பாடசாலைக்கால தோழியொருவர் மதிய உணவிற்காய் அவரின் வீட்டுக்கு அழைத்தபோது இரெயின் தண்டவாளம் தாண்டி தெஹிவளைக் கடற்கரையைப் பார்க்கப் போயிருந்தேன். என் பதின்ம வயதுகளில் காதலர்கள் நிரம்பி வழியும் தாழைகளும் இன்னபிற கடற்கரைத் தாவரங்களும் நிறைந்த பகுதியது. தங்களுக்கான உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் அவர்களைச் சிறு கற்களால் எறிந்து நிஷ்டை கலைத்த அனுபவங்களை 'பேயாய் உழலும் சிறுமனதில்' தொகுத்திருக்கின்றேன்.
தோழியுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்த இடத்திற்கு குடிபெயர்ந்து 2 வருடங்கள் ஆனபோதும், பத்து வீடுகள் தள்ளியிருக்கும் கடற்கரைக்குப் போனதில்லை என்றார். சரி என்னைச் சந்தித்ததோடு, புது இடத்தைப் பார்த்தமாதிரியும் இருக்கட்டும் என அவரை அழைத்து, மீண்டும் கடற்கரை உலா போந்தபோது மாலை 4 என்றபோதும் வெயில் சுட்டெரிந்துகொண்டிருந்தது. முந்தைய காலம் போல இல்லாது கடற்கரை அழகாக்கப்பட்டு மாலை நேரத்திற்கான புதிய உணவகங்களும் வந்திருந்தன.
பின்னர் ஒருமுறை நண்பர் ஒருவருடன் இரவில் அதே கடற்கரைக்குப் போயிருந்தேன். ஒரே பாடசாலை/ஒரு வகுப்புக்கூட என்ற சிறுவயதுப் பரிட்சயம் சற்று மங்கலாய் இருந்தாலும், இப்போது என் எழுத்தின் வழி அவருக்கு ஏதோ ஒருவகையில் நான் நெருக்கமாக, சந்திக்க ஆவல் வந்திருந்தது. நானோ அவரின் தனித்துவமான புகைப்படங்களைப் பின் தொடர்பவனாக பின்னர் ஆகியிருக்கின்றேன்.
கடற்கரைக் காற்று, மெல்லியதாய்ப் பொழிந்த மழை, Live music, பொங்கி
வழிந்த மது, மகிழ்வைச் சிந்தியபடி இருந்த பெண்கள், கரையில் தீப்பந்தங்களிலும், வாயிலும் நெருப்பை உருவாக்கி நம்மைப் பதறவும் வியக்கவும் வைத்த ஒரு கலைஞன் என அந்த இரவு விரிந்தபடியே இருந்தது. நண்பர் தாஜ்மகால்/ஆலப்புழா/வியட்நாம் எனவும், மச்சுபிச்சு/மெக்ஸிக்கோ/கியூபா என நானும் அனுபவங்களில் நாடு நாடாகக் கடந்தபடி இருந்தோம். அது பிறகு வீடு திரும்பும்போது ஒவ்வொரு தெருவிலும் காரை நிறுத்தி, கஸல்/சூஃபி/கவாலி இசையென பிடித்த பாடகர்களின் பாடல்களைக் கேட்கும்படியாக பித்த நிலைக்குக் கொண்டுபோயிருந்து. இறுதியில் வீட்டின் முன் நின்றும் காசியிற்கு வேட்டிகட்டி எல்லாம் தொலைத்தவர்களாக அலையவேண்டும் என்றும், எல்லேயிற்கு தன்னைப்போல இரெயின் எடுத்துப்போய் கரையவேண்டுமெனவும் கிறங்கிப்பேச நள்ளிரவுதாண்டி 2 மணி ஆகியிருந்தது.
அழகிய தருணங்கள் எதிர்பார்க்காது/திட்டமிடாது நிகழும்போது அவை இன்னும் வசீகரமான பொழுதுகளாக மாறிவிடுகின்றன. பிறகு அவ்வளவு நேசத்துடன் உன்னோடு பேச. நுரான் சகோதரிகள் சூஃபியை இசைக்கத் தொடங்கினர் மனவெளி எங்கும்.
(May, 2017)
0 comments:
Post a Comment