இரண்டு வாரங்களுக்கு முன் ரொரண்டோவில் 7வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடைபெற்றது. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து குறும்/நெடும் படங்கள் வந்திருந்தன. வழமைபோலில்லாது ஈழத்திலிருந்து இம்முறை எந்தப் படங்களும் வந்ததாய்க் காணவில்லை (அல்லது ஒன்றிரணடு வந்திருக்கலாம்). இன்றைய ஈழத்து உக்கிரமான போர்ச்சூழலை அவதானித்தால் இவ்வாறு படங்களை எடுத்து அனுப்புதல் என்பது சாத்தியமில்லை என்பது இலகுவாய் விளங்கும். இம்முறை திரைப்பட விழாவிற்கு வந்திருந்த படங்களைப் பார்த்தபோது எந்தப் படமும் அவ்வளவாய் சலனம் செய்து நகர்ந்ததாய்க் காணவில்லை என்பதை வருத்தத்துடந்தான் பதிவுசெய்யவேண்டும். கனடாவிலிருந்து இத்திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்ட படங்கள் மிக மோசமாய் இருந்தன. புலம்பெயர் சூழல் நிலவரம் தெரிந்துகொண்டு இப்படி ஒரு கடுமையான விமர்சனத்தை வைப்பது சரியா என்று நெஞ்சு குறுகுறுத்தாலும் உண்மையைச் சொல்லித்தானாக வேண்டும். 'எத்தனையோ கதைகள் உங்களுக்குள் புதைந்து கிடக்க என்னவகையான படங்களை நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்?' என்று இங்கே வந்த ஒரு தமிழக இயக்குநர் (தங்கர்பச்சனா?) காரசாரமாய்க் கேட்டதுபோலத்தான் இங்கே எடுக்கப்படும் படங்களைப் பார்க்கும்போது நம்மை நாமே அவசரமாகவும் அவசியமாகவும் சுயவிமர்சனம் செய்ய வேண்டியிருக்கிறது.

திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. அவ்வாறான முயற்சியில் இறங்கும்போது எத்தனையோ பேரின் உழைப்பும், நேரமும், பணமும் தேவைப்படும் என்பது இம்முயற்சிகளில் ஈடுபடும் பலருக்கு நன்கு தெரியும். இவ்வளவற்றையும் செலவழித்தும் ஏனின்னும் நம்மால் பிறரைப் பாதிக்கின்ற அளவுக்கு குறும்படங்கள் எடுக்கமுடியவில்லை என்பதைப் பற்றி யோசிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டிருந்த, 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாய்' கோடம்பாக்கக் கனவில் முழுநீளத் திரைப்படம் எடுத்து தங்களையும்/புலம்பெயர் சூழலையும் நாசமாக்கிக்கொண்டிருக்கும் 'நல்லவர்களை' சற்று ஒதுக்கிவிட்டு, அவ்வாறான 'பேராசைகள்' இல்லாது நல்ல குறும்படங்களுக்காய் முயற்சிப்பவர்களைப் பற்றி மட்டும் இப்போதைக்கு யோசிப்போம். தொடர்ந்து சில வருடங்களாய் இத்திரைப்பட விழாவுக்காய் கனடாவிலிருந்து வரும் படங்களைப் பார்க்கும்போது, அவற்றின் முக்கிய பிரச்சினையாக இருப்பது திரைக்கதைகளின் வறட்சி. அநேகமான படங்கள் 'குடும்பம்', 'இளைஞர் வன்முறை', 'புலத்தில் கலாசாரத்தைக் காப்பாற்றல்' என்பவற்றுக்கப்பால் நகர மறுக்கின்றன. குடும்பம் என்று வரும்போது, கணவன் X மனைவி, பெற்றோர்கள் X பிள்ளைகள் என்ற எதிர்நிலைகளிலிருந்து வரும் பாத்திரங்களே முக்கியமாகின்றன. இளைஞர் வன்முறை என்று குறிப்பிடும்போது அதை விபரித்துச் சொல்ல வேண்டியதில்லை. ;புலத்தில் கலாசாரத்தைக் காப்பாற்றல்...' என்பது இங்கே வளரும் பிள்ளைகளை எப்படித் தமிழ் கலாசாரம்(?) படி வளர்த்தல் என்பது. அதிலும் முக்கியமாய் மொழியைக் கற்பித்தலும் பெரியோரை மதித்தலும், ஊரைவிட்டுப்பிரிந்த நனவிடைதோய்தலுகளுமே முக்கிய பேசுபொருளாகின்றன. நிச்சயமாக புதிய கதைகளைத் தேடித்தான் போகவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தத்தையும் எவருக்கும் ஒரு முன் நிபந்தனையாக நாம் விதித்துவிடமுடியாது. ஏற்கனவே தெரிந்த அல்லது சொல்லப்பட்ட கதையைக் கருவாகக் கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் அவ்வாறு ஏற்கனவே சொல்லப்பட்ட கதையைத்தான் ஒருவர் படமாக்க விரும்புகின்றார் என்றால், அவர் அதை எவ்வாறு பார்வையாளரிடையே முன்வைக்கின்றார் என்பது முக்கியமாகின்றது. அந்த இடத்தில் வசனமும், காட்சிகளை வேறு கோணத்தில் எடுப்பதும், தொகுத்தலும்(editing) முக்கியமான விடயமாகின்றன.
உதாரணத்திற்கு இளைஞர் வன்முறையைப் பேசும், இத்திரைப்பட விழாவுக்கு வந்த ஒருபடத்தை (குருதி) எடுக்கலாம். ஆள் தவறாக அடையாளங் காணப்பட்டு ஒரு அப்பாவி இளைஞன் வன்முறைக்குழுவொன்றால் கொல்லப்படுவதுதான் அக்கதையின் சாரம் (இவ்வாறு பல படங்கள் வந்துவிட்டன; ஆகவே இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட கதை). ஒரு அப்பாவி இளைஞனின் கொலையின்பின நிகழும் இன்னொரு உளவியல் பிரச்சினை குறித்து இப்படம் சற்றுத் தொட்டுச் செல்கின்றது. அதாவது தமது பிள்ளையைப் பரிதாபமாய்ப் பலிகொடுக்கின்ற பெற்றோர், மகனை இழந்த கவலையுடன், சமூகத்திடமிருந்து, இப்படியொரு 'ஊதாரிப்' பிள்ளையை வளர்த்தற்காய் வீண்பழி கேட்கவும் வேண்டியவராகின்றார்கள். இந்தத் திசையிலிருந்து -பெற்றோர்-சமூகம் என்ப்வற்றுக்கூடாக கொலையின் பின்னான (after murder) ஒரு உளவியல் பிரச்சினையைப் பின் தொடர்ந்து ஒரு பாதிப்பை இப்படம் ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால் இப்படத்தில் அது தேவையற்ற உரையாடல்களால் குழப்பப்படுகின்றது. இந்த விடயத்தைப் பின்தள்ளி வழமைபோல இளைஞர் வன்முறைக்கு மீண்டும் தாவிப்போக அலுப்பே மிஞ்சுகின்றது. முக்கியமாய் இக்குறும்படத்தில் வசனங்களால் எல்லாவற்றையும் காட்டிவிடலாம் என்ற கட்டத்திலிருந்து இப்படத்தை எடுத்திருந்தவர்கள் நகர்ந்திருக்கவேண்டும். பேசாமலே -காட்சிகளாலே- பெரும் பாதிப்புக்களை குறும்படங்களில் ஏற்படுத்திப் போகலாம் என்பதை இப்படத்தில் மட்டுமில்லை, கன்டாவில் எடுக்கப்பட்ட திரையிடலுக்கு அனுப்பப்பட்ட எல்லாப் படங்களிலும் இஃதொரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
திரையிடலுக்கு வந்த கனடாவில் தயாரிக்கப்பட்ட இன்னொரு படம் (சலனம்) மிக ஆபாசமாய் இருந்தது. 'ஆபாசம்' என்பது வழக்கிலுள்ள ஆபாசத்தை இங்கு குறிப்பிடவில்லை. சில சின்னத்திரை நாடகங்களில் இவ்வாறான ஆபாசம் அளவுக்கு மீறியிருப்பதை நாம் அவதானிக்கலாம். கதை; இரு சகோதரர்கள், மூத்த சகோதரரின் துணைவியார் கனடாவுக்கு வருகின்றார். விமான நிலையத்தில் அழைத்து வருவதிலிருந்து குறும்படம் முடியும் வரை படம் ஒருவித வக்கிரமாய்படம் போவதுடன், இறுதியில் கஸ்தூரிராஜா தரவழிகள் பதின்மர்களை முக்கிய பாத்திரமாக்கிக கொண்டு எடுக்கும் படங்களில் வரும் போதனையைப் போலவே இப்படமும் முடிகின்றது. காரின் rear mirror ல் சைட் அடிப்பதிலிருந்து, அண்ணியார் குளியலறையில் நின்று தலையிழுப்பதை பின்னால் நின்று இரசிப்பதிலிருந்து, முருங்கைக்காயை ஒரு'வகையாய்' சப்பிச் சாப்பிட்டபடி அண்ணியின் முருங்கைக்காய் நன்றாகவிருக்கிறது என்று சொல்வதுவரை தெரிவதெல்லாம் மிகுந்த வக்கிரமே தவிர வேறொன்றுமில்லை. அதைவிட மிக ஆபாசமாய் இருப்பது முடிவில் அந்தத் தம்பிக்கு அண்ணி அவர்களின் இறந்துபோன(அல்லது ஊரிலிருக்கிற?) தாயாரை நினைவுபடுத்துகின்றாராம் என்று சொல்லி முடிப்பது. 'அண்ணியல்ல நீங்கள் அம்மா அம்மா' என்று பின்னணிக்குரல் வருகையில் இப்படத்தை எடுத்தவருக்கு செவிட்டில் அறைந்தால் என்ன என்றமாதிரி இருந்தது. அட நாசமாய்ப்போனவர்களே அம்மாவையும் -இப்படி அண்ணியைப் பார்ப்பதுபோலத்தான்- பார்ப்பீர்கள் என்றால், சமூகம் அம்மா-மகன் என்றில்லை வேறொரு உறவு மாதிரியல்லவா பார்த்திருக்கும் என்பது புரியாமலா போய்விட்டது என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. கனடாவிலிருந்து அல்ல, புலம்பெயர்ந்து வேறு நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்களால் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து ஒன்றிரண்டு நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து கவனப்படுத்துவது கூடக் கடினமாய்த்தான் இருக்கிறது. சென்றவருடம் தொழில்நுட்ப விடயங்கள தவிர்த்து திரைக்கதையைக் கட்டிறுக்கமாய்ப் படமாக்கிய (சிற்ந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்ற) 'நதி'யையெடுத்த பாஸ்கரிடமிருந்து கூட மிகச் சாதாரணமான -அலுப்பான- படமே இம்முறை வெளிவந்திருக்கின்றது. எவரில் அதிகம் நம்பிக்கை கொள்கின்றோமே அவர்களே சாணேற முழம் சறுக்கின்ற கதையாய் புலமபெயர் படச்சூழலை ஆக்கிவிடுகின்றனர் (அல்லது தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக்கொட்டிவிடுகின்றார்கள் என்றும் சொல்லலாம்). திரையிடப்பட்ட படங்களில் ஒரளவு நம்பிக்கை தந்தது, எக்ஸில் தயாரிப்பில் பிரதீபன் இயக்கிய 'முற்றத்தில் ஒரு மாமரம்' (A mango tree in front yard). படிமங்களால் ஈழத்துப் பிரச்சினையைக் காட்ட முயன்றமைக்காய்ப் பாராட்டலாம். இன்னும் எடிட்டிங்கில் கூடக் கவனஞ் செலுத்தியிருக்கலாம்; சில காட்சிகள் தேவையில்லாமல் நீளப்பார்க்கின்றன. இவற்றை விட மிக அவலம் என்னவென்றால் தமிழகத்திலிருந்து ஈழத்தின் அவலத்தைப் பதிவாக்கிய 'சிலோன்' என்ற படத்துக்கு நிகராய்க் கூட புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் எவராலும் இன்றைய ஈழத்து உக்கிர போர்க்காலத்தைப் பதிவு செய்துவிட முடியவிலை என்பதுதான். 'சிலோன்' இரண்டு வேறு நிலப்பரப்பைக் காட்டுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் சிறுவர்கள் குழு கிரிக்கெட் விளையாடுகின்றது; மேலே விமானம் போக கையைக் காட்டி ஆர்ப்பரிக்கிகின்றார்கள். ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பின்னணி இசை வழங்குகின்றது. சட்டென்று கமரா கிளிநொச்சிக்குத் திரும்புகின்றது. அங்கேயும் ஒரு சிறுவர் கூட்டம்; உதைபந்தாட்டம் விளையாடுகின்றது. ஆட்டத்தின் நடுவில் உலங்கு வானூர்தியின் சத்தம் கேட்கின்றது. சிறுவர்கள் ஆட்டத்தை விட்டுத் திசைக்கொருவராய்ச் சிதறி ஓடுகினறார்கள். இப்போது ஒரு சிறுவனை மட்டும் கமரா பின் தொடர்கின்றது. பியானோவின் ஒற்றைத் தந்தி பின்னணியில் அதிர்கின்றது ஓடிப்போய் பதுங்குகுழிக்குள் பதுங்கும் சிறுவனின் விழிகள் எங்கும் மரணத்தின் நிழல் படிகின்றது. காதில் கையைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றான். உலங்கு வானூர்தி இம்முறை தாக்குதல் எதையும் நகராது நகர்கின்றது. மரணபீதியில் இருக்கும் சிறுவனின் விழிகள் 'அப்பாடா' என்றமாதிரி நிம்மதிக்குத் திரும்புகின்றது. அவ்வளவுதான் படம்... 3 அல்லது 4 நிமிடங்கள். எந்த உரையாடலுமில்லை. படம் முடிந்தபின்னும் அச்சிறுவனின் பதட்டம் பார்ப்பவரின் உள்ளத்தில் படிந்துவிடுகின்றது. இம்முறை விமானத்தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பிய சிறுவனுக்கு, நாளை என்ன நடக்கும் என்பது அவனுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது. எதையும் செய்யமுடியாத குற்றவுணர்ச்சி நம்மைச் சூழ்ந்தபடியே இருக்கிறது. இம்மாதிரிக் குறும்படங்களை -எல்லாவற்றையும் உரையாடல்களால் நிகழ்த்திக்காட்டும்- புலம்பெயர் ஈழத்துப் படைப்பாளிகள் நிச்சயம் பார்க்கவேண்டும். உரையாடல்களைக் குறைத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அது தமிழறியாத பிறரைக் கூட subtitle இல்லாது பாதிக்கும். 'எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்' என்ற நம்பிக்கைச் சொற்களிடையேதான் சுயாதீனத் திரைப்படக் கழகம் ஏழாவது ஆண்டாய் திரைப்பட விழாவை நடத்திக்கொண்டிருக்கின்றது. ஆனால் பத்தாண்டு ஆனாலும் நாம் எமது தனித்துவத்தை வந்தடைவோமா என்பது -இவ்வாறான புலமபெயர் குறும்/நெடும்படங்களைப் பார்க்கும்போது- கேள்விக்குறியாக இருப்பதுதான் அவலமானது.
உபகுறிப்பு: இத்திரைப்பட விழாவுக்கு நடுவர்களில் ஒருவராக இருந்தாலும், இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே தவிர, தேர்வுக்குழுவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
-------------------
இத்திரைப்பட விழா முடிந்து அடுத்த வாரத்தில், Regent Park Film Festival பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. Regent Park என்பது ரொரண்டோவில் ஏழ்மையான பகுதி மட்டுமில்லை, நிறைய புதுக்குடிவரவாளர்கள் வந்துசேர்கின்ற இடமுங்கூட. ரொரண்டோ பெருநகரில் (metro) எழுகின்ற அதியுயர் வசதி கொண்டோக்களின் (Condos) நிமித்தம் இப்பகுதி மக்கள் பகுதி பகுதியாக அகற்றப்படுகின்ற அபாயம் அண்மைய வருடங்களில் இருந்து கொண்டுவருகின்றது என்பதோடு திரையிடலுக்கும் அநேகமாய் விளிம்புநிலை மக்களின் கதைகளைக் கருவாகக் கொண்ட படங்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. நான்கு நாட்கள் நடந்த திரையிடலில் இரண்டு நாட்கள் சில படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்தது. பார்த்தவற்றில் பாதித்த சில திரைப்படங்களையாவது குறிப்பிடவேண்டும்.


Bevel Up என்ற கனடாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படம், வீடற்றுத் தெருவில் வசிப்பவர்களையும், பாலியல் தொழிலாளர்களையும் அவர்களின் போதைப்பொருள் பாவனைகளையும் பற்றிப் பேசுகின்றது. இந்த படத்தை ஒரு பின் நவீனத்துவ மனோநிலையில் அணுகமுடியாவிட்டால் இப்படத்தினுள்ளே போகமுடியாது. அதாவது நவீனத்துவம் முன்வைத்த 'எல்லோரும்/எல்லாமும் சுபீட்சமாக இருக்கும்' என்ற utopian மனோநிலையை நீங்கள் முதலில் உதறித்தளளவேண்டும். அத்தோடு நல்லது X கெட்டது என்ற துவித எதிர்முனைகளையும் நீங்கள் படத்தினுள் நுழையும் பொழுதிற்கு மட்டுமாவது மறந்திருக்கவேண்டும். தெருத் தாதிகள் (Street Nurses) எவ்வாறு இவ்வாறான வீடற்றவர்களையும், போதை மருந்து பழக்கத்திலுள்ளவர்களையும், பாலியல் தொழில் செய்பவர்களையும் சக மனிதர்களாய் நேசித்து எப்படி அவர்களின் சுகாதாரத்தை இயன்றளவு பராமரிக்க முயல்கின்றார்கள் என்பதையே இப்படம் காட்சிப்படுத்துகின்றது. இத் தெருத்தாதிகள் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களை எந்தப்பொழுதிலும் 'நாங்கள் நல்லவர்கள் X நீங்கள் கெட்டவர்கள்' என்ற மனோநிலையில் அணுகவேயில்லை. தங்களைப் போல ஒருவராகவே அவர்களையும் நினைத்து அவர்களின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்து, பாதுகாப்பான செக்ஸிற்கு கொண்டம்களை விநியோகிப்பவர்களாக, போதை மருந்து உட்கொள்ளும்போது பாதுகாப்பான ஊசிகளை, பிற உபகரணங்களைப் பாவிக்கச் சொல்லி சிநேகித பூர்வமாய் உரையாடுகின்றவர்களாய் -இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களை- அணுகுகின்றார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, இவர்கள இப்படிச் செய்வது, இன்னும் இவ்வாறான விடயங்களை செய்ய ஊக்குவிப்பதான ஒரு ஒரு பார்வையைத் தரச்செய்யக்கூடும். ஆனால் இது 'இனிதான உலகம் இனியில்லை' என்ற utopian கனவை உடைத்து யதார்த்தத்தைப் பார்க்குகின்ற பிறகான நவீனத்துவ நிலையென எடுத்துக்கொள்ளவேண்டும். இத்தெருவோர தாதிகள் எவருக்கும் ஆலோசனைகள் சொல்லி தாங்கள் உயர்ந்த இடத்திலிருப்பதாய்க் காட்டிக்கொள்ளவில்லை (அதை இவ்வாறான விளிம்பு நிலைமனிதர்கள் கேட்டுக்கொள்ளப்போவதுமில்லை என்பதே யதார்த்தமுமாகும்). ஆனால் அதேசமயம் கட்டுப்பாடில்லாது போகும்போது அவர்களுக்கு விளையும் விபரீதங்களை போகின்றபோக்கில் அவர்களுக்கு உறைக்கின்றமாதிரிச் சொல்கின்றார்கள்.

(இத்திரைப்பட விழாவுக்கு ஐந்து தமிழ்ப் பெண் கவிதைகளின் குரல்களினூடாக வெளிவந்த Breasts என்ற பதினைந்துநிமிட விவரணப்படம் திரையிடப்ப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை)
படங்களுக்கு நன்றி: Regent Park Film Festival & Pathivukal
(...வளர்மதிக்கு)
7 comments:
விரிவான பகிர்வுக்கு நன்றி டிசே..
11/12/2008 01:15:00 PMஉங்கள் எண்ணங்கள் நியாமானதே.
11/12/2008 01:56:00 PMமற்றோரு நல்ல பதிவு.
மயிலாடுதுறை சிவா...
டி.ஜே.தமிழ்ச் சூழலையும்,
11/12/2008 03:55:00 PMபிறமொழிச் சூழலையும் இணைத்துப் பார்க்கத் தக்கபடி
இரு திரைப்பட விழாக்களினதும் படங்களையும்
உடைத்துப் பார்த்துள்ளீர்கள்,நன்று!
ஸ்ரீரங்கன்
nice post bro!
11/12/2008 05:25:00 PM--fd
நன்றி நண்பர்களே.
11/13/2008 09:10:00 AMபகிர்வுக்கு நன்றி அண்ணன்...
11/13/2008 10:08:00 AMவருகைக்கு நன்றி தமிழன். அண்ணன் எல்லாம் வேண்டாமே.
11/19/2008 10:27:00 AMPost a Comment