கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி

Friday, September 30, 2005

Bodies in Motion by Mary Anne Mohanraj"...Even in the middle of war, children were being born here, life was going on. Without sugar, sometimes without even rice, going on anyway, despite the grief and the pain. Sometimes, the blood on the sheets was only from a bridal night, sometimes, there was celebration, there was pleasure, there was joy."
-Mary Anne Mohanraj (Wood and Flesh)

(1)
இந்தத் தொகுப்பில் மேரி ஆன் மோகன்ராஜின் இருபது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளாக இருப்பினும் ஒரு நாவலுக்குரிய தன்மையுடன் சில பாத்திரங்கள் பல்வேறு கதைகளில் பல்வேறு சூழலில் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'கந்தையா', 'வல்லிபுரம்' என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட இரு குடுமபங்களின் பிள்ளைகளின் கதைகளும், பிறகு அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் கதைகளும் கூறப்படுகின்றன. கதைகள் 1939ல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், கொழும்பில், அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் நடப்பதாய் விரிந்தபடி இருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் இலகுவில் வாசிப்பவருக்கு புரியவேண்டும் என்பதற்காய் கதைகள் ஆரம்பிக்க முன்னர் குடும்ப மரம் (family tree) தரப்பட்டிருக்கின்றது.

தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் ஆகக்ககுறைந்தது பத்துக் கதைகளாவது நல்ல கதைகள் என்று துணிந்து கூறலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் (முக்கியமாய் பால்யநதி), தங்கமணியின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒருவிதமான அமைதியும் நிதானமும் படர்கின்றமாதியான வாசிப்பை மேரி ஆனின் படைப்புக்களிலும் பெற்றிருந்தேன். எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கூற முடியாத இரகசியங்கள் கசிந்தபபடியேதானே இருக்கின்றன. அவை குறித்து அறிய ஆவல் இருப்பினும் அவ்வாறு அறியமுற்படுகையில் தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இரகசியங்களை இரகசியங்களாவே வைத்துப் பார்க்கவே மனித மனங்களை விரும்பச் செய்கின்றன. இந்தக் கதைகளிலுள்ள கதாபாத்திரங்களும் தமக்குரிய தனிமைகளுடன், நம்பிக்கைகளுடன், துரோகங்களுடன், இரகசியங்களுடன் நடமாடுகின்றன. கதைகளை வாசித்துக்கொண்டுபோகும்போது எந்த பாத்திரத்தின் மீதும் மூர்க்கமாய் கோபப்படமுடிவதில்லை. ஏன் இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற இயலாமையுடந்தான் பார்த்துக்கொண்டிருக்க முடிகின்றது. 'உபபாண்டவத்தில்' வருவதுபோன்று, அந்த அந்தப் பாத்திரங்கள் உரையாடத் தொடங்கும்போது அவை தமக்கான நியாயங்களையும், அந்தப் பாத்திரம் குறித்து பிற பாத்திரங்கள் பேசும்போது வேறுவிதமான பார்வைகளையும் வாசிப்பவருக்குத் தருகின்றது. முக்கியமாய் மேரி ஆன் எந்தப் பாத்திரத்தின் மீதும் தனது பார்வையை (ஜெயமோகன் எழுத்துக்களில் இருக்கும் முக்கிய பலவீனமே இதுதான்) திணிக்காமல் அவற்றை அவர்கள்பாட்டில் பேசவிடுவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம். இந்தக் கதைகளில் என்னை(உடைந்தபோன பல 'நான்'களை), உங்களை, உஙளுக்குத் தெரிந்த பலரைப் பார்த்துக்கொண்டே போகலாம். குடும்பஙகளில் சாத்தியமாயுள்ள Heterosexual, Homosexual, Adultery, Teen Age Sex என்று எல்லாவிதமான உறவுகளும் பேசப்படுகின்றன. எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் காமம் ஒரு சிற்றாறைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றது. அது பலவேளைகளில் உறவுகளை பிணைப்பதாயும் (Bond?) சிலவேளைகளில் உறவுகளை முறிப்பதாயும் அமைகின்றது.

(2)


Mary Anne Mohanraj (2001)

பிள்ளைகளின் பிள்ளைகளைப் பற்றிக் கூறும் கதைகளில், Minnal in Winter கதை மிகவும் பிடித்த ஒன்று. பத்தொன்பது வயது மின்னல், புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றார். அவரது தாயார் கொழும்பில் இருந்தாலும் அவரது சித்தியொருவர் மாசூஸட்டில் இருக்கின்றார். வளாகத்துக்குள் தங்கியிருக்கும் மின்னலுக்கு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கும் ஸ்பானிய பெடியனுடன் காதல் முகிழ்ந்து, உறவின் நீட்சியில் கர்ப்பமும் தரிக்கின்றார். இதே சமயம், கொழும்பிலிருக்கும் தாய் மின்னலுக்கு நல்லதொரு திருமணப் பொருத்தம் வந்திருக்கின்றது, படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வருக என்று கடிதம் எழுதுகின்றார். இங்குள்ள உறவு குறித்து அம்மாவுக்கு கூறுவதா அல்லது அம்மா பார்த்த பையனைத் திருமணஞ்செய்வதா என்று மின்னல் குழம்பத்தொடங்குகின்றார். அந்த நேரத்தில் மாசூஸட்டில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போகின்றார். அவரது சித்தி ராஜியும் அந்தச்சமயத்தில் கர்ப்பிணியாய் இருக்கின்றார். இறுதியில் அம்மாவின் முடிவுக்கு உடன்படுவதில்லை எனவும், அதேசமயம் அந்த கருவைத் தாங்குவதில்லை எனவும் முடிவு செய்து தொடர்ந்து படிக்கப் போவதாய் கதை முடியும். இந்தக் கதை நகர்ந்துகொண்டு போகும் விதம் மிக அற்புதமானது. ஒரு பெடியனோடு படித்து கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தன்னை முழுதாய் எடுத்துக்கொள் என்று தன்வசம் இழப்பது....காதலில்/காமத்தில் கிறங்கிக்கிடப்பது...பிறகு கர்ப்பந் தரிக்கும்போது தன் எதிர்காலத்தை நினைத்து வருந்துவது.... என அனைத்தும் மிக இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கதையின் ஓரிடத்தில் மின்னல் யோசிப்பதாய் வரும், 'அம்மா இப்படி ஒரு பெடியனுக்கருகில் இருந்தால் எப்படியான உணர்ச்சிகள் பீறிட்டெழும் என்று சரியாக நீ எனக்குக் கற்றுத்தந்து மனந்திறந்து விவாதித்திருந்தால், இன்று இப்படியான சிக்கலில் மாட்டாமல் கவனமாயிருந்திருப்பேனென' என்று எல்லாம் அந்தப் பாத்திரம் யோசிப்பது பற்றி, ஒரு பதின்மவயதுப்பெண்ணின் மனநிலையில் இருந்து அழகாய் மேரி ஆன் எழுதியிருபபார். மின்னல் குழம்புபோது நாங்களும் குழம்பி, படிப்புத்தான் அனைத்தையும் விட தன் சுயத்தைப் பிரதிபலிக்கப்போகும் விடயம் என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும்போது வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித அமைதி படர்ந்துவிடுகின்றது.

Mint in Throat கதை, ஷிபாலி என்ற வளாகத்தில் படிக்கும் பெண் எப்படி கத்தி முனையில் ஒரு வெள்ளைக்காரப்பையனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றாள் என்பதையும் அதிலிருந்து மீண்டு எப்படி ஒரு நம்பிக்கையான ஒரு துணையை அடைகின்றாள் என்பதையும் கூறுகின்றது. ஒரு நாள் வகுப்பு முடிந்து வரும்போது கழுத்தில் கத்தியை வைத்து ஒரு வெள்ளைப் பெடியன் காசு தாவென்று கேட்கின்றான். தன்னிடம் காசில்லை என்று ஷிபாலி கூறுகின்றபோது மூர்க்கமாய் அவள் கன்னத்தில் அவன் அறைகின்றான். நிச்சயம் காசு கொடுக்காவிட்டால் தன்னைச் சிதைக்காமல் விடமாட்டான் என்று விளங்கிக்கொண்ட ஷிபாலி தன்னைத் தப்புவிக்க, 'you want sex?' என்று வினாவ blow job செய்ய வற்புறுத்தப்படுகின்றாள். கதையின் இடைநடுவில் ரெசிடன்டில்(residence) அவளது அறைக்கருகில் இருக்கும், ஜேம்ஸ் என்ற பையனைப்பற்றிக் கூறப்படுகின்றது. மிக நல்ல பெடியன்; அநேக பெண்களுக்கு மிகவும் பிடித்தவன். ஆனால் எந்தப் பெண்ணும் அவனோடு dating செய்யவோ அல்லது இரண்டாம் முறை dating செய்யவோ விரும்பாத பையனாக இருக்கின்றான். You are ladies' man என்று இனிக்கக் கூறுகின்றார்களே தவிர எந்தப் பெண்ணும் அவனைப் புரிந்து, சேர்ந்திருக்க விரும்பியதில்லை. நல்லவனாய்/அப்பாவியாய் இருப்பது கூட சிலவேளைகளில் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தமானது என்று இந்த பாத்திரத்தைக் கொண்டு மேரி காட்சிப்படுத்தியிருப்பார். இறுதியில் sexual assault செய்யப்பட்ட ஷிபாலி அவனிடம் போய்ச் சேருகின்றாள். அவன் மிக இதமாய் அவளுடைய பயம் போக்கி, கண்ணீர் துடைத்து, நிம்மதியாகத் தூங்க வைக்கின்றாள். ஷிபாலியும் இவன்தான் தனக்குரிய சரியான துணை என்று நினைத்துக்கொண்டு தூங்குவதாய் கதை முடிகின்றது.
.....
இதே ஷிபாலி பிறகு இன்னொரு கதையில், ஒரினப்பாலுறவுக்காரனான றொஷானை தனது பெற்றோர்கள் விரும்புவார்கள் என்ற காரணத்தினால் மணம் முடிக்கின்றாள என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். றொசானை திருமணஞ் செய்யமுன்னர் இப்படி ஒரு குறிப்பு எழுதிக்கேட்டுத்தான் மணந்து கொள்கின்றாள்; 'Sri Lankan female, straight but not into serious relationships, looking for gay south Asian male for sham marriage. Let's make our parents happy. You know you want to.
-shefali@upeen.edu'.

Challah கதையில், மருத்துவ மேற்படிப்பு படிக்கின்ற றொஷானுக்கும், கபீரியலுக்கும் இடையிலான சமபாலுறவு பற்றிக் கூறப்படுகின்றது. Bodies in Motionல், சாயா என்ற post-doc செய்யும் பெண்ணுக்கும் டானியல் என்ற வெள்ளைப் பேராசிரியருக்கும் இடையில் முகிழும் உறவையும், இறுதியில் அந்த உறவு முறிந்துபோய் பேராசிரியர் இன்னொரு பெண்ணைத்திருமணம் செய்வதாயும், சாயா வேறொரு நகரத்துக்கு விரிவுரையாளாராகப் போகின்றதாயும் முடியும். அழகாய் முகிழ்கின்ற உறவுகள் எல்லாம் ஏன் உடைகின்றன என்று எண்ணிப் பார்த்தால் இனம்புரியாத பீதியும் இருட்டுமே நம் மனதுக்குள் படரும். அந்த இருட்டிலும், நம்பிக்கையாய் சாயா தனது வாழ்கையில் நகர்வதாய் காட்டப்படுவது இதமாயிருக்கின்றது. இந்தக் கதையில் சாயாவுக்கு தனது தந்தை எப்படி இறந்தார் என்ற உண்மையை அறிய விரும்புகின்றவராகவும், ஆனால அவரது தாயார் அந்த இரகசியத்தை மறைத்தபடி இருக்கின்றவராயும் வரும்.

அந்த இரகசியம், Laksmi's Diary என்ற இன்னொரு கதையை வாசிப்பவருக்கு உடைத்துக்காட்டப்படுகின்றது. என்றாவது ஒருநாள் தனது மகள் சாயா வாசிப்பாள் என்று, நேரில் கூறத் தயங்கும் இரகசியத்தை சாயாவின் தாய் லக்ஷ்மி, டயரியில் எழுதி வைத்திருக்கின்றார். குடியும், இணைதலும்/பிரிதலும் என்று கணவனுடன் வன்முறைகளுடன் கழியும் வாழ்க்கையில், ஒரு நாள் குடிவெறியில் கார் ஓடிக் கொண்டு போகும்போது, லக்ஷ்மியும், அவளது கணவனும், சாயாவும் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். அந்த நேரத்தில் லக்ஷ்மி சாயாவின் தங்கையான சவீதாவை கர்ப்பமாய் வயிற்றில் தாங்கியபடி இருக்கின்றார். விபத்தில் சிக்கி மூர்ச்சையாகி இருந்த தனது கணவன் ராசாவை தனது சேலையை அவனது மூக்கில் இறுக்கிப் பிடித்து கொன்றுவிடுகின்றாள் லக்ஷ்மி . சிலவேளைகளில் விபத்தின் காரணமாய், முன்னரே இராசா இறந்திருப்பான என்று நினைத்தாலும், இராசாவை கொலைசெய்த குற்றவுணர்ச்சியுடனேயே லக்ஷ்மி தன் மீதி வாழ்நாள்களைக் கழிக்கின்றாள். உண்மையில் அவளை அப்படி செய்யத்தூண்டியதற்கு அவன் அப்படி ஒரு கொடுங் குடிகாரனாக மட்டும் இருந்தது காரணம் அல்ல. நள்ளிரவுகளில் கட்டிலை விட்டு அடிக்கடி இராசா காணாமற்போவதும், உடைகள் விலகப்படுத்துக்கொண்டிருக்கும் சிறுமி சாயாவை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதும், விரைவில் அது எங்கே போய் முடியும் என்று லக்ஷ்மிக்குத் தெளிவாய் விளங்கிய காரணமும் கூடத்தான், அவளை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது. (இராசாவின் இந்த 'நடத்தை' குறித்து எற்கனவே தனது தங்கையிடம் லக்ஷ்மி,இது குறித்து என்ன செய்வதென்று விவாதித்திருப்பாள்).

Gentleman என்ற கதை இராஜி, குயிலா, இராசா என்ற மூன்று பிள்ளைகளின் தகப்பனான சுந்தரின் பார்வையில் கதை கூறப்படுகின்றது. ஒருநாள் இராசா எவருக்கும் கூறாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகின்றான். இராஜி தன்னோடு படித்துக்கொண்டிருக்கும் வெளைக்கார இளைஞர்களுடன் டேட்டிங் செய்துகொண்டிருப்பதால் அவள் மீது நம்பிக்கை இழந்து, குயிலா மீது மட்டும் சுந்தர் நம்பிக்கை கொள்கின்றார். குயிலாவும் தகப்பன் சொல் தட்டாத மகளாக இருக்கின்றார். குயிலாவின் பதினேழாவது பிறந்த தினத்தில் தனது செல்ல மகளுக்கு கொழும்பில் திருமணம் செய்து வைக்கப் போவதாய் சுந்தர் அறிவிக்கின்றார். ராஜி, படிக்கவேண்டிய இந்த வயதில் தஙகைக்கு திருமணம் வேண்டாம் என்று தந்தையிடம் சண்டை பிடிக்கின்றாள். இளவயதில் திருமணம் செய்வது குறித்து பயமிருந்தாலும் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகின்றாள் குயிலா. கொழும்புக்குப் போய குயிலா திருமணம் செய்வதுடன் கதை முடிகின்றது.

நல்ல பிள்ளையாய், 'குழப்படி' செய்யாது, பெற்றோர் சொல் கேட்கின்ற பிள்ளைக்கும் (குயிலா) அமைதியான வாழ்க்கை கிடைத்தல் அவ்வளவு இலகுவல்ல என்றுதான் இன்னொரு கதையான The Emigrant கூறுகின்றது. குயிலா திருமணம் செய்த சில வருடங்களின் பின் ஜுலை (83) கலவரம் நடக்கின்றது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, கொழும்பில் 'வாழ்க்கைப்பட்ட' குயிலாவுக்கு தமிழ்- சிங்களப்பிரச்சினை எல்லாம் புதிதாயும் பீதி தருவதாயும் இருக்கின்றது. அத்தோடு வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு வடுவும் வந்து இந்தத்தருணத்தில் சேர்ந்துவிடுகின்றது. தனது கணவனுக்கு தன்னை திருமணம் செய்யமுன்னர், கிமாலி(Himali) என்ற பெண்ணுடன் உறவு இருந்தது என்பதுவும் அவர்களுக்கு றொஷான் என்ற பிள்ளை இருப்பதுவும் தெரியவர வாழ்க்கையின் கசப்பை குயிலா சுவைப்பதாய் கதை முடியும். குயிலாவின் பிள்ளையே, அமெரிக்காவுக்கு புலமைப்பரிசில் படிக்க வரும் மின்னல் (Minal in Winter) என்னும் பதின்மவயதுக்காரி. (வேறொரு கதையில் குயிலாவின் கணவன் தனது சிங்களத் துணைவியை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு மின்னல் இரண்டு வயதில் இருக்கும்போதே போய்விடுவதாக வரும்).

என்னைப் பாதித்த கதைகளில் ஒன்று Tightness in the chest. இராஜியினதும், விவேக்கினதும் கதை இது. இராஜி (குயிலாவின் அக்கா) வெள்ளைப் பையன் ஒருவனோடு serious உறவில் இருந்தபோது, அவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து தன்னை ஏமாற்றுகின்றான் என்று அறியவரும்போது அவனை உதறித் தள்ளிவிட்டு, தனது பெற்றோரிடம் தனக்கு ஒரு துணை தேடும்படி இராஜி கூறுகின்றாள். பெற்றோரும் கொழும்பில் வைத்தியராக வேலை செய்துகொண்டு இருந்த விவேக்கை மணம் செய்து கொடுக்கின்றனர். விவேக் ஒரு அருமையான இளைஞன்; அவனது பெற்றோருக்கு அவனே ஒரெயொரு பையன். இராஜிக்கு, இதற்கு முன் ஒரு உறவு இருந்தது என்பது சாடைமாடையாகத் தெரிந்தாலும் விவேக் அது பற்றி இராஜியிடம் விபரமாய்க் கூறும்படி வினாவியதில்லை. அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தபோது இராஜி மேற்கொண்டு என்ன படிப்பது என்று குழம்பியபோது அவள் ஒவியம் படிப்பது நல்லதென்று உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கின்றான். அவள் நிர்வாணமாய் ஆண் மொடல்களை நிறக்வைத்து படம் வரையும்போதோ அல்லது இப்படி அவர்கள் வரையும்போது 'நீயும் நிர்வாணமாய் காட்சி கொடுப்பாயா? என்று சஞ்சலம் அடைந்து கூட வினாவியதில்லை. சமையல் வேலைகளைப் பகிர்ந்தபடி, அவளுக்கு அவனுக்குப் பிடித்த சோறும் கோழிக்கறியும் வைக்க வராது என்று தெரிந்து அவளை வற்புறுத்தாமல் தானே சமைத்துச் சாப்பிடவும் செய்கின்றவன். எந்தப் பெண்ணையும் எதிர்த்துக் கதைக்கக்கூடாது என்று அவனது அமமா சிறுவயதில் சொல்லிக்கொடுத்ததை தொடர்ந்து கடைப்பிடித்தபடி இராஜியைக் காயப்படுத்தாமல் இருக்கின்றான். ஆனால் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருப்பதில்லை. நல்லவராகவும் நேர்மையானவராகவும் இருந்தால் கூட அனைத்தும் நியாயமாய் நேர்மையாய் ஒருவரது வாழ்வில் நிகழ்ந்துவிடும் என்பது இல்லைத்தானே? 'குழந்தை ஒன்றை பெற்றுக்கொள்வோமா?' என்று அவன் கேட்டதற்கு கோபப்பட்டு ராஜி வீட்டை வீடு போய் விடுகின்றாள். பிறகு சில நாள்களின் பின் திரும்பி வந்து, தான் இது குறித்து யோசிக்க மோட்டல்(motel) ஒன்றில் தங்கி நின்றதாகக்கூறுகின்றாள். அங்கே உனது முன்னாள் வெள்ளைக்கார நண்பன் வந்தானா என்று கூட எந்தக் கேள்வியும் கேட்கமல்தான் விவேக் இருக்கின்றான். இப்படி பிறகு, அடிக்கடி இராஜி வீட்டை விட்டு வெளியே போவதும் சில நாள்களின் பின் திரும்பிவருவதுமாய் இருக்கின்றாள். ஆனால் எந்தக் கேள்விகளையும் இராஜியை நோக்கி வெளிப்படையாகக் கேட்காமல் விவேக் தன்பாட்டில் இருக்கின்றான். இறுதியில் அவனுக்கு பொஸ்ரனில் வேலை மாற்றம் கிடைக்கிறது. பெயர்வதற்கு சில நாள்கள் முன், வைத்தியசாலையில் அவன் மீது ஈர்ப்பு வைதிருக்கும் வெள்ளைக்காரப் பெண்ணுடன் விவேக் உடலுறவில் ஈடுபடுகின்றான். இது இராஜியை பழிவாங்குவதற்கே தவிர, விருப்புடன் அல்ல. பிறகு இராஜியிடம் 'I had sex with another woman' என்கின்றான். இராஜி, 'Are you going to have sex with her again?' என்று வினாவ, ''No' என்று மறுமொழிகின்றான். 'ok then' என்றபடி இராஜி திரும்பி படுப்பதுடன் நிறைவுபெறுகின்றது, கதை. ஒரு குற்றத்தை/தகாத உறவை இன்னொரு குற்றத்தால்/தகாத உறவால் சமனாக்குவதாய் வாசிப்பவருக்குத் தோன்றும்வண்ணம் கதை எழுதப்பட்டிருக்கும். ஏன் இவ்வளவு நல்லவனாய் இருக்கும் விவேக்கை இராஜியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற வினா எல்லோருக்குள்ளும் எழுவதைப் போல, அத்தனை காலமும் வெள்ளையினப் பெண்ணின் ஆசையை நிராகரித்துக்கொண்டிருந்த விவேக், ஏன் இன்னொரு நகரத்துக்கு குடிபெயரும்போது மட்டும் சறுக்குகின்றான் என்ற வினா எழும்புவதையும் தவிர்க்கமுடியாது. வாழ்வு எப்பவும் மர்மங்களை/ விடை தெரியாக் கேள்விகளைத்தான் தன்வசம் வைத்திருக்க விரும்புகின்றது போல.

ஆனால் இதே இராஜியும் விவேக்கும் (மின்னல் பற்றி வரும் கதையில்) பல வருடங்களின் பின், மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இராஜி தனது முதற் குழந்தையை கருவாய்த் தாங்கி கொண்டிருபபதாயும் வரும்.

Seven cups of water என்ற கதை பெண் சமப்பாலுறவு பற்றியது. மங்கைக்கும், அவளது சகோதரனை திருமணஞ் செய்து கொண்ட சுசிலாவுக்கும் குறுகிய காலத்தில் முகிழும் லெஸ்பியன் உறவு பற்றியது. திருமணம் செய்த சுசிலா, மங்கையுடன் தங்கிநிற்கும் ஏழு நாள்களையும் ஏழு தண்ணீர்க் குவளைகளுக்கு படிமமாக்கி மேரி எழுதியிருப்பார். சுசிலா தனது கணவன் சுந்தருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, பிள்ளைகளுடன் வாழ்வதாகவும், மங்கை தனியாளாக வாழ்வதுமாயும் கதை முடியும். இந்த சமப்பாலுறவு அவர்களது பதின்மத்திலேயே நிகழ்வதாய் இருப்பதை வாசிக்கும்போது தனியாட்களாய் வளாகத்தில், உயர்கல்லூரியில் வசிக்கும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்) சிறுதுளியாய் ஒரு பருவத்தில் வந்து மறையக்கூடிய சமபாபாலுணர்வு ஈர்ப்புக்களை கதை நினைவுபடுத்தியது.

இன்னொரு கதையான Monsoon Dayயில் மங்கை தனித்து வாழ்வதாகவும் அந்த ஊர் மக்கள் அவர் மீது நிரம்ப மரியாதை வைத்திருப்பதாயும் வரும். மங்கைக்கும், அவருக்கு உதவியாக தங்கியிருந்து சமையல் செய்த பெண்ணுக்கும் உறவு இருந்ததாய் சாடைமாடையாகச் சொல்லப்படும். மங்கையிடம், பருவமடையும் தமது பெண்களை உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, அறிந்து கொள்வதற்காய் அந்த ஊர்ப்பெற்றோர்கள் பேச அனுப்புவதாயும் அதில் சம்பவங்கள் வரும். அதே சமயம் மங்கை, ஒரு பொழுது, 'இப்படி மர்மாய் வாழ்க்கை நடத்தியதால்' ஒரு இளைஞர் கூட்டத்தால் சுடப்பட்டு தப்பிப் பிழைத்திருப்பார். ஊர் மக்கள் எவ்வளவு வலிந்து கேட்டபோதும் அவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என்று மங்கை வாய் திறந்து கடைசிவரை பேசவேமட்டார்.

(3)

Mary Anne signing her recent book, 'Bodies in motion'

மேரி ஆனின் கதைகள் எந்த இடத்திலும் உரத்துப் பேசுவதில்லை. வாழ்வை அதன் மயக்கங்களுடன், வருத்தங்களுடன், நம்பிக்கைகளுடன், நம்பிக்கைத் துரோகங்களுடன் இயல்பாய் விரித்து வைக்கின்றன. கதைகளை வாசிக்கும்போது எவர் மீதும் அதீத கோபமோ வெறுப்போ வருவதில்லை. அவரவர்களின் இயல்புடன் அவரவர்களின் விருப்புக்களை ஏற்றுக்கொண்டு நகர்வதுதான் உன்னதம் என்கின்றமாதிரி இந்தக் கதைகளை வாசித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது.

தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் (இரண்டு வயதிலேயே மேரி ஆன் ஈழத்தைவிட்டு புலம்பெயர்ந்தவர்) மிக ஆழமான ஆய்வுகள் செய்து ஈழப்பிரச்சினையை சரியான விதத்தில் விளங்கிகொண்டிருக்கின்றார். 57 கலவரத்திலிருந்து 83ம் ஆண்டுக்கலவரங்கள் வரை தகவல்களை/சம்பவங்களை மிகத் துல்லியமாய்க் குறிப்பிடுகின்றார். எந்தப் பக்கமும் சாராமல் 'உண்மைகளை' உண்மையாய்/நேர்மையாக முன்வைக்கிறார். இராணுவம் வீட்டுக்கு வந்த பதினம வயதுச் சகோதரனைச் சுட்டுக்கொல்ல, அதைப்பார்த்து இயக்கத்துக்கு போய் சேர்கின்ற பதின்மவயதுத் தங்கை வருகின்றார். தங்களின் இரண்டு பிள்ளைகளும் இப்படிப் போயிவிட்டனரே என்று புலம்புகின்ற பெறறோர் வருகின்றனர். தனது மகள் இயக்கத்தை விட்டு விலகி வந்தால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்று யோசிக்கின்ற தகப்பனும் வருகின்றார். சுதந்திரமாய் தாம் எழுதும்/விமர்சிக்கும் (கடிதங்களை) புலிகள் பிரித்துப் படிப்பார்கள் (கண்காணிப்பார்கள்) என்ற பதட்டத்துடன் எழுதப்படுகின்ற சம்பவங்களும் சித்தரிக்கப்படுகின்றன. 83 கலவரத்தின் பயங்கரம், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கொழும்பில் திருமணஞ்செய்த குயிலாவின் பார்வையில் விவரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பதின்மத்தில் விரும்பிய சூழலில், தன்னை ஒரு ஆணிடம் இழக்கின்ற பெண், இப்படித் தான் விரும்பியதைத் தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரம் கிஞ்சித்தும் கூட இல்லாமல் தன்னைப் போன்ற பெண்கள், ஈழத்தில் இராணுவங்களின் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்று யோசித்து கலங்குவதாயும் வருகின்றது.

இவரது கதைகளிலும் பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் உடலுறவில் ஈடுபடுகின்ற பெண்கள் வருகின்றார்கள். ஆனால் எவரும் நமது பிற ஆண் தமிழ் எழுத்தாளர்களைப் போல சிதைக்கப்படாமல் அவர்களது இயல்புகளுடன் சித்தரிக்கப்படுகின்றார்கள் (முக்கியமாய் சாருநிவேதிதா மற்றும் சாணக்யா, இயலுமாயின் இந்தத் தொகுப்பபை வாசித்துவிட்டு தமது கதைகளில் சித்தரிக்கும் பதினமவயதுக்காரர்களை எப்படி எழுதியிருக்கலாம் என்று ஒருமுறை யோசிக்கலாம்). சிலவேளைகளில் பெண்களால்தான் பெண்களைப் பற்றி இயல்பாய்/சரியாய் எழுத முடியுமோ என்று எழும் எண்ணத்தையும் தவிர்க்க முடிவதில்லை. அதே மாதிரி, 'எப்போதோ புலம்பெயர்ந்துவிட்டேன் ஊரும் போய்விட்டது ஊர்க் கிடுகு வேலியும் போய்விட்டது' மாதிரி, ஈழ அரசியல் குறித்து மெளனஞ்சாதிக்கும், அ.முத்துலிங்கம் போன்றவர்களும் மேரி ஆனைப் பார்த்து தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ளலாம் (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இன்னொருவிதமாய் உண்மைகளை 'உண்மைகளாய்' திரிக்காமல் எப்படி எழுதுவதென்றும் இந்தத் தொகுப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்). இரண்டு வயதில் அமெரிககாவுக்கு புலம்பெயர்ந்து, அக்கறையுடன் ஆய்வு செய்து தனது வேர்களைப் பற்றி, அங்குள்ள அரசியலைத் தவிர்க்காது எழுத, மேரி ஆனால் முடிகின்றதென்றால் ஏன் அ.முததுலிங்கம் போன்றவர்களால் ஈழப்பிரச்சினை குறித்து, எதுவும் வெளிப்படையாகப் பேசாது இருக்கின்றனர் என்ற வினா எழும்புவதையும் தவிர்க்க முடிவதில்லை. மாயா அருட்பிரகாசத்துக்கோ (M.I.A) , மேரி ஆனுக்கோ தமிழரென்று அடையாளம் காட்டித்தான் தம்மை நிலைநிறுத்தவேண்டிய அவசியமில்லை. அவர்களை வாசிக்கும்/கேட்கும் மக்களில் தமிழ் சனத்தொகை மிகச்சிறிய தொகையே. மேலும் ஈழ அரசியலைப் பேசுவதால் பிரபலம் கிடைக்கும் என்பதைவிடவும் சர்ச்சைகள்தான் (அதிக இரசிகர்களை/வாசிப்பவர்களை இழக்கும் சந்தர்ப்பம்) அதிகம் வரும் என்று தெரிந்தும், தமது அடையாளங்களை/வேர்களை, தாம் பேசவிரும்பும் அரசியலை, மறைக்காது பேசும் இந்த இரு பெண்களும் நிச்சயம் பாராட்டுக்களுக்கும் மதிப்புக்கும் உரியவர்களே.


photos courtesy: http://www.mamohanraj.com

20 comments:

Anonymous said...

பதிந்தது:karthikramas

//தமது அடையாளங்களை/வேர்களை, தாம் பேசவிரும்பும் அரசியலை, மறைக்காது பேசும் இந்த இரு பெண்களும் நிச்சயம் பாராட்டுக்களுக்கும் மதிப்புக்கும் உரியவர்களே.//

mukkiyamaanathu

30.9.2005

9/30/2005 01:00:00 PM
Anonymous said...

enakku therinthu ithuvarai naan patiththa puththaga review-il ithu thaan miga chiranthathu.
nandraaga ul vaangi ezhuthi ulleergal. Yelimaiyaagavum matrum sariyaagavum ullathu.
(I read some stories from the website)

9/30/2005 04:48:00 PM
Thangamani said...

மிக நீளமான ஆனால் முழுமையான விமர்சனம். இதை நீங்கள் ஏதேனும் பத்திரிக்கைக்கு அனுப்பலாம்.

//மேரி ஆனின் கதைகள் எந்த இடத்திலும் உரத்துப் பேசுவதில்லை. வாழ்வை அதன் மயக்கங்களுடன், வருத்தங்களுடன், நம்பிக்கைகளுடன், நம்பிக்கைத் துரோகங்களுடன் இயல்பாய் விரித்து வைக்கின்றன. கதைகளை வாசிக்கும்போது எவர் மீதும் அதீத கோபமோ வெறுப்போ வருவதில்லை. அவரவர்களின் இயல்புடன் அவரவர்களின் விருப்புக்களை ஏற்றுக்கொண்டு நகர்வதுதான் உன்னதம் என்கின்றமாதிரி இந்தக் கதைகளை வாசித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது.//

நான் நல்ல இலக்கியங்கள் என்று கருதும் இலக்கியங்களும், மனிதர்கள் என்று கருதும் நபர்களும் இப்படியாகத்தான் வாழ்க்கையைப் பார்க்கின்றன(ர்). கரையோரத்தில் இருந்து பார்க்கும் போது வாழ்க்கையைப் பற்றிய நமது நம்பிக்கைகள் நுரைகளைப்போல மேலாகத் ததும்புகின்றன; மோதிக்கொள்கின்றன; காலப்போக்கில் வெடித்து மறைகின்றன. நொடிப்பொழுதில் அவை காட்டுகிற காட்சிகள், பிரதிபலிப்புகள்! ஆனால் ஆர்வமும், தேவையும், துணிச்சலும் கொண்டவர்களுக்கு வாழ்க்கை காட்டும் காட்சிகள் வேறு. அங்கு முழுகிப்போகும் ஒருவனே தானும் வாழ்க்கையில் கரைந்தழிந்துபோகக் காண்கிறான்.(சமுத்திரத்தில் விழுந்த உப்பு பொம்மையொன்று கரைந்து போவது போன்ற என்ற இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு உவமை மனதில் தோன்றி கண்கள் பனிக்கிறது)

//தமது அடையாளங்களை/வேர்களை, தாம் பேசவிரும்பும் அரசியலை, மறைக்காது பேசும் இந்த இரு பெண்களும் //

அவசியமாக ஒருவர் தமது வேர்களை பேச வேண்டுமா என்றால், அவசியமற்று அவற்றை மறைப்பதில் உள்ள சிலரின் நேர்மையின்மைதான் பதிலாகக் கிடைக்கிறது. அதுதான் இவர்களின் மேல் மரியாதையையும் அன்பையும் கொண்டுவருகிறது.

விமர்சனத்து நன்றிகள் டிஜே. நான் படிக்க முயலுவேன்.

9/30/2005 05:26:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக், பாலாஜி-பாரி மற்றும் தங்கமணி உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
.....
பாலாஜி-பாரி, ஒவ்வொரு கதையையும் ஒரு நாள் என்றரீதியில் வாசித்ததால் அதிகம் நினைவில் நின்றதோ தெரியாது. சிலகதைகள் நாள் முழுதும் விலகாது மனம் முழுதும் நிரம்பியிருந்தது என்பது உண்மை :-).
......
தங்கமணி, உண்மைதான்; இது சற்று நீண்ட பதிவாய்ப் போய்விட்டது. சொந்தத் தளம் இருந்தால் எதையும் எழுதித் தள்ளலாம் போல :-). இன்னும் சிலவிடயங்கள், இது குறித்து எழுத விருப்பம் இருந்தாலும், இந்த நீளத்துக்கே அனேகர் வாசிக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால், ஏன் இன்னும் பயமுறுத்துவான் என்று அவற்றை எழுதாமல் விட்டுவிட்டேன் :-).
//அவசியமாக ஒருவர் தமது வேர்களை பேச வேண்டுமா என்றால், அவசியமற்று அவற்றை மறைப்பதில் உள்ள சிலரின் நேர்மையின்மைதான் பதிலாகக் கிடைக்கிறது. அதுதான் இவர்களின் மேல் மரியாதையையும் அன்பையும் கொண்டுவருகிறது.//
நீங்கள் கூறுவதைப் போலத்தான் எனது கருத்தும். கட்டாயம் ஒருவர் தனது வேர்களை நிரூபிக்கவேண்டும் என்றில்லை; ஆனால் நிரூபிக்கவேண்டிய தருணங்களில் மெளனமாய் 'தேசிய நீரோட்டங்களில்' கலந்துவிடுவதால்தான், இது குறித்து கேள்வி எழுப்பவேண்டியிருக்கின்றது.

9/30/2005 10:38:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இணையத்தளத்தில் அவருடைய கதைகள் சிலவற்றை உங்கள் புண்ணியத்தில் படித்தேன். நீங்கள் நன்றாக உள்வாங்கி எழுதியிருப்பது தெரிகிறது!

நல்ல முயற்சி டீஜே!

தங்கமணி சொன்னதை முதலில் செய்யுங்கள்.

அற்றம், காலம் என்று ஏதேனும் இதழில் வரவேண்டும்.

-மதி

10/01/2005 12:39:00 AM
arulselvan said...

97/98 வாக்கில் மேரி யின் சில கதைகளை இணயத்தில் படித்திருக்கிறேன். அப்பல்லாம் எரோடிகாதான் எழுதுவார். தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு வளர்மாற்றத்தில்
மேரியும் மயாவும் கவனம் பெறக்கூடியவர்கள்தாம். மயா கடந்த தூரம் அதிகம். (Freddy Mercury தவிர வேறு எந்த இந்திய துணைக்கண்டத்தவரும் மயா அளவு மக்கள் இசையில் செய்ததில்லை).
அருள்

10/01/2005 05:58:00 AM
பத்மா அர்விந்த் said...

நன்றி முழுமையான விமரிசனத்திற்கு. படிக்க ஆர்வத்தை தூண்டும் விமரிசனம்.
தங்கமணி: வேர்களை எப்படி மறைக்க முடியும்? பூவும் இலையும் போல செய்கைகளே காட்டி கொடுக்கும் போது?

10/01/2005 07:43:00 AM
Anonymous said...

/(Freddy Mercury தவிர வேறு எந்த இந்திய துணைக்கண்டத்தவரும் மயா அளவு மக்கள் இசையில் செய்ததில்லை)/
அண்ணே, ஸூபின் மேத்தாவையும் (ஓரளவுக்கு) ரவிசங்கரையும் விட்டுவிட்டீர்களே

10/01/2005 10:15:00 AM
arulselvan said...

>>>>
/(Freddy Mercury தவிர வேறு எந்த இந்திய துணைக்கண்டத்தவரும் மயா அளவு மக்கள் இசையில் செய்ததில்லை)/
அண்ணே, ஸூபின் மேத்தாவையும் (ஓரளவுக்கு) ரவிசங்கரையும் விட்டுவிட்டீர்களே
-------------------------------------

ஜுபின் மேத்தாவும், ரவி ஷங்கரும் 'மக்கள் கலை'ஞரா? :-)
எங்கள் தலைமுறைக்கு 'ரேடியோ கா கா' போல இப்போ கலாங்?
பொறுத்திருந்து பார்க்கலாம். இன்னும் ரெண்டு ஆல்பம் வரணும். பொஹிமியன் ரேப்சடி அப்புறம் வருமோ?.
அருள்

10/01/2005 11:02:00 AM
Anonymous said...

ஓஹோ! அந்தப்பக்கத்தாலை வாறீங்களா? அப்ப, சரி. (ஆனால், Original Woodstock, George Harrison இனின் Rocking for Bangaladesh famine victoms மக்கள்கலைசார்ந்தவையென்றால், ரவிசங்கரும் அடக்கம்).

ரவிசங்கர் மகள் நோரா, அபச்சே இந்தியன், பங்காரா மக்கள் எல்லோரும் கண்டுகொள்ளப்படவேண்டியவர்களதானா?

10/01/2005 11:59:00 AM
arulselvan said...

ரவிஷங்கர் 'மக்கள்' இசையில் இல்லை. அப்பசே, ரஹ்மானுக்குப் பாடத்தான் லாயக்கு . பிரெட்டி, நோரா, அப்பசே, பங்க்ரா பயல்கள், மயா ... இதில் எது சரியான வரிசை என்பது அவரவர் விருப்பம். sheer inventiveness எனப் பாத்தால் என்னைப் பொருத்தவரை பிரெட்டி, மயா, ...,. ..,. .., ... .இசை நிபுணத்துவம் என்றால் வேறு. நோரா எல்லோருக்கும் முதலில் வரலாம். ஆனால் நாம் பேசுவது 'மக்கள் இசை'. Queen, when they ruled, were kings. But the crics cribbed a lot. Well... :-)
அருள்

10/01/2005 12:25:00 PM
Anonymous said...

Nora did not want to be referred to us Ravishankar's daughter. I think we should respect.

10/01/2005 01:00:00 PM
இளங்கோ-டிசே said...

அவசரமாய் சில... (மற்றவை குறித்து பிறகு).

'மக்கள்' இசையில் என்று அருள் கூறியது மாதிரி சித்தார் ரவிஷங்கரை (அவருக்கென்று தனிப்பட்ட இரசிகர் கூட்டம் மேற்குலகில் இருப்பினும்) இணைத்துக்கொள்ளமுடியாது என்று நினைக்கின்றேன். நோரா ஜோன்ஸிற்கு ஆரம்பத்தில் இருந்த அமோக வரவேற்பு இப்போது வடிந்து போய்விட்டதாய்த்தான் போலிருக்கிறது. புதுக்குரல் என்ற வ்சீகரம் (மாயாவுக்கும் சிலவேளைகளில் இந்த நிலை ஏற்படலாம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்)நோராவை கிராமி விருதுகள் வரை அள்ளிக்கொடுக்க உதவியாய் இருந்திருக்கின்றது (Alicia Keys போன்றவர்களின் துரித வ்ளர்ச்சி கூட சிலவேளைகளில் நோராவின் திறமையை அமுக்குவதாயும் இருக்கலாம்). அப்பாச்சி இன்டியன் ஜரோப்பாவை விட்டு இன்னும் நகரமுடியாது அவதிப்ப்படுகின்றார்.

பங்காரப் பாடல்களைத்தான் மக்கள் இசையில் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது rap பாடல்களிலும் இந்தியப் பின்னணி/பங்காராப் பாடல்கள் அதிகரித்து வருகின்றதை இலகுவில் கண்டுகொள்ளலாம்.

மாயா தனது இசைப் பயணத்தில் மிக கவனமாக நகரவிரும்புகின்றார் என்று(பெயரிலியின் பதிவொன்றில்) மதி சுட்டி தந்த கட்டுரையை வாசித்தால் புரியும். மற்றவர்களுடன் இணைந்து பாடுவதைவிட முதலில் தனது தனித்துவத்தை நிலை நாட்டவே மாயா இந்தப்பொழுதில் விரும்புகின்றார் போலத்தான் எனக்குப் பட்டது. சென்ற திங்கட்கிழமை ரொரண்டோவுக்க்கும் அதற்கு முதல் மொன்றியலுக்கும் வந்து மாயா நிகழ்ச்சி நடத்தியிருந்தார் (மூன்று கிழமைகளுக்கு முன்னர் ரிக்கெட் விற்றுத்தீர்ந்து போகமுடியாததால், தொலைபேசிய நண்பர்களுடன் நான் வைத்த ஒப்பாரி தனிக்கதை). இது குறித்து MTVவில் கூறியபோது, woman Sean Paul with attitude என்று அறிமுகம் தந்தார் ஒரு VJ. Attitudeல் எதைக் குறிப்பிட விளைந்தார் என்று சரியாகப் புரியாவிட்டாலும், தவிர்க்க முடியாத ஆளுமையாக மேற்குலகின் main streamக்குள் மாயா நுழைந்துகொண்டிருக்கின்றார் என்பதே உண்மை. ஒரு rap magazine ல் மாயா ஒரு நேர்காணலில் கூறியிருப்பார், 'உங்களுக்கு தெருவில்தான் துப்பாக்கிச் சத்தம் கேட்கும். எங்களுக்கு வீடே ஊரில் புல்லட்களாலும் செஷ்களாலும்தான் நிரம்பியிருந்தன என்று. Galang or Bucky Down Gun or 'கடைக்குப்போனாளாம்...காசு பத்தலையாம்' என்று தமிழில் interlude வரும் பாடலோ ரீவியிலோ/ரேடியோவிலோ வரும்போது, 'yoo man, look our tamil girl rapping' என்று எங்களுக்கு பெருமிதப்படவும் ஒருவர் இருக்கின்றார் என்பது சந்தோசமான விடயந்தானே.

10/01/2005 01:44:00 PM
இளங்கோ-டிசே said...

மதி, அருள், பத்மா மற்றும் அனானிமஸ்(கள்) உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
.....
//தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு வளர்மாற்றத்தில்
மேரியும் மயாவும் கவனம் பெறக்கூடியவர்கள்தாம்//
அருள்,அதே கருத்துத்தான் எனதும்,

10/02/2005 09:27:00 AM
Anonymous said...

பதிந்தது:ஷ்ரேயா

வாசிக்க வேண்டும். விமர்சனத்துக்கு நன்றி டிசே.

4.10.2005

10/04/2005 01:17:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி ஷ்ரேயா.

10/16/2005 07:33:00 PM
Anonymous said...

பதிந்தது:அன்பு

தான் ரசித்ததை பிறருக்கு சொல்லி/எழுதி பிறரையும் லயிக்க வைப்பது வெகுசிலரால்தான் இயலுகிறது. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது, பாராட்டுக்கள்.
கண்டிப்பாக இந்தப்புத்தகம் தேடிப்படித்திருக்க வாய்ப்பில்லை - அந்தக்குறையை உங்களின் இந்தப்பதிவு போக்கியது, மிக்க நன்றி

17.10.2005

10/17/2005 12:20:00 AM
துளசி கோபால் said...

விமரிசனத்துக்கு நன்றி டிசே.
இந்தப் புத்தகம் கிடைத்தால் கட்டாயம் படிக்கணும். ஆவலைத் தூண்டுவிதம் எழுதிவிட்டீர்கள்.

10/17/2005 11:30:00 PM
இளங்கோ-டிசே said...

அன்பு மற்றும் துளசி! உங்களைப் போன்றவர்களின் ஊக்குவித்தல், தொடர்ந்து வாசிக்கவும், மனதைப் பாதித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் என்னை உற்சாகப்படுத்தும். பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.

10/18/2005 08:32:00 AM
Anonymous said...

odTyhrikweww [URL=http://bingolinerbonus.com]n3 bingo[/URL] rhiichxyncy

3/07/2012 11:21:00 PM