( ஓவியம்: முரளிதரன் அழகர்)
என் வாழ்வில் பயணம் என்பது மிக முக்கியமான பகுதியென நினைத்துக் கொள்பவன். எனது பதின்மங்களிலோ, இருபதுகளிலோ அவ்வளவாகப் பயணித்தவன் அல்லன். பயணங்கள் தரும் பேரனுபவத்தை எவருமே அருகில் இருந்து அன்றைய காலங்களில் எடுத்துச் சொல்லவும் இல்லை.
கனடா போன்ற புதிய நாடொன்றுக்கு எதுவுமே இல்லாமல் வந்து, தொடக்கத்தில் நாளாந்த வாழ்வில் அல்லாடியது ஒருபுறமென்றால், இன்னொருபுறம் படிப்பின் நிமித்தம் கடன் எடுத்து அதைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் மேலாக எடுத்தும் இருந்தது. இதற்கிடையில் ஒரு தீவிரமான காதல், அதன் நிமித்தம் வந்த பொறுப்புகள் மேலும் எனக்கான பயணங்களைத் தள்ளி வைத்திருந்தன.
ஆனால் இன்று இவற்றையெல்லாம் நிதானமாகப் பின்னோக்கிப் பார்த்தால், இத்தகைய பொறுப்புக்கள்/ தத்தளிப்புக்களுக்கிடையில் அன்றே பயணங்களைத் தொடங்கியிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். ஒரு ஆற்றுப்படுத்தலுக்காய் தற்செயலாகப் பயணமொன்றைத் தொடங்கிய எனக்குள் அன்றே 'பயணப்பூச்சி' நுழைந்துவிட்டது. ஆகவே பயணங்கள் இல்லாது ஒரு வருடத்தைக் கடந்துவிட்டால் எதையோ இழந்துவிட்டதான உணர்வை இந்தப் பூச்சி குடைந்து கொடுக்கத் தொடங்கிவிடும்.
சிலர் சொகுசான பயணங்களைச் செய்வார்கள். இன்னுஞ் சிலர் மிக எளிமையான (backpack) பயணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் புத்தரின் சொற்களை நம்புகின்றவன் என்பதால் மத்திய பாதையைத் (middle path) தேர்ந்தெடுப்பவன். ஆடம்பரமான பயணங்கள் எனக்கு உரித்தானதல்ல, ஆனால் அதேசமயம் ஒரு பயணத்தில் ஒன்று பிடித்துவிட்டால்அதை அனுபவிப்பதற்கு எதையும் செலவழிக்கும் மனோநிலையையும் வைத்திருப்பவன்.
தாய்லாந்து-கம்போடியா பயணத்தில் தெருக்கடைகளில் (5$,10$ இல்) சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அருமையான மீன் உணவு கிடைக்கின்றது என்று அறிந்து ஓரிடத்தில் 75$ கொடுத்து சாப்பிட்டிருக்கின்றேன். கனடாவிற்குள் பயணிக்கும்போது 30,000 தீவுகள் இருக்கும் இடத்தில் , அதை வானத்தில் இருந்து பார்ப்பது அவ்வளவு அழகு என்று சொன்னார்கள். அதற்காய் helicopter tour இற்காய், அந்தப் பயணத்திற்கான இரண்டு நாள் செலவை விட, கூடக் கொடுத்து அந்த அழகை இரசித்திருக்கின்றேன். இவ்வாறு வாழ்வதைத்தான் ஒருவகையில் நான் நெருக்கம் கொள்ளும் minimalism கற்றுத் தந்திருக்கின்றது. வாழ்வை எளிமையான வாழுங்கள், ஆனால் உங்களுக்கு விருப்பமான ஒரு விடயத்துக்காய் எந்த எல்லைவரையும் போகலாம் என்பது அதன் சாராம்சம்.
இவ்வாறு பயணங்கள் மீது பெருவிருப்பு இருந்தாலும், 20 நாடுகளுக்கு மேலாகப் பயணித்தாலும், இந்தியா, இங்கிலாந்து, கியூபா போன்ற நாடுகளுக்கு நான்கைந்து முறைகளுக்கு மேலாகப் போயிருந்தாலும், என்னை முழுமையான ஒரு பயணியாக முன்வைக்க மாட்டேன். ஆனால் நான் வியந்து பார்க்கும் ஒரு பயணியாக 60 நாடுகளுக்கு மேலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் துரை கணபதிப்பிள்ளையைச் (https://www.facebook.com/suresh.kanapathypillai) சொல்வேன். நம்மவர்களில் அவர் அசலான backpacker Traveller. அவரளவுக்கு இவ்வளவு எளிமையாகவும், கடுமையான இடங்களை நோக்கியும் என்னால் பயணிக்க முடியாது என்பது அவரின் பயணங்கள் மீது அதிக வாஞ்சையை எனக்கு ஏற்படுத்துகின்றது.
இப்போது அவர் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றார். அதுவும் சாதாரண பயணிகள் செல்லப் பிரியப்படாத குவாத்தமலா, எல்-சல்வடோ, நிக்கரகுவா போன்ற நாடுகளுக்குள் மிகக் குறைந்த செலவில் பயணங்களை தனித்துச் செய்து கொண்டிருக்கின்றார். அதைவிட என்னை வியக்க வைப்பது அவர் தினமும் அதை எழுத்தில் பதிவு செய்து கொண்டிருப்பதாகும்.
எனக்கு தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லையென்றாலும், பயணிக்கும்போது இயன்றளவு அன்றன்று நடக்கும் விடயங்களை எழுதி வைக்க முயல்வேன். ஏனெனில் இதையெல்லாம் பின்னர் எழுதலாம் என்று நினைத்தாலும், ஒருநாளிலேயே நிறைய விடயங்கள் நடந்திருக்கும். அடுத்த நாள் வரும்போது முதல்நாள் நடந்த சிறிய அழகான விடயங்கள் மறந்து போயிருப்பதை பயணங்களில் பார்த்திருக்கின்றேன். அப்படி என் முதல் மெக்ஸிக்கோப் பயணத்தில் குறிப்புகளாக எழுதியவை பின்னர் என் நாவலுக்கு மிகவும் உபயோகமாகவும் இருந்தது.
இவ்வாறு நாளாந்த பயண அனுபவங்களை சிறுகுறிப்புகளாக எழுதி வைப்பதே எவ்வளவு கடினமென்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒருநாளில் நிறைய விடயங்களைச் செய்து விடுதி வரும்போது அவ்வளவு அலுப்பாக இருக்கும். காலை எழும்பி எழுதலாம் என்றாலும் அன்றைய நாளுக்கான திட்டங்கள் முன்னே வந்து நிற்கும்.
இவ்வளவுக்கிடையிலும் தினமும் பயண நாட்குறிப்புக்களை அதுவும் விரிவாக சுரேஷ் எழுதிக் கொண்டிருப்பதற்கு நிறைய பொறுமையும், உழைப்பும் வேண்டியிருக்கும். சுரேஷ் இப்படி பயணக் குறிப்புகளை விரிவாக எழுதினாலும் அதை தொகுத்து நூலாக்கும் விருப்பு அவருக்கு இருந்ததில்லை. அது அவரது தெரிவு/விருப்பு என்றாலும், முகநூலைத்தாண்டி அவர் இதை ஏதேனும் ஒரு வலைப்பதிவிலோ/இணையத்தளத்திலோ சேகரம் செய்ய வைக்க வேண்டும்.
என் இருபதுகளில் இப்படி எதனையும் பயணங்கள் சார்ந்து வாசிக்கச் சாத்தியம் இருக்கவில்லை. இன்று இருபதுகளில் இருப்பவர்களுக்குப் பயணிப்பதற்கான எல்லைகள் விரிந்தாலும், அவர்களின் பயணங்கள் ஆழமற்றதாக இருப்பதையும் கண்டிருக்கின்றேன். எனவே இவ்வாறான பல்வேறு வகையான அனுபவங்களை வாசிக்கும்போது நாம் பயணங்கள் பற்றி புரிந்து வைத்திருப்பதை மீளாய்வு செய்து நம்மை நேர்த்தியாக்க உதவலாம்.
இப்படித்தான் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கம்ரன் (https://www.facebook.com/KamranOnBike) என்பவர் சைக்கிளில் ஆர்ஜெண்டீனாவில் இருந்து அலாஸ்கா வரை சென்றதைப் பின் தொடர்ந்திருக்கின்றேன். அதற்கு முன்னர் அவர் வசித்துக் கொண்டிருந்த ஜேர்மனியில் இருந்து பாகிஸ்தானுக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றார். அண்மையில் பாகிஸ்தானில் இருந்து பாலைவனங்களினூடாக ஆபிரிக்காக் கண்டத்தினூடு பயணித்து தென்னாபிரிக்காவின் கடைசி முனையை நேற்றுத் தொட்டிருந்தார்.
இப்படித்தான் எத்தனையோ மனிதர்கள் தமது பெரும் சாதனைகளை நிகழ்த்திவிட்டு அமைதியாக வாழ்ந்துவிட்டு இப்பூமியிலிருந்து நீங்கிவிடுகின்றனர். அவர்கள் இதையெல்லாம் அங்கீகாரத்துக்காகவோ, எவருக்கும் நிரூபிப்பதற்காகவோ செய்யவில்லை என்பதுதான் முக்கியமானது. ஆனால் நமக்கு இந்த சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் 'லைக்' கிடைக்கவில்லை என்றாலே -அதனால் எந்தப் பயனும் இல்லை என்றால் கூட- மனஞ்சுருங்கி விடுகின்றவர்களாக இருக்கின்றோம். ஒவ்வொரு சிறுசிறு செயலுக்கும் நாம் யாரினதோ அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்பவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே நாங்கள் கொஞ்சம் இந்த மெய்நிகர் உலகிலிருந்து வெளியே வந்து பார்க்கலாம். இந்த உலகில் தாங்க முடியாத தனிமை என்று எதுவுமே இல்லை. இந்தத் தனிமை தாங்க முடியாதது என்று மறைமுகமாக கற்பித்துக் கொண்டிருப்பதும் இந்த மெய்நிகர் சமூக ஊடகங்கள்தான். அதிலிருந்து தப்பித்து கொஞ்சம் பயணிக்கவோ, புத்தகங்களை விரித்து வாசிக்கவோ செய்தால் இன்னும் ஒரு உலகம் விரியும். அது அவ்வளவு அழகானதாக, நம் ஆழ்மனதின் விருப்புக்களோடு உரையாடும் ஒரு இனிய தோழமையாக மாறிவிடவும் கூடும்.
************
( Oct, 2024)
0 comments:
Post a Comment