கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மரணத்திலும் வாழ்ந்திருந்தோம்

Friday, February 11, 2005

{ஊர்: நினைவின் கருக்கலில்}

என்னோடு படித்த நண்பனொருவனைப் பற்றிய செய்தியொன்றை விகடனில் சிலநாட்களுக்கு முன் வாசித்ததிலிருந்து, ஊர்பற்றிய ஞாபகங்கள் எனக்குள் விதையென ஊன்றி அரும்பி, கிளைத்து பரவத்தொடங்கிவிட்டது. அவனும் நானும், இன்னும் சில நண்பர்களும் ஊரில் செய்த குழப்படிகளும் கும்மாளங்களும் கணக்கிலடங்காதவை.

நான் படித்த பாடசாலை எங்கள் வீட்டுக்கு மிக அருகில்தான் அமைந்திருந்தது. இரண்டு மணிகள் அடித்துத்தான் பாடசாலை ஆரம்பிக்கும். இரண்டுக்குமிடையில் ஜந்து நிமிட இடைவெளி என்றாலும், முதலாவது மணிச்சத்தத்தோடு பாடசாலைக்கு புறப்பட்டேன் என்றால், இரண்டாம் மணி அடிக்கமுன்னர் பாடசாலைக்குள் இருப்பேன். நான் படித்த பாடசாலை mixed (கலவன்?) பாடசாலை என்பதால் சுவாரசியங்களுக்கும், குழப்படிகளுக்கும் குறைவேயில்லாதது.

ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை என்று பாடசாலை கோயிலுக்கு முன் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் முழு சிவபுராணத்தையும் எல்லோரும் சேர்ந்து பாடி முடிக்கவேண்டும். வெயிலுக்குள் இப்படி நிற்பது கடவுளுக்கு பிடிக்காமலோ என்னவோ பாடல் முடியமுன்னரே பெண்கள் மயங்கி விழுவது அடிக்கடி நிகழும். ஒவ்வொரு நாளும் இரண்டு மாணவர்கள் பிரார்த்தனைக்குப் போகாமல் அவரவர் வகுப்பறையில் நின்று வகுப்பை துப்பரவாக்கவேண்டும். எவரெவர்க்கு எந்த நாள் என்று ஒரு அட்டவணை இருந்தாலும், என்னைப்போன்றவர்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை விடயம் பெரிய அலுப்புத்தந்ததால், பிறருடைய நாள்களை நாங்கள் அடிக்கடி திருடிக்கொள்வது நிகழும். பெடியங்களிடம் கெஞ்சி மன்றாடிக்கேட்டாலும், பரிதாபப்பட்டு தந்துவிடுவாங்கள், ஆனால் எங்கடை கேர்ல்ஸ்டிடம் இந்தக் கெஞ்சல் எல்லாம் சரிப்படாது. ஆனால் அதற்கு ஒருவழியை என்னைப்போன்றவர்கள் கண்டுபிடித்திருந்தோம். யார் அந்த நாளில் நிற்கின்றார்களோ, அவர் உத்தியோகபூர்வமாக கையில் தும்புக்கட்டையை வைத்திருக்கவேண்டும். தும்புக்கட்டை ஒருவரின் கையில் இருந்தால் அவருக்கு அன்று வகுப்பில் நிற்கும் அதிகாரம் வந்துவிடும் என்பது எங்களிடையே இருந்த எழுதாத விதி. தும்புக்கட்டை சண்டை எங்கள் வகுப்பில் மிகப்பிரல்பல்யமானது. தும்புக்கட்டைக்காய் பல தடவைகள் பெண்களிடம் சண்டைபிடித்திருக்கின்றோம். இரண்டொருமுறை சண்டையின் அதிதீவிரத்தில் தும்புக்கட்டையை இழுபறிச்சண்டையில் நா(ன்)ங்கள் உடைத்துக்கூட இருக்கிறோம் (ம்..முந்தி தும்புக்கட்டையை எல்லாம் உடைக்கிற அளவிற்கு எல்லாம் பலமானவனாய் இருந்திருக்கிறேன் என்பது எவ்வளவு சந்தோசமான விடயம், யாராவது ஏன் இப்படி ஒல்லியாக இப்போது இருக்கின்றேன் என்றால், இந்த விடயத்தை இனி அவர்களுக்கு சொல்லலாம்). சிலவேளைகளில் தும்புக்கட்டை விவகாரம் வகுப்பு வாத்தி வரைபோய் அடியெல்லாம் வாங்கிவிட்டு வகுப்புக்கள் முடியும்வரை வெளியே நிறுத்தப்பட்டிருக்கின்றோம். வெளியே நின்று உறுமிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற பெடியளையும் பொம்பிளைப்பிள்ளைகளையும் கண்டு கீரியும் பாம்பும் கூட வெளியே வரப்பயந்துபோய் புற்றுக்குள் இருந்திருக்கக்கூடும்.

கேர்ல்ஸ்டோடு சண்டை வருகின்ற இன்னொரு விசயம், தவணைப் பரீட்சைகள். மிச்ச எல்லா வகுப்பிலும் பொம்பிளைப்பிள்ளைகள் படிப்பில் கோலோச்சிக்கொண்டிருக்க எங்களின் வகுப்பில் பெடியள் சிலபேர்தான் முதல் மூன்றுக்குள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்போம் (முதல் மூன்றுபேருக்கு assembly hallல் வைத்து பாராட்டி தேர்ச்சி அட்டை தருவார்கள்). முக்கியமான core பாடங்கள் இருந்தாலும், சில electives, நடனம்/சங்கீதம்/சித்திரம் போன்ற பாடங்களும் உண்டு. என்னைப்போன்றவர்கள் சித்திரம் போன்ற பாடத்தைத்தான் எடுத்துக்கொண்டிருந்தோம். தென்னை மரம் கீறச்சொன்னால், அதில் இருக்கின்ற தென்னோலை எல்லாம் மீன் முள்ளு மாதிரி வரைகின்றளவிற்கு நான் சிறப்பாக சித்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தேன். வீட்டில் இதைப்பார்த்துவிட்டு யாராவது நக்கலடித்தால், நான் கீறின தென்னை மரத்திலை காகம் மீனைத்தின்றுவிட்டு மீன்முள்ளைப்போட்டபடியால்தான் அப்படித் தெரிகிறது என்று நியாயம் சொல்கின்றனான். சித்திரத்தில் என்னைப்போன்றவர்களின் புள்ளிகளைபார்த்துவிட்டு, எங்களை வீழ்த்த நடனம்/சங்கீதத்தில் கூடிய புள்ளியெடுத்தால் போதும் என்று பெண்கள் திட்டம்போடுவார்கள். அத்தோடு 'ரீச்சர், சித்திரம் எடுக்கின்ற ஆக்கள் முதல் மூன்றுக்குள் வந்தால் உங்களுக்கெல்லோ மரியாதையில்லை' என்று நடன/சங்கீத ரீச்சர்மார்களை உசுப்பேத்தி அளவுக்கதிகமாக மார்க்ஸ் எல்லாம் பெண்கள் வாங்கிவிடுவார்கள். என்னதான் தும்புக்கட்டைக்காகவோ, மார்க்ஸிற்காகவோ சண்டைபிடித்தாலும், எங்களின் வகுப்பு பெண்கள் எங்களை வேறு வகுப்பு மாணவர்களுடனோ அல்லது வேறு பாடசாலை ஆக்களோடு கதைக்கும்போதோ ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.

பிறகு பிரச்சினைகள் உக்கிரமாக, எங்களைப்போலவே பாடசாலையும் இடம்பெயரத்தொடங்கியது. கிட்டத்தட்ட ஏழெட்டு மைல்கள் சைக்கிள் உழக்கி பாடசாலைக்கு போன காலமது. அதுவும் மத்தியானத்திற்கு பிறகுதான் பாடசாலை தொடங்கும். காலையில் வேறொரு பாடசாலை இயங்கிக்கொண்டிருக்கும். ஏழெட்டு மைல்கள் சைக்கிள் உழக்கினாலும், காலையில் நடக்கும் பாடசாலை ஒரு மகளிர் கல்லூரி என்பதால் என்னைப்போன்ற பெடியளுக்கு நல்ல சந்தோசம். அவையளைப் பார்க்கிறதென்பதற்காகவே அரை மணித்திலாயம் பாடசாலை தொடங்க முன்னர் போய் காத்துக்கொண்டிருப்போம். ஆனால் அந்தப்பெண்களோ முறைத்துக்கொண்டோ உதாசீனப்படுத்திக்கொண்டேதான் செல்வார்கள். பரவாயில்லை எறும்பூரக் கற்குழியும் என்ற பழமொழியை அந்த வயதிலையே கற்றிருந்ததால் முயற்சியைக் கைவிட்டதில்லை. எனினும் ஒருபொழுதில் இதுவெல்லாம் சரிப்படாது என்று ஞானோதயம் வந்தபின், 'எண்டாலும் எங்கடை பள்ளிக்கூட கேர்ல்ஸ் தேவதையள்' என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

இப்படி ஏழெட்டு மைல் சைக்கில் பிரயாணம் செய்தாலும் எங்கடை வகுப்பு கேர்ல்ஸ்டோடு குழப்படி செய்துகொண்டேயிருப்போம். வேண்டுமென்று கேர்ல்ஸ் சைக்கிள்களில் வரும்போது நாங்கள் நாலைந்து நண்பர்கள் சமாந்தரமாய் சைக்கிளை ஓட்டியபடி வீதி முழுவதையும் மறைத்தபடி போவோம். எங்கடை கேர்ல்ஸ் பின்னுக்கு வருகிறார்கள் என்று கண்டுவிட்டால், சும்மா சைக்கிள் உழக்கிற வேகத்தைவிட இன்னும் மெதுவாக உழக்குவோம். இப்படி தெருவை அடைச்சுக்கொண்டு போவதற்காய் பலமுறை வெளியாக்களிடம் பேச்சு வாங்கியிருக்கின்றோம், ஆனால் எங்கள் பழக்கத்தை ஒருபோதும் இதற்காய் விட்டதில்லை. ஒருமுறை இப்படி தெருவை மறைத்துக்கொண்டு சைக்கிள்களில் செல்கையில், எங்களின் வகுப்பு வாத்தி பின்னாலே வந்துவிட்டார். அந்த வாத்தியிடம் நான் வாங்கிய அடிகளையும் அதற்கான சம்பவங்களையும் நினைத்துப்பார்த்தால் ஒரு குறுநாவலே எழுதிவிடலாம். சரி வாத்தி எங்கடை குழப்படியைக் கண்டுவிட்டார். நிச்சயம் பிடிபட்டால் அந்தாள் நடுரோட்டிலேயே நிற்கவைத்து, வீதியோரத்திலிருக்கும் பூவரசிலிருந்து தடியுருவி அடிக்காமல் விடமாட்டார் என்று புரிந்துவிட்டது. 'ஓடுவமடா' என்று ஒரு நண்பன் சொன்னதுதான் தாமதம் நாங்கள் சைக்கிளில் உருவத்தொடங்கிவிட்டோம். ஆனால் பாருங்கோ, எங்கடை வாத்தியும் sweet 16 மாதிரி இளமை திரும்பி எங்களை விடாமல் துரத்தத்தொடங்கிவிட்டார். எவ்வளவு தூரத்துக்கென்று களைக்காமல் சைக்கிளை உழக்குவது? கடைசியாய் இயலாமல் ஒரு அம்மன் கோயிலடியில் சரணாகதியடைந்தோம். அம்மனின் அருளோ என்னவோ தெரியாது, 'நாளைக்கு வகுப்புக்கு வாங்கோடா அங்கை கவனிக்கின்றேன்' என்று துரத்தி வந்த வாத்தி சொல்லிவிட்டு போய்விட்டார். அதன்பிறகு இப்படி நாங்கள் தெருவை அடைத்துக்கொண்டு பெண்களை முந்தவிடாமல் செய்தால், 'எடியே எங்கடை சேர் பின்னாலை வாறார் போல' என்று சொல்லி கேர்ல்ஸ் எங்களை அடிக்கடி பயமுறுத்துவார்கள். நாங்களும் உண்மைதானோ என்று பதட்டப்பட்டு சைக்கிளை ஒருபக்கமாய் ஒதுக்கினால் அடிக்கடி அவை ஒன்றோடு ஒன்று கொளுவுப்பட்டு அடிப்பட்டு விழுந்துவிடும். சைக்கிள் கீழே கிடந்தாலும், கையிலை காலிலை நோ இருந்தாலும், இரத்தம் வடிந்தாலும் பெரிய வீரர்கள் போல எழும்பி நிற்போம். கேர்ல்ஸ் சிரித்துக்கொண்டும் நக்கலடித்துக்கொண்டும் எங்களைத்தாண்டி போவார்கள். அவர்கள் கொஞ்சம் தூரம் போனாப்பிறகுதான், 'அய்யோ நோகுதே', 'விசரா உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது' என்று மாறி மாறி திட்டுவதும் நடக்கும். இப்படி நாங்கள் கேர்ல்ஸிற்கு குழப்படி செய்வதுபோல அவர்களும் எங்களுக்கு செய்வார்கள். நான் இப்படிப் பலதடவைகள் தனியாய் மாட்டுப்பட்டிருக்கின்றேன். அந்த சமயங்களில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை முந்தவிடாமல் ரோட்டை அடைத்தபடி போய்க்கொண்டிருப்பார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கின்றமாதிரி, இந்த நேரத்தில் துணைக்கருகில் இல்லாத பெடியன்களைத்திட்டியபடி காய்ச்சல் கண்ட கோழிமாதிரி தலையைத்தொங்கப்போட்டபடி அவர்கள் பின்னாலே போயிருக்கின்றேன்.

எத்தனைகாலம்தான் கேர்ல்ஸ்லோடு சண்டை போடுவது என்று யோசித்து ஒன்பதாம் வகுப்பில் சமாதானக்கொடியைப் பறக்கவிடுவோம் என்று முடிவுசெய்தோம். இன்னொரு காரணம் ஹோர்மான்களின் சித்து விளையாடும் கூட. நானும் இன்னும் சிலநண்பர்களும் சேர்ந்து யார் யாருக்கு யார் துணை என்று பட்டியலிட்டோம். எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பெண்ணிடம் ஈர்ப்பிருந்தது. அதற்குக்காரணம் அவர் சரியான வாயாடி மற்றும் தும்புக்கட்டைச் சண்டைகளில் பெண்களின் தரப்பில் அவர்தான் அங்கே முக்கிய தளபதி. ஆனால் இறுதியாய் நண்பனுக்காய் அவரை விட்டுக்கொடுக்கவேண்டியதாயிற்று. அவரவர் அவரவர்க்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பெணகளைத் தவிர மிகுதி அனைவருடனும் கதைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இப்படி சோடி சேர்த்த அடுத்த நாளிலேயே பெண்கள் இதைக்கண்டுபிடித்துவிட்டதன் இரகசியம் எனக்கு இன்றும் புரியவில்லை. இப்படி சோடி சேர்த்ததில் எனக்கு ஒரு சிக்கல் வந்தது. எனக்குச் சோடி சேர்த்த பெண் நான் போகும் ரியூசனுக்கு வருவதில்லை. எந்த நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால்தானே காதல் வரும்? ஆனால் எனக்கு வராது போல இருக்கிறதே என்று கவலையுடன் நண்பர்களுக்குச் சொன்னபோது நண்பன் ஒருவன் நல்ல யோசனை சொன்னான். 'டேய் ரியூசனில் வருகின்ற ஒருபெண்ணை அங்கேயிருக்கும் நேரத்தில் சோடிசேர்த்து வைத்திரு, பாடசாலைக்கு இவா உன்ரை சோடி' என்று. ஆகா இதுவும் நல்லாய்த்தானிருக்கிறது என்று, பாடசாலைக்கு ஒருவர், ரீயுசனிக்கு ஒருவர் என்று இரண்டு பேருக்கு துணையாக இருந்தேன் (இதற்கு இன்னொரு காரணம், செருப்பால் அடிவாங்கும்போது ஒரு செருப்பால் அடிவாங்கினால், சோடியாக இருக்கும் மற்றச் செருப்பு கோபிக்கக்கூடும். ஆகவே இரண்டு செருப்பாலும் அடிவாங்குவது உத்தமம் என்ற psychological காரணமாய் இருந்திருக்கக்கூடும் என்று இப்போது யோசிக்கின்றேன்). பகடி என்னவென்றால், ஏதோ நாங்கள்தான் இப்படி பாடசாலைக்கு ஒருவர், ரீயுசனிற்கு ஒருவர் என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம் என்றால், எங்கடை பெண்களுக்கும் எங்களில் சில பேர் ரீயூசனுக்கு ஒன்று பாடசாலைக்கு ஒன்று என்று இருந்திருக்கின்றோம் என்று பிறகு தெரியவந்தது.

இப்படி சோடி சேர்த்தபின் எங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது. பாடசாலையில் அடிக்கடி தமிழ்த்தினம், ஆங்கிலதினம் என்று சொல்லி எழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, சங்கீத/நடனப்போட்டி என்று நடைபெறும். அதில் யாராவது எங்களின் சோடி சேர்த்த பெண்கள் வென்றால், ட்ரீட் அவரிற்கு சோடி சேர்க்கப்பட்ட பெடியன் வாங்கிக்கொடுக்கவேண்டும். ஓசியில் கிடைக்கிற வடையையும் வாய்ப்பனையும், ரீயையும் ருசிகண்டவர்கள் சும்மா சும்மா எல்லாத்துக்கும் ட்ரீட் வையென்று கேட்கத்தொடங்கிவிடுவாங்கள். அதுவும் பெண்கள் கேட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. 'உங்களுக்கில்லாததா வாங்கித்தாறோம்' என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டு மனதிற்குள் திட்டிக்கொண்டிருப்போம். சில பெண்கள் வேணுமெண்டு எங்களை வெறுபேத்துவதற்கு நடக்காத விழாக்களில் எல்லாம் நமது சோடிப்பெண்களுக்கு பரிசுகள் கிடைத்ததாய் சொல்லி ட்ரீட் கேட்பார்கள்.

இப்படியே போனால் எங்கடை அப்பர்மாற்ரை சம்பளக்காசே அப்படியே வாங்கிக்கொண்டு வந்தால்தான் காணும் என்று ஒருமாதிரி நிலைமை கவலைக்கிடமாகப்போக மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டினோம். இறுதியில் இரண்டு முடிவுகளுக்கு வந்தோம். முதலாவது, இதுவரை சோடி சேர்க்காது தனிய இருப்பவர்களை சோடிசேர்த்து எங்களின் சுமையைக் கொஞ்சம் குறைப்பது. மற்றது, ஓசியிலை வெட்டுகின்ற ஆக்களுக்கு அவர்களின் சோடிக்கு இதிலை பரிசு அதிலை பரிசு என்று சொல்லி அவர்கள் ஏவின நாகாஸ்திரத்தை திருப்பி அவர்களுக்கே ஏவி விடுவது.

என்னதான் ஆண்கள், பெண்கள் என்று ஆரோக்கியமாய் பழகினாலும், எங்களின் ஆசிரியர்கள் பலருக்கு அதைப் புரிந்துக்கொள்ளமுடியாததாகவே இருந்திருக்கிறது. அநேகமாய் ஊர்ப்பாடசாலைகளில் O/L பரீட்சை எடுத்தாப்பிறகுதான் கொஞ்சம் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவார்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள் ஒன்பதாம் வகுப்பிலே இப்படி சகஜமாகப்பழகியதை இயல்பாய் எடுக்கமுடியாத ஆசிரியர்களிடம் இப்படி இருந்தற்காய் பலமுறை அடிகள் வாங்கியிருக்கின்றோம். என்றாலும் என்ன நல்ல விடயங்களுக்காய் சிலவற்றை சகிப்பது பெரிய விசயமல்ல.பிறகொருபொழுதில், புலமைப்பரிசிலை காரணங்காட்டி, யாழ்நகரின் பெரிய பாடசாலை ஒன்றுக்குப்போய் அங்கே பெடியள் மட்டும் இருப்பது கண்டு சகிக்கமுடியாமல், திரும்பி நான் படித்த பாடசாலைக்கு ஓடியப்போயிருக்கின்றேன். காசும் கொடுத்து, கஷ்டப்பட்டு அனுமதியும் எடுத்து அங்கே படிக்கவிட்டால் திரும்பி வந்துவிட்டான் என்று அப்பா அடிக்கடி கூறிக்கொண்டபோதும் பழைய பாடசாலையிலே தொடர்ந்து படிப்பது எனக்குப்பிடித்திருந்தது.
........
ஒரு பொழுதில் ஊரும் போய், பாடசாலையும் போய் இனியிருப்பதற்கு என்னவிருக்கிறது என்று காலத்தை நொந்து சமுத்திரங்கள் தாண்டியும் வந்தாயிற்று. வயதுப்பிரச்சினையால் இலட்சங்களில் கொடுத்து எல்லை கடந்ததால் எனக்குப்பிடித்த நண்பர்களிடமோ, பிரியமான தோழிகளிடமோ முறையாக விடைபெறவில்லையென்ற உறுத்தல் தசாப்தம் தாண்டி இன்னமும் இருக்கிறது. காடு போல் மரங்களும், கொடிகளும், மிதிவெடிகளும் புதையுண்டுபோய் ஊராரை விரட்டிவிட்ட நிலத்தை இனி ஊரென்று அழைக்கமுடியுமா? இல்லை பத்து வருடங்களுக்கு முன்பான வாழ்வை, பாடசாலை நாள்களை, நண்பர்களை, குறும்புத்தனம்மிக்க தோழியரை, ஊரவர்களை, உயிரிழந்துபோனவர்களை, காணாமற்போனவர்களை எவர்தான் மீட்டுத்தரக்கூடும்?

12 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

D.J என்னத்தைச் சொல்ல.ஊருக்குப் போய் ஒருவருடம் கடந்தாலே திரும்பவும் போகும் வரை கைகாலெல்லாம் உதறும் அளவுக்கு ஈர்ப்பதில் அந்த ஊருக்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரியவில்லை.நீங்கள் சொன்னமாதிரி பத்தையும் செத்தையும் தானென்றாலும் அதையும் விட ஏதோ ஒன்று இருக்கிறது.

2/09/2005 03:13:00 AM
கயல்விழி said...

DJ உங்கள் நினைவுகளை படிக்கும் போது எனக்கும் எனது பழைய நினைவுகள் தான் நினைவில் வந்தது. உங்களை மாதிரி பலவிடயங்களில் நமக்கும் ஒற்றுமை இருக்கிறது. அது ஒரு காலம் நினைத்துப்பெருமூச்சு விடவேண்டியது தான். என்ன செய்வது ஊர் போனாலும் அந்தக்காலம் திரும்பி வரவா போகிறது.

2/09/2005 04:49:00 AM
Anonymous said...

//நாங்கள் இப்படி சோடி சேர்த்த அடுத்த நாளிலேயே பெண்கள் இதைக்கண்டுபிடித்துவிட்டதன் இரகசியம் எனக்கு இன்றும் புரியவில்லை.//

உங்கள் ஆண் நண்பர்களில் ஏதோவொரு ஐந்தாம்படை தான் போட்டுக்கொடுத்திருக்கும். As simple as that! உங்கள் ஊரில் எப்படியோ தெரியவில்லை!!
-மாண்ட்ரீஸர்

2/10/2005 11:31:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஒருக்கா ஊருக்கே போயிற்று வந்தமாதிரி இருந்துது.

ஆனா, எனக்கொரு சந்தேகம். ஊரில சுத்திச் சுத்தி எல்லாரும் சொந்தக் காரராத்தானே இருந்திருப்பினம்? ஒருவேளை எனக்கு புங்குடுதீவில 4உம் ஐஞ்சாவதுல கொஞ்சமும் படிச்சதால இருக்குமோ. பிறகு நல்லபிள்ளையாக(!) கொஞ்ச நாள் வேம்படியில இருந்ததோட முடிஞ்சுபோச்சு. இந்தமாதிரி பகிடியெல்லாம் நடக்கேல்லை. என்ன ஒரு வருத்தம். இந்தமாதிரி ட்ரீட்டையெல்லாம் மிஸ் பண்ணிட்டனே எண்டுதான்... இலங்கைலதான் இப்பிடியெண்டா, மெட்ராஸில, எங்கடை ஜெனரேஷன் நல்ல பிள்ளைகளா இருந்தனாங்க.(அட நம்புங்கப்பா!)

இன்னும் கொஞ்சம் நிறைய எழுதியிருக்கலாமோ எண்டு இருக்குது. அடிக்கடி இந்தப் பதிவை வந்து படிச்சண்டிருப்பன்.

பிறகு ஒரு விசயம். தனி வளை எங்கயாவது போகலாம்தானே? இப்பிடி அடிக்கடி பதிவுகளை தொலைச்சுக்கொண்டு இருக்கப்போறீங்களோ?

பி.கு.: பெயரிலி முந்தி எழுதின ஒரு பதிவு ஞாபகம் வருகுது. வகுப்பறைக்கு வெளியில நிக்குறதாவோ, முட்டுக்காலில நிக்கிறமாதிரியோ ஒரு பதிவு. அவரின்ற வலைப்பதிவிலயோ, நான் சேமிச்சு வைச்ச சிடிலயோ தேடோணும். கண்டு பிடிச்சா இங்க குடுக்கிறன்.

2/10/2005 11:45:00 PM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், கயல்விழி, மாண்ட்ரீஸர், மதி அனைவருக்கும் உங்களின் உள்ளிடுகைகளுக்கு முதலில் நன்றி.
ஈழநாதன்: உண்மைதான் எப்படியிருந்தாலும், ஊர் தரும் சிலிர்ப்பை வேறெதுவும் தராது.
கயல்விழி: அப்ப நீங்களும் இப்படி mixed schoolலிலா படித்திருக்கின்றீர்கள்?
மதி: உங்களின் வேம்படி பாடசாலை நாட்களை தொடர்ந்து வாசித்திருக்கின்றேன். பிறகு சென்னையில் படித்திருந்தால், சொல்ல நிறைய கதையிருக்க வேண்டுமே? :)). //ஊரில சுத்திச் சுத்தி எல்லாரும் சொந்தக் காரராத்தானே இருந்திருப்பினம்?// உண்மைதான்.ஆனால் எல்லோரும் கள்ளமும், குழப்படியும் செய்வதால், ஒருத்தர் இன்னொருத்தரை கோள்மூட்டுவதில்லை என்று ஒரு எழுதப்படாத mutual understanding எங்களில் பலருக்கு இருந்தது. அத்தோடு நண்பர்கள் கூட்டத்தில் சொந்தகாரரை (ஒரே வகுப்பாயிருந்தாலும்) அதிகம் சேர்ப்பதுமில்லை.மற்றது நீங்கள் சொல்வதுபோல Blogயோடு மல்லுக்கட்டவதைப் பற்றியும் சுவாரசியமாய் ஏதோ எழுதலாம் போலத்தான் கிடக்கிறது.
மாண்ட்ரீஸர்: நீங்கள் சொல்வது போல நடப்பது இயல்பு என்றாலும், எனக்கு அதிசயமாய் இருந்த விடயம் (நாங்கள் 2-3 பேர்தான் அப்படி இரகசியமாய் (என்று நினைத்து) பிளான் போட்டோம், அவர்களில் ஒருவரும் ஜந்தாம்படையாய் மாறவில்லை என்றுதான் எனக்கு சொன்னார்கள்). நாங்கள் பெண்களை அலட்டலாய் அவதானிப்பது போல அவர்களும் எங்களின் அசைவுகளை அசட்டைசெய்வதுபோல இருந்துகொண்டு மிக நுணுக்கமாய் அவதானித்துக்கொண்டிருந்ததுதான் எனக்கு அந்தவயதில் மிக வியப்பாயிருந்தது.

2/11/2005 12:38:00 AM
ROSAVASANTH said...

இப்போதுதான் படித்தேன் டீஜே. சுவாரசியமான பதிவு.

2/11/2005 06:55:00 AM
கயல்விழி said...

ஆண்களை நண்பர்களாய் பழகிற கட்டம் மட்டும் கலவன் பாடசாலையில் தான் படித்தேன். பிறகு ஊர் மாறி பாடசாலையும் மாறி வேறு விதமாய் போய்விட்டது. இருந்தாலும் ரீயுசன் போவது வழக்கம் அவைகள் நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் நினைவுகள். எப்பவும் அழியாது என்று நினைக்கிறேன்.

2/11/2005 08:37:00 AM
கறுப்பி said...

டி.சே மிக சுவாரசியமாக இருந்தது. ஆண்கள்ää பெண்கள் யாராக இருந்தாலும் சம்பவங்கள் அனேகமாக ஒத்துத்தான் இருக்கின்றன. நான் ஐதாம் வகுப்பு வரைதான் கலவன் பாடசாலையில் படித்தேன். அங்கே ஆண்களையும் பெண்களையும் இணைத்துப் பட்டம் தெளிப்பது வழக்கம். சுவரிகளில் அவர்களின் பெயர்களை இணைத்து எழுதி அழ வைப்பார்கள். இருந்தும் இந்தக் கொடுப்பினை எனக்கு அவ்வளவாக இருக்கவில்லை. நான் படித்த பாடசாலையில் எனது அம்மா ஒரு ஆசிரியை. ஏதாவது குழப்படி செய்தால் எனது பிரச்சனை பாடசாலையுடன் முடிந்து விடாது. வீட்டில் வந்து சவிள் விழும் என்ற பயம்.
உயர்கல்வியை நான் யாழ் இந்து மகளீர் கல்லூரியில் கல்வி கற்றேன் அதனால் கலவன் பாடசாலை மாணவிகளின் அனுபவங்களிலும் விட எமக்குக் குறைவாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும் பாடசாலைக்குச் செல்லும் பஸ்ஸில் ஆண் மாணவர்களும் வருவார்கள். அப்போது கொஞ்சம் கிளுகிளுப்பு இருக்கும். ஆனால் அதிலும் நான் கொஞ்சம் பாவம் செய்திருக்கின்றேன். யாழ் இந்துக் கல்லூரியில் படித்த எனது இரண்டு அண்ணாமார்களும் அதில் வருவார்கள். அவர்களிடம் சைக்கிள் இருந்தும் பஸ்சைத் தெரிவு செய்தது ஏனென்று இப்போதுதான் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட வருடங்கள் வரை நான் பத்தினி வேடம் போட்டுக் கொண்டு அண்ணாக்களுக்கு “வில்லியாகவும்”ää “கோள் மூட்டியாகவும்” இருந்து எனது “ஃபண்” ஐத் தொலைத்துவிட்டேன் என்று நினைக்க இப்போது கவலையாக இருக்கின்றது. உயர்தரக் கல்வியின் போது அண்ணாக்கள் வருவதில்லை. நானும் பத்தினி வேடத்தைக் கலைத்து விட்டுக் கும்மாளம் அடித்தேன். எனது நனைவிடை தோய்தலை எனது தளத்தில் தருகின்றேன்.

2/11/2005 11:23:00 AM
கிஸோக்கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
கிஸோக்கண்ணன் said...

உங்களாது அனுபவத்தைச் சொன்னதாக நான் எண்ணவில்லை. ஒரு சராசரி ஈழத்தவரின் அனுபவமாகவே அது எனக்குத் தெரிகின்றது. என்றாலும், இந்த ஜோடி சேர்ப்பு விளையாட்டெல்லாம் எங்களுக்குப் புதிசு. "ம்..." என்ற பெருமூச்சைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை.

இப்பவாவது ஒத்துக் கொள்ளுங்கள், கற்பனைகளைவிட நிஜங்களே புனிதமானவையென்று.

"பனையிடை தவழ்ந்து
பவனி வருந்தென்றல்
முழங்கால் வெள்ளத்திலும்
நீச்சலடித்த அந்த
மீன்குஞ்சு நினைவுகள்
...
...
பக்கத்துவீட்டுப் பாமினிக்கு
காதல் மடல் வரைந்த அந்த
கிறுக்கு நினைவுகள் -எல்லாமிந்த
குளிர்காலக் கனவுகளில்
இடையிடையே வந்து போம்"
-நான்

2/11/2005 06:57:00 PM
இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த், கயல்விழி, கறுப்பி, கிஸோ கருத்துக்களுக்கு நன்றி.
கறுப்பி, விரைவில் நீங்களும் உங்கள் நனவிடைதோய்தலைகளை எழுத்தாக்குங்கள். ஒவ்வொருத்தரின் அனுபவங்களும் தனித்துவமாகவும், சுவாரசியமாகவும் நிச்சயம் இருக்கும்.
கிஸோ, நீங்கள் உள்ளிட்ட இந்தப்பகுதி கவிதையை ஏற்கனவே முழுமையாய் வாசித்திருந்தேன். இன்னொருமுறை நினைவில் கொண்டுவந்தற்கு நன்றி.

2/13/2005 06:36:00 PM
thamillvaanan said...

சிவபுராணத்தில் கடைசியில் ஒரு வரி வரும். அப்போதுதான் பலர் மீண்டும் சுயநினைவுக்கு வந்து சத்தமாக அந்த வரிகள் ஒலிக்கும். அது மறந்துபோய்விட்டுடென். ஞாபகம் வருதா?


தமிழ்வாணம்

2/17/2005 05:42:00 PM