ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற வீணான விவாதங்களில் என்னை மூழ்கவைக்கும்போது, நூல்களைத்தேடிப் போய்விடுவேன். அவ்வாறு மீண்டும் வாசிக்கத் தொடங்கியது ராஜ் கெளதமன் எழுதிய 'தலித்திய அரசியல்'. இது ஒரு சிறு நூல். ராஜ் கெளதமன் சாதி ஒழிப்பிற்காய் அங்கே முன்வைக்கும் புள்ளிகள்தான் முக்கியமானது. அதிலும் அம்பேத்கார் X பெரியார் X அயோத்திதாச பண்டிதர் போன்றோரை எதிரெதிர் முனைகளில் வைத்து உரையாடாமல் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அதேவேளை அவர்கள் தவறவிட்டிருக்கக்கூடிய புள்ளிகளையும் அதில் அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார்.
மேலும் இந்த நூலில் ஏன் சாதி ஒழிப்பு இற்றைவரை முற்றுமுழுதாக சாத்தியப்படாததற்கான பல கோணங்களைச் சுட்டிக்காட்டி, வாசிப்பவர்களை அடுத்த நிலையில் என்ன செய்யமுடியும் என்று ஒரு திறந்த உரையாடலுக்கான அழைப்பதாலும் இந்த நூல் எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருந்தது.
முக்கியமாய் பெரியார் 'எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் தலித்துக்களுக்காகவோ, பெண்களுக்காகவோ தலைமையேற்றுப் போராடியதாகக் கூறவில்லை; இந்துச் சாதியின் இழிவு, தீண்டாமை, இந்துமதம் ஆகியவற்றை அழிக்கும் போராட்டத்தால் தலித்துகளும் பெண்களும் பயனடைந்தால் அதை வரவேற்பதாகவே சொன்னார். பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதுவதாக ஆண் கூறுவது, எலிகளுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதாகப் பூனை சொல்லுவதற்கு ஒப்பானது என்று பெரியார் சொன்னதிலிருந்து தலித் விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் தமது செயல்பாட்டுக்கும் இடையிலிருந்த சங்கடத்தை அல்லது தர்மசங்கடத்தைப் பெரியார் ஒப்புக்கொண்டமை புரியும். தமது வர்க்க, வருண,சாதி, பால் வரையறையை அவர் மறந்ததில்லை, மறைத்ததுமில்லை (ப.45)' என்று சொல்வது முக்கியமானது. ஆனால் நமது சூழலில் எவ்வாறு ஒவ்வொருவரும் தமக்குத் தெரியாத/அறிந்திராத விடயங்களில் கருத்துக்கூறுவதும், தம்மைப் புனிதர்களாக மாற்றி இவ்வாறான குழுக்களுக்கு அறிவுரை கூறுவதையும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கலாம்.
இதற்கு இன்னொரு உதாரணமாய் இன்னொரு நூலை/உரையாடலை சொல்லலாம். அது அயோத்திதாசருக்கும் சிங்காரவேலருக்கும் 'தமிழன்' இதழில் நடந்த உரையாடலாகும். இதை 'அயோத்திதாசரும் சிங்காரவேலரும், நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்; வெளிவராத விவாதங்கள்' என்று ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த நூலில் காணலாம் ('கயல்கவின்' வெளியீடு). 1899 இல் தமிழ்ச்சூழலில் மீண்டும் பெளத்தம் நுழையத்தொடங்குகின்றது. 'கர்னல்' ஆல்காட், அநகாரிக தர்மபாலா தலைமையில் இது ஏற்படுகின்றது. அயோத்திதாசர் சாக்கைய புத்தசங்கத்தையும், சிங்காரவேலர் மகாபோதி புத்தசங்கத்தையும் இருவேறு சங்கங்களாக நடத்துகின்றனர்.
இந்த இரண்டு சங்கங்களின் இடையிலான வேறுபாட்டுக்கு அயோத்திதாசர் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே மகாபோதி தங்களை உயர்ந்தவராகக் காட்டிக்கொண்டு 'காட்டுமிராண்டிகளாக' இருக்கும் தலித்துக்களை நல்ல மனிதர்களாக மாற்றபோகின்றோம் என்ற கருத்துக்களோடு இருப்பதெனச் சுட்டிக்காட்டுகின்றார். சிங்காரவேலர் மகாபோதி சங்கத்தில் இருக்கும் ஒரு சிலரின் இந்தத் தவறான கருத்துக்களை முன்வைத்து இப்படி கருதிக்கொள்ளல் தவறு, நாமெல்லோரும் ஒருகாலகட்டத்தில் ஒன்றாக இயங்கி பெற்றும்/கொடுத்தும் கொண்டவர்களெனச் சுட்டிக்காட்டி அந்த உரையாடல் நீள்கின்றது.
இந்த உரையாடலில் இருந்து இரண்டு விடயங்களை உடனேயே எடுத்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது. சாக்கைய சங்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தலித்துக்களாகிய 'எங்களுக்கு கற்றுத்தர விரும்பும், உங்கள் உயர்ந்த மனோநிலையை விட்டு முதலில் வாருங்கள்' எனத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றது. மற்றது அயோத்திதாசரும் சிங்காரவேலரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட வசையாகத் திட்டாமல், மிக நிதானமாக உரையாடிக் கொண்டிருப்பதையும், சிங்காரவேலரின் கருத்தை மறுத்தாலும் பண்டிதர் தனது 'தமிழன்' இதழிலேயே இந்த உரையாடலை நிகழ்த்தக் களம் கொடுத்திருக்கின்றார் என்பதுமாகும். விவாதங்கள் எப்படி மோசமாகப் போகும் என்பதற்கு ஆறுமுகநாவலர் வள்ளலாருடன் செய்த அருட்பா X மருட்பா விவாதம் நல்லதொரு உதாரணமாகும்.
இதே காலகட்டத்திற்கு அண்மையாகத்தான் இந்த 'உயர்நிலையாக்கம்' செய்யும் முயற்சியில் பாரதியார் தலித் பிள்ளைக்கு பூணூல் அணிந்து பார்த்ததையும் நினைவுகொள்ளலாம். அன்று அயோத்திதாசரை பாரதியார் ஊன்றி வாசித்திருந்தால் அல்லது தலித் மக்களின் மனோவுணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் பாரதியார் இந்த விடயத்தை வேறுவிதமாக அணுகியிருக்கக்கூடும்.
எல்லா அறிவார்ந்த மனிதர்களும் சில விடயங்களில் மேலோங்கி இருப்பதைப்போல வேறு சில விடயங்களில் தவறுகளை/சரிவுகளைக் காணவும் கூடும். அதற்குத் தப்பாதவர் எவருமில்லை என்றே சொல்லலாம். காந்தி ஒரு மகாத்மாக்கப்பட்டவர் ஆயினும், அவர் தென்னாபிரிக்காவில் இருந்தபோது கறுப்பினமக்கள் மீது ஒரு இனவாதியாக கருத்துச் சொன்னவர் உட்பட, அம்பேத்கார் முன்வைத்த பூனா இரட்டைவாரி வாக்குரிமைத் திட்டத்தை நிராகரித்தவரை பல சரிவுகள் 'மகாத்மா' காந்திக்கும் இருக்கின்றது. இதன் மூலம் காந்தி முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவரல்ல என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே காந்தியின் இந்தத் தவறுகளும் நேர்மையாகச் சுட்டிக்காட்டப்படுவதும் அவசியமானது.
அவ்வாறே அயோத்திதாச பண்டிதரின் முக்கியத்துவத்தை விதந்துரைக்கப்படும்போது அவர் அருந்ததிய மக்கள் மீது கூறிய கருத்துக்களும் விமர்சிக்கப்படவேண்டியவையேதான். இவ்வாறான எதிர்மறை விடயங்கள் சுட்டிக்காட்டப்படும்போதே அவர்கள் இன்னும் மனிதத்தன்மையாகின்றார்கள். இதன்மூலமே அவர்களைத் திருவுருவாக்காமல் அவர்களை வழிபடுபவர்களிடமிருந்து காப்பாற்றி அடுத்த காலகட்டத்துக்கும் நாம் அவர்களை எடுத்துச் செல்லமுடியும்.
......................................
(Jun 12, 2020)
0 comments:
Post a Comment