கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

El Pepe - A Supreme Life

Thursday, February 20, 2020


ருகுவேயின் ஜனாதிபதியாக இருந்த Mujica பற்றி தமிழ்ச்சூழலில் ஒரு எளிமையான ஜனாதிபதி என்றளவில் மட்டுமே பேசப்பட்டதே தவிர, அவர் இவ்வாறு வந்துசேர்ந்ததற்கான தடங்கள் பற்றி அவ்வளவாகப் பேசப்படவில்லை. 'El Pepe, a supreme life' என்கின்ற இந்த ஆவணப்படத்தைப் பற்றிப் பார்க்கும்போது 'எல் பெப்பே' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட Mujicaவை நாங்கள் இன்னும் நெருக்கமாக அறியமுடியும். 1950களில் உருகுவேயின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக டூபாமாரோஸ் என்கின்ற இடதுசாரி இயக்கம் வலுப்பெறுகிறது. எல் பெப்பே போன்றவர்கள் சே குவேராவின் பாதிப்போடு போராடத் தொடங்குகின்றார்கள். வழமையாக எல்லா இயக்கங்களும் தலைமறைவான புறநகர் கெரில்லா யுத்தத்தையே ஆரம்பிக்கின்றபோது, எல் பெப்பே போன்றவர்கள் நகர கெரில்லா யுத்தத்தை ஆரம்பிக்கின்றார்கள். தாங்களே இவ்வாறு வித்தியாசமான ஒரு யுத்தத்தைத் தொடங்கிய முதல் இடதுசாரிகள் என்று எல் பெப்பே போன்றவர்கள் சொல்கின்றார்கள்.

எல் பெப்பேயினது டுபாமாரோஸின் தொடக்க கால இயக்க நடவடிக்கைகள் ஈழத்தில் நமது இயக்கங்கள் பல செய்ததை நினைவுபடுத்துபவை. வங்கிகளைக் கொள்ளையடிக்கின்றார்கள், அமைச்சர்களை, பிற நாட்டு இராஜதானிகளைக் கடத்திக் கப்பங் கேட்கின்றார்கள். என்ன நமது இயக்கங்கள் தமக்கான ஆயுதங்களை வாங்க மட்டுமே இந்தப் பணத்தைப் பாவித்தது போலல்லாது, எல் பெப்பெயினரின் இயக்கம் வறிய மக்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுக்கின்றார்கள். அதை அவர்கள் expropriations என அழைக்கின்றார்கள்.

இதன் நீட்சியில் எல் பெப்பேயும் நண்பர்களும் பிடிபடுகின்றார்கள். ஒருமுறை பிடிபட்டபோது அவரும் அவரின் நண்பர்களும் சிறையிலிருந்து பாதாளச் சுரங்கம் தோண்டி தப்பிச் செல்கின்றார்கள். கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தப்பிச் சென்ற இந்தச் 'சிறை உடைப்பே' உலகில் கைதிகள் பெருமளவில் தப்பிச் சென்ற சிறையுடைப்பு என்று கின்னஸிலும் பதிவாகியிருக்கின்றது. எனினும் எல் பெப்பே ஒரு மாதத்தின் பின் மீண்டும் சிறை பிடிக்கப்படுகின்றார். இவ்வாறு நான்கு முறைக்கு மேலாய் தப்புவதும் பிடிபடுவதுமாய் இருந்த எல் பெப்பே, இறுதியில் ஒரு மோதலில் பத்துக்கு மேற்பட்ட சன்னங்கள் உடலில் தைக்க குற்றுயிரும் குலையுயிருமாய்த் தப்புகின்றார். இதனால் அவரின் நுரையீரலின் அரைவாசி பாதிப்படைகிறது. குடல் கிட்டத்தட்ட இல்லாமற் போகின்றது. இறுதியில் அரசு இவருட்பட முக்கிய 9 பேர்களை சிறைக்குள் தனிமை அறைக்குள் அடைக்கின்றது. தாங்கள் பார்க்காத சிறையே உருகுவேயில் இல்லையெனச் சொல்கின்றார்கள். இவர்களை அன்றைய சர்வாதிகார அரசு, சிறைகைதிகளாக அன்றி, பயணக் கைதியாகவே வைத்திருக்கின்றது. வெளியில் எதுவும் அரசுக்கு நடந்தால் இவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சத்தை அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றது.

எல் பெப்பேயும் அவரது நண்பர்களும் குறுகிய காலமல்ல, கிட்டத்தட்ட 13 வருடங்கள் சிறைக்குள் அடைக்கபட்டிருக்கின்றார்கள். தனிமையினாலும் சித்திரவதைகளாலும் எல் பெப்பே உளவியல் சிக்கல்களுக்குள் போகின்றார். சிறையில் எப்போதாவது சந்திக்கும் வாய்ப்பு வந்தாலும் பெப்பே எதையும் பேசாது அமைதியாக இருப்பவர் என்று அவரது நண்பர்கள் நினைவுகூருகின்றார்கள்.

1980களில் உருகுவேயில் ஆட்சி மாற்றம் ஏற்பட, எல் பெப்பேயும் நண்பர்களும் நீண்டகால தண்டனையின் பின் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின்னர் பல்வேறு இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்து அரசியல் கட்சி அமைக்கின்றார்கள். அதன் நீட்சியில் அவர்களின் கட்சியின் சார்பில் 2010- 2015 ஜனாதிபதியாக எல் பெப்பே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஜனாதிபதியானவுடன் ஜனாதிபதி மாளிகையில் பிற ஜனாதிபதிகளைப் போல‌ வாழ்வதைத் தவிர்த்தது உட்பட, தனது சம்பளத்தில் 50 மேலான பங்கை ஏழைமக்களுக்காய்ச் செலவிட்டவர். மிக எளிமையான மனிதராய், அனைத்து மக்களாலும் அணுகக்கூடியவராக இருந்திருக்கின்றார். தனது ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 40% மாக இருந்த வறுமைக்கோட்டை 11% வீதத்துக்கு கொண்டுவந்திருக்கின்றார். மக்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை கிட்டத்தட்ட 200% மாக உயர்த்தி இருக்கின்றார். அன்றைய வெனிசுலாவின், சிலேயின், பிரேசிலின் இடதுசாரி ஜனாதிபதிகளோடு நெருக்கமாக இருந்தபோதும், உலகம் இயங்கும் விதத்தை உணர்ந்து அதிக அமெரிக்க எதிர்ப்பு நிலையை எடுக்காது, வறிய மக்களுக்குள் இடதுசாரித்துவத்தின் நன்மைகளை எடுத்துச் சென்றிருக்கின்றார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பெரும் சிக்கலாக இருக்கும் போதைமருந்துப் பிரச்சினையை இன்னொரு விதமாகத் தீர்த்து வைக்க, மரீயூவானாப் பாவனையைச் சட்டத்தின் மூலம் உருகுவேயில் குற்றமில்லாது ஆக்கினார். உலகில் இதை முதன்முதலில் செய்த நாடு உருகுவே, அதற்கு அடுத்து கனடா. இதன் மூலம்  போதைமருந்துக்கும்பல்களிடம் பதுங்கியிருந்த‌ கறுப்புப்பணத்தை வெளியே கொண்டுவரச் செய்ததுடன், போதைக்கு அடிமையானவர்களுக்கு உரிய சிகிச்சை எடுப்பதற்கான முயற்சிகளையும் உருகுவே அரசால் ஒரளவு மேற்கொள்ள முடிந்திருக்கின்றது.

ஓரிடத்தில் பெப்பே கூறுவார், நீங்கள் ஒரு இயக்கத்தை கட்டியமைக்க விரும்புகின்றீர்கள் என்றாலோ அல்லது சமூகத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றீர்கள் என்றாலோ, உங்கள் துணையையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ முதலில் உங்களுக்கேற்றமாதிரி மாற்றுங்கள். அதுவே முதலும், முக்கிய வேலையாகவும் இருக்கவேண்டும் என்கின்றார். பெப்பேயின் துணைவியாரும், பெப்பேயைப் போல இளமையில் இயக்கக்காரியாகவே இருந்தவர். பல்வேறு முறை சிறைக்குச் சென்றவர். பின்னர் கட்சியிலும் முக்கிய அங்கம் வகித்தவர்.

ஜனாதிபதி பதவியை விட்டிறங்கியபின்னும் தனது தோட்டத்தில் வழமை போல உழைக்கின்றார். ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கு உதவுகின்றார். தன் இறப்பின் பின், தனது நிலத்தை ஒரு பாடசாலையாகவும், பண்ணையாகவும் மாற்றவேண்டுமென அயலிலுள்ள மக்களை அதற்கு பொறுப்பாக்கி அந்த இடத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றார். ஒரு உண்மையான இடதுசாரி எப்படி இருக்கமுடியும், எவ்வளவு எல்லாம் சாதிக்கமுடியும் என்பதற்கு நம்காலத்தில் ஒரு அற்புத சாட்சியாக எல் பெப்பே இருக்கின்றார்.

ல் பெப்பேயுக்கு முதலீட்டியத்தின்/பெரும் ம்பனிகளின் இராட்சதக் கரங்கள் தெரியும். அவரே ஓரிடத்தில் சொல்கின்றார். பல இடதுசாரிகள் முதலீட்டியத்தின் பொம்மைகளாக மாறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னைப் போன்றவர்கள் இந்த முதலீட்டியத்தில் இடதுசாரியாக இருந்துகொண்டு என்ன சாதிக்கமுடியும் என முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் என்கின்றார். ஓரிடத்தில் இன்று இடாம்பீக பல்பொருள் அங்காடியாக மாறியிருக்கும் இடத்தில் நின்றுகொண்டு இந்த இடத்தில்தான் எங்களின் சிறை இருந்தது, நாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம் என்று மாறுகின்ற காலத்தின் துயரை எல் பெப்பே சொல்லிக்கொண்டிருப்பார். இப்படித்தான் ஒருமுறை கொழும்பை அண்மித்த இடத்தில் ஒரு வர்ணமயமான அங்காடிக்குள் நண்பர் அழைத்துச் சென்றபோது, அங்கே கப்பச்சினோவைக் குடித்துக்கொண்டிருக்கையில், இங்கேதான் முன்னொருகாலத்தில் ஜேவிபியினரை வைத்துச் சித்திரவதை செய்தார்கள் என்றபோது அதிர்ச்சியும், அந்த இடத்தைவிட்டு நீங்கவேண்டுமென்கின்ற எண்ணமும் எனக்குள் சூழ்ந்திருந்தது. ஆனால் அந்த வாதைகளை நேரடியாக அனுபவித்த எல் பெப்பே போன்றவர்களுக்கு இன்னும் எவ்வளவு உக்கிரமான நினைவுகளை அது கொடுத்திருக்கும்?

எல் பெப்பே,எளிமையாக இருந்து மக்களுக்காகப் போராடி ஆட்சியைக் கைப்பற்றியபின்னரும் ஒரு எளிமையான மனிதரில் இருந்து மாறாததுபோல‌, ஏன் கியூபாவில் புரட்சியின் பின் காஸ்ரோவினால் விலத்தமுடியாது போனது என்று யோசித்தேன். உயிருடன் நீண்டகாலம் இருந்திருந்தால் நிச்சயம் சேயினால் இது முடிந்திருக்கும். அந்தச் சுவடைப் பின் பற்றிய ஒருவராகவே எல் பெப்பேயையும் நாம் அடையாளங்காணமுடியும்.

இறுதியில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அவ்வப்பொது சூழும் உறுதியற்ற அரசியல் நிலவரங்களைப் பற்றி எல் பெப்பேயிடம் கேட்கப்படும்போது, 'எங்களுக்கு தீர்வுகள் தெரியாது, நாங்கள் இன்னமும் தீர்வுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்' என்கின்றார். அதேபோல இளமையில் நாங்கள் எடுத்த முடிவுகளை இப்போதும் நாங்கள் எடுப்போமா என்பதும் கேள்விக்குரியது என்கின்றார்.

எல் பெப்பே, .நாவில் சூழலியல் குறித்தும், மனிதாபிமானம் குறித்தும் ஆற்றிய நீண்ட உரை இன்றும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது. நாங்கள் மீண்டும் எளிமைக்குத் திரும்பவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். மில்லியன்கணக்கில் பணத்தைக் கார்களுக்குச் செலவழிப்பதைவிட, தரிசாகியிருக்கும் இடங்களில் மரங்களை நடுவதே நம் பெரும்பணி என்கின்றார். இந்த முதலீட்டியத்துக்கு அது நன்கு தெரியும். ஆனால் அதை ஒருபோதும் செய்யப்போவதில்லை என்கின்றார். ஆகவேதான் நமக்கு எல் பெப்பே போன்றவர்கள் தேவைப்படுகின்றார்கள். அவர்களின் நீண்ட துயர் நிரம்பிய வாழ்க்கையிலிருந்து நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்பதை அவர்களே கற்றுத்தருவதால் நமக்கான ஆதர்சங்களாகவும் அவர்கள் ஆகிவிடுகின்றார்கள்.


(El Pepe, a supreme life)

-Jan 02, 2020

0 comments: