கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'காலம்' - இதழ் - 54

Tuesday, August 25, 2020

இந்தக் 'காலம்' இதழ் தெளிவத்தை ஜோசப்பினதும், எஸ்.வி.ராஜதுரையினதும் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இதில் தெளிவத்தை ஜோசப் பற்றி மல்லியப்புசந்தி திலகர் எழுதிய கட்டுரையும், எஸ்.வி.ஆர் குறித்து வ.கீதா எழுதிய கட்டுரையும் மிக நேர்த்தியானவை. இலக்கியத்தில் ஆளுமைகள் குறித்து அறிய, இவ்வாறான சிறுசஞ்சிகை களையே தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது. பக்க நெருக்கடி இல்லாது, விரிவும் ஆழமாக சொல்ல விரும்பியதுக்கெல்லாம் இடம் கொடுப்பவை இவ்வாறான சஞ்சிகைகளே. அதுவும் இணையம் போன்றவை பரவலாக இல்லாத காலத்தில், வெகுசன சஞ்சிகைகளில் ஒதுக்கப்பட்டு அல்லது கவனிக்கவேபடாத படைப்பாளிகளை இவ்வாறான சிறுசஞ்சிகைகளே நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.


புலம்பெயர் சூழலில் 30 வருடங்களாக, விரும்பியபோதுதான் முகிழ்வேன் என்பதற்கிணங்க காலம் வந்துகொண்டிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வெனச் சொல்லவேண்டும். இந்த 30 வருடங்களில் 54 இதழ்கள்தான் வந்திருக்கின்றன என்றால், வருடத்துக்கு 2 இதழ்கள் கூட வரவில்லை என்றுதான் கணக்கிடவேண்டும். ஆனால் அந்த இடைவெளி என்னைப் போன்ற வாசகர்களுக்கு உறுத்துவதில்லை. எப்போதும் ஒரு சஞ்சிகையை/இதழை சேமித்து வைப்பதற்கு எனக்கு அதில் ஒன்றிரண்டு விடயங்களாவது புதிதாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடமைக்கு என்று வருவதில் என்ன சிறப்பு இவற்றில் இருக்கப்போகின்றது. 


இதில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற ஷக்திக குமாரவின் சிங்களக் கதை (தமிழில் ரிஷான் ஷெரிப்) வெளிவந்திருக்கின்றது. இந்தக் கதையில் புத்தபிக்குகளின் பாலியல் வரட்சியைச் சொன்னதாலேயே ஷக்திக குமாரவை அரசு  இலங்கைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் நிகழ்ந்தது. போர் முடிந்தபின்னும் இன்னும் சுதந்திரமாக எதையும் எழுதும் நிலை, சிங்களர்வர்க்குக் கூட இல்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் நிரூபணமாகிறது. இந்தச் சிறுகதையை ஒரு முக்கிய படைப்பாகக் கூடச் சொல்லமுடியாது. ஆனால் சில பக்கங்களில் நீளும் இந்தக் கதையைக் கூடச் சகிக்க முடியாதுதான் இலங்கையில் மதம் சார்ந்த சகிப்புத்தன்மை இருக்கின்றது என்பதுதான் கவலைக்கிடமானது.


இந்த இதழில் வந்த கதைகளில் இமையத்தின் 'விஷப்பூச்சி' என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் இமையம் 'செல்லாத பணம்' நாவல், 'பெத்தவன்' குறுநாவல் உள்ளிட இன்னும் வேறு சில கதைகளிலும் இந்த ஒரே சம்பவத்தை ஏன் பல்வேறு வழிகளில் எழுதிப் பார்க்கின்றார் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றேன். சிலருக்கு சிலதைக் கடந்துபோக முடியாததுபோல, வீட்டைவிட்டு ஓடிப்போகும் பெண்கள் இமையத்துக்கு கதைகளுக்கான விதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் போலும்.


கனடிய எழுத்தாளரான மார்க்கிரட் அட்வூட்டின் புதிய நாவலான 'The testaments' பற்றிய சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் வாசிப்பும் சுவாரசியமானது. இதற்கு முன்னர் அட்வூட் எழுதிய 'The Handmaid's Tale' இன் பின்னணியில் வைத்து ஒரு மதிப்புரையை இதற்கு எழுதியிருப்பது சிறப்பானது.  'The Handmaid's Tale' இங்கே மிகுந்த கவனம் பெற்று தொலைக்காட்சித் தொடராகவும் வந்து பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றது. அதேபோன்று மகாலிங்கம், மு.தளையசிங்கத்தோடான நினைவுகளைப் பகிர்ந்த ஒரு சிறு கட்டுரையையும் முக்கியமானது. மு.த எப்படி அன்றையகாலத்தில் ஆங்கிலப் புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றார் என்பதும், எவ்வாறு ஒவ்வொரு நூல்களிலும் தனது அடிக்குறிப்புக்களை எழுதுவார் என்பதும், இறுதியின் அவரது வீடு புங்குடுதீவில் கைவிடப்பட்டு அவரின் சேகரிப்பிலிருந்து புத்தகங்கள் சிதைந்ததோடு, அவரின் வீட்டில் குசினி மட்டும் மிச்சமாயிருக்க மிகுதி அனைத்தும் அழிந்து இருப்பதை நீண்டகாலங்களுக்குப் பிறகு அங்கே போய்ப் பார்க்கும் மகாலிங்கம் நமக்குக் குறிப்புகளாய்த் தருகின்றார். மு.தவின் எழுத்துக்களை வாசிக்கும் நமக்கு அன்று எப்படி மு.த இப்படியெல்லாம் விரிவாகப் புத்தகங்களை வாசித்திருப்பார் என்றெல்லாம் வியப்பு வரும். அதை நாம் கண்டடையக்கூடிய சிறுபுள்ளிகளை மகாலிங்கம் இந்தக் கட்டுரையில் தருகின்றார். இறுதியில் சரியாக அடையாப்படுத்தாது போர்க்காலங்களில் முன்னும், நடக்கும்போதும் இல்லாமற்போன எழுத்தாளர்களின் வாழ்வு இன்னும் அவலமானது என்ற குறிப்பு இதில் வரும். 


எனக்கு உடனே நினைவுக்கு இப்படி வந்தவர் சு.வி என அழைக்கப்பட்ட சு.வில்வரத்தினம். அவரின் வீடும், அவர் எழுதியவையும், சேகரித்த நூல்களும் இந்திய இராணுவகாலத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றது. பின்னர் ஒருபோதுமே ஊர் திரும்பமுடியாது திருகோணமலையில் காலமாகியும் விட்டவர் அவர். இவ்வாறு 95இல் இடம்பெயர்ந்து பின் திரும்பிவந்தபோது தன் சேகரத்திலிருந்த நூல்கள் அழிந்துபோனதை வடகோவை வரதராஜனும் குறிப்பிட்டிருக்கின்றார். அப்படி அவை இல்லாமற்போனதன்பின் பிறகு நூல்களை வாங்கவோ, சேகரிக்கவோ விருப்பு இல்லாது போய்விட்டது என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். இவ்வாறு எத்தனை எத்தனை அனுபவங்கள் முக்கியமாய் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிவந்த படைப்பாளிகள் பலருக்கும் இருக்கக்கூடும்.


காலம் இவ்வாறு 30 வருடங்களில் 54 இதழ்களை நமக்குத் தந்ததோடு, இன்னொரு முக்கிய விடயத்தையும் சத்தமில்லாது புலம்பெயர்மண்ணில் இருந்துகொண்டு செய்திருக்கின்றது. அது இற்றைவரை 50இற்கும் மேலான நூல்களை வெளியிட்டிருக்கின்றது. அவரவர்கள் நான்கைந்து நூல்களை வெளியிட்டவுடனேயே பதிப்பாளர்கள் என்ற 'பெருமை'களுடன் உலாவரும்போது காலம் செய்திருப்பது முக்கியமான விடயமே.  அதிலும் மொழியாக்கம் தவிர்ந்து, ஈழம்/புலம்பெயர்ந்து இருப்பவர்களின் நூல்களையே காலம் வெளியிட்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.


இப்போதைய கொடுங்காலத்தில் காலம் அமேஸனூடாகத் தனது 55வது இதழை வெளியிட்டிருக்கின்றது. மணி வேலுப்பிள்ளை அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 10 உலகச் சிறுகதைகளை மட்டும் கொண்டு ஒரு சிறப்பிதழாக அது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

..................

(Jun, 2020)

0 comments: