கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Ishq (மலையாளம்)

Saturday, August 24, 2019

ளங்காதலர்கள் காரிலேறி ஒருநாளைக் கழிக்கச் செல்கின்றார்கள். இரவில் காரை நிறுத்தி முதல் முத்தம் பெறத் தவிர்க்கின்றபோது, கலாசார காவலர்கள் போலி பொலிஸாக உருவெடுத்து அவர்களைப் பயமுறுத்துகின்றார்கள். அவர்களின் 'பொலிஸ் நாடகத்தில்' ஆணைவிடப் பெண்ணே காரில் வைத்து அதிகம் பயமுறுத்தப்படுகின்றாள். தங்கள்பாட்டில் எவ்விதச் சிக்கல்களுமில்லாது வாழும் ஒரு மத்திய வர்க்க ஆணும், பெண்ணும் முதன்முதலாக அதிகாரத்தின் இன்னொருமுகத்தை கண்டு அதிர்கின்றார்கள். தன் தாயினதும், தமக்கையினதும் அரவணைப்பில் வளர்ந்த ஆண், தன் காதலியை இந்தக் கலாசாரக் காவலர்களின் பிடியிலிருந்து எப்படித் தப்புவிப்பது என்பது புரியாது திகைக்கின்றான். முதல் பாதி அந்த இரவில் தெருவெங்கும் காருக்குள்ளே இரு கலாசாரக் காவலர்களுடன் அவர்கள் அலைவதுடன் முடிகின்றது.

இடைநடுவில் இவனின் காதலியை விசாரிக்கவேண்டுமென்று அவனைத் தூரப்போகச் சொல்லிவிட்டு, காருக்குள் விசாரிக்கப் போகின்றார் ஒரு கலாசார 'பொலிஸ்' காவலர். பூட்டிய கதவுக்குள் என்ன நடந்தது என்பது இந்தக் காதலனுக்குத் தெரிவதில்லை. எல்லாம் முடிந்து அடுத்தநாள் காலையில் காதலியை அவளின் ஹொஸ்டலில் விடும்போது எந்த நிகழ்வையும் விட இவனுக்கு அதுவே அதிகம் தொந்தரவு செய்கின்றது. 'என்ன காருக்குள்ளே நடந்தது' என கேட்கின்றான். 'இவ்வளவு நேரமும் நான் இந்த இரவில் அவர்களோடு கஷ்டப்பட்டதைவிட ஒருவன் என்னை காருக்குள் பூட்டி விசாரித்த கொஞ்ச நேரத்தில் என்ன நடந்தது என்பதுதான் உனக்கு முக்கியமா' எனக் கேட்கின்றாள் காதலி. 'நானொரு ஆண், எனக்கு அது தெரியவேண்டும் என்கின்றான் இவன். 'உனது ஆண்மையைத்தானே நேற்றிரவு பயந்துகொண்டு திரியும்போது பார்த்தேனே' எனக் கோபத்துடன் சொல்லிவிட்டுப் போகின்றாள் காதலி.

இரண்டாம் பகுதி, இந்தக் காதலன் தங்களை வருத்திய கலாசாரக் காவலர்களை எப்படிப் பழிவாங்குகின்றான் என்பது கதை. அதை அவன் அந்தக் கலாசாரக் காவலர்களின் குடும்பத்திற்குள் நுழைந்து நுட்பத்துடன் செய்வது படத்தில் காட்டப்படுகின்றது. முதல் பாதி ஒரு அச்சத்துடன் இளங்காதலர்க்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற பதற்றத்துடன் நகர்வதைப் போல, வேறொரு பதற்றத்துடன் பின்பாதி கழிகின்றது. குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கதையை, ஒரு கையளவு பாத்திரங்களுடன் வைத்து இவ்வளவு இறுக்கமான காட்சிகளுடன் திரைப்படமாக்கியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் நமக்கு நிச்சயம் வியப்பு வரும்.

ஆண்கள் எப்போதும் ஆண்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் எடுக்கும் பாத்திரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு முனையில் இருக்கின்றார்களே தவிர, அந்தப் பக்கமுள்ள கோட்டைத் தாண்டி இந்தப்பக்கம் வருவதெல்லாம் பெரிய விடயமில்லை என்று இந்தக் காதலன் என்கின்ற நாயக விம்பத்தைக் கூட படத்தில் உடைப்பதில்தான் இந்தப் படம் இன்னும் நெருக்கமாகின்றது.

எனக்கு காருக்குள் என்ன நடந்திருக்குமென தொந்தரவுக்குள்ளாவதற்கு, ஆணாக இருப்பது என்று சொல்கின்ற நீ, என்னைக் காப்பாற்ற அந்த ஆண்மையை அந்த இரவில் பாவிக்கவில்லையே எனக் கேட்கின்ற அந்தக் காதலிதான், ஒரு பழிவாங்கலை நுட்பமாக நடத்திவந்த காதலனுக்கு நடுவிரலைக் காட்டி இன்னொரு விடயத்தில் அவனைத் தூக்கியெறிகின்றாள், நாம் கட்டமைத்து வைத்திருக்கும் 'ஆண்மை' என்ற விம்பம் உடைந்து நூறாகி நம்மைப் பார்த்துப் பல்லிளிக்கின்றது

(June, 2019)

0 comments: