நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நினைவுச் சுழல்

Thursday, August 08, 2019



சுழி - 01

திங்கள் காலையைக் கடப்பதைப் போல கடினமான பொழுது வாரத்தில் வேறெந்த நாளிலும் வருவதில்லை. இலைதுளிர்காலத்திற்குரிய மழை பொழிந்து கொண்டிருந்ததோடு, எப்பவும் பிடித்தமான சாம்பல் நிறத்தை வானம் போர்த்தியுமிருந்தது. ஒரு அஞ்சலோட்ட வீரனைப் போல முன்னே பாய்ந்து கொண்டிருக்கும் காலத்திடம், எதையோ கொடுத்துவிடும் தவிப்புடன் நின்று நிதானிக்க முடியாது ஓடவேண்டியிருக்கிறது.

வாரவிறுதியில் பின்வளவில் இரைதேடியலைந்த கறுத்த நிற அணிலையும், இரண்டு முயல்களையும் அவதானித்தபடி உன்னோடு பேசிக்கொண்டிருந்தேன். ஒருநாள் தற்செயலாய்க் கரைந்த காகத்தின் ஒலியை மரங்களிடையே தேடித்தேடிப் பதிவு செய்ததைச் சொல்லியபோது, புலூனிக்குஞ்சுகளும் காகங்களும் இணைந்தே குரலெழும்புகின்றவை என எங்கேயோ வாசித்ததையும் நினைவூட்டினாய்.
நெகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பனியில் மட்டுமில்லாது மழையிலும் நனைகின்ற மனதுடையவனாக மாறியிருப்பது எனக்கே ஓர் அதிசயந்தான். பின் 'டெக்'கில் தலைசாய்த்துப் படுத்தபடி மரங்களின்/மலர்களின் வாசனையுடன் நிர்மலமான வானத்தில் அலைந்து திரியும் பறவைகளோடு கூடவே சிறகடிக்கும் மனது எப்போது என்றில்லாவிட்டாலும் அவ்வப்போதாவது வாய்த்துவிடுகிறது. நம்மை நாமே மறக்கின்ற நிலைதான் பித்துநிலையெனில் அது நேசத்திலும் இயற்கையிலும் தோய்ந்துவிடுகின்றபோது மின்னலாய் தெறித்துவிடத்தான் செய்கிறது.

வேலையை விரைவில் விட்டுவிடப்போகின்றேன் எனச் சொன்னேன். அதன் பிறகு என்ன செய்யப்போகின்றேன் என நீ கேட்கவுமில்லை, என்ன செய்யப் போகின்றேன் என்று எனக்குந் தெரியாது.

பதினாறு வயதுவரை போரிலிருந்து மீட்சி கிடைக்குமென நம்பியதேயில்லை. புலம்பெயர்ந்த நாடொன்றுக்கு வரும்வரை இன்னொரு வாழ்வு வாய்க்குமென கனவு கண்டதுமில்லை. இனி வீழ்ச்சியில்லை என நம்பிக்கை துளிர்த்த பொழுதில் தற்கொலையோடும் அறிமுகமாக வேண்டியதாயிற்று. ஆக, அனைத்துமே அதன் அதன் இயல்பில் நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கும்போது எதைத் திட்டமிடுவது? ஒழுங்குகளின் வழியே கட்டமைப்புக்களின் சட்டங்களில் வழியிலேதான் வாழ்வு நகர்கின்றது எனச் சொல்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதிலிருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு நகரவிரும்புகின்றவர்களும் இவ்வுலகில் இருக்கின்றார்களில்லையா?

ததும்பி வழியும் உன் பிரியத்தை ஏற்றுக்கொள்வதில் என்னளவில் சில தடங்கல்களும், இன்னமும் கழுத்தை விட்டு அகலாது, நானாய் அருந்திக்கொண்ட விசத்தின் இறுதித்துளியும் மிச்சம் இருக்கிறது. நீ பின் தொடரும் மனுசகுமாரன் சிலுவையில் அறையப்பட்ட நாளில் என் தடுமாற்றங்களையும், துயரையும் கூடவே கரைத்துவிட விரும்புகின்றேன் எனச் சொன்னேன்.
.
நிதானமாய்க் கேட்டபின், “காயப்பட்டவனின் மனசுக்கு... என்றபடி என்னை இறுக்கவணைத்துச் சிரித்தாய். இந்தளவு இயல்பாய் உன்னைப்போல என்னால் கடந்துபோயிருந்திருக்கமுடியாது. ஆகவேதான் அழுக்காறும் அவாவும் உடைய ஆணாக இன்னும் இருக்கின்றேன் போலும்.

தமக்கான சிலுவைகளில் தங்களைத் தாங்களே அறைந்து கொண்ட எத்தனையோ பேரின் பாவங்களை இரட்சிக்கும்பொருட்டு மனுசகுமாரன் மீண்டும் மீண்டும் உயிர்த்த ஞாயிறுகளில் எவரினூடாகவோ தோன்றியபடியிருக்கின்றார்.

என் 'பாடு'களைத் தாங்கியபடி என்னைச் சிலுவையை விட்டு இறக்குபவள் - நீ.


சுழி - 02

தெரிவுகளின்றி ஒருபோதும் வாழ்வு நகர்வதில்லை எனினும் ஏன் தேர்வுகளின்போது எதையோ விலத்திவரவேண்டியிருக்கிறது. எதற்காக எவரையோ காயப்படுத்த வேண்டியிருக்கின்றது. காலம் விந்தைகளை மட்டுமில்லை இவ்வாறான பொழுதுகளில் கடுமையான நெருக்கடிகளையும் மனிதர்க்கு ஏற்படுத்திவிடுகின்றது.

ஒரு பூங்காவிற்கும் இன்னொரு பூங்காவிற்கும் இடையிலிருக்கும் மூன்று கிலோமீற்றர்கள் இடைவெளியில் அடிக்கடி நடந்துபோவதுண்டு. அவ்வப்போது சைக்கிளில் பறப்பதுமுண்டு. எப்போதும் சலசலத்தபடி நகர்ந்துகொண்டிருக்கும் சிற்றாறு மழைபெய்யும்போது பெருகிப்பாய்வதையும், நெடிதுயர்ந்த மரங்களின் பெரும் மெளனத்தையும், நெருக்கமாய் இருக்கும் காதலர்களின் குறுகுறுப்புக்களையும், அவ்வப்போது குறுக்காய்ப் பாயும் முயல்களையும் பார்த்தபடிப் போகும் உலாத்தலின்போது ஒருவர் அறிமுகமானார்.

சிலரோடான உறவுகள் அறிமுகங்களோடு முடிந்துவிடுவதுண்டு. இவரோடு நிறையக் கதைக்கலாம் போல அப்படியொரு வாஞ்சையான முகத்தோடு இருந்தார். உலாத்தியபடியோ அல்லது உட்கார்ந்தோ கதைகள் பல பின்னர் பேசியதுண்டு. 

ஒருநாள் நாங்கள் மனதின் ஆழங்களுக்குள் சொற்களால் இறங்கிக்கொண்டிருந்தபோது, தான் தற்சமயம் இரு பெண்களை நேசித்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னார். சாத்தியமா அல்லது சமாளிக்கமுடியுமா என்று நான் கேட்கவில்லை. அவரவர் அவர்க்கான அறத்தை எழுதிக்கொள்வதில் தவறேதுமில்லை.

ஒருத்தி நீ எப்படியென்றாலும் இரு, நான் எப்போதும் நேசிப்பேன்எனச் சொன்னதாய்ச் சொன்னார். இன்னொருத்திநீ என்னைத்தான் எப்போதும் நினைத்துக்கொள்ளவேண்டும்என அடிக்கடி அதட்டிக்கொண்டிருப்பாள் என்றார்.

இரண்டு பேரையும் தனக்கு நன்கு பிடிக்கும். தன் தெரிவுகளின் நிமித்தம் யாரையும் காயப்படுத்த தனக்கு விருப்பமில்லை என்றார். ஒரு காதல் முடிந்துதான் இன்னொருகாதல் வரவேண்டும் என்பது நியதியா? ஒரே நேரத்தில் பல காதல்கள் இருக்கக்கூடாதா என்ன? எவரும் நியாயம் கேட்டு வராதவரைக்கும், நாம் நீதிபதிகளாய் முகமூடிகள் அணியவும் முடியாது.


னிக்காலத்தில் ஒருநாள் நோய்மை பீடித்திருந்தபொழுதில் குளிரை நேரடியாகச் சந்திப்பதே வீரமென எண்ணி இந்த பூங்காக்களுக்கிடையில் மூசிமூசி நடந்தபடியிருந்தேன். தற்செயலாக அதே நண்பர் நாயுடன் நடந்து வந்துகொண்டிருந்ததார். என்னைப் போலவே இந்தக்குளிருக்குள்ளும் நடக்க வேறு சில பைத்தியங்களும் இருப்பதையிட்டு சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டேன்.

'எப்படி உங்கள் காதலிகள் இருக்கின்றனர்?' என்றேன். நமக்குத்தான் பெண்களும் புத்தகங்களும் இல்லாது வேறு உலகம் உருளாதே.

'எனக்கு இப்போது ஒரு புதுக்காதலி கிடைத்துவிட்டார்' என்றார்.

என்னது இவர் மூன்றாவதாக இன்னொருவரையும் சமாந்தரமாக நேசிக்கத்தொடங்கிவிட்டாரோ என்று யோசித்தேன். அவரே தொடர்ந்தார்.

'இவளைக் கண்டவுடன் மற்ற இருவருக்கும் விடைகொடுத்துவிட்டேன்' என்றார்.

எனக்குச் சற்று அதிசயமாக இருந்தது. தேர்வுகளில் நம்பிக்கை இல்லை என்றவர் .எப்படி இது சாத்தியமென 'ஏன்?' எனக் கேட்டேன்.

'
இல்லை. இவளும் இவளின் நான்கு நான்குவயது மகளும் என்னை அப்படிக் கவர்ந்திழுக்கின்றனர். இந்த நேசம் மற்ற எல்லாவற்றையும் எளிதில் விலத்திவைத்துவிட்டது' என்றார்.

'மகளுள்ள பெண்ணை நேசித்தால் உலகில் மாபெரும் தியாகம் செய்ததாய் நினைத்துவிட்டீர்கள் போலும்' என அவரைச் சீண்டினேன்.

'அப்படியேதுமில்லை' என்றார் சற்று தீர்க்கமான குரலில்

'அது சரி எப்படி உங்களின் மற்றக் காதலிகளுக்கு இதைத் தெரியப்படுத்தினீர்கள்'

'
தெரிவுகள் எப்போதும் கடுமையானதுதான். யாரையோ காயப்படுத்தத்தான் வேண்டியிருக்கின்றது. ஆனால் நான் எதையும் சொல்லாமல் அவர்களுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்'

'
என்னது?'

'
நாளை அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து, அவர்களுக்குப் பிரியமான துணைகளைச் சடுதியாய்ப் பிரிந்துபோக நேரிடலாம். அப்படி நிகழ்ந்தாலும் அவர்களையும், அவர்களின் குழந்தைகளையும்  அளவற்று நேசிக்கவும் என்னைப் போல நிறையப்பேர் இந்த உலகில் இருப்பார்கள் என்பதை மட்டும்' என்றார்.

ஒருவகையில் பார்த்தால் அவரின் இரண்டு காதலிகளுக்கும் இதைவிட மிகச்சிறந்த நம்பிக்கையை அவரால் கொடுத்திருக்க முடிந்திருக்காது போலவும் எனக்குத் தோன்றிற்று.


சுழி - 03

'நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது' என்பதுபோல இரண்டாண்டுகளுக்கு மேலாக‌ தன் வாழ்வை தானே தீர்மானித்து, விரும்பியபோது அலைந்தும் திரிந்தவனுக்கு ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. வேலையில் மட்டுமல்ல, உறவுகளுக்காய், அவர்களின் பிரியங்களுக்காய் ஓரிடத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வது கூட கடினமானதுதான்.

