கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றை வாசித்தல் - 02

Wednesday, August 26, 2020

லித்திய அரசியலை வாசித்துவிட்டு அடுத்து வாசிக்கத் தொடங்கியது ரெஜி டெப்ரேவின் 'சே குவேராவின் கொரில்லா யுத்தம்'. இது சேயின் இறுதிக்காலங்களில் பொலிவியாவில் அவரோடிருந்த ரெஜி டெப்ரோ எழுதிய நூலாகும். இதற்கு முன்னர்தான் சே (ரெஜியினது பங்களிப்பும் உண்டு) எழுதிய 'கெரில்லா யுத்தம்' என்ற நூல் வெளிவந்திருந்தது. அது பல கெரில்லா அமைப்புக்களுக்கான கையேடாகவும் இருந்திருக்கின்றது/இருக்கின்றது.  ஆனால் 'சேகுவாராவின் கெரில்லா யுத்தம்' என்கின்ற நூல் சேயினது கெரில்லா நடவடிக்கைகளை ஆய்வுபூர்வமாக அவரின் வீழ்ச்சிவரை அணுகிப்பார்க்கின்றது. 


ஒரு கெரில்லா யுத்தம் நூல்களின் வழியல்ல, அதன் புறக்காரணிகள்/அன்றைய நிலவரம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியிருந்தென்பதைத் தெளிவாக இந்த நூலில் பார்க்க முடிகிறது. ஏன் சேயினது பல்வேறு குழுக்கள் பொலிவியாவில் பிடிபடப் பிடிபட சே இறுதிவரை ஒரு புரட்சி பொலிவியா/பெருவில் நடந்துவிடும் என்பது எப்படி நம்பினார் என்பது நமக்கு வியப்பாக இருக்கும். சிலவேளைகளில் மெக்ஸிக்கோவில் இருந்து கியூபாவில் 80இற்கு மேற்பட்டோரின் தரையிறக்கம் நிகழ்ந்தபோது பெரும்பாலானோர் கொல்லப்பட மிஞ்சிய 12 பேரோடு கியூபப் புரட்சி சாத்தியமானது போல பொலிவியா/பெருவிலும் ஒரு புரட்சி சாத்தியமென சே நினைத்தோரோ தெரியவில்லை. 

இன்று கடந்தகால வரலாற்றை நின்று பார்க்கும்போது இப்படி இருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் என்று 'லாம்'களில் நாம் பேசமுடியுமே தவிர நடந்தவை எல்லாமே வரலாறுதான். அவற்றை நாம் மாற்றமுடியாது. ஒருவகையில் சேயைப் பார்த்தால் தோல்வியுற்ற புரட்சியாளன் என்ற விம்பங்கூட நமக்கு வரலாம். கியூபாப் புரட்சியைத் தவிர, கொங்கோ, பொலிவியா/பெருவில் மட்டுமல்ல, இடையில் ஆர்ஜெண்டீனாவில் சே முன்னின்று கட்டிய கெரில்லா இயக்கம் கூட முற்றுமுழுதாக அவர் காலத்திலேயே  துடைத்தெறிய‌ப்பட்டிருக்கின்றது. 


சிலவேளைகளில் காஸ்ரோ, ராவுல், கமீலிலோ போன்றோரே சிறந்த போராளித்தளபதிகள், சே அல்ல என்று முடிவுக்குக் கூட வரலாம். சேயை ஒரு அந்நியராக விலத்தி வைக்காது, தமக்குள் உள்வாங்கிக்கொண்டவர் காஸ்ரோ . ஆனால் பிறநாடுகளில் புரட்சியை நிகழ்த்தப் போன சேயை, கியூபாவைப் போல எவராலும் அரவணைத்துக் கொள்ள முடியவில்லை. பொலிவியாவில் சேயுக்கு, அங்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பெருவிய இடதுசாரிகளோடு முரண் வருவதுதான், சேயின் மரணத்துக்கான முக்கிய காரணமாகக் கூடச் சொல்லப்பட்டிருக்கின்றது. 


அந்நியரைக் குறைத்து உள்நாட்டவர்களைக் அதிகம் சேர்த்தல் என்ற கொள்கையின்படி, பெருவிலிருந்து போராடவந்தவர்களைக் கூட சே  பொலிவியாவில் தவிர்க்கின்றார். ஆனால் பொலிவியா இடதுசாரிகள் சேயுடன் இணையாது பின்வாங்க அவரது நிலைமை இன்னும் மோசமாகின்றது.  இதே விலத்தல், கியூபப் புரட்சியின்போது சே தலைமையேற்கின்ற ஒருவராக மெக்ஸிக்கோவில் மாறும்போது தொடக்கத்தில் நிகழ்கின்றது. அந்நியர் ஒருவர் எப்படி நமக்குத் தலைமை தாங்குவது என்ற சிக்கல் அவர்களுக்கிடையில் வருகின்றது. அதை ஃபிடல்  எவ்வாறு இலாவகமாய் கையாண்டார் என்பதை சே புரிந்துவைத்திருந்தார் என்ற விடயத்தையும் ரெஜி இந்த நூலில் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 


ஆனால் இவ்வாறு கியூபாப் புரட்சி தவிர, மிகுதி எல்லாவற்றிலும் தோற்ற ஒருவர் எப்படி கெரில்லாக்களுக்கும்/ புரட்சிகளுக்கும் முன்னுதாரணமாய் ஆனார் என்பதுதான் நாம் கேட்கவேண்டிய கேள்வியாகும். சே தான் நம்பியவற்றில் தெளிவாக இருந்தார். அதையே தன் கடைசிக்காலம்வரை பின் தொடர்ந்தவர். அதில் எந்த சமரசங்களுக்கும் இடங்கொடுக்கவில்லை. இயேசுவுக்கு ஒரு 'மீள்பிறப்பு' போல சே இறந்தபின்னும் இன்னுமின்னும் மீள்பிறப்புக்களைத் தனது தோல்வியினூடாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். 


அதனால்தான் எங்கோ தொலைவிலிருந்த இலங்கையில் கூட நிகழ்ந்த புரட்சியை 'சேகுவேராப் புரட்சி' என்று பெயரிட்டு எழுபதுகளில் அழைத்திருக்கின்றார்கள். ஃபிடல் காஸ்ரோவுக்கு வரலாறு இரண்டாவது சந்தர்ப்பதை வழங்கியபோது அதைப் புரட்சியாக நிகழ்த்திக் காட்டி தன்னை காலத்தின் முன்னே அடையாளப்படுத்தினார். ஆனால் இலங்கையில் ரோகண விஜயவீராவுக்கு அதே இரண்டாவது சந்தர்ப்பத்தைக் காலம் வழங்கியபோது, அது மோசமாக நிகழ்ந்து, முடிவில் சுட்டுக் கொல்லப்படவும் செய்யப்பட்டிருந்தார். 


இப்போது ஏன் சேயை இங்கே நினைவுபடுத்துகின்றேன் என்றால், சே ஒரு இடதுசாரியாக இருந்தாலும், அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சார்ந்தும் உரையாடலை நிகழ்த்த வேண்டியிருந்தது.  புரட்சி என்கின்ற கனவைக் கைவிடாது அதை அவர் நியாயமாக எதிர்நோக்கியுமிருந்தார். ஆக சேயை அவரின் காலத்தில் வைத்தே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அவரின் சரிவுகளிலிருந்தும் சே என்ற ஆளுமை விகாசித்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அறிகின்றோம். 


எங்கள் ஈழத்திலும் பல்வேறு இயக்கங்கள்/புரட்சிகள்/கெரில்லாப் போர்முறைகள் என்ற பலது நிகழ்ந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல ஒரு கொதிநிலையிலேயே இலங்கை எதையும் கற்றுக்கொள்ளாது இப்போதும் இருக்கின்றது. ஆனால் அதைவிட இந்த 'வரலாற்றை மறுவாசிப்பவர்களின்' தொல்லையோ இன்னுந் தாங்க முடியாதிருக்கின்றது. இன்றைய காலகட்டத்தை வைத்து இவர்கள்  கடந்தகாலத்தை  'மறுவாசிப்பு' செய்யும்போது நமக்குத் தலைசுற்றுகின்றது. நல்லவேளையாக வாசிப்பு' என்றொரு ஆசான் இருக்கின்றார் என்பதால் புத்தகங்களுக்குள் அடைக்கலம் புகுந்து நம்மால் தப்பிக்கமுடிகிறது.

................................

(Jun 12, 2020)

0 comments: