கடினம். அதுவும் பிரச்சினையில்லா பிரமச்சாரியத்தில் இருப்பது என்பது இன்னும் சிக்கலானது. எனது ஆசிரியரான தாயினது பிளம் விலேஜ் இந்தப் பிரமாச்சரியத்தில் மிகவும் இறுக்கமான விதிகளைக் கொண்டது. இத்தனைக்கும் பிரான்சிலிருக்கும் மடாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நிரந்தரமாக வசித்தபடி இருக்கின்றனர். தாயினது வழிவந்தவர்கள் தொடர்ச்சியாக இந்த பிரம்மாச்சாரிய வாழ்வு குறித்தும்,  அவர்களுக்குள் எழும் sexual enerngy குறித்தும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இயன்றளவு பதில் சொல்லியபடி இருக்கின்றனர்.

இப்படி தாயுட்டபட பல புத்த பிரிவுகளில், நிர்வாணம் அடைவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக பிரம்மாச்சரியம் இருந்தாலும், அமெரிக்காவுக்கு ஸென் பெளத்தம் வந்தபோது அது வேறுவகையாக இருந்தது. அதனால்தான் அது எளிதில் அமெரிக்காவுக்குள் நுழையுவும், பரவவும் முடிந்தது.

பெளத்தத்திற்கும் அழகும் தனித்துவம் என்னவென்றால் அது அந்த நிலப்பரப்புக்குரிய பெளத்தமாக மாறிவிடுவதாகும். அதனுடைய அடிநாதமாகிய சாரம்சாம்சத்தைக் கைவிடாது, மிகுதி அனைத்தையும் அது மாறுவதை ஏற்றுக்கொள்கின்றது. அதனால்தான் பெளத்தம் இந்தியாவில் தோன்றினாலும், பின்னர் சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ, வியட்நாமுக்கோ, திபெத்துக்கோ, ஏன் இலங்கைக்குப் போனபோதோ அது அந்த மண்ணுக்குரிய பெளத்தமாக மாறியிருக்கின்றது. அவ்வாறு அது மாறியபடியால்தான் மூல பெளத்தம் இந்தியாவில் செல்வாக்கிழந்து போனபோதும், புத்தருக்குப் பிறகான 2600 ஆண்டுகளிலும் பல்வேறு நிலப்பரப்புக்களில் உயிர்ப்புடன் இருக்கின்றது. ஒருவகையில் பின்னாளில் நமது மார்க்சியர்களில் ஒருபகுதியினர், 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' என்று பேசத் தொடங்கியதை, பெளத்தம் அது எப்போதோ 'மண்ணுக்கேற்ற பெளத்தம்' என்று  கைகொள்ளத் தொடங்கிவிட்டதெனச் சொல்லலாம்.

அமெரிக்காவிற்கு பெளத்தம்/ஸென் வந்தபோது அது ஏன் மாறுபட்டதாக இருந்ததென்றால், அமெரிக்காவுக்கு 50/60களில் வந்த ஸென் ஆசிரியர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில் 50களின் பிற்பகுதியில் வந்து, ஒரு பெரும் ஸென் மரபை ஏற்படுத்தியவராகக்  கருதப்படுகின்ற  Shunryū Suzuki இற்கு  (அவரின் மாணவர்களால் Suzuki Roshi என்று அழைக்கப்படுகின்றவர்) மனைவி, பிள்ளைகள் இருந்தனர். சூஸூகி ரோஸி அமெரிக்காவில் வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள் மட்டுமே, ஆனால் அதற்குள் சிறப்பான அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கியிருந்தார். அவரின்  'Zen mind, beginner's mind' மிக முக்கியமான நூல்.  நான் அவரின் மற்ற நூலான 'Zen is right now' உள்ளிட்ட அவரின் நேரடிய மாணவர்களாகிய Jakusho Kwong, Sojun Mel Weitsman போன்றோரின் நூல்களையும் வாசித்திருக்கின்றேன்.

எல்லா ஆசிரியர்களுக்கும், மடாலயங்களுக்கும் நிகழ்வதைப் போல சூஸுகி ரோஸியின் மரணத்துக்குப் பின்னும் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. நான் அதற்குள் இப்போது அதிகம் போகப் போவதில்லை. என்னை நேரடியாகத் தத்துவங்களை/கொள்கைகளை/வழிகாட்டுதல்களைக் கூறும் நூல்கள் அதிகம் ஈர்ப்பதில்லை. எனக்கு இவற்றை யாரேனும் ஒரு கதைபோல, முக்கியமாக தமது சொந்த அனுபவங்களினூடாகச் சொல்லும்போதே அதிகம் கவரும். உதாரணத்துக்கு சூஸூகியின் மாணவரான Sojun Mel Weitsman எழுதிய 'Seeing One Thing Through' எனக்குப் பிடித்தமைக்கு, ஸோஜூன் அதன் முதல் பகுதியில் அவர் 60களில் தியானத்துக்குள் நுழைந்ததைப் பற்றியும், தனது ஆசிரியரான சூஸூகியுடனான அனுபவங்களை விபரித்தமையும் மிக முக்கியமானது.

ஒரு ஸென் மடமும், தியானப் பயிற்சியும் புதிதாகத் தொடங்கும்போது அது அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. சூஸூகி ரோஸியை ஒரு மரபான ஜப்பான் மடலாயத்தினரே அமெரிக்காவுக்கு அழைக்கின்றனர். ஆனால் ரோஸியின் வழிமுறையோ வேறுவிதமானது. ஆகவே மரபான மடலாயத்தின் வழிபாட்டு நேரங்களைத் தவிர்த்து, விடிகாலை 5 மணிக்கு தியானத்தைத் தொடங்குகின்றார். அதற்கு பலர் வரத்தொடங்க அதை மாலை நேரத்துக்கும் செய்யத் தொடங்குகின்றார். இந்தச் ஸென்னைத் தேடி விருப்புடன் வந்தவர்கள் அந்தக்காலத்தில் ஹிப்பிகளாக இருந்த பலர். அலங்கோலமான கோலத்துடனும், ஒழுங்காய்க் குளியல்களும் இல்லாமலும் வந்தவர்களை எப்படி ரோஸி discriminate செய்யாமல் அரவணைத்துக் கொண்டார் என்பதை அவரது மாணவர் அழகாக விபரிக்கின்றார்.

இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே, இவர்களுக்கென சொந்த இடம் கிடைத்து அது இன்னும் வளர்ச்சியடைகின்றது. என்னை அதிகம் கவர்ந்த விடயம் என்னவென்றால், எவ்வித எதிர்பார்ப்போ, எந்த உறுதிமொழியோ இல்லாது எப்படி ஓர் ஆசிரியருடன் நம்பிக்கையுடன் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதுதான். தியானத்தின் மூலம் எதுவும் அடையவோ, மாயங்கள் நடைபெறவோ சாத்தியமில்லை என்கின்றபோது அப்படி ஒரு தலைமுறை தன் வாழ்க்கையை கொடுத்திருக்கின்றது என்பது இப்போது நமக்குத் திகைப்பாக இருக்கக்கூடும்.
 
ரோஸி எப்படி ஹிப்பிகள் உள்ளிட்ட எவரையும் வித்தியாசம் பார்க்காமல் அரவணைத்தாரோ, அப்படியே அவரிடையே இருந்த மாணவர்களிடையே இருந்த உடல்சார்ந்த உறவுகளையும் உள்ளபடியே ஏற்றுக்கொண்டவர். அங்கும் அவர் எவ்வித discriminate செய்யாது இருந்தவர். அதனாலேயே அந்தத் தலைமுறையில் தியானத்திற்கும், விழிப்படைவதற்கும் வந்த பலர் காதலர்களாகவும், இணையர்களாகவும் பின்னர் மாறியிருந்தனர்.

ஆனால் இப்படி சர்ச்சைகள் இல்லாது இருந்த ரோஸியின் மடாலயம் அவரின்  மரணத்தின் பின் அதை நடத்திய Richard Bakerயின் பெண் சகவாசத்தால் சிக்கலுக்குள்ளானது. ரோஸி அவரின் வாழ்க்கைக் காலத்தில் Dharma transmission செய்ய ஒரேயொரு நபர் ரிச்சர்ட் ஆவார். Dharma transmission செய்யப்பட்டாலே ஒருவர் ஆசிரியராகும் தகுதியை அடைவார். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் ஒரு புத்த மரபின் நீட்சியென (lineage) கொள்ள, அவரை அந்த மரபின் ஆசிரியர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். குருவுடன் உடனுறைந்து பத்து/பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகக் கூடியது.

*

வ்வாறு பெண்கள் விடயத்தில் பலவீனமாகப் போகும் புத்த துறவிகள் பற்றி யோசித்தபோது, இது இப்போதல்ல புத்தரின் காலத்திலிருந்தே நடக்கின்றதென்பது புரிந்தது. புத்தர் தனது சீடர்களாக இருந்த ஆனந்தா உள்ளிட்டவர்களை பிட்சை கேட்டு ஊர்களுக்கு அனுப்புவார். அவர்களுக்குக் கிடைக்கும் தானம் எதுவாயினும் அதை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தனது சீடர்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்றும் புத்தர் விரும்பியிருந்தார். இவ்வாறு ஒருமுறை பிட்சைக்குப் போன ஆனந்தா, ஒரு தாசியின் வீட்டுக்குப் போகின்றார். அந்த தாசி ஆனந்தாவின் மனதை மாற்றி படுக்கையறைக்குள் அழைத்துக்கொண்டு போய்விடுகின்றார். இதையறிந்த புத்தர், தனது இன்னொரு மாணவரான மஞ்சுசிறியை அனுப்பிவைக்கின்றார். அவர் ஒருமாதிரியாக ஆனந்தாவை மீட்டு வருகின்றார்.

