1.
ஒருவரின் தோளினூடாக தொடக்கக்காட்சியில் கமரா எழுகின்றது. மணற்திட்டுக்களிலிருந்து சில மனிதர்கள் அவரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்கள். கடற்கரையினூடாக ஊருக்கு வருகின்ற மனிதர்களைப் போல, இறுதிக்காட்சியில் சிலமனிதர்கள் அந்த ஊரை விட்டுப் பல்வேறு காரணங்களுக்காக நீங்கிப்போகின்றார்கள். ஒரு கடற்கரைக் கிராமத்தை, அந்த மனிதர்களின் நிறையும் குறையுமான பக்கங்களை, மரபுகளை விட்டுக்கொடுக்காது திமிறும் ஒரு சமூகத்தை, மாற்றங்களை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு தமக்கானபாடுகளைத் தாங்குபவர்களை எனப் பலவற்றை 'கட்டுமரம்' திரைப்படத்தில் நாங்கள் காணலாம்.
ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் சொர்ணவேலின் முதல் முழுநீளத்திரைப்படம் (feature film) இது என்று உணராவண்ணம் அவ்வளவு நேர்த்தியுடன் இத்திரைப்படம் நெய்யப்பட்டிருக்கின்றது. நெய்தலையும், நெய்தல் சார்ந்த மனிதர்களையும் இத்தனை நெருக்கமாகவும், அணுக்கமாகவும் அண்மையில் எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் பார்க்கவில்லை என்று துணிந்து சொல்லலாம். இவையெல்லாவற்றையும் விட மிஷ்கினிடம் இத்தகைய ஆற்றல் நடிப்பில் ஒளிந்திருந்திருக்கின்றதா என அவர் நம்மை வியக்கவைக்கின்றார். இத்திரைப்படத்தில் பல தியேட்டர் கலைஞர்கள் நடித்திருந்தாலும், மிஷ்கினைத்தவிர வேறு எவரும் திரையில் அவ்வளவாகத் தோன்றியதில்லை. முதன்முதலாகத் திரையில் தோன்றும் எவ்வகைப் பதற்றமும் இல்லாது எல்லோரும் தத்தமது பாத்திரங்களுக்கு நியாயங்களைச் செய்திருக்கின்றனர்.
கதைக்களம் சூனாமியின் பின்னரான காலத்தில் நிகழ்வது. தனது சகோதரியையும், சகோதரரையும் சுனாமிக்குப் பலிகொடுத்த சகோதரர் ஒருவர் பெற்றோரில்லாது தவிக்கும் மருமகளுக்கும் மருமகனுக்குமாகதனது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றார். திருமண வயதில் இருக்கும் தனது அக்கா மகளுக்கு ஒரு திருமணத்தைச் செய்துவைக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தத்திலிருக்கும் மாமன்(மிஷ்கின்) பல்வேறு பொருத்தங்களைப் பார்க்கின்றார். ஆனால் மருமகளோ ஒவ்வொரு சம்பந்தங்களையும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றார். அதற்கு அவருக்கு வேறொரு காரணம் இருக்கின்றது.
மாமன்-மருமகள்-திருமணம் என்கின்ற கோணங்களே இத்திரைப்படத்தில் முக்கிய பேசுபொருள் என்றாலும், சூனாமியிற்குப் பின் கைவிடப்பட்டிருக்கும் ஒரு கிராமத்தின் துயரும், குலதெய்வங்களின் மீது மரபு சார்ந்திருக்கும் ஜதீகங்களும், வறுமையிலும் நிறைவாக வாழ விரும்பும் எத்தனங்களுமென அழகியல் தன்மையிலும் இத்திரைப்படம் தன்னை விட்டுக்கொடுக்காது இருக்கின்றது. அதேவேளை எங்கிருப்பினும் மனிதர்கள் தமக்கான பலவீனங்களுடனும் இருப்பார்களென திருமணமான ஒருவர் அதைமீறி வேறு உறவில் இருப்பதும், அவ்வாறு ஏமாற்றப்படுபவர் தமது நண்பராக இருப்பினும், இன்னுமொரு உறவிலிருக்கும் அந்தப் பெண்ணையும் காட்டிக்கொடுக்காது அதை ஒருவகையில் ஏற்றுக்கொள்வதுமென, அளவுக்கு மீறி காட்சிப்படுத்தாமல் இவற்றையெல்லாம் தொட்டுச் சென்றிருப்பதும் அழகு.
2.
இன்று கலை இலக்கியங்களில் அழகியல் மட்டுமே முன்னிறுத்தப்படும் சூழலில், இத்திரைப்படம் நுண்ணழகியலை மட்டுமில்லாது, நுண்ணரசியலையும் பேசுவது கவனிக்கத்தக்கது. சூனாமி அழிவின்பின் கடவுளர் மீது நம்பிக்கை இழந்தவர்கள் மற்றமதங்களுக்கு மாறுவதும்/மாற்றப்படுவதும் இதில் காட்டப்படுகின்றது. அதேபோல மருமகளுக்கு மாமன்காரன், தனது நண்பராக இருக்கும் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொடுக்க விரும்பும்போது, ஊரே வந்து இன்னொரு ஊர்க்காரரை/மதக்காரை திருமணம் செய்யக்கூடாது என்று எதிர்க்கின்றது.
இன்னொருகாட்சியில் ஒருவர் மீன்பிடி சம்பந்தமான அரசாங்கத் தொழிலைச் செய்ய அந்த ஊருக்கு வரும்போது, அவருக்கு மருமகளைத் திருமணம் செய்துகொடுப்போமாவெனநினைக்கின்றபோது மாமன்காரன் அவர் தமது சொந்தச் சாதியா என மறைமுகமாகக் கேட்பதும் காட்டப்படுகின்றது. இவ்வாறு நமது சமூகத்தில் இருக்கும் எல்லாவகையான நுண்ணரசியல்களும் படத்தின் முதன்மைக்கரு வேறாக இருந்தபோதும், அதனூடு இவையும் பேசப்படுகின்றது.
தனக்கு ஏற்கனவே இருந்த துணை பற்றிக் குறிப்பிடும்போது அதை 'லெஸ்பியன் பார்ட்னர்' என்று சொல்லாது ஒரு பார்டனர் என்று மட்டும் சொல்லியிருக்கலாம். மற்றது நிறையப்படங்களில் பார்த்த காட்சியான புகைப்படக்கலையை தனது துணைக்குச் சொல்லித்தரும் காட்சிகள் போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும் இவை எதுவும் இத்திரைப்படத்தின் முழுமையில் எவ்வகையான இடறான அனுபவத்தையும் தருவதில்லை.
தந்தைவழிச் சமூகத்திலிருந்தும், சாதியச் சூழலிருந்தும் தமிழ் மனம் இன்னும் முற்றுமுழுதாக விடுபடாவிட்டாலும், அது தன்னளவில் இவற்றைத் தாண்ட எத்தனிக்கின்ற கீற்றுக்களையும், சில எதிர்பாராத சம்பவங்களின்போது மனிதர்கள் தமது ஆதி மானுடத்தன்மையான கருணையை மீளக்கண்டுபிடிக்கின்றார்கள் என்பதையும் இத்திரைப்படம் முடிகின்றபோது நாம் காண்கின்றோம்.
தற்பாலினர்/திருநங்கைகள்/இருபாலினர் போன்ற பாலினத்தவர்கள் அல்லது ஒருவகையான fluid தன்மையுடையவர்களைப் பற்றி அதற்கு வெளியில் இருப்பவர்கள் உரையாடுவதிலோ/கலைப்படைப்புக்களாக்குவதிலோ நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. மிகுந்த அவதானத்துடனேயே நம் சமூகத்தில் விளிம்புநிலையாக்கப்பட்ட இவர்களைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது நெறியாள்கை செய்த சொர்ணவேல் மிகுந்த விழிப்புணர்வுடன் இந்த விடயத்தை அணுகியிருக்கின்றார் என்றே சொல்லத்தோன்றுகின்றது.
காதல் என்பது நம் எல்லோருக்கும் வருகின்ற ஓர் உணர்வேயாகும். பால்/பாலினம் போன்ற வித்தியாசங்களைத் தவிர அந்த உணர்ச்சிகளும், தேடலும், தவிப்பும் தற்பாலினரிடமும் அவ்வளவு வேறுபாடுகள் இல்லாதிருப்பதை மிகையுணச்சியற்று 'கட்டுமரம்' காட்சிப்படுத்துகின்றது. நமது கிராமங்களில் எவ்வாறு இவ்வாறான விடயங்களை எதிர்கொள்வார்களென்பதையும், ஊர் மக்களை துவிதமுனையில் எதிராளிகளைப் போல நிறுத்தாது, இந்த தற்பால் காதலைப் போல, அந்த மனிதர்களையும் அவர்களின் இயல்பில் வைத்து புரிந்துகொள்ள முயல்கின்ற ஒரு திரைப்படம் என்பதால் 'கட்டுமரம்' நம்மை அவ்வளவு ஈர்க்கின்றது.
...................................................
(நன்றி: 'கலைமுகம் - 68')...................................................
0 comments:
Post a Comment