நீ வேலை கூட செய்யத்தேவையில்லை என்னோடு எப்போதும் இருந்தாலே போதும், உனக்கான எல்லாவற்றையும் நானே செய்து தருகின்றேன் என்றவளின் நேசத்தைக் கூட இந்த நாடோடியாக அலைகின்ற பெருங்கனவுக்கு முன் விலத்திவிட்டே அவனுக்கு வரவேண்டியிருந்தது. உண்மையிலே இந்தக் கனவு அவனுக்குள் எதனாலும் அணையமுடியாது மூசி எரிகிறதா இல்லை அதை வைத்துப் பாவனைகளைத்தான் செய்கின்றேனோ என அவனுக்குப் பிரியங்களை இழக்கின்ற ஒவ்வொருபொழுதும் தோன்றியிருக்கின்றது.

ஒரு பொழுது அவனின் நாடோடித்தடங்களைப் பின்பற்றியபடி ஒருத்தி வந்தாள். தனக்கு இது வலிகளை ஆற்றுப்படுத்தும் காலம், காதலிப்பதற்கான மனோநிலை இல்லை என்றான் அவன். நான் உன்னிடம் சம்மதங்கேட்டு நேசத்தை யாசிக்கப்போவதில்லை. உன்னை என்றென்றும் என் நித்திய காதலனாக ஆக்கிக்கொள்ளப் போகின்றேன் என்றாள். இவனுக்குத் தமிழ்ச்சூழலில் 'நித்திய காதலர்களின்' தீராத விளையாட்டுக்கள் தெரியும் என்பதால், நித்திய காதலனா என்றொரு எள்ளல் உதடுகளில் எட்டிப்பார்த்தது.

பிறகான காலங்களில் நீ யாரையும் நேசிக்கலாம், எனக்கு அதைச் சொல்லக்கூடத் தேவையில்லை. ஆனால் எப்போதும் உன்னை நேசித்துக்கொண்டிருப்பேன் என்றாள். ஏன் இவ்வளவு பைத்தியக்காரியாக இருக்கின்றாள் என்பதைவிட இப்படியும் ஒருத்தி காதலிக்கமுடியுமா என்பதில் அவனுக்கு வியப்பு வந்தது.

உனக்கு நான் நித்திய காதலனாக இருந்தால், என் வாழ்நாளில் இனி நான் என்றென்றைக்கும் காதல் இல்லாது இருக்கும் காலம் வரவே வராது என‌ நகைச்சுவையாகச் சொன்னான் அவன்.


ருமுறை அவன் 'நான் வேலையை விடுத்து சும்மா என் வாழ்வை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றேன்' என்று சொன்னதற்காகவே ஒரு காதல் அவனைத்தேடி வந்தது. பின்னர் இன்னொருமுறை, 'நான் பயணம் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருக்கின்றேன்' என்று சொன்னதற்காய் வேறொரு நேசம் வந்தது.

எதெதெற்காக எல்லாம் பெண்களுக்கு இன்னொருவர் மீது பிரியம் வருகின்றதென நினைக்க இவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. எவராயினும் அவர் இயல்பில், அதிகம் நாடகீயத்தன்மை இல்லாது இருந்தால் அவர்களை நேசிப்பதற்கு மனிதர்கள் வருவார்கள் போலுமென நினைத்துக்கொள்வதை விட வேறு பதில்களே இல்லைப்போலும்..

கடக்கக் கடினமான பனிக்காலத்தைக் கடந்த அவன் இந்த வருடத்தில் எவரையும் நேசிப்பதில்லை என முடிவு செய்திருந்தான். எவரையும் நேசிப்பதில்லை என்பதன் மறுபுறத்தில்தானே எல்லோரையும் நேசிக்கலாமென்கின்ற இன்னொரு பக்கமும் மறைந்திருக்கின்றது.

வசந்தகாலம் போல அதன் இயல்பில் மலர்வது நேசம் என்க‌.

மேலும் நினைவில் அவனுக்கு இன்னமும் காடுகள் உள்ளன‌."
……………………………………………………..

ஓவியங்கள்: ஊக்ரா
(நன்றி: 'அம்ருதா' ‍ ஆடி, 2019)


0 comments: