கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஜெயமோகனின் நாவல்கள்

Sunday, December 19, 2004

ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன்.

ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் காட்டிலும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படுவதால், தசாப்தம் தாண்டியும் ஜெயமோகன் எங்கே நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயமோகனின் நாவல்களை இலகுவாய் ஒருவிதமான வகைக்குள் அடக்கிவிடலாம். எப்போதும் அவரின் நாவல்கள் ஊடாடிக்கொண்டிருப்பது பெருங்கனவும் அதன் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியும். எல்லா நாவல்களும் ஒருவிதமான சோகத்துடனும் இயலாமையுடனும் முடிகின்றன.

ரப்பரில் எந்தப்பாத்திரமும் மனதில் நிற்கமுடியாமல் வாசித்தவுடன் மறைந்துவிடுகின்றனர். நாவல்முழுவதும் கனக்க கதாபாத்திரங்கள். ஒரு விதமான தொடர்பை/நீட்சியை ரப்பரிலும் காட்டிலும் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது நாவல் என்ற கட்டுரைத்தொகுப்பில் 90களிலே நாவல்கள் தமிழில் முகிழத்தொடங்குகின்றன என்று குறிப்பிடுகையில் அவர் எதைக்குறிவைத்து சொல்கிறார் என்று சொல்லத்தேவையில்லை.

விஷ்ணுபுரம் அவரின் அடுத்த நாவல் என்று நினைக்கிறேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நான் முதல் பாகமும் இறுதிப்பாகமும் மட்டுமே வாசித்திருக்கிறேன். தத்துவப்பகுதியில் என்னால் நுழையவே முடியவில்லை. விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதியை 'நடுநிலைமை' என்று வாசிப்பவர்கள் எண்ணும்படி கவனமாகப்பின்னப்பட்டிருக்கிறது. அரவிந்தன்(காலச்சுவடு ஆசிரியர்) அண்மையில் காட்டிற்கும் ஏழாம் உலகத்திற்கும் விமர்சகம் எழுதுகையில் விஷ்ணுபுரம் மட்டுமே ஜெயமோகனின் சிறந்தபிரதி என்கின்றபோது பிரதியின்நிலை என்னவென்று கூறத்தேவையில்லை. ஒருகாலத்தில் ஜெயமோகனின் நெருங்கிய நண்பனாகவும், RSSன் தீவிர அங்கத்துவராயும் அரவிந்தன் இருந்திருக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பின் தொடரும் நிழலின் குரலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போதே ஜெயமோகன் என்ன சொல்லவருகின்றார் என்று புரிந்துபோகிறது. அதற்காய் இவ்வளவு பக்கங்களைக் கொண்டு நிரப்பியிருக்கவோ, அல்லது மூன்றுவருடமாக ஆராய்ச்சி செய்தோ எழுதியிருக்கவேண்டியதில்லை. செய்திருக்கவேண்டியது. ஆக்ககுறைந்து பத்துப்பக்கத்தில் (பத்து பக்கம் என்பது ஜெயமோகனின் எந்தக்கட்டுரையையும் 10 பக்கங்களுக்குள் நான் வாசித்திருக்காததால்) 'ஸ்டானின் கொடுங்கோலாட்சி' என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தால் போதுமாயிருந்திருக்கும். இப்போது கூட, இடதுசாரிகள் (கட்சி இடங்கொடுக்காத போதும்) ஒளித்து வாசிக்கிறார்கள் என்று ஜெயமோகன் புளங்காகிதம் அடைகிறார். உண்மையில் இப்படி ஸ்டானினின் பாசிசம் தெரியாதவர்கள் இடதுசாரியாயிருக்காமல் இருந்தாலே கம்யூனிசத்திற்கு செய்யும் நன்றிக்கடனாயிருக்கும் என நினைக்கிறேன்.

நான் வாசித்த ஜெயமோகனின் நாவல்களில், மிக மோசமான நாவல் என்றால் கன்னியாகுமரியைத் தான் சொல்வேன். உற்றுப்பார்த்தால், எஸ்.பொவின் 'தீ'யை தத்துவம், தேடல் என்று கொஞ்சம் கலந்து கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எஸ்.பொவாது தனது 25 வயதில் முதல் நாவலாய் எழுதியிருந்தார், ஆனால் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் என்று எழுதியவர் ஏன் இப்படி எழுதினார் என்று புரியவில்லை. இல்லாவிட்டால், தமிழ் சினிமா இயக்குநனர்கள் சொல்வதுபோல, இந்தக்காலத்தில் மசாலா கலந்து கொடுத்தால், சூப்பர் ஹிட் கிடைக்கும் என்ற மாதிரி, ஜெயமோகனும் ஒரு சூப்பர் ஹிட் இலக்கிய உலகத்தில் அவசரமாய் கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இதை எழுதியிருக்கலாம்.

காடு பற்றி அறிந்துகொண்டபோது இது எனக்குப்பிடித்தமாயிருக்கும் என்று நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன். முக்கியமாய் காதலையும் அழகியலையும் இது விரித்துச்சொல்லும் என்று நினைத்தேன். என்ன ஒரு அபத்தம், மலைவாழ் பெண் முலைகள் தெரிய இடுப்பில் துண்டுடன் நீராடும்போது கண்ட கதாபாத்திரமான கிரிக்கு அவள்மேல் அளவற்று காதல் பெருக்கெடுக்கிறது. ஒருபொழுதில் அவள் முலைகளில் எல்லாம் கண்கள் முளைத்து தன்னை உற்றுப்பார்ப்பது போலவும் தெரிகிறது கிரிக்கு. ஒருமுறை மட்டும் முலைகளைப்பார்த்து பெண்ணின் மீது காதல் கொண்டவன், பிறகு வாசிப்பவரைப் பார்த்து, 'இந்தக்கணத்தில் மார்பில் கைவைத்துச் சொல்வேன். காதலிக்காதவர்கள் கடவுளையும் அறிவதில்லை. ஆம் இது உண்மை' என்கிறான். இதை வாசித்தபோது நானும் கணக்கிடத்தொடங்கினேன், ஒருமுறை பார்த்து பெண்களில் ஆசைப்பட்டது என்றால், நானும் எத்தனைவிதமான கடவுள்களை தரிசித்திருக்கின்றேன் என்று. தமிழ் சினிமாக்கள் கெட்டது போங்கள். ஆனால் காட்டின் இறுதி அத்தியாயங்கள் பிடித்திருந்தன. ஒரு பெருங்கனவின் வீழ்ச்சியைச் சொல்வதால் பிடித்திருக்கக்கூடும். மனதிற்குள் புதைந்திருக்கும் சோகங்களை இணைத்துப்பார்ப்பதால் அப்படி அமைந்துமிருக்கலாம். காடு எனக்கும் பிடிக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த நாவலில் வரும் பாத்திரத்திற்கு குறிஞ்சிப்பூவை பார்த்தபின் எப்படி ஒரு உணர்வு வருகிறதோ அப்படியே எனக்கும் வாசித்துமுடித்தபிறகு ஏற்பட்டது.

ஜெயமோகனின் நாவல்களில் காமம் மதம்பிடித்தலையும் யானை போல அலைகிறது. பல பாத்திரங்களின் விபரிப்பை வாசிக்கும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு வாசித்தால் நமக்கும் நிம்மதி கிடைக்கும்போலத் தோன்றியது. முரண் என்னவென்றால், ஜெயமோகன் தான் நிஜவாழ்வில், ஒழுக்கம் கட்டுப்பாடு (உ+ம்: தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு, மற்றும் திருவள்ளுவர் பற்றிய தமிழ்நாடு அரசு வெளியிட்ட புத்தகத்தில் ஒழுக்கம் பற்றிய கட்டுரை) என்று பேசிகொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நாவல்களின் பாத்திரங்கள் எங்கிருந்து எல்லாம் உயிர்பெறுகின்றன என்பது ஆச்சரியம். ஜெயமோகனின் நிறைவேறாத பெருங்கனவுகள்தான் அந்தப்பாத்திரங்களில் மிதக்கின்றனவோ தெரியாது. ஜெயமோகனின் நாவல்களின் மிகப்பெரும் பலவீனம் என்னவென்றால், அந்தந்தப் பாத்திரங்கள் அவற்றிற்குரிய சட்டத்தை விட்டு வெளியேறி எழுதுபவரகி விடுவது. காட்டில் பதினெட்டு வயதில் நுழைந்த கிரி சங்க இலக்கியங்களை எல்லாம் கரைத்துக்குடித்திருக்கிறான். பாடல்களையெல்லாம் அப்படியே நெட்டுயுருக்கிறான். இன்னொரு நாவலை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும் உதாரணத்திற்கு யூமாவாசுகியின் ரத்த உறவு, கண்மணி குணசேகரனின், கோரை போன்றவற்றைச் சொல்லாம் என்று நினைக்கிறேன். ரத்த உறவில் குடித்து குடித்து சித்திரவதை செய்யும் அப்பா பற்றி எந்தப் பெரிய விமர்சனமுமில்லை. பெரியம்மாவுடனான் அப்பாவின் உறவுகூட போகிறபோக்கில்தான் சொல்லிச்செல்லப்படுகிறது. எனெனில் கதையைச் சொல்பவன் சின்ன வயதுக்காரன். அவன் வளர்ந்தபின் கதையை எழுதுகிறதாய் வைத்துக்கொண்டாலும் அவன் ஒரு காலத்தில் எப்படி இருந்தானோ அது மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. கோரையில் வயலும், கோரையும், பன்றியும் தான் திருப்பத்திருப்ப வருகிறது. ஆனால் முடியும்மட்டும் நாவலை அலுப்பின்றி வாசிக்கமுடிகிறது. எனெனில் இரண்டு நாவல்களிலும் கதாபாத்திரங்கள்தான் பேசுகின்றன. ஜெயமோகனின் நாவல்களிலோ ஒரு கட்டத்திற்குப்பிறகு அவரே நேரடியாகப் பேசத்தொடங்கிவிடுகிறார். கதாபாத்திரம் அநாதரவாய் ஒரிடத்தில் ஒதுங்கிக்கொள்கிறது.

ஜெயமோகன் இன்னும் நிறைய எழுதவேண்டும். அப்போதுதான் வாசிக்கும் நமக்கு எது சிறந்த படைப்பு என்று இலகுவாய் அடையாளங்கொள்ள முடியும். துக்ளக் சோ எழுதும்போதுதான் பெரியாரின் தேவை எவ்வளவு அவசியம் என்று தோன்றுகிறதோ, அப்படித்தான் ஜெயமோகனின் நாவல்களை வாசிக்கும்போதுதான் மாற்று நாவல்களை இலகுவாய் என்னால் அடையாளங்கொள்ளமுடிகிறது. மற்றபடி, தான் ஒரு இந்துத்துவா ஆதரவாளர் இல்லை என்று ஜெயமோகன் கூறினால், இன்றைய பிஜேபி, ஆர் எஸ்.எஸ், நரேந்திரமோடி, அத்வானி, சங்கராச்சாரியார் என்று எல்லாம் கலந்து ஒரு நாவலை எழுதட்டும். அவர் இப்போது எங்கே நிற்கிறார் என்று அவரை வாசித்துப்புரிந்துகொள்கிறேன். எங்கையோ இருந்த USSRற்கும் மார்க்சிற்காகவும் மிகவும் கவலைப்பட்டவர் அல்லவா அவர்?

7 comments:

ROSAVASANTH said...

காடு குறித்து அனாதை ஆனந்தன்,

http://anathai.blogspot.com/2004/11/blog-post.html
http://www.geotamil.com/pathivukal/anathaionKadu.html
http://www.geotamil.com/pathivukal/pallavanonkaadu.html
டீஜே பார்திருப்பீர்கள், மற்றவர்களுக்காக.

12/20/2004 01:43:00 AM
-/பெயரிலி. said...

/ஜெயமோகனின் நாவல்களில் காமம் மதம்பிடித்தலையும் யானை போல அலைகிறது./
;-)

12/20/2004 01:48:00 AM
சன்னாசி said...

ஜெயமோகன் ஒரு இலக்கிய Wal-mart. அல்லது அப்படித் தன்னை உருவாக்கிக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறார். வித்தியாசம் என்னவென்றால், வால்மார்ட்டில் என்ன நாம் வாங்கவேண்டுமென்று சாம் வால்ட்டனோ அவரது சந்ததிகளோ தீர்மானிப்பதில்லை. ஜெயமோகன் விஷயத்தில், அவரது தனிப்பட்ட வால்-மார்ட்டில் நாம் எதைப் பெறவேண்டுமென்று சலிக்காமல் கோடிட்டுக்காட்ட அவர் தவறுவதில்லை என்பதால், அவரது புத்தகங்களை வாசிப்பதில் ஏற்படும் பெரும் எரிச்சல்களுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். பின்தொடரும் நிழலின் குரல் வரை படித்து முடித்தேன், அதன்பிறகு அவரது பெரும் ஆக்கங்களைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை :))

ஒருவகையில் ஜெயமோகன் போன்ற எழுத்தாளரும் தேவைதான் என்று நினைப்பேன். தன் நாவல்களைநோக்கி வாசகர்களை இழுக்க முயன்றதன்மூலம், non-mainstream ஜனரஞ்சகப் பத்திரிகை வாசகர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரைத் தீவிர இலக்கியம் (வேறேதாவது வார்த்தையைப் போட்டுக்கொள்ளுங்கள்) நோக்கி இழுத்ததில் அவருக்குள்ள பங்கு மறுக்கமுடியாததுதான். ஜெயமோகன் பிரபலமடைந்தது மூலமாக ஜெயமோகனை எதிர்த்தவர்களும் பிரபலமடைந்தார்கள் என்பதும் கசப்பான உண்மை.

ஆனால், இது சரிதான் என்று நினைக்கும்போது "என் எழுத்து வழி வெற்றிகரமான வழி என்று நிரூபிக்கப்பட்டபின் அதைப் பின்தொடராமல் என்ன..." என்ற ரீதியில் (வாக்கியங்கள் வேறு, அர்த்தம் இதுவேதான்) திண்ணையில் எழுதியிருப்பார். Hello!! அவரது நாவல்களிலிருந்தே உதாரணம் காட்டவேண்டுமென்றால், 'ரப்பர்' நாவலில் திரேஸ் என்று ஒரு கதாபாத்திரம் வரும். திரேஸ்-ரூபன் ஒரு ஜோடி. பின்னங்காலத்தில் ஜெயமோகனைப் படிக்கும்போதெல்லாம் திரேஸே நேரில் வந்து பேசுவதுபோல் இருந்தது. நான் பிடித்ததாக உணர்ந்த அவரது நல்ல புனைகதைகளின் என் வாசக அனுபவத்தை அவரது அ-புனைவுகள் சீரழித்தது என்பதுதான் உண்மை.

ஆனால், வெகுஜனக் கலாச்சாரத்தின் போக்கைக் கதைகளுக்குள் கொண்டுவர முயன்றவர்கள் வெகு குறைவு என்பதால் (வெகுஜனக் கலாச்சாரமா என்று மூக்கைப் பொத்திக்கொள்பவர்கள்தான் அதிகம் இங்கே), நான்காவது கொலை, கன்னியாகுமரி போன்ற படைப்புக்களை, அவரே சொல்லச் சாத்தியமுள்ளது போல, "சோம்பல் முறித்தபோது துள்ளி விழுந்த படைப்புக்கள்" என்று கொள்ளலாம் (phrase என்னுடையது!!). விஷ்ணுபுரம் எழுதிய ஒரு ஆள் கன்னியாகுமரி போல மசாலா எழுதலாமா எனக் கேட்கலாம். நியாயம்தான். எழுதக்கூடாது என்று ஏதும் இல்லை. அலென் ராபெ-க்ரியெ, புகைப்படக்காரர் ஒருவரின் நிர்வாணப் புகைப்படத் தொகுப்புக்கு text எழுதியிருக்கிறார். நபக்கவை Playboy பத்திரிகை பேட்டி எடுத்திருக்கிறது. போர்ஹேஸும், அவரது நீண்டகாலத் தோழருமான அடால்ஃபோ பியோ கஸாரஸும் சேர்ந்து, தங்கள் தாத்தாக்களின் முதற்பெயர்களை இணைத்து உருவான புனைபெயர் கொண்டு மர்மநாவல்கள் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் திரைப்படங்களுக்கு வசனம் எழுதப் போகவில்லையா? அவரை நாம் இப்போது கிட்டத்தட்ட deify செய்துவிட்டதால் ஏதும் அதைப்பற்றி விமர்சிப்பதில்லை. பிரம்மராஜனோ சுந்தர ராமசாமியோ இப்போது ஒரு திரைப்படத்துக்கு தங்கள் கவிதையைக் கொடுத்தால் சும்மா விட்டுவிடுமா இலக்கிய உலகம்?

ஆக, நான் ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. எழுதுபவர்களின் பரப்புக்களை நாம் குறுக்கக்கூடாது என்பதே என் எண்ணம். விஷ்ணுபுரம்-2, விஷ்ணுபுரம்-3 என்று எழுதுவதும், அதைவிட்டுவிட்டு pulp எழுதுவதும் அவர் விருப்பம், உரிமை என்பது என் அபிப்ராயம்.

கன்னியாகுமரியில், நீங்கள் சொல்வதுபோல வெறிகொண்டலையும் காம மதயானையை அடக்குவதற்காக விமலா, ஒரு 'கிரேக்கனை'த் தனது boyfriend ஆக அழைத்துவருவாள் கன்னியாகுமரிக்கு! ஒரு 'செல்' லிலேயே தனது கதிமோட்சத்தை, முக்தியைக் காணுவாள். இதுபோன்ற juvenile (சிறுபிள்ளைத்தனமாக என்று போடச் சங்கடமாயிருக்கிறது!) ஜுமாக்ஸுகளைப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 'கன்னியாகுமரி'யை இந்தியாவில் இருக்கும்போது படித்தேனென்பதையும் கூறிவிடுகிறேன். !!!!!!!!'கிரேக்கன்'!!!!!!!!!? இதனுள் சற்று ஊடுருவிப் பாருங்கள். கிரேக்கனுக்கு என்ன முக்கியத்துவம் இங்கே? நமக்குள் உறைந்துபோயிருக்கும் கிரேக்க நாகரிகத்தின் பெரும் விஸ்தீரணம் ஜெயமோகனுள்ளும் இருக்கிறது போலும். எவ்வளவு செயற்கையான, உயிரற்ற, தட்டையான பார்வை! 21ம் நூற்றாண்டில் கிரேக்கன் என்பவன் மேற்கத்திய உலகத்தில் ஒரு insignificant entity. ஊழல் மலிந்த நாடொன்றின் குடிமகன். அவ்வளவு தான். நவீன கிரீஸுக்கும் பழம் கிரீஸுக்கும் பெரிய ஒற்றுமைகள் ஏதுமில்லை. இதில் ஒரு கிரேக்கனை டபக்கென்று இறக்குமதி செய்கிறார். விமலாவின் universality யைக் காட்ட!! பார் என்னுடன் ஆண்மை ததும்பும் கிரேக்கன், நீ யாரு pigeon-chested சொங்கி இயக்குனன் என்று. இதுபோன்றவற்றைத் தவிர்த்தால், கன்னியாகுமரி எனக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

நமது எழுத்தாளர்கள் மீது அளவுகடந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறோமோ என்று ஒரு சந்தேகம். மேற்கத்திய எழுத்தாளர்களில் இரண்டு வகைகளும் உண்டு. ஒரு புத்தகம் எழுதிவிட்டு, promotional tour போய், ஷாம்பேன் அருந்தியவாறு வாசிப்பு நிகழ்வுகள் செய்யும், கையெழுத்திடும் எழுத்தாளர்கள் (நாம் அதிகம் கோடி காட்டும் சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத் போன்றவர்களும் இதில் அடக்கம். அல்லது, ஜூம்ப்பா லஹரி போல இந்திய வாழைப்பழத்தில் எத்தனை ஊசிகளைவேண்டுமானாலும் ஏற்றலாம்) போலவும் உண்டு, வில்லியம் பர்ரோஸ் போலத் திருட்டுக்கள் செய்து கஞ்சா அடித்து ஜெனே போல ஓரினப்புணர்ச்சியாளனாக, குற்றவாளியாக இருக்கவும் வாய்ப்புண்டு. நமது கலாச்சாரம் இதைவிட வித்தியாசமான கலாச்சாரம். எழுத்தாளன் பிரபலமடைந்தாலே அவனது புனிதம் கெட்டுவிட்டதென்று யோசிக்கிறோமோ? நமது விமர்சனங்களில் எந்தளவு இந்த விஷயத்தின் unconscious impact உள்ளது? ஜெயமோகனின் மீதான் விமர்சனங்கள் அப்படிப்பட்டவையா என்றும் அறிந்துகொள்ள ஆவல்.

12/20/2004 10:41:00 AM
இளங்கோ-டிசே said...

Montresor, உங்களின் மேலுள்ள உள்ளிடுகை பல கேள்விகளை எழுப்புகிறது. என்னைப் பொறுத்தவரை ஒருவர் வெகுசனப்பத்திரிகையில் எழுதினாலோ, சினிமாவிற்கு போனாலோ கெட்டுப்போய்விடுவார் என்று நினைப்பதில்லை. எஸ்.ரா பாபா படத்திற்கு வசனம் எழுதியதாலோ அல்லது ரஜனியை நேரில் வீட்டில் சந்தித்தபோது புல்லரித்துபோனதாய் எழுதியபோதோ எஸ்.ராவின் படைப்புக்களில் களங்கம் வந்துவிட்டது என்று நினைப்பது பேதமை. எழுத்தாளர்களை ஏதோ ஒருவகையில் கட்டுப்படுத்துகிறோமோ என்ற உங்கள் கேள்வியோடு நானும் ஒத்துப்போகிறேன். முக்கியமாய் ஆண்களைவிட, எழுதும் பெண்கள் இந்தத்தடையை அதிகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இங்கே ஜெயமோகனின் தனிப்பட்ட ஒழுக்கம்/கட்டுப்பாடு என்பவற்றை அவரின் கட்டுரைகளில் இருந்து ஏன் தனியாக எடுத்துப்பார்த்தேன் என்றால், அப்படியான விழுமியங்களுடன் இருக்கும் ஒரு பாத்திரத்தையும் என்னால் அவரது நாவல்களில் அடையாளப்படுத்த முடியவில்லை என்பதுதான். இதுதான் நிசமென்றால், ஜெயமோகன் தளையசிங்கம் கருத்தரங்களில் குடிக்காதே! புகைக்காதே என்றெல்லாம் கட்டளையிடத்தேவையில்லை.
ஜெயமோகன் ஒரு குறிப்பிட்ட வீத மக்களை வெகுசன இலக்கியத்திலிருந்து பிறிதொரு இலக்கிய வாசிப்பிற்கு அழைத்துவந்தது உண்மையாக இருக்கக்கூடும். ஆனால் ஜெயமோகனைப்போல எனக்குத்தெரிந்த எந்த தமிழ் எழுத்தாளரும் தனது படைப்புக்களுக்காய் defence செய்ததை நானறியவில்லை. அது பலமா அல்லது பலவீனமாய் என்று புரியவில்லை. ஆனால், superbowlல் Janet Jackson தன் மார்ப்பைக் காட்டி எப்படி ஒரு பரபரப்பை உருவாக்கி தனது இசைத்தட்டை வெளியிட்டாரோ அப்படியே, ஜெயமோகனும் கருணாநிதியை தனது புத்தகநூல் வெளியீட்டு விழாவில் விமர்சித்து தன்னைப் இன்னும் பிரபலத்திக்கொண்டார். அந்தப்பிரபலம் என்னவென்றால், கருணாநிதியை ஒரு வசைக்கவிதை எழுதவைக்கும் வரை போனது யாவரும் அறிந்தது.
எனக்குப் பிடித்த நாவல்கள் உங்களுக்கு பிடிக்கவேண்டும் என்பதோ (அல்லது vice versa) இருக்கவேண்டும் என்று எந்தக்கட்டாயமில்லைத்தானே. அவரவர் அவர்களின் வாழ்வியல் முறையுடன், அனுபவத்துடன் தமது வாசிப்பை இணைத்துக்கொள்வது சகசம்தானே. இல்லை எனது கருத்தை எல்லோரும் ஏற்கவேண்டும் என்பது வாசிப்பு வன்முறையாய் கூடப்போய்விடும் அபாயம் என்பதையும் நானறிவேன்.

12/20/2004 09:49:00 PM
ROSAVASANTH said...

/நான் பிடித்ததாக உணர்ந்த அவரது நல்ல புனைகதைகளின் என் வாசக அனுபவத்தை அவரது அ-புனைவுகள் சீரழித்தது என்பதுதான் உண்மை. /
சந்தேகமில்லை. இந்த விஷயத்தில் ஜெயமோகன் எப்படி இவ்வளவு முதிர்சியற்றவராக இருக்க முடியும் என்று புரியவில்லை. சொந்த ஈகோ முதிர்ச்சியைகூட கொன்றுவிடும் போல.

12/20/2004 10:08:00 PM
இளங்கோ-டிசே said...

மேலே ஒன்றைச்சொல்ல மறந்துவிட்டேன். ஜெயமோகனின் நாவல்களைப்பற்றி இப்படி ஒரு விமர்சம் இருக்கிறதென்றால், அவரது சிறுகதைகள் மற்றும் பத்தி எழுத்துக்கள் அநேகம் என் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றதை ஒப்புக்கொள்ளவேண்டும். சங்கச்சித்திரம் குறிப்பிடவேண்டிய ஒன்று. வாழ்விலே ஒருமுறை என்று தீராந்தியில் எழுதியது. இப்போது உயிர்மையில் எழுதிக்கொண்டிருப்பதையெல்லாம் வாசிக்கிறேன்/வாசித்திருக்கிறேன். நாவல் கனவையும், நாக்குச் சுழற்சியையும் கொஞ்சம் அடக்கிக்கொண்டு, சிறுகதைகளில் ஜெயமோகன் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும் என்பது எனது வாசிப்பின் விளைவில் எழுந்த விருப்பம். இப்போது உயிர்மை ஒரு பெரும்தொகுப்பாய் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது என்றறிகிறேன். வாசித்துப்பார்க்கவேண்டும்.

12/20/2004 11:15:00 PM
சன்னாசி said...

//இல்லை எனது கருத்தை எல்லோரும் ஏற்கவேண்டும் என்பது வாசிப்பு வன்முறையாய் கூடப்போய்விடும் அபாயம் என்பதையும் நானறிவேன்.//

இதேதான் நானும் சொல்ல விரும்புவது. பேச்சைக் குறையுங்கள் சாமி என்பது. ஓலைப்பாயில் நாய் மோண்ட மாதிரி என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. சொளசொளசொளவென்று சப்தம் நிற்காமல் கேட்டுக்கொண்டே இருக்கும். ஜெயமோகன் எழுத்துக்கள் மீது எனக்குள்ள மரியாதையைத் தாண்டி, ஜெயமோகன் என்ற anthropocentric (அல்லது narcissistic?) பிரக்ருதி மீதான எரிச்சலுக்கும் அவரேதான் காரணம். நீங்கள் சொன்ன அதே காரணம்தான். நான் சொல்லவந்ததைப் புரிந்துகொள்ளாவிட்டால் நீ மடையன் என்பது மாதிரி. பிரதி வாசிப்பு குறித்து திண்ணையில் ரவி ஸ்ரீனிவாஸுக்கான பதிலில் இதைச் சொல்லியிருப்பார் 'ஒரு பொதுவான பிரதி வாசகத் தளத்தில் நிறுவப்படுகிறது, அதன்பின் வரும் ஒவ்வொரு வாசிப்பனுபவமும் தனிப்பட்டது' என்ற ரீதியில். இதை இப்போது எழுதுகிறார், இடைப்பட்ட காலம் முழுவதும் அவர் செய்துகொண்டிருந்தது அதற்கு எதிரான விஷயங்களையே. புனைகதை என்ற ரீதியில் அவர்மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், non-fiction என்ற தளத்தில், பெரும்பாலும் அவர் ஒரு எரிச்சலூட்டும் வியக்தி. எனக்குப் பட்டது அதுதான்.

//நாவல் கனவையும், நாக்குச் சுழற்சியையும் கொஞ்சம் அடக்கிக்கொண்டு, சிறுகதைகளில் ஜெயமோகன் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும் என்பது எனது வாசிப்பின் விளைவில் எழுந்த விருப்பம்.//

100% சரி.

12/21/2004 11:42:00 AM