கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - அகதிகள் இலக்கியத்தின் அடுத்தகட்டம்

Wednesday, February 19, 2020

கே.என்.சிவராமன்

Love indicates Culture History and hence signifiers
- Lacan

மனப்பதிவானது -
ஒரு மொழியாக, (மொழியியல்) கலாச்சார ரீதியாக கட்டமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது...
... ஒருவர் எப்படி எப்பொழுது மனப்பாதிப்பை உணர்கிறார் என்பதும் -அதில் எதை முக்கியத்துவமாக அவர் எடுத்துக் கொண்டார் என்பதும் -
அந்தத் தனிமனிதருக்கே உரித்தான பண்புகள், அவரின் வாழ்க்கை முறை, நுட்பமான குடும்பச் சூழல்கள் சார்ந்ததாக உள்ளது...
- Lewis A.krishner (Having a Life)


இதுதான் இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல். ஆனால், இதுமட்டுமல்ல என்பதுதான் இந்நாவலின் சிறப்பு.

சாதாரண காதல் கதை. எவ்வித தடங்கலும் இல்லாமல் நேர் கோட்டில் பயணிக்கும் புதினம்.

ஆனால், சாதாரண காதலுக்குள் அசாதாரணமான அகதிகளின் இருத்தலியல் ஒளிந்திருக்கிறது.

நேர்கோட்டில் பயணிக்கும் புதினத்துக்குள் கடந்த - நிகழ் - எதிர் காலங்கள் ஊசலாடுகின்றன.

Rhizome!

மொத்தம் 172 பக்கங்கள். 47 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்று முதல் அதிகபட்சம் நான்கு பக்கங்களுக்குள் அடங்குபவை.

சின்னச் சின்ன வாக்கியங்கள். தெரிந்த அறிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி இருந்தாலும் வாக்கியங்களாக அவை உருக்கொள்ளும்போது தேய் வழக்காக மாறவில்லை என்பது முக்கியம்.

First personல்தான் முழு நாவலும் எழுதப்பட்டிருக்கிறது.

ரொறொண்டோவில் வசித்து வரும் இளைஞன், விடுமுறைக் காலத்தை கழிக்க மெக்ஸிக்கோவுக்கு வருகிறான். விடுதியில் தங்குகிறான். Room Bird ஆக இருக்கிறான்.

மெக்ஸிக்கோ சிட்டியில் வசிக்கும் ஒரு பெண், தன் விடுமுறையை மெக்ஸிக்கோவில் கழிக்க அதே விடுதியில் தங்குகிறாள். பகலும் இரவுமாக ஊரைச் சுற்றுகிறாள்.

இவ்விருவரும் அறிமுகமாகிறார்கள். அதுவரை பார்க்காத இடங்களுக்கு எல்லாம் அந்தப் பெண் அவனை இழுத்துக் கொண்டு செல்கிறாள்.

இரவு நேர விடுதிகள், ஸ்டிரிப் டான்ஸ் முதல் மாயன் நாகரிகங்களின் எச்சங்களாக இருக்கும் பகுதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்கள். மாயன் மக்களுடன் உரையாடுகிறார்கள்.

ஸ்பானிய பெண்ணாக அவள் இருப்பதால், ஒவ்வொரு இடம் குறித்தும் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்கிறாள். சில சமயங்களில் மற்றவர்களிடம் கேட்டு மொழிபெயர்த்து இவனிடம் சொல்கிறாள்.

அந்த ஊர் உணவை உண்கிறார்கள். அந்த உணவுகள் தயாராகும் விதத்தை அவன் பார்க்கிறான்.

அந்த ஊர் இசையைக் கேட்கிறார்கள். நடனமாடுகிறார்கள்.

இருவருக்கும் இடையில் மெல்ல காதல் அரும்புகிறது; உறவிலும் முடிகிறது. உறவாகவும் தொடர்கிறது.

நாட்கள் கழிகின்றன. அவனுடைய விடுமுறைக் காலமும் முடிகிறது.

அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் அழுகிறாள். ரொறொண்டோ செல்லத்தான் வேண்டுமா என்பது முதல் மெக்ஸிக்கோவுக்கு திரும்ப எப்பொழுது வருவாய் என்பது வரை அவன் தோளில் சாய்ந்து அழுதபடி கேட்கிறாள்.

விரைவில் மெக்ஸிக்கோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு விமானம் ஏறுகிறான்.

கைபேசி வழியே தினமும் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

விரைவிலேயே விடுப்பு எடுத்துக் கொண்டு ரொறொண்டோவில் இருந்து மெக்ஸிக்கோவுக்கு அவளை சந்திப்பதற்காக கிளம்புகிறான்...

சாதாரண காதல் கதை போல் இருக்கிறதல்லவா..?

இல்லை. அப்படியே யூ டர்ன் அடிக்கிறது.

நாவலின் இறுதி வாக்கியத்தைப் படித்தப் பின் ஜெர்க் ஆகி திரும்ப முதலில் இருந்து இதே நாவலைப் படிக்கத் தொடங்குவோம். அப்போது இதுவரை வாசித்தவை எல்லாம் வேறு வடிவில் தெரியத் தொடங்கும்!

இந்த நாவலின் கதை சொல்லிக்கு எந்தப் பெயரும் இல்லை. போலவே மெக்ஸிகோவில் அவன் சந்திக்கும் ஸ்பானிய பெண்ணுக்கும்.

நாவலின் இறுதி வாக்கியத்தில் அந்த ஸ்பானிய பெண்ணின் பெயர் வருகிறது. அப்பெயருக்கான அர்த்தத்தையும் கதை சொல்லியே குறிப்பிடுகிறான். இதன் காரணமாகவே மொத்த நாவலும் தலைகீழாகிறது!

