நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ?

Thursday, December 04, 2008

-சூடாகும் க‌ன‌டா அர‌சிய‌லும், அவ‌ச‌ர‌மவ‌ச‌ர‌மாய் முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றிய‌ ந‌ம் கால‌த்து ச‌ன‌நாய‌க மீட்ப‌ர்க‌ளும்-

சில‌ வார‌ங‌க‌ளுக்கு முன் வானொலி நிக‌ழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த‌போது, ஆங்கில‌ அக‌ராதியில் புதிதாக‌ வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்க‌ள் என்று கூறியிருந்தார்க‌ள். 'Mah' என்ற‌ வார்த்தை அலுப்பான‌து (boring) என்ற‌ ஒத்த‌ க‌ருத்தைப் பிர‌திப‌திப்ப‌து என்று விள‌க்கி, விரித்துச் சொல்லும்போது, 'அண்மையில் ந‌ட‌ந்த‌ க‌ன‌டாத் தேர்த‌ல் மிக‌ அலுப்பான‌து' என்று -இப்புதிய‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தி- ஒரு உதார‌ண‌த்தைக் கூறியிருந்தார்க‌ள்.

வ‌ழமையாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் எவ்வித‌ ஆர‌வார‌ங்க‌ளுமில்லாது ந‌ட‌ப்ப‌து என்றாலும், இம்முறை குறுகிய‌ கால‌த்தில் தேர்த‌ல் திக‌தி அறிவித்து ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தேர்த‌லுக்கு, அருகிலிருந்த‌ ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் சூழ‌லும் 'இன்னும் அலுப்பாக்கிய‌த‌ற்கு' ஒரு முக்கிய‌ கார‌ண‌மென‌லாம். இங்கே முக்கிய‌ க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சியில் விவாதித்துக்கொண்டிருந்த‌போது, அதே நேர‌த்தில் நிக‌ழ்ந்த‌, ஐக்கிய‌ அமெரிக்காவின் உப‌ ஜ‌னாதிப‌திக‌ளுக்கான‌ விவாதத்தைப் பார்த்த‌ க‌னேடிய‌ர்க‌ளே அதிக‌ம் என்று கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. அது ம‌ட்டுமின்றி க‌ன‌டாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா, ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா அதிக‌ம் க‌வ‌னிக்கின்றீர்க‌ள் என்றொரு ப‌த்திரிகை கருத்துக்க‌ணிப்பு நிக‌ழ்த்திய‌போது 70%ற்கும் அதிக‌மான‌ ம‌க்க‌ள் 'அமெரிக்க‌த் தேர்த‌லையே' என்று உள்ள‌தை உள்ள‌ப‌டியே சொல்லியுமிருக்கின்றார்க‌ள். இதில் பெரிய‌ விய‌ப்பு ஏதுமில்லை. ஈழ‌த்திலிருந்த‌போது அதிக‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்ப‌தை அறிவ‌தைவிட‌ இந்திய‌ அர‌சிய‌ல் பேசுவ‌தில் சுவார‌சிய‌மாக‌ இருந்திருப்ப‌தைத்தான் அவ‌தானித்திருக்கின்றேன். சிறுவ‌ய‌தில் இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்திலுள்ள‌ அமைச்ச‌ர்க‌ளை விட‌ இந்திய‌ப் பாராளும‌ன்ற‌ அமைச்ச‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை அறிந்து வைத்திருந்த‌து என‌க்கும் நினைவிருக்கின்ற‌து. இன்றும் பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இந்திய‌ கிரிக்கெட் அணியை ஆத‌ரிப்பது என்ப‌து இத‌ன் நீட்சியில் வ‌ருகின்ற‌ ஒரு விட‌ய‌ந்தான்.

2.
க‌னடாவில் த‌ற்ச‌ம‌ய‌ம் நான்கு முக்கிய‌ க‌ட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌: லிப‌ர‌ல் (Liberals), கொன்ச‌ர்வேடிவ் (Conservatives) , புதிய‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி (New Democratic Party) , ப்ளொக் கியூபெக்குவா (Bloc Quebecios). என்ப‌ன‌ அவை. அண்மைக்கால‌மாக‌ கிறீன் க‌ட்சியும் (Green Party) ம‌க்க‌ளிடையே செல்வாக்குப் பெற்று வ‌ருகின்ற‌து.
ஆக‌ இவ்வாறாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் அலுப்பாக‌வும்..., த‌ங்க‌ளை எவ‌ரும் க‌வ‌னிக்கின்றார்க‌ள் இல்லை என்று அர‌சிய‌ல்வாதிக‌ள் எண்ணிய‌தாலோ என்ன‌வோ சென்ற‌ வார‌ங்க‌ளிலிருந்து க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் சூடுபிடிக்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து.

2006ற்கு முன், தொட‌ர்ந்து நீண்ட‌ கால‌மாக‌ மித‌வாத‌ லிப‌ர‌ல் க‌ட்சியே க‌ன‌டாவின் ஆட்சி பீட‌த்திலிருந்திருக்கின்ற‌து. இல‌ங்கையில் ஜ‌.தே.க‌விற்கு கொழும்பு மாதிரி, த‌மிழ்நாட்டில் தி.மு.க‌விற்கு சென்னை போல‌, லிப‌ர‌ல் க‌ட்சியின் அசைக்க‌முடியாத‌ ஒரு கோட்டையாக‌ ஒன்ராறியோ மாகாண‌ம் இருந்திருக்கின்ற‌து. க‌ன‌டாவின் 308 பாராளுன‌ற‌ ஆச‌ன‌ங்க‌ளில் 106 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்தில் இருக்கின்றது. 2000 ஆண்டில் லிப‌ர‌ல் க‌ட்சி இர‌ண்டாவ‌து முறையாக‌ ழான் கிறைட்சிய‌னின் த‌லைமையில் பெரும்பான்மை அர‌சு அமைத்த‌போது, வென்ற‌ 172 ஆச‌ன‌ங்க‌ளில், 100 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்திலிருந்து லிப‌ர‌லுக்கு கிடைத்திருந்த‌ன‌. 106 ஆச‌ன‌ங்க‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தின் 100 ஆச‌ன‌ங்க‌ளை லிப‌ர‌லுக்கு ம‌க்க‌ள் அளித்த‌மை இது முத‌ற்த‌ட‌வையுமில்ல‌. அத‌ற்கு முன் நிக‌ழ்ந்த‌ 1997 தேர்த‌லிலும் லிப‌ர‌ல் க‌ட்சி 101 ஆச‌ன‌ங்க‌ளை வென்றிருக்கின்ற‌து. ஆக‌, ஒன்ராறியோ மாகாண‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை அசைத்துப் பார்க்கும் க‌ட்சியே க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த்தில் எவ்வித‌ப் ப‌ய‌முமின்றி அம‌ர‌லாம் என்ற‌ உண்மை எளிதாக‌ அனைவ‌ருக்கும் புரியும். ஒன்ராறியோ மாகாண‌த்திற்கு அடுத்த‌ அதிக‌ ஆச‌ன‌ங்களைக் கொண்ட‌ (75) கியூ(கு)பெக் மாகாண‌த்தில், லிப‌ர‌ல், வ‌ல‌துசாரியான‌ 'கொன்ச‌ர்வேடிவ்' போன்ற‌ க‌ட்சிக‌ள‌ அவ்வ‌ள‌வு எளிதில் கால் ப‌திக்க‌ முடியாது, 'கியூபெக்' த‌னி நாடு கேட்டுப் போராடும் ப்ளொக் கியூபெக்கா என்ற‌ க‌ட்சி தொட‌ர்ந்து பெரும்பான்மை ஆச‌ன‌ங்க‌ளை (50 ஆச‌ன‌ங்க‌ளுக்கு அண்மையாக‌ தொட‌ர்ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில்) வென்றுகொண்டுவ‌ருகின்ற‌து. ப்ளொக் கியூபெக்கா க‌ட்சி, கியூபெக‌ மாகாண‌த்தில் ம‌ட்டுமே போட்டியிருக்கின்ற‌ ஒரு க‌ட்சி.

3.
1993ல் இருந்து தொட‌ர்ச்சியாக‌ 2006 வ‌ரை ஆட்சி புரிந்த‌ லிபர‌ல் க‌ட்சியை வீழ்த்தி தாம் ஆட்சிப்பீட‌த்தில் ஏறுவ‌த‌ற்காய் அதிதீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் தொட‌ர்ந்து முய‌ற்சிக‌ளை மேற்கொண்டே வ‌ந்திருந்த‌ன‌ர். த‌னித்து நின்று வெற்றிபெற‌முடியாது‌ என்ற‌ உண்மை வ‌ல‌துசாரிக‌ளுக்கு உறைத்த‌போது, ப‌ல‌வேறு மாகாண‌ங்க‌ளின் உள்ளூர் வ‌ல‌துசாரிச் சிந்த‌னையுள்ள க‌ட்சிக‌ளையெல்லாம் ஒருங்கிணைத்து த‌ங்க‌ளுக்குள் ஒரு த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுத்து, 2004 தேர்த‌லில் கூட்டாய் வ‌ல‌துசாரிக‌ள் குதித்த‌ன‌ர் (இந்நேர‌ம் பிஜேபி உங்க‌ளுக்கு நினைவுக்கு வ‌ர‌லாம்). இத‌ற்கிடையில் இர‌ண்டாவ‌து முறையாக‌த் தேர்ந்தெடுத்த‌ ழான் கிறைட்சிய‌ன் த‌லைமையிலான‌ லிப‌ர‌ல் க‌ட்சி, நூறு மில்லிய‌னுக்கு மேலான‌ Sponsorship Scandalலில் மாட்டுப்ப‌ட்டு விழி பிதுங்க‌த்தொட‌ங்கிய‌து. 2004ல் லிப‌ர‌ல் க‌ட்சியிற்கு போல் மார்ட்டின் த‌லைமை தாங்கி, உறுதியான‌ வ‌ல‌துசாரிக‌ளின் கொன்ச‌ர்வேடிவிற்கு எதிராய் நின்ற‌போதும், ம‌க்க‌ள் இன்னும் லிப‌ர‌ல் க‌ட்சியைக் கைவிட‌த் த‌யாரில்லை என்ப‌தை நிரூபித்த‌ன‌ர். மொத்த‌ ஆச‌ன‌ங்க‌ளான‌ 306ல், 135 ஆச‌ன‌ங்க‌ளைப்பெற்று லிப‌ர‌ல் க‌ட்சி வெற்றி பெற்ற‌து. இத‌ற்கிடையில் ஊழ‌ல் வ‌ழ‌க்கின் மீதான‌ இர‌ண்டாவ‌து அறிக்கை விசார‌ணைக் குழுவால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டு லிப‌ர‌ல் க‌ட்சியின் ஊழ‌ல் பெருச்சாளிக‌ள் கையும் க‌ள‌வுமாய் பிடிப‌ட‌, என்டிபி, ப்ளொக் க்யூபெக்கா, கொன்ச‌ர்வேட்டிவ் ஆகிய‌ க‌ட்சிக‌ள் அர‌சுக்கெதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையைக் கொண்டு வ‌ந்து (172 -134) லிப‌ர‌ல் ஆட்சி க‌லைக்க‌ப்ப‌ட்டு 2006ல் தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. 2006 தேர்த‌லில் லிப‌ர‌லின் கோட்டையான‌ ஒன்ராறியோ மாகாண‌ம் உடைக்க‌ப்ப‌ட்டு, இதுவ‌ரை பெரும்பான்மையாக‌ ஒன்ராறியோவில் ஆச‌ன‌ங்க‌ளை வென்ற‌ லிப‌ர‌லைப் பின் த‌ள்ளி 54 ஆச‌ன‌ங்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சுக்கு ம‌க்க‌ள் கொடுக்க‌, லிப‌ர‌ல் 40 ஆச‌ன‌ங்க‌ளையே வெல்ல‌ முடிந்த‌து. இவ்வாறாக‌ நெடும் 'வ‌ன‌வாச‌த்திற்கு'ப் பிற‌கு வ‌ல‌துசாரிக‌ளால‌ ஒரு சிறுபான்மை அர‌சைக் க‌ன‌டாவில் 2006ம் ஆண்டில் அமைக்க‌ முடிந்த‌து.

க‌னடாத் தேர்த‌ல் ‍- 2006 (Total Seats: 308)

Conservative - 124
Liberal - 103
Bloc Quebecois - 51
NDP - 29
Independent - 1

2006ல் 'வ‌ராது வ‌ந்த‌ மாம‌ணியாய்' ஆட்சியைப் பிடித்த‌ வ‌ல‌துசாரிக‌ள், குறுகிய‌ கால‌த்திற்குள் -2008ல் -அவ‌ச‌ம‌வ‌ச‌ர‌மாக‌ இன்னொரு தேர்த‌லை அறிவிக்க‌ என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌து வெள்ளிடை ம‌லை. முக்கிய‌ எதிர்க்க‌ட்சியான‌ லிப‌ர‌ல் க‌ட்சி அப்போதுதான் ஒரு புதிய‌ த‌லைவ‌ரைத் த‌ங்க‌ளுக்குத் தேர்ந்தெடுத்திருந்த‌ன‌ர். அத்தோடு லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ருக்கான‌ தேர்த‌லில் த‌லைவ‌ர் ப‌தவியை வெல்ல‌க்கூடிய‌வ‌ர்க‌ள் என்று மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ Michael Ignatieff. Bob Rae, Gerard Kennedy போன்ற‌வ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌ அதிக‌ம் பிர‌பல்ய‌மில்லாத‌ Stéphane Dion க‌ட்சியின் த‌லைவ‌ராக‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார். ஆக‌வே லிப‌ர‌லுக்குள் த‌ன‌து த‌லைமையை Stéphane Dion முத‌லில் உறுதியாய் நிரூபிக்க‌வேண்டிய‌ அவ‌ச‌ர‌மான‌ நிலைமை.


மேலும் லிப‌ர‌ல் க‌ட்சி இன்னும் இர‌ண்டோ மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு தேர்த‌லை எதிர்பார்க்காத‌ நிலைமையில் (no preparations), குறைந்த‌ கால‌ அவ‌காச‌த்திற்குள் தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. Stéphane Dion த‌ன‌து உட்க‌ட்சிப் பூச‌ல்க‌ளையே இன்னும் ச‌மாளிக்க‌முடியாத‌ நிலையில் தேர்த‌லைச் ச‌ந்திக்கின்றார். தேர்த‌ல் திக‌தியை அறிவிக்கின்ற‌போது கொன்ச‌ர்வேடிவ்ற்கு இன்னொரு அதிஸ்ட‌மும் கைகொடுக்கின்ற‌து. க‌ச்சா எண்ணெயின் விலை கூடி க‌ன‌டாவின் டொல‌ர் பெறும‌தியும் உல‌க‌ச‌ந்தையில் கிடுகிடுவென்று ஏற‌, எல்லா புற‌ச்சூழ‌ல்க‌ளும் கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சியிற்கு ஒரு வ‌லுவான‌ பெரும்பான்மை கிடைப்ப‌து உறுதியென்று க‌ட்டிய‌ங் கூறுகின்ற‌ன‌. இந்த‌ இட‌த்தில் க‌ன்டாவிலிருக்கும் புலி எதிர்ப்பாள‌ர்க‌ளும் உற்சாக‌மாக‌வே தேர்த‌லை எதிர்கொண்ட‌ன‌ர் என்ப‌தையும் குறித்தாக‌வேண்டியிருக்கின்ற‌து. கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சே புலிக‌ள் இய‌க்க‌த்தைக் க‌ன்டாவில் த‌டைசெய்து ப‌ல்வேறு புலிக‌ளின் செய‌ற்பாடுக‌ளை முட‌க்க‌த்தொட‌ங்கியிருந்த‌து. வ‌ல‌துசாரி அர‌சாங்க‌ம் ஒன்று வ‌ந்தால், க‌னடாவிற்கு வ‌ரும் குடிவ‌ர‌வாள‌ர்க‌ள்/அக‌திக‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌தையோ, ஓரின‌ப்பாலின‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் (invisible) சிறுபான்மையின‌ருக்கு என்ன‌ நிக‌ழும் என்ப‌து குறித்தோ, ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் க‌ன‌டிய‌ இராணுவ‌ம் த‌ங்கி 'ம‌னிதாபிமான‌ப்ப‌ணி' செய்ய‌ப்போகின்ற‌தோ என்ற‌ அக்க‌றையெல்லாம் இவ‌ர்க‌ளைப் போன்ற‌வ‌ர்களுக்கு அவ‌சிய‌மில்லாத‌ ஒன்றே. புலியை எதிர்த்தால் ம‌ட்டுமே ந‌ம‌து மூச்சிருக்கும்வ‌ரை செய்வ‌து என்றிருப்போர்க்கு ம‌ற்ற‌ப் பிர‌ச்சினைக‌ள் நினைவுக்கு வ‌ராத‌து அவ‌ர்க‌ள‌து 'ச‌ன‌நாய‌க‌'நிலைப்பாடு என்க‌. ச‌ரி, அதை இப்போதைக்கு விடுவோம்.

ஆக‌ பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வெற்றிந‌டை போட்டுக்கொண்டிருந்த‌ கொன்ச‌ர்வேட்டியிற்கு முத‌லில் ஆப்ப‌டித்த‌து, ஜ‌க்கிய‌ அமெரிக்காவின் வ‌ர்த்த‌க‌த்தில் ஏற்ப‌ட்ட‌ வீழ்ச்சி. 'எம‌து வ‌ங்கிக‌ள் எல்லாம் மிக‌வும் வ‌லுவான‌ நிலையிலிருக்கின்ற‌ன‌, க‌வ‌லையேப‌ட‌வேண்டாம்' என்று நிதிய‌மைச்ச‌ர் தேர்த‌ல் கால‌த்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும், கிட்ட‌த்த‌ட்ட‌ 75% ற்கு மேலான‌ வ‌ர்த்த‌க‌த்தை ஜ‌க்கிய‌ அமெரிக்காவோடு க‌ன‌டா செய்துகொண்டிருக்கும்போது ம‌க்க‌ள் இதை உறுதியாய் ந‌ம்ப‌த் த‌யாராக‌ இருக்க‌வில்லை. ஒரு க‌ட்ட‌த்தில் பொருளாதார‌ வீழ்ச்சியை வைத்து, லிப‌ர‌ல் வென்றுவிடுமோ என்ற‌ நிலை வ‌ந்த‌போது, அந்த‌ அற்புத‌ த‌ருண‌த்தை -எமினெமின் வார்த்தைக‌ளில் சொல்வ‌த‌னால் Seize the momentஐ- லிப‌ர‌ல் க‌ட்சியின் உறுதிய‌ற்ற‌ த‌லைமையால் த‌ம‌க்குரிய‌தாக‌ மாற்ற‌முடிய‌வில்லை. ஒரு க‌ட்சியின் அர‌சிய‌ல் விஞ்ஞாப‌ன‌த்தை விம‌ர்சிக்காது, லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரை நோக்கி மிக‌வும் கீழ்த்த‌ர‌மான‌ தாக்குத‌ல்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி தொலைக்காட்சிக‌ளில் ந‌ட‌த்த‌த்தொட‌ங்கிய‌து, அத்தகைய‌பொழுதில் ' நான் ந‌ல்ல‌வ‌ன்; ம‌க்க‌ளுக்கு அதையெல்லாம் விள‌ங்க‌ப்ப‌டுத்த‌த் தேவையில்லை' என்று அர‌சிய‌ல் ச‌துர‌ங்க‌த்தில் எதிர்க் காய்க‌ளை ந‌க‌ர்த்தத்தெரியாத‌ லிப‌ர‌ல் க‌ட்சி த‌லைவரை அர‌சிய‌ல் தெரியாத அப்பாவியென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. அத்தோடு சுற்றுச் சூழ‌லில் மிகுந்த‌ அக்க‌றையுடைய‌வ‌ராக‌ Dion இருந்த‌தால், சுற்றுச் சூழ‌லை முன்வைத்து நிறைய‌ வ‌ரிக‌ளை சுற்றுச் சூழ‌ல் பாதுகாப்பிற்காய் அற‌விட‌ப்போகின்றார் என்ற‌ ஒரு ப‌ய‌த்தை ம‌க்க‌ளிடையே மிக‌ நுட்ப‌மாக‌ கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி கொண்டு சென்றுமிருந்த‌து.

ஆக‌, இப்போது ச‌ந்தைப் பொருளாதார‌ வீழ்ச்சியால் கொன்ச‌ர்வேடிக் க‌ட்சியிற்கு பெரும்பான்மை அர‌சு அமைப்ப‌து என்ற‌ நிலையிலிருந்து, 'நாயைப்பிடி பிச்சை வேண்டாம்' என்ற‌ நிலையில் த‌ம் வ‌ச‌த்து இருந்த‌ ஆட்சியை மீள‌வும் காப்பாற்ற‌வேண்டிய‌ நிலையில் தேர்த‌ல்‍ 2008 ஒக்ரோப‌ரில் ந‌ட‌க்கின்ற‌து.

தேர்த‌ல் 2008 (Total Seats 308)


Conservative - 143
Liberal - 77
Bloc Quebecios - 49
NDP - 37
Independent - 2

இவ்வாறாக‌ச் சென்ற‌ ஒக்ரோப‌ரில் ஒரு பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளுக்குக் கொடுக்க‌ ம‌க்க‌ள் த‌யாரில்லையென்ற‌ நிலையில், மீண்டும் வ‌ல‌துசாரிக‌ள் இன்னொரு சிறுபான்மை அர‌சை பாராளும‌ன்ற‌த்தில் 'த‌லை த‌ப்பிய‌து த‌ம்பிரான் புண்ணிய‌ம்' என்ற‌வ‌ளவில் அமைத்துக்கொண்டார்க‌ள்...

4.
க‌ன‌டாத் தேர்த‌ல் முடிவுக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌ இர‌விலோ அத‌ற்க‌டுத்த‌ நாளிலோ, கூட‌வே துணையாயிருந்த‌ ந‌ண்ப‌ரிட‌ம், ஏன் ம‌ற்ற‌க்க‌ட்சிக‌ள் கூட்டாய்ச் சேர்ந்து கொன்ச‌ர்வேடிவை விழுத்தி கூட்ட‌ணி அர‌சை அமைக்க‌க்கூடாது என்று கேட்டிருக்கின்றேன். இன்னொரு ந‌ண்ப‌ரிட‌மும் இது ப‌ற்றி விவாதித்த்தாய் நினைவு. இங்கு உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்த‌ கால‌ங்க‌ளிலேயே க‌னடா வ‌ர‌லாறு, அர‌சிய‌ல் பாட‌ங்க‌ள் ப‌க்க‌ம் போன‌தேயில்லை. க‌ன‌டாவின் வ‌ர‌லாறு என்ப‌தே இர‌த்த‌க்க‌றைப‌டிந்த‌ வ‌ர‌லாறு என்ப‌து வேறு விட‌ய‌ம். ஆக‌வே க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தில் இவ்வாறான‌ கூட்ட‌ணிய‌ர‌சுக‌ள் அமைப்ப‌ப‌த‌ற்கு எதிரான‌ ஒரு ச‌ட்ட‌ம் கூட‌ இருக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். எனெனில் இர‌ண்டாம் உல‌க‌ம‌காயுத்த‌தின் பின், கொம்யூனிஸ்ட் க‌ட்சியொன்றை க‌ன‌டா த‌டை செய்த‌தாய் எங்கையோ வாசித்த‌து நினைவிலிருக்கின்ற‌து. எதுவும் ந‌ட‌க்க‌லாம் உல‌க‌த்தில்.

ஆக‌ வ‌ல‌துசாரிக‌ள் மீண்டும் ஆட்சிப்பீட‌த்திலேறினார்க‌ள். இந்த‌ வ‌ருட‌த்தில் இல்லாவிட்டாலும் அடுத்த‌ வ‌ருட‌த்தின் பிற்ப‌குதியிலாவ‌து ஒரு Recession க‌ட்டாய‌ம் நிக‌ழும் என்று ந‌ம‌து மேன்மைக்குரிய‌ நிதிய‌மைச்ச‌ர் செப்பினார். விரைவில் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட‌வுள்ள‌ வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்தில் பெரிய‌ துண்டு விழ‌ப்போகின்ற‌து (ஆக‌வே ம‌க்க‌ளே உங்க‌ளை எப்பாடுப‌ட்ட‌வாது காப்பாற்றுங்க‌ள்) என்றும் அவ‌ர் க‌ட்டிய‌ம் கூறினார் (ஆப்கானிஸ்தானிற்கே நிறைய‌ பில்லிய‌னின் நிதி போகின்ற‌து பிற‌கு எப்ப‌டி ப‌ட்ஜெட்டை balance செய்வ‌தாம்?). அவை எதுவும் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாது, த‌மிழ் ம‌க்க‌ளின் த‌லைவிதியை நிர்ண‌யிப்ப‌த‌ற்காய் சுப்பிர‌ம‌ணிய‌ சுவாமியை, ஆன‌ந்த‌ச‌ங்கரியை இங்கே அழைத்து கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தும் ந‌ம‌து புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ள் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு வ‌ந்ததால் புலிக‌ளுக்கு மேலும் 'ஆப்பு'க் கிடைக்க‌ப்போகின்ற‌து என்று கொண்டாடினார்க‌ள். எல்லாவித‌மான‌ ச‌ன‌நாய‌க‌மும் இருக்கின்ற‌தென்றால், புலிக‌ளை எதிர்ப்ப‌த‌ற்கு ம‌ட்டுமில்லை புலிக‌ளை ஆத‌ரித்துப் பேசுவ‌த‌ற்கான‌ உரிமைக்கும் குர‌ல் கொடுக்க‌வேண்டும் என்று உண்மையான‌ ச‌ன்நாய‌க‌ விழுமிய‌ங்க‌ள் தெரிந்திருந்தால், த‌மிழ்த் தேசிய‌ கூட்ட‌ணியில் ம‌க்க‌ளால‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பா.உறுப்பின‌ர்க‌ளுக்கு க‌ன்டா விசா கொடுக்க‌ ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌போதெல்லாம் 'அர‌சிய‌லுக்கு அப்பால்' ச‌ன‌நாய‌க‌ உரிமையை முன்வைத்து குர‌ல் எழுப்பியிருக்க‌வேண்டும்... ஒரு சிங்க‌ள‌வ‌ரான‌ க‌லாநிதி விக்கிர‌பாகுவிற்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தை எதிர்த்துக் குர‌ல் கொடுத்திருக்க‌வேண்டும், ஆனால் புலி அடையாள‌ம் கொடுத்து... அவ‌ருக்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தைக் கொண்டாடிய‌தோடு ந‌ம‌து புலியெதிர்ப்பு ச‌ன்நாய‌க‌ உரிமைக‌ள் முடிந்துவிட்ட‌ன‌. புலி X புலி எதிர்ப்பு அர‌சிய‌லுக்கு அப்பால் ந‌க‌ர‌முடியாத‌ புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌ம் மிக‌வும் க‌வ‌லைக்குரித்தான‌து. புல‌ம்பெய‌ர்ந்து அர‌சிய‌லை முன்னெடுப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து அப்படிச் சொல்ப‌வ‌ர்க‌ள், எத‌ற்கெத‌ற்கோ அறிக்கை விடுகின்றார்க‌ள்/கையெழுத்துப் போடுகின்றார்க‌ள். இன்று புல‌ம்பெய‌ர்ந்து கொண்டிருக்கும் வ‌ன்னிக்குள்ளிருக்கும் ம‌க்க‌ளுக்காக‌வே, கிழ‌க்கு மாகாண‌த்தில் மாறி மாறி போட்டுத்த‌ள்ள‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிச் ச‌ன‌ங்க‌ளுக்காக‌வோ, ம‌லைய‌க‌ப்ப‌குதிகள், கொழும்பின் சுற்றுப்புற‌ங்க‌ளில் நிக‌ழும் க‌ண்மூடித்த‌ன‌மான‌ கைதுக‌ள்/ஆட்க‌ட‌த்த‌ல்க‌ள் ப‌ற்றியோ, இல‌ங்கை அர‌சின் மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ கிள‌ஸ்ர‌ர்(Cluster) குண்டுத்தாக்குத‌ல்க‌ளுக்கு எதிராக‌வோ ஒரு அறிக்கை விடுவார்க‌ள் என்றால்..ம்கூம். இப்ப‌டியெல்லாம் செய்தால் ந‌ம‌து ந‌டுநிலைமை குழ‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ர‌லாற்றில் த‌ம் பெய‌ர்க‌ள் பொன்னெழுத்துக்க‌ளில் த‌வ‌றாக‌ப் ப‌திய‌ப்ப‌ட்டு விடுமோ என்ற‌ க‌வ‌லை அவ‌ர்க‌ளுக்கு இருக்கிற‌து போலும். ந‌ம‌து ம‌க்க‌ளுக்காய் எழுந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் அர‌சிய‌ல் எல்லாம் எப்ப‌டி த‌னி ம‌னித‌ர்க‌ளில் போய் ஒடுங்கிக்கொண்ட‌ன‌வோ அதைவிட‌ மிக‌க்கேவ‌ல‌மாய் ந‌ம‌து புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் த‌னிம‌னித‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காய் முன்னெடுக்க‌ப்ப‌டுவ‌தைக் காணும்போது மிக‌வும் கேவ‌ல‌மாக‌ இருக்கின்ற‌து. எத்த‌னையோ தேவைய‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளை த‌மிழ்நாட்டிலிருந்து சுவீக‌ரித்துக்கொண்ட‌ நாம், த‌மிழ‌க‌த்துப் ப‌டைப்பாளிக‌ள்/ செய‌ற்பாட்டாள‌ர்க‌ளிட‌மிருந்து இவ்வாறான‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலாவ‌து -ச‌ற்றாவ‌து- ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து உருப்ப‌டியாக‌ச் செய்வ‌து ப‌ற்றி க‌ற்றுக்கொள்ள‌லாம்.

நிற்க‌. க‌னடாவின் அர‌சிய‌லைப் ப‌ற்றியெழுத‌ வ‌ந்த‌ இக்க‌ட்டுரை எங்கெங்கோ அலைகின்ற‌து. நேர்கோட்டு வாழ்வே இனிச் சாத்திய‌மில்லை என்கின்ற‌போது நேர் எழுத்துமுறை சாத்திய‌மா என்ன‌? ஆக‌ இறுதியாய் க‌ன‌டா கொன்ச‌ர்வேட்டிவ் அரசு க‌விழ்வ‌த‌ர்கான‌ சூழ்நிலைக‌ள் சென்ற‌ வார‌த்திலிருந்து கனிய‌த்தொட‌ங்கியிருக்கின்ற‌ன‌.

சிறுபான்மை அர‌சாக‌விருக்கும் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு தானொரு பெரும்பான்மையாக‌ அர‌சாக‌ த‌ன்னை நினைத்து த‌ன்னிச்சையாக‌ முடிவுக‌ளை எடுக்க‌த்தொட‌ங்கிய‌போது, இம்முறை லிப‌ர‌ல், என்டிபி, ப்ளொக் கியூபெக்கா சேர்ந்து கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சியிற்கு எதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையை வ‌ருகின்ற‌ திங்க‌ட்கிழ‌மை கொண்டுவ‌ருகின்ற‌ன‌. பில்லிய‌ன் க‌ண‌க்கில் ப‌ண‌த்தைச் செல‌வ‌ழித்து இர‌ண்டு வ‌ருட‌த்திற்குள் மூன்றாவ‌து தேர்த‌லை க‌ன‌டிய‌ ம‌க்க‌ள் ச‌ந்திக்க‌ விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தால், லிப‌ர‌லும், என்டிபியும் இணைந்து கூடட‌ணிய‌மைத்து அர‌சைத் த‌ங்க‌ளுக்குத் த‌ரும்ப‌டி கோருகின்றார்க‌ள். ப்ளொக் கியூபெக் தான் ஆட்சியில் ப‌ங்குபெற்றாம‌ல் வெளியிலிருந்து 2010 ஆண்டுவ‌ரை ஆத‌ர‌வு த‌ருகின்றோம் என்றிருக்கின்றார்க‌ள். கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சி க‌விழ்வ‌து உறுதியாகிவிட்ட‌து. வ‌ருகின்ற‌ ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் ச‌ம‌ர்பிக்கின்ற‌ ப‌ட்ஜெட் வ‌ரையாவ‌து பொறுத்திருக்க‌... என்று பிர‌த‌ம‌ர் க‌த‌ற‌த்தொட‌ங்கியுள்ளார்.

இம்முறை யார் க‌னடாவில் ஆட்சியிலிருப்ப‌து என்ப‌தை க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லே தீர்மானிக்க‌வேண்டிய‌வ‌ராய் இருக்கின்றார். லிப‌ர‌ல்-என்டிபி இணைந்து, இன்னொரு தேர்த‌லுக்கு அழைப்பு விடுக்காது, தேர்த‌லில்லாது ஆட்சிய‌மைப்ப‌த‌ற்கு அழைப்பு விடுத்த‌து ஒரு ந‌ல்ல‌தொரு முய‌ற்சியே. ஆக‌ க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லுக்கு மூன்று தெரிவுக‌ள் உள்ள‌ன‌.

முத‌லாவ‌து உட‌னடித் தெரிவாய் த‌ன‌க்குள்ள‌ அதிகார‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி பாராளும‌ன்ற‌த்தை ஒத்திவைத்த‌ல் (ஆக‌க்குறைந்த‌ அடுத்த‌ ப‌ட்ஜெட் ச‌ம‌ர்ப்பிக்கும் வ‌ரையாவ‌து), அதையேதான் கொன்ச‌ர்வேடிவ் அர‌சாங்க‌ம் கேட்கின்ற‌து. அந்த‌ இடைவெளிக்குள் ஏதாவ‌து ச‌ம‌ர‌ச‌த்தை பின்க‌த‌வுவ‌ழியால் செய்ய‌லாம் என்று ஆட்சியிலிருக்கும் வ‌ல‌துசாரிக‌ள் ந‌ம்புகின்ற‌ன‌ர். இர‌ண்டாவ‌து தெரிவு, பாராளும‌ன்ற‌த்தைக் க‌லைத்து இன்னொரு தேர்தலை ந‌ட‌த்துவ‌து. மூன்றாவ‌து தெரிவு, லிப‌ர‌ல்‍-என்டிபி கூட்ட‌ணிக்க‌ட்சிக‌ளை ஆட்சிய‌மைக்க‌க் கேட்ப‌து.

ப்ளொக் கியூபெக்கா க‌ட்சியின‌ரை பிரிவினைவாதிக‌ள் என்று மோச‌மாக‌த் திட்டும்..., புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌ விதிகளை இறுக்கும்..., ஆப்கானிஸ்தானிலுள்ள‌ க‌னேடிய‌ இராணுவ‌த்தை திருப்பிய‌ழைக்க‌ விரும்பாத‌..., ச‌ம‌ர்பிக்கும் ப‌ட்ஜெட்டில் சுற்றுச்சூழ‌ல் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாத‌, கொன்ச‌ர்வேட்டிவ் க‌விழ்த்து ஒரு கூட்டணி அர‌சு வ‌ருவ‌தே ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை ப‌ய‌க்கும். மேலும் இட‌துசாரித்த‌ன்மையுள்ள‌ என்டியிபியின‌ர் ஆட்சியில் ப‌ங்குபெறும்போது ம‌த்திய‌/கீழ்த்த‌ர‌ ம‌க்க‌ளிற்கும், சிறுபான்மையின‌ருக்கும், புதிய‌ குடிவ‌ர‌வாள‌ருக்கும் ஏதாவ‌து சில‌ ந‌ன்மைக‌ளாவ‌து நிக‌ழும் சாத்திய‌முமுண்டு.

ம் நினைப்ப‌தெல்லாம் ந‌ட‌ந்துவிட்டால்...?


குறிப்பு 1 : கியூபெக‌ த‌னிநாடாக‌ பிரிய‌வேண்டும் என்ற‌ ப்ளொக் கியூபெக்கா உள்ளிட்ட‌ க‌ட்சிக‌ள் முக்கிய‌ கோரிக்கையாக‌ வைத்திருந்தாலும், 1967ல் ரூடோ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராகிப் பிர‌த‌ம‌ரான‌திலிருந்து இற்றைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சியிலிருந்து பிர‌த‌ம‌ர் ஆன‌வ‌ர்க‌ள் எல்லோரும் கியூபெக‌ மாநில‌த்திலிருந்தே வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌து க‌வ‌ன‌திற்குரிய‌து. இன்றைய‌ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரும் கியூபெக‌ மாகாண‌த்தைச் சேர்ந்த‌வ‌ரே.

குறிப்பு 2: க‌ட‌ந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளில் என்டிபி க‌ட்சியின‌ர், 19, 29, 37 ஆச‌ன‌ங்க‌ளென‌ வ‌ள‌ர்ச்சிபெற்று வ‌ருவ‌து -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- என‌க்கு உவ‌ப்பான‌ விட‌ய‌ம்.

ந‌ன்றி: விக்கிபீடியா (தேர்த‌லின் க‌ட்சிக‌ள் பெற்ற‌ ஆச‌ன‌ங்க‌ளின் விப‌ர‌ங்க‌ளுக்கு)

ப‌ட‌ம் 1: க‌ன‌டா அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சி விவாத‌த்தின்போது
பட‌ம் 2: க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌ம்

8 comments:

வி. ஜெ. சந்திரன் said...

ஹப்பரின் பொய்களையும், புரட்டுக்களையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது

12/04/2008 03:03:00 PM
அற்புதன் said...

டிசே கட்டுரைக்கு நன்றி.
என்டிபிக்கும் லிபரலுக்கும் என்ன வேறு பாடு?
என்டிபி இடதுசாரிகளா?

//புலி X புலி எதிர்ப்பு அர‌சிய‌லுக்கு அப்பால் ந‌க‌ர‌முடியாத‌ புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌ம் மிக‌வும் க‌வ‌லைக்குரித்தான‌து.//

நானும் கிட்டத்தட்ட இத மாதிரி ஒண்டை சத்தியக் கடதாசியில் எழுதிட்டு வர ...

12/04/2008 03:11:00 PM
Anonymous said...

//டிசே கட்டுரைக்கு நன்றி.
என்டிபிக்கும் லிபரலுக்கும் என்ன வேறு பாடு?
என்டிபி இடதுசாரிகளா?//

NDP அதி தீவிர இடது சாரி கட்சி.. Liberal கிட்டத்தட்ட இரண்டுக்கும் நடுவிலே.. வரும் தலைவரது கொள்கையை பொறுத்து மாறுவது.. இரண்டு பக்கமும் தீவிரமாக சாயாத கட்சி.

12/04/2008 05:06:00 PM
இளங்கோ-டிசே said...

ச‌ந்திர‌ன்: இப்ப‌திவை எழுதி முடித்த‌போது, பாராளும‌ன்ற‌ம் ஒத்திவைக்க‌ப்ப‌ட்ட‌தை அறிந்தேன். இனி ஜ‌ன‌வ‌ரி 26ல் பாராளும‌ன்ற‌ம் கூட‌ப்போகின்ற‌து. என்டிபி, ப்ளொக் கியூபெக்குவா போன்ற‌வை கொன்ச‌ர்வேடிவ்வை ஆட்சியிலிருந்து அக‌ற்றுதென‌‍ -அது சில‌ வார‌ங்க‌ள் ஆனால்கூட‌ ப‌ர‌வாயில்லையென‌- உறுதியாயிருக்கின்ற‌ன‌. லிப‌ர‌ல் சில‌வேளைக‌ளில் பின் வாங்க‌லாம்; இன்னொரு த‌லைவ‌ரை இன்னும் சில‌ மாத‌ங்க‌ளுக்குள் த‌ங்க‌ளுக்குத் தேர்ந்தெடுக்கின்ற‌ வேலையும் அவ‌ர்க‌ளுக்கு இருக்கிற‌த‌ல்ல‌வா?

அற்புத‌ன்: என்டிபி இட‌துசாரித்த‌ன்மையுடைய‌ க‌ட்சியென்றாலும் வெளிப்ப‌டையாக‌ தாங்க‌ள் மார்க்ஸைப் பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளாக‌க் காட்டிக்கொள்வ‌தில்லை. என்டிபி, இங்கிருக்கும் தொழிற்ச‌ங்க‌ங்க‌ள், மாண‌வ‌ர்க‌ளிடையே செல்வாக்குள்ள‌ ஒரு க‌ட்சி. அவ‌ர்க‌ள் தேர்த‌லில், மாண‌வ‌ர்க‌ள், புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் போன்ற‌வ‌ர்க‌ளை வேட்பாள‌ர்க‌ளாய் அதிக‌ம் க‌ள‌த்தில‌ற‌க்குப‌வ‌ர்க‌ள். இல‌ங்கையில் ந‌ட‌க்கும் இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றிக்கூட‌ -த‌ங்க‌ள் இலாப‌ம் சார்ந்து யோசிக்காது- தொட‌ர்ந்து ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டையில் பேசிக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.

ந‌ல்லவ‌ன்: லிப‌ர‌லோ அல்ல‌து கொன்ச‌ர்வேடிவோ பெரும்பான்மை அர‌சு அமைப்ப‌து இன்றைய‌ நெருக்க‌டிகால‌த்தில் ம‌க்க‌ளுக்கு அதிக‌ம் ந‌ன்மை ப‌ய‌க்காது என்றே ந‌ம்புகின்றேன். கூட்ட‌ணிய‌ர‌சுக‌ள் என்ப‌து ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை எழுந்த‌மான‌மாய் எடுப்ப‌தைத் த‌விர்க்க‌ச் செய்யும் என்றே நினைக்கின்றேன்.. முக்கிய‌மாய் ரொர‌ண்டோ போன்ற‌ பெரும்ந‌க‌ர‌ங்க‌ளில் அண்மைய‌ வ‌ருட‌ங்க‌ளாய் poverty வீத‌ம் சாதார‌ண‌ ம‌க்க‌ளிடையே அதிக‌ரித்து வ‌றுமைக்கோட்டிற்குக் கீழே 40% குழந்தைக‌ள் வாழ்கின்ற‌ன‌ என்று அறிக்கைக‌ள்கூறுகின்ற‌ன‌. இவ்வாறான‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் என்டிபி அர‌சில் ப‌ங்குப‌ற்றுவ‌து ந‌ன்மை ப‌ய‌க்க‌வே செய்யும். ஒன்ராறியோ மாகாண‌த்தில் அடிப்ப‌டைச் ச‌ம்ப‌ள‌மாய் ம‌ணித்தியால‌த்திற்கு $6.85லிருந்து $8.75 (2008)ஆக‌வும், 2010ற்குள் 10.00 டொல‌ராக‌வும் ஆக்க‌வேண்டுமென்ப‌தில் உறுதியாய் நின்ற‌தில் என்டிபியின் ப‌ங்க‌ளிப்பு குறிப்பிட‌வேண்டிய‌தொன்று

12/05/2008 09:38:00 AM
Anonymous said...

mah!!

--fd

12/05/2008 01:36:00 PM
Anonymous said...

fd: ...as usual :-)

12/05/2008 03:31:00 PM
Anonymous said...

நிச்சயமாக DJ. NDP யினது ஆட்சியையே நானும் விரும்புகிறேன். Haper இனது மக்களை முட்டாளாக்கும் undemocratic உரையினை அடுத்து நான் வெறுக்கும் அரசியல்வாதியில் அவரும் ஒருவர். ஏற்கனவே அவர் 2004ல் bloc quebecois உடன் பின்கதவால பேச்சுவார்த்தை நடத்தியவர்.

12/05/2008 04:33:00 PM
இளங்கோ-டிசே said...

ந‌ல்ல‌வ‌ன்
லிப‌ர‌ல் க‌ட்சித்த‌லைவ‌ர் Stéphane Dion ஐ விரைவாக‌ அக‌ற்றி, ஒரு புதிய‌ த‌லைவ‌ரை -பாராளும‌ன்ற‌ம் ஜ‌ன‌வ‌ரி 26ல் கூடுவ‌த‌ற்கு முன்ன‌ர்- தேர்ந்தெடுக்க‌ வேண்டிய‌ நெருக்க‌டி லிப‌ர‌லுக்கு. எனெனில் இன்னொரு தேர்த‌ல் விரைவில் ந‌ட‌க்க‌ப்போவ‌து போல‌த்தான் தோன்றுகின்ற‌து. சென்ற‌ கிழ‌மை Dominic LeBlanc இன்று Bob Rae என்று லிப‌ர‌ல் த‌லைமைககாய்ப் போட்டியிட்ட‌வ‌ர்க‌ள் வில‌கிக்கொள்ள‌ Michael Ignatieff போட்டியின்றித் த‌லைவ‌ராக‌த் தேர்ந்தெடுக்க‌ப்போவ‌து உறுதியாகின்ற‌து. ஆக‌ இனிவ‌ரும் ஜ‌ந்துவ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு நிர‌ந்த‌ர‌மான‌ த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுக்கின்ற‌ லிப‌ர‌ல் இனி என்டிபியோடு கூட்ட‌ணி அர‌ச‌மைக்க‌த் த‌யாராக‌ இருக்கின்ற‌தா அல்ல‌து தேர்த‌லை ந‌ட‌த்த‌வைத்து த‌னித்து போட்டியிட‌ப்போகின்ற‌தா என்ப‌துதான் இப்போதுள்ள‌ முக்கிய‌ கேள்வி. க‌னடா அர‌சிய‌ல் இன்னும் சூடுபிடிக்கின்ற‌து என‌த்தான் சொல்ல‌வேண்டும் :-).

12/09/2008 01:57:00 PM