கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில மலையாள, தமிழ் திரைப்படங்கள்

Monday, September 02, 2019

1.

தமிழ்ச் சூழலில் திரைப்படம் சார்ந்து உலகத்தரம், சர்வதேசதரம் என்பவை அடிக்கடி பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று நாம் விதந்தோந்தும் பல பிறமொழிப்படங்களைப் பார்த்தால், அவை தமக்குள்ளிருக்கும் கதைகளை உள்ளூர் நிலவியலில் வைத்துச் சொல்லிய கதைகள் என்பது எளிதில் புலப்பட்டுவிடும். அவ்வாறு எல்லைகளைத் தாண்டி நமக்குள் புகுந்து நம்மைத் தொந்தரவுபடுத்தும் திரைப்படங்களுக்கான அண்மைய உதாரணமாக மலையாளப் படங்களான 'வைரஸை'யும், 'உயரே'யும் சொல்லலாம். இவை இரண்டும் கேரளப் பின்னணியில் சொல்லப்பட்டாலும், உலகளவில் தன்னை விரித்துக்கொள்கின்றது.

கேரளப்பின்னணியில் வாழாத நம்மைப் போன்றவர்களையும் அதற்குள்  இவை உள்ளிழுத்துக்கொள்கின்றன. உதாரணமாக 'வைரஸ்' படத்தைப் பார்க்கும்போது, எனக்குள் அதே போன்று இங்கே ரொறொண்டோவில் சில வருடங்களுக்கு முன் வந்த SARS நினைவுக்கு வந்துபோனது. இவ்வாறான வைரஸ் தொற்றுநோய்களுக்கு உடனே தீர்வுகள் இருப்பதில்லை. ஆகக்குறைந்தது தொற்றுநோயுள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமே இந்த வைரஸின் மூலம் வரும் இழப்புக்களைத் தவிர்க்கமுடியும். கேரளாவை விட நாங்கள் ரொறொண்டோவில் இரண்டு மடங்கானவர்களை இழந்திருக்கின்றோம். 'வைரஸை'ப் பார்க்கும்போது நம் சூழலில் இதைக் கட்டுப்படுத்த எப்படித் தீவிரமான பலர் உழைத்திருப்பார்கள் என்பதைப் பற்றி யோசிக்கவும்,  அவர்களையும் நன்றியுடன் நினைவுகூரவும் முடிந்திருந்தது.

'வைரஸ்' திரைப்படம் தனியே அதன் பாதிப்பு, இழப்பு, கட்டுப்படுத்தல், அதற்கு உழைத்த மனிதர்களை மட்டும் நினைவுகொள்ளாது, இந்திய நடுவண் அரசு இதை ஒரு 'தீவிரவாதிகளின் தாக்குதல்' எனச் சித்தரிப்பதற்காகச் செய்த உள்வீட்டு விவகாரங்களையும் வெளிப்படையாக இது அம்பலப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான நேரங்களிலும் அரசியல் தனக்கான ஆதாயங்களைத் தேட, பல்தேசியக்கம்பனிகள் போல அலைவதைக் காட்டுவதால்தான் 'வைரஸ்' எனக்கு இன்னும் பிடித்திருந்தது.

வைரஸைப் போலவே 'உயரே' அடிப்படையான சில உண்மைகளை வைத்து தனக்கான ஒரு கதையை நமக்குக் காட்டுகின்றது. பெண்கள், குழந்தைகள் மீது அதிக வன்முறையைச் செலுத்துபவர்கள் யாரென்ற தரவுகளைப் பார்த்தால், அதிகம் அவர்களோடு நெருக்கமான்வர்களாகவே இருப்பார்கள். அந்தப் பெண்ணின் மீது காதலன் வீசுகின்ற அஸிட், நமக்கு  நம் காதலிகள்/துணைகள் மீது  நாம் செய்த, செய்யவிரும்பும் வன்முறைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றது.

நேற்று மைக்கல் மூர் (Fahrenheit 9/11, Sicko) ஒரு பதிவில்  அமெரிக்காவில் நிகழும் mass shootingsல் ஏன் பெண்கள் எவருமே (வன்முறை/ஒடுக்குதல் போன்றவற்றை ஆண்கள விட அதிகம் அனுபவித்தும்) இந்த வெள்ளையின இளைஞர்களைப் போலக் கோபத்தில் சுட்டுத்தள்ள வெளிக்கிடவில்லை, ஆனால் ஆண்களே இவ்வாறான தாக்குதல்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்று கேட்டிருப்பது பற்றி நாங்கள் நிறையவே யோசிக்கவேண்டியிருக்கின்றது. இவ்வாறான வன்முறைகளுக்கு கீழைதேயம்/மேலைத்தேயம், படித்தவர்/படிக்காதவர் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை. அதுவும் நாம் ஆசை தீர நேசித்தவர்களும், நம்மை அதே விருப்புடன் நேசித்தவர்களும் ஒரு பொழுது பிரிந்துபோக விரும்பும்போது எங்கிருந்து நம்மிடையே 'வன்முறை' வியாபகித்துக்கொள்கின்றது என்பதை நிச்சயம் யோசித்தும் பார்க்கவும் வேண்டும்..ஒருவகையில் நாம் அன்பு செய்துகொண்டிருக்கின்றோம் என்றபடி வன்முறையைத்தான் மெல்ல மெல்லமாக உள்ளே வளர்த்திருக்கின்றோமா எனக்கூட குழப்பமடைய வேண்டியிருக்கின்றது.

2.

புலம்பெயர் சூழலில் திரைப்படம் சார்ந்து நான் நம்பிக்கை வைக்கும் நெறியாளர்கள் மிகச் சிலரே. அண்மையில் வெளிவந்த லெனின் எம். சிவத்தின் 'ரூபா' பல திறப்புக்களை நம் சூழலில் செய்திருந்தாலும், அது யாருடைய பார்வையிலிருந்து கதையைச் சொல்ல விரும்புகின்றது என்பதிலிருந்து, தேவையற்று சிலதைத் திணிக்க முயன்றது என்கின்ற சிக்கல்களும் இருக்கின்றது. சிறந்த இயக்குநர்களே அவ்வப்போது வீழ்ச்சியைக் காண்கின்றபோது, இந்தச் சரிவுகள் அவ்வளவு பொருட்படுத்தக்கவையல்ல. ஆனாலும் இன்னும் சிறப்பாக 'ரூபா'வை எடுத்திருக்கலாம் என்பதை அந்தப் படத்தைப் பார்த்தபோதல்ல, பிறகு சொர்ணவேலின் 'கட்டுமரத்தை'ப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது.

'கட்டுமரம்' மேலே நான் குறிப்பிட்ட நம் நிலவியலின் பின்னணியில் இருந்து நமக்கான கதையைச்  சொல்லி உலகத்தரமாக விரிவதற்கான மிகச் சிறந்த உதாரணம். மிஷ்கின் பழைய சோற்றைத் தண்ணியில் கலந்து மிளகாயும் வெங்காயும் கலந்து கையால் வழித்து வழித்துச் சாப்பிடும்போது, பல்லினத்தவர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை திரைவிழாவொன்றில் இருந்து பார்த்தபோது, 'ஆஹா நமது வாழ்க்கையை நாமும் இவ்வாறான அரங்குகளில் இருந்து பார்க்கும் காலம் கனிந்துகொண்டிருக்கின்றது' என்ற ஒரு சின்னப்பெருமை கூட வந்திருந்தது.

இந்தக் காட்சிகள் மட்டுமல்ல, எப்படி இத் திரைப்படம் நமக்கான கதைகளைச் சொல்லியபடி உலகத்தரமாக விரிகின்றது என்பதற்கு நாம் மட்டுமல்ல, இந்தக் கதைகளின் பின்னணி தெரியாதவர்களையும் இந்தக் கதையோடு அப்படியே ஒன்ரித்துவிடுகின்றார்கள் என்பதைப் பொறுத்தது., எப்படி சில ஈரானியப்படங்கள் நம்மையும் திரைப்படத்தின் பாத்திரங்களாக ஆக்கிவிடுகின்றதோ அதே போன்று.

3.

கட்டுமரத்திற்கும், ரூபாவிற்கும் அப்பாலே நின்று 'ஒற்றைப் பனைமரத்தை'ப் பார்க்கவேண்டியிருந்தது. நிறைய எதிர்ப்பார்ப்புக்களுடன் போய் ஒருவகையில் ஏமாற்றம் அடைந்த படமென்றுதான் 'ஒற்றைப் பனைமரத்தை'ச் சொல்வேன். பிறர் சிலர் விமர்சித்ததுபோன்று அது சொல்லும் அரசியல் கூட ஒரு பொருட்டாகத் தெரியவில்லை (ஒருவகையில் அது சொல்லப்படவேண்டியதும் கூட, அதில் மறுப்பேதுமில்லை). ஆனால் திரைப்படமாக அது உருவாகவில்லை. என்னைக் கவரும் திரைப்படங்களில் ஒன்று திரைக்கதை இறுக்கமாக இருக்கவேண்டும், அல்லது கதையே இல்லாவிட்டால் கூட காட்சிகளால் என்னை ஈர்த்துக்கொண்டிருக்கவேண்டும். இவை இரண்டிலும் கவனஞ்கொள்ளாது எல்லாவற்றையும் சாம்பராக்க முயன்றதன் அபத்தமாகத்தான் இதை விளங்கிக்கொண்டிருந்தேன்.
தனிப்பட்ட உரையாலின்போது நெறியாளருக்கு இருக்கும் அனுபவங்களை அறிந்துகொண்டபோது, அவர் அதைக்கூட தன் திரைப்படங்களில் முன்வைத்தால் அற்புதமான திரைப்படமாக வெளிருவந்திருக்குமே எனத்தான் இத்திரைப்படத்தைப் பார்த்தபின் எனக்குள் தோன்றியது.

கட்டுமரம், ரூபா, ஒற்றைப் பனைமரத்திற்குப் பிறகு, இப்போது இன்னமும் திரைக்கு வராத இன்னொரு திரைப்படத்தைப் பார்க்க முடிந்திருந்தது. அவர் நான் நம்பிக்கை கொள்கின்ற நெறியாளர்  ஒருவர் என்றாலும் இது அவரின் முழுநீளத்திரைப்படம் என்பதால் கொஞ்சம் பதற்றம் இருந்தது. சாதாரணமாகத் தொடங்கும் கதையை, முடிவில் உச்சமாகக் கொண்டுசென்றிருக்கின்றார். நம்மிடையே இருக்கும் எளிய கதைகளினூடாக எப்படி ஒரு 'அசாதாரணத்திரைப்படத்தை' உருவாக்க முடியுமென்பதற்கு இந்தப் புதிய படம் ஒரு சாட்சி.

இலக்கியம் சார்ந்தோ, திரைப்படம் சார்ந்தோ இங்கே ஒருவர் எல்லாவற்றையும் துறந்துவிட்டு அதனில் மூழ்குவதென்பது அவ்வளவு எளிதல்ல. நம்மிடையே அவ்வாறு தொடர்ச்சியாகப் பலர் இயங்கும்போதே அதன் விரிவும் ஆழமும் வெளிப்படும். அவ்வப்போது மின்னி மின்னித் தெறித்துப் போகும் படைப்புக்களையே அதிகம் ஆரத்தழுவ விரும்புகின்றவன் என்றபோதும், இனியான காலங்களில் ஒரு தொடர்ச்சி நம் புலம்பெயர் இலக்கிய/திரைப்படச் சூழலில் வெளிவரவேண்டும் என்றும் விரும்புகின்றேன்.

(Aug 17, 2019)

0 comments: