கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

La Red Avispa ( Wasp Network)

Wednesday, August 12, 2020

 கியூபாப் புரட்சியின் பின் ஃபிடல் காஸ்ரோவை அமெரிக்கா கொலை செய்த முயற்சிகள் நூற்றுக்கணக்கானவை. அதேவேளை அமெரிக்க வேறுவழிகளில் கியூபாவுக்குள் நுழைய முயன்றும் கொண்டிருந்தது. Wasp Network  அமெரிக்காவும் கியூபாவும் 90களில் தங்களுக்குள் செய்த 'திருவிளையாடல்'களின் ஒருமுகத்தைக் காட்டுகின்றது. 


சோவியத்து ஒன்றியத்தின் உடைவின்பின் கியூபாவின் பொருளாதாரம்  சரிந்துகொண்டிருந்தபோது,முற்று முழுதாகச் சுற்றுலாத் துறையில் கியூபா தங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அமெரிக்க அதன் சுற்றுலாத் துறையில் கை வைக்கத் தொடங்கியது. ஒருபக்கம் அமெரிக்காவிலிருந்த கியூபன்களை ஆட்சியைக் கவிழ்க்க உசிப்பேற்றியதுபோல, கியூபாவிலிருக்கும் ஹொட்டலுக்கும் குண்டுகளை வைக்க அவர்களைக் கொண்டு முயற்சிக்கின்றது.  1997இல் கியூபாவின் ஹொட்டல் ஒன்றில் இப்படிக் குண்டு வெடித்தும் இருக்கிறது. இவ்வாறு அமெரிக்க கியூபாவுக்குள் உள்நுழைய முயற்சித்தபோது, கியூபாவும் அமெரிக்காவிற்குள் ஊடுருவி உளவுபார்க்கத் தொடங்கியது.


இந்தப் படம் அவ்வாறு கியூபா, அமெரிக்காவுக்குள் நுழையவிட்ட உளவாளிகளின் கதையை முக்கியப்படுத்துகின்றது. அவர்களின் மூலமே கியூபாவில் நடக்க இருந்த பல்வேறு  தாக்குதல் முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. அதேசமயம் ஒருமுறை கியூபா, FBIயை தங்கள் நாட்டுக்குள் அழைத்து இவ்வாறான விடயங்கள் அமெரிக்க மண்ணில் தமக்கெதிராக நடந்துகொண்டிருக்கின்றன என விபரமாய் தகவல்/சாட்சியங்களோடு முன்வைக்கின்றது. FBI சும்மாவிடுமா?  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த கியூப உளவாளிகளை வேட்டையாடத் தொடங்குகின்றது. இறுதியில் பலர் பிடிபடுகின்றனர். பிடிபட்டவர்கள் கியூபாவிற்கு விசுவாசமாக இருந்து, கொடுக்கப்பட்ட 15 வருடங்களுக்கு மேலான தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.


90களில் இவ்வாறு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். 1998இல் 'Cuban/Miami Five' என்ற வழக்கு பிரபல்யமான ஒன்று. முதலில் கியூபா இதை மறுத்தாலும்  தாங்கள் அமெரிக்காவையோ அல்லது FBIயையோ உளவு பார்க்க இவர்களை அனுப்பவில்லை, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கியூப குழுக்களை உளவுபார்க்கத்தான் அனுப்பினோம் என கியூபா பின்னர் 2001 இல் அதை ஒப்புக்கொண்டது. இத்திரைப்படத்தில் காஸ்ரோவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட ஒரு சிறு காணொளியும் இணைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா கியூபா உள்ளிட்ட எத்தனையோ நாடுகளில் உளவுபார்க்க ஆட்களை அனுப்பும்போது நாங்கள் செய்வதும் நியாயமென உணர்ச்சிபூர்வமாக காஸ்ரோ அதில் பேசியிருப்பார். 


நிறையச் சம்பவங்களை சொல்லவேண்டும் என்ற எத்தனிப்பில் இந்தத் திரைப்படம், சிறந்த நடிகர்களை கொண்டிருந்தாலும் நம் உணர்வுகளுக்கு அவ்வளவு நெருக்கமாய் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எனினும் உளவாளிகளுக்கும் ஒரு வாழ்க்கையிருக்கும், உளவின் நிமித்தம் எத்தனையோ விடயங்களை இழக்கவேண்டியிருக்கும் என்பதற்காக இதைப் பார்க்கலாம்.


கியூபாவிலிருந்து  கிளைடரை எடுத்துக்கொண்டு ஒருவர் அமெரிக்காவுக்குப் பறந்துவிடும் ஒரு காட்சி இதில் வரும். அவர் கியூப உளவாளியாகத்தான் அங்கு அனுப்பப்படுகின்றார் என்றாலும் அவரின் மனைவி, பிள்ளைக்குக் கூட இந்தச் செய்தி தெரியாது வைக்கப்பட்டிருக்கும். இதன் நிமித்தம் அவரின் மனைவி/பிள்ளை 'துரோகி'யாக கியூப மக்களால் வெறுக்கப்படுவார்கள். பிறகு அந்தக் குடும்பம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு உளவாளியோடு வாழத்தொடங்கினாலும், கொஞ்சக் காலத்தில் அந்த ஆணை  FBI பிடித்துவிட திரும்பவும் இந்தக் குடும்பம் அநாதரவாகத் தனித்துவிடப்படும். இவ்வாறாக உளவாளிகளுக்கு அப்பாலும் பலரின் வாழ்க்கை உளவின் நிமித்தம் பாதிக்கப்படுகின்றது என்பதை இந்தத் திரைப்படம் காட்டுவது முக்கியமானது. 


அதிலும் இப்படி உளவாளியாக வரும் இன்னொருவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் திருமணம் கூடச் செய்துவிடுவார். அவர் கியூபாவுக்கு தன் வேலை முடிந்துபோனதன் பிறகே இந்தப் பெண்ணுக்கு அவர் ஒரு உளவாளி என்பதே தெரியவரும். இப்படி ஒரு சம்பவம் நடந்து அந்தப் பெண் கியூபநாட்டுக்கு எதிராக வழக்குக் கூடப் போட்டிருக்கின்றார். இதன் நிமித்தம், தீர்ப்பில் கொடுக்கவேண்டும் எனச் சொல்லப்பட்ட மில்லியன் நஷ்டஈட்டின் ஒரு பகுதியை அந்தப் பெண்ணுக்கு கியூபா  வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

....................

(Jun 22, 2020)

0 comments: