அவ்வாறான ஒரு சிறுகதைத் தொகுப்பில்தான் நான் ஒரு கதையை வாசித்துத் திகைத்து நின்றிருக்கின்றேன். அப்போது பதினொன்றோ அல்லது பன்னிரண்டோ வயதிருக்கலாம். கதையில் ஒரு கொலை நடக்கின்றது. அந்தக் கொலையைச் செய்தவரைப் பிடிக்கவேண்டிய கட்டாயம் பொலிஸுக்கு வருகின்றது. எவ்வாறு தேடியும் கொலைகாரன் பிடிபடாது போக ஒரு அப்பாவி (அநாதரவான) சிறுவனைக் கொலைகாரனெனப் பிடிக்கிறது பொலிஸ். அந்தச் சிறுவனை இன்னொரு நகரிலுள்ள பொலிஸ் ஸ்டேசனுக்குக் கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றார்கள். அப்படிக் கூட்டிச் செல்லும் பொலிஸிஸ்காரர்களில் ஒருவர் மிகுந்த மனிதாபிமானியாக இருக்கின்றார். எப்படியெனினும் இந்தச் சிறுவனைச் சித்திரவதை செய்து கொலை செய்துவிடுவார்கள் என்பது அந்தப் பொலிஸ்காரருக்கு உறுதியாகத் தெரிகிறது. அந்தச் சிறுவனுக்குப் போகும்வழியில் சாப்பாடு வாங்கிக்கொடுத்துவிட்டு, அவன் கடதாசிப்பூக்களைப் (போஹன்வில்லா) ஆசையுடன் பொறுக்கும்போது, அவன் தப்பியோட முயற்சித்தான் என அவனைச் சுட்டுக்கொன்று விடுகின்றார். அவர் அந்தத் துப்பாக்கிச் சூட்டால் கொடுத்தது, அந்தச் சிறுவனுக்கான விடுதலை. பொலிஸ் ஸ்டேசனுக்குள் போய் சித்திரவதைக்குள்ளாகி குற்றுயிராகிப் போய் மரணிப்பதைப் பார்க்கச் சகிக்காத ஒருவரின் மென்மனது அதில் காட்டப்பட்டிருக்கும். இப்படியும் கதை எழுதலாம் என்பதோடு, அந்தப் பொலிஸ்காரரை எப்படி விளங்கிக்கொள்வது என்றும் அந்த வயதில் திகைத்து நின்றிருக்கின்றேன். இன்று அந்தக் கதையின் பெயர் கூட மறந்துவிட்டது. ஆனால் அப்போதுதான் எனக்கு முதன்முதலாக பிரபஞ்சன் அறிமுகமாயிருந்தார்.
பிறகு பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவல்களை மட்டுமில்லாது 'தாழப் பறக்காத பரத்தையர் கொடி' போன்ற கட்டுரைத் தொகுப்புக்கள் உட்பட அவரது அண்மைய மகாபாரதக் கதைகள் வரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கின்றேன். பிரபஞ்சன்தான் பிரபஞ்சக் கவி என்ற பெயரில் கவிதை எழுதுகின்றவர் என்று தெரியாது அவரது சில கவிதைகளைக் கூட, கனடா வந்த புதிதில் ஏதோ ஒரு சஞ்சிகையில் இருந்து பிரித்தெடுத்து சேகரித்தும் வைத்திருக்கின்றேன்.
பாண்டிச்சேரி என்றதும் நினைவில் வர பலர் இருக்கின்றார்கள். ஆனால் பாண்டிச்சேரிக்கு இன்னும் போகாத என்னை அதற்குள் உலாவவிட்டவர்களாக பிரபஞ்சனையும், ரமேஷ்-பிரேமையும் முதன்மையானவர்களாகச் சொல்வேன். ரமேஷ்- பிரேமின் கவிதைகள் சிலவற்றில் பிரபஞ்சன் முக்கிய ஒரு பாத்திரமாக, பாண்டிச்சேரியின் அடையாளங்களில் ஒருவராக வந்துமிருக்கின்றார். அந்தளவுக்கு அவர் மீது அளவு கடந்த பிரியம் வைத்தவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள். இவர்களைத் தவிர்த்து ராஜ் கெளதமனும், கி.ராஜநாராயணனும் பாண்டிச்சேரிக்குப் போனால் சந்திக்கவேண்டியவர்கள் என்கின்ற என் பட்டியலில் இருப்பவர்கள். 'லண்டனில் சிலுவைராஜ்' நாவலாக இருக்கவேண்டும், அதில் சிலுவைராஜ் வீட்டிலிருந்து சென்று பாருக்குக் குடித்துவிட்டு வருகின்ற எள்ளலான காட்சிகள் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றன.
பிரபஞ்சன் கனடாவுக்கு ஒருமுறை வந்திருக்கின்றார். அது அவருக்கு உவப்பில்லாத நிகழ்வாகவும், அவரின் மனைவி அப்போது இந்தியாவில் மறைந்துபோனதால் துயரமான சம்பவமாகவும் மாறியிருந்தது. அவர் இங்கு சில வாரங்கள் நின்றபோதும் அவரை ஒரேயொரு நிகழ்ச்சியிலேயே என்னால் சந்திக்கமுடிந்திருந்தது.
அவர் நிகழ்வு முடிந்து வெளியே வந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தபோதுதான்,அவரோடு கொஞ்சநேரமே தனிப்பட்டுப் பேசமுடிந்தது. அப்போது அவரிடம் இங்கே வந்து நின்ற நாட்களில் நம்மால் ஆறுதலாக அவரோடு இருந்து பேசமுடியவில்லையே என்ற கவலையைப் பகிர்ந்தபோது, அடுத்தமுறை என்னை நீங்கள் அழையுங்கள், நாங்கள் உங்களைப் போன்றவர்களோடு வந்து நின்று எல்லாவற்றையும் பேசுகின்றேன் என்றார் சிரித்தபடி.
சென்னை புத்தகக் கண்காட்சி நேரத்தில் குட்டி ரேவதி X எஸ்.ரா பிரச்சினை எழுந்தபோது பெண்கள் பக்கம் நிற்பதற்காய் மேடையிலிருந்து வெளிநடப்புச் செய்ததிலிருந்தும், என்.சி.பி.எச் பிரபஞ்சன், வளர்மதி உள்ளிட்டோரின் நாடகங்களை உரிய அனுமதி இல்லாது பிரசுரித்த பிரச்சினையில் நியாயத்தின் பக்கம் பேசியதிலிருந்தும், எழுத்தாளர் பலர்க்கு அரிதாகவே வாய்க்கும் 'அறவுணர்வு' அவரிடம் நிறைய இருந்ததைப் பார்த்திருக்கின்றேன். இலக்கிய உபாசகனாக மட்டுமில்லாது, அழகின்/அன்பின் உபாசகனாகவும் அவர் இருந்ததைப் பல்வேறுபட்டவர்கள் எழுத அறிந்துமிருக்கின்றேன்.
ஒருவர் தன் அறவுணர்வின் பொருட்டு பிற லெளதீக விடயங்களையோ/ பொருளாதார வசதிகளையோ உதறியெறிவது அவ்வளவு எளிதல்ல. ஒருவகையில்பார்த்தால் நம் தமிழ்ச்சூழலில் எழுத்தை முழுநேரமாகக் கொண்டும். அதற்காய்ச் சமரசமும் செய்யாது வாழ்ந்த இறுதிப்பரம்பரையின் அரிதான சிலரில் ஒருவராக பிரபஞ்சன் இருக்கவும் கூடும்.
பிரபஞ்சன் தனது வாழ்வின் தேர்வுகளை விரும்பிச் செய்தார் என்று பலர் பதிவு செய்திருக்கின்றனர். தடத்தில் வந்த நேர்காணலில் 'நான் மகிழ்ச்சியாக இல்லை, ஆனாலும் இந்த வாழ்வை வாழ்ந்தாகத்தானே வேண்டும்' என்று சொல்லிய ஒரு பிரபஞ்சனும் இன்னொரு பக்கம் இருக்கின்றார். 'குடும்பத் தலைவனாய் இருக்க தான் தகுதியற்றவன், மனைவிக்கு மிகவும் கஷ்டம் கொடுத்திருக்கின்றேன்' என சுயவிமர்சனம் செய்கின்ற வேறொரு பிரபஞ்சனும் நமக்கு முன் இருந்திருக்கின்றார். எனக்கு எல்லாவிதமான பிரபஞ்சனையும் பிடித்திருக்கின்றது. ஏனெனில் இவை எல்லாமுந்தான் பிரபஞ்சனை இன்னும் மனிதத்தன்மையுள்ள ஒருவராக மாற்றுகின்றது.
துணைகள் இல்லாதவர்கள் மட்டுமில்லை, துணைகளோடு இருப்பவர்களும் தனிமையை உணர்ந்தபடியே இருக்கின்றனர். அதுவும் துணைகளோடு இருப்பவர்கள் அவர்களின் துணைகள் பிரியும்போதோ அல்லது மறையும்போதோ இன்னும் ஆழமான தனிமைக்குள் செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. சக மனிதர்கள் நமக்குத் தேவையாகவும், சிலவேளைகளில் அவர்களே நமக்கு மூச்சுவிட முடியாது நம் அமைதியைக் குலைக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அதைப் புரிந்துகொண்டு அதில் ஒரு சமனிலையை அடைந்துவிடலாம் என்கின்ற பயணத்தில் இருப்பவர்களாகவே நம்மில் பலர் இருக்கக்கூடும்.
பிரபஞ்சன், நமது அறவுணர்வுகளை இழக்காது, பிறர் மீது இன்னும் கரிசனம் காட்டும் உயிரிகளாக நம்மை வாழச்சொல்கின்றதான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார். அதேபோல அவரின் தேர்வுகளில் அவர் அவ்வப்போது தளர்கின்றவராகவும், தளம்புகின்றவராகவும் இருப்பதை அவரது நேர்காணல்களில் அவதானிக்கும்போது, அவரை நமக்குரிய ஒருவராக நினைத்து இன்னும் நேசிக்கவும் முடிகின்றது.
மண்ணிற நிற லெதர் குளிராடையுடன், ஸ்டைலாக புகைபிடித்துக்கொண்டு மிகுந்த கனிவான குரலில் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்சனை அவரின் எழுத்துக்களைப் போல அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.
.........................
(Jan 07, 2019)
0 comments:
Post a Comment