அப்படி மீட்டுக்கொண்டு வரப்பட்ட ஆனந்தா அவமானத்தில் குன்றி நின்றபோதே, புத்தர் அவரின் பிரபல்யம் வாய்ந்த 'சுரங்காம சூத்திரத்தை' (Surangama Sutra) உபதேசிக்கின்றார்.  இந்த 'சுரங்காம சூத்திரத்தை' முன்வைத்து, தன் அனுபவங்களையும் சேர்த்து ரோஸி, ஸோஜனின் வழிவந்த ரொபர்ட்  ரோஸன்பம் 'That Is Not Your Mind!' என்ற பெயரில் ஒரு சுவாரசியமான புத்தகத்தை எழுதியிருக்கின்றார். நமது சங்கப்பாடல்களை ஒருவர் வரிவரியாகப் பிரித்து சுவாரசியமாக விளங்கப்படுத்துவதைப் போன்று இந்த நீள் சூத்திரத்தை ரொபர்ட் அலசுகிறார்.

இத்தனைக்கும் ரொபர்ட் ஒரு Neuropsychologist ஆவார். இதில் கலாநிதிப் பட்டம் பெற்றபின் இந்தியாவிலிருக்கும் National Institute of Mental Health and Neuroscience தொடக்கத்தில் பணிபுரிந்தவர். அவருக்கு நல்ல வேலை, மனைவி, குழந்தைகள் என்று இனிதாக எல்லாம் அமைந்தபோதும், மகிழ்ச்சியின் வெற்றிடம் இருந்தது. இதன்பின்னரே அமெரிக்காவுக்குத் திரும்பி, ஸோயூனின் மடாலயத்தில் சேர்கிறார். இதற்கு முன்னர் யோகா பழகியிருந்தபோதும், நல்லதொரு நெடுந்தொலைவு ஓட்டக்காரராக இருந்தபோதும், 5 நாள் தொடர் தியானப்பயிற்சியின்போது அவர் பட்ட கஷ்டங்களை விபரிக்கும்போது, தியானத்தின் ஆரம்பநிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே, நாம் தனியர்கள் இல்லை என்று கொஞ்சம் நிம்மதி வரும்.

*

இவ்வாறு ஆசிரியர்களாவும், மாணவர்களாகவும் தமது வழியில் தீவிரமாக இருந்தபோதும், பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததை புத்தர் காலத்தில் இருந்து, அண்மையில் புத்த அங்கியைக் கழற்றிவிட்டு தனக்குப் பிடித்த பெண்ணோடு வாழத்துணிந்த துறவி வரை சொல்லிவிட்டு, இலக்கியப் பக்கம் போகாமல் இருக்கமுடியுமா என்ன?

அங்கேயும் நிறைய எழுத்துவகைகள் இருக்கின்றன. ஆனால் என் ஆசிரியரான எஸ்.பொவின் 'சுவடு' கதையை ('அவா' தொகுப்பு) வாசித்தவர்க்கு இந்தத் துறவிகளின் பெண் ஈர்ப்பு நன்கு தெரிந்திருக்கும். ஒரு புத்த மடாலயத்தில் இருந்த விலகி வந்த ஒருவனுக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. அவன் தனது முதல் திருமண அழைப்பிதழை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றபோது தனது குருவை நினைத்துக்கொள்கின்றான். அது அவன் தியானம் பழகிய குருவல்ல. ஒரு பெண். அவளை அவன் 'குருத்தினி' என்று அழைத்து நனவிடை தோய்கின்றான்.

அவன் புத்தமடாலயத்தில் இருக்கும்போது ஒரு பெண்ணோடு பழக்கம் வருகின்றது. அவள் பாலியல் தொழிலைச் செய்கின்ற பெண். இவன் எவ்வளவு உறுதியாக இருக்கின்றபோதும் அவள் இவனின் 'பிரம்மச்சாரிய' மனதை கலைத்துவிடுகின்றான். அவனோடு உறவு கொள்கின்றபோது அவள் சொல்கின்றாள், உன் குருவே என்னைத் தேடி வருகின்ற ஒரு 'வாடிக்கையாளர்'தான் என்று. அத்தோடு அவனது துறவுக் கனவு கலைந்து சாதாரண மனிதனாகிவிடுகின்றான். இப்போது அவனுக்குத் திருமணம் நடக்கப்போகின்றது. அந்தப் பெண்ணை நன்றியுடன் நினைத்துக் கொள்வதாகக் கதை நீண்டு முடியும்.

இப்போதெல்லாம் நான் போகும் புத்த மடாலயத்தில், பிரமச்சாரிய துறவிகள் பெண்களுடன் பேசுவதைப் பார்க்கும்போது எனது மனம் பதறுகிறது. எந்தத் துறவி எந்தப் பெண்ணில் மயங்கி துறவியங்கியைக் களையப்போகின்றார் என்று என் கள்ளமனது அந்தரிக்கின்றது. நான் தியானத்தின் மூலம் நிர்வாணமடைவது ஒருபுறமிருக்கட்டும், இந்தத் பெண்களிடமிருந்து துறவிகளைக் காப்பாற்றி கரைசேர்க்கும் 'கடமை'யை நான் விழிப்பாகச் செய்ய வேண்டியிருக்கின்றது. இதுதான் எனக்கு புத்தர் வழங்கவிருக்கும் 'தம்மமாக'வும் இருக்கக் கூடும்.  

பெயரில் மட்டுந்தான் எனக்கு ஒரு பழந்துறவின் பெயர், நினைப்பெல்லாம் எப்போதும் பெண்கள்தான்..!

****


(Aug 2025)

பனிக்காலத் தனிமை - 08

Wednesday, May 14, 2025

 

மே மாதம் வந்துவிட்டது. உழைப்பின் முக்கியத்துவம்/தொழிலாளர் உரிமைகளை நினைவூட்ட உழைப்பாளர் தினமும் ஒவ்வொருவருடமும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மூலதனம் பற்றியும், உழைப்பு/உற்பத்தியின் மூலம் மனிதர்கள் அந்நியமாதல் பற்றியும் மார்க்ஸ்/ஏங்கல்ஸ் நிறையப் பேசியிருக்கின்றனர். அந்தப் பாதையில் பின்னர் வந்த பாப் பிளாக் போன்றவர்கள் 'உழைப்பை ஒழிப்பது' (The Abolition of Work) பற்றி விவாதித்திருக்கின்றார்கள்.
 

புத்தரும், ஸென் ஆசிரியர்களும் உழைப்புப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றனர் என்பது வேறொரு பரிணாமத்தை நமக்குத் தரக்கூடும். ஸென் இங்கேயுள்ள உயிரிகள் எல்லாமே எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்பதை வரையறுக்கின்றது. அது உடலுழைப்பாகவோ, கற்றல்/கற்பித்தல் இருந்தாலோ எதுவாக இருந்தாலும் எப்போதும் நாம் எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் என்கின்றது. ஒரு அலுவலகத்துக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ காலை போய் மாலை வருவது மட்டும் 'உழைப்பு' என்று ஸென் வரையறுப்பதில்லை.


மேலும் எந்த வேலையைச் செய்தாலும், அதனோடு முற்றுமுழுதாக இயைந்து செய்யவேண்டும், அது எப்படியெனில் ஒரு விறகுக்கட்டையானது முற்றுமுழுதாக ஒரு தடயமும் இல்லாது எரிந்து போவதுபோல, செய்யும் வேலையுடன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்கின்றது. ஒரு வேலையைச் செய்யும்போது எமக்கு எப்போது எரிச்சலோ, கோபமோ, மற்ற சக பணியாளர் எமக்கு ஒத்துழைக்க இல்லை என்ற சலிப்போ வருகின்றது என்றால், நாம் பல விடயங்களை மனதில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம். எனவே இந்த விடயங்களை ஒரு வேலையைச் செய்யும்போது, எம் எண்ணங்களில் இருந்து வெளியே போக (Letting Go ) செய்ய அனுமதிக்க வேண்டுமென ஸென் சொல்கிறது.

புத்தரின் வரலாற்றைப் பார்த்தால், அவர் தனது சங்காவில் இருந்த பிக்குகளும், பிக்குணிகளும் அவ்வாறு மட்டுமே இருக்க வேண்டுமென விரும்பியவர். பிற விடயங்களில் கவனஞ்செலுத்தாது இப்படி இருப்பதே ஞானமடைவதற்கு எளிதாக இருக்குமென புத்தரும் அவரின் பின்வந்த ஆசிரியர்களும் நம்பினார்கள். அதனால்தான் அன்றைய காலத்தில் உணவுக்காக பிக்குகள் மடிப்பிச்சை கேட்டு சுற்றியிருந்த ஊரவர்களிடம் சென்றார்கள். அவர்களின் ஒரேயொரு முதன்மை நோக்கம் தியானத்தில் இருப்பதேயாகும். பின்னர் பெளத்தம் சீன/ஜப்பான் போன்றவற்றுக்குப் பரவியபோதும் இந்த கலாசாரமே நெடுங்காலம் நீடித்தது. இவ்வாறு பிச்சை கேட்டு செல்வதால் இன்னொரு நல்ல விடயமும் ஸென் மரபில் நிகழ்ந்தது. அதாவது சாதாரண மக்களோடு பழக, சுற்றியிருக்கும் ஊர்களில் என்ன நடக்கின்றது என்பதை அவர்களால் எளிதாக அறிய முடிந்தது.

நான் சில வருடங்களுக்கு முன் கம்போடியாவுக்குப் போனபோதும், இவ்வாறு உணவுப் பிச்சை கேட்டு வந்த பிக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஒரு சிலரோடு உரையாடியும் இருக்கின்றேன். ஆக இன்றும் சில மடாயலங்களில் இந்தக் கலாசாரம் நீடித்தபடி வந்திருக்கின்றது.

ந்த 'உழைப்பு' எங்கே சலிப்பாகின்றது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைத் தருகின்றேன். எனது ஆசிரியரான தாயின் ப்ளம் விலேஜ் மடாலயம் பிரான்ஸில் இருக்கின்றது. தாயின் மறைவின்பின் அதை சங்காவின் உறுப்பினர்கள் பொறுப்பெடுக்க வேண்டி வந்தது. ஏனெனில் எனது ஆசிரியர் தாய், தனக்கு அடுத்தவர் இவர்தான் மடாலயத்தின் தலைமைக்குரியவர் என்று (திபெத்திய தாய்லாமா மாதிரி தேர்தெடுக்கவில்லை. அந்த மரபு ப்ளம் விலேஜில் இல்லை. இதனால் தாயோடு நீண்டகாலம் இருந்த Brother Phap Huu மடாலயத்தின் பொறுப்புக்களை எடுத்தபோது தனக்கு சலிப்பும்/எரிச்சலும் வந்ததென்கின்றார். அதனால் மடலாயத்தைவிட்டு ஒரு வருடProbation எடுத்து, வெளியே போக விரும்பியிருக்கின்றார். ஏனெனில் தான் இந்த மடலாயத்துக்கு தன்னிலை அடைவதற்கான பாதையை அறிய வந்தேனே தவிர, மடத்தின் கணக்குவழக்குகள், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவரவில்லை என்ற எண்ணமே தன்னை ஒருபொழுது ஆக்கிரமித்தது என்றார்.

அது ஒருவகையில் உண்மைதான். இன்றைய நவீனகாலத்தில் புத்த மடலாயங்கள் தன்னிருப்பை வைத்திருக்க வேண்டுமெனில் புதிய வழிகளில்தான் செல்ல வேண்டியிருக்கின்றது. பின்னர் Brother Phap Huu, இது தனது ஆசிரியர் தமக்கான விட்டுச் சென்ற பணி, அவரில் மதிப்பிருந்தால், அவரை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இந்த மரபை/மடலாயத்தை தொடர்ந்து நடத்துவதில் செயலாற்றுவதே முக்கியமென்ற தீர்மானத்துக்கு வந்தார் என்கின்றார். ஆக, ஒரு புத்த பிக்குவிற்கு, அதுவும் 25 வருடங்களுக்கு மேலாக மடாலாயத்தில் தங்கி ஓர் ஆசிரியரோடு வாழ்ந்தவருக்கும் நம்மைப் போன்ற வேலை/பணிச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்காகச் சொல்கின்றேன். எல்லாம் துறந்தவர்க்கே இப்படியான இருத்தலியச் சிக்கல்கள் இருக்கின்றனபோது, நாம் பரவாயில்லை என நம்மைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதை ஸென்னினூடாக அணுகி தெளிவடைகின்றார்கள், மீண்டும் மீண்டும் இயல்புக்கு வந்து யதார்த்ததை எவ்வாறு நேரடியாக எதிர்கொள்கின்றார்கள் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

ஒரு வேலை எப்போது அழகற்றதாக இருக்கின்றதெனில், அந்த வேலையில் கலைத்துவமோ, சிருஷ்டிப்பதோ, அந்த வேலையினால் ஒரு முக்கியமோ இல்லாதபோது வேலை கொடுமையாகின்றது. இதைத்தான் மார்க்ஸ் 'அந்நியமாதலில்' விரிவாகப் பேசுகின்றார். ஒருவகையில் ஸென்னும் அதைத்தான் கூறுகின்றது. உங்கள் வேலையில் முழுமையாக, அது ஒரு வேலை என்று அறியாது செயற்பாட்டில் முற்றாக ஒன்றிணந்து இருக்கச் சொல்கின்றது.

உதாரணத்துக்கு, ஊர்களில் தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு நாள் விடியும்போது, அவர்களுக்கு தோட்ட வேலைகளும் தொடங்கிவிடுகின்றது. அவர்கள் இது எனது வேலை, எனது ஓய்வு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. தோட்ட வேலையைச் செய்யும்போதோ, அங்கே வரும் அயலவர்களுடன் கதைக்கின்றார்கள். மற்ற வேலைகளைச் செய்கின்றார்கள். அவர்கள் எது முக்கியமாக அந்தக் கணத்தில் இருக்கின்றதோ அதை மனமொன்றிச் செய்கின்றார்கள்.
மேலும், நிலத்தைப் பண்படுத்துவதில், பயிர்களை நடுவதில், அவை செழித்து வருவதிலென ஒவ்வொரு காலகட்டத்திலும் அழகைப் பார்க்கின்றார்கள். மனநிறைவை அடைகின்றார்கள்.

னது சிறுவயதுகளில் வாசித்த அநேக (ஈழத்து) நாவல்களில் கதைகள் தோட்டம் செய்யும் பாத்திரங்களோடோ தொடங்கும். அதையெல்லாம் வாசிக்கும்போது எவருக்கும் கட்டுப்படாத எவ்வளவு அழகான வாழ்க்கை என்று நினைப்பதுண்டு. என் சிறுவயதுக் கனவாக தோட்டம் செய்வதாகவே இருந்தது. இத்தனைக்கும் எங்களுக்கென தோட்டம் செய்த நிலங்களே இல்லாமலே இந்தக் கனவு எப்படி எனக்குள் உள்நுழைந்தது என்பது வியப்பானது.

இதனால் தோட்டங்களைச் செய்பவர்கள் கஷ்டங்களையோ, துயரங்களையோ அனுபவிப்பதில்லை என்பதல்ல அர்த்தம். ஆனால் அவர்கள் அந்தத் 'தொழிலை' நம்மைப் போன்ற நவீன காலத்து மனிதர்கள் போல பிரித்துப் பார்க்காது, அதனோடு ஒன்றிணைந்து பார்த்தார்கள் என்பதையே கவனப்படுத்துகின்றேன்.

நாங்கள் வேலையை ஒரு 9-5 பிரித்து வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த 9-5 மட்டுமா வேலை செய்கின்றோம்? இல்லையல்லவா? அதற்கு முன்னரும் பின்னரும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். ஒரு மரம் என்பது முளைப்பதிலிருந்து அது பட்டுப்போகின்றவரை 'உழைத்து'க் கொண்டுதான் இருக்கின்றது. அது தொடர்ந்து ஏதோ பிறருக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் ஒருபோதும் அது 'வேலை' செய்துகொண்டிருக்கின்றேன் என்று நினைப்பதில்லை. அது எத்தனை காலநிலை மாற்றங்களை, நோய்களை எதிர்கொண்டிருக்கும். ஆனாலும் அது வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இலைகளையும், பூக்களையும், கனிகளையும் வழங்குவதில் பின்னிற்பதில்லை.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் நாங்கள் 'பகுத்தறிவை' வைத்து அதிகம் சிந்திக்கின்றோம், செய்த பல விடயங்களுக்கு பிறரிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த அங்கீகாரம் நம் உழைப்புக்காகக் கிடைக்காதபோது சுருங்கிப் போகின்றோம். இன்னும் ஒரு எல்லை மேலே சென்று பிறரைக் குற்றஞ்சாட்டுகின்றோம். இதனால் எமக்கோ பிறருக்கோ எந்த நன்மையும் விளையப்போவதில்லை. ஏனெனில் நாம் பலவற்றை அழுத்திப் பிடித்து (hold) வைத்திருக்கின்றோம், அவற்றை எம்மிடையே இருந்து வெளியே போக (Let Go)அனுமதிப்பதில்லை.

மேலும் ஸென் ஒருபோதும் பணம் சம்பாதிப்பதையோ/செல்வம் சேகரிப்பதையோ அது தவறென்று சொல்வதில்லை. பணத்தைப் பற்றி மட்டுமில்லை எந்த ஒன்றையும் ஸென் நிராகரிப்பதில்லை. ஏனெனில் ஸென்னில் discriminate என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் அதை சேகரித்து சேகரித்து மட்டும் உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் என்று எச்சரிக்கையைத் தருகின்றது. இதைவிட எல்லையற்ற மகிழ்வுக்கும் நிம்மதிக்கும் அழைத்துச் செல்லும் பாதை தியானத்தினூடு இருக்கின்றது என்று நம்பிக்கையைத் தருகின்றது. நீங்கள் உழைப்பதும், செல்வம் சேர்ப்பதும் ஒரு மலர் விரிவதைப் போல் இயல்பாக இருக்கவேண்டும். வேறு எவரையும் சுரண்டி உழைப்பதோ/ செல்வத்தைச் சேர்ப்பதோ கர்மாக்களுக்கு வழிவகுக்கும் என சில ஸென் மரபுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

இவை எல்லாம் எளிதா என்றால், இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். நாம் தொடர்ச்சியாக பிற விடயங்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு வழி இருக்கின்றதென்றாலே, நமது மனம் இதெல்லாம் சாத்தியமா, இதெல்லாம் கற்பனாவாதம் என்று சமாந்திரமாக யோசிக்கத் தொடங்கும். மூளை மிகச்சிறந்த தந்திரசாலி. உங்களை ஒவ்வொரு கணமும் குத்துச்சண்டை மேடையில் மூர்க்கமாக அடித்து வீழ்த்திக் கெக்கலிக்கும்.

ஸென் வேலை என்பது எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றது. மனிதர்கள் பிறந்ததிலிருந்து காலமாகும்வரை ஏதோ ஒருவகையில் உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த உழைப்பு/வேலை எவ்வாறாக இருந்தாற் கூட அதை mindfulness ஆகச் செய்யச் சொல்கின்றது. சாதாரண வேலையில் வரும் சலிப்பு/எரிச்சல்/கோபம் என்பவை பிறரால் அல்ல, நாம் அழுத்தமாகப் பிடித்து வைத்திருக்கும் எண்ணங்களாலே உருவாகின்றதே தவிர, நாம் பிறரை குற்றஞ்சாட்ட அவசியமில்லை எனவும் நினைவூட்டுகிறது.

ஒரு வேலையைச் செய்யும்போது விறகு போல முற்றுமுழுதாக எரிந்து, ஒரு சிறுதடயமும் இல்லாது செய்து முடியுங்கள் எனச் சொல்கின்றது. ஏனெனில் அப்போது நீங்களும், வேலையும் வேறு வேறானதல்ல. இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நீங்கள் தொலைந்துவிடுகின்ற அருமையான தருணம்!

********


(May 02, 2025)


பனிக்காலத் தனிமை - 06

Thursday, February 06, 2025

 

ன்று முழுநாளும் தியானம் செய்வதற்கான நன்னாளாக அமைந்திருந்தது. காலை எட்டு மணிக்கு தியான வகுப்புத் தொடங்கியது. தியானத்தை கூட்டாகச் செய்வது, தனித்துச் செய்வதைப் போலனற்றி, வேறு வகை அனுபவத்தைத் தரக்கூடியது.

தியானம் நடைபெறும் இடத்துக்கு காலையில் எழுந்து 40 நிமிடம் பயணித்துப் போகும்போதே மனம் இலகுவாகத் தொடங்கியது. காலை 8 தொடக்கி 9.30 வரை கூட்டுத் தியானம். 50 பேருக்கு மேற்பட்டோர் அந்தக் காலையிலே பனிக்காலத்தையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர். தியானத்தை Breathing Meditation, Impermanent Meditation, Loving-Kindness Meditation, Walking Meditation என்று நான்காகப் பிரித்து வைத்திருந்தனர்.

முதல் தியான அமர்வு 'வழிகாட்டும் தியானமாக' (Guided meditation) தொடங்கினாலும், பின்னர் ஆசிரியர் நம்மை அமைதியில் விட்டுவிட்டது பிடித்திருந்தது. அடுத்து காலைச் சிற்றுண்டிக்காக அரை மணித்தியாலம் இடைவெளி விட்டு, இரண்டாவது அமர்வு தியானம் தொடங்கியது. இந்தத் தியான வேளையில் முதலில் கொஞ்சம் புத்த சூத்திரங்களை பாலியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஆசிரியர் சொல்லிச் செல்ல நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

தியானத்தின்போது நாம் duality இற்குள் சிக்கி எதையும் discrimination செய்யாமல் இருப்பது முக்கியமானது. அதாவது non -dualism ஆக இருப்பது அவ்வளவு அவசியமானது. இந்த dualityஐ சில விடயங்களில் கொஞ்சம் அவதானித்துக் கடந்து போக முடிந்தது எனக்குப் புதிய பாடமாக அமைந்திருந்தது.

புத்தரின் போதனைகளை 'மந்திர உச்சாடானம்' செய்யும் <புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி> எனக்கு சிறுவயதில் ஒரு எதிர்ப்பின் அரசியலாக அறிமுகமானது. ஈழத்தில் இருக்கும்வரை, புத்தரைப் பின்பற்றுவர்கள் செய்த அட்டூழியங்களால், புத்தர் எனக்கு வெகு தொலைதூரத்திலேயே இருந்தவர். கொழும்பு போன்ற பல்லின மக்கள் வாழும் இடத்தில் இருந்தபோது விகாரைகளில் ஓதப்படும் இந்த வார்த்தைகள், <இதையேதான் சிங்கள இராணுவமும் ஓதிவிட்டு தமிழர்களைப் பிறகு கொல்லச் செல்வார்கள்> என்பதாக ஆழ்மனதில் தங்கியிருந்தது. ஆதனால் இந்த புத்தம்/தம்மம்/சங்கம் சரணம் கச்சாமியோடு என்னால் ஒருபோதும் ஒட்டமுடிந்ததில்லை.

ஆனால் இந்தப் போதனைகளை discrimination செய்யாது பார்க்கவேண்டுமென்ற ஓர் தெளிவு இன்று எனக்குள் வந்ததை அவதானித்தபோது சற்று வியப்பாயிருந்தது. அது தியானத்தில் இருந்தன் நீட்சியா அல்லது வேறெதுவா தெரியவில்லை. ஆனால் இந்த உச்சாடானத்தை பின்னர் அதன் இயல்பிலே -எவ்வித வெறுப்புமின்றி- அவதானிக்கத் தொடங்கியிருந்தேன்.

அதுபோல, இந்த விகாரையில் மாமிசம், கடலுணவு போன்றவற்றை மதிய உணவில் சேர்ப்பார்கள். வழமையாக நமது கோயில்கள், புனித நாட்களில் மரக்கறிச் சாப்பாடுகளைச் சாப்பிட்டு வந்த பழக்கத்தால், இம்முறை மதியவுணவில் கோழியையும், இறாலையும் விலத்துவோம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதையும் அதன் இயல்பிலே அங்கே தரப்பட்டது எதையும் விலத்தக்கூடாது என்று கடைசி நேரத்திலே மனம் முடிவு செய்து மாமிசத்தையும் சேர்த்துக் கொண்டது.

மனம் என்று எளிமைக்காய்ச் சொன்னாலும், இந்த இரண்டு விடயங்களையும் மனதைத் தாண்டிய ஓர் 'மனம்' எடுத்தது என்று சொல்லலாம். சிலர் இதை ஆழ்மனதினதோ அல்லது பிரக்ஞையினதோ தெறிப்போ என்றும் சொல்லவும் கூடும்.



மாலை நேர தியான வகுப்புக்கு இன்னொரு ஆசிரியர் வந்திருந்தார். அவர் எங்களோடு உரையாடுவதில் ஆர்வமாக இருந்தார். இப்போது விளாசி எரிந்து கொண்டிருக்கும் கலிபோர்ணியா தீயைப் பற்றிய கடைசி நிலவரத்தைக் கேட்டறிந்து விட்டு, தீயைப் பற்றிய புத்தரின் கதையொன்று உள்ளதென்று சொல்லத் தொடங்கினார்.

புத்தரின் சீடர்கள் இருந்த மடாலயம் ஒன்றைச் சுற்றி தீ மூண்டபோது, புத்தர் அதை தடுத்து நிறுத்துகின்றார். பின்னர் புத்தர் தன் சீடர்களிடம், 'இது எனது சக்தியினால் நிறுத்தப்பட்டது என்று நீங்கள் நினைக்கலாம். அது என்னால் நிகழ்த்தப்பட்டதில்லை. இந்தத் தீ ஒரு சிறு குருவியின் ( baby quail) புண்ணியத்தால் நிறுத்தப்பட்டது என்றொரு கதையைச் சொல்கின்றார்.

இதற்கு முற்பிறப்பில் சிறுகுருவி பறக்கமுடியாது கூட்டில் இருக்கும்போது, பெருந்தீ காட்டில் மூள்கின்றது. எல்லாப் பறவைகளும் பறந்துபோனபின்னும் இந்தக் குட்டிக் குருவியின் பெற்றோர் அதனோடே இருக்கின்றனர். கடைசிக்கட்டத்தில் தீயின் உக்கிரம் தாங்கமுடியாது இனி இயலாது என்று அந்தப் பெற்றோரும் பறந்துவிடுகின்றனர். இந்தக் குருவிக்கு சிறகிருந்தும் பறக்க முடியாது. கால் இருந்தும் நடக்க முடியாது. அப்போது அது loving-kindness இன் மூலம், என் பெற்றோர் எனக்காக கூடும் கட்டி, இறுதி வரை எனக்காக இந்தத் தீயின்போது இருந்தார்கள் என்று உளம் குவித்து பெற்றோர் மீது நல்ல விதைகளை தூவிவிட்டுச் செல்கின்றது. இந்த குருவி இவ்வாறாக பல்வேறு பிறப்புக்களின்போது நல்ல விதைகளைத் தூவியபடி அவை மிகப்பெருமளாவில் சேகரம் ஆகின்றது. இந்த விடயத்தை புத்தர் அவர் போதிசத்துவராக இருந்த ஒரு பிறப்பில் அறிகின்றார்.

அந்தக் குருவி மாண்ட இடத்தில் நல்விதைகள் குவிந்துவிட்டது. அதனால் அந்த இடத்தை இனி ஒருபோதும் தீயால் தீண்டமுடியாமல் இருக்கின்றது. அங்கேதான் இப்போது இந்த மடாலாயம் அமைந்திருக்கின்றது, அதனால்தான் சுற்றியெங்கும் தீ பரவி அழிவைச் செய்த, இந்த இடத்தில் மட்டும் தீ பற்றாமல் அணைந்துவிட்டது.

புத்தரின் 'அதிசயமான சக்தி'யால் தீ நின்றது என்று நினைத்த சிஷ்யர்களுக்கு அசலான உண்மையைப் புத்தர் உரைத்தார் என்று இந்த ஆசிரியர் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆகவே நாங்களும் தீயால் பாதிக்கபட்ட மக்களுக்காக நமது நல்ல விதைகளை தியானத்தாலும், பாடலாலும் அனுப்பிவைப்போம் என்று எங்களைப் பிரார்த்தனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது என் (dualism) மனம் மீண்டும் குறுக்கிடத் தொடங்கியது. கலிபோர்னியாவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதில் பிரச்சினையில்லை, அதுபோல நாங்கள் ஏன் பாலஸ்தீனத்தில் போரில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் ஏன் நாம் இந்த நல்விதைகளைத் தூவக்கூடாதென்ற கேள்வி எழுந்தது. முன்பு ஒரு காலம் என்றால் வாயை இப்படியெல்லாம் மூடிக் கொண்டிருக்கமாட்டேன்.

இப்படியான ஒரு தியான வகுப்பில் தொடுபுழாவில் இருந்தபோது அந்த ஆசிரியரை இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு முழுவகுப்பையுமே அதற்கான பதிலென்ன என்று சொல்லக் கேட்டு அந்த வகுப்பு முழுதையும் கேள்விகளால் 'பாழாக்கியவன் நான்.

இங்கே அப்படியொரு குறுக்கிடும் மனோநிலை எனக்குள் எழுந்து அதேவேகத்தில் பின்னர் கரைந்து போவதையும் கண்டேன். மற்றவர்கள் கலிபோர்ணியாவுக்காகவிற்காக தியானத்தைச் செய்யட்டும், நான் எனக்குப் பிடித்தமாதிரி பாலஸ்தீனர்களுக்காக தியானத்தைச் செய்யலாந்தானே என்று மனம் அமைதியடைந்தது.

இந்தப் பிரார்த்தனை முடிந்தபின், ஆசிரியர் எங்களை நடக்கும் தியானத்துக்காக (Walking Meditation) வெளியில் போய் நடந்துவிட்டு வாருங்களெனச் சொன்னார். பனி கொட்டி நிலம் முழுவதும் வெள்ளையாக இருந்தது. என்றாலும் 'குளிர் அவ்வளவாக இல்லை, ஒரு குறுகிய தூரத்துக்குள் நடந்தபடி பாளியில் இருக்கும் loving - kindness சுலோகத்தைச் சொல்லியபடி நடக்கும் தியானத்தைச் செய்யுங்கள்' என்றார் ஆசிரியர். மனதைக் காலடிகளில் குவித்தபடி 3000 அடிகளுக்கு மேலாக நடந்துவிட்டு வர, அடுத்து ஒரு மணித்தியாலம் இறுதி தியான அமர்வு நடந்து முடிந்தது.

இறுதியில் இந்த நாளை நீங்கள் வித்தியாசமான நாளாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியடையுங்கள். எத்தனை பேர் இந்த முழுநாளை தியானத்துக்காக ஒதுக்கியிருப்பார்கள், உங்களுக்கு இப்படி அமைந்தது நல்லூழே, இந்நாளை உங்கள் வாழ்வில் முக்கிய நாளாக என்றேனும் நினைத்துக் கொள்வீர்கள். அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் அமையட்டுமென தியானத்தை இந்த ஆசிரியர் முடித்து வாழ்த்தி எங்களை அனுப்பி வைத்தார்.

இந்த நாளில் நீ எதை அடைந்தாய் என்று ஒருவர் கேட்டால், நான் எதையுமே அடையவில்லை என்றுதான் சொல்வேன். ஆனால் இந்த நாளில் நான் நிகழுக்கு மிக அண்மையில் இருந்தேன். மனம் அமைதியில் இருக்கின்றேன் என்று உணராமலே ஓர்வகை அமைதியால் நிறைந்திருப்பதை அவதானிக்க முடிந்திருந்தது.

இன்றைய நிசப்தங்கள் நிரம்பிய உலகில் ஒருநாள் அமைதியாகக் கழிந்தது என்பது கூட ஒருவகையில் ஆசிர்வாதம் அல்லவா?

அந்த ஆசிர்வாதத்தை இந்த நாள் அள்ளிச் சொரிய நான் மனம் நிறைந்து பெற்றேன் என்க!

*************


(Jan 12, 2025)

பனிக்காலத் தனிமை - 05

Friday, January 31, 2025

 

 1.

 
கடந்தகாலத்தினதும். எதிர்காலத்தினதும் பொறிகளில் அடிக்கடி அகப்படாதவர் மிகச் சிலரே. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு, இந்தப் பூமியில் மனிதர்கள் வாழாது, தாவரங்களும், விலங்குகளும் மட்டும் இருந்தால் கடந்தகாலம்/எதிர்காலம் என்பது இருக்குமா? என்று யோசித்துப் பார்க்கலாம். அதாவது 'நேரம்' என்பதை அர்த்தமுள்ள முறையில் பேசமுடியுமா? இப்போது என்ன நேரம் என்றோ அல்லது என்ன திகதி என்றோ பேசுவதற்கு அர்த்தம் ஏதுமிருக்குமா? ஒரு மரத்திடமோ அல்லது ஏதேனும் விலங்கிடமோ, 'என்ன நேரம்?' என்று கேட்டால், அவை இந்த நேரம் என்பது இப்போதுதான் (Now), வேறென்னவாக இருக்கப் போகின்றது? என்றுதானே சொல்லக்கூடுமே தவிர, கடந்தகாலம்/நிகழ்காலத்தை முன்வைத்து காலத்தை நம்மைப்போலக் கணிக்கப் போவதில்லை.

இந்த உலகில் நாம் இயங்குவதற்கு மட்டுமே இந்த மனதும், நேரமும் அவசியமாக இருக்கின்றது. மேலும் நம் மனமானது எம்மைக் கட்டுப்படுத்துவதற்காய் தொடர்ந்து நிகழ்காலத்தை கடந்தகாலத்தோடும், எதிர்காலத்தோடும் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் நிகழில் இருக்கமுடியாது எமது அசலான 'மனதை' இழக்கின்றோம். இவ்வாறு நிகழில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருப்பதால்தான் எமது எல்லாக் கடந்தகாலத் துயரங்களும், எதிர்கால ஏக்கங்களும் தொடங்குகின்றன.

ஸென்னில், நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் அசலான முகம் எதுவாக இருந்தது என்று ஆழமான கேள்வியொன்று இருக்கின்றது. இந்தக் கேள்வி நேரடியாகப் பதிலை அறிவற்குக் கேட்கப்படுவதில்லை. காலம்/வெளி என்கின்றவற்றை ஊடறுத்து நம்மை இந்தக் கணத்தில் இருக்க வைப்பதற்காய் நம்மிடம் கேட்கப்படுவது. இவ்வாறு கேட்பதன் மூலம் நாம் தன்னிலை உணர்தலையும் அடையமுடியும் என்று ஸென் கூறுகின்றது. இந்தக் கேள்வியுடன் தமது அசலான முகத்தைத் தேடத் தொடங்கி ஞானமடைந்தவர்களின் எழுநூறுக்கும் மேற்பட்ட கோவன்கள் (Koans) ஸென் மரபில் இருக்கின்றன .

ஒருவர் ஆறுவருடங்களில் பனி மலைகளில் தியானம் இருந்தவர் ஒருநாள் விடிவெள்ளியைப் பார்க்கும்போது ஞானமடைகின்றார். இன்னொருவர் பனியில் உறைந்துபோன கையை வெட்டும்போது ஞானமடைகின்றார். அவரே போதிதர்மரின் சீன மரபில் வரும் ஸானில் இரண்டாம் பரம்பரை ஆசிரியராக இருக்கின்றார். இன்னொருவர் தனது முகத்தின் விம்பத்தை நீரில் பார்க்கும்போது தன்னிலை அடைகின்றார். இவ்வாறு எண்ணற்ற கதைகள் அசல் முகம் எதுவாக பிறப்பதற்கு முன் இருந்தது எனத் தேடியபோது நடந்தவையென ஸென் மரபில் இருக்கின்றன.

எனக்குக் காலத்தை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் கற்பனைகள் அடிக்கடி வருவதுண்டு. அதாவது கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் தோன்றிய/தோன்றும்/தோன்றபோகும் அனைவரையும் ஒரு நேர்கோட்டுத் தெருவில் நடந்துபோகின்றவர்களாகக் கற்பனை செய்வதுண்டு. கடந்தகாலத்தில் காலமாகிப் போனவர்கள் இப்போதும் நடந்து கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது நடக்கும் நாங்கள் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் அதே பாதையில் நடமாடிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பதுண்டு.

மேலும் காலம் உறைந்து போகுமா அல்லது காலம் என்னவாகும் என்ற கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சத்திரசிகிச்சைக்காக மயக்கத்தில் ஆழ்த்தியபோது எனக்குள் எழுந்திருந்தது. சில மணித்தியாலங்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி சத்திரசிகிச்சை செய்தபோது எழுப்பியபோது, அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. எனக்கு அப்போது இந்த உலகத்தில் நிகழ்ந்தது எதுவுமே தெரியாது. அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. அந்த மணித்தியாலங்களில் எனக்கு கடந்தகாலமோ நிகழ்காலமோ, ஏன் நிகழ் என்பது கூட என் மனதுக்கு இருந்திருக்காது. அதை ஒரு 'பற்றற்ற மனோநிலை' எனச் சொல்லலாமா?

