கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழப்போரின் இறுதிநாட்கள்

Monday, September 30, 2019


90களில் இயக்கத்தில் இணைந்துஅடுத்த சில ஆண்டுகளில் போராட்டத்தின் நிமித்தம் ஒரு கையையும்கண்ணையும் இழந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராளியாக இருந்த ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகச் சாட்சியாக இருந்து எழுதிய ஒரு வரலாற்றுப் பதிவு இது.  ஈழத்தில் இறுதி யுத்தம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்து பெரும் கொடூரத்துடன் நடந்து முடிந்திருக்கின்றதுபோர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள்போர் முடிந்தபின்னும் இன்னும் பெரும் உளவியல் நெருக்கடிகளை இராணுவம்/தடுப்புமுகாம் வாழ்க்கை என அனுபவிக்க வேண்டியிருந்தது.

போராளியாக இருந்த வெற்றிச்செல்விக்கு புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்ற களச்செய்தியைக் கேட்டபின் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளைப் போல அடுத்து என்ன முடிவு செய்வது என்பது பெரும் சிக்கலாகின்றது. இறுதியில் அவரின் உயிர் போவது இரண்டு இடங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றது. மக்களோடு சேர்ந்து சரணடையாமல் சயனைட் குடிப்பதை ஒரு இயக்கத் தம்பி தடுத்து நிறுத்துகின்றார். 'இனி எல்லாம் முடிந்தபின் இறப்பது என்பது வீணானது. தயவு செய்து சயனைட் அடித்துவிடாதீர்கள். இப்படித்தான் காயங்களோடு பங்கருக்குள் நின்றவர்களுக்கு முதல்நாளிரவு சொன்னேன், அடுத்தநாள் காலையில் போய்ப்பார்த்தால் எல்லோரும் சயனைட் அடித்துக் கிடக்கின்றார்கள். நீங்களும் அதைச் செய்துவிடாதீர்கள்' என இவர்கள் பதுங்குகுழிக்குள் கிடக்க, தன்னைத் தரையோடு தரையாக சாய்த்துக்கொண்டு விழும் எறிகணைக்களுக்கிடையில் அந்தத் தம்பி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றான் . வாழ்வா சாவா என்று முடிவுசெய்யும் நாணயச்சுழற்சியில் வாழ்வு வெல்கின்றது.
இன்னொருமுறை இராணுவத்தை முதன்முதலாகச் சந்திக்கையில் சயனைட்டை மீண்டும் வாயில் வைக்கமுயல்கையில் வெற்றிச்செல்வியோடு இருக்கும் அவரின் பால்யகாலத்தோழியும், அந்தத்தோழியின் தாயாரும் தடுத்து சயனைட் குப்பியைப் பிடுங்கி நிலத்தில் புதைக்கின்றனர். இப்படியான ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றிச்செல்வியை நாம் இழந்திருந்தால் ஒரு மாபெரும் சாட்சியத்தை இழந்திருப்போம் என்பதைவிட, ஒரு அருமையான போராளியை இழந்திருப்போம். மேலும் தன் கதைகள் எதையும் எமக்குச் சொல்லாமலே அவர் நம் நினைவுகளில் என்றென்றைக்குமாய் இல்லாமற்போயுமிருப்பார்.

ன்று ஈழப்போர் முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முடிந்தபின், போர் பற்றிய நிறையச் சாட்சியங்கள். புனைவுகள் என வரத்தொடங்கிவிட்டன. ஆனால் அநேகமானவை தாம் சார்ந்த நம்பிக்கைகளுக்குள் மட்டும் சுருண்டுவிடுவதால் அங்கே பலவேளைகளில் உண்மைகள் காணாமல் எங்கையோ தொலைந்துவிடுகின்றன. வெற்றிச்செல்வி எவ்வாறு போராளிகளின் ஓர்மத்தை பெரும்போருக்குள் விபரிக்கின்றாரோ அவ்வாறே கட்டாயமாகப் போரில் சேர்க்கப்பட்டவர்களின் உண்மை நிலைமைகளையும், அந்தப்பொழுதுகளில் மக்களின் மனோநிலை எப்படி இருந்ததென்பதையும் வெளிப்படையாகப் பேசுகின்றார். அதேவேளை இயக்கம் மீது ஆற்றாமையோடும், கோபத்தோடும் இருந்த  பெரும்பகுதி மக்கள் போராளிகளை ஒருபோதும் கைவிடத்தயாராகவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். கட்டாயமாகச் சேர்க்கப்பட்டபோது வாரித்தூற்றிய மக்களே, பிறகு போராளியாகிப் பசியோடு அவர்கள் திரிந்தபோது அவர்களை பசி தீர்த்து அரவணைத்தார்கள் என்பதையும் பதிவுசெய்கின்றார்.
இந்த இறுதியுத்தம் நாம் நினைத்தே பார்க்கமுடியாக் கொடூரம் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. எந்தப்பக்கத்திலும் எவ்வித நியாய/அநியாயங்களுக்கு இடம் இருக்கவில்லை. எப்படி இருந்த மக்கள் இப்படியாயிற்றனரே என எல்லா மனிதவிழுமியங்களும் கரைந்துபோய்விட்டிருந்த நாட்கள் அவை. போரின்போது நிகழும் அழிவுகளைப் போல போரின்பின் வந்த வெறுமையும் விரக்தியும் அவ்வளவு எளிதில் போகமுடியாதவை. அது தன் வாழும் காலம் முழுதும் தன்னோடு வரப்போகின்றது என்றே வெற்றிச்செல்வியும் குறிப்பிடுகின்றார்.
பத்தாண்டுகளானபின்னும், போரில் வெற்றிபெற்றபோதும் இன்றும் சிங்களப்பேரினவாதம் எதையும் விட்டுக்கொடுக்கவோ, பகிர்ந்துகொள்ளவோ தயாராக இல்லை. போராளிகளும் ஆயுதங்களும் இல்லாமலும், தமிழ் அரசியல் தலைமைகள் என்போரும் மீளாத்துயிலில் இருக்கும்போதும் ஏனின்றும் தமிழர் நிலங்களில் பாரியளவிலான இராணுவமுகாங்களும், கண்காணிப்புக்களும், புத்தர் சிலையுடனான குடியேற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டியிருக்கின்றது. இயல்பான வாழ்க்கையும்,  தன்மொழி, இனம் சார்ந்து தன்னிருப்பு அச்சுறுத்தப்படாத போதும் ஒரு சமூகம் ஒருபோதும் போராடப்போவதில்லை என்பது பேரினவாத அரசுக்குத் தெரியாமல் இருக்கப்போவதில்லை. சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்துவதன் மூலமே தமது அரசியல் இருப்பை வலுவாக்கலாம் என்ற பேரினவாத சிந்தனையையை ஒழிக்காதவரை எந்தக்கட்சியோ அல்லது எவரோ அரசுபீடமேறினாலும் நாட்டில் அவ்வளவு எளிதில் சுபீட்சம் வந்துவிடப்போவதில்லை.

ழப்போரின் இறுதி நாட்கள் என்ற இந்நூல் 80களைப் போல அரசியல் சூழ்நிலை மீண்டும் வந்தாலும்/இருந்தாலும் நம்மை உணர்ச்சி அரசியலுக்குள் போகவிடாது நமக்கு நிகழ்ந்த பேரழிவைத் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றது. நாம் இறுதியுத்தத்தில் செய்த நம் பக்கத்து தவறுகளிலிருந்து வரலாற்றை இன்னும் பின்னோக்கி (இந்நூலில் அது இல்லாதபோதும்) சென்று நமது எல்லோருடைய தவறுகளையும் மீள்வாசிப்புச் செய்யச் சொல்கின்றது. கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையிலும் அந்நியநாடுகளின் தலையீட்டுக்கு இரையாகி ஆயுதங்களை மீண்டும் அவசரப்பட்டுத் தூக்கவேண்டாமென நம் அந்தரங்கத்தோடு உரையாடச் செய்கின்றது.
ஓர் உண்மையான போராளி தான் போராட வந்ததன் நோக்கத்தை எந்தக் காலகட்டத்திலும் மறந்துவிடுவதில்லை. அந்த ஓர்மம், அந்தப் போராட்டம் தோற்றபின்னால்கூட எங்கோ ஓரிடத்தில் ஒளிர்ந்துகொண்டேதானிருக்கும். அதே சமயம் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவும் எதிரிகளென நினைத்துப் போராடியவர்களிடம்  அவ்வப்போது வெளிப்படும்  மனிதாபிமானத்தையும் மனந்திறந்துபாராட்டவே செய்யும் (வெற்றிச்செல்வியை பேரூந்தில் ஏற்றி தடுப்புமுகாமிற்கு ஏற்றிச்செல்லும் இளவயது இராணுவத்தினனின் மனிதாபிமானம் எவ்வித மறைத்தலுமின்றி இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது).
ஈழப்போரில் இறுதியில் நடந்தவற்றை வாசிக்க -முக்கியமாய் எதையும் அறியவிரும்பாது தமக்கான 'உண்மை'களுடன் போராட்டத்தை விளங்கிக்கொள்ள முயல்வோர்- இந்நூலைத் தேடிக் கட்டாயம் வாசிக்கவேண்டும். இதை மட்டுமில்லை அப்பு எழுதிய 'வன்னி யுத்தம்' மற்றும் வெற்றிச்செல்வி இந்நூலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாம் வாழ்வைப் பற்றி எழுதிய 'ஆறிப்போன வலிகளின் காயம்' போன்றவற்றையும் வாசிக்கவேண்டும். ஆகக்குறைந்தது இவற்றை வாசித்தாலாவது உணர்ச்சிவசப்படாமல், போலிப்பெருமிதம் இல்லாமல் எங்கே அமைதியாக அரசியல் சார்ந்து இருக்கவேண்டுமென்பதையாவது நாம் கற்றுக்கொள்ளலாம்.
----------------------------------------------------
(நன்றி: 'அம்ருதா' ‍ ஆவணி, 2019)

0 comments: