Goodbye Lenin: இது ஜேர்மனி, கிழக்கு மேற்கு ஜேர்மனிகளாக பிரிந்திருந்த பொழுதிலும், பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு கிழக்கும் மேற்கும் ஒன்றாகச் சேரும் காலத்திலும் நிகழ்கின்ற கதை. தந்தை மேற்கு ஜேர்மனியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ ஓடிப்போய்விட்டாரெனச் சொல்லி, தாய் தனித்தே தனது மகனையும் மகளையும் கிழக்கு ஜேர்மனியில் வளர்க்கின்றார். மேற்கு ஜேர்மனிக்கு ஓடிப்போன தகப்பனால் கிழக்கின் அரசால் தாயார் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றார். அதன் நிமித்தமும், கணவன் அருகில்லாத காரணத்தினாலும் தாய் உளவியலுக்கான சிகிச்சையைச் சிலவாரங்கள் பெறுகின்றார். பிள்ளைகள் வளர்ந்து பெரியவராகின்றார்கள். தாயார் வீட்டிலேயே ஆடைகள் தைத்து மக்களுக்கு விநியோகிப்பவராக, அப்பகுதிக்குழந்தைகளுக்கு கொம்யூனிசப் பாடல்களைச் சொல்லிக்கொடுக்கின்ற ஒரு தீவிர கொம்யூனிஸ்ட்டாய் இருக்கின்றார். கிழக்கு ஜேர்மனி உடைவதற்கான காரணிகள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தென்படத்தொடங்குகின்றன. கிழக்கு ஜேர்மனி அரசுக்கெதிரான ஒரு ஊர்வலத்தில் தனது மகன் இராணுவத்தால் பிடிபட்டுப் போவதைக் கண்ட தாயார் அதிர்ச்சியில் மயக்கமடைந்து கீழே விழுந்து கோமா நிலைக்குப் போகின்றார். மகனும் மகளும் தாய் என்றேனும் ஒருநாள் திரும்பி விழிப்பார் என்ற நம்பிக்கையில் அவரை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார்கள். அதிசயமாய், எட்டு மாதங்களிளின் பின் தாயார் சுயநினைவு பெறுகின்றார். ஆனால் அதற்குள் 'எல்லாமே' நிகழ்ந்துவிடுகின்றன. பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு, இவ்வளவு காலமும் உள்ளூர் உற்பத்திகளால் நிரப்பப்பட்ட அங்காடிகளில் எல்லாம் முதலாளித்துவ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் நிரப்புகின்றன. கண்ணை மினுக்கும் விளம்பரப்பலகைகள் நகரெங்கும் அலங்கரிக்கத்தொடங்குகின்றன. இவ்வாறு இன்னும் பற்பல மாற்றங்கள்.
கோமாவிலிருந்து விழித்தெழும் தாயாருக்கு இன்னொரு அதிர்ச்சி (மாரடைப்பு வந்தால்) வந்தால் உயிர் வாழ்தல் கடினமென வைத்தியர் எச்சரிக்கின்றார். எல்லா அதிர்ச்சிகளையும் விட, தாயாருக்கு சோசலிசம் கிழக்கு ஜேர்மனியில் தகர்ந்துவிட்டது என்று தெரிந்துவிட்டால் தாங்கவே முடியாது என்பது பிள்ளைகளுக்கு தெளிவாகத் தெரிகின்றது. அவரை வீட்டுக்கு அழைத்து வந்து (நடமாடமாட்டார், படுக்கையிலேயே இருக்கிறார்), தாயிற்குப் பழைய சோசலிச கிழக்கு ஜேர்மனியோடு அறை தயாராகின்றது. சே, மார்க்ஸ் எல்லாம் அறையினுள் தொங்குகின்றனர். பிள்ளைகளும் அவர்களின் காதல்ன்/காதலியும் தாயின் அறைக்குள் வரும்போது முதலாளித்துவ வசதியால் வந்த பகட்டான ஆடைகளைக் கழற்றிவிட்டு முன்பிருந்த காலத்தில் இருந்த ஆடைகளை அணிந்தபடியே நடமாடுகின்றனர்.

ஒருநாள் தாய், தனது பேரப்பிள்ளை எழுந்து நடப்பதைப் பார்த்து தானும் நடக்கத் தொடங்கி வெளியே சென்று பார்க்கின்றபோது எல்லாம் மாறியிருப்பது -விளம்பரப் பலகைகள், நவீன கார்கள்- கண்டு அதிர்ச்சியடைக்கின்றார். ஆனால் மகன் தனது நண்பரொருவனை தொலைக்காட்சி செய்தியாளாராக நடிக்கச்செய்து, மேற்கு ஜேர்மனியிலிருந்து கிழக்கு ஜேர்மனிக்கு மக்கள், அங்குள்ள அரசின் தொல்லை தாங்காது கிழக்கு ஜேர்மனிக்கு அகதிகளாக அடைக்கலந்தேடி வந்திருக்கின்றார்கள் என்று நம்பவைக்கின்றார். பெர்லின் சுவர் உடைப்பையும் கிழக்கு ஜேர்மனி மக்களல்ல, மேற்கு ஜேர்மனி மக்களே உடைத்து கிழக்கிற்கு வந்தவர்களென நம்பவைக்கின்றனர். இறுதியில் தாய் இன்னொரு மாரடைப்பு வந்து இறந்துபோகின்றார். ஆனால் இன்னமும் கிழக்கு ஜேர்மனி இருப்பதாகவும், லெலினே தங்களின் தலைவரென நம்புபவராகவே இறந்துபோகின்றார். இதற்கிடையில் பிள்ளைகளும், தமது தகப்பன் இன்னொரு பெண்ணிற்காகவல்ல, தனது சுயவிருப்பிலேயே மேற்கு ஜேர்மனிக்குச் சென்று தங்களையும் அங்கே வரச்சொல்லியிருக்கின்றார் என்பதை அறிகின்றார்கள். தகப்பன் அங்கே போயிருப்பதால் விசா எடுத்துப்போகும்போது கிழக்கு அரசு தன்னை தனது பிள்ளைகளிடமிருந்து பிரிக்கக்கூடுமென்ற பயத்தாலேயே தாய் கிழக்கில் மிகுந்த துயரத்துடன் தங்கிவிடுகின்றார்.
இப்படத்தில் கிழக்கின் கொம்யூனிசம் பற்றி நுண்ணிய விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், கொம்யூனிசம் மீதான சார்பு இருப்பதை இப்படத்திலிருப்பதை மறுத்துவிடமுடியாது. இன்னுஞ் சொல்லப்போனால் நடந்ததை ஏற்றுக்கொண்டு அதே சமயம் கிழக்கு கொம்யூனிசத்தின் நல்ல கூறுகளையும் இப்படம் முன்நிலைப்படுத்த விரும்புகின்றது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாய் மேற்கிலிருந்து கிழக்கு ஜேர்மனிக்கு அகதிகள் வந்திருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் தாயை நம்பவைக்கின்றபோது, 'நாங்கள் அவர்களுக்கு உதவவேண்டும், எங்கள் வீட்டிலேயே சில அகதிகளுக்கேனும் இடங்கொடுக்கவேண்டும்' என்று அத்தாய் பதைபதைப்பதை முதலாளித்துவம் அவ்வளவாய்க் கற்றுத்தருவதில்லை. அதேபோன்று மகன் சிறுவயதிலிருக்கும்போது, விண்வெளிக்கு கிழக்கு ஜேர்மனியிலிருந்து போகும் விண்வெளி வீரர் ஒருவர் மகனுக்கு மிகு ஆதர்சமாய் இருக்கின்றார். அவரைப்போலவே தானும் ஒருநாள் ஆகவேண்டும் என்று நினைக்கும் மகனுக்கு, அவ்விண்வெளி வீரர் கிழககு ஜேர்மனி உடைவுக்குப்பிறகு வாடகைக்கு கார் ஓட்டுபவராக இருப்பதைக் கண்டு மகன் மனங்கலங்குவதில் தெரிவது வீழ்ச்சியின் துயரமே. எல்லாத் தவறுகளுக்கும்/பிழைகளுக்கும் அப்பால் தனது தாய்நாட்டை அதன் இய்ல்போடு நேசிக்கின்ற ஒரு சாதாரண மனுசியின் படமென்றுதான் இப்படத்தில் வரும் தாயைச் சொல்லவேண்டும். இந்தத் தாயிற்கு மேற்கு ஜேர்மனியிலிருந்து அகதிகள் வருகின்றார் என்கின்றபோதுகூட, அவர்கள் அகதிகள் என்றளவிலேயே கருணை சுரக்கின்றது; ஆனால் இவ்வாறிருக்க அரசியல் பேசும் அநேக ஆண்களால் முடிவதில்லை. சிலவேளைகள் இந்த்தாயைப் போன்ற சாதாரண பெண்களில் கையில் அரசியல் அதிகாரங்கள் இருந்திருக்குமாயின் இந்த உலகம் தேவையற்ற போர்களில்லாது அமைதியாக இருந்திருக்குமோ தெரியவில்லை.
2.
Changeling : இது Angelina Jolie நடித்த Clint Eastwoodன் படம். 1930 காலப்பகுதியில் லொஸ் ஏஞ்சல்ஸில், தனது காணாமற்போன 9 வயது மகனைத் தேடுகின்ற தாயிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையில் நிகழ்கின்ற கதை. இரண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக நீளும் இப்படம் அதீத நாடகத்தளத்தில் நகர்ந்து அலுப்பூட்டப்போகின்றதோ என்ற பயத்தை, அப்படியில்லையெனச் சுவாரசியமாக இறுதிவரை சென்று முடிகின்ற படம். தொலைபேசித்துறையில் வேலைசெய்துகொண்டு,தனித்திருந்து மகனை வளர்க்கும் தாய் (Single Mom) ஒருநாள் வேலையாய் இருந்து வருகின்றபோது மகனைக் காணாது தவிர்க்கின்றார். மகனைத் தேடத்தொடங்கும்போது பொலிஸ் அவ்வளவாய் உதவவும் முன் வரவில்லை. ஏற்கனவே சீரழிந்திருக்கின்ற? (Corrupted) லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் நிர்வாகம் அதி கெடுபிடிகளால் சாதாரண மனிதர்களில் கழுத்தை இறுக்கின்றது. குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களையெல்லாம் நீதி விசாரணைகளின்றி விரும்பிய இடங்க்ளில் மண்டையில் போடுகின்றது. பொலிஸுக்கு தனது மகனைக் காணவில்லையென்று தேடுகின்ற இத்தாய் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றார். ஒருநாள் பொலிஸ் ஒரு சிறுவனைக் கண்டுபிடித்து கொண்டுவந்து, இதுதான் இத்தாயின் தொலைந்துபோன மகனென பொதுமக்களுக்கு அறிவிக்கிறது. ஆனால் அது தனது உண்மையான மகனல்ல என்று இத்தாய் ஒரு பாதிரியாரின் உதவியோடு தனது மகனைக் கண்டுபிடிக்க உதவிசெய்கவென பொதுமக்களிடம் பகிரங்கமாய்க் கேட்கின்றார். அதிகார வர்க்கம், தனது பெயர் இழுக்கப்படுவதை விரும்பாது, 'இது இவரது உண்மையான மகன் தான், இவருக்குத் தான் பிள்ளையைப் பலமாதங்களாய்க் காணாது சித்தம் பிசகியுள்ள'தெனக் கூறி உளவியல் சிகிச்சை பெறுவதற்காய் ஒரு மனநோய் வைத்தியசாலையில் தாயை அடைக்கிறது. அங்கும் தனக்கு மனோநிலை நன்றாய் இருக்கிறது என்று அடிக்கடி இத்தாய் சொன்னாலும், 'நீ உனது பிள்ளையும், இப்போது கண்டுபிடித்திருக்கும் பிள்ளையும் ஒருவரேதான் என உறுதிபடுத்தி கையெழுத்திட்டால் மட்டுமே தாங்கள் வெளியில் விடுவோம் என்கின்றார்கள் அங்கிருந்த வைத்தியரும், பொலிஸும்.. ஏற்கனவே இத்தாயாருக்கு உதவிசெய்ய வந்த பாதிரியாரின் அயராத முயற்சியால் இத்தாய் இறுதியில் மனநோய் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். பிறகு பாதிரியார் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் போன்றோரின் உதவியால் பொலிஸுக்கு எதிராய்த் தாய் வழக்குப் போடுகின்றார். இதற்கிடையில், குழந்தைகளைப் பிடித்துக்கொண்டுபோய் தனது பாலியல் இச்சையைத் தீர்த்து கொலை செய்யும் ஒருவனிடம் -வேறு வழியின்றி அவனுக்கு உதவிக்கொண்டிருக்கும்- ஒரு சிறுவன் பொலிஸில் பிடிபடும்போது அங்கே நடந்த பயங்கரத்தை பொலிஸூக்குச் சொல்கின்றான்., இத்தாயின் மகனையும் தான் இப்பிள்ளை பிடிகாரனிடம் கண்டேனென படத்தில் அடையாளங்காடுகின்றான். எனினும் இத்தாயின் மகனும் இன்னுஞ்சிலரும் ஒருநாளிரவில் தப்பியோடினார்கள் என்றும் இன்னும் உயிரோடு இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பதும் தெரியவில்லை என்றும் கூறுகின்றான் அச்சிறுவன். இச்சிறுவனின் வாக்குமூலத்தால், இத்தாயின் மகன் வேறெங்கோ இருக்கிறான் அல்லது இறந்துபோயிருக்கலாம், இப்போது கண்டுபிடிக்கப்பட்டதாய் இத்தாயிடம் பலவந்தமாய் திணிக்கப்பட்டிருக்கும் சிறுவன் பொலிஸ் சோடித்த கதையேயென நீதிமன்றத்திற்குத் தெரிகிறது.

படங்களுக்கு நன்றி: விக்கிபீடியா
2 comments:
நன்றிகள் DJ
11/21/2008 12:09:00 PMநீண்ட நாட்களுக்குப் பிறகு...பாலாஜி-பாரி :-).
11/22/2008 10:52:00 AMPost a Comment