கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கும்பளாங்கி இரவுகள் (Kumbalangi Nights)

Saturday, March 23, 2019


'கும்பளாங்கி இரவுகளை'  ஃபகத் பாசில் தயாரித்து, நடித்துமிருக்கின்றார். ஆனால் அவர் இதில் ஒரு முக்கிய பாத்திரமல்ல.  நான்கு சகோதரர்கள்,  பெற்றோர் இல்லாத ஒரு சபிக்கப்பட்ட  கட்டிமுடிக்கப்படாத வீடு - இவற்றைப் பின்னணியாகக் கொண்டு ஓர் இயல்பான கதையை அலுப்பேயில்லாது நகர்த்திச் சென்றிருக்கின்றனர். மகேஷிண்டே பிரதிக்காரம் பார்க்கும்போது இடுக்கியும், அங்கமலி டயரிஸ் பார்க்கும்போது அங்கமலியும், சார்ளி பார்க்கும்போது மூணாறும் ஏதோ ஒருவகையில் நம் நினைவுகளில் சேகரமாவது போல, இதில் கும்பளாங்கி. அண்மையில் தொடுபுழாவில் நின்றபோது சந்தித்த நண்பரோடு சூழலியல் பற்றிப் பேச்சு வந்தபோது, கும்பளாங்கியில் இருக்கும் eco friendly tourism பற்றிப் பேச்சு வந்து, அங்கே போய் என்னைப் பார்க்கவும் அவர் கூறியிருந்தது, இந்தப் படத்தில் அதைத் தொட்டுச் சென்றபோது நினைவுக்கு வந்தது.

வெவ்வேறு திசைகளில் வாழ்க்கையை அதன்போக்கில் எந்த நிரந்தரமான வேலையும் இல்லாது வாழும் மூன்று சகோதரர்களுக்கு ஓர் இளைய சகோதரன் இருக்கின்றான். அவன் தான் இவர்களை இணைக்கும் ஒரு புள்ளியாக இருக்கின்றான். எனினும் மூத்த சகோதர்கள் எப்போதும் முரண்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள்.  கதையின் தொடர்ச்சியில் அவர்களின் வெவ்வேறு தந்தையர்/தாய்கள் பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலைக்கு வந்ததற்கு தான்தான் காரணெமனக் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஒருவன் மனோவியல் வைத்தியர் முன் உடைந்துபோகின்ற கணம் அடர்த்தி கூடியது.

இவர் நெருக்கடியின் நிமித்தம் தற்கொலை முயற்சி செய்ய, இவரைத் தடுக்க முயல்கின்றவருக்கு அந்நிகழ்வு மரணத்தைக் கொண்டுவருகின்றது, அப்படிக் காலமாகிப்போன தமிழர் ஒருவரின் மனைவியை எப்படி இயல்பாக தம் வாழ்வில் ஒருவராக இந்தச் சகோதர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதெல்லாம் வார்த்தைகள் விரயமில்லாது காட்சிகளாக இத்திரைப்படத்தில் கொண்டுவந்திருக்கின்றார்கள்.

பிக்கப்பட்ட, ஒரு கோடியில் விலக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கு இந்தச் சகோதரர்களின் வாழ்வில் நுழையும் பெண்கள் புதிய அழகைக் கொண்டுவருகின்றார்கள். அதிலும் முக்கியமாக வெளிநாட்டிலிருந்து பயணியாக வரும் கறுப்புப்பெண்ணோடு இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கு வரும் காதல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. மலையாளப் படங்களில் முஸ்லிம்களை எப்படி இயல்பாகச் சித்தரிப்பார்களோ அப்படி இப்போது கறுப்பினத்தவர்களையும் மிகநேர்மையாகக் கொண்டு வருகின்றார்கள் (இன்னொரு உதாரணம் 'சூடானி நைஜீரியாவிலிருந்து').

மூலைக்கொன்றாய்ப் பிரிந்திருக்கும் சகோதரர்களில் ஒருவரின் காதல், இவர்களை இணைக்கின்றது. ஃபகத் பாசிலில் பாத்திரம் இந்த நான்கு சகோதரர்களுக்கு அப்பாலான ஒரு பாத்திரம். 24 நோர்த் காதத்தில் அவ்வளவு சுத்தம் பார்க்கின்ற பாத்திரம் அவருக்கு என்றால், இதில் வேறுவகையான பாத்திரம். அதிக காட்சிகளில் வராதபோதும், கொஞ்சக்காட்சிகள் என்றாலும் ஒருவகையான creepy மனோநிலையை பார்ப்பவரிடையே ஃபகத் உருவாக்கிவிடுகின்றார்.

இந்தப் படத்தில்  'ஆண்மை' என்பது தொடர்ந்து கேள்விக்குட்படுத்துகின்றதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். ஃபகத் பாசில் அறிமுகமாகின்ற காட்சியே நான் 'ஒரு முழுமையான ஆண்'  (complete man) என்கின்றார்.  இந்தச் சகோதரர்களிடம் நீங்கள் என்னைப் போன்ற முழுமையான ஆண் இல்லை என்று நினைவுபடுத்தியபடியும் இருக்க்கின்றார். அவரின் மைத்துனி இந்தச் சகோதரர்களில் ஒருவரிடம் காதல் கொள்ளும்போது என்னைப் போல முழுமையான ஆண் அவனில்லை என்றே ஃபகத் நிராகரிக்கின்றார். ஒருவகையில் இந்த masculinity என்பது நாம் நினைக்கும் ஒன்றல்லவென இந்தத் திரைப்படம் சொல்ல வருவதைக் கண்டுகொள்ளலாம்.

இல்லாதுவிடின் சமூகம் சொல்கின்ற masculinity  இல்லாத இந்த சகோதர்களை எப்படி பெண்கள் தேடிவந்து காதலிக்கவும், தமது உடல்களைப் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருப்பார்கள். இந்தப் பெண்கள் 'ஆண்மை' என்ற கட்டமைக்கின்ற ஒன்றைப் பார்க்கவில்லை, அவர்கள் தமது ஆண்களிடம் வேறுவகையான  அழகைக் கண்டுதான் காதல் கொள்கிறார்கள். புறச்சமூகம் இந்தப் பெண்களுக்கு எவ்வித அழுத்தங்களைக் கொடுத்தபோதும், அதை அவர்களே இந்த ஆண்களின் துணையை நாடிச்செல்லாது எதிர்கொள்கின்றார்கள். ஒருவகையில் இந்தப் படம் 'ஆண்மை'யைக் கேள்விக்குட்படுத்துவது போல, பெண்களையும் ஆண்கள் சார்ந்து தங்கியிருக்காது காட்டுவதால் இன்னும் நெருக்கமாவது போலத் தோன்றியது.

சகோதரர்கள் இருக்கும் நம்மில் பலர் ஒன்றை உணர்ந்திருப்போம். அதிகமாய் எதையும் நமக்கிடையில் பகிராது, உணர்ச்சிகளைக் காட்டாது இருந்தாலும், வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் அவர்கள் நமக்காக வந்து நிற்பார்கள். அப்போது அதற்கு முதல் இருந்த எல்லா இடைவெளிகளும், பிறழ்வுகளும் நமக்கிடையில் இல்லாமல் போய்விடும். இத்திரைப்படத்திலும் காதல்களினூடாக சிக்கல் வரும்போது மற்றச் சகோதரர்கள் ஒவ்வொரு சகோதரர்களுக்காய் வந்துவிடுகின்றார்கள். இந்தப் படம் முடியும்போது கூட சகோதரர்களுக்குள் ஏற்கனவே இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாய் உபதேசம் செய்யப்படவில்லை. இந்தத் தருணத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, சபிக்கப்பட்ட வீட்டை தமது காதலிகளினூடு பிரகாசமாக ஆக்கிக்கொள்கின்றார்கள் என்றவிதமாக நுட்பமாக முடிந்திருக்கும்.

இறுதியில் ஃபகத் பாசிலின் பாத்திரத்திற்கு அவ்வளவு அதிர்ச்சியைத் தரக்கூடியதாக அல்லாது கொஞ்சம் அதிர்ச்சி குறைந்த முடிவைக் கொடுத்திருந்திருக்கலாம் என்பதைத் தவிர இந்தப் படத்தில் பலவீனங்களாய் எதுவும் துருத்திக்கொண்டு நிற்கவில்லை. படத்தில் மற்றக் காட்சிகள் அவ்வளவு இயல்பாய் இருக்கும்போது ஃபகத்தின் பாத்திரத்திற்கும் கொஞ்சம் கருணையைக் காட்டியிருக்கலாம், அண்மைக்கால ஃபகத்தின், நிவின் பாலின், துல்காரின், வினீத் சிறினீவாசனின் திரைப்படங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அங்கமாலி டயரிஸிற்குப் பிறகு கும்பளாங்கி இரவுகளின் வரவு நம்பிக்கையளிக்கின்றது.

................................

(Feb 16, 2019)

0 comments: