கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அதிகாரத்தின் கிளைகளில் துளிர்க்கும் மனிதாபிமானம்

Friday, November 28, 2008

...Because they can destroy you, too, despite your talent and your faith. They decide what we play, who is to act and who can direct.
(from the movie, The Lives of Others)

அதிகார‌த்தை த‌ம‌க்காக்கிக் கொண்ட‌வ‌ர்க‌ள், பிற‌ரையும் த‌ம்மைப் போல‌வே சிந்திக்க‌வும் செய‌ற்ப‌ட‌வும் வைக்க‌ முய‌ல்கின்றார்க‌ள். அதேவேளை த‌ம‌க்கான‌ த‌னித்தேர்வுக‌ளின் அடிப்ப‌டையில் சுத‌ந்திர‌ வெளியில் சிற‌க‌டித்துப் ப‌ற‌க்க‌ விரும்புவ‌ர்க‌ளால் அவ்வாறு அதிகார‌வ‌ர்க்க‌த்தின் எல்லைக்குள் க‌ட்டுப்ப‌ட்டு இருக்கவும் முடிவதுமில்லை‌. என‌வே இவ்வாறான‌வ‌ர்க‌ளின் ஓர்ம‌த்தை அதிகார‌ வ‌ர்க்க‌ம் த‌ன‌க்குள்ள எல்லா வ‌ழிக‌ளாலும் அட‌க்க‌ப்பார்க்கின்ற‌து... தொட‌ர்ந்து த‌ம‌து விதிக‌ளை மீறிச் செல்ப‌வ‌ர்க‌ளை நோக்கி த‌ன‌து க‌ண்காணிப்பின் வ‌லைக‌ளை வீசிய‌ப‌டியிருக்கிற‌து. முன்னாள் சோவிய‌த்(து) ஒன்றிய‌ம், கிழ‌க்கு ஜேர்ம‌னி, சீனா, கியூபா போன்ற‌ இட‌துசாரித்துவ‌ம் மீது ந‌ம்பிக்கை வைத்த‌ நாடுக‌ள் ம‌ட்டுமன்று ஐக்கிய‌ அமெரிக்கா, ஐக்கிய‌ இராச்சிய‌ம் போன்ற‌ 'எல்லா ஜ‌ன‌நாய‌க‌ உரிமைக‌'ளும் த‌ங்கள் நாட்டிலிருக்கிற‌து என்கின்ற‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளும் த‌ம‌து நாடுக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளைக் கண்காணித்திருக்கின்றன/ இன்னமும் க‌ண்காணிக்கின்றன...சார்லி சாப்ளின், 'Beatles' ஜோன் லெனென் போன்ற‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ள். ஆக‌, எவ்வித வித்தியாசங்களுமில்லாது, அதிகார‌த்தை எவ‌ர் கைக‌ளில் வைத்திருக்கின்றார்க‌ளோ அவ‌ர்க‌ள் தம‌து அதிகார‌ங்க‌ள் மற்றும் தாம் சார்ந்திருக்கும் அமைப்புக்க‌ள் த‌க‌ர்ந்துவிடுமோ என்ற‌ ப‌ய‌த்தில், பிற‌ரைத் தொட‌ர்ந்து க‌ண்காணித்த‌ப‌டியிருக்கினறார்க‌ள் என்ற‌ உண்மை ந‌ம் அனைவ‌ருக்கும் விள‌ங்குகின்ற‌து.

The Lives of Others என்கின்ற‌ இப்ப‌ட‌ம் அதிகார‌த்திற்கும் ம‌னிதாபிமான‌த்திற்கும் இடையில் அல்லாடுகின்ற‌ ம‌னித‌ர்க‌ளின் க‌தையென்றே கொள்ள‌வேண்டும். அதிகார‌ம் என்ப‌து போதை த‌ருகின்ற‌ விட‌ய‌ம். அதிகார‌ப் போதை கூட‌ கூட‌ ம‌னிதாபிமான‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அங்கேயிருந்து ந‌க‌ர்ந்துவிடுகின்ற‌து. இப்ப‌ட‌த்தின் க‌தை கிழ‌க்கு ஜேர்ம‌னியில் நிக‌ழ்கிற‌து. ஒருவ‌ரை விசார‌ணை செய்வ‌தோடு ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கின்ற‌து. கிழ‌க்கு ஜேர்ம‌னியில் இர‌க‌சிய‌ப்பொலிசில் (Stasi) வேலை செய்யும் வெஸ்ல‌ர், மேற்கு ஜேர்ம‌னிக்கு ஓடிபோன‌ ஒருவ‌ரின் ந‌ண்ப‌னை விசாரிக்கின்றார். விசார‌ணைக்குட்ப‌டுத்த‌ப்ப‌டுப‌வ‌ன் தொட‌ர்ந்து த‌ன‌க்கு எதுவுமே தெரியாது என்ப‌தைத் திரும்ப‌த் திரும்ப‌ச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றான். அடுத்த‌ காட்சி, வெஸ்ல‌ர் புதிதாக‌ இர‌க‌சிய‌ப் பொலிசில் இணைக்க‌ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு எடுக்கின்றார். வ‌குப்பில் ஏற்க‌ன‌வே விசார‌ணை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌னின் குர‌ல் ஒலிநாடாவில் ஒலிக்கிற‌து. வெஸ்ல‌ர், 'இவ‌ன் உண்மை சொல்கின்றானா இல்லையா?' என வ‌குப்பில் கேட்கின்றார். ஒலிநாடாவை உன்னிப்பாக‌க் கேட்கும் மாண‌வ‌ர்க‌ளால் எதையும் உறுதியாய்ச் சொல்ல‌ முடிய‌வில்லை. ஆனால் விசார‌ணைக்குட்ப‌டுத்தப்பட்ட‌வ‌ன் பொய் சொல்கின்றான் என்று வெஸ்ல‌ர் உறுதியாய்ச் சொல்கின்றார். எனெனில் உண்மை சொல்கின்ற‌வ‌ன், ப‌ல‌முறை விசாரிக்கும்போது எதையாவ‌து கொஞ்ச‌ம் மாற்றியாவ‌து சொல்வான்; ஆனால் இவ‌ன் ஏற்க‌ன‌வே கூறிய‌தை அப்ப‌டியே திரும்ப‌ச் திரும்ப‌ ஒரே மாதிரியே சொல்கின்றான். என‌வே இவ‌ன் உண்மை பேச‌வில்லை என்கின்றார்.

அடுத்த‌ காட்சியில், த‌ன‌து ந‌ண்ப‌னாக‌ இருக்கும் இர‌க‌சிய‌ப் பொலிஸ் அதிகாரியின் அழைப்பின் பேரில் ஒரு நாட‌க‌த்திற்குச் செல்கின்றார் வெஸ்ல‌ர். அங்கே அமைச்ச‌ரொருவ‌ரும் பார்வையாளராக‌ வ‌ந்திருக்கின்றார். கிழ‌க்கு ஜேர்ம‌னி அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ அந்நாட‌க நெறியாள்கையாள‌ர் ஜோர்ஜ் மீதும் வெஸ்ல‌ருக்கு ச‌ந்தேக‌ம் வ‌ருகின்ற‌து. ஜோர்ஜ் வீட்டில்லாத‌ பொழுதில் அவ‌ர‌து வீட்டில் இர‌க‌சிய‌ இல‌த்திர‌னிய‌ல் உப‌க‌ர‌ண‌ங்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டு, ஜோர்ஜ் க‌ண்காணிக்க‌ப்ப‌ட‌த் தொட‌ங்குகின்றார். இர‌வு ப‌க‌லாய் ஜோர்ஜ் க‌ண்காணிக்க‌ப்ப‌ட்டு வெஸ்ல‌ரால் தின‌மும் அறிக்கைக‌ள் எழுத‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஜோர்ஜின் ந‌ண்ப‌ரும், அவ‌ர‌து நாட‌க‌ங்க‌ளில் ந‌டிக்கும் புக‌ழ்பெற்ற‌ ந‌டிகையான‌ கிறிஸ்ரினாவுட‌னான‌ ஜோர்ஜின் உட‌லுற‌வு சார்ந்த‌ அந்த‌ர‌ங்க‌ங்க‌ள் கூட அறிக்கையில் ப‌திவு செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத‌ற்கிடையில் நாட‌க‌ம் பார்த்த‌ அமைச்ச‌ருக்கு கிறிஸ்ரினா மீது உட‌ல் சார்ந்த‌ வேட்கை. இவ்வாறு அதிகார‌ வ‌ர்க்க‌ம் க‌லைஞ‌ர்க‌ளான‌ ஜோர்ஜ், கிறிஸ்ரினாவை பின் தொட‌ர்ந்து அவர்கள் அறியாதபடி க‌ண்காணிக்க‌ச் செய்கின்ற‌து.

ஜோர்ஜின் ந‌ண்ப‌ரொருவ‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌னி அர‌சால் வீட்டுக்காவ‌லில் எட்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். க‌லைஞ‌ரான‌ அவ‌ர் த‌ன‌து நாட‌க‌ங்க‌ளைச் சுதந்திரமாய் இய‌க்க‌முடியாத‌ ம‌ன‌வுளைச்ச‌லில் ஒருநாள் த‌ற்கொலை செய்துகொள்கின்றார். ஜோர்ஜும் அவ‌ர‌து சில‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இவ்வாறான‌ த‌ற்கொலைக‌ளை வெளியுல‌கிற்கு கொண்டுவ‌ர‌வேண்டும் என்று முய‌ற்சிக்கின்றார்க‌ள். ஜ‌ரோப்பாவில் ஹ‌ங்கேரியிற்குப் பிற‌கு கிழ‌க்கு ஜேர்ம‌னியிலேயே அதிக‌ம் த‌ற்கொலைக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌; ஆனால் கிழ‌க்கு அர‌சு 1977ற்குப் பிற‌கு த‌ற்கொலைக‌ளின் எண்ணிக்கையை க‌ண‌க்கிலெடுப்ப‌தைத் த‌விர்த்துக்கொள்ள‌த் தொட‌ங்கிய‌தையும் த‌ம‌து க‌ட்டுரைகளில் முன்வைக்க‌வேண்டுமென‌ விவாதிக்கின்றார்க‌ள். ஆனால் ஜோர்ஜின் பிற‌ ந‌ண்ப‌ர்க‌ள் கிழ‌க்கு அர‌சால் க‌ண்காணிக்க‌ப்ப‌டுவ‌தைப் போல‌, தானும் த‌ன‌து வீடும் க‌ண்காணிப்ப‌டுவ‌தில்லையென்ற‌ ந‌ம்பிக்கையில் ஜோர்ஜ் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளை த‌ன‌து வீட்டுகே அழைத்து இவை ச‌ம்ப‌ந்த‌மாய் விவாதிக்கின்றார். மேற்கு ஜேர்ம‌னியிலிருக்கும் ப‌த்திரிகையொன்று இவ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ளைப் பிர‌சுரிக்க‌ முன்வ‌ருகின்ற‌து. ஆனால் ஏற்க‌ன‌வே உப‌யோகத்திலிருக்கும் த‌ட்ட‌ச்சு இய‌ந்திர‌த்தை ஜோர்ஜ் பாவித்தால் கிழ‌க்கு அர‌சு இலகுவாய் எழுதுப‌வ‌ர்க‌ளைப் பிடித்து உள்ளே போட்டுவிட‌க்கூடும்; என‌வே தாங்க‌ள் த‌ரும் சிவ‌ப்பு மையுள்ள‌ த‌ட்ட‌ச்சு இய‌ந்திர‌த்தைப் பாவிக்கும்ப‌டி அவ‌ர்க‌ள் கூறுகின்றார்க‌ள். த‌ட்ட‌ச்சு செய்யாத‌ பொழுதில் ஒளித்து வைக்க‌ ஜோர்ஜ் வீட்டில் ஓரிட‌த்தைக் க‌ண்டுபிடிக்கின்றார்.

இவ்வாறு ஜோர்ஜும் அவ‌ர‌து நண்பர்களும் க‌ட்டுரைக‌ளை விவாதிக்க‌வும், எழுத‌வும் செய்யும்போது, தின‌மும் க‌ண்காணித்த‌ப‌டி அறிக்கைக‌ள‌ எழுதும் வெஸ்ல‌ர் என்ன‌ செய்தார்? க‌ட்டுரைக‌ள் வெளியுல‌கிற்குப் போகும்போது, கிழ‌க்கு அர‌சு என்ன‌ செய்த‌து? ஜோர்ஜின் தோழியான‌ கிறிஸ்ரியாவிற்கும் பின் தொட‌ர்ந்த‌ அமைச்ச‌ருக்கும் என்ன‌ நிக‌ழ்ந்த‌து? பேர்லின் சுவ‌ர் உடைந்த‌த‌ன்பின், ஜோர்ஜ் தான் எழுதும் நாவ‌லை ஏன் இர‌க‌சிய‌ப் பொலிஸிலிருந்த‌ வெஸ்ல‌ருக்கு காணிக்கை செய்கின்றார் என்ப‌வற்றை மிகுந்த‌ சுவார‌சிய‌மாக‌ப் ப‌ட‌மாக்கியிருக்கின்றார்க‌ள். இதைவிட‌ விய‌ப்பு என்ன‌வெனில் இத்திரைப்ப‌ட‌ம், இந்நெறியாள்கையாள‌ரின் (Florian Henckel von Donnersmarck) முத‌ற்ப‌ட‌ம் என்ப‌து. ஒளிப்ப‌திவு, இசை என்ப‌ன‌ அற்புத‌மாய் ப‌ட‌த்தோடு இன்னும் ஒன்றிவிட‌ச்செய்கின்ற‌ன. ஜோர்ஜ், பீத்தோவனின் ஒரு இசைத்துண்டை வாசித்து, 'இந்தக் கோர்வைத் தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், புரட்சியை முடிக்கமுடியாது போய்விடுமென்ற' லெனின் வார்த்தையைத் தனது தோழிக்கு நினைவுபடுத்தி, எந்த ஒரு கெட்டவன் கூட இந்த இசையைக் கேட்டால் அவனால் தொடர்ந்து கெட்டவனாக இருக்கமுடியாது என்று ஜோர்ஜ் கூறுவதை, வெஸ்லர் இசையை இரசித்தபடி கண்காணித்துக்கொண்டிருக்கும் காட்சி குறிப்பிட வேண்டியதொன்று.

இதில் முக்கிய‌மாய் வெஸ்ல‌ராய் ந‌டித்த‌ (Ulrich Muhe) ந‌டிப்பு அருமையான‌து. இர‌க‌சிய‌ப் பொலிஸில் வேலை செய்ய‌த்தொட‌ங்கி அவ‌ரும் ஒரு இய‌ந்திரமாய் மாறிப்போன‌து போல‌ அவ‌ர‌து தின‌ வாழ்க்கையின் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் காட்ட‌ப்ப‌ட்டிருக்கும். அதேபோன்று க‌லைஞ‌ராய் வ‌ரும் ஜோர்ஜ், கிறிஸ்ரினா வேறு வ‌ழியின்றி அமைச்ச‌ரின் விருப்புக்குக் க‌ட்டுப்ப‌ட‌வேண்டியிருக்கும்போது அதையும் ச‌கித்துக்கொண்டு கிறிஸ்ரினாவை ஏற்றுக்கொள்வ‌து... (அவ்வாறான ஒரு விவாதத்தின்போதே கிறிஸ்ரினா இவ்வாறு கூறுகின்றார்...Because they can destroy you, too, despite your talent and your faith. They decide what we play, who is to act and who can direct.) ஜோர்ஜின் ந‌ண்ப‌ர்க‌ள், கிறிஸ்ரினா மூல‌ம் தாம் க‌ட்டுரைக‌ள் எழுதிக்கொண்டிருப்ப‌து இர‌க‌சிய‌ப்பொலிஸிற்கு தெரிந்துவிட்ட‌து என்று குற்ற‌ஞ்சாட்டும்போது ஜோர்ஜ் கிறிஸ்ரினாவிற்காய் ப‌ரிந்து பேசுவ‌தென‌... அந்த‌ச் சூழ‌லுக்குள் எப்ப‌டி ம‌னித‌ர்க‌ள் ந‌ட‌ந்துகொள்வார்க‌ளோ அப்ப‌டியே இய‌ல்பாக‌ப் ப‌ட‌த்தில் காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌னர்‌.

அதிகார‌த்தைக் கையில் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ சில‌வேளைக‌ளில் ம‌னிதாபிமானிக‌ளாய் இருக்க‌ விரும்புகின்றார்க‌ள் என்ப‌தையும், அப்ப‌டி ஒருவர் ம‌னிதாபிமானியாய் இருக்க‌ முய‌ல்கையில் த‌ம‌க்கான‌ உய‌ர்ந்த‌ ர‌க‌ வாழ்க்கையைக் கூட‌த் தூக்கியெறிய‌த் த‌ய‌ங்க‌மாட்டார் என்பதே இப்ப‌ட‌த்தில் ஊடுபொருளாய் இருக்கிற‌து. ஒவ்வொரு காட்சியிலும் எந்த‌ப் பாத்திர‌ம் எப்ப‌டி மாற‌ப்போகின்ற‌து...யாரைக் காட்டிக்கொடுக்க‌ப்போகின்ற‌து... 'தேசத்துரோகியாய்' அடையாள‌ங் காட்ட‌ப்ப‌ட்டால் ஒவ்வொருத்தருக்கும் என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகின்ற‌து என்ற‌ ப‌த‌ட்ட‌த்திலேயே ந‌க‌ர‌வைத்து பார்ப்ப‌வ‌ரையும் க‌ண்காணித்த‌லில் வ‌லைக்குள் இருத்திவைப்ப‌தில்தான் இப்ப‌ட‌ம் முக்கிய‌மான‌ ஒரு ப‌ட‌மாய் த‌ன்னை நிலைநிறுத்திக்கொள்கிற‌து என‌த்தோன்றுகின்ற‌து. ஒரு காட்சியில், வீட்டுக்காவ‌லில் வைக்க‌ப்ப‌ட்டு எதையும் சுத‌ந்திர‌மாய் எழுத‌முடியாது த‌ற்கொலை செய்த‌ ப‌டைப்பாளி கூறுவார்....அடுத்த‌ பிற‌ப்பிலாவ‌து நான் விரும்பிய‌தை எவ‌ருக்கும் ப‌ய‌ப்பிடாது சுத‌ந்திர‌மாய் எழுதும் நிலை கிடைக்கவேண்டுமென. அவ்வாறான‌ ஒரு நிலைக்காய்த்தான் உல‌கெங்குமுள்ள‌ ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ள்/க‌லைஞ‌ர்க‌ள் இன்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌துதான் இன்னும் அவ‌ல‌மான‌து.


(எனது எல்லாப் பலவீனங்களோடும் சகித்துக்கொள்ளும் உனக்கு...)

1 comments:

சர்வோத்தமன் சடகோபன் said...

அன்புள்ள டி.ஜெ,

உங்கள் வலைதளத்திலுள்ள கட்டுரைகளை வாசித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். மிகவும் நல்ல படம்.இதில் வெஸ்லராய் நடித்தவர் நிஜ வாழ்க்கையில் கண்கானிக்கப்பட்டிருக்கிறார் என்று வாசித்திருக்கிறேன்.அவர் இப்போது இறந்துவிட்டதாகவும்.

நன்றி,
சர்வோத்தமன்.

10/16/2011 12:27:00 PM