கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 55

Thursday, November 07, 2024

னடா - இந்தியா உறவுகள் இப்போது மிக மோசமான நிலைமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து குடிபுகும் மாணவர்கள் மீதொரு ஒவ்வாமை கனடிய பொதுச்சமூகத்தில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு இரு நாட்டு உறவுகள் மேலும் மேலும் சிக்கலாகி வந்தபடி இருக்கின்றன.

கடந்த வாரம் கனடிய அரசு, இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து ஆறுக்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருந்தது.
இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இந்தியாவின் உளவுநிறுவனம் பின்னால் நின்று காலிஸ்தான் ஆதரவுள்ள இந்திய வம்சாவளி கனடியர் ஒருவரைப் பொதுவெளியில் சுட்டுக் கொன்றமையே காரணம். இவ்வாறான காலிஸ்தான் ஆதரவுள்ள இன்னொருவரை அமெரிக்காவில் கொல்ல முயன்றபோது இந்திய உளவுத்துறை வசமாக மாட்டுப்பட்டும் இருந்தது.

அமெரிக்காவோ, கனடாவோ தனது குடிமக்கள் மீது வேறு நாட்டில் எவரும் கைவைத்தால் கூடஅவர்களைக் காப்பாற்ற - அது ஒருவகையில் அவர்களின் தன்மானத்துக்கான சவால் என்பதால்- கடைசி எல்லைவரை செல்லக்கூடியது. அப்படி இருப்பவர்களின் நாட்டில் இன்னொரு அரசு வாடகைக் கொலைகாரர்களை வைத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பது ஓர் எளிய பாடம்.

இந்தக் கொலைகள்/கொலை முயற்சிகளுக்கு முன்னரும் ஒரு கொலை நடந்திருந்தது. எயர் இந்தியா விமானக் குண்டு வெடிப்பில் (காலிஸ்தான்/பொற்கோயில் பிரச்சினையில் 80களில் நடந்த சம்பவம்) குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பஞ்சாபியர் பட்டப்பகலில் வைத்து வன்கூவரில் கொலைசெய்யப்பட்டார். இந்தளவு வயதானவரை (80களை அண்டியவர்) கொல்லப்பட்டபோதே இது சும்மா செய்யப்பட்ட கொலையல்ல, கடந்தகால நிகழ்வுகளின் பழிவாங்கலாக இருக்குமென நண்பரொருவரிடம் சொல்லியிருந்தேன். இப்போது அந்தக் கொலைவழக்கும் கனடிய அரசால் தூசி தட்டப்பட்டு, இரு வாடகைக் கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே அந்தக் கொலையின் பின்னணியார் யார் இருந்தார்கள் என்கின்ற விபரங்களும் விரைவில் வெளியிடப்படலாம்.

கனடிய அரசு, ஒரு வணக்கஸ்தலத்தின் முன் நடந்த இந்தக் கொலையை பற்றி இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்திய அரசோ விளக்கம் கொடுப்பதை விடுத்து கடந்த வருடம் இந்திய தூதுராலயத்தில் இருந்த கனடிய அதிகாரிகள் பலரை வெளியேற்றியது. அதுமட்டுமில்லாது அப்போது கனடியர்களுக்கு விஸா கொடுப்பதையும் இந்திய அரசு தடுத்து நிறுத்தியது.

அப்போதும் கனடிய அரசு நிதானமாகவே இந்த விடயத்தைக் கையாண்டது. பதில் நடவடிக்கையாக எந்த எதிர்விடயங்களையும் செய்யவில்லை. இதற்கிடையில் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறை இருப்பதற்கான ஆதாரங்களைப் பார்க்க கனடிய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்தது.

அந்தவகையில் கனடாவில் மூன்றாவது பலமான தரப்பாக இருக்கும் (ஒரளவு இடதுசார்புள்ள நான் ஆதரிக்கும் புதிய ஜனநாயக் கட்சி) தலைவரான ஜஸ்மீட் சிங்கும் இந்தியாவின் தலையீடு கனடாவில் இருப்பதை, ஆதாரங்களைப் பார்த்தவர் என்றவகையில் பொதுவெளியில் அறிவித்தார்.

கனடிய அரசு நிறைய அவகாசம் கொடுத்தபின்னும், இந்திய அரசு இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கொடுக்காதபோது இப்போது கனடிய அரசு இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து 6இற்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருக்கின்றது.

 

ந்த விடயம் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, குடிவரவாளர்களாக வரும் இந்தியர் (மாணவர்கள்) மீது ஒவ்வாமையும், இனத்துவேஷமும் கனடாவில் இப்போது அதிகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்பவை 'வெள்ளையினப் பெருமை' உள்ள நாடுகள் என்பதை நாம் நன்கு அறிவோம். இனவாதம் வெளிப்படையாகத் தெரியாது இந்தநாடுகள் தம்மை மறைத்துக் கொண்டிருந்தாலும், இனத்துவேஷம் உள்ளோடியிருப்பதை அகதிகளாக/ குடிவரவாளர்களாக வந்த நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில் சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது ஈழத்தவர்கள் இலங்கையிலிருந்த சாதி உள்ளிட்ட விடயங்களை அப்படியே அள்ளிக்கொண்டு வந்தமாதிரி இந்தியர்களும் எண்ணற்ற விடயங்களை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர். ஒருவர் தனது நம்பிக்கைகள்/விருப்புக்களை தனிப்பட்டு வைத்திருப்பதற்கும், அதைப் பொதுவெளியில் பகட்டாக காட்டுவதற்கும் வித்தியாசங்களுண்டு. இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான்.

ஆனால் இப்போது இந்திய மாணவர்கள் மீது எல்லோரும் கவனம் குவித்திருப்பதால் அது பெரும் விடயங்களாக ஊடகங்களினால் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. இதனால் இப்போது இனவாதம் சம்பந்தமான நிகழ்வுகள் பொலிஸ் நிலையங்களில் நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்களை பொதுப்புத்தியோடு வெறுக்கின்ற நம்மவர்க்கும், இது எல்லாமே இறுதியில் எமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரமான வாழ்வையும் கேள்விக்குட்படுத்தும் என்பதை அறிந்தார்களில்லை. நாமும் அதே 'மண்ணிறமானவர்கள்', நாமும் இப்படி ஒருகாலத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறந்துவிடுகின்றோம். இந்திய மாணவர்களும், தம்மைப் போல அதிக அளவில் சர்வதேச மாணவர்களாக வரும் சீன மாணவர்களைப் போன்று, அவர்கள் எவ்வாறு 'அலட்டிக்கொள்ளாது/படங்காட்டாது' பொதுச்சமூகத்தில் எளிதில் இணைந்துகொள்கின்றார்கள் என்கின்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேவையற்ற பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இவையெல்லாவற்றின் நீட்சியாக கனடிய அரசு இப்போது குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்கள் கனடாவில் குடியுரிமை/நிரந்தர வதிவிடம் பெறும் சட்டங்களை மிக இறுக்கமாகக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது.

கனடா/அமெரிக்கா/இங்கிலாந்து/ஆஸ்திரேலியா ஒரே நேர்கோட்டில் தமது முடிவுகளை எடுக்கக் கூடியவை. இவ்வாறு சர்வதேச மாணவர்களாக வந்தவர்களை இங்கிலாந்தில் தொடர்ந்து தங்கவிடாது சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தனது சட்டங்களை இறுக்கியதை நாம் ஏலவே அறிவோம். இப்போது கனடாவும் அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது.

அதுமட்டுமின்றி இப்போது கனடிய லிபரல் அரசு கனடாவில் ஒவ்வொரு வருடமும் ஏற்றுக்கொள்ளும் குடிவரவாளர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதாக அறிவித்திருக்கின்றது.

குடிவரவாளர்களின் பெரும்பான்மை ஆதரவால் அரசமைத்த லிபரல் அரசே இவ்வாறு குடிவரவாளர்க்கான அனுமதி/சட்டங்களை இறுக்கின்றபோது, அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள தேர்தலில் வெல்லச் சாத்தியமுள்ள வலதுசாரியான பழமைவாதக் கட்சி பெரும் மாற்றங்களை குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்களில் நிச்சயம் கொண்டுவரும். டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தபோது, பல இந்தியர்கள் அங்கே வதிவிட அனுமதி மறுக்கப்பட்டு, கனடாவுக்கு எல்லை தாண்டியபோது கனடா அவர்களை ஏற்றுக்கொண்டது. இனி அமெரிக்காவிலும், கனடாவிலும் வலதுசாரி அரசுக்கள் வெல்லும் சாத்தியங்கள் இருக்கும்போது நம்மைப் போன்ற அகதிகள்/குடிவரவாளர்களே பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கப் போகின்றது என்பதுதான் துயரமானது.

***********

 

(Oct 25, 2024)

0 comments: