கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

உடைந்த உரையாடல்கள்

Thursday, December 22, 2005

'என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?'
'ச் சா சா...என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.'
'இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிக்கைக்கு அனுப்பிவிடும்.'
'கூகிளிலிருந்தா? எனக்கு அப்படிச்செய்து பழக்கமில்லை.'
'அதுசரி, முந்தி யூனியில் படிக்கும்போது, நீர் கூகிளிலிருந்து உருவிப்போட்டு கட்டுரைகள் எழுத, நானும் உமக்கு அந்தமாதிரி எழுத்துத் திறமை என்டெல்லோ தவறாக நினைத்து காதலித்தனான்.'
'சரி, சரி பழையதெல்லாம் இப்ப ஏன் கிண்டுகின்றீர்? நான் பழையதெல்லாம் மறக்க முயன்று என்ரைபாட்டில் ஒரு கட்டுரை எழுதலாம் என்டு பார்க்கிறன்.... என்டாலும் நீர் வர வர எங்கடை அம்மா மாதிரிதான் கதைக்கின்றீர்?'
'எப்படியப்பா?'
'இல்லை அம்மா அடிக்கடி சொல்லுவா....உன்னைப் பெத்ததற்குப் பதிலாய் இரண்டு தென்னம்பிள்ளைகளை வைத்து தண்ணி ஊற்றியிருந்தால் இந்த நேரம் தேங்காயாவது பிடுங்கியிருக்கலாம், நான் ஒரு பன்னாடையை எல்லோ பெத்துவிட்டேன் என்று.'
'அப்படியா சொல்லுறவா? அந்த மனுசி நான் உம்மளை கலியாணங்கட்டப்போகின்றேன் என்றபோது இதை என்னிடம் சொல்லியிருந்தால் நானும் இந்த நரகத்திலிருந்து தப்பியிருக்கலாமே.'
'அவா, இதுவரை தான் பெற்ற கஷ்டம் போதும் என்றுதான் உம்மளிடம் என்னைத் தள்ளிவிடுகின்றேன் என்றவா! சரி அதைவிடும். நான் ஒரு அறிவுஜீவியாக வரவேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது உதவி செய்யுமன்?'
'அதற்கெல்லாம் நீர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். அடிக்கடி இச(க்) கிளப்புகளுக்கு போயிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து நீர் போனதெல்லாம் யோகா கிளப்புகளுக்கும், கோப்பிக்கடைகளுக்கும் தான். அங்கே போயும், நீர் ஒழுங்காய் உருப்படியான விடயத்தையா செய்தனீர்? அங்கு வாற போற கேர்ல்ஸை சைட் அடித்தது மட்டுந்தானே சின்சியராய்ச் செய்தனீர்.'
'அவனவன் கவிதைகள், கட்டுரைகள் எழுதி உலகம் சுற்றும் PLAYERகளாக குதூகலித்துக் கொண்டிருக்கின்றாங்கள் என்ற பொறாமையிலை நான் வயிறெரிந்து கொண்டிருக்கிறன். நீர் என்னடா என்றால்.... என்னப்பா எங்கையப்பா அவசரமாகப் போகின்றீர்?'
'இல்லை ஏதோ player, கவிஞர் என்று கேட்டிச்சுது. அதுதான் இந்த இடியப்ப உரல் எங்கே இருக்கிறது என்று தேடப் போகின்றேன்.'
'ஏனப்பா கோபப்படுகின்றீர். கொஞ்ச நாளாய் இடியப்ப உரலுக்கு வேலை தராது நல்ல மனுசனாய்த்தானே இருக்கிறன். எதைச் சொன்னாலும் உடனே இடியப்ப உரலைத் தேடும்.'
'சரி சரி, உந்த எழுதிறது கிழிக்கிறது என்பதை விட்டு விட்டு சமைக்கிறதுக்கு வந்து ஏதாவது உதவி செய்யும்.'
(மனதுக்குள் முணுமுணுத்துபடி...) முந்தி அம்மாவோட இருக்கைக்க, றூமுக்குள்ள கணணியோடும் ரீவியோடும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்க, நேரந்தவறாது சாப்பாடு தேத்தண்ணி என்டெல்லாம் வரும்...இப்ப என்னடா என்றால்...
'என்னப்பா ஏதோ சொல்கிற மாதிரிக்கேட்குது...?'
'இல்லை. இன்டைக்கு கத்தரிக்காய் குழம்பு வைக்கிறதோ உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்கிறதோ என்று யோசித்துப்பார்த்தனான். உம்மளுக்கு என்னப்பா பிடிக்கும்?'
'சரி சரி எனக்கு ஐஸ் வைக்காமல், உம்மடை சொந்தக்காரர்களை எடுத்து உரிக்கத் தொடங்கும்.'
'என்னதையப்பா..?'
'என்னதையோ? ஏதோ தெரியாத மாதிரிக்கேட்கிறீர்.....வெங்காயம்....வெங்காயத்தை உரியும்.'

(2)
'கலகக்காரர்களை எனக்கு ஒருகாலத்தில் பிடிக்கும்!'
'ஏன் இப்ப சலித்தமாதிரி பேசுகிறாய்'
'இல்லை. கலகக்காரர்களை நேரில் அறியும் சந்தர்ப்பம் வரும்போதுதான் அவர்களின் உண்மை முகம் தெரிகின்றது.'
'என்ன நடந்தது?'
'இல்லை முந்தியொருக்கா வெங்கட்சாமிநாதன் இங்கே வந்தபோது தங்கள் எதிர்ப்பை எல்லாம் காட்டி பிரமீளுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டிருந்தார்கள்.'
'அது நல்ல விடயந்தானே...தாம் நம்புவதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றார்களே!'
'ஓம். எனக்கும் சந்தோசமாய்த்தான் இருந்தது. ஆனால்...'
'என்ன ஆனால்?'
அண்மையில் சு.ராவின் நினைவஞ்சலிக் கூட்டம் நடக்கும்போது, ஒருவர் சு.ராவின் விடயத்தில் பிரமீள் துரோகி என்று வெளிப்படையாக கூறினார்.'
'சொன்னவருக்கு என்றும் ஒரு கருத்து இருக்கும்தானே'
'அது இல்லை விசயம். முந்தி பிரமீளுக்கு துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்களில் ஒருவரும் அங்கே இருந்தவர். அது மட்டுமில்லை... 'கவித்துவமான' ஒரு கவிதையையும் எழுதிப்போட்டு, கவிட்டைக் குனிந்து பார்க்கவும் அல்லது பசுவய்யாவின் நூற்றெட்டுக் கவிதைகளைப் பார்க்கவும் என்று அடிக்குறிப்பும் தந்து கலகமாயும் எழுதினவர். அவர் இந்தச்சமயத்தில், ஒரு சின்ன எதிர்ப்பையும் பிரமீளுக்கு ஆதரவாய் காட்டாததுதான் வியப்பாயிருந்தது'
'விளங்கேல்லை நீ என்ன சொல்ல வருகிறாய்?'
'இல்லை, ஆகக்குறைந்தது, இது ஒரு இரங்கல் நினைவுக்கூட்டம். பிரமீளும், சு.ராவும் காலமாகிவிட்டார்கள், அந்த விடயங்களை பேசவேண்டாம் என்றாவது கூறியிருக்கலாம். இல்லாவிட்டால் வேறொருசமயத்தில் இவற்றை விரிவாக விவாதிக்கலாம் என்றாவது கூறியிருக்கலாம்.'
'ம்...ம்...'
'எனக்கு இங்கிருக்கின்ற மற்ற குறூப்புக்களைவிட அவர்களில் மிகவும் நம்பிக்கை இருந்தது....எழுதுவதற்கும் நேரிலும் வித்தியாசம் இல்லாமல் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். கலகக்காரர்கள் என்றால் தாங்கள் கூறிய கருத்துக்களில் வலுவாய் டிபென்ஸ் பண்ணி நிற்கோனும். இவர்கள் கூறுவதை எல்லாம், நாங்கள் நம்பி, எப்படி வேறு தளங்களில் வேறு ஆக்களோடு விவாதிப்பது?'
'சரி சரி அதைவிடு......விம்பங்கள் என்றால் உடையத்தானே செய்யும்!'

'இப்படித்தான் இன்னொரு விம்பமும் உடைந்தது....'
'என்னென்டு...'
'இல்லை இப்ப நல்ல நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கின்றாரே ஒருத்தர்....'
'ஓம்...உனக்கு அந்தமாதிரி பிடித்த எழுத்தாளர்தானே அவர்.....'
'ஓமோம்...அவர்தான்.....அவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியவுடன் ஒரு நண்பர் தொலைபேசினார்.'
'என்ன சொன்னார்?'
'நீர் இப்படி அவனைப்பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்து எழுதியிருக்கின்றீர். அவன் ஊரில் இருக்கும்போது அவனும் அவனது குடும்பமும் சாதித்திமிர் பிடித்துத் திரிந்தவர்கள்...இப்படிப்பட்ட அவனைப்புகழ்ந்து நீரெழுதுவது தலித்துக்களையே கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது......நான் ஒரு தலித்தாய் இருப்பதால் இதை அறிந்தும் அனுபவித்தும் இருக்கின்றேன் எண்டார்'
'சிலவேளை அவர் ஏதாவது காழ்ப்புணர்வில் சொல்லியிருக்கலாம்...அந்தாள் புலியின்ரை ஆளோ?'
'அப்படியெல்லாம் இல்லையடா...உடனே இப்படிப்பட்டவர்களுக்கு எதிராய்ப்பேசினால் புலியின்ரை ஆளென்டு முத்திரை எல்லாம் குத்தாதே....அவருடைய தமையனை மண்டையில் போட்டதே புலிதான்....எனவே அந்தாள் பொய் சொல்லியிருக்காது'
'சரி சரி நீ என்ன சொன்னனீ?'
'நான் சொன்னேன்... பார்த்தீங்களே அண்ணே...நான் ஒரு பதிவு எழுதும்போதுதான் இப்படி துள்ளிக்குதித்து கொண்டு வருகின்றீர்கள். இதையெல்லாம் நீங்கள் முன்னரே எழுத்தில் பதிவு செய்திருக்கவேண்டும் எல்லோ. இரண்டாயிரம் ஆண்டளவில் இலக்கியத்திலும் அரசியலிலும் நுழைகின்ற எங்கள் தலைமுறைக்கு எப்படி இதையெல்லாம் அறிய முடியும்? என்டாலும் என்னால் அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்று எழுதியதை விட்டுத்தரமுடியாது. புலம்பெயர் சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகள் சிலரில் அவரும் ஒருவர் என்ற கருத்தில் நான் உறுதியாக நின்றனான்'
'சரி, நீ உன்னுடைய பதிவில் எழுதிய கருத்தில்தானே உறுதியாய் நின்றிருக்கின்றாய்'
'ஆனால் இப்படிச் சொன்னாப்பிறகு அவ்வப்போது தொலைபேசும் நண்பர் இப்போது தொலைபேசுவதே இல்லை.'
'சரி சரி விடு...அங்கை பார் பச்சை கிளி ஒன்று பறந்துபோகிறது...'
'என்னடா...கலியாணம் கட்டி உனக்கு ஒரு வருசமும் ஆகிறது...இன்னும் பழைய பழக்கம் போகவில்லை...'
'இலக்கியவாதி என்றால் ஐம்பது வயதிலும் இருபது வயதுப்பிள்ளையைப் பார்க்கவேண்டும் என்றுதானே நமது பெருங்கவிகள், கோணல் பத்திக்காரர்கள் கூறுகின்றார்கள்.'
'அது சரி நீ இலக்கியவாதி ஆவது பற்றி கதை...எனக்கு மனுசியின்ரை இடியப்ப உரல் தான் கண்ணுக்குள்ளே நிற்கிறது!'
'என்னடா உன்ரை வீட்டிலும் இடியப்ப உரலா?'
'அட, நாசமாய்ப்போனவனே! கொஞ்ச நேரம் இடியப்ப உரலை மறந்து எதையாவது கதைக்கலாம் என்டால் அதையே திருப்ப திருப்ப ஞாபகப்படுத்து.'

(3)
'பெரியவர்....வாங்கோ வாங்கோ...'
'என்ன என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது மாதிரித் தெரிகிறது.'
'அப்படியில்லை....புத்தர் இயேசு என்று அடிக்கடி இங்கே வாறவையள். கடைசியாய் பிள்ளையார் கூட வந்து hip-hop ஆடிவிட்டுப் போனவர். அடுத்து நீங்கள் தானே வரவேண்டும்....அதுசரி சைபீயாவாவில் குளிர் எப்படி?'
'சைபீரியாவை நினைவுபடுத்தாதை...அவன் விசரன் ஸ்ரானின் செய்த கொலைகள் தான் ஞாபகத்துக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. Trotskyவை எல்லாம் மண்டையில் போட்டவனையெல்லாம் இன்னும் புகழ்ந்துகொண்டிருக்கிற தொண்டரடி'வால்கள்' இருப்பதைப் பார்க்க இன்னும் வலிக்கிறது.'
'சரி அதைவிடுங்கள்...எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதானே இருக்கிறது....'பெரியவர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது..'
'கேள்விகளா? கேள் கேள்...எனக்கு அப்படிக்கேட்பவர்களைத்தான் பிடிக்கும்!'
(அதுதானே எனக்கு கைவந்த கலை) 'இல்லை பெரியவரே....இன்றைக்கு வருகின்ற இளைய தலைமுறை மதங்களை எப்படி இலகுவாய் உதறித்தள்ளிப் போகின்றார்களோ அதுமாதிரி மார்க்ஸிசத்தையும் விலத்தியே வைத்திருக்கின்றார்களே அது ஏன?'
'உனக்கு என்னுடைய பதில் வேண்டுமோ, இல்லை எனது தத்துவங்களை மனப்பாடம் ஆக்காக்குறையாய் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சீடர்கள் கூறும் பதில் வேண்டுமோ...?'
'இரண்டையும் சொல்லுங்கோ...எல்லாக் கருத்துக்களையும் பகுத்தறிந்து பார்ப்பதுதானே நல்லது என்றுதானே நீங்களும் கூறியிருக்கின்றீர்கள்!'
'சீடர்கள் உடனே என்ன சொல்வார்கள் என்றால், எல்லாத்துக்கும் உலகமயமாதல்தான் காரணம் என்பார்கள்....உலகமயமாதல் அரும்பாய் முளைக்கத் தொடங்கியபோதே எனது தத்துவங்களை வைத்து கடுமையாக விவாதித்து அதை முற்றாக நிராகரித்திருக்கவேண்டும். ஆனால் வழமைபோல காலம் கடந்தபின் சுதாகரித்துவிட்டு இப்போதுதான் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்....அதற்குள் உலகமயமாதல் எங்கேயோ போய்விட்டது.'
'ஆனால் பெரியவரே, உலகமயமாதல் மூலம் பல நன்மைகள் தங்களுக்கு ஏற்பட்டதாக தலித்துக்கள் கூறுகின்றார்களே....?'
'நீதானே சொன்னாய் எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது என்று'
'சரி உஙகள் கருத்துத்தான் என்ன?'
'இதைப் பற்றிக் கதைத்தால் நான் மூலதனம் மாதிரி இன்னொரு புத்தகம் தான் எழுதவேண்டும். நான் என்னைப் பின்தொடர்பவர்களை...பின்பற்றுபவர்களை...எனது தோள்களுக்கு மேலே ஏறிநின்று இன்றைய உலகத்தைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன்...ஆனால் அவங்களில் கனபேர் என் தாளை எல்லோ பணிந்துகொண்டு கிடக்கின்றாங்கள்.'
'சரி விடுங்கோ...'தோள் கண்டோர் தோளே கண்டனர்' மாதிரி உங்கடை பாதத்தைப் பார்த்து மயங்கி அவர்கள் உஙகள் தாள்களைப் பணிந்து நிற்கின்றனர் போல.'
'கம்பர் சொன்னதை நீ கூறத்தான் ஞாபகம் வருகிறது...உங்கடை ஊர் பெரியாருக்கும் உதுதானே நிகழ்ந்தது.'
'ஓமோம்...எவரையும் திருஉருவாக்கி வழிபடத்தொடங்கினால் கடைசியில் வந்துநிற்கிற இடம் அதுவாய்த்தானே முடியும். பெரியவரே உஙகளை பற்றி அணமையில் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றதே. ஜெர்மனி, இங்கிலாந்து என்று முதலாளித்துவ நாடுகளிலிருந்துகொண்டுதான் நீங்கள் மூலதனம் நூலை எழுதி இருக்கின்றீர்கள் என்று?'
'அது எல்லாம் விசமத்தனமானது...என் கொள்கைகளோடு விவாதிக்கமுடியாதவர்கள் எழுப்பும் போலித்தனமான குற்றச்சாட்டு இது....நீ எங்கே இருக்கின்றாய் என்பது அல்ல முக்கியம்...என்ன பேசிக்கொண்டு எழுதிக்கொண்டு இருக்கின்றாய் என்பதுதான் முக்கியம். நோம் சாம்ஸ்கியின் அனைத்து வாதங்களைக் கூட அவர் அமெரிக்காவில் வசிக்கின்றார் என்ற ஒரே காரணத்துக்காய் நிராகரிக்கமுடியும் என்பது முட்டாள்தனமல்லவா?'
'நன்றி பெரியவரே...கடைசியாய் ஒரு கேள்வி...'பின் தொடரும் நிழலின் குரல்' என்று ஒரு நாவல் வாசித்திருக்கின்றீர்களா? அதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?'
'நீதானே முந்தி ஒருக்காய் சொல்லியிருந்தாய்....ஸ்ராலினின் கொடுங்கோலாட்சி என்று பத்துப்பக்கத்தில் எழுதவேண்டிய கட்டுரையை நூற்றுக்கணக்கான பக்கங்களை செலவழித்து அந்த எழுத்தாளர் மரங்களின் தாள்களை வீணாக்கியிருக்கின்றார். இப்படி வீணாய் மரங்களை அழிக்கவேண்டாம் என்று சூழலியல் அக்கறைகொண்ட அந்த நல்ல மனுசன், நவமார்க்ஸிசர் கோவை ஞானி, இந்த எழுத்தாளருக்கு நல்ல அறிவுரை கூறலாம்.'
'பெரியவர் உங்களோடு இப்படி உரையாடுவ்து... சிறுவயதில் சோவிய இலக்கியங்களை வாசிக்கும்போது, ஸ்ரெப்பிப்புல்வெளிகளில் பனிபொழிகின்றபோது, வின்ரர் கோட்டுடன் ஒரு பெண்ணின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடப்பது போன்ற கதகதப்பைத் தருகின்றது.'
'சரி....இந்த கதகதப்பை இலக்கியம், இசங்களின் விவாதங்கள் என்று கரைத்து மனதை இறுக்கமாக்காமல், அன்பைத் துணையிடமும் தாயிடமும் காட்டு.'
(அதுசரி, பன்னாடை வெங்காயம் என்று என்னை அம்மாவும் துணையும் 'அன்பு' பாராட்டுவது இந்த மனுசனுக்கு எங்கே தெரியப்போகின்றது என்று 'எங்கே நித்திரை எங்கே நித்திரை' என்று நான் வழமைபோல கூகிளில் தேடத் தொடங்குகின்றேன்).

18 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கலக்கல்!

-மதி

12/22/2005 12:42:00 PM
SnackDragon said...

முதல் பகுதியில் தெறிக்கும் எள்ளல் சூப்பர். பின் பகுதி வால் போர் அடிக்குது. இதையெலாம் சீரியஸாய் கதைச்சுக்கிட்டு...

12/22/2005 01:22:00 PM
Anonymous said...

பதிந்தது:தங்கமணி

undefined

22.12.2005

12/22/2005 01:53:00 PM
Thangamani said...

:))

12/22/2005 01:53:00 PM
Sri Rangan said...

இளங்கோ நல்லவொரு தொப்பியைப் பட்டுக்குஞ்சம் வைத்துத் தைத்துள்ளீர்கள்.அதை நீங்களும் போட்டுப்பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.இந்தமாதிரித் தொப்பிகள் பலதை உங்களுக்கு முன்பு எஸ்.பொன்னுத்துரையும் இப்படித் தைத்தவர்,அவருக்கு முன்பு தளைய சிங்கம் தைச்சுப் பார்த்தவர்!எப்படியானாலும் அவரவருக்குத் தொப்பி தைக்கத் தெரிந்திருக்கிறது!இதற்காகவேனும் நமது தலைகள் சந்தோசப்படவேண்டும்.படுகிறார்கள்!அலை ஜேசுராசாவுக்குப் பின்பான அவரது இடமொன்று இவ்வளவு நாளாகவும் வெற்றிடமாகவிருந்தது.அந்த வெற்றிடத்தைப் பற்றி நற்போக்கு மன்னர்கள் உலக மூலைகளிலிருந்து கடுமையாக உழைத்த பயன் வீண்போகுமா என்ன?ஜமாய்க்கமாட்டீர்கள்?...

இத்தகைய தொப்பிகளைத் தைக்கின்ற முறையிருக்கே அதுதாம் சுவாரிசியமானது.அது மற்றவர்களின் தலையில் தங்கட மிளகாய்களை அரைக்கமுடியாதிருப்பதால் ஏற்படும் சுய இரக்கமாகத் தறிகெட்டுத்திரியும்போது,இப்படி "பாட்டுவாய்தால் பாட்டியும் பாடுவா" என்ற கதைமாதிரித்தாம்... என்னவோ இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இந்தத் தொப்பி தைக்கும் மனதிருக்கே அதுக்காகவேனும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமது "தகமைகளின்" உச்சத்தை >>>கலக்கல்,ஜோர்,சபாஷ்<<< என்ற "பொன் மொழிகளோட" ஒய்யாராமாகக் காட்டி, ஒதுங்கிக்கொள்ளலாம்.

இந்த ஒத்துழைப்போடு மீளவும் அண்டத்தை ஆட்டிப்படைக்கும் அற்புதப் படைப்புக்கானவொரு "தவப் புலமை" இத்தகைய தையற்காரர்களைப் பார்த்து இன்னுமொரு குல்லாவுக்கு இரந்து நிற்பினும்... விரைவாகத் தொடங்கவேண்டியதுதாம்.

12/22/2005 05:14:00 PM
இளங்கோ-டிசே said...

//பின் பகுதி வால் போர் அடிக்குது. இதையெலாம் சீரியஸாய் கதைச்சுக்கிட்டு...//
கார்த்திக், எனக்கு நீர் சொன்னதுமாதிரி முற்பகுதிதான் பிடிக்கும். எந்த வாலுகள் துள்ளுகின்றன என்றொரு வெள்ளோட்டத்திற்குத்தான் அதை இணைத்தனான் :-).
.....
பன்னாடை, வெங்காயமாக எல்லாம் இருப்பவன் தொப்பியைப்போட்டுக்கொள்ளத் தயங்குவானா என்ன? அதுவும் பட்டுக்குஞ்சம் தைத்தது என்றால் இன்னும் அழகாய்த்தான் இருக்கும். தங்கடை பிராண்ட் நேம் பொறித்து பிறாண்டாவிட்டால் மட்டும் போதும் :-).

12/22/2005 05:49:00 PM
Anonymous said...

தர்மம் தலை தறிக்கும்
தத்துவம் தாள் முறிக்கும்
;-)

12/22/2005 06:30:00 PM
வானம்பாடி said...

O:-)

12/23/2005 03:39:00 AM
வசந்தன்(Vasanthan) said...

என்ன நடக்குது இங்க?
ஒரு கோதாரியும் விளங்கேலயே?

டி.சே,
இனி இப்பிடி நீளமான உரையாடல்கள் வாற பக்கங்கள் எழுதேக்க, ஒவ்வொருவருக்கும் தனித்தனி நிறம் குடுத்தா சுகமா வாசிக்கலாம். இதில பத்து வரி தாண்டின உடன ஆர் என்ன சொல்லுகினம் எண்டு தடுமாறவேண்டிக்கிடக்கு.

12/23/2005 04:25:00 AM
இளங்கோ-டிசே said...

வசந்தன், ஒரு கோதாரியும் விளங்காமல் இருந்தால், உடலுக்கும் உளத்துக்கும் நலமாம். அண்மையில் அறிமுகமான ஒருவர், என்னிலும்/நான் எழுதியவற்றுக்கும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுடன், எல்லாவற்றையும் விலக்கி/விலத்திக் கொண்டுபோகின்றேன் என்றமாதிரியான உறுதிமொழியையும் அவருக்குக் கொடுத்திருந்தேன். நாய் வாலை அவ்வளவு இல்குவாய் நிமிர்த்தமுடியுமா என்ன? பாலனும் பிறக்கப்போகின்றார், புதுவருடமும் வரப்போகின்றது. இந்தக் கோதாரிகளை எல்லாம் விடுவம் என்று புதுவருட resolution எடுப்பதாய் தீர்மானித்துள்ளேன் :-).
.....
ஆரம்பத்தில் உரையாடல்களை வேறுபடுத்த italic style பாவித்திருந்தேன். ஆனால் வெட்டி ஒட்டும்போது அது காணாமற்போய்விட்டது. தொடர்ந்து எழுதும் formattஜ மாற்றி எழுதிப்பார்க்கவேண்டும் என்றுதான் இப்படி எழுதினேன். இனிமேல் இப்படி ஏதாவது உரையாடல்கள் எழுதினால் நீங்கள் சொன்னதைக் கவனத்தில் கொள்கின்றேன். நன்றி.
.....
நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்!

12/23/2005 08:55:00 AM
Anonymous said...

'எங்கே நித்திரை எங்கே நித்திரை' என்று நான் வழமைபோல கூகிளில் தேடத் தொடங்குகின்றேன்

If so you really need some
treatment, so will a tea
party in Boston or Baltimore
will bring you back to
normalcy -:)

12/23/2005 02:08:00 PM
Sri Rangan said...

என்னையும் அழைத்துச் செல்வீர்களா?டி.ஜே யோடு அடிபட்டு மனதுக்குக் கஷ்டமாகியுள்ளது.மனதாறக் கோப்பி,ரீ ... :-)சேர்ந்து குடிக்கம் போது மனிதரைத்தாண்டிய மகத்துவம் எதுவுமில்லையென்பது மீளவும் மனதில் பதியும்.

12/23/2005 03:05:00 PM
-/பெயரிலி. said...

/so will a tea
party in Boston or Baltimore
will bring you back to
normalcy -:)/

.....mainstream abnormalcy is the personal normalcy in Boston ;-))

12/23/2005 05:28:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

முதலிலேயே இது பெரிய ப்ரோவா சின்ன ப்ரோவா எழுதினதென்று குழப்பம்.

ஆனாலும் டி.சே பட்டுக்குஞ்சம் வைத்த நெகிழ் தொப்பி எல்லோர் தலைகளுக்கும் அழகாகப் பொருந்துகிறது.தன் தலைக்கல்ல என்று சிறீரங்கன் விழுந்தடிச்சு சத்தியம் செய்தாலும்-தன் பக்கத்தில் தேனிக்கு இணைப்பும் தேனிப் பக்கத்தில் தனக்கிணைப்பும் கொடுத்துவைத்திருக்கும் சிறீரங்கன் அதே தேனியில் வந்த கலக்கக்காரர் இருவரின் சாதிய முகம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கவில்லையா அல்லது தோழர்கள் எழுதியதால் அதை மன்னித்துவிட்டாரா தெரியவில்லை.அதின்ரை உரல்-இது இடியப்ப உரலிலை இணைய உரல்-.தங்கமணியின் பதிவில் கொடுத்திருந்தேன் இப்போது தேனியில் தேடினால் வருகுதில்லை

ஒவ்வொருத்தர் மீதிருந்த நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டுக்கொண்டே போகிறது

கலகக் காரருக்குள்ளேயே கலகம் விளைவிக்க முயலும் உம்மைப் பார்த்தால்.பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய வைத்தியருக்குப் பைத்தியம் பிடித்தால் அவருக்கு வைத்தியம் பார்க்க எந்தப் பைத்திய வைத்தியர் வருவார் என்ற கிழமொழி ஞாபகத்திற்கு வருகிறது

12/25/2005 04:07:00 AM
மாமூலன் said...

எழுத்துப் பாணி நன்றாகவே இருக்குது.
இடையில கொஞ்சம் மாறுது
வளாகம் - பிட் அடித்த கதை ஜோராவும் இருக்கு

2/05/2006 03:22:00 AM
Unknown said...

:-))))

2/07/2006 01:31:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கும், simileகளுக்கும் நன்றி.

2/07/2006 03:07:00 PM
எஸ் சக்திவேல் said...

>'ச் சா சா...என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.

என்னது, நான் நினைகிறமாதிரி இருக்கு. எதிரொலியோ?

8/05/2011 09:37:00 PM