கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தோணிகள் வரும் ஒரு மாலை

Saturday, December 25, 2004

இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும்

தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீட்டு விழா மாலை ஐந்து என்று போட்டிருந்தனர். நல்ல நித்திரையிலிருந்த நான் அரக்கப்பரக்க எழுந்து ஐந்து மணிக்கு கிட்டவாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இங்கே நடக்கும் விழாக்கள் எப்போதும் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் ஆரம்பிப்பது சம்பிரதாயம் என்றாலும், நான் இந்த விழாவிற்கு நேரத்திற்கு ஒரு காரணமிருந்தது. எனென்றால் முந்தி ஒருக்காய் புத்தக வெளியீடு ஒன்றிற்கு கொஞ்சம் தாமதாய் போக புத்தகம் எல்லாம் விற்று தீர்ந்திருந்தது. ஆனால் அதிசயமாய் புத்தக வெளியீடை இன்னும் நடத்தப்படாமல் இருந்தது. என்னடா இதுவென்று வரவேற்று கொண்டிருந்தவரிடம் கேட்டபோது, 'ஏன் எல்லாம் சம்பிரதாயமாய் இருக்கோணும்? புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் புத்தகம் வெளியிடோணும் என்று ஏன் நினைக்கிறியள்?' என்று போட்டுத்தாக்கினார். 'சரி நீங்கள் சொன்னால் சரியாகத்தான்' இருக்குமென்று அவரிடம் சொல்லி அமைதியாகிவிட்டேன். அந்த அனுபவத்தால் இந்தவிழாவிற்கு கொஞ்சம் பிந்திப்போனாலும் இசைத்தட்டு விற்று முடிந்துவிடுமோ என்று பயத்தில் நேரத்திற்கு போயிருந்தேன். இவர்களும் சம்பிராதயத்தை உடைப்பவர்கள் என்ற என் எண்ணத்தை ஒரு மணித்தியாலம் பிந்தித் தொடங்கி, நாங்கள் typical தமிழாக்காள், நீயன்டும் பயப்பிடத்தேவையில்லை என்று நிரூபித்துவிட்டினம். இப்ப நிகழ்ச்சிகளுக்கு போக சரியாய்ப் பயமாயிருக்கிறது. வரும் மனிதர்கள் எல்லாம் இறுக்கமாய் உட்கார்ந்து இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தங்கள் கூட்டணியாக்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள். சிலருக்கு வெங்கட்சாமிநாதனைப்பற்றி பதிவுகளில் நானெழுதியது மனவருத்தம் போல. வழமையாய் சிரித்துப்பேசும் ஒருவர் சுவரோடு ஒதுங்கிக்கொண்டார். இன்னொருத்தரிடம் அவரிடம் படைப்புக்களை பேசுக்கொண்டிருக்கும்போது உட்காரப்போறன் என்டார். சரியென்று அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கதைக்க, சரியாய் குளிராய்க்கிடக்கிறது என்று முன்னுக்குப்போனார். மனுசனுக்கு குளிருது போல இருக்கிறது என்று நானும் முன்னுக்கு போய் உட்கார்ந்தேன். பிறகும் தம்பி இதிலையும் குளிராய்க்கிடக்கிறது என்று சொன்னபோது, என்னடாப்பா நான் Jacket கழட்டிப்போட்டிருந்தே குளிரவில்லை. இந்த மனுசன் Jacketயோடு இருந்தும் குளிருது என்கிறதே எண்டு யோசித்தேன். பிறகுதான் என்ரை ஆறாம் அறிவு (?) விழித்துக்கொள்ள, அண்ணை இலக்கிய அரசியல் ஆடத்தொடங்கிறார் என்று புரிந்துவிட்டது. நாளைக்கு இந்தவிழாவைப்பற்றி ஏதாவது எழுத, யாராவது பக்கத்தில் இவர்தான் உட்கார்ந்திருந்தார் என்று சொன்னால் அவருடைய இமேஜ் என்னாவது? சரி நீங்கள் போய் முன்னுக்கு இருங்கோ. நான் கனநேரம் நிற்கமாட்டேன். CDஐ வாங்கிக்கொண்டு போய்விடுவன் என்று சொல்லி பின்னாலிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டேன். எவ்வளவு வயதுபோனாலும், தனிமனித நட்பையும், இலக்கிய விமர்சனத்தையும் பிரித்துப்பார்க்க பலரால் முடிவதில்லை. உண்மையில், வெங்கட்சுவாமிநாதனின் விருதிற்கு பின்பான சுந்தர ராமசாமியிற்கும் வெங்கட்சாமிநாதனுக்கிடையிலான விவாதம் மிகுந்த கவலையைத் தந்தது. வெ.சா ஒருகட்டத்தில் சொல்லியிருந்தார், சுராவை இனி சுந்தரராம்சாமி என்று கூட அழைக்கமுடியாது என்று. எதற்கு நட்பையும் இலக்கிய விமர்சனத்தையும் ஒன்றாக கலக்கின்றனர் என்று யோசித்தேன். எத்தனை காலமாக பேணிய நட்பை ஒரு விருதிற்கான விவாதத்தில் தொலைத்துக்கொண்டு இருவேறு துருவங்களாகிவிட்டனர்.

சரி விசயத்திற்கு வருவோம். தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டில் 12 பாடல்கள் இருக்கின்றது. ஏற்கனவே இதற்கு இசையமைத்தும் பாடிய ராஜ் ராஜரத்தினம் கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் என்ற இசைத்தட்டை சிலவருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இது இவரது இரண்டாவது வெளியீடு. 12 பாடல்களில் 9 பாடல்கள் சேரனுடையது. ஏனைய மூன்றில், இரண்டு வ.ஜ.ச.ஜெயபாலனுடையது. ஒன்று செழியனுடையது. பாடல்களைக் கேட்கும்போது ஜெயபாலனுடைய பாடல்கள் இலகுவாய் பாடுதற்குரியதான ஒருவிதமான இலயத்தில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது( அவருடைய கவிதைகளில் எல்லாம் இப்படியான ஒருபண்பு இருப்பது அவர் இன்னும் மரபுக்கவிதை முறையை முழுமையாக அறுக்கவிரும்பாமல் இருப்பதால் இருக்கக்கூடும்). ஜெயபாலனுடைய பாடல்களில் ஒருவித குதூகலமும், தவறுகளை இழைத்தும், வருந்தியும், குறும்புசெய்தும் வாழ்வில் நகர்ந்துகொள்ளும் மனிதமனத்தைக் காணலாம். சேரனுடைய பாடல்கள்/கவிதைகள் அப்படியில்லை. ஒரு வித அறிவுஜீவித்தனத்துடன் ('எல்லோரையும் போல அந்த நேரத்தில் நீ அழவில்லை', 'நான் தரையில் வாழும் பறவை அல்ல/நான் உனக்கும் அல்ல') என்று சோகம் நிரப்பிக்கிடக்கும் பொழுதிலும் உணர்ச்சிவசப்படுவதேயில்லை. இந்த இசைத்தட்டில் இரண்டாம் பாடலான 'காற்றோடு போனதெல்லாம்' சேரனின் புலம்பெயர்வாழ்வை சொல்வது போலப்பட்டது. 'வேற்றவர் நாட்டுக்குள்ளே/வெறென்ன கிடைக்குமென்று/தீட்டிய பாடலொன்று/ தெருவோரம் முழங்கக்கேட்டேன்' பாடலில் புலம்பெயர்ந்த ஒரு கவிஞனின் நம்பிக்கையீனம் மற்றும் நம்பிக்கை தெரிகிறது. தமிழை வாழ்த்தியும் சேரனின் ஒருபாடலுண்டு. தமிழை வாழ்த்திப்பாடும்போது, எப்படியென்றாலும் பாரதியின் தாக்கம் எல்லாக் கவிஞர்களுக்கு வந்துவிடுகிறது. 'பூமியின் அழகே/ பரிதியின் சுடரே/ பொறுமையின் வடிவே/தமிழே' என்று பாடல் ஆரம்பிக்கும்போது பாரதியும் உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுகிறார். இன்னும், 'எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்/ ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்/எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்/எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்' என்கின்றபோதும், வேற்று நாடுகள் சென்றெனினும் தமிழுக்கு வளங்கள் சேர்ப்பீர் என்று பாரதியின் ஏக்கம் நினைவிற்கு வந்து விடுகிறது. ஒருவிதமான் பைலா பாடலும் உண்டு. ஆடுங்கள் ஆடுங்கள் என்று எல்லா வசனமும் முடிகிறது. இப்போதைக்கு கேட்கும்போது சாதாரமாய்த்தான் தெரிகிறது. இதிலை சேரனின் எழுதுகோல வைரமுத்து வந்து உட்கார்ந்தது மாதிரித்தெரிந்தது. பாடல் ஆடக்கூடியதாய் இருக்கிறதா இல்லையா என்று Molson Canadian குடித்து கேட்டபின் சொல்கிறேன். எவடம் எவடம் என்ற பாடலும் சாதாரண வகைப்பாடல். இது சேரனின் நாடகப்பிரதியான, ஊர்ப்போக்கில் இணைக்கப்பட்ட பாடல் என்று பிறகு கேள்விப்பட்டேன். சாதியைப்பற்றித்தான் சாடைமாடையாகச் சொல்கிறது. எப்பதான் சேரன் தன் ஞானக்கண்ணைத் திறந்து சாதி பற்றி பேசப்போகிறாரோ தெரியாது. கவிஞர் எல்லாவற்றையும் எழுதவேண்டுமா என்று யாராவது கேட்கக்கூடும்? ஆனால் ஆரம்பத்திலிருந்தே 'பேரிளம் பெண்களின் காதலனாகவே கழிந்த இவ்வாழ்வில்' என்று எழுதி, இந்த இசைத்தட்டிலும் 'முற்றாத காதலோடு முழுமையத் தேடுகிறேன்' என்று காதலை PhD அளவில் வெட்டிக்கொத்தி ஆராய்ச்சி செய்பவர் மற்ற விசயங்களுக்கும் கொஞ்சம் நேரத்தைச் செலவழிக்கலாம் என்பது என்னுடைய நினைப்பு.

ஜெயபாலனுடைய இரண்டு பாடல்களும் மனதில் சட்டென்று அமர்ந்துகொள்கின்றன. ஒரு பாடலின் ஆரம்பமே, 'கால மகள் மணலெடுத்து/ கோலமிட்ட கடற்புரத்தில்/ஏழைமகள் ஒருத்தி... என்று பாடலுக்குரிய அமைவுடன் வார்த்தைகள் வந்துவிழுகின்றன. வாழ்வின் துயரம் இலகுவான சொற்களில் பாடப்பட்டாலும் மனதை நிரப்புகிறது. 'தானாய் விடிவெள்ளி/ தோன்றுகின்ற சங்கதிகள்/வானத்தில் மட்டும்/ வாழ்வினிலே இருள் தொடரும்' என்ற வரிகளில் வாழ்வின் நியதி துலங்குகிறது. எனக்கு மற்றப்பாடல்தான் நன்கு பிடித்திருந்தது. மலையகப்பெண்ணின் துயரைச் சொல்லும் பாடல். ஒரு இடத்தில், தேயிலை கொய்யும் பெண்ணின் கண்ணீர்தான் மகாவலியாய் பெருக்கெடுக்கிறதோ என்கின்றமாதிரி அருமையான உவமையுடன் வரும். இன்னும், 'யாழ்ப்பாண செம்மண்ணில் புல்லறுக்கும் தேவதையே/ வன்னியிலே காடழித்து வயல் விளைக்கும் அருந்ததியே/ மீன்பாடும் தேனாட்டின் தெம்மாங்கு ஊர்வசியே/ மலையகத்து தேவதையே பேரணியில் வாரீரோ!' வரிகளில் கவிஞரின் நுண்ணிய அவதானங்கள் கேட்பவரின் மனதிலும் எட்டிப்பார்க்கிறது. செழியனின் 'மழை பெய்த நாளொன்றில்' பாடலின் துயர் பெருக்கெடுத்தோடுகிறது. விட்டு வந்த சொந்தமண்ணையும், வேரைப் பதிக்கமுடியாத அந்நியநாட்டிலுமான வாழ்வின் கொடுங்கனவை இந்தப்பாடல் பேசுகிறது. 'துயரங்கள் போவேன்று நிலம் விட்டு நிலம் வந்தும் துயராய் வழிகின்றதே/ பெருந்துயராய் வழிகின்றதே/ வாழ்வு துயராய் வழிகின்றதே'. நம்மில் பலருக்கு இதுதானே யதார்த்தம்.

மற்றபடி ராஜ் ராஜரத்தினத்தின் உழைப்பு மதிக்கப்படவேண்டியது. 'எங்களுக்கென தனித்துவமான இசை வடிவங்களை உருவாக்கிற ஒரு பெரும் முயற்சியில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது' என்ற அவரது ஆதங்கத்தைப் புரிந்து அவரை நாமும் உற்சாகப்படுத்துவோம். இரண்டாவது இசைத்தட்டில் நிறைய சினிமா முன்னணிப்பாடகர்கள் பாடியிருக்கின்றனர். இது பலமா பலவீனமா என்பதை காலத்தை தீர்மானிக்கவிடுவோம். முதல் இசைத்தட்டில் சொன்ன, 'ஒரு வழிப்பாதையாக இருந்துவரும் ஈழ-தமிழக கலை இலக்கியப் பாலம், இரு வழிப் பாதையாக திறந்துவிடப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில்...' என்கின்ற வரிகளில் ராஜ் ராஜரத்தினம் போன்றவர்களின் விருப்புக்கள் எத்தனை விதம் சாத்தியப்பட்டிருக்கின்றது என்பது பற்றி அறியவும் ஆவல்.

4 comments:

இளங்கோ-டிசே said...

for comments (testing)

12/25/2004 02:35:00 PM
-/பெயரிலி. said...

நேற்றைக்கு முழுக்கப் பின்னூட்ட முயன்று ஊடிப்போனேன்;-)
இப்போதாவது வேலை செய்கிறோமே

12/25/2004 03:44:00 PM
இளங்கோ-டிசே said...

Though, I'm still having some problems, the comments section is working right now (atleast for me).

12/25/2004 05:50:00 PM
ROSAVASANTH said...

நானும் முயன்று பார்துவிட்டு விட்டுவிட்டேன்.

சேரனும், ஜெயபாலனும் இப்படி பாட்டெழுத வருவது நல்ல விடயம். டீஜே, இதில் தேர்ந்தெடுத்த சில பாடலகளை இணையத்தில் தர முயற்சிக்கலாமே! (சற்று காலமெடுத்தேனும்).

12/25/2004 09:52:00 PM