கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புதினம்

Friday, October 20, 2006

-கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-

நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக்கடந்தபடியும் போய்க்கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச்சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.

kallam

ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

ஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.

ராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என்று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றான். ஆனால் அதேசமயம் பாடத்திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.

இந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்துவைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதுமட்டுமே உன்னதமான வாழ்க்கையென நம்பிக்கொண்டிருக்கும் பலரால், இந்நாவலின் மொழிநடையை அவ்வளவு இலகுவாய் ஜீரணிக்கமுடியாது. எல்லாக் 'கெட்ட வார்த்தைகளும்', எல்லா 'அசிங்கங்களும்' (நாவல் ஆரம்பிப்பதே பாலியல் தொழில் செய்யப்படும் ஒரு பகுதியில்.. கெட்ட வார்த்தைகளுடன் தான் உரையாடலும் ஆரம்பிக்கும்) முகமூடிகளின்றி இந்நாவலில் பேசப்படுகின்றது. ஒரே களத்தில் இந்நாவல் சுழன்றாலும் பாத்திரங்களின் உரையாடல்களால் நாவலை அலுப்பின்றி வாசித்து முடிக்கக்கூடியதாய் இருப்பதை நாவலின் பலம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருவித மணிப்பிரவாள நடைக்குள் ப்ரகாஷ் சிக்கிக்கொண்டிருப்பது வாசிப்பிற்கு இடையூறு ஊட்டுவதும், சேரி மக்களின் பேச்சின் நடுவில் கூட இந்த மணிப்பிரவாளநடை கதாசிரியரை அறியாமலே வந்துவிடுவதும் ப்லவீனம் எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். (இந்நாவல் தஞ்சை ப்ரகாஷ் எழுத முடியாமல் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம் இருந்தபொழுதுகளில் ப்ரகாஷ் கூறக்கூற அவரின் நண்ப்ரொருவரால் எழுதப்ப்படடது என்ற குறிப்பையும் நாம் சேர்த்து வாசிக்கவேண்டும்).

நாவலில் விளிம்பு நிலை மக்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் குறித்த அரசியல் குறித்தும் கவனிக்கவேண்டும். உதாரணமாய் 'பற சனத்த சும்மா சொல்லக்கூடாது. படுன்னு மடிய விரிக்கிறாளே(ப 172)' என்பதுமாதிரியான வாக்கியங்களை சேரியிலுள்ள பெண்கள் உபயோகிக்கின்றனர் (சேரியில் பறையர், கவுண்டர், தேவர் என்று எல்லவிதமான சனங்களும் இருக்கின்றனர்). இவ்வாறான உரையாடல்களை வாசிக்கும்போது அது பாத்திரங்களின் அடிமனக்குரலா இல்லை கதாசிரியரின் குரலா என்ற சந்தேகம் வருகின்றது.

இந்நாவலில் சமப்பாலுறவு பெண்கள் பற்றிய வர்ணனைகள் வருவதும், நாவலின் முடிவில் கூட இருபெண்களுடையே அவ்வாறான் ஒரு உறவு முகிழலாம் என்றமாதிரியான குறிப்பை விட்டுச்செல்வதும் குறிப்பிடவேண்டியதொன்று. இந்தக் கதையிலிருக்கும் பல பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாய் நடமாடிய /நடமாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ப்ரகாஷ். இந்நாவலில் குறிப்பிட்டதைவிட மிக வெளிப்படையும், அழுக்க்குகளும் கசடுகளும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் நிரம்பிய மனிதர்கள் அவர்கள் என்றாலும் அவற்றை அப்படியே அடையாளப்படுத்த/ஏற்றுக்கொள்ள தமிழ்ச்சமூகம் இன்னும் வள்ர்ந்துவிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் ப்ரகாஷ் வெளிப்படுத்துகின்றார். நாவலை வாசித்தபோது ஒரு வாசக மனோநிலையில் நின்று யோசித்துப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே'யும், ஆதவனின் 'காகித மலர்'களும். 'கள்ளம்' நாவல் இவற்றின் பாதிப்பிலிருந்து எழுந்தது என்று நிறுவுவதல்ல இதன் அர்த்தம். நாகராஜனால் விபரிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், 'காகிதமலரில்' வரும் உலகோடு ஒட்டிவாழ முடியாத (வெறுமை/தனிமை)யும் கொண்ட ஆணும் உடனே நினைவில் வந்து ஒட்டிக்கொள்கின்றனர்.

(2)
-ப்ரகாஷ் இன்று உயிரோடு இல்லாதபடியால்- அவர் முன்னுரையில் எழுப்பியிருந்த கேள்வியை யோசிக்கும்போது, காமம் உட்பட்ட இன்னபிற விடயங்களைத் தமிழில் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் இன்றையபொழுதில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் என்றால் ரமேஷு -பிரேமைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். அவர்கள் தமது இருபது வயதில் எழுதிய 'அதீதனின் இதிகாசத்திலிருந்து' தொடர்ந்து உடல்மொழி பற்றிய உரையாடல்களை விரிவாக்கியபடி இருக்கின்றார்கள். உடலை வியந்தபடியே அவ்வுடலை பல்வேறு கூறுகளாய் துண்டு துண்டுகளாக்கியபடி உடல் மொழியின் வினோதங்களை, உணர்ச்சியின் குவியல்களாக்கிவிடாது உரையாடுவதை ரமேஷ்-பிரேமின் எழுத்துக்களில் காணலாம். ஆனால் அதிலும் பல பலவீனங்கள் இருப்பதாய் தோழியொருவர் அடிக்கடி குறிப்பிடுவார்; அது அவரது வாசிப்பு.

சாரு நிவேதிதா மீது சில விடயங்களில் மரியாதை இருந்தாலும் -அவரோ அல்லது அவரின் நண்பர்களோ- சாருவை பாலியல் சேர்ந்த எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தும்போது சற்று அதிகப்படியோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. சாருவின் சீ(ஜீ)ரோ டிகிரியிலிருந்து, இன்றைய (இணையத்திலிருக்கும்) பத்திகள்வரை -வாசிக்கும்போது- அவரின் பாலியல் பற்றிய உரையாடல்கள் நிமிடங்களுக்குள் jerk-off ஆக்கிவிடுகின்ற வகையைச் சேர்ந்த எழுத்தே தவிர காமத்தை அதன் இயல்போடு அணுகவில்லை என்றே கூறதோன்றுகின்றது. ஆனால் அதே சாருவே மற்ற நாட்டு இலக்கியங்கள்/திரைப்படங்களை வாசித்துவிட்டு அவர்கள் காமத்தை கலாபூர்வமாய் எழுதுகின்றனர்/எடுத்துத்தள்ளுகின்றனர் -தமிழில் தன்னைத்தவிர எவருமில்லை- என்று புலம்புவது என்பது முரண்நகைதான்.

ஜெயமோகனின் எழுத்துக்களில் காமம் இருந்தாலும் -ஒழுங்கு/ஒழுக்கம் என்பதில் ஜெயமோகனுக்கு இருக்கும் தீரா விருப்பால்- உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய் பல இடங்களில் காட்டப்படுகின்றதே தவிர பரிபூரணத்தை அடைய முயற்சிக்கும் புள்ளிகளை வந்தடைவதே இல்லை. அதேபோன்று ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துக்களில், பாலியல் சார்ந்த சித்தரிப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றவேளைகளில், அவரது வர்ணனைகள் அதிகவேளைகளில் காமத்தை உணர்ச்சிக்குவியலாக்கும் முயற்சிகளாகிப் போய்விடுகின்றன. இந்தவகையில் ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல் உடல்மொழி குறித்து தீவிரமாய் உரையாடவிட்டாலும், விளிம்புநிலை மக்களினூடாக -இயன்றளவுக்கு- காமத்தை இயல்பாய் அணுகியிருக்கின்றதே என்றுதான் கூறத்தோன்றுகின்றது.

22 comments:

இளங்கோ-டிசே said...

pirakash said:

நன்றி டிஜே.

தஞ்சை ப்ரகாஷ் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இத்தனை ஆழமான விஷயங்களைத் தொட்டவர் என்று எனக்குத் தெரியாது. காமம் குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என்றால், உடனடியாக சாருநிவேதிதாவை, 'ஆட்டத்துக்குள் சேர்த்துக்' கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லாமல், என்று இருக்கிற சூழ்நிலையில், தஞ்சை ப்ரகாஷின் நூல் பற்றிய அறிமுகம், இணக்கமாக இருந்தது.

ராத்திரியெல்லாம் யோசித்து, ஆபீசுக்கு வந்து 'பொட்டியிலே' தட்டலாம் என்று காலையில் வந்து பார்த்தால், இடுகையைக் காணோம்.

அதான் கேட்டேன்.

(நேற்று தவறுதலாக பிரசுரமானபோது பிரகாஸ் மற்றொரு பதிவிலிட்ட பின்னூட்டம். Pirakash, Hope u won't mind me to put ur comment here: DJ)

10/24/2006 10:04:00 AM
நிலவன் said...

அண்மையில் தான் கள்ளத்தை வாசிக்க கிடைத்தது. மிகவும் அருமையான நூல். உங்களின் அது பற்றிய பார்வையும் அருமையானது.

10/24/2006 10:54:00 AM
தமிழ்நதி said...

டி.சே.,

‘கள்ளம்’பற்றிய உங்களது பார்வை அதை வாசிக்கத் தூண்டுகிறது. தஞ்சை பிரகாஷின் ‘கரமுண்டார் வீடு’ மற்றும் ‘மீனின் சிறகுகள்’ வாசித்திருக்கிறேன். மீனின் சிறகுகளை உள்ளுக்குள் ஆச்சரியப்பட்டுக்கொண்டே வாசித்தேன். படைப்புகளில் காமத்தை விரும்பத்தகாத கனியாக விலக்கிவைத்துள்ள (அல்லது பாவனை செய்கிற) எமது சமூகத்தின் மரபுமனம் இவ்வாறான எழுத்துக்களுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருக்குமே…! அவ்வாறு நிகழவில்லையென்பதற்கு பிரகாஷ் ஆண் என்ற அடையாளம்தான் காரணமா… என்றெல்லாம் யோசித்தேன். பெண்பாற் கவிஞர்களின் கவிதைகளில் இடம்பெறும் பாலியல் சார்ந்த சொற்பதங்களுக்கெதிராக வரிந்துகட்டிக்கொண்டுவரும் சண்டைக்கு வரும் பலரின் கண்களில் இது படவில்லையா… பெண் எழுதினால் ஆபாசம்… அதுவே ஆணெனில் இலக்கியம். ம்… சமத்துவம் என்பது இலக்கியத்திலும் இல்லை என்பதுதான் வருத்தந் தரும் விஷயம்.

10/24/2006 01:12:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
....
தமிழ்நதி, தஞ்சை ப்ரகாஷின் பிற நாவல்கள் பற்றிய விபரத்துக்கு நன்றி. தேடி வாசிக்கவேண்டும். மற்றும் நீங்கள் குறிப்பிடும் ஆண்Xபெண் இலக்கியப்படைப்புக்களின் வாசிப்புக் குறித்த புள்ளிகள் முக்கியமானவை. ஓரளவுக்கு இன்றையபொழுதில் பெண் படைப்பாளிகள் -இந்த அலட்டல் ஆணாதிக்க விமர்சனங்களைத்தாண்டி- தாம் நினைத்ததை எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவது மகிழ்ச்சிக்குரியது.

10/24/2006 10:14:00 PM
செல்வநாயகி said...

அறிமுகத்திற்கு நன்றி டிசே.

10/24/2006 10:20:00 PM
Chandravathanaa said...

டி.சே
மிகவும் அருமையான விரிவான பார்வை.
தஞ்சை பிரகாஷின் இந்தக் கதையை வாசிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

இதே நேரத்தில் என்னிடம் எப்போதும் போல எழும் கேள்வி,
கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்து கதைகளையோ, கவிதைகளையோ புனையலாமா, என்பதுதான். கெட்டவார்த்தைகள் பேசப்படும் ஒரு தளத்தில் கதை அமையுமானால் அப்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போதுதான் அந்தக் கதை இயல்பு நிலையைப் பெறும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இவை இலக்கியங்களுக்கே உரிய அழகைக் கெடுத்து விடாதா? காமம், பாலியல்... போன்றவைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை.

காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி...
பிடித்தது

10/25/2006 02:56:00 AM
Jayaprakash Sampath said...

/Pirakash, Hope u won't mind me to put ur comment here: DJ)/

பிரகாஸ், Pirakash என்று விளித்ததையே 'மைண்டு'செய்ய வில்லை என்கிற போது, இது ஜுஜுபி :-)

சும்மா ஜோக்கு... தப்பா எடுத்துக்கிடாதீங்க..

அருமையான அறிமுகம். தமிழின் முக்கியமான பிரதிகள் அனைத்திற்கும், இப்படிப்பட்ட ஒரு அறிமுகம் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வைத்தது உங்கள் பதிவு.

ஜே.பி.சாணக்கியாவின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ' காமத்தை உணர்ச்சிக்குவியலாக்குபவர்' என்று நீங்கள் சொல்வது சரியெனப் படவில்லை. காமத்தை மையமாக வைத்து எழுதுபவர்கள் பலரும், ஒன்று, கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காகவோ, அல்லது ஒரு விதமான அசூசையுடனோ தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பளிச்சென்று போட்டு உடைத்ததில், சாணக்கியா முக்கியமானவர்.

10/25/2006 11:25:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி செல்வநாயகி & சந்திரவதனா.
.....
சந்திரவதனா, கெட்டவார்த்தைகள் அனைத்திலும் பெண்களை உடல்/உளரீதியாக கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுவதால் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.

/இதே நேரத்தில் என்னிடம் எப்போதும் போல எழும் கேள்வி,
கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்து கதைகளையோ, கவிதைகளையோ புனையலாமா, என்பதுதான். கெட்டவார்த்தைகள் பேசப்படும் ஒரு தளத்தில் கதை அமையுமானால் அப்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போதுதான் அந்தக் கதை இயல்பு நிலையைப் பெறும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இவை இலக்கியங்களுக்கே உரிய அழகைக் கெடுத்து விடாதா?/

உங்களைப்போலவே எனக்கும் இதுகுறித்து - படைப்புக்களின் அழகு கெடுவது பற்றி மட்டுமில்லை கெட்ட்வார்த்தைகளின் அரசியல் குறித்தும்- கேள்வி இருக்கின்றது. அண்மையில் Winfrey Oprahவின் நிகழ்ச்சியில் ராப் பாடகர் Ludacrisன் பாடல்களை -பெண்களைக் கீழ்த்தரப்படுத்துவதால்- ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒபரா நேரடியாகவே Ludacrisடம் கூறப்போக அது சர்ச்சைக்குரிய விவாதமாக நீண்டுகொண்டு போகின்றது (50CENTம் ஒபரா ராப் பாடகர்களை வேண்டுமென்றே அலட்சியப்படுத்துகின்றார் என்று அதன் நீட்சியில் கூறியிருந்ததாயும் நினைவு). சில தினங்களுக்கு முன் Ludacrisன் ஒரு நேர்காணலை வாசித்தபோது அவர் அதில் B**** என்று பாவிப்பது எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதற்காய் அல்ல. ராப் கலாச்சாரத்தில் சாதாரண அர்த்தத்திலேயே - இழிவுபடுத்துவதற்காய் அல்ல- பாடுகின்றோம். இது குறித்து பிறர் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டிருந்தார். Missy Elliottன் ஒரு அல்பத்தின் பெயரே 'She is a B***'. எனவே இந்த விடயத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்ற இரண்டுவிதமான பார்வைகள் உண்டு. ஒபரா சொல்வதுபோல பாடல்வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதா? இல்லை அது ராப் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் என சாதாரணமாய் எடுத்துக்கொள்வதா என்று?

தனிப்பட்டவளவில் எனது நிலைப்பாடு ஒபராவின் கருத்துக்கு அண்மையானது. அதேவேளை F*** you Kim என்று எமினெம் தனது கேர்ள் பிரண்டைப் பற்றிப் பாடும்போது ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற எனது மனம் F** you Bush என்பதை ஏன் இயல்பாய் ஏற்றுக்கொள்கிறது என்பதும் விந்தையானதே.

இப்படியான குழப்பமான புரிதலே எனக்கும் உண்டு :-(.

10/25/2006 11:38:00 AM
இளங்கோ-டிசே said...

ப்ரகாஷ், நான் எனது பின்னூட்டத்தைத் தட்டிக்கொண்டிருக்கும்போது உங்களின் பின்னூட்டமும் வந்துவிடடதுபோல :-).

நிற்க.
/ஜே.பி.சாணக்கியாவின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ' காமத்தை உணர்ச்சிக்குவியலாக்குபவர்' என்று நீங்கள் சொல்வது சரியெனப் படவில்லை. காமத்தை மையமாக வைத்து எழுதுபவர்கள் பலரும், ஒன்று, கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காகவோ, அல்லது ஒரு விதமான அசூசையுடனோ தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பளிச்சென்று போட்டு உடைத்ததில், சாணக்கியா முக்கியமானவர்./

சாணக்கியா பளிச்சென்று விடயத்தைப் போட்டுடைத்தவர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. சாணக்கியாவின் கதைகள் என்றவளவில் முதலில் வாசித்தது 'அமராவதியின் பூனை'. இன்றைக்கு இன்னொருமுறை வாசித்தால் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் அதை வாசித்த அந்தச் சமயத்தில் மனதின் அடியாழத்தைத் தொட்ட கதைகளில் அதுவும் ஒன்று. ஒரு பனிக்காலத்தில் 'ஆண்களின் படித்துறை'யையும், 'அமராவதியின் பூனை'யையும் வாசித்துவிட்டு -நண்பர் ஒருவருடன் அரை மணித்தியாலத்துக்கு மேலாய் கோப்பிக்கடையொன்றில் வியந்து- உரையாடியதும் நினைவினிலுண்டு. ஆனால் சாணக்கியாவின் முதலாவது தொகுப்பிலிருந்த பன்னிரண்டு கதைகளையும் (?) இன்னும் வேறு சில நாலைந்து கதைகளையும் வாசித்தபோது-உணர்ச்சிக்குவியலாய்- ஒன்றையே திருப்பத் திருப்ப வெவ்வேறு பாத்திரங்களினூடாக அவர் பேசுகின்றார் என்ற எண்ணமே வந்தது. குறிப்புக்கள் எழுதுவதற்காய் அந்தத் தொகுப்பையும், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவற்றில் வந்த கதைகளையும் சேர்த்து வைத்திருந்தேன். வருடம் ஒன்றும் கடந்தாயிற்று. அவை குறித்து எழுதுவது என்றால், திருப்ப அந்தத் தொகுப்பை வாசிக்கவேண்டும். வாசித்த பொழுதில் ஒரு கதை- பருவமடையாத சிறுமியை பாலியல் தொழிலைச் சாட்டாய் வைத்து வன்புணர்கின்ற கதை- மிகவும் தொந்தரவுபடுத்தியது. அந்தக் கதையொன்றுக்காகவே மீண்டும் அந்தத் தொகுப்பை வாசிப்பதில்லை என் முடிவு செய்திருந்தேன் :-(.

மற்றும்படி இப்படிக்கூறுவதால் உங்கள் வாசிப்பை மறுதலிப்பது என்று அர்த்தமல்ல. ஒவ்வொருத்தரின் வாசிப்பும் தனித்துவமானவையே.

10/25/2006 02:59:00 PM
விருபா - Viruba said...

தஞ்சை ப்ரகாஷ் பல இதழ்களில் எழுதிய கட்டுரைகள், சௌந்தர சுகன் முயற்சியால் தேடி எடுக்கப்பட்டு, பின்னர் காவ்யா பதிப்பக உரிமையாளர் சு.சண்முகசுந்தரம் அவர்களால் தொகுக்கப்பட்டு "தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்" என்னும் பெயரில் புத்தகமாக வந்துள்ளது.

10/26/2006 01:44:00 PM
Anonymous said...

//எனவே இந்த விடயத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்ற இரண்டுவிதமான பார்வைகள் உண்டு. ஒபரா சொல்வதுபோல பாடல்வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதா? இல்லை அது ராப் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் என சாதாரணமாய் எடுத்துக்கொள்வதா என்று? //

ப்ரோ,
ஏட்டிக்கு போட்டி என்று எடுத்துக்கொன்டாலும் சரியே, அல்லது என்ன ம..ருக்கு என்று கொண்டாலும் எனக்குச் சரியே. இதில் என்ன உமக்குப் பெருங்குழப்பம்?

இப்படியான பெண்களை "பிச்" என்று பாடும் ஆண்கள் "ராப் கலாச்சாரத்திலே" (அது என்ன எழவு ஒருபக்கம் வீங்கிய "ரப் கலாச்சாரம்"? )சக‌ஜ‌ம் என்று சொன்னால், அடுத்ததாக நீர்,பெண்கள் வெளியிடும் ஆல்பத்திலே ஆண்களை பெண்கள் "பாஸ்டர்ட்" என்று பாடும் "ராப் கலாச்சாரம்" ஏன் உருவாகவில்லை என்று கேட்டுஇருக்கவேண்டாமா? :-(
அப்படி உருவாக்க துணைபோவேன் என்று சொல்லியிருக்க வேண்டாமா?
அவ‌மான‌ப்ப‌டுத்துகிறீரே :-(

--FD

10/26/2006 02:45:00 PM
இளங்கோ-டிசே said...

விருபா, பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் தொடுப்புக்களினூடாக பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது. உங்களைப்போன்ற தன்னார்வலர்கள் தமிழுக்கு அருமையான பணியைச் செய்துவருகின்றீர்கள். மிகவும் நன்றி.

10/27/2006 09:30:00 AM
இளங்கோ-டிசே said...

ப்ரோ, உந்தக் குழப்பம் லீனா மணிமேகலையின் 'பலிபீடம்' (http://djthamilan.blogspot.com/2005/12/blog-post.html)பதிவிற்கான விவாதங்களின் பின் உருவானது :-). ஒரு கலாச்சாரத்தில்/சமுதாயத்தில் மூன்றாம மனிதர்களின் பார்வை எப்படியிருக்க வேண்டும் என்பதால் வந்த குழப்பம் இது. கிட்டத்தட்ட நீங்கள் கூறியதுமாதிரித்தான் ஒரு நண்பரும் எனது பின்னூட்டத்தை வாசித்துவிட்டு 'இதில் குழப்பம் வருவதற்கு என்ன இருக்கிறது?' என்று கேட்டிருந்தார். சரி விடயத்துக்கு வருவோம். பாரும், Nigga என்ற சொல்லை கறுப்பு இனத்தவர்களிடையோ அல்லது ராப் பாடல்களிலோ பயன்படுத்தும்போது, அது நாம் விளங்கிக் கொள்ளும்/பாவிக்கும் அர்த்தத்தில் இருப்பதில்லைத்தானே. ஆகவே அப்படி அவர்கள் B*** என்ற வார்த்தையையும் -நாம் விளங்கிக்கொண்டதற்கு புறம்பான- ஒரு அர்த்தத்தில் அவர்கள் பயன்படுத்தக்கூடும் என்ற புரிதலினால் வந்த குழப்பம்.

/நீர்,பெண்கள் வெளியிடும் ஆல்பத்திலே ஆண்களை பெண்கள் "பாஸ்டர்ட்" என்று பாடும் "ராப் கலாச்சாரம்" ஏன் உருவாகவில்லை என்று கேட்டு இருக்கவேண்டாமா? :-(
அப்படி உருவாக்க துணைபோவேன் என்று சொல்லியிருக்க வேண்டாமா?
அவ‌மான‌ப்ப‌டுத்துகிறீரே :-(/

ப்ரோ, இது நல்லதொரு கேள்வி. எல்லா ஒடுக்கப்படும் விடயங்களுக்கும் எதிராய் எதிர்க்கலாச்சாரம் என்று ஒன்று உருவாகுவதல் இயற்கையே. ராப்பிலும் -தாங்கள் ஒடுக்கப்படுகின்றோம் என்று நினைத்து-இப்படியொரு எதிர்க்கலாச்சாரம் பெண்களால் உருவாக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.
....
மற்றும்படி ஏற்கனவே மேலே குறிப்பிட்டமாதிரி...இதுதான் இப்போதைய எனது நிலைப்பாடு.
'கெட்டவார்த்தைகள் அனைத்திலும் பெண்களை உடல்/உளரீதியாக கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுவதால் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.'

10/27/2006 09:34:00 AM
கானா பிரபா said...

வணக்கம் டிசே

வாசிப்பு அனுபவம் எவ்வளவுக்கெவ்வளவு சுகமானதோ அவ்வளவு அதனைச் சிலாகித்துச் சொல்லுவதிலும் இருக்கின்றது. தஞ்சை பிரகாஷின் கள்ளம் நாவலுக்கு நல்லதொரு பார்வையத் தந்திருக்கிறீர்கள்.

10/27/2006 09:36:00 AM
Anonymous said...

உம‌க்கு குழ‌ப்ப‌மில்லையில்லையென்றதால் எம‌க்கு கொஞ்ச‌ம் இர‌த்த‌ அழுத்த‌ம் குறைந்தது போன‌து ;). நிற்க.

நான் ஒரு பெரிய‌ ஆந்த்ராபோல‌ஜிஸ்ட் இல்லையென்றாலும், ஏதோ ப‌ட்ட‌தை எழுதுகிறேன். இர‌ண்டு க‌லாச்சார‌ ஒப்பிடுத‌ல் என்ப‌து அத‌ன் தேவைக‌ளுக்கேற்ப‌ ந‌டைபெற‌த்தான் வேண்டும் என்பேன். இர‌ண்டு க‌லாச்சார ம‌க்க‌ளின் எதிரெதிர் க‌லாச்சாரத்தின் மீதான பார்வைக‌ள் (பார்வைகள் எப்படி சரியாக இருக்கமுடியும், கொஞ்சம் முன்ன பின்ன‌தான் இருக்குமல்லோ) எப்ப‌டி அமைந்தாலுமே கூட.

ப‌லிபீட‌த்தைப் பொறுத்த‌வ‌ரை குழ‌ப்ப‌மில்லை. இங்கே ந‌ம‌து க‌லாச்சார‌த்திலும் பெண்க‌ளின் மீதான‌ உட‌ல், மொழி, உரிமை என‌ எல்லாத‌ள‌ங்க‌ளிலும் ஒடுக்க‌ப்ப‌டுவது( சிலர் சகஜம் என்று சொல்லிக்கொண்டே சகஜமில்லாததை நியாயப்படுத்துவது போல் இல்லையென்றாலும் ;)) போன்றே அங்கேயும் ஒடுக்கு முறை ந‌ட‌க்கிறதுதான்.

பிர‌ச்சினை என்ன‌? ந‌ம‌க்கு பாலிகேமி குற்ற‌ம், அவ‌ர்க‌ளுக்கு இல்லை. இருந்துவிட்டு போக‌ட்டுமே? ஆனால் பாலிகேமி‍‍ஐ அவ‌ர்க‌ள் க‌லாச்சார‌த்தில் கூட‌ யார் முன்வைக்கிறார்க‌ள் அல்லது திணிக்கப்படுகிறது என்றும் அது யாரின் மீதான‌ அட‌க்குமுறைக்காக‌ வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்து என்று கேள்வி எழுப்புவ‌தில் பிர‌ச்சினை இல்லைதானே? இது கூட‌ என் "பாலிக‌மி த‌ப்பு" என்ற பார்வையில் வெளிவ‌ரும் கேள்வியாக‌ இருக்க‌லாம்(உண்மையில் எனக்கு அப்படி இல்லை‌). ஆனால், அது எப்ப‌டி எல்லா க‌லாச்சார‌ங்க‌ளிலும், ப‌லீபீட‌ங்க‌ளின் ஆடுக‌ளாக‌ பெண்க‌ள் ஆக்க‌ப‌டுகின்ற‌ன்ர் என‌ப்து , உரிமை என்றில்லாவிட்டாலுங்கூட, சுவார‌சிய‌மாகக் கூட‌ உம‌க்குப் ப‌ட‌வில்லை? :)

இத‌ற்கு எதிர்வினையாக‌ சில‌ர் ஏன் வ‌ய‌தில் மூத்த‌ பெண்க‌ள் ஆண்சிறுவர்க‌ளை கூட ம‌ண‌க்க‌வில்லையா என்று குழ‌ந்தைத்த‌ன‌மாக‌ கேட்டால், அப்ப‌டியெனில் ச‌மஉரிமை பொங்கிற‌து என்று எடுத்துக்கொண்டு, நாலு பெண்க‌ள் ப‌ஞ்சாய‌த்து செய்யும் ஏதாவ‌து ஒரு கிராம‌த்தை காண்பிப்பீர்க‌ளா? என்று கேட்டுவைத்தால் உங்க‌ள் சமஉரிமை என்னாச்சுது? :) நிற்க.


மேலே சொன்னேனே, இர‌ண்டு க‌லாச்ச‌ர‌ங்களின் மீதான‌ ஒப்பீடு தேவை என்று. அது குறித்து. 6 கோடி ம‌க்க‌ள் ஓரே மொழி பேசும், ஒரே போல் இருப்ப‌தாக‌ **பாவ‌னை** செய்ய‌க்கூடிய ஒரு ச‌மூக‌த்தில், ஒரு சிறு சில‌ ஆயிரங்கொண்ட‌ ச‌மூக‌த்தை, மூன்றாவ‌து ச‌மூக‌த்தின் பார்வை த‌வ‌று என்று சொல்லிக்கொண்டு அவ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ரீதியாக‌வும், வாழ்விய‌ல் தேவைக‌ளுக்குத் தேவையான *உரிமைகளை* ம‌றுப்ப‌தை ஆதிக்க‌ம் என்று பார்ப்ப‌தா? பார்வைக்கோளாறு என்று பார்ப்ப‌தா? க‌லாச்ச‌ராங்க‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு கூட த‌னிம‌னித வாழ்க்கைக்கு த‌ன்னை ம‌ட்டுமே சார்ந்து இருக்கக்குடிய‌தாக‌ மாறிக்கொண்டுவ‌ரும் கால‌க்க‌ட்ட‌த்தில், ஆண்க‌ளுக்கும், பெண்க‌ளுக்கும் க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து என்றால் மூன்றாம் ச‌மூக‌ப் பார்வையைத் திணிக்கக் கூடாது என்று விட்டுவிடுவ‌து ச‌ரியாகுமா? எங்கேயிருந்து அவ‌ர்க‌ளுக்கு வ‌யிறு நிறையும்? சுத்தியிருக்கும் 6 கோடி பேரும் மாறிக்கொண்டு போகையில்?
இதில் என்ன‌ய்யா உம‌க்கு குழ‌ப்ப‌ம்?


உமது அந்தப்பதிவை தற்சமயம் வாசிக்கவில்லை. அப்போது வாசித்தது மறந்து விட்டது.

----FD

10/27/2006 10:25:00 AM
Anonymous said...

//'கெட்டவார்த்தைகள் அனைத்திலும் பெண்களை உடல்/உளரீதியாக கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுவதால் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.//


இது குறித்துதான் முக்கியமாக பின்னூட்டமிடத்தூண்டியது.

"கெட்டவார்த்தைகள் அனைத்திலும் பெண்களை உடல்/உளரீதியாக கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுவதால் " என்பதை நமது பார்வையில் இப்படி பார்ப்பது "சரி"தான்(?) என்றாலுங்கூட, சம்பந்தப்பட்ட பாடும் நபரின் உணர்வு வெளிப்பாடு அது என்றும், அதன் பின்னால் ஏற்படும் ஒரு அல்ப சந்தோசத்தை குறித்தே அது தொடர்கிறது என்று நான் சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? ஒத்துக்கொள்ளவில்லையென்றால் , கட்டுங்கடங்காத கோபம் வரும்போது எப்படி வசைச்சொற்களை உபயோகிக்கிறீர்கள் என்றும் அது எப்படி சாந்தப்படுத்துகிறது என்றும் சிறிய சோதனை ஒன்றைச் செய்து பார்க்கலாம். ;)

--FD

10/27/2006 10:30:00 AM
Anonymous said...

//ப்ரோ, இது நல்லதொரு கேள்வி. எல்லா ஒடுக்கப்படும் விடயங்களுக்கும் எதிராய் எதிர்க்கலாச்சாரம் என்று ஒன்று உருவாகுவதல் இயற்கையே. //

இது விட்டுப்போனது. குறைந்தது ஒரு எதிர்ப்பு(பின்னர் எதிர்ப்பு அரசியலாகி என்னாவாக மாறுகிறது என்பதை விடுங்கள்) இல்லாமல் "இயற்கையாகவே" உருவாகாது என்றுதான் நினைக்கிறேன்.

--FD

10/27/2006 10:45:00 AM
இளங்கோ-டிசே said...

பிரபா, நீங்கள் வாசிப்பு அனுப்வம் என்று கூறும்போதுதான், எனக்கு உங்களின் கேரளப்பயண அனுபவப் பதிவுகள் நினைவுக்கு வந்தது. 'படகுப்பயணம்' நண்பர்களாய்ப் போய் கூத்தடிக்கச் சிறந்தது என்று நீங்கள் எழுத, நானும் அடுத்தமுறை கூட வரட்டுமா என்று கேட்க நினைத்தேன். அப்படியே நம் சேச்சிகள் அஸினுக்கும், பாவனாவுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவிட வேண்டியதுதான் :-).

10/27/2006 11:56:00 AM
இளங்கோ-டிசே said...

FD, பின்னூட்டங்களுக்கு நன்றி. இன்னொரு பின்னூட்டம் -மேரியோ மாட்டினியோ- தடுத்து வைத்திருக்கின்றேன். அது இந்தப்பதிவுக்கான பின்னூட்டமில்லை என்று நினைக்கின்றேன் இல்லை இதற்குத்தான் என்றால் பிரசுரிப்பதில் தயக்கமில்லை :-).

/இது விட்டுப்போனது. குறைந்தது ஒரு எதிர்ப்பு(பின்னர் எதிர்ப்பு அரசியலாகி என்னாவாக மாறுகிறது என்பதை விடுங்கள்) இல்லாமல் "இயற்கையாகவே" உருவாகாது என்றுதான் நினைக்கிறேன்./

....அதைத்தானய்யா நானும் கூறவந்தேன். என்னுடைய தமிழ் இப்படி வரவர மோசமாகிக்க் கொண்டிருப்பதைப் பார்க்க கவலையாய்த்தான் இருக்கு. இயற்கை என்று கூறியது அது கட்டாயம் நடந்தே தீரும்..

மற்றது, ராப் பாடல்கள் என்பதே, பொதுமைய நீரோட்ட பாடல்களிலிருந்து விலகி விளிம்புநிலை மனிதர்களால் அவர்களின் தனித்துவங்களால் முன்னேடுக்கப்பட்டதுதானே (அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகி ca$h money யிலும் bling bingலும் தேங்கிவிட்டது என்ற விமர்சனம் ஒருபுறமிருக்கட்டும்). அதனால்தான் சொன்னேன், ராப்பிலும் ஒடுக்குதல் நடந்தால் காலப்போக்கில் அதற்கு எதிராய் - B*** என்பதற்கு பதிலாய் bastard என்று பாடுவதாகவோ இல்லை வேறு எதுவுமோ மாதிரியோ- ஒரு எதிர்ப்பிசை முகிழ்வதை எவராலும் தடுக்க முடியாது என்று,

/இது குறித்துதான் முக்கியமாக பின்னூட்டமிடத்தூண்டியது.

"கெட்டவார்த்தைகள் அனைத்திலும் பெண்களை உடல்/உளரீதியாக கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுவதால் " என்பதை நமது பார்வையில் இப்படி பார்ப்பது "சரி"தான்(?) என்றாலுங்கூட, சம்பந்தப்பட்ட பாடும் நபரின் உணர்வு வெளிப்பாடு அது என்றும், அதன் பின்னால் ஏற்படும் ஒரு அல்ப சந்தோசத்தை குறித்தே அது தொடர்கிறது என்று நான் சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? ஒத்துக்கொள்ளவில்லையென்றால் , கட்டுங்கடங்காத கோபம் வரும்போது எப்படி வசைச்சொற்களை உபயோகிக்கிறீர்கள் என்றும் அது எப்படி சாந்தப்படுத்துகிறது என்றும் சிறிய சோதனை ஒன்றைச் செய்து பார்க்கலாம். ;)/

இதைத்தானே இன்னொரு குழப்பமாய் மேலே இப்படிக் கூறியிருந்தேன்.
'அதேவேளை F*** you Kim என்று எமினெம் தனது கேர்ள் பிரண்டைப் பற்றிப் பாடும்போது ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற எனது மனம் F** you Bush என்பதை ஏன் இயல்பாய் ஏற்றுக்கொள்கிறது என்பதும் விந்தையானதே.'
...........
பலிபீடத்தையும் இதையும் ஒன்றெனச் சொல்லவில்லை. பலிபீடம் விவாதத்திற்கு முன் எனக்கு ஒரு கறானான பார்வையும், இப்போது எத்தகைய புரிதல்களோடு இவற்றை அணுவது என்ற தெளிவின்மையும் இருக்கின்றதால்தான் அந்த விடயத்தைக் குறிப்பிடேன்.

இப்போதைக்கு இவை எனக்கு தீராக் குழப்பம் போல. விரிவான பின்னூட்டங்களுக்கு மீண்டும் நன்றி FD..

10/27/2006 12:35:00 PM
Anonymous said...

அதை பிரசுரிக்க வேண்டியதில்லை.

உம்மைக் குறைசொல்லவில்லை. பொதுவாக விவாதப்புள்ளிகளில் என் புரிதலையும் விளக்கவே நீட்டி முழக்கியது;நினைத்தது எழுத்தில் வந்ததா என்றும் புரியவில்லை.

நீர் குழப்பம் இருக்கும்போது குழப்பம் என்ற சொல்லை பயன்படுத்துவீரா அல்லது குழப்பமே இல்லாத ஒரு விடயத்து குழப்பம் என்று ஸ்மைலி போடுவீரா என்று குழம்/ப்பாமல் சொல்லிவிடும். அதுதான் எனக்கு கனக்க குழப்புது :) அடிக்கடி இப்படிக் குழப்பாதீர்.

--FD

10/27/2006 01:06:00 PM
`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அறிமுகத்திற்கு நன்றி டிசே. தஞ்சை பிரகாஷின் புத்தகமொன்றை நூலகத்திற் கண்டிருந்தேன். அறிமுகமில்லாததால் எடுக்கவில்லை.

//ஜெயமோகனின் எழுத்துக்களில் ...உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய்//
கவனித்திருக்கிறேன்.. இயல்புடன் கையாளப்பட்டதில்லை என்றே தோன்றியது எனக்கும். ஏதோ ஒளிந்து கொள்ள இடம் தேடுவது போலவோ வெட்கப்படக்கூடியதொன்று போலவோதான் சொல்லப்பட்டிருக்கிறதென்று என் புரிதல் இருக்கிறது.

------
b**** என்று எழுதப் படுவது போல ஏன் ba***** என்று எழுதப்படுவதில்லை? கெட்டவார்த்தைகள் இழிவுபடுத்துவன என்று பார்க்கையில் இருபாலருக்கும் சமமானது தானே?

10/31/2006 06:43:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்துக்கு நன்றி ஷ்ரேயா.
....
/n**** என்று எழுதப் படுவது போல ஏன் ba***** என்று எழுதப்படுவதில்லை? கெட்டவார்த்தைகள் இழிவுபடுத்துவன என்று பார்க்கையில் இருபாலருக்கும் சமமானது தானே?/
b**** என்பது போல ba*** -ஆண்களை நோக்கியே பயன்படுத்தப்படுகின்றது என்ற பிரக்ஞையுடன் மேலே முழுதாய்
எழுதினேன் என்றாலும்- அது தவறுதான். எடுத்துக் காட்டியமைக்கு நன்றி.

11/01/2006 09:54:00 AM