நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கோபிகிருஷ்ணன்

Tuesday, August 06, 2019


கோபிகிருஷ்ணனின் நேர்காணலையூமா வாசுகியின் 'மழை' இதழில் அது வெளிவந்த காலத்திலேயே வாசித்திருக்கின்றேன் என்றாலும் இப்போது கோபிகிருஷ்ணனை அவரின் படைப்புக்கள் ஊடாக விரிவாக அறிந்தகாலத்தில் மீண்டும் நிதானமாக வாசித்தபோது அதிலிருந்து மீள்வதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
கோபிகிருஷ்ணன் தனது 56வயதில் இந்த நேர்காணலைக் கொடுக்கின்றார். மிகவும் வெளிப்படையாகவும் தன்னளவில் நேர்மையாகவும் இங்கு பேசுகின்றார். தன் குடும்பத்தின் வறுமையிலிருந்து, 30 வயதிற்குள் இரண்டு முறை மாத்திரைகள் எடுத்து தற்கொலைக்கு முயன்றதையும், தனக்குத் தானே பேசிக்கொண்டு திரிந்த காலங்கள் பற்றியும் இந்தளவிற்கு வெளிப்படையாகத் தமிழ்ச்சூழலில் பேசமுடியுமா எனத் தெரியவில்லை. தன்னோடு வேலை செய்த திருமணம் செய்த பெண்ணுக்கு, மிகுந்த பாலியல் வர்ணனைகளுடன் கடிதம் கொடுத்ததையும் அது அலுவலகம் முழுதும் தெரிந்து, தன்னையொரு கெட்டவனாக/கேவலமானவாக நினைத்து தன்னைத் தானே சிதைக்கத் தொடங்கிய உளவியல் பிரச்சினை ஆரம்பித்த காலம் பற்றியெல்லாம் குறிப்பிடுகின்றார். பின்னர் தன்னை நேசித்த ஒரு கிறிஸ்தவப் பெண்ணுக்காய் ஞானஸ்தானம் செய்து பெயரை மாற்றி, நண்பர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாது திருமணம் செய்தது பற்றியும், அந்தப் பெண்ணுக்கு சில வருடங்களிலேயே பிற ஆண்களுடன் தொடர்பு இருந்ததையும், கவுன்சிலிங் தந்த மனோநில வைத்தியர்கள் இது அவரது கற்பனையென இன்னும் அதிக மருந்துகள் எழுதித்தந்ததையும் பகிர்கின்றார். கோபி கிருஷ்ணனைப் பிரிந்து செல்கின்ற இந்தப் பெண் நான்கு மாதங்களில் இன்னொருவரைத் திருமணம் செய்தபோது அது தனது கற்பனையல்ல, உண்மையென ஊர்ஜிதமானதெனவும் மனோநிலை ஆலோசனை/சிகிச்சைகள் குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றார்.
இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற இரண்டு தடவைகளில் ஒருதடவை இவர் இறந்துவிட்டாரென ஒரு வைத்தியர் கைவிட்டு துணியை இழுத்துமூடியபின், தற்செயலாக வந்த இன்னொரு வைத்தியர் பரிசோதித்து ஒரு ஊசியைப் போட்டு தப்பவைத்த அதிசயத்தையும் குறிப்பிடுகின்றார். இப்படியான உளவியல் சிக்கல்களோடு திரிந்த கோபி இரண்டு தற்கொலை முயற்சிகளின்  பின்னரே எழுதத்தொடங்குகின்றார். தனக்குப் பிடிக்காத எதையும் எழுதுவதில்லையெனவும், எத்தகை படைப்பாயினும் அதில் உழைப்பிருக்கும் எனவே விமர்சனம் மென்மையாகவும் கவனமாகவும் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்துகின்றார்.

உளவியல் பிரச்சினைகளோடு ஒழுங்கான வேலையில்லாது அல்லாடிக்கொண்டிருந்தாலும், சிலவேளை நல்ல வேலைகள் கிடைக்கும்போது, உயர் அதிகாரிகள் கீழ்நிலைப்பணியாளர்களை நடத்துவது சகிக்கமுடியாது சண்டையிட்டு வேலையை விட்டு விலகிப் போகின்ற மனிதநேயம் மிகுந்த மனிதராகவும் பல இடங்களில் தெரிகின்றார்.
முதல் திருமணம் முறிந்தபின் பெண் துணை தேவையென்று கோபி தாயாரின் உதவியுடன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கின்றார். முதல் துணைபோலவே இந்தத் துணையும் கோபி உளவியல் பிரச்சினைகளுக்காய் மாத்திரைகள் எடுப்பதை நிறுத்தச் சொல்கின்றார். ஒருமுறை பணமில்லாத துயரத்தால், கோபியின் மாத்திரைகளை எடுத்தே அந்தப்பெண்ணும் தற்கொலைக்கு முயற்சிக்கின்றார். அது கொலைக் கேஸ், பொலிஸ் கேஸ், அது இதெனப் போய் பொலிஸிடம் சிக்குப்படும் பரிதாபமான கோபி தெரிகின்றார்.
சுதந்திரக் கலாசாரமே பிரதானமென்றும் அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்கவேண்டுமெனக் கூறும் கோபி திருமணங்களின் மீது நம்பிக்கையில்லை என்பதைத் தன் திருமணத்தில் பின்னே அறிந்ததாகவும் சொல்கிறார். ஒரு பெண்ணும் ஆணும் உறவுகொள்ள வைத்துக்கொள்ள விரும்பினால் சமூகம் பற்றி கவலைப்படாது சேர்ந்து வாழலாம். பாதுகாப்பான உறவாய் இருந்தால் மட்டும் போதுமென்கின்றார். ஒரு மனிதன் 60 வயது வரை வாழ்வானென்றால் அவன் ஆகக்குறைந்து 4 பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு எனவும் அதே பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டுமெனவும். பாலியல் கல்வி 9ம் வகுப்பிலிருந்தே கற்பிக்கவேண்டுமெனவும் வலியுறுத்துகின்றார்.
இறுதியில் நேர்காணல் முடியும்போது 'எனக்கு (56) இப்போது ஒரு வேலை அவசியம் தேவை' என்கின்றபோது மனதை மிகவும் அவரின் வார்த்தைகள் நெருடுகின்றது.
இந்த நேர்காணலில் கோபி தன் இரண்டு துணைகளும் தான் மாத்திரை எடுப்பதை விரும்பவில்லை என்பதைக் குறிப்பிடுகின்றார். ஆனால் ஏன் கோபி இவர்களைத் திருமணம் செய்யும்போது இவ்விரு பெண்களுக்கும் தனது உளவியல் சிக்கல்கள் பற்றியோ மாத்திரைகளே தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதையோ சொல்லவில்லை போன்ற கேள்விகள் எழும்புகின்றன. இவ்விரு துணைகளும் கோபி மாத்திரைகளை எடுப்பதை தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கின்றனர். சிலவேளை கோபி மனந்திறந்து அவர்களுடன் திருமணஉறவுக்கு முன்னரே பேசியிருந்தால் அந்தப் பெண்களுக்கு ஒரு தெரிவும், அதன் நிமித்தம் கோபியை இன்னும் விளங்கிக்கொள்ளவும் கூடிய ஒரு சூழலும் வாய்த்திருக்கலாம்.
மறுபடி மறுபடி மாய ஒலிகள் கோபியின் காதில் கொடூரமாக ஒலிக்கின்றன....'நீ எதற்கும் தகுதியில்லாதவன்...நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டாய்.... இனிமேலும் நீ உயிருடன் இருக்கமுடியாது...' அந்தக் குரல்களிலிருந்து கோபியால் ஒருபோதும் வெளியே அவ்வளவு எளிதில் வந்துவிடவும் முடியவில்லை. அதுமட்டுமின்றி பொய்யாக ஒரு அறிக்கை எழுதித்தரும்படி கேட்க, அது மிகவும் அச்சமூட்ட 3வது முறையாக தற்கொலைக்கு மீண்டும் நிறைய மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் செய்கின்றார்.
'எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவதில்லை. முழுமையான பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது.' என்கின்ற கோபி எங்களைப் போன்ற வாசகர்களுக்காய் இல்லாதுவிடினும், அவருக்குள் எப்போது தொந்தரவுபடுத்தியிருக்கும் குரல்களை அமைதியாக்குவதற்காகவேனும் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.
தன் விருப்பங்களையும் மட்டுமின்றி தன் பலவீனங்களையும் இப்படி எவ்வித ஒளிவுமறைவுமின்றி விரித்து வைக்கும் கோபி கிருஷ்ணன், நகுலனைப் போலவே எனக்குப் பிடித்த ஒருவராக படைப்புக்களினூடாக மாறிப்போனது அவ்வளவு வியப்பானதும் இல்லை.
(Aug 2015)


0 comments: