மேரி கொல்வின் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர். அமெரிக்காவில் பிறந்தபோதும் இங்கிலாந்துப் பத்திரிகையிற்காக போர் நிகழும் நிலப்பரப்புகளுக்குச் சென்று சாவையும் அஞ்சாது உண்மைச் செய்திகளை வெளியிட்டவர். 'எனக்கு யுத்தகளத்தில் எதனால் ஆட்லறி நடத்தினார்களோ அல்லது எப்படிக் குண்டுவீசினார்களோ என்பதல்ல முக்கியம், அதனால் பாதிக்கப்படுபவர்கள் பற்றியே அக்கறை கொள்வேன்' எனக் கூறிய மேரி 2001ல், எந்த பத்திரிகையாளரும் செல்லத்துணியாத இலங்கையின் வன்னி யுத்தகளத்திற்குள் அங்கேயிருக்கும் உண்மையான நிலவரங்களை எழுதுவதற்காய் நுழைகின்றார்.
புலிகளின் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரைச் சந்தித்து திரும்பும் வழியில், மேரி இலங்கை இராணுவத்தின் ஆர்பிஜி ரொக்கெட் தாக்குதலில் படுகாயமடைந்து ஒரு கண்ணை இழக்கின்றார். அந்த வலியோடும் இலங்கையில் நடப்பது என்ன என்ற கட்டுரையை எழுதுகின்ற அளவுக்கு மிகத் துணிச்சலானாவர். இவ்வாறு அவர் இலங்கை, கொசோவா,
செச்சினியா,
கிழக்கு திமோர், சிரியா உள்ளிட்ட பல யுத்தகளங்களுக்குச் சென்று செய்திகளைச் சேகரித்தது மட்டுமின்றி, பலருக்கு போர்ச்சூழலில் மனிதாபிமான உதவிகளையும் செய்திருக்கின்றனர். திமோரில் இந்தோனேசிய ஆதரவுப்படைகள் ஆயிரக்கணக்கான பெண்களையும் குழந்தைகளையும் முற்றுகையிற்குட்படுத்தியபோது, அவர்களை ஐ.நா. படைகளின் உதவியுடன் மீட்டுமிருக்கின்றார். இவ்வாறான ஒரு முற்றுகை சிரியாவில் நடந்தபோது ஆயிரக்கணக்கில் உயிரிழந்துகொண்டிருக்கும் மக்களை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்ததாலேயே இறுதியில் மேரியின் உயிரும் பிரிகின்றது.
இலங்கையில் 2001ல் மேரி சென்றதிலிருந்து 2009 இறுதியுத்தம் முடியும்வரை தொடர்ந்து அதுகுறித்து எழுதிவந்திருக்கின்றார். புலிகளின் இறுதிக்காலங்களில் அவர்களோடு தொடர்பிலிருந்த ஒரு சில பத்திரிகையாளர்களில் மேரியும் ஒருவர். புலிகள் 'ஆயுதங்களை மெளனித்து' சரணடைதலுக்குத் தயாரானபோது மேரியே புலிகளுக்கு முதன்மைத் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்திருக்கின்றார். இலங்கை இராணுவம் நடத்திய போர்க்குற்றங்களுக்கு மேரி இன்றிருப்பின் ஒரு முக்கிய சாட்சியாக இருந்து நமக்குத் தெரியாத பல விடயங்களைக் கொண்டுவந்திருப்பார் என்பதும் உறுதி.
The
Private War என்கின்ற திரைப்படம் மேரியின் வாழ்க்கையில் நடந்தவற்றை முக்கியமாக 2001லிருந்து அவர் 2012ல் சிரியாவில் இறக்கும்வரை சித்தரிக்கின்றது. மேரியின் பல்வேறு வகையான குணாதிசயங்கள் அதற்குரிய சிக்கலானதன்மைகளுடன் வெளிப்படுத்தப்படுகின்றன. அவருக்கு யுத்தகளத்தில் நின்ற அனுபவங்களினால் வரும் PTSD, வெவ்வேறு உறவுகளினால் வரும் சிக்கல்கள். அதைமீறி யுத்தகளத்துக்கு எவ்வித அச்சமுமில்லாது தடைகளைத்தாண்டி நுழைதல் என்பவற்றை இப்படத்தில் பார்க்கலாம்.
ஒரு துறையில் மிக உச்சத்திற்குப் போனவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை மேரியின் வாழ்க்கை மறுதலிக்கின்றது. அதேவேளை ஒருவர் தனக்குப் பிடித்ததை முற்றுமுழுதாக நம்பிச் செய்கின்றபோது வேறு பலதை இழக்கவேண்டியிருந்தாலும், அப்போது மட்டுமே அவர்கள் தனித்துவமான பாதைகளைத் திறக்கின்றார்கள் என்பதையும் இத்திரைப்படத்தில் அவதானிக்க முடியும்.
மேரி கொல்லப்பட்டதை கிளர்ச்சியாளர்களின் பொறிவெடியினால் என்று சிரியா அரசு அன்று கூறியிருந்தாலும், பின்னர் மேரியின் குடும்பத்தினர் மேரியின் செய்மதித் தொலைபேசியை வைத்தே ஆட்லறி தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டதென ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வழக்குப்போட, இந்த வருடத் தொடக்கத்தில் சிரிய அரசு 300மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கியதன் மூலம் ஒருவகையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
மேரி யுத்தக்களங்களின் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் மட்டுமின்றி, அவரின் இந்த ஆளுமைத்திறனுக்கு பல்வேறுவகைப்பட்ட பாதைகள் ஒரு பெண்ணாகவும் இருப்பதால் நிச்சயம் இருந்திருக்கும். அதை அவ்வளவாக இத்திரைப்படத்தில் கொண்டுவராதது ஒரு பலவீனம் என்பதோடு யுத்தகளங்கள் என்பதை எப்போதும் தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் இடமாகக் காட்சிகளில் காட்டிக்கொண்டிருப்பதும் ஒருவித அலுப்பையே இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது தந்திருக்கின்றது.
ஷோபாசக்தி இதில் தமிழ்ச்செல்வனாக ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான காட்சிகளில் வருகின்றார். அதே தமிழ்ச்செல்வன்/புலிகள் பாத்திரங்கள் இலங்கையின் இறுதியுத்தத்திலும் மேரியோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததைக் காட்ட முயற்சித்திருந்திருக்கலாம் என்பதையும், எப்படி மேரி இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றங்களை வெளிக்கொணர இறுதிவரை முயன்றார் என்பதையும் இங்கே பதிவுசெய்யாததும் துரதிஷ்டவசமானதேயாகும்.
0 comments:
Post a Comment