கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தொலைந்தவர்களின் வேர்களைத் தேடியலையும் குறிப்புகள்

Thursday, November 15, 2007

-Running in the Family மற்றும் Coming through Slaughter புதினங்களை முன்வைத்து-

1.
மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றையபொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாஜ்ஜி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், பல்வேறு affairs (தகாத உறவு எனச்சொல்வது அவ்வளவு சரியாக இருக்காதென நினைக்கின்றேன்) குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. அந்த affairsஐ எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொள்ளும்படியாக குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாஜ்ஜி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பேர்கர் இனத்தவர்களாக (டச், தமிழ், சிங்களம் என்ற பல்லினக்கலப்பு) இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் தாயினது திருமணம் நடைபெறுகின்றது.

மெர்வின் ஒண்டாஜ்ஜியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயினிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயினை மேலே செல்லவிடாது தடுப்பதென..., குடியோடும்/குடியின்றியும் என்று மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். 'மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்...' இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாஜ்ஜி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

oooooooooooo


கொழும்பின் கோடைக்காலங்களில் வெயிலிருந்து தப்புவதற்காய், மலையகப்பகுதியில் வேறு வீடுகள் வைத்து அங்கே தங்கும் வசதியுடையவர்களாய், நுவரெலியாவில் நடக்கும் குதிரைப்பந்தயங்களில் சூதாடுபவர்களாய், தமது குடும்பங்களிடையே அதிக செல்வாக்குள்ளவராய் இருப்பவர்கள் யாரென்று காட்டுவதற்காய் சொந்தமாய்க் குதிரைகள் வளர்ப்பவர்களாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பத்தினர்/உறவினர்கள் மிகுந்த வசதியுடன் இருக்கின்றார்கள். எனினும் அளவிற்கதிமான குடிப்பழக்கத்தால், ஒண்டாஜ்ஜியின் தகப்பனும் தாயும் விவாகரத்துப் பெறுகின்றார்கள். ஒண்டாஜ்ஜியின் தாயார் எந்த உதவியும் தகப்பனிடம் பெறாமல் இங்கிலாந்து சென்று உழைத்து கஷ்டங்களுடன் பிள்ளைகளை வளர்க்கின்றார் (செல்வாக்கான குடும்பம் குடிப்பழக்கம்/விவாகரத்தோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது). இலங்கையை விட்டு தாய், சகோதரகள் புறப்பட்ட பின்னரும் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது பதினொரு வயது வரை இலங்கையில் இருக்கின்றார். அவரது தகப்பன் மெர்வின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கோழிப்பண்ணையொன்றைச் சொந்தமாய் நடத்துகின்றார். விடுமுறைக்காலங்களில் தகப்பனோடும், உடன்பிறவாச் சகோதரிகளோடும் மைக்கல் ஒண்டாஜ்ஜி பொழுதுகளைக் கழிக்கின்றார்.

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் இந்தப்புதினத்தில் ஒண்டாஜ்ஜியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவிபுரிகின்றது (மைக்கல் ஒண்டாஜ்ஜியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை 'நாசூக்காய்ப்' பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது. அம்மம்மாவிற்கு மத்தியவயதிலேயே இடது மார்பகம் நோயின் காரணத்தால் நீககப்பட, cushion ஆன ஒருவகை செயற்கை மார்பகத்தையே பாவிக்கின்றார். அது பலமுறை தொலைந்துபோவதும், தொலைந்து போகின்ற கதைகளும் சுவாரசியமானவை. ஒருமுறை அதைக் கழற்றி வைத்திருக்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் வளர்க்கும் நாய் அதை எடுத்துச் சென்று நாசமாக்கி விடுகின்றது. மாமியாருக்கும் மருமகனுக்குமான உறவில் அவ்வளவு சுமுகமில்லையாததால், மெர்வின் ஒண்டாஜ்ஜி திட்டமிட்டே நாயைப் பழகி நுட்பமாய் பழிதீர்த்துக்கொண்டார் என்ற ஒரு கதை அக்குடும்பத்தினருக்கிடையில் இருக்கின்றது. இன்னொருமுறை, பெற்றா (Pettah) பஸ்சிலிருந்து வரும்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் இடது முலையைத் தடவிக்கொண்டு வருவதையும் அதுகுறித்து பிரக்ஞையின்றி இந்தப்பெண்மணி (லைலா) தன்பாட்டில் இருப்பதையும் கண்டு பஸ்சிலிருப்பவர்கள் திகைக்கின்றார்கள்.

oooooooooooo

மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையைவிட்டு வெளியேறியபின் தனது தகப்பன் -மெர்வின்- குறித்து பிறர் கூறுவதையே இப்புதினத்தின் பிற்பகுதியில் குறிப்பிடுகின்றார். உடன்பிறவாச் சகோதரி சூஸன், மெர்வின் குறித்து மிக நெகிழ்வான பல சம்பவங்களைக் குறிப்பிடுக்கின்றார். தனனில் மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவராய்... தன்னோடு மிகுந்த நெருக்கமாய் தந்தையிருந்தவர் என்கின்றார் சூஸன். தனக்கு சிறுவயதில் தெரிந்த தகப்பன் வேறு, பிறகிருந்த தகப்பன் வேறு என்ற புரிதல் ஒண்டாஜ்ஜியிற்கு வருகின்றது. தன்னையும், தனது சகோதர்களைப் போலவன்றி நிதானமாய், கோபப்படாது மென்மையாப் பேசும் உடன்பிறவாச்சகோதரி சூஸனைப் பார்க்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியிற்கு தனக்குத் தனது தாயின் குணங்கள் கடத்தபட்டிருக்கவேண்டும், சூஸனிற்கு தகப்பனின் பாதிப்பிருக்கலாம் என்று நினைத்துக்கொள்கின்றார். எனினும் குடியை இறுதிவரை விடாதிருந்த மெர்வின் தனது இறப்பிற்கான ஒருவருடத்தின்முன் அனைத்திலிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்தி மிகுந்த வெறுமையுடன் பொழுதைக் கழித்திருக்கின்றாரென்ற குறிப்பும் இருக்கின்றது.

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பலகலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.


இச்சுயசரிதைப் புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் ஆனால் வாழ்வைக் கொண்டாடுகின்றவிதமாய் மைக்கல் ஒண்டாஜ்ஜி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்காய் கூட அதிகம் ஒண்டாஜ்ஜி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தை (curioristy?) கூட்டுகின்றனபோலும். மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாஜ்ஜியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாஜ்ஜியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.

இப்புதினத்தின் பலவீனம் என்று பார்க்கும்போது, வேர்களைத் தேடிய பயணத்தில் தகப்பன் மட்டுமே நிறைய இடங்களை ஆக்கிரமித்துவிடுவது வாசிப்பவருக்கு சிலவேளைகளில் அலுப்பைத் தரக்கூடும். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தாய் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே வருகின்றது. சிலவேளைகளில் மெர்வின் ஒண்டாஜ்ஜி போல சுவாரசியம் தரக்கூடிய ஒரு ஆகிருதியாக தாய் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதைவிட முக்கிய பலவீனம் என்னவென்றால், இந்நூல் ஒரு படித்த மேற்தட்டுவர்க்கப் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பம் வேர்களை ஆழப்பதித்திருந்தாலும், ஒருவித அந்நியர்களாகவே இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். கறுவாத்தோட்டம் முதல், நுவரெலியா, கண்டி என்று மலையகப்பகுதிகள் வரை சித்தரிப்புக்கள் இருந்தாலும், அந்த மலையகத் தோட்ட மக்களின் இருண்ட வாழ்வு பதிவுசெய்யப்படவேயில்லை. ஜேவிபியின் கிளர்ச்சி பற்றிக்கூட அக்கறை கொள்கின்ற ஒண்டாஜ்ஜி, பல நூற்றாண்டுகளாய் நுகத்தடி மனிதர்களாய் எல்லோராலும் கைவிடப்பட்ட அம்மக்கள் பற்றி தனது பார்வையை அக்கறையுடன் சற்றுக்கூடத் திருப்பினாரில்லை (குதிரைப் பந்தயத்தில் சூதாடுகின்ற பகுதிகளில் மட்டும் இவ் அடித்தள மக்கள் குறித்த சிறு குறிப்புகள் வருகின்றன).


2.
Coming Through Slaughter அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை. நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் Boldenனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.


ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. (Barber shop போன்ற அண்மைய கோலிவுட் படங்களும், பல ராப் பாடல்களும் இதை இன்னும் நுணுக்காய்க் காட்டுகின்றன). ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஒவ்வொருவருடமும் கிரிக்கெட் (The Cricket) என்று நகரிலுள்ள விலைமாதர்களின் விபரங்க்ளுடன் தகவல் சஞ்சிகை கூட வெளியிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், 'மாமா' வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார். தனது கோபத்தை/காமம் இல்லாத பொழுதை, ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே 'வித்தியாசமாய்ப்' பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies....Bullets of music delivered onto the bed we were on...(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.

ஏற்கனவே இருந்த போல்டனின் இசைக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருதிசையில் போய்விட்டதறிந்து போல்டனைத் தனிமையும் நண்பர்கள் எவருமற்ற வெறுமையும் இடைவிடாது துரத்துகின்றது. மேலும், போல்டனின் முன்னாள் காதலியான நோரா இப்போது வேறொருவரோடு சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கின்றார். அந்த நபர் போல்டனின் இசைக்குழுவில் இருந்தவரும், நண்பருமென அறிந்து போல்டனின் வேதனை இன்னும் கூடுகின்றது. ஒரு ஊர்வலத்திற்காய் (parade) ஜாஸை வாசிக்க நோராவில் வீட்டில் சில நாட்கள் போல்டன் தங்கியிருக்கின்றார். அப்போது அவரது முன்னாள் காதலியுடனும் பிள்ளைகளிடமும் அன்பும் நெகிழ்வுமாய் பொழுதைக் கழித்து. அந்த ஊர்வலத்தில் அற்புதமான ஜாஸ் இசையை ஒரு குழுவுடன் இணைந்து கொடுக்கின்றார். தொண்டையால் இரத்தம் பீறிட்டெழுகின்றவரை தன்னை மறந்து போல்டன் வழங்கிய அற்புதமான அந்த இசை நிகழ்வை மக்கள் நீண்டநாட்களிற்கு நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஜாஸோடு அவ்வளவு பரீட்சயமில்லாத ஒரு வாசகரைக்கூட இதை விவரிக்கையில் மைக்கல் ஒண்டாஜ்ஜி அருகில் இருந்து பார்ப்பதுபோல இழுத்துச்சென்றுவிடுகின்றார்.. அதுவும் அந்த ஊர்வலத்தில் காணும் ஒரு பெண்ணை கற்பனையில் நினைத்து உருகி அவளோடு உடலுறவு கொள்கின்ற போல்டனின் ஆசையைப்போல இசையும் அதனோடு நகர்ந்து போகின்ற வர்ணிப்பு மிக அற்புதமானது. போல்டனின் அந்த இசையின் இனிமையும், erotic தன்மையையும் பிரதியிற்குள்ளிலிருந்து அப்படியே நமக்குள்ளும் வந்திறங்கிக்கொள்கின்றது. Fluff and groan in my throat , roll of a bad throat as we begin to slow. Tired. She still covers her my eyes with hers and sees it slow and allows the slowness for me her breasts black under the wet light shirt., sound and pain in my heart as death. All my body moves to my throat and I speed again and she speeds tired again, a river of sweat to her waist her head and hair back bending back to me, all the desire in me is cramp and hard, cocaine on my cock, eternal, for my heart is at my throat hitting slow pure notes inth the shimmy dance of victory... (p 130 & 131).

தனது முப்ப்த்தொரு வயதிற்குப் பிறகு மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ..., திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படவில்லை (ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது). ஜாஸ் இசையின் நுட்பங்களைக்கற்று வளர்ந்துவருகையில் போல்டன் தனது இசை தெரிந்த நண்பர்களை விட்டு விலகி, ஜாஸ் இசையில் விருப்பற்று பாலியல் தொழிலாளர்களை மட்டும் படங்கள் எடுத்துக்கொண்டு திரியும் Bellocq என்பவரோடு அதிக காலங்களைக் கழிப்பதும், பிற நண்பர்கள்போல அல்லாது இசை குறித்து எதுவும் திருப்பிக் கதைக்காத அவரோடு இரவு பகலாய் பொழுதைக் குடித்துக் கரைத்ததாலும் போல்டனுக்கு ஜாஸ் பற்றிய விருப்பு சிதறிப்போயிருகலாம் என்ற ஒரு வாசிப்பு நமக்கு கிடைக்கின்றது. இதையேதான் போல்டன் ஊரையும்விட்டு ஓடிவிட்டு திரும்பிவரும்போது நோராவும் கூறுகின்றார் Look at you. Look at what he(Bellocq) did to you..Look at you. Look at you. Godamit. Look at you (p 127). ஆனால் எல்லோரையும் விட, Bellocqயே, போல்டன் ஊரைவிட்டு ஓடியபோது அதிகம் அதிர்ச்சியடைகின்றார். மேலும், போல்டன் ஊரிற்குத் திரும்பி வரும் இரண்டு வருட இடைவெளிக்குள், Bellocq நெருப்பு மூட்டி தற்கொலையும் செய்துகொள்கின்றார்.

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும்விடுகின்றது,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது. எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாஜ்ஜி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden's Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.


(அ.யேசுராசாவிற்கு...)

3 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

//நெகிழவைத்த யேசுராசாவுக்கு//அது எப்பிடி எண்டு கொஞ்சம் சொல்லுறது(எல்லாம் ஒரு விடுப்பு பிடுங்கிற ஆர்வம் தான்)

11/15/2007 09:52:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

அடப்பாவி அதுக்குள்ளை திருத்தியாச்சா

11/15/2007 09:54:00 AM
இளங்கோ-டிசே said...

அண்ணை ஈழநாதன், விடுப்புக்கேட்கும் ஆர்வத்தில் நீவிரும் என்னைப்போலவே இரும் :-). சிதைதலும், சிதைத்தலும் நமக்கு இயல்பெனவே கொள்க.

11/15/2007 03:32:00 PM