நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வைரமுத்து

Wednesday, January 10, 2007

வைரமுத்து
-நான் அறிந்தவைகளினூடாக-

வைரமுத்து, எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு மறுதலிக்கின்றேனோ அதற்கு மாறாய் வைரமுத்துவை ஒரு சிறந்த பாடலாசிரியராய் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இன்றையபொழுதில் தாமரை, நா.முத்துக்குமாரின் பாடல்களில் பிடிப்பு வந்து வைரமுத்துவை கடந்துவந்துவிட்டாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது.

கவிதைகள் என்று வாசிக்கத் தொடங்கிய பதின்ம வயதுகளிலேயே வைரமுத்துவின் கவிதைகள் கவர்ந்ததில்லை. மு.மேத்தா தான் எனக்குப் பிடித்தமானவராக அன்றைய காலகட்டத்தில் இருந்தார். வானம்பாடி வகைக் கவிதைகளை பல வருடங்களுக்கு முன்னரே கடந்துவந்துவிட்டாலும் -அநேக சிற்றிதழ்க்காரர்கள் போல- என்னால் வான்மபாடிக் கவிதைகளை முற்றாக நிராகரிக்க முடியாது. கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்பும் ஆரம்பநிலையில் இருக்கும் வாசகர்களில் அநேகர் வானம்பாடி வகைக் கவிதைகளின் சாயலில்தான் எழுதத் தொடங்குவார்கள் என்றே நம்புகின்றேன். அதேபோன்று, அவ்வாறு கவிதை எழுத ஆரம்பிப்பவர்களின் படைப்பின் வளர்ச்சி என்பது எப்படி வானம்பாடி வகைக் கவிதைகளை தாண்டி/நிராகரித்துச் செல்லுகின்றார்கள் என்பதைப் பொறுத்தும் தங்கியுள்ளது.

வைரமுத்துவும், ரகுமானும் கூட்டணி அமைத்து -சரணமும் பல்லவிகளும்- எழுதி இசைத்த பாடல்கள் என்னைப் பொறுத்தவரை அருமையான காலங்கள். வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களைப் பற்றி விதந்தும் விமர்சித்தும் விரிவாகப் பேசமுடியும். அதற்கான் நேரம் இப்போதில்லை என்பதால் அதைக் கடந்துவிடுகின்றேன். அருமையான பாடல்வரிகள் வைரமுத்துவின் பல பாடல்களில் இருக்கும் என்ப்தோடு இயன்றளவு பாடல்களில் நவீன இரசிகர்களுக்குப் பரிட்சயமில்லாப் பழந்தமிழ்ப்பாடல்களையும் நேடியாகவும், சிலவேளைகளில் அவற்றின் விளக்கவுரையை மையமாகக் கொண்டு மறைமுகமாகவும் வைரமுத்து நிறையப் பாடல்களை எழுதியுள்ளார். உதாரணமாய் 'தீண்டாய் தீண்டாய்' (படம் என் சுவாசக்காற்றே) பாடலில் intro ஒரு சங்கப்பாடலே... அதில் வரும் 'அல்குல்' என்ற வார்த்தையை இன்றைய தமிழுக்கு மாற்றினால் சிநேகன் போன்ற பாடலாசிரியர்கள் சங்கப்புலவர்களையும் மவுண்ட்ரோட்டில் உயிரோடு கொளுத்தவேண்டும் என்றும் அறிக்கை விட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அதேபோன்று வேறு நாட்டுமொழிப்படைப்புக்களையும் - அசலை தனது அசல் இல்லையென்று கூறாமல் எடுத்தாள்வதில் சற்று கள்ளமிருந்தாலும்- எளிய முறையில் கொண்டுவருவதற்காய் வைரமுத்துவை மன்னித்துவிடலாம். 'இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்; இல்லையென்ற சொல்லைத் தாங்குவதென்றால் எனக்கு இன்னுமொரு ஜெனமம் வேண்டும்' என்ற பாடல்வரிகளில் பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையின் சாயலும், 'மழை கவிதை கொண்டு வருது... கறுப்புக் கொடிகள் காட்டி யாரும் கதவடைக்க வேண்டாம்' என்பது ஒரு அரேபிய பாடலின் சாயலில் இருப்பதையும் பாடலின் அர்த்தங்களுக்காய் -வைரமுத்துவின் கள்ளங்களை- மறந்துவிடலாம் (இன்று பெண்களை வர்ணிப்பதற்காய் பாவிக்கப்படும் வார்த்தைகளை எல்லாம் திருவள்ளுவரின் காமத்துப்பாலில் இருந்து எடுத்து அனைவருமே கள்ளம் செய்துகொண்டிருக்கையில் வைரமுத்துவை மட்டும் இப்படிக்கூறுவது சரியா என்றும் மனச்சாட்சி கேட்கத்தான் செய்கின்றது). வைரமுத்து கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது எதுவுமேயில்லாதமாதிரி இருப்பவை கூட பாடலாக்கப்படும்போது அழகாவிடுகின்றன்...'என்னவளே அடி என்னவளே'....'நீ காற்று நான் மரம்'.. என்று பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வைரமுத்துவின் வீழ்ச்சி என்பது ரகுமானின் பிரிவோடு ஆரம்பித்தது என்றுதான் நினைக்கின்றேன் (ரகுமானின் இசை தொய்யத்தொடங்கியதும் அந்தப்புள்ளியே). பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு international figure ஆனது என்றே கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ள முடிகின்றது. எப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் (யுவன் சங்கர் ராஜாவுடன் நா.முத்துக்குமாருக்கும், Harris ஜெயராஜிற்கு தாமரையும்) . தெ(ன்)னாலியோடு ரகுமானின் இசையைத் -தொடர்ந்து கேட்பவர்களுக்கு- நான் குறிப்பிடும் வீழ்ச்சியின் புள்ளி புரியக்கூடும்.

வைரமுத்து கனடாவுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது சந்திருக்கின்றேன். அப்போது உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அவரின் வருகையின்போது 'கவிதை'யென்று எதையோ எழுதி இறுதியில் -வழமைபோல நக்கீரர் பாணியில் - அவரைக் கொஞ்சம் சினம் செய்ய வைக்கின்றதாய் கேள்வியொன்றை விட்டிருந்தாயும் நினைவு. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தையார் இங்கு வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். என்னையும் வைரமுத்துவை சந்திக்கக் கூட்டிச் சென்றிருந்தார். வைரமுத்துவின் ஆசி பெற்றால், உடனேயே 'உலகப் புகழ்' பெற்றிடுவேன் என்ற நினைப்புடன் 'கவிதைகள்' சிலவற்றை கூடவே எடுத்துக்கொண்டு நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் எனக்கு இணையம் அறிமுகமாகி -ஒரு பெண்ணல்ல, பல பெண்களோடு- 'கடலை' போட்டுக்கொண்டிருந்தேன். இணையத்தில் Hi சொல்கின்ற எல்லாப் பெண்களுமே என் 'காதலிகள்' என்ற கனவில் நிறைய இணையஞ்சம்பந்தமான காதற்கவிதைகள் எழுதி என்னாளான 'சமூகசேவையை' கனடாத்தமிழ்ச் சமூகத்திற்கு இரவுபகலின்றி வழங்கியும்கொண்டிருந்தேன். கவிதைகளை பார்த்துவிட்டு 'உங்கள் மகன் இன்(ர)டநெட்டில் காதல் செய்யும் அளவுக்குப் போய்விட்டான்' என்று எனது தந்தையாரிடம் வைரமுத்து திரியைப் பற்றவைத்ததுமாய் நினைவு. வைரமுத்து பழகுவதற்கு எளிமையானவர் என்றே நினைக்கின்றேன். தமிழகம் சென்றபின்னும் எனது தந்தையாருக்கும் -எனது தந்தையார் வைரமுத்துவுக்கு அறிமுகப்படுத்திய- வைரமுத்துவின் தீவிர இரசிகரான ஒரு அக்காவிற்கும் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்ததும் ஞாபகத்திலுண்டு.

எனினும், அந்த நேரத்தில்தான் வைரமுத்து 'ஈழத்தமிழர் விரும்பினால் அவர்களுக்கான் தேசியகீதத்தை எழுதிக்கொடுப்பேன்'..., 'விரைவில் வன்னி சென்று ஈழத்தமிழர் காவியத்தை எழுதுவேன்' போன்ற 'பிரபல்யம்' வாய்ந்த பேச்சுக்களையும் பேசியவர். வினை விதைத்தால் வினை அறுக்க வேண்டியிருக்கும் என்பதற்கிணங்க ஒரு கவிதா நிகழ்வில் சக்கரவர்த்தியின் விமர்சனத்தில் மோசமாய் அடிவாங்கியவர் ('தண்ணீர் தேசத்தைப் பாடிவிட்டு எங்கள் கண்ணீர் தேசத்தை கை கழுவிவிட்டவரே...' இன்னும் நீளும்). இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருந்த கவிதா நிகழ்வு -இதன்பின்- அடுத்த நாள் தடை செய்யப்பட்டது. அதனால் -நான் சென்ற அடுத்த நாள்- வைரமுத்துவின் பேச்சை மட்டுமே கேட்க முடிந்தது. எனினும் அவரது பேச்சுத் திறன் மிகவும் இரசிக்கத்தக்கதாய் இருந்தது. பேசும் கணங்கள் முழுதும் கூட்டதை அப்படியே அசையாமல் கட்டிவைப்பது என்ற வித்தையை -மேடைகளில் பேசிப் பேசி கொல்லும் பல ஈழத் தமிழர்கள்- வைரமுத்து போன்ற தமிழகத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் (அப்படி நான் இரசித்த் இன்னொருவர் பெரியார்தாசன்).

இன்றைய காலத்தில் வைரமுத்து விகடனில் 'தேவர்' இனப்பெருமைகளை விதந்து எழுதும் 'காவியங்களில்' எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. அவற்றை வைரமுத்து எழுதக்கூடாது என்று நிராகரிக்கும் எண்ணமில்லை. எத்தனையோ பிராமணிய படைப்புக்களை காலங்காலமாய் அவர்களின் மொழியிலேயே ஏற்றுக்கொண்டு வாசித்திருக்கின்றோமல்லவா? சிறுவயதில் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் பிராமணியப்பாசை மட்டுமே பேசுவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எனெனில் எனக்குக் கிடைத்த தமிழகப் படைப்புக்கள் பெரும்பானமையான்வை அந்தமொழியையும் அவர்களின் பெருமைகளையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தன.

வைரமுத்து..., கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது' மாதிரி பெண்களைச் சீரழிக்காது -இயன்றளவு பெண்களை அவர் மதித்துக்கொண்டிருப்பது- எனக்குப் பிடிததமானது. மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, 'வானம் எனக்கொரு போதிமரமா?' 'இதுவரை நான்') பச்சையப்ப்பா கல்லூரியில் மனிதர்களை விலத்தி தனிமையுடனும், அங்கிருந்த மரங்களோடும் உரையாடிக்கொண்டிருந்த வைரமுத்து என்ற இளைஞன் -எனக்குள்ளும் எனது பதின்மங்களில் இருந்ததால்- வைரமுத்துவோடு சிநேகிக்க முடிகின்றதோ தெரியவில்லை.

(குழலி, நீங்கள் விரும்பியமாதிரி நீண்டதாய் எழுதாமல் இயன்றளவு சுருக்கமாய் எழுத இதில் முயற்சித்திருக்கின்றேன் :-))

23 comments:

Anonymous said...

உங்கள் பதிவைப் பாத்ததும் நாங்கள் பாடசாலைகளில் அனல் பறக்க விவாதபோட்டிகளில் வசனம் பேசிகொண்டிருந்த காலத்தில் வைரமுத்துவிடம் தான் வார்த்தைகளைக் கடன் வாங்கினோம் அல்லது திருடினோம். பின்னர் அவரும் பல இடங்களில் சுட்டிருப்பது தெரிய வந்தது(!?) பெரும்பாலும் வைரமுத்து, மேத்தா,அப்துல் ரகுமான் ஆகியோரைத்தான் புதுகவிதையென்றால் தெரியும்.

அவரின் எல்ல புத்தகங்களையும் தேடிப் படித்தோம்.
இப்ப அவரை பற்றி நான் கேள்விபடுற தகவல்கள் அவரை சந்திக்கிற தருணங்களில் கூட அறிமுகப் படுத்திகொள்ள சங்கடமான மனநிலையினை தருகிறது.

1/10/2007 01:14:00 PM
Sivabalan said...

மிக நல்ல பதிவு!

நன்றாக எழுதியுள்ளீர்கள்

1/10/2007 01:58:00 PM
தமிழ்நதி said...

டி.சே., கவிஞர் வைரமுத்துவின் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ மற்றும் ‘மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு’போன்ற பாடல்கள் கேட்டதுண்டா…? அவை கவிதைகளாக எழுதியபின் பாடல்கள் ஆக்கப்பட்டதாக யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தாமரை, பெண்ணின் மன உணர்வுகளை பாடல்கள் வாயிலாக நன்றாக வெளிப்படுத்துகிறார். கவிஞர் வைரமுத்து கனடாவிற்கு வந்திருந்தபோது சக்கரவர்த்தி விமர்சித்து கவிதை வாசித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. நட்சத்திர வாரம் ‘பம்பலாக’போகிறது போல…

1/10/2007 02:06:00 PM
Anonymous said...

பதிவு கண்டு 'சில்' என உணர்ந்தேன்! :)

எண்பதுகளில் கால்சட்டை போட்டுக் கொண்டு திரிந்த எல்லா விடலைகளையும், 'மொழி' என்கிற அற்புதப் பள்ளத்தாக்கின் அழகை இரசிக்க - கூட்டி வந்தவர் வைரமுத்து தான் என்பதை எவனும் மறுக்க முடியாது.

கவிதை, மொழி ஆளுகை/ ஆளுமை இவைகளெல்லாம் இல்லாதவன் ஆண்மகனல்லன் - என்கிற மாதிரியான கவிதைப்பித்தை - கடந்த இருபத்தைந்து ஆண்டுகால இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தியத்தில் அவருக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

(அதில் கெடுதல்களும் நிகழ்ந்திருக்கின்றது! - வைரமுத்துவே ஒரு திரைப்பாடலில் சொன்னது போல "இருக்கும் 'கவிஞர்கள்' இம்சை போதும் - என்னையும் 'கவிஞன்' ஆக்காதே!" என்கிற அளவுக்கு ) - கவிதை என்கிற விசயத்தை சனநாயகப்படுத்தியதில் அவருக்குப் பங்கு உண்டு.

அவர் மீதான விமர்சனஙகளும் இல்லாமல் இல்லை. "யாவர்களும் ஒன்றாகப் போவதால் இனி தேவரும் இல்லை - உடையாரும் இல்லை மாதே! - என்று தன் துணைவியாருக்கு காதல் கடிதம் எழுதிய வைரமுத்துதான் - இப்போதும் இருக்கிறார் என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.

ஆனால் - சென்ற அதிமுக (தேவர்வாள் + பார்ப்பனவாள்) "அடியார்கள்" ஆட்சியில் - சுபவீ - நெடுமாறன் - வைகோ ஆகியோர் புலிகள் ஆதரவுப் பெயரால் - பொடா கைது செய்யப்பட்டபோது - வைரமுத்து வெளிப்ப்டையாக அதைக் கண்டித்துப் பேசுவார் என எதிர்பார்த்தேன்.

ஆனால்- சிறையிலிருந்தவர்களைப் போய்ப்பார்ப்பதோடு தன் கடமை முடிந்தது என்பதுபோல வைரமுத்து - அந்த அநீதியைக் கண்டித்துப் பேசவில்லை. அதாவது தனிமனிதக் கருத்தாகப் பேசவில்லை.

Maybe Probably he thought it was better for him to be a backroom operator rather than being an open activist.

But i expected personally, that he would say or do something to provoke JJ to arrest him on that issue.

2002-ஆம் ஆண்டுவாக்கில் - "ஓரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்" என்கிற தன் அய்ரோப்பியப் பயணக்கட்டுரையை எழுதிய வைரமுத்து - "புங்குடுத்தீவு நண்பர்கள்" சுவிஸ்-இல் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு - "பிரபாகரனுக்கு பெண்கொடுத்த புண்ணியத் தீவு(பெண்கொடு தீவு) என்பதால்தான் 'புங்குடுதீவு' என்று பெயர் வந்ததோ என்று பெயர் பற்றி சிலாகித்துப் பேசினேன் என்று வெளிபபடையாக எழுதியிருந்தார்.

ஏதும் செய்து "அம்மா" ஆட்சிக்கு நெருக்கடி தந்துவிடாதீர்கள் - என்று மலைச்சாமித்தேவர் போன்றோர் அவருக்கு நெருக்கடி தந்திருக்கக் கூடும்!

பாரதிராசாத்தேவரும், பேராசிரியர் கல்யாணியும், வைரமுத்துவும் - புலிகள் ஆதரவு விசயத்தில் கைது செய்யப்படாதது ஏன் - என்று Pattern Recognition சிலர் செய்து கொண்டிருந்ததும் நினைவுகூறத்தக்கது.

ஆனாலும், கவிப்பேரரசு வைரமுத்துவின் மாறாத ரசிகன் நான்!

"ஒளிவீசுக சூரியனே! யுகம் மாறுது வாலிபனே!
ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இங்கு சோதனை தீர்ந்துவிடும்!
சில ஆயிரமாயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்!
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்!"

என்கிற கந்தக வரிகளை எழுதிய அவர் கைகளுக்குத் 'தங்கக் காப்பு' போடவேண்டும்.
:)

1/10/2007 02:41:00 PM
Anonymous said...

>> டி.சே., கவிஞர் வைரமுத்துவின் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ மற்றும் ‘மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு’போன்ற பாடல்கள் கேட்டதுண்டா…? அவை கவிதைகளாக எழுதியபின் பாடல்கள் ஆக்கப்பட்டதாக யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். >>

தமிழ்நதி,

' மேகங்கள் என்னைத் தொட்டு' - பாடலின் மூலம் - "பெய்யெனப் பெய்யும் மழை" என்கிற அவரின் தொகுப்பிலிருக்கும் ஒரு கவிதைதான் மூலம்.

"எவனோ ஒருவன் வாசிக்கிறான்" - பாடல் என்னை எப்பொதும் உருக வைக்கும் பாடல்! அதன் மூலம் அவருடைய பழைய தொகுப்பு ஒன்றில் உள்ளது ("கொடிமரத்தின் வேர்கள்" அல்லது 'இதோ இன்னொரு தேசியகீதம்" இரண்டில் ஒன்றில்).

அந்த மூலக் கவிதை இன்னும் அருமையாக இருந்ததாக நினைவு :)

1/10/2007 02:45:00 PM
மலைநாடான் said...

//பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு international figure ஆனது என்றே கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ளமுடிகின்றது. எப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் (யுவன் சங்கர் ராஜாவுடன் நா.முத்துக்குமாருக்கும், Harris ஜெயராஜிற்கு தாமரையும்) . தெ(ன்)னாலியோடு ரகுமானின் இசையைத் -தொடர்ந்து கேட்பவர்களுக்கு- நான் குறிப்பிடும் வீழ்ச்சியின் புள்ளி புரியக்கூடும்//

டி.சே!

அருமையான பார்வை, பதிவு. நீங்கள் சொன்ன விடயங்கள் பலவும் எனக்கும் ஏற்புடையதாகவே உள்ளது. குறிப்பாக மேலே சொன்னது சரியான ஒரு விமர்சனமாகப்படுகிறது.

பகிர்வுக்கு நன்றி!

1/10/2007 03:04:00 PM
Anonymous said...

மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, 'வானம் எனக்கொரு போதிமரமா?')
>>>
"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்"?

வேண்டுகோள். வரிகள் நெருக்கமாக உள்ளன. படிக்கச் சிரமமாக இருக்கிறது.
Edit Template சென்று இதைச் சேர்த்தால் கொஞ்சம் வசதிப்படும்.

.post {
*****
******
*****
line-height: 1.8em
}

வைரமுத்துவின் வீழ்ச்சி என்று ஒரு புள்ளி தனியாக இல்லையென்றே நினைக்கிறேன். அடுத்த தலைமுறை தலையெடுத்துவிட்டது. அவ்வளவுதான்.

மேலும் ஒரு படத்துக்கு எல்லா பாடலையும் தானே எழுதவேண்டும் என்று பிடிவாதத்தோடு இருந்தது அடுத்த தலைமுறைக்குப் பிடிக்கவில்லை, அவர்களுடைய இடத்தை அடைத்துக் கொண்டு நின்றார். அதனால் அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். இதுவும் ஒரு முக்கிய காரணம். ரஹ்மான் தமிழை விட்டுப் போய் வெகு காலமாகிவிட்டது.

....
(Anonymous, Its done. Hope now you can read it easily. Thank you; DJ)

1/10/2007 03:30:00 PM
கானா பிரபா said...

வணக்கம் டி சே

வைரமுத்து பற்றி என் பங்கிற்கும்
நீங்கள் குறிப்பிட்டது போல சங்கப்பாடல்கள் "ஞாயும் ஞாயும்" (நறுமுகையே), தமிழ் இலக்கணம் இரட்டைக்கிழவி (கண்ணோடு காண்பதெல்லாம்) உட்பட பல சுவைகளைச் சேர்த்தவர். உயிரேஇல் வரும் என்னுயிரே பாடலும் ஒரு பாரசீகக் கவிதையை ஒட்டிய மொழிபெயர்ப்புத் தான்.

அவரின் வைரமுத்து கவிதைகள் என்ற பெரிய தொகுதி கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது. ஏறக்குறைய அவரின் எல்லாக்கவிதையும் அதில் உள்ளது.
அவரின் சுயசரிதை "இதுவரை நான்" சிறப்பானது.

ரகுமானின் பிரிவு அவரின் பங்களிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதை நான் ஏற்கமாட்டேன். முன்பு இதுபோல் இளையராஜாவோடும் ஏஎற்பட்டபோது வரைமுத்து தன் திற்மையைக் காட்டினார், சந்திரபோஸ், சங்கர் கணேஸ் கூட்டணியில்.

இன்றைய யுகத்தில் எந்தத் துறையிலும் யாரும் தனித்த ஆளுமை காட்டமுடியாது.அதுதான் வைரமுத்துவின் நிலை கூட. ரகுமான் இல்லாமலே " காதல் வந்தால்" வித்யாசாகர் இசையில் தேசிய விருதைக் கொடுத்தது. இன்று ரகுமான் இசையில் வைரமுத்து இல்லாத பாடலுக்கு ஆயுள் கம்மி.

வைரமுத்து கவிதைகளில் நான் என்றும் நேசிப்பது "மரங்களைப் பாடுவேன்".

1/10/2007 04:50:00 PM
சாத்வீகன் said...

நல்ல பதிவு...

வைரமுத்துவின் பாடல்கள் கவிதைகள் அருமையானவை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் ஏனோ என்னால் எந்த காலத்திலும் வைரமுத்துவை சிறந்த கவிஞராக ஏற்க முடிந்ததில்லை...
"டேக் இட் ஈஸி பாலிசி" என்று அவர் தமிழ் பாட்டு எழுதிய காரணத்தால் இருக்கலாம்...

இல்லை.. அவரது பேச்சு கொடுந்தமிழாக மட்டும் இருப்பது காரணமாக இருக்கலாம்..
"இளைஞனே எனது பாடல் உன்னுள் ஒரு தீக்குச்சியையாவது பற்ற வைக்குமானால் வகையறா..."..

இன்று கவிஞர்கள் என்ற நிலை உண்டானால் வாலி, வைரமுத்து, தாமரை, முத்துக்குமார் என்று திரையில் மின்னுபவர்களையே சொல்லும் நிலையை ஏற்படுத்தியதாலும் இருக்கலாம்..

தமிழுக்கு அவர் தந்த சிறந்த படைப்பு எது என்ற கேள்வி என்னுள் எழுவதாலும் இருக்கலாம்.

ஞானச் செருக்கை பாரதியிடம் பாராட்ட முடியும் என்னால் வைரமுத்துவிடம் ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை.

கவிதை மன்றங்களில் அவர் தட்டும் ஜால்ரா சத்தத்தால் அவரது கவிதை அமுங்கி விடுவதாக கருதுகிறேன்.

வைரமுத்து திரையில் அன்றி திரையைத் தாண்டி நல்ல படைப்புகளை தர வேண்டும். செய்வாரா ?

1/10/2007 04:50:00 PM
Anonymous said...

//வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு மறுதலிக்கின்றேனோ//
"நவீன கவிஞர் என்பதை" என்று வந்திருக்க வேண்டுமோ?

-சொறியன்.

1/10/2007 06:02:00 PM
Jayaprakash Sampath said...

என் கமண்ட் எங்கே?

1/10/2007 11:33:00 PM
இளங்கோ-டிசே said...

ப்ரகாஷ்: மின்னஞ்சலில் தேடிப்பார்த்தும் உங்கள் பின்னூட்டத்தைக் காணவில்லையே :-(.

1/10/2007 11:51:00 PM
Jayaprakash Sampath said...

[தமிழன், மீண்டும் ஒட்டுகிறேன். வருதான்னு பார்ப்போம்]

அருமையான பதிவு. பல புதிய சிந்தனைகளைத் தூண்டிவிட்டது. நன்றி.

ஏ,ஆர்.ரகுமான் கூட்டணியின் துவக்கத்தில் தான் வைரமுத்துவின் வீழ்ச்சி துவங்கியது என்று நினைக்கிறேன். வைரமுத்துவின் கவிதைகள் பற்றி சொல்லத் தெரியவில்லை. ஆனால் மிகச் சிறந்த பாடலாசிரியர். " ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை, கண்ணான பூமகனே.. கண்ணுறங்குச் சூரியனே.." என்று கற்பனை செய்ய, அந்த காலகட்டத்தில் இருந்த கவிஞர்களால் முடிந்திருக்காது. மிக யதார்த்தமான கற்பனைதான் என்றாலும், அந்தப் படத்திலே, அந்தக் காட்சிக்கு, அந்த கதாபாத்திரத்தின் குரலாக வந்த இந்த வார்த்தைகள் வெளிப்படுத்திய வீரியத்தை, ரகுமான் இசையில் வெளிவந்த எந்தப் பாடலும் தர முடியவில்லை என்று நினைக்கிறேன். ரகுமான் ஒரு இசைமேதை. ஆனால், ஆடம்பரப் பிரியர். இசைக்கோர்ப்பு, குரல், இசைக்கருவிகள் அனைத்தும், தக தகவென்று தான் இருக்கும். வைரமுத்துவின் வரிகளும், ரகுமானுக்கு ஏற்ப மாறியது. இந்தக் கூட்டணியின் நோக்கமே மிரட்டல் தான் ( மச்சீ... நறுமுகை ன்னா இன்னாடா அர்த்தம்? தெர்ல மாமே... எதினாச்சும் பெர்சா இருக்கும் ). அலங்காரமான வார்த்தைகள், தேவையான உணர்ச்சியை எழுப்பாது. ரகுமானுக்கு முந்தைய காலகட்டத்திலே, 'ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே, வியர்வையின் மழையில் பயிராகும் பருவம் என்று அவ்வபோது பூமிக்கு மேல் கால் பாவாமல் நடந்தாலும், அடிப்படையில் இயற்கையுடன் இணக்கமாக இருந்தார். தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி என்ற வரிகள் ஏற்படுத்திய மெலிதான கிளர்ச்சியை, பிற்காலத்தில் வந்த எந்தப் பாடலாவது ஏற்படுத்தியிருக்கிறதா? பைக்கில் வந்த நந்தவனம் என்றால் எனக்கு க்ரீஸ் டப்பாவும், ஸ்பார்க் ப்ளக்கும் தான் நினைவுக்கு வருகிறது. ஏதோ மூடில் கோர்வையில்லாமல் எழுதுகிறேன். சேர்த்து வைத்து அர்த்தம் பண்ணிக்கொள்ளுங்கள்.

1/11/2007 12:24:00 AM
செல்வநாயகி said...

டிசே,

நல்ல விமர்சனம். நடுநிலையான பார்வை. உடனே பின்னால் கிளம்பிப்போய் ஒரு பதிவு போடவேண்டியதாப் போச்சு உங்களால:))
நன்றி.

1/11/2007 05:54:00 AM
Anonymous said...

வைரமுத்து நல்ல கவிஞர்; உயர்வு நவிற்சி அவருக்குக் கைவந்த கலை ;-)
நிற்க, அவரது கரிசற்காட்டு இலக்கியம் பற்றி வாசித்தவர்கள் உயர்த்திச் சொல்கிறார்கள். யாராவது ஓசியிலே தந்தால், வாசிக்கவேண்டும்.
'நீ காற்று நான் மரம்' பற்றி நீங்கள் சொல்வது மெய். விகடனிலே வரிகளை அடுக்கிப் போட்டதுமாதிரியாகத் தோன்றியது, பாடலாகக் கேக்கும்போது, நாசமறுந்த விஜய் முகத்தை மறந்து கேட்கும்போது, நன்றாகவிருக்கிறது.;-)

1/11/2007 07:44:00 AM
Anonymous said...

மேத்தா கவர்ந்திருந்தாலுங்கூட, அந்நேரத்திலே கட்டிப்போட்டவை, மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்களும் காலத்திலே கோலத்திலே அநியாயமாகிப்போன நா. காமராசனின் "தாஜ்மஹாலும் சில ரொட்டித்துண்டுகளும்"தான்

1/11/2007 07:46:00 AM
Anonymous said...

//பாரதிராசாத்தேவரும், பேராசிரியர் கல்யாணியும், வைரமுத்துவும் - புலிகள் ஆதரவு விசயத்தில் கைது செய்யப்படாதது ஏன் - என்று Pattern Recognition சிலர் செய்து கொண்டிருந்ததும் நினைவுகூறத்தக்கது.//

ex(tr)act information;-)))

1/11/2007 07:48:00 AM
Unknown said...

//ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ள முடிகின்றது//

இதைப்படித்தவுடன் எனக்கு வரும் ஞாபகம்.
இளையராஜாவும் வைரமுத்துவம் மோதிக்கொண்டு பிரிந்த அந்த நாட்களில்
இளையராஜாவின் சிறந்த இசை சிறந்த கவிதை வரிகளை இழந்து விட்டதெனவும்
வைரமுத்துவின் சிறந்த வரிகள் சிறந்த இசையை இழந்து விட்டதெனவும் பேசிக் கொண்டோம்.

"அவர்களிருவருக்கும் இழப்போ இல்லையோ ஆனால்
இது நல்லிசையை நற்கவிதை வரிகளுடன் விரும்பும் பல பேருக்கு இழப்பு" என நாங்கள் பேசிக் கொண்டதைப் போலவே நிறைய பேர் பேசினார்கள்.

1/11/2007 07:50:00 AM
மு.கார்த்திகேயன் said...

புது நட்சத்திரமாக மின்னுவதற்கு வாழ்த்துக்கள் தமிழன்..

முழுதாய் படித்துவிட்டு மறுபடியும் வருகிறேன்

1/11/2007 07:53:00 AM
SP.VR. SUBBIAH said...

//கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது' மாதிரி பெண்களைச் சீரழிக்காது -இயன்றளவு பெண்களை அவர் மதித்துக்கொண்டிருப்பது- //

என்ன நண்பரே! சுய நினைவோடுதான்
இந்த வரிகளை எழுதினீர்களா?

நன்றாகத் தெரிந்து எழுத வேண்டுகிறேன்!

1/11/2007 09:18:00 AM
Anonymous said...

ஆசாத் பாய் இப்பல்லாம் இந்தப் பக்கம் வர்றதில்லை போலிருக்கு. ஏன்னா அவர்கிட்ட வைரத்தோட மேட்டர் நிறைய இருக்கு. ஆனா நீங்க நவீனத்துவம், பின்நவீனத்துவம், கட்டுடைத்தல் அப்படின்னெல்லாம் பேசினதால(?) கூட வராம இருக்கலாம்.

என்னுடைய பேச்சுப்போட்டிகளில் நிறைய இடங்களில் நிரப்பிய ஒன்று வைரமுத்துவின் கவிதை. சும்மா சொல்லக்கூடாது, மேடையில் சொல்லப்படுவதற்கு ஏற்ற வரிகள் அவை. சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை,

பெரும்பாடுபட்டு சுதந்திரம் என்ற மோதிரம் வாங்கித் தந்தார்கள் ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது நாம் மோதிரம் அணிய விரல்களில்லாத தொழுநோயாளிகள் என்று. என்பதாய் ஒன்று நான் எப்பொழுதும் உபயோகிப்பது. அப்புறமேட்டு "அனார்கலிக்குப் பிறகு உயிரோடு புதைக்கப்பட்டது நமது இந்திய ஜனநாயகமே" (இது கலைஞருக்காக எழுதியது ஆனால் சொல்லும்பொழுது மாற்றிச் சொல்லப்படும் ;-))

இப்படி எழுதுவதானால் நீண்டுகொண்டே போகும்.

"... ஊமை வெயிலுக்கே உருகிவிட்ட வெண்ணை நீ, அக்கினி மழையிலே அடடாவோ உருகலையே. இதை எங்கே போய் நான் கேட்பேன்." பாடி வைத்தவர்களையும் படித்தவர்களையும் நோக்கி கேட்பதாய் கம்பனை வம்பிழுத்தப் பாடலை மனனம் செய்து போகும் இடமெல்லாம் பீற்றிக் கொண்டிருந்த நாட்களை நினைவிற்கு கொண்டுவந்ததற்கு நன்றிகள்.

1/11/2007 09:39:00 AM
இளங்கோ-டிசே said...

பதிவை விட, பின்னூடங்கள் விரிவான வாசிப்பைத் தருகின்றன. மிக்க நன்றி நண்பர்களே.
.....
நான் வாசித்த வைரமுத்துவின் சுயசரிதை நூல் 'இதுவரை நான்' என்று நினைக்கின்றேன். அதில், அவரின் முதல் திரையிசைப்பாடலான 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' எழுதும் வரையான காலகட்டம் விபரிக்கப்பட்டிருக்கும்.
.............
நேரங்கிடைக்கும்போது இயன்றளவு விரிவாக பின்னூட்டம் எழுதுகின்றேன்.
.....
சுப்பையா: நான் வாசித்தவைகள்/அறிந்தவைகளினூடாகத்தான் அந்தத் தெளிவான புரிதலுக்கு வந்தேன். இப்போதைக்கு அதில் மாற்றம் இல்லை. நன்றி.

1/11/2007 11:54:00 PM
Athisaya said...

வணக்கம் முதலில் தலைப்பிற்காய் மிக்க நன்றி
எதையேனும் எழுதியே தீருவேன் என கண்டதையும் கவிதை என கிறுக்கிய காலங்களின் பிற்பகுதியில் வைரமுத்துவின் பெரிய கவிதையின் தொகுப்பே பிரமாண்டமாய் வழிநடத்தியது்
வாழ்நாளின் அவரை சந்தித்தால் ஏகலைவன் போல் உணர்வேன்

தாமரையின் வரிகள் மற்றொரு கோணத்தில் பன்முகமாய் விரிகிறது

இதுவரை நானில் அவரோடுசேர்ந்து கிணற்று மேட்டிலும் வரப்புகளிலும் உட்கார்ந்து அழுததுண்டு
பெரும்பாலானவர்களின் இளமை அவரை சந்திக்க வைக்கிறது
அட நம்ம கதை போல இருக்கே என்று உணர வைப்பதே அவர் வெற்றி
நானறிய வெறும் வர்த்தைகளுக்கு காட்சிப்புலத்தை வாசகனுக்கு புலப்பட வைப்பதில் அவரே என் குரு்

வார்த்தை திருட்டு எனபதை ஒத்துக்கொள்ளேன்
காலமாகி பழமொழிகளை கூட நாமும் தான் கையாளகிறோம்
அதுவுமன்றி சங்க காலத்தை கைப்பிிடித்து இங்கு கூட்டி வந்தனென்பதை சிறப்பாகவே பார்க்கிறேன்

வாழ்த்துக்களும் நன்றிகளும்

7/15/2015 11:36:00 AM