சிலவேளைகளில் ஞானமடைந்தவர்கள் இவ்வாறு ஒரு கடந்தகால/எதிர்காலமற்ற ஓர் அந்தரமான வெளியில்தான் தமது நிகழ்காலத்தைத் தரிசிப்பார்களோ என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் மீண்டும் 'மயக்க நிலையில் இருந்து மீள்வேன்' என்பதால் எவ்வித பதற்றமுமில்லாது என் சுயம் உறக்கத்திலிருந்தோ, அப்படித்தான் மரணத்தின்போதும் -இந்த வாழ்வை முழுமையாக ஏக்கங்களோ/ஏமாற்றங்களோ இல்லாது வாழ்ந்துவிட்டுப் போனால் - மரணங்கூட இப்படியான நிம்மதியான நிலையாயிருக்குமோ என்று எண்ணுவதுண்டு.



2.

எனக்குத் தெரிந்த சிலர் அவர்களுக்குத் தமது கடந்தகால வாழ்வு நன்கு தெரியும் என்று சொல்வார்கள். எனது நண்பர் ஒருவர் தான் கடந்த பிறப்பில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன் என்று உறுதியாகச் சொல்வார். அவர் எங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டாலும் ஆழமாக அவற்றை இரசிக்கத் தொடங்கி விடுவார். நான் யாரென்றோ, எங்கே இருக்கின்றேன் என்ற பின்புலமோ தெரியாமலே அவர் என்னோடு முதன்முதலாகப் பேசத் தொடங்கியதே, ஒரு வண்ணத்துப்பூச்சியை நான் எடுத்த புகைப்படத்தின் மூலந்தான். 


அவர் கடந்த பிறப்பில் வண்ணத்துப்பூச்சியாக இருந்திருப்பின், என்னுடைய அசல் முகம் அப்போது எதுவாக இருந்திருக்கும்? அதை நான் அவ்வப்போது அவரோடு பழகிய காலங்களில் என்னிடமே கேட்டதுண்டு. அந்தக் நண்பருக்கு வண்ணத்துப்பூச்சி மட்டுமல்ல, அவரின் இளவயதில் இறந்துபோன அம்மா கூட ஒரு மரமாகக் காட்சியளிப்பார். அந்த மரத்தை நானும் நன்கறிவேன். நாங்கள் அதைக் கடந்துசெல்லும்போது அவர் அதனோடு (உள்மனதில்) பேச நிறைய நேரமெடுத்துக் கொள்வார். அந்த மரத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கண்ணீர்விடக்கூடியவராகவும் அவ்வளவு நெருக்கமானவராக அதனோடு இருந்திருக்கின்றார்.

எனக்கும் இப்படியான பல 'பைத்தியக்காரத்தனங்கள்' இருப்பதால் அவரை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் ஒருநாள் அவரது துணைவரோடும், குழந்தையோடும் நடந்து போனபோது அந்த மரத்தைக் கண்டு நெகிழ்ந்ததைப் பற்றி என்னோடு பகிர்ந்திருந்தார். அவர்களுக்கு அது சற்று வியப்பாக இருந்ததாகவும், அந்த மரத்தை தான் அணைத்துக்கொண்டதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவும் இருந்தது என்றும் சிரித்தபடி சொன்னார்.

அவரைப் போன்றவர்கள் எளிதில் தியானத்தில் அமிழமுடிவதையும் அவதானித்திருக்கின்றேன். அவரோடு பழகிய காலங்களில் அவருக்கு அறிமுகமான ஒரு தியான நிலையத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வார் (அதன் பெயர் வேண்டாம்). அவர்கள் கடவுள் என்ற எதையும் அடையாளப்படுத்திச் சொல்வதில்லை. தியானத்தின்போது மெளனமாகச் சுவரைப் பார்த்து இருக்க வேண்டியதுதான். ஆனால் தியானம் முடிந்தபின் வெவ்வேறுவகையான பின்-தியானச் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒன்று வட்டமாக சுற்றி நடந்தபடி ஒவ்வொருவரின் முகத்தைப் பார்ப்பது.

சும்மாவே எனக்கு எவரின் கண்களை நேரடியாகப் பார்க்கும் சிக்கல் சிறுவயதுகளில் இருந்தே இருக்கின்றது. அதுவும் அறிமுகமற்ற மனிதர்களின் முகத்தை உற்று சில நொடிகள் பார்ப்பதும் பிறகு நடப்பதும் என்றால் எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால் இந்தப் பயிற்சியின்போது என் நண்பரின் முகத்தை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னையறியாமலே சிரிப்பு வந்துவிடும் (நம்புங்கள் நண்பர்களே, சும்மா பொழுதில் சிரிக்கவே அடம்பிடிப்பவனுக்கு அப்போது சிரிப்பு நிறைய வந்தது). இதையேன் சொல்கின்றேன் என்றால், தியானத்தை விட, தியானத்துக்குப் பிறகான செயற்பாடுகளில் நான் நிகழில் நிறைய இருந்திருக்கின்றேன் என்று குறிப்பிடுவதற்காகத்தான்.



3.

நாம் கடந்தகாலத்தைக் காவிக் கொண்டிருவதால், நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, எதிர்காலத்தை பற்றித் திட்டமிடுகின்றோம். ஆகவேதான் தேவையற்ற நிறைய விடயங்களைக் கற்பனை செய்து கொள்கின்றோம். ஒருவகையில் நமது கடந்தகாலம் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பாடங்களைக் கற்பிப்பதாக மனம் நினைத்துக் கொள்கின்றது.

எனது ஆசிரியரான தாயிடம் இளவயதில் சென்று இப்போது பிரான்சிலிருக்கும் மடாலயத்தை நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் Brother Phap Huu. அவர் கனடாவுக்கு தப்பிவந்த வியட்னாமிய அகதிகளின் மகன். நான் இருக்கும் நகரிலேயே வளர்ந்தவர். அவர் தாயிடம் சேரும்போது, தொடக்க காலங்களில் தான் அவ்வளவு விரைவாகவும் நிறையவும் சாப்பிடுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.

எல்லா ஸென் இடங்களைப் போல, சாப்பிடுவது கூட தாயினுடைய இடத்தில் ஒரு தியானம் போன்றது. அவ்வளவு மெதுவாகவும், அமைதியாகவும் சாப்பிடவேண்டும். இது Phap Huuவை மிகக் கஷ்டப்படுத்துகின்றது. அவர் எவ்வளவு தன்னால் முயன்றபோதும் நிதானமாகச் சாப்பிட முடியவில்லை என்கின்றார். பின்னர் அவர் இதை ஆழமாக யோசித்தபோதுதான், அது தனது பெற்றோரிடமிருந்து வந்ததென்று கண்டுபிடிக்கின்றார். போர்க்காலத்தில் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதும் முக்கியமானது. நாளைக்கு உணவிருக்குமா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக அங்கே இருக்கும். அதுவே தாங்கள் கனடாவுக்கு வந்தபோதும் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது என்கின்றார். ஒருவகையில் உணவென்பது போரின் மிச்சங்களைக் காவிக் கொண்டிருக்கின்றது; அதைக் கண்டுபிடிக்க தனக்கு நிறைய நாட்கள் எடுத்ததென்கின்றார்.

இவ்வாறு நாம் பல கடந்தகால விடயங்களை அச்சத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களாகிய நம்மில் பலர் கையில் சிறு சேமிப்பு கூட இல்லாது போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துவிட்டு, அந்த அச்சம்/எதிர்காலப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போது தமது வாழ்நாளையே பணம் சம்பாதிப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நாட்டில் ஒரளவு உழைப்புடன் எளிய வாழ்வை - நாம் யுத்ததில் இருந்ததைவிட நிம்மதியாக- வாழலாம் என்றாலும் எங்களில் பெரும்பாலானோர்க்கு அது முடிவதில்லை. எங்களில் பலர் நாளைக்கு நாம் எமக்கு விருப்பமான வாழ்வை வாழமுடியும் என்று கனவுகளுடன் இன்றைய பொழுதுகளை தமக்குரியதாக வாழமுடியாது அந்தரப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதையும் அறிவேன். இன்றில் வாழமுடியாது போனால், நாளை நமக்கு எதனைத்தான் அப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டுவரப் போகின்றது?

ஆகவே நாமெல்லோரும் 'எமது அசலான முகம் நாம் பிறப்பதற்கு முன் எதுவாக இருந்தது?' என்று கேட்டுப் பார்ப்பது நல்லது. அது நம்மை மீண்டும் மீண்டும் நிகழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த உடலும் மனமும் இந்தக் கணத்துக்குரியதே. இந்தப் பொழுதில் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றோமா அல்லது நிம்மதியும் சந்தோசமும் நாளை வந்துவிடும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கின்றோமா அல்லது கடந்தவந்த காலங்கள் பொற்காலமென ஏங்கிக் கொண்டிருக்கின்றோமா என்று நிகழில் நின்று நிதானித்துப் பார்ப்பது அனைவர்க்கும் நன்மை பயக்கக் கூடியது.

***********


(Jan 07, 2025)

பனிக்காலத் தனிமை - 04

Monday, January 27, 2025


1. 


ல வருடங்களுக்கு முன் தியானத்துக்காக ஸென் நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். காலையில் தியானப்பயிற்சியை ஓர் ஆசிரியர் தந்துகொண்டிருந்தார். ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்குமான இடைவெளியைக் கவனிப்பதன் அவசியம் பற்றி அவர் தியான வகுப்பின் பின்னரான கேள்வி-பதிலில் சொல்லிக் கொண்டிருந்தார். இலட்சக்கணக்கில் மின்னல்களாய் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை 'உறையவைத்தால்', எழுதுவதில் விருப்பமிருக்கும் என்னால் எப்படி எழுதமுடியும் என்று அப்போது திகைப்பாக இருந்தது. அதை அவரிடம் கேட்கவும் செய்தேன். ஓரு படைப்பாளி வாசித்து, நினைவில் வைத்து, அலசி ஆராய்ந்து என்று, எண்ணங்களோடுதானே எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கவேண்டும் என்று அப்போது நினைத்தேன்.

நாம் எண்ணம் (thought) என்று நினைக்கும் ஒன்றுக்கு அப்பால் ஆழமான சுயமொன்று (self) இருக்கின்றது. அதை அறிந்துகொள்ளல் அவ்வளவு எளிதுமல்ல. எண்ணங்களின் கூட்டுத்தொகைதான் சுயமென்று தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

நமக்குள் எண்ணம் ஒன்று உதிக்கும்போது, நாம் அந்த எண்ணத்தை மட்டும் கவனிப்பதில்லை. அத்துடன் அந்த எண்ணத்தை கவனிக்கும் இன்னொருவராகவும் (watcher) இருப்பதைச் சிலவேளைகளில் பார்த்திருப்போம். இங்கேதான் பிரக்ஞையின் (consciousness) புதிய பரிணாமம் வந்து சேர்கின்றது.

நீங்கள் உங்கள் எண்ணத்தை உற்றுக் கவனிக்கும்போது, பிரக்ஞையின் இருப்பை உணர்ந்திருக்கலாம். பிரக்ஞையானது, எண்ணத்தை விட, இன்னும் ஆழமான ஓரிடத்திலோ அல்லது அதற்கு அப்பாலோ இருக்கும்.

மேலும் கடந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களே, எங்களை நிகழ்காலத்தில் இருக்க முடியாது செய்கின்றன. ஆனால் இந்த எண்ணம் தோன்றும்போது, நாம் பிரக்ஞையின் இருப்பை அதேகணத்தில் உணர்ந்தால், எண்ணமானது தனது வலுவை இழக்கின்றது.

அப்படி எண்ணமானது வலுவிழக்கும்போது, நமது உளவோட்டத்தில் (mental stream) தொடர்ச்சியில்லாது போகின்றது. அப்போது நாம் முதன்முறையாக மனமில்லாத (no-mind) இடைவெளியை உணர்கின்றோம். முதலில் இந்த இடைவெளி எண்ணங்களிடையே சிறியதாக இருக்கக்கூடும். பின்னர் தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் அந்த இடைவெளியை இன்னும் அதிகரித்தும் செல்லலாம். இந்த 'மனமற்ற' இடைவெளியில் நிசப்தமும் அமைதியும் உங்களுக்குள் ஊடுருவதை உணரமுடியும்.

இதை இவ்வாறு வார்த்தைகளில் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இதை உணர்வதற்கான அல்லது தெளிவதற்கான பயணம் என்பது நீண்டது.

2.

பு
த்தரின் சூன்யம் என்பது பலவிதங்களில் புரிந்து கொள்ளமுடியும். மேற்கில் ஸென் வந்தபோது வெறுமையும், சூனியமும் ஒன்றைப் போல பல இடங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. சூன்யம் என்பது எதுவோ, ஆனால் நிச்சயம் வெறுமையோ/வெற்றிடமோ அல்ல. புத்தர் ஞானமடைதலை துன்பத்திலிருந்து விடுதலை (no suffering) என்று சொன்னவர். ஆனால் துன்பத்திலிருந்து விடுதலையான பின் அந்த நிலை எப்படியென்று அவர் வெளிப்படையாகச் சொல்லியவரல்ல. அந்த இடத்தில் -புத்தர் எப்படி இறப்பின் பின் என்ன நடக்கும் எனக் கேட்கும்போது அமைதி காத்தாரோ- அப்படியே துன்பத்திலிருந்து விடுதலையடைந்த பின் அது எப்படியிருக்கும் என்பது குறித்தும் அமைதி காத்தவர். அந்த நிலை புத்தரால் விபரிக்க முடியாதது என்றல்ல அர்த்தம்.

துன்பத்திலிருந்து விடுதலை என்பதை என்னவென்பதை நீங்களே உங்கள் இயல்பிலே அறியுங்கள் என்றே அது குறித்துப் பேசாது அமைதி காத்தவர். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி புத்தரை திருவுருவாக்கி, அவரில் அடையாளங்களையும்/குறியீடுகளையும் சுமத்தி கடவுளாக்கிவிட்டோமோ, அப்படியே 'ஞானமடைதலும்' வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் எவ்வித அர்த்தமோ/விடுதலையோ தராது சொற்களிலும்/பேச்சிலும் அர்த்தமில்லாது உறைந்து போயிருக்கும்.

இவ்வாறு எண்ணங்களை அவதானிக்கும் ஒரு கவனிப்பாளராக (watcher) மாறி, நமது பிரக்ஞையை அறிவதைப் போல, இன்னொரு விதமாகவும் நாம் இந்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடையவும் முடியும். அது நாம் தொடர்ந்து நிகழில் இருந்து கொண்டிருப்பது. அப்படி நிகழில் இருக்குந்தோறும் நாம் மனதில் ஒரு இடைவெளியை எண்ணங்களிடையே உருவாக்க முடியும். இதற்கான முக்கிய ஒரு பாதையாக தியானம் இருக்கின்றது. எந்த ஒரு வேலையைச் செய்தாலும் வேறு எந்த எண்ணமும் இல்லாது நிகழிலேயே திருப்ப திருப்ப இருப்பது.

மனமானது நம்மைக் காப்பாற்றும் ஒரு இயந்திரம் எனச் சொல்லலாம். அது மற்ற மனங்களைத் தாக்குவது, தற்காப்புச் செய்வது என்பதோடு (தகவல்களை) பல இடங்களில் இருந்து சேர்த்து, பின்னர் சேமித்து வைத்து அலசி ஆராயச் செய்கின்றது. அது ஒருவகையில் நல்லது, ஆனால் அது சிருஷ்டிகரமானது அல்ல.

எண்ணங்களின் இடைவெளியை காண்பதென்பது, சிந்திப்பதை நிறுத்தி வைப்பது போல் ஆகாதா என்றொரு கேள்வி நமக்குள் எழக்கூடும். எப்படி நான் தியான வகுப்பிற்குப் போனபோது எண்ணங்கள் இல்லாது எழுத முடியுமா என்று எனக்குச் சந்தேகம் வந்ததோ, அது போல உங்களுக்கும் தோன்றலாம். எண்ணமானது நம்மை எப்போதும் ஆக்கிரமித்திருப்பதால்தான் நமக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. பிரக்ஞையை நாம் உணரும்போது, எண்ணமானது அதன் ஒரு பகுதியாகின்றது.

எண்ணமானது ஒருபோதும் பிரக்ஞையாவது இல்லை ஆனால் பிரக்ஞையின் ஒரு பகுதியாக எண்ணம் மாறக்கூடியது. ஆகவே நாம் விழிப்புடன் இருக்கும்போது, பிரக்ஞையின் மூலம் எண்ணங்களை வேண்டியபோது மட்டும் 'பயன்படுத்தி'க் கொள்ளலாம். மற்ற நேரங்களில் எப்போதும் அலட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்களை 'சற்று அமைதியாய் இரும் பிள்ளாய்' என ஓரு மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி எழுதுவதெல்லாம் குழப்பமானது என்பதும் எனக்குப் புரிகிறது. அதைவிட புத்தரைக் கடவுளாக்கி வணங்கும் பெளத்தர்களில் பெரும்பாலானோர் கூட, புத்தரைப் போல தங்களால் இந்தப் பிறப்பில் ஞானமடைதல் முடியாது என்றுதான் நம்புகின்றார்கள் எனச் சொல்லப்படுகின்றது. ஒருவகையில் இது புத்தர் கற்பித்தவற்றைக்கு நேரெதிர் திசையில் செல்வதைப் போன்றது.

மதம் என்ற கற்பிதம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை உணராததால்தான் ஒவ்வொரு மதமும் தானே சிறந்ததெனச் சொல்லி சர்ச்சரவுகளில் ஈடுபடுகின்றது. இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துத்தான் நீட்ஷே போன்றவர்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவித்து புதிய பாதைகளைத் தேட முனைந்திருந்தார்கள்.

எல்லா அசலான கலைஞர்களும், படைப்பாளிகளும், அவர்கள் உணர்ந்தோ அல்லது உணராமலோ இந்த மனதைத்தாண்டிய, மனமில்லாத (no mind) வெற்றிடத்தில் வந்த அமைதியை உணர்ந்திருப்பார்கள். அதுவே அவர்களது சிறந்த படைப்புக்களைச் சிருஷ்டிக்க வைத்திருக்கவும் கூடும். பல எழுத்தாளர்கள் தமது எழுத்துக்கள் தம்மையறியாமல் எழுதிச் சென்றது என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.


உண்மையில் அவர்கள் அந்த சிருஷ்டியில் இருக்கும்போது, எண்ணங்களின் உலகிற்கு அப்பாலான மனமற்ற வெளியில் (no mind) அலைந்திருக்கின்றனர். அதுவே அவர்களின் மாபெரும் படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கின்றது. மிகச் சிறந்த உதாரணமாக இளையராஜாவிடம் எப்படி இந்த இசையை அமைத்தீர்களென்று பலர் அவரிடம் வியந்து கேட்கும்போது, அவர் சொல்கின்ற பதில் அவர் அந்த 'மனமற்ற வெளி'யில் அலைந்தபோது உருவாக்கிய இசைக்கோர்ப்புகள் என்பதை நாம் எளிதில் உணரமுடியும். அதை ஏதோ ஒருவகையில் அவரும் அனுபவிப்பதால்தான் ஒரு வெளிநாட்டு நிகழ்வொன்றில், நான் நாளை இல்லாமல் போனாலும் என் பாடல்கள் உங்களுக்காக ஒலிக்கும் என்று சொல்லிவிட்டு, சட்டென்று இனி எனக்கு இன்னொரு பிறப்பு இல்லை என்றும் தெளிவாகச் சொல்கின்றார்.

தன்னிலை உணர்தல் (self realization) இந்த வாழ்க்கைக் காலத்தில் நிகழுமா, நிகழாதா என்பதைவிட, அப்படி நம்மை உணரும் சாத்தியம் எப்போதேனும் இருக்கலாமென்ற சுவாரசியத்துடன், இந்தப் பயணத்தைச் செய்து பார்த்தல் எனக்குப் பிடித்தமானது என்பதையும் இந்தக்கணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.



3.

 
ருவருக்கு முப்பதாவது பிறந்தநாள் வருகின்றது. அதுவரை அவர் மிகுந்த பதகளிப்புடன் வாழ்ந்து வருகின்றார். அத்தோடு அவருக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் காலையில் எழும்பும்போது இந்த வாழ்வின் வெறுமை அவரைத் துரத்தியடிக்கின்றது. அவர் இனி வாழ்வது அர்த்தமில்லை என்று நினைக்கின்றார். அந்நியமாதலின் பெரும் அவஸ்தையை அன்று அவர் உணர்கின்றார்.

'என்னால் இனி ஒருபோதும் என்னுடன் வாழ முடியாது' ('I cannot live with myself any longer') என்கின்ற எண்ணம் திருப்பத் திருப்ப அவரின் மனதில் சொல்லப்படுகின்றது. அப்போது அவருக்குள் எங்கிருந்தோ ஓர் எதிர்பாராத சிந்தனை வருகின்றது. இப்படி ஒரு குரல் சொல்லிக் கொண்டிருந்தால், 'நான் ஒருவரா அல்லது இருவரா? நான் என்னோடு வாழ முடியாது என்று சொன்னால், நிச்சயமாக அது நான் ஒருவரல்ல, இருவர்' என நினைக்கின்றார். 'நான்' (I) மற்றும் 'சுயம்' (Self) இங்கே இருப்பின், யாரோ ஒன்றுதான் அசல் என்று மேலும் யோசிக்கின்றார்.

இந்த 'தன்னிலை உணர்ந்த' அந்தப் பொழுதில் தனது மனது நிறுத்தப்பட்டதை அவர் அவதானிக்கின்றார். 'நான் அவ்வளவு விழிப்புடன் இருந்தேன், எந்த எண்ணமும் எனக்கு அப்போது இருக்கவில்லை' என்கின்றார். அந்த நேரத்தில் ஒரு வித்தியாசமான சக்தி தன்னுடலில் மெதுவாக ஆரம்பித்து வேகமடைவதை அவர் பார்க்கின்றார். அது என்னை மிகவும் அச்சுறுத்தியது. என் உடல் அதிர்வில் நடுநடுங்கத் தொடங்கியது. அப்போது 'ஒன்றையும் எதிர்க்காதே' என்கின்ற வார்த்தைகளைத் திருப்பத் திருப்பக் கேட்டேன், அது யாரோ என் நெஞ்சுக்குள் இருந்து பேசுவதைப் போல இருந்தது. நான் ஒரு பெரும் வெற்றிடத்தால் உறிஞ்சப்படுவதை உணர்ந்தேன். அந்த வெற்றிடமானது வெளியில் இருந்தது அல்ல, எனக்குள் இருந்த வெற்றிடத்தாலேயே நான் இழுக்கப்பட்டேன். சட்டென்று எனது எல்லாப் பயங்களும் இல்லாது போயின. நான் அந்த வெற்றிடத்திற்குள் என்னை விழ அனுமதித்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எந்த நினைவும் தனக்கு இல்லை என்கின்றார்.

பிறகு சுயநினைவு வந்தபோது, நான் பறவைகளின் கீச்சிடலைக் கேட்டேன். ஆனால் அப்படியொரு குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. நான் அப்போதும் கண்ணை மூடியபடியே இருந்தேன். எனக்கு ஒரு வைடூழியத்தின் காட்சி தோன்றியது. ஏதோ வைரம் சத்தம் போட்டதுபோல அந்தப் பறவைகளின் குரல் கேட்டது.

அந்த நாளில் மட்டுமில்லை, பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இப்படியான மனோநிலையில் நானிருந்தேன். எல்லாமே மிகத் துல்லியமாகத் தெரிந்தன, கேட்டன. எந்தத் தொந்தரவுமில்லாது அந்தக் காலங்களில் நான் அமைதியையும், பேரின்பத்தையும் அனுபவித்தேன். அதன்பிறகு அந்த அனுபவம் இல்லாது போயிருக்கலாம் அல்லது அதுவே என் இயல்பான நிலையாக இப்போது மாறியுமிருக்கலாம் என்கின்றார்.

இப்படிச் சொல்கின்றவர் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பூங்காவின் பெஞ்சுகளில் இருந்து காலத்தைக் கழித்தேன் என்கின்றார். எனக்கு இந்த உலகில் எதுவுமே அப்போது தேவையாக இருக்கவும் இல்லை. அந்த வெறுமனே வேடிக்கை பார்த்த அந்த 2 வருடங்களில், எனக்கு எந்த உறவும் இல்லை, எந்த வேலையும் இல்லை, எந்த வீடும் இல்லை, சமூகம் சொல்லும் எந்த அடையாளமும் எனக்கிருக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்' என்கின்றார்.

தனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான மாற்றம் நடந்தது என்பதை அறிந்தபோதும், அது என்னவென்று விளங்கிக்கொள்ள பல வருடங்கள் ஆனது என்றும், அதை தனது ஆன்மீக ஆசிரியர்களும், ஆன்மீகப் பிரதிகளும் பின்னர் விளங்கப்படுத்தின/ர் என்கின்றார். இவ்வாறு சொல்கின்றவரே இன்று முக்கியமான ஒரு ஆன்மீக ஆசிரியராக இருக்கும் Eckhart Tolle. அவர் தற்போது கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவரில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர் சொல்லும் அனுபவத்துக்கு நிகரானதை விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோதும் அறிந்திருக்கின்றேன். விசிறி சாமியாருக்கு ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதென்று அவரை வைத்தியசாலையில் கூட அவரின் குடும்பத்தினர் அனுமதித்திருக்கின்றனர். நம்மைப் போன்றவர்கள் பிறந்த நாடுகளில் 'விழிப்பு' வந்தவுடன் அலைவதைப் போல, மேற்கில் 'தன்னிலை உணர்தல்' நிகழ்ந்தாலும் பரதேசிகளாக அலையமுடியாது. அதனால்தான் இரண்டு வருடமாக பூங்காக்களில் இருந்து இந்த அனுபவத்தை தன்னியல்பிலே எச்கார்ட் அனுபவித்தாரோ தெரியவில்லை.

இது ஒருவரின் அனுபவம். அவரின் பாதையில் அல்லது அவருக்கு சட்டென்று (ஸென் ஆசிரியர்கள் பலருக்கு நிகழ்ந்ததுபோல) தன்னிலை உணர்தல் போல நமக்கும் நடந்துவிடும் என்று நம்பத் தொடங்கினால் அதை போல அபத்தம் இல்லை. இவ்வாறானவர்களின் அனுபவம்/ வாழ்க்கை எல்லாம் நமக்கும் இவை சாத்தியம் என்பதற்காகவே நினைவில் வைத்திருக்கலாமே தவிர, நாம் ஒவ்வொருவரும் நடக்கவேண்டிய பாதை நமக்கு மட்டுமே உரியது. அதனால்தான் புத்தர் துயரங்கள் முடிந்த நிலை எப்படியிருக்கும் என்பது குறித்து எதுவும் பேசாது அமைதி காத்தவர்.

ஒரு எண்ணமும் அதற்கு அடுத்த எண்ணமும் தோன்றும் இடைவெளியைக் கவனிப்பதிலிருந்து எல்லாமே ஆரம்பிக்கின்றது. அப்படி ஒரு எண்ணத்தைக் கவனித்து அனுப்பினாலும், அடுத்த எண்ணம் பின் வீட்டால் நுழையவும் செய்யும். அதையும் 'ஓ.. இது இன்னொரு எண்ணத்தின் சித்து விளையாட்டு' என்று கவனிக்கத் தெரிந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கிவிடுவோம், வாழ்க்கை குறித்த தேவையற்ற பயங்களும் குறையத் தொடங்கிவிடும் என நினைப்பதும் இந்த மனம் செய்யும் குறளி வித்தையா அல்லது அதைத்தாண்டிய வேறு எதுவோ?

***************

(எழுத உதவிய நூல் 'The Power of Now')