கதை சொல்லி ஈழத்து அகதி. அந்த ஸ்பானிய பெண்ணின் தந்தை FARCல் இருந்தவர். FARC என்பது அறுபதிகளில் கொலம்பியாவில் இருந்த ஓர் இடதுசாரி இயக்கம்.

இருவருமே புலம்பெயர்ந்தவர்கள். விடுமுறையைக் கழிக்க மெக்ஸிக்கோவுக்கு வந்திருப்பவர்கள். இருவரது உரையாடல்களிலும் அவரவர் நாட்டுப் பிரச்னைகள் தொட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.

ஜான் க்ரே எழுதிய, ‘Men Are from Mars, Women Are from Venus’ நூல் வெகுஜனதளத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் -

இதற்கு மாற்றான உரையாடல்களாக கதை சொல்லியும் அந்த ஸ்பானிய பெண்ணும் பேசுவது இருக்கிறது.

போலவே மாயன் நாகரீக எச்சங்களை இருவரும் பார்வையிட்டு உரையாடும் கட்டங்களையும், அந்த இடங்கள் குறித்த கதை சொல்லியின் வர்ணனைகளையும் படிக்கும்போது யூங்கை அவ்வப்போது ரெஃபர் செய்து கொண்டேன். குறிப்பாக ‘Man and his Symbols’.

பெளத்தமும், புத்தரும் நாவல் நெடுக வருகின்றன; வருகிறார்கள்.

யூ டர்ன் அடித்து மீண்டும் படிக்கும்போது அந்தக் கட்டங்கள் எல்லாம் வேறு டைமென்ஷன்ஸ் ஆகின்றன.

முதல் வாசிப்பில் கதை சொல்லி முராகமியின் ‘Blind Willow, Sleeping Woman’ சிறுகதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருப்பது பாஸிங் க்ளவுட்ஸ் ஆக இருக்கிறது.

இரண்டாம் முறை படிக்கையில் அபாரமான குறியீடாகத் தெரிகிறது. ஏனெனில் முராகமியின் இந்தத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர்கள் இருவர்!

போலவே நான்கு நாகரீகங்கள் பிறந்த இடத்தில் நிற்கிறேன் என கதைச் சொல்லி ஓர் இடத்தில் குறிப்பிடுகிறான். ஜெர்க் ஆகி யூ டர்ன் அடித்து மீண்டும் நாவலைப் படிக்கும்போது இந்த நான்கு நாகரீகம் என்பது வேறொரு பொருளாகிறது.

அவ்வளவு ஏன்... ‘மெக்ஸிக்கோ’ என்ற நாவலின் தலைப்பே மிகப்பெரிய குறியீடுதானே... மாயன் நாகரீக மக்கள் நிர்மாணித்த நகரை முழுவதுமாக தரைமட்டமாக்கி விட்டு ஸ்பானியர்கள் மீண்டும் அதே நிலத்தில் கட்டிய நகரமல்லவா அது...

47 அத்தியாங்களும் நான்கு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்று முதல் 16 வரை கோடை காலம்; 17 முதல் 31 வரை இலையுதிர் காலம்; 32 முதல் 39 வரை குளிர்காலம்; 40 முதல் 47 வரை இளவேனில் காலம்.

பருவங்களை ஒட்டிய கட்டங்கள்... அதற்கேற்ற உரையாடல்கள்.

டிசே தமிழனாக முகநூலிலும், ‘அம்ருதா’ பத்திகளிலும், கட்டுரைகளிலும் முகம் காட்டுபவர்; சிறுகதைகள் எழுதும்போது ‘இளங்கோ’ ஆனார். ‘மெக்ஸிக்கோ’ அவரது முதல் நாவல் என்பதால் இளங்கோவாகவே புன்னகைக்கிறார்.

ஆம். Big bang Smile...

மாஸ்டர்ஸை தொடர்ந்து வாசிப்பவர் டிசே தமிழன் @ இளங்கோ. அதன் வழியாக தன் மொழியை... எழுதும் விதத்தை... சொல்லும் விதத்தைக் கற்றவர்.

கற்றதை கச்சிதமாக ‘மெக்ஸிக்கோ’வாக படைத்திருக்கிறார்; எவரது சாயலும் இன்றி... தனித்துவமாக

அதிகப்படியாகத் தெரியலாம். என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மெக்ஸிகன் நாவலாசிரியரான (Carlos Fuentes) கார்லோஸ் புயெண்டஸின் முதல் நாவல், ‘Where the Air Is Clear. இந்த நாவலும் மெக்ஸிக்கோவை களமாகக் கொண்டதுதான். இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’வுக்கும் இதற்கும் துளிக்கூட தொடர்பில்லைதான்.

என்றாலும் -

ஸ்பானிய இலக்கியத்திலும் உலக இலகியத்திலும் கார்லோஸ் புயெண்டஸுக்கு முக்கிய இடம் இருப்பது போலவே -

தன் முதல் நாவலில் மெக்ஸிக்கோவை களமாக எடுத்திருக்கும் இளங்கோவும் -

தமிழிலும் உலக அளவிலும் பெயரும் புகழும் பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

மெக்ஸிக்கோ
-இளங்கோ
(2019 பிரபஞ்சன் நினைவு பரிசுப் பெற்ற நாவல்)

டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர் மேற்கு
சென்னை - 78
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
போன்: 044 - 48557525
மொபைல்: 8754507070
பக்கங்கள்: 172
விலை: ரூ.200/

நன்றி: கே.என்.சிவராமன்

0 comments: