கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மிலான் குந்தேராவின் 'அறியாமை'

Saturday, March 30, 2019


 Ignorance by Milan Kundera


மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக‌ இருக்கிறது.

இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட, அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இருக்கின்றான். பாரிஸிலிருக்கும் இரினாவின் தோழிகள் மட்டுமில்லை, அவளின் காதலனும், செக் இப்போது சுதந்திரமடைந்துவிட்டதே, நீ ஏன் இன்னும் தாய்நிலம் போகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கேட்கின்றனர். தாய்நிலம் போகும் கனவு இல்லாத இரினாவை இவர்களின் கேள்விகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இறுதியில் செக்கிற்குத் திரும்புகின்றாள். இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த செக் மட்டுமில்லை, அவளின் நண்பிகளும் கூட அவளுக்குத் தொடர்பில்லாத/தெரியாத ஒரு உலகைப் பற்றிப் பேசுகின்றனர். அவளின் வருகையை அவர்கள் கொண்டாடுகின்றனரே தவிர, அவர்களுக்குத் தெரியாத அவளின் அந்த இருபது ஆண்டுகள் பற்றி அறிய எவருமே அக்கறை கொள்கின்றார்களில்லை. அது இரினாவிற்குத் துயரத்தை மட்டுமின்றி சலிப்பையும் கொண்டு வருகின்றது.

அவளது ஒரு தோழி மட்டுமே கொஞ்சம் இரினாவைப் புரிந்துகொள்கின்றாள். எல்லோரும் தங்கள் செக் நாட்டுக்கலாசாரத்தைக் காட்ட பியர்களை ஓடர் செய்து குடிக்கும்போது, இரினா பிரான்சிலிருந்து கொண்டு வந்த வைனின் அருமையை இந்தத்தோழியே கண்டுகொள்கின்றாள். நமது செக் மக்கள் கடந்து இருபது ஆண்டுகள் செக்கில் நடந்தத கொடுமையையே மறந்ததுமாதிரி புதிய வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நீ உனது புலம்பெயர்ந்த 20 வருடகால வாழ்க்கையை அறிவார்கள் என நினைக்கின்றாயா என அவள் கேட்கின்றாள்.

ரினாவின் தோழிகள் மட்டுமில்லை அவளின் காதலனான குஸ்தாவாவும் அவளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகின்றான். அந்த விலகல் நடக்கும் கட்டத்தில் இரினா அவளது இளமைக்கால காதலனான யோசப்பைக் காண்கின்றாள். அவளுக்கு அவனை ஞாபகம் இருப்பதுபோல, அவனுக்கு இவள் பற்றிய எந்த நினைவுகளுமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சேர்ந்து கதைத்து, மது அருந்திக் கொண்டாடியபோது, அவளுக்கென அவன் உணவகத்தில் களவாடிக்கொண்டு வந்து கொடுத்த ஆஸ்ட்ரேயை இரினா இன்னமும் கவனமாக வைத்திருக்கின்றாள். ஏன் அதை பிரான்சிற்குக் கூட புலம்பெயர்ந்து போனபோது கொண்டு சென்றிருக்கின்றாள்.

இருபது ஆண்டுகளில் யோசப்பிற்கும் நிறைய நடந்தேறிவிட்டது. வைத்தியர்கள் நிறைய இருக்கும் குடும்பத்தில் வந்த அவன், மிருக வைத்தியராக பின்னாட்களில் மாறியிருக்கின்றான். இரினாவைப் போல அவனும் ரஷ்யா ஆக்கிரமிப்பால் டென்மார்க்கில் குடிபெயர்ந்திருக்கின்றான். அவன் அவ்வாறு புலம்பெயர்ந்ததால் அவனது குடும்பம் ரஷ்யாப் படைகளால் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றார்கள். டென்மார்க்கில் போய் அங்கே டென்மார்க் பெண்ணை மணந்துவிட்டு, இப்போதுதான் 20 ஆண்டுகளின் பின் செக்கிற்குள் கால் வைக்கின்றான்.

இறுதியில் இரினாவுக்கும், யோசப்பக்கும் செக் தமது பழைய செக் இல்லை என்கின்ற சலிப்பு வருகின்றது. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இருக்க முடியாது என முடிவு செய்கின்றனர். இரினாவின் காதலனான குஸ்தாவ்வோ அவளிடமிருந்து விலகிச் செல்வதோடு அல்லாது, அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லாத அவளின் குடும்பத்தோடும் நெருக்கமாகின்றான். இது இன்னும் பெரிய விலகலை இரினாவிற்குக் கொடுக்கின்றது.

தாய் நிலம் மீளும் இருவரின் அனுபவங்களும் கசப்பாக இருக்கின்றன. யோசெப்பின் தன் மனைவியை நோயிற்குக் காவு கொடுத்துவிட்டான். ஆனால் நினைவுகளை அழிக்காது அவள் எப்படி உயிரோடு இருந்திருந்தால் ஒரு வாழ்வை அவன் அவளோடு சேர்ந்து வாழ்ந்திருப்பானோ அவ்வாறு ஒரு வாழ்வை தன் வீட்டினுள் வடிவமைத்து தானும் தன்பாடுமாய் தனித்து வாழ்ந்து வருகின்றவன்.

குஸ்தாவின் மீதான விலகல் இரினாவிற்கு யோசெப்பின் மீது ஈர்ப்பைக் கொடுக்கின்றது. யோசெப் ஒருகாலத்தில் அவனின் காதலனாக மாற இருந்தவன் என்பதால் நேசம் இன்னும் அடர்த்தியாக இரினாவுக்குள் இருக்கிறது. அவனுக்குத் தன் உடலைக் கொடுத்த இரவின் பின்தான் இரினா அறிந்துகொள்கின்றாள், யோசெப்பிற்கு தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லை என்பது. அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

மீளத் தாயகம் விரும்பும் கனவு மட்டுமில்லை, மீளப் புதிய காதலைக் கண்டடையும் கனவும் இரினாவிற்குக் கலைந்துபோகின்றது. புலம்பெயர்ந்த எல்லோர்க்கும் தாய் நிலம் மீளும் பெருங்கனவு இருந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உண்மையிலே அந்தக் கனவு அழகான கனவுதானா என்பதையே மிலன் குந்தேரா 'அறியாமை'யில் பல்வேறு விதமான இழைகளைப் பிடித்துப் பிடித்துக் கேள்விகளால் முன்வைக்கின்றார்.

கடந்தகால நினைவுகளை இல்லாமற் செய்வது கடினமானதுதான், ஆனால் அதைவிட நிகழ்காலக் கனவுகள் இன்னும் பாழ் என்கின்றபோது எந்த மனிதரால்தான் வாழ்வினை எதிர்கொள்ள முடியும்?
--------------------------------------------------------

('அறியாமை'யை ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்னர் வாசித்திருந்தேன். குந்தேராவின் நாவல்களை மீண்டும் வாசிக்கும் விருப்பத்தின் நிமித்தம் அண்மையில் அவரை வாசிக்கத் தொடங்குகையில், இது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்க்கு மிக நெருக்கமான ஒரு படைப்பு என்பதாலேயே இந்தக் குறிப்பு. ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்னர் மணி வேலுப்பிள்ளை 'மாயமீட்சி' என்ற பெயரில் இதை அற்புதமாகத் தமிழாக்கம் செய்து காலம் வெளியீடாக வந்திருக்கின்றது)

0 comments: