கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்

Saturday, December 04, 2004

சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் தனது கணவன் மற்றும் மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். நல்லவேளையாக இரண்டு பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிட்டன. சுதந்திரம், வசதிகள் என்று இன்னபிற விடயங்கள் கோலோச்சுகிற இடத்தில்தான் இப்படியான கொடூரமான விடயங்கள் அதிகம் நிகழ்கிறதோ என்ற எண்ணம் வந்தது. இந்தப்பெண்ணும், அடுத்தடுத்து பிள்ளைகள் பெற்றதால் வருகின்ற ஒரு உளவியல் வியாதிக்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று இப்போது காரணம் சொல்கிறார்கள். இந்தவிடயம்பற்றிப்பேசும்போது, ஒரு குழந்தை அழுவதைவிட பன்மடங்கு அதன் தாயார் குழந்தையைக் கருவில் சுமக்கும்போதும், குழந்தைபிறந்தபிறகும் அழுகின்றார். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு குறைவென்று உளவியல் நிபுணர் ஒருவர் தொலைக்காட்சியில் சொன்னார்.
................
தற்கொலைகள் மிகுந்த பீதியை ஏற்படுத்தக்கூடியன. கனடா வந்தபுதிதில், எனக்கு இங்கே முதன்முதலில் அறிமுகமான நண்பன் தற்கொலை செய்தபோது, போரிலிருந்து தப்பிவந்த நாங்கள் நிம்மதியாக இங்கேயும் இருக்கமுடியாது என்ற உண்மை புரிந்துபோனது. அதுவும் அவன் தற்கொலை செய்துகொண்டுவிதம் கொடுரமானது. தன்னை பொலீத்தினால் சுற்றி நெருப்பு வைத்து மாய்த்துக்கொண்டான். பிறகு பலநாட்களாய் அவன் எரிந்த இடத்தில் புற்கள் கருகியிருந்ததைப் பார்த்தபடி பாடசாலை போயிருக்கிறேன். அந்த சுவடுகள் என்றைக்கும் அழிய முடியாதன. பிறகு கொஞ்சம் வளர்ந்து, வளாகத்தில் இருக்கின்றபோது ஒரு தோழியின் (நல்ல நெருக்கம் இல்லையென்றாலும்) தற்கொலை மனதைக் கரைத்தது. அதுவும் கோடையில் பாடத்திற்கு பதிவுசெய்துவிட்டு, வகுப்பிற்கு போகாது நண்பர்களோடு கிறிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஏன் girlsஐ விளையாட்டில் சேர்க்கமாட்டீர்களா என்று கேட்டு எம்மோடு சேர்ந்து விளையாடிய சில தினங்களின் பின், ஆறொன்றில் குதித்து தன்னை இல்லாமல் ஆக்கிக்கொண்டாள். இப்படி இன்னும் செவிவழிக்கதையாக, பத்திரிகைகளில் வாசித்தவையாக எத்தனையோ தற்கொலைகளை கேள்விப்பட்டாயிற்று. கணவனை இழந்த ஒரு தமிழ் தாய், தனது இரண்டுபிள்ளைகளை காரின் trunkற்குள் வைத்து மூடி தன்னையும் மாய்த்துக்கொள்ள முயன்றது அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாதது. இறுதியில் அவர் காப்பாற்றப்பட இரண்டு பிள்ளைகளும் இறந்துபோய்விட்டனர். அந்தத்தாய் தன்னை ஏன் சாகவிடாமல் காப்பாற்றினீர்கள் என்று கதறியது பார்த்தவர்களின் மனதை நிச்சயம் பிசைந்திருக்கும்.
..............
எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கான அடிப்படைக்காரணங்கள் இன்னமும் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை போலத்தான் படுகிறது. ஒரு சில நிமிடங்களில், நொடிகளில் இந்த விடயத்திற்கு முடிவெடுக்கிறவர்களுக்கு கவுன்சிலிங் போன்றவை எவ்வளவு உதவும் என்றும் சொல்ல முடியாது. தொழில்நுட்பத்தாலும், விஞ்ஞானத்தாலும் உலகைச் சிறிதாகச் சுருக்கவும், எம்மைப்போல இன்னொருவரை உருவாக்கவும் முடிகின்ற நம்மால், இன்னமும் பக்கத்தில் இருக்கின்றவர்களில் உளஅலைகளை கண்டுபிடிக்கமுடியாமல் இருப்பது எவ்வளவு கொடுமை.

4 comments:

Chandravathanaa said...

varuththamana vidayam.
எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.....???

12/04/2004 03:55:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

இது இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயம்.புலம் பெயர்ந்த இளைஞர் மத்தியில் அளவுக்கதிகமாக விரக்தியும் மன அழுத்தமும் நிரம்பியுள்ளது.புலத்தில் பிறந்த இரண்டாம் தலைமுறை இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையில் சகாப்தக் கணக்கான தலைமுறை இடைவெளி காணப்படுகின்றது.வெவ்வேறு கலாச்சாரப் பண்பாட்டுப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்தவர்களாகையால் பிள்ளைகளும் பெற்றோரும் முரண்பட்டுக்கொள்ளல் அதிகமாகின்றது.

புலத்தில் எல்லாவிதமான வசதிகள் என்பது பண/பகட்டு வசதிகளாக இருக்கின்றனவே தவிர தேவைகளை நிறைவேற்ற போதுமானதாக இருப்பதில்லை என்பது எனது கருத்து

12/04/2004 09:28:00 PM
-/பெயரிலி. said...

எல்லாவற்றுக்குமே தனியே ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோமட்டும் இருக்குமென்று கூறிவிடமுடியாது. திடீர்ப்பண்பாட்டுச்சூழல்மாற்றம், சொந்தப்பண்பாட்டுச்சூழலினுள்ளேயே தனிப்பட்ட ஆளுமையின் இருப்பிடம் என்று இந்தப்பட்டியல் நீண்டுபோகலாம். தற்கொலையைக் கிண்டல் செய்தோ எதிர்த்தோ எழுதிய எத்தனை எழுத்தாளர்களும் நம்பிக்கையூட்டிகளுமே தற்கொலை செய்திருக்கின்றார்களே! (சுகுமாரனின் தற்கொலை பற்றிய அண்மைய காலச்சுவடு/உயிர்மை கட்டுரையைப் பார்த்தீர்களா?)

சாராமல் ஒரு பி.கு.: என் வலைப்பதிவிலே உங்கள் பின்னூட்டம் கேள்விக்குறிகளாகத் தொங்குகிறன (தகுதரம்-யூனிக்கோட் விளைவாக்கும்;-))

12/05/2004 11:41:00 AM
SnackDragon said...

தற்கொலைக்கான முடிவும், அதை விடயப்படுத்தலும் சிறு காலத்திற்குள் செய்வது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆன உந்துதல் அது. இதற்க்கு பல காலம் ஏறியுள்ள மனாழுத்தம் காரணம் என்கிண்றனர் உளவியலாளர்கள்.

12/05/2004 12:58:00 PM