நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அ.முத்துலிங்கத்தின் உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்

Tuesday, March 24, 2009


'...இவ‌ன் பிற்கால‌த்தில் தேவார‌ம் பாடுவ‌தை நிறுத்திவிட்டு உதைப‌ந்தாட்ட‌த்தில் பிர‌ப‌ல்ய‌ம் அடைந்த‌வ‌ன். அவனுடைய இல‌ட்சிய‌ம் எல்லாம் எவ்வ‌ளவு ப‌ல‌ம் உண்டோ அவ்வ‌ள‌வையும் பிர‌யோகித்து ப‌ந்தை உய‌ர‌த்துக்கு அடிப்ப‌து. குறிப்பாக‌ அது சூரிய‌னிடம் போக‌ வேண்டும்; குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ம‌றைக்க‌ வேண்டும். பார்வையாள‌ர்க‌ள் எல்லாம் க‌ழுத்தை முறித்து இர‌ண்டு நிமிட‌ம் மேலே பார்க்க‌ வேண்டும். எதிர் சைட்டில் க‌விழ்த்து வைத்த‌ ப‌ வ‌டிவ‌த்தில் ஒரு கோல் போஸ்ட் இருப்ப‌தோ, அத‌ற்குள் ப‌ந்தை அடித்தால் ஒரு கோல் கிடைக்கும் என்ப‌தோ, கோல்க‌ளை எண்ணியே வெற்றி நிச்ச்யிக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தோ அவ‌னுக்கு பொருட்டில்லை. பந்து காலில்ப‌ட்டால் அது உய‌ர‌த்துக்கு எழும்ப‌வேண்டும் என்ப‌தே குறிக்கோள்.
(ப‌க்க‌ம் 45)


1.
எல்லோருக்கும் சொல்வ‌த‌ற்கு நிறைய‌க் க‌தைக‌ள் கைவ‌ச‌மிருக்கின்ற‌ன‌. அவ்வாறு த‌ம‌து க‌தைக‌ளை எழுத்தில் ப‌திவு செய்த‌வ‌ர்க‌ள் என்று பார்த்தால் அவ‌ர்க‌ள் மிக‌க்குறைவே. அந்த‌க் குறைவான‌வ‌ர்க‌ளிலும் நுட்ப‌மாக‌வும், சுவார‌சிய‌மாக‌வும் த‌ம் க‌தைக‌ளைப் ப‌கிர்ந்துகொண்டவ‌ர்க‌ளென்றால் இன்னும் மிக‌ச் சொற்ப‌மே. த‌மிழ்ச்சூழ‌லில் சாதார‌ணங்க‌ளின் க‌தையை அசாதார‌ணமாக்கிய‌ க‌தைசொல்லியாக‌ ம‌ட்டுமில்லாது, நாம் க‌ட‌ந்துவ‌ந்த‌/த‌வ‌ற‌விட்ட‌ எளிய‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌ அழ‌கிய‌லோடு ப‌திவுசெய்த‌வ‌ர்க‌ளில் முக்கியமான ஒருவ‌ர் அ.முத்துலிங்க‌ம். பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளின் எழுத்துக்க‌ளின் உள்ளே -உல‌ர்ந்துபோன‌ ந‌தியாய் வ‌ற‌ண்டுபோன‌- அங்கதத்தை மிக‌ முக்கிய‌ கூறாய் த‌ன் ப‌டைப்புக்க‌ளில் முன்னிலைப்ப‌டுத்திய‌வ‌ர் அ.முத்துலிங்க‌ம். இவ்வாறாக‌ அவ‌ர் ப‌டைப்புக்க‌ளில் ஊற்றெடுக்கும் ந‌கைச்சுவையும், எளிமையான‌ வார்த்தைக‌ளிலான‌ க‌தை சொல்ல‌லும், அள‌வுக்க‌திமான‌ வ‌ர்ண‌னையில்லாது ந‌றுக்கென்று ச‌ம்ப‌வ‌ங்க‌ளைக் க‌ட‌ந்துசெல்லலுமே அ.முத்துலிங்க‌த்திற்கு ப‌ர‌வ‌லான‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்டுவ‌ந்து சேர்த்துமிருக்கின்ற‌து. ஈழ‌ப்போர் உக்கிர‌ம‌டைய‌ முன்ன‌ரான‌ 83ற்கு முன் (70க‌ளில்) பொருளாதார‌ நிமித்த‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ அ.முத்துலிங்க‌த்தின் எழுத்து ந‌டைக்கு வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ப‌ணிபுரிநத‌/வாழ்ந்த‌ அனுப‌வ‌மும், அந்நாடுக‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லும் இன்னும் வ‌ள‌ஞ்சேர்ப்ப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌.

'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்' ஒரு நாவ‌லென‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டாலும், இஃதொரு புனைவு சேர்ந்தூட்ட‌ப்ப‌ட்ட‌ சுய‌ச‌ரிதைக்குறிப்புக‌ள் என்ப‌தை எளிதாக‌ ஒருவ‌ர் அடையாள‌ங்க‌ண்டுகொள்ள‌ முடியும். இந்நாவ‌ல் ஆர‌ம்பிப்ப‌த‌ற்கு முன்,
'இந்நாவ‌லில் இருப்ப‌து அத்த‌னையும் என் மூளையில் உதித்த‌ க‌ற்ப‌னையே. அதிலே நீங்க‌ள் ஏதாவ‌து உண்மையைக் க‌ண்டுபிடித்தால் அது த‌ற்செய‌லான‌து. அத‌ற்கு நான் பொறுப்பாக‌ மாட்டேன்' என்று வீணாக‌ ஒரு ப‌க்க‌த்தை அ.முத்துலிங்க‌ம் வீண‌டித்த‌ற்கு ப‌தில், இஃதொரு ஆட்டோ ‍ பிகச‌ன் (Auto-Fiction) என்று ஒற்றை வ‌ரியில் எழுதிவிட்டு ந‌க‌ர்ந்திருக்க‌லாம். மேலும் நாவ‌லென‌க் குறிப்பிட‌ப்ப‌டும் (உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்/ நாவ‌ல்/ அ.முத்துலிங்க‌ம்) ஒரு ப‌டைப்பில் 'உண்மை'க‌ளை வாச‌க‌ர் தேடக்கூடும் என்று அ.மு அஞ்சும‌ள‌வுக்கு வாச‌க‌ர் மீது அ.முவிற்கு ந‌ம்பிக்கையில்லையா என்ற‌ கேள்வியும் எழுகின்ற‌து.

ஒரு ப‌டைப்புக்குள் நுழைய‌முன்ன‌ர் இவ‌ற்றையெல்லாம் பார்க்க‌வேண்டுமா என்ற‌ அலுப்பு வாசிக்கும் ந‌ம‌க்கு ஏற்ப‌ட‌லாம். எவ்வாறு ஜெய‌மோக‌னின் ப‌டைப்புக்க‌ளுக்குள் போவ‌த‌ற்கு முன்ன‌ர், எப்ப‌டி அவ‌ர‌து முன்னுரைக‌ள் எம்மைச் சோர்வடையச் செய்யுமோ அவ்வாறே, இவ்வாறான‌ அதிக‌ப் பிர‌ச‌ங்க‌ங்க‌ளும் வாசிப்ப‌த‌ற்கு முன் இடையூறுக‌ளாய் விடுகின்ற‌ன‌. அநேக‌மாய் த‌மிழ்ச்சூழ‌லில் எழுதுகின்ற‌ ப‌டைப்பாளிக‌ள் எல்லோருமே, தம் படைப்புக்கள் தொகுப்பாய் ப‌திப்பிக்க‌ப்ப‌ட்ட‌பின் அது வாச‌க‌ர்க‌ளுக்குச் சொந்த‌மாகிவிடுகின்ற‌து என்ப‌தை மட்டும் அடிக்க‌டி நினைவூட்டிவிட்டு, அதேபோக்கில் வாச‌க‌ர்க‌ளையும் தாம் நினைப்ப‌து மாதிரியே வாசிக்க‌வேண்டும் என்றும் பாட‌சாலை ஆசிரிய‌ர்க‌ளைப் போல‌ அத‌ட்டுகின்ற‌ன‌ர்.


2.
'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்' யாழ்ப்பாண‌த்தில் (கொக்குவிலில்) ஆர‌ம்பித்து கொழும்புக்கு ந‌க‌ர்ந்து பிற‌கு ஆபிரிக்காக் க‌ண்டநாடுக‌ளான‌ சியரா லியோன், சோமாலியா, கென்யாவுக்கும், ஆசிய‌ க‌ண்ட‌ நாடுக‌ளான‌ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கும், பின்ன‌ர் வ‌ட‌ அமெரிக்காக் க‌ண்ட‌ நாடுக‌ளான‌ க‌ன‌டா, ஜ‌க்கிய‌ அமெரிக்காவென‌ ப‌ல‌வேறு நில‌ப்ப‌ர‌ப்புக‌ளை ஊடுருவிச் செல்கின்ற‌து. ஆர‌ம்ப‌த்திலிருந்தே க‌தைசொல்லியே எல்லாக் க‌தைக‌ளிலும் வ‌ருகின்றார். சில‌ இட‌ங்க‌ளில் அவ‌ரே ஒரு பாத்திர‌மாக‌வும், சில‌ இட‌ங்க‌ளில் அவ‌ர் ஒதுங்கி நின்று பிற‌ர‌து க‌தையைக் கூறுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். நாவ‌லென்ற‌ வ‌டிவ‌ம் குறித்து ப‌ல‌வேறு வித‌மான‌ நிலைப்பாடுக‌ள் இருக்கும்போது இஃதொரு நாவ‌ல் வ‌டிவ‌ததைச் சேர்ந்த‌தா இல்லையா என்ற‌ வாத‌ பிர‌திவாத‌ங்க‌ளை ஒதுக்கிவைத்துப் பார்த்தாலும், இந்நாவ‌ல் ப‌ல்வேறு சிறுக‌தைக‌ளைக் கொண்ட‌ ஒரு தொகுப்பு என்ற‌ எண்ண‌மே வாசிக்கும்போது வ‌ருகின்ற‌து. நாற்பத்தைந்து அத்தியாங்க‌ள் கொண்ட‌ ஒரு நாவ‌லாக‌ இது இருந்தாலும், ஒவ்வொரு அத்தியாங்க‌ளுக்கும் த‌லைப்பு இட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இன்றைய‌ நாவ‌ல் உல‌கில் இவ்வாறு ஒவ்வொரு அத்தியாங்க‌ளுக்கும் த‌லைப்பிட்டு வ‌ருவ‌து என்ப‌து மிக‌ அரிதே.

இவ‌ற்றையெல்லாம் த‌விர்த்து நாவ‌லுக்குள் நாம் நுழைந்தால் ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் வாசிப்ப‌வ‌ரை அவ‌ர்க‌ள் அறியாது சிரிக்க‌ வைப்ப‌த‌ற்கு அ.முத்துலிங்க‌த்திற்கு ஒரு ச‌ம்ப‌வ‌மோ, சில‌வேளைக‌ளில் சில‌ வ‌ரிக‌ளோ கூட‌ போத‌மான‌தாயிருக்கின்ற‌து. வாசிக்கும் நீங்க‌ள் இந்நாவ‌லை எத்த‌கைய‌ சூழ்நிலையில் விரித்து வாசிக்க‌த் தொட‌ங்கினாலும் உங்க‌ளைய‌றியாம‌லே சிரிக்க‌ வைத்துவிடும் நுட்ப‌த்தில்தான் அ.முத்துலிங்க‌த்தின் ப‌டைப்புல‌க‌ம் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்தாகிவிடுகின்ற‌து. முத‌ல் அத்தியாய‌த்தில் ந‌ல்லூர்
கோயில் திருவிழாவில் தொலைகின்ற‌ அம்மாவைப் ப‌ற்றிய‌ க‌தை, என‌க்கு சிறுவ‌ய‌தில் வாசித்த‌ முல்க்ராஜ் ஆனந்தனின் பெற்றோரைத் தொலைத்த‌ குழ‌ந்தையொன்றின் க‌தையை நினைவுப‌டுத்தினாலும், இவ்வாறான‌ விழாக்க‌ளில் குழ‌ந்தைக‌ள்/பெற்றோர் தொலைவ‌தும், க‌ண்டுபிடிக்க‌ப்ப‌டுவ‌துமென‌ -சொல‌வ‌த‌ற்கென‌- எல்லோரிட‌ம் நிறைய‌ச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌. முத‌ல் சில‌ அத்தியாங்க‌ள் அம்மா,அய்யா, அக்கா, ஆசிரிய‌ர், பாட‌சாலை போன்ற‌வ‌ற்றைச் சுற்றியும், கைவிசேட‌ம் பெறுத‌ல், போர்ததேங்காய் அடித்த‌ல் போன்ற‌ ஒர‌ள‌வு யாழ்ப்பாண‌த்துக்குரிய‌தான‌ ப‌ண்பாட்டுச் சூழ‌ல் ப‌ற்றியும் பேசுகின்ற‌ன‌.

அறுப‌துக‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌ எஸ்.பொவின் ச‌ட‌ங்கு, யாழ் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின் பாலிய‌ல் சார்ந்த‌ அவ‌திக‌ளை மிக‌ நுட்ப‌மாக‌ ப‌திவு செய்ததோடு, யாழ்ப்பாண‌ப் பெண்க‌ளின் சுய‌ இன்ப‌ம் காணுதல் குறித்தும் பேசியிருக்கின்ற‌து. அதேபோன்று அ.முத்துலிங்க‌த்தின் இந்நாவ‌லிலும் ஒரு அத்தியாய‌ம், ஐம்ப‌துக‌ளில் பாட‌சாலை விடுதிக‌ளிலிருந்த‌ ஆண்க‌ளுக்கிடையிலான‌ ஓரின‌ப்பால் உற‌வுக‌ளைப் ப‌ற்றி (ம‌றைமுக‌மாய்ப்) பேசுகின்ற‌து. ஒருவித‌ அக்க‌றையோடு அ.முத்துலிங்க‌ம் இதைப் ப‌திவுசெய்தாலும், எஸ்.பொ ச‌ட‌ங்கில் ப‌திவு செய்த‌தைப் போல‌வ‌ன்றி, இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தில் ஒரு வித‌ த‌ய‌க்க‌ம் அ.முவிற்கு அவ‌ர‌வ‌ள‌விலேயே இருக்கின்ற‌து என்ப‌து போல‌, வாசிக்கும்போது தோன்றுகின்ற‌து. ஆனால் இந்த‌ விடுதிக‌ளில் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌தையும், ப‌ல‌ பாட‌சாலைக‌ளில் வேறு நாடுக‌ளிலிருந்து (இந்தியா, சிங்க‌ப்பூர்) வ‌ந்து ஆசிரிய‌ர்க‌ள் க‌ற்பித்த‌தையும் அறியும்போது -போரோடு பிற‌ந்த‌ த‌லைமுறையைச் சேர்ந்த‌- எங்க‌ளுக்கு மிக‌ப்பெரும் க‌ன‌வாக‌த்தான் தெரிகின்றது.

மிக‌ இள‌ வ‌ய‌திலேயே (13) க‌தைசொல்லியின் தாயார் இற‌ந்துவிட‌ மூத்த‌ அண்ணாவின் அர‌வ‌ணைப்பிலேயே இவ‌ர‌து குடும்ப‌ம் வ‌ள‌ர்கின்ற‌து. க‌தைசொல்லியின் அண்ணா கொழும்பில் இருக்கும்போது அவ‌ருக்கு வ‌ருகின்ற‌ பெய‌ர் தெரியாத‌ நோயிற்கு, எந்த‌ச் சிகிச்சையும் ப‌ய‌ன‌ளிக்காது அவ‌ர் த‌ன‌து வாழ்வின் இறுதிக்க‌ட்ட‌த்தை அடைகின்ற‌வேளையில், யாரோ த‌ற்செய‌லாய் வ‌ரும் ஒருவரின் அறிவுரையில் அண்ணா ப‌டுக்கும் க‌ட்டிலோடு ஒரு ஆடு க‌ட்டிவிட‌ப்ப‌டுகின்ற‌து. அந்த ஆடு அண்ணாவின் அறைக்குள்ளேயே ஒன்றாக இருந்து சில‌ வார‌ங்க‌ளில் இற‌ந்துபோகையில் எவ‌ராலும் குண‌ப்ப‌டுத்த‌ முடியாத‌ அண்ணாவின் நோய் குண‌மடைகின்ற‌து. அந்த‌ ஆடுதான் நோயை த‌ன்னோடு எடுத்துச் சென்றிருக்கும் என்றும், ஆனால் பிற்கால‌த்தில் அந்த‌ ஆட்டைப் ப‌ற்றிக் கேட்டால் முக‌ம் இருள‌டைகின்ற‌ அண்ணாவின் பாத்திர‌மும் மாய‌ ய‌தார்த்த‌ வ‌கைக்குள் அட‌ங்க‌க்கூடிய‌து. அதேபோன்று பின் அத்தியாய‌ங்க‌ளில் பொஸ்ர‌னில் க‌தைசொல்லியின் மக‌ள் நீண்ட‌ கால‌த்திற்கு க‌ருத்த‌ரிக்காது இருக்கும்போது, அமெரிக்காவின் பூர்வீக‌க்குடிக‌ளின் ந‌ம்பிக்கைப்ப‌டி குதிரைக்கு உண‌வூட்டினால் பெண் க‌ர்ப்ப‌ம‌டைவாள் என்ப‌த‌ற்கிண‌ங்க‌, க‌தைசொல்லியுட‌ன் சென்று ம‌க‌ள் உண‌வூட்டுவ‌தும், பின்ன‌ர் ம‌க‌ளுக்கு ஒரு ம‌க‌ள் பிற‌க்கும்போது எப்போது ம‌க‌ள் க‌ருவுற்றிருப்பார் என்று பின்னோக்கிப் பார்க்கும்போது, கிட்ட‌த்த‌ட்ட‌ குதிரைக்கு உண‌வூட்டிய‌ கால‌த்தில்... என்று க‌தைசொல்லி விய‌ப்ப‌தும் ப‌குத்த‌றிவுக்கு அப்பால் ம‌ன‌ம் நீட்சிய‌டைந்து விய‌ந்துகொள்கின்ற‌ ப‌குதிக‌ளாகும்.

1958ம் ஆண்டு ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌க்க‌ல‌வ‌ர‌த்திலிருந்து கொழும்பிலிருந்து
த‌ப்பி க‌ப்பலில் க‌தை சொல்லி யாழ் செல்கின்றார் . பிற‌கு மீண்டும் ஒரு வ‌ருட‌த்தில் கொழும்புக்குத் திரும்பி, கொழும்புப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌டிக்கும் கால‌த்தில் ந‌ண்ப‌னுக்கு 'காத‌ல் துரோகி'யாவ‌தும், பின்ன‌ர் சாட்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ன்ட் ஆகி சிங்க‌ள‌வ‌ர்கள் நிர்வ‌கிக்கும் நிறுவ‌ன‌த்தில் -க‌ண‌க்காய்வாள‌ராக‌ப் ப‌ணிபுரிகையில்- ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சுவார‌சிய‌மான‌வை. இல‌ங்கையில் இருக்கும்போது நிறுவ‌ன‌ங்க‌ளில் க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளில் ந‌ட‌க்கும் தகிடுதித்த‌ங்கள் போன்று ஆபிரிக்கா நாடுக‌ளிலும் ந‌ட‌க்கும்போது அவ‌ற்றை எப்ப‌டி எதிர்கொள்கின்றார் என்ப‌தும், க‌ட‌ந்துபோகின்றார் என்ப‌தையும்... அவ‌ற்றுக்கூடாக‌ அம்ம‌க்க‌ளின் குடும்ப‌ விழுமிய‌ங்க‌ளையும், ப‌ண்பாட்டுச் சூழ‌ல்க‌ளையும் சொல்ல‌ முய‌ல்வ‌துமென‌ நாவ‌லின் ந‌டுப்பாக‌ங்க‌ள் ந‌க‌ர்கின்ற‌ன‌. பெரும் நிறுவ‌ன‌ங்க‌ளில் இருக்கும் அதிகாரிக‌ள் இவ்வாறான‌ திருட்டுக‌ளைச் செய்யும்போது, வ‌ங்கிக‌ளைக் கொள்ளைய‌டிக்கும் கொள்ளைய‌ர்க‌ளை விட‌ வ‌ங்கிக‌ளை நிர்வ‌கிப்ப‌வ‌ர்க‌ளே அதிக‌ம் கொள்ளைய‌டிப்ப‌வ‌ர்க‌ள் என்றொரு க‌விஞ‌ர் ஏதோவொரு புர‌ட்சிச்சூழ‌லில் சொன்ன‌து நினைவில் வ‌ந்துபோகின்ற‌து.

3.
நாவ‌லின் பிற்ப‌குதி கதைசொல்லி எப்ப‌டி க‌ன‌டாவிற்கு வ‌ந்து இன்னொரு புதிய‌ சூழ‌லுக்குத் த‌ன்னை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்றார் என்ப‌தையும், ஐக்கிய‌ அமெரிக்காவிலுள்ள‌ த‌ன‌து ம‌க‌ள்/பேரப்பிள்ளை என்ப‌வ‌ர்க‌ளினூடான‌ அனுப‌வ‌ங்க‌ளையும் பேசுகின்ற‌ன‌. யாழில் அத்தியாவ‌சிய‌மான‌ சைக்கிள், இங்கே பொழுதுபோக்கிற்காய் ஆகிப்போன‌து ப‌ற்றிப் பேசும் ஓர் அத்தியாய‌த்தில், க‌தை சொல்லி சைக்கிளை எப்ப‌டி ஓட‌ப்ப‌ழ‌கினார் என்ற‌ ப‌குதி மிகுந்த‌ ந‌கைச்சுவையான‌து. இந்த‌ அத்தியாய‌ம், வாசிக்கும் எல்லோரையும் அவ‌ர‌வ‌ர் தாங்க‌ள் சைக்கிளை முத‌ன் முத‌லாய் ஓடிப்போன‌ கால‌த்திற்கு இழுத்துக்கொண்டு செல்லும் த‌ன்மை வாய்ந‌த்து.

ஓரிட‌த்தில், க‌தைசொல்லி த‌ன‌து ட‌ய‌ரியில் இற‌ந்துபோன‌ ந‌ண்ப‌ர்க‌ளின் தொலைபேசி இல‌க்க‌ங்க‌ளை அழிக்கும்போது, இப்போது உயிருட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளை விட‌ உயிருட‌ன் இல்லாத‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையே அதிக‌மாய் இருக்கின்ற‌து என்கின்ற‌போது ச‌ட்டென்று உண‌ர்வு நிலை மாறி மிக‌ப்பெரும் வெறுமை ந‌ம்மையும் தொற்றிக்கொள்கின்ற‌து. அதேபோன்று இன்னொரு அத்தியாய‌த்தில் புத்த‌க‌ வாசிப்பைப் ப‌ற்றிக்குறிப்பிடும்போது, க‌தைசொல்லி த‌ன‌க்கு மிக‌ப்பிடித்த‌மாய் ஏதாவ‌து வ‌ரிக‌ளை யாராவ‌து எழுதியிருந்தால் த‌ன‌க்கு கையால் த‌லையில் அடிக்கும் ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌து என்று சொல்லி, இப்போது 'என்னைய‌றியாம‌ல் த‌லையில் அடிப்ப‌தும் அதிக‌மாகிக்கொண்டு வ‌ருகின்ற‌து. என்னுடைய‌ எஞ்சிய‌ வாழ்நாள் ம‌ட்டும் குறைந்து போகின்ற‌து' என்று முடிக்கும்போது ம‌ன‌தொரு க‌ண‌ம் க‌ன‌த்து ந‌க‌ர்கின்ற‌து.

ந‌கைச்சுவையும் -அவ்வ‌ப்போது எள்ள‌லும்- இந்நாவ‌ல் முழுதும் தொட‌ர்ந்து ஒரு ந‌தியாக‌ ஓடி வாசிப்ப‌வ‌ர்க‌ளைக் குளிர‌வைத்துக்கொண்டேயிருக்கிற‌து. இந்நாவ‌லில் வ‌ரும் க‌தா மாந்த‌ர்களின் ப‌ல‌வேறுவித‌மான‌ அழுக்காறுக‌ளையும், க‌ச‌டுக‌ளையும் இந்த‌ப் ப‌கிடி ஆறு அள்ளியெறிந்துகொண்டு போவ‌தால் அநேக‌மான‌ ம‌னித‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் இய‌ல்புக‌ளோடு நேசிக்க‌ முடிகின்ற‌து. அ.முத்துலிங்க‌த்தின் க‌தையுல‌கில் வெறுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் என்று எவ‌ருமே இருப்ப‌தில்லை. இங்கும் கொழும்பில் க‌தைசொல்லி த‌ன‌து வேலை நேர்காண‌ல் ஒன்றுக்குப் போவ‌த‌ற்காய் ம‌டித்து வைத்திருந்த‌ புதிய ஆடைக‌ளை, இர‌வில் த‌ங்கி நின்ற‌ ந‌ண்ப‌ன் விடிகாலையில் அப‌க‌ரித்துச் செல்லும்போது ம‌ட்டுமே கொஞ்ச‌ம் கோப‌ம் காட்ட‌ப்ப‌டுகின்ற‌தே தவிர‌ குறிப்பிடும்ப‌டியாக‌ வேறெந்த‌ வெறுப்பின் சாய‌ல் கூட‌ இந்நாவ‌லில் இல்லை. அதேபோன்று கு.வ‌ன்னிய‌குல‌சிங்க‌ம் த‌மிழ் கொங்கிர‌சுக்காய் கொக்குவிலில் போட்டியிட்ட‌போது, தேர்த‌லில் வாக்குப் போடுவ‌தை உற்சாக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காய் ‍-அணிந்து செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே‍ நகைக‌ளைக் கொடுக்க‌- அதை அப்ப‌டியே அப‌க‌ரித்து சுன்னாக‌த்தில் ரெயினேறி கொழும்பில் ம‌க‌னோடு சேர்கின்ற‌ திர‌விய‌ம் மாமி ஒரு க‌ள்ளியாக‌க் கூட‌ச் சித்த‌ரிக்க‌ப்ப‌டாம‌ல் -க‌ள‌வைக் கூட‌ பிடிப‌டாம‌ல் செய்வ‌து என்றறியாத‌ அவர‌து அப்பாவித்த‌ன‌மே- வாசிப்ப‌வ‌ர்க‌ளிடையே ப‌டிய‌விட‌ப்ப‌டுகின்ற‌து. க‌ள்ள‌ம் பிடிப‌ட்டு பொலிஸ் அவ‌ரைக் கொழும்பு ஜெயிலுக்கு கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது கூட‌, அவ‌ர் கேட்கின்ற‌ கேள்வி, 'கு.வ‌ன்னிய‌குல‌சிங்க‌ம் தேர்த‌லில் வெற்றி பெற்றுவிட்டாரா?' என்ப‌துதான். அந்த‌க்கேள்வியோடு அந்த‌ அத்தியாய‌ம் முடிகின்ற‌போது க‌ள‌வு என்ற‌ விட‌ய‌மே அங்கே காணாம‌ற்போய்விடுகின்ற‌து.

இவ்வாறான‌ மிக‌ நுட்ப‌மாய் க‌தையை எப்ப‌டிககொண்டு போவ‌து குறித்தும், எப்ப‌டி முடிப்ப‌து ப‌ற்றியும் அறிந்த‌ ப‌டைப்பாளியான‌ அ.முத்துலிங்க‌ம் சில‌ இட‌ங்க‌ளில் முக்கிய‌மான‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌ -மிக‌ எளிமையாக‌- மெல்லிய‌ ந‌கைச்சுவையால் -க‌ட‌ந்துவிடச் செய்கின்றார். முக்கிய‌மாய் எல்லோரைப் போல‌வும் அம்மாவில் அதிக‌ பாச‌ம் கொள்கின்ற‌ க‌தைசொல்லி, அவ‌ர‌து ப‌தின்மூன்றாவ‌து வ‌ய‌தில் ஏற்ப‌டுகின்ற‌ அம்மாவின் இழ‌ப்பை மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோய்விடுகின்றார். அதேபோன்று 1958 க‌ல‌வ‌ர‌த்தின்போது கொழும்பில் அக‌தியாக்க‌ப்ப‌டுகின்ற‌ க‌தைசொல்லி அந்த‌ அத்தியாய‌த்தோடு சிங்க‌ள‌ ‍த‌மிழ் பிர‌ச்சினையை ம‌ற‌ந்து போய்விடுகின்றார். மீண்டும் இறுதி அத்தியாய‌ங்க‌ளில் 'சுவ‌ர்க‌ளுட‌ன் பேசும் ம‌னித‌ர்' ப‌குதியில் ம‌ட்டுமே மொழி,ஈழ‌ம் ப‌ற்றி நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌ (ஒரு மொழி நீண்ட‌ கால‌மாய் உயிருட‌ன் இருக்க‌வேண்டுமாயின், அந்த‌ மொழியை முன்நிலைப்ப‌டுத்தும் ஒரு அர‌சு வேண்டுமென்ப‌து இங்கே வ‌லியுறுத்த‌ப்ப‌டுகின்ற‌து). 1983 இன‌ப்ப‌டுகொலையின்போது, க‌தைசொல்லி ஈழ‌த்திலிருந்து ஏற்கன‌வே புல‌ம்பெய‌ர்ந்த‌தால் அத‌ன்பின்ன‌ரான‌ கால‌ங்க‌ளை எழுதுத‌ல் க‌டின‌மென‌ எடுத்துக்கொண்டாலும், க‌தைசொல்லி நேர‌டியாக‌ப் பாதிப்புற்ற‌ 58 க‌ல‌வ‌ர‌ம் ப‌ற்றிக்கூட‌ ம‌ன‌தில் ப‌தியும் ப‌டியாக‌ எழுதிவிட‌வில்லை என்ப‌தை ஒரு ப‌லவீன‌மாக‌த்தான் கொள்ள‌வேண்டும்.


அதேபோன்று இந்நாவ‌லில் 'வ‌ளைக்காப்புக்காய் வீடு திரும்பும் ம‌னைவி' (ப 108) குறித்தெல்லாம் வ‌ருகின்ற‌து. ஈழ‌த்தில் வ‌ழ‌க‌த்தில் இல்லாத‌ சொற்றொட‌ர்க‌ள்/வ‌ழ‌க்குக‌ள் வ‌ருவ‌த‌ற்கு அ.முத்துலிங்க‌ம் தன‌து பிர‌தியைத் திருத்த‌க்கொடுத்த‌, த‌மிழ‌க‌த்து 'நாளொன்றுக்கு 2000 சொற்க‌ள் எழுதும்' ந‌ண்ப‌ரோ அவ‌ர‌து துணையோ கார‌ணமாயிருக்கூடும். மேலும் 'கேர்ண‌ல்' (ப 77) என்றெல்லாம் திரிச‌ங்கு நிலையில் சொற்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. ஈழ‌த்து வ‌ழ‌க்கில் 'கேண‌ல்' என்றோ அல்ல‌து ஆக‌க்குறைந்து இந்திய‌ வ‌ழ‌க்கில் 'க‌ர்ன‌ல்' என்றாவ‌து எழுதாம‌ல், இப்ப‌டி வ‌ருவ‌து அச்சுறுத்துகின்ற‌து. இன்னொரு இட‌த்தில் த‌ன‌து த‌ம்பியை வாச‌க‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும்போது 'இவ‌ன் எங்க‌ள் வீட்டின் கோமாளி' என்று அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். நான‌றிந்த‌வ‌ரை ஈழ‌த்தில், குடும்ப‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் த‌ம் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளை 'கோமாளி' என்று அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தை அறிந்திலேன். இவ‌ன் 'ந‌ல்ல‌ ப‌கிடிக்கார‌ன்' அல்ல‌து 'ச‌ரியான‌ குழ‌ப்ப‌டிக்கார‌ன்' என்று அழைக்கப்ப‌டுவார்க‌ளே த‌விர‌ 'கோமாளி' என்ற‌ வ‌ழ‌க்கு இருப்ப‌தாய் நான‌றியேன். அதேபோன்று க‌ம்ப‌ராமாய‌ண‌த்தில் ஆறுக‌ளைப் ப‌ற்றிப் பேசும் ஆற்றுப்ப‌ட‌லம் என்று ஓரிட‌த்தில் வ‌ருகின்ற‌து. ஆனால் ஆற்றுப்ப‌ட‌ல‌ம் என்ப‌து ஆறுக‌ளைப் ப‌ற்றிப் பேசுவ‌த‌ல்ல‌. அது ஒரு புல‌வ‌ன் தான் அர‌ச‌னொருவ‌னிட‌ம் பெற்ற‌ பொற்கிழியைப் போல‌ இன்னொரு புல‌வ‌னையும் போய்ப் பெறுக‌ என்று ஆற்றுப்ப‌டுத்துவ‌தையே ஆற்றுப்ப‌ட‌ல‌த்தில் உள்ள‌ட‌க்குவதாய் ‍‍ கூட‌வே என்னோடு இந்நாவ‌லை வாசித்த‌ ந‌ண்ப‌ர் குறிப்பிட்டார் (என‌து க‌ம்ப‌ராமாய‌ண‌ அறிவு, அத‌ன் சில‌ ப‌குதிக‌ளை என்னுடைய‌ ப‌த்தாம் வ‌குப்போடு வாசித்த‌து ம‌ட்டுமே).

4.
சிறுக‌தைக‌ளைப் போல‌வ‌ன்றி நாவ‌லுக்கு நில‌ப்ப‌ர‌ப்பு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. உல‌கில் இன்று விய‌ந்தோந்த‌ப்ப‌டும் எந்த‌ நாவ‌லை எடுத்தாலும், அவ‌ற்றில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ளைப் போல‌வே க‌தை நிக‌ழ்கின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் முக்கிய‌த்துவ‌ம் உடைய‌தாக‌வே இருக்கின்ற‌ன‌. நாம் வாழ்விலே காண‌வே முடியாத‌ பிர‌தேச‌ங்க‌ளில் எல்லாம் நாமும் ந‌டமாடிக்கொண்டிருப்ப‌தான‌ எண்ண‌த்தை எத்த‌னையோ ப‌டைப்புக்கள் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆனால் அ.முத்துலிங்க‌ம் இந்நாவ‌லில் ஆக‌க்குறைந்து அவ‌ருக்கு அதிக‌ம் ப‌ரிட்ச‌ய‌மான‌ அந்த‌க்கால‌த்து யாழ்ப்பாண‌த்தைக்கூட‌ கூட‌ அவ்வ‌ள‌வு விரிவாக‌ காட்சிப்ப‌டுத்த‌வில்லை. கொக்குவில் ப‌குதியில் இருக்கும் ஒழுங்கைக‌ளையும், புகையிலை அவிக்கப்படும் குடிசைகளுக்கும் அப்பால் அவ‌ர‌து ஊர் கூட‌ விரிவாகச் சித்தரிக்க‌ப்ப‌ட‌வில்லை. அது கூட‌ ப‌ர‌வாயில்லை. யாழ்ப்பாண‌த்தவ‌ர்க‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் முக்கிய‌ கூறாக‌ இருந்த‌ சாதி ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் கூட‌ இந்நாவ‌லில் இல்லை. 80க‌ளின் பின்பான‌ ஈழ‌ ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளின் எழுச்சியின் பின், சாதி ஒரு ம‌றைபொருளாக‌ இருந்த‌து என்று ஒர‌ள‌வுக்கு ஒப்புக்கொண்டாலும், 50/60க‌ளில் சாதிய‌ ஒடுக்குமுறை மிக‌க் கொடூர‌மாக‌வும், அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெடித்துக் கிள‌ம்பியும் இருந்திருக்கின்ற‌ன‌. ஆக‌க்குறைந்த‌து. பாட‌சாலையில் ஆசிரிய‌ர்க‌ளால்,சில‌ மாண‌வ‌ர்க‌ள் வெறுக்க‌ப்ப‌டுவதையும் ந‌க்க‌ல‌டிக்க‌ப்ப‌டுவ‌தையும் குறிப்பிடுகின்ற‌ அ.முத்துலிங்க‌ம், யாழ் சூழ‌லின் அத‌ன் உண்மையான‌ கார‌ண‌மாக‌ பெரும்பான்மையாக‌ அம்மாண‌வ‌ர்க‌ளின் சாதியே கார‌ண‌ம் என்ப‌தையாவ‌து ஒளிவும‌றைவின்றி நேர‌டியாக‌க் கூறியிருக்க‌லாம். யாழ்ப்பாண‌த்த‌வ‌ர்க‌ளின் ஒவ்வொரு சின்ன‌ச் சின்ன‌ விட‌ய‌த்திலும் சாதி முக்கிய‌ கூறாய் உட்பொதிந்திருப்ப‌தை எவ‌ராலும் எளிதாக உய்த்துண‌ர‌முடியும். இவ‌ற்றையெல்லாம் எழுதாமல் ஒருவ‌ர் யாழ்ச் சூழ‌லை ப‌திவு செய்ய‌ முடியாதா? என்று நாம் கேள்வி எழுப்ப‌லாம். ஆனால் இவ‌ற்றுக்கெல்லாம் நாம் விரும்பியோ/விரும்பாம‌லோ சாட்சியாக‌ இருந்திருக்கின்றோம் என்றால், இன்றைய‌ கால‌த்திலாவ‌து இவ‌ற்றை விம‌ர்சிக்காது நாசூக்காய்த் த‌விர்த்து நாம் யாழ்ப்பாண‌ம் ப‌ற்றிக் க‌தை சொன்னால், அது யாருக்காய், யாரைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள் என்ற‌ கேள்வியை எழுப்புத‌லும் த‌விர்க்க‌ முடியாதே இருக்கின்ற‌து.

இவ்வாறானவ‌ற்றோடு அ.முத்துலிங்க‌த்தின் நாவ‌ல் என‌ச்சொல்ல‌ப்ப‌டும் இதை வாசிப்ப‌வ‌ர்க‌ள், 75 சிறுக‌தைக‌ள் உள்ள‌ட‌க்கிய‌ அ.முத்துலிங்க‌த்தின் சிறுக‌தைக‌ள் (2004) என்ற‌ தொகுப்பை ஏற்க‌ன‌வே வாசித்திருந்தால், இத‌ன் உள்ள‌ட‌க்க‌த்தில் பெரிய‌ மாற்ற‌ம் எதையும் எதிர்பார்க்க‌முடியாது என்ப‌தே மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌மாக‌க் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. சிறுக‌தைக‌ளைத் தொட‌ர்ந்து எழுதி வ‌ரும் அ.முத்துலிங்க‌ம் ஒரு நாவலை எழுதியிருக்கின்றார் என்று உற்சாக‌த்தோடு வாசிக்க‌ வ‌ரும் ஒரு வாச‌க‌ருக்கு இந்நாவ‌லில் வ‌டிவ‌த்திலோ, க‌தை சொல்லும் முறையிலே எத்த‌கைய‌ புதிய‌ வளர்ச்சியையும் கண்டறிய் முடியாது இருக்கின்ற‌து. அத்தோடு புன்ன‌கைக்க‌ வைப்ப‌தால் ம‌ட்டுமே ஒரு ப‌டைப்பு சிற‌ந்த ப‌டைப்பாக‌ உல‌கில் கொண்டாட‌ப்ப‌டுகின்ற‌தா என்று பார்த்தால் அவ்வாறிருப்ப‌வை மிக‌ அரிதே என்ப‌தே ய‌தார்த்த‌மாயிருக்கிற‌து. ஈழ‌ப்ப‌டைப்பாளிக‌ளில் பிற‌ரைப் போல‌வ‌ன்றி ப‌ல‌வேறு நாடுக‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் வாழ‌வும், ப‌ல்வேறு உல‌க‌ப்ப‌டைப்பாளிக‌ளை நிறைய‌ வாசிக்க‌வும், ச‌ந்திக்க‌வும் செய்கின்ற‌ அ.முத்துலிங்க‌த்தால் ஏன் இன்னும் ம‌ன‌தை நெருடுகின்ற‌ ப‌டைப்புத்த‌ர‌ முடிய‌வில்லை என்ற‌ வினா அ.முத்துலிங்க‌த்தை வாசிக்கும் ப‌ல‌ வாச‌க‌ர்க‌ளுக்கு எழ‌வே செய்யும். அ.முத்துலிங்க‌ம் ந‌ன்கு ப‌ண்ப‌ட்ட‌ ம‌ண்ணை, வ‌ளமான‌ உர‌த்துட‌ன், வீட்டுக்குள்ளேயே ஒரு பூந்தொட்டியிலே ப‌ல‌ செடிக‌ளை நாட்டித் த‌ந்திருக்கின்றாரே த‌விர‌, க‌ட்ட‌ற்ற‌ எல்லைக‌ளுட‌ன், காடொன்றில் எல்லாக் கால‌நிலைக‌ளுட‌னும் போராடி ஆழ‌ வேர் ப‌ர‌ப்பி கிளை ப‌ர‌ப்புகின்ற‌ ஒரு விருட்ச‌த்தை எப்போது த‌ருவார் என்ப‌தை -இந்த‌ நாவ‌லில் அல்ல‌- இனி வ‌ருங்கால‌ங்கால‌ங்க‌ளில்தான் எதிர்பார்க்க‌ வேண்டியிருக்கின்ற‌து.

என்றாலும் இப்போது என்ன‌, இந்நாவலில் க‌தை சொல்லி ஓரிட‌த்தில் கூறுவார், த‌ன‌க்கு க‌ல்கியை சிறுவ‌ய‌தில் வாசித்த‌போது க‌ல்கியைப் போல‌ எழுத‌வேண்டும் என்றும், பின்ன‌ர் ஜேம்ஸ் ஜோய்ஸை வாசித்த‌போது ஜோய்ஸை எழுத‌வேண்டும் என்றும், இன்னும் கொஞ்ச‌க்கால‌ம் செல்ல‌ புதுமைப்பித்த‌ன் ஆக்கிர‌மிக்க‌ புதுமைப்பித்த‌னைப்போல‌ எழுத‌வேண்டும் என்றும் ஆசைப்ப‌ட்ட‌தாக‌வும் குறிப்பிடுவார். அதைப் போல‌த்தான் அ.முத்துலிங்க‌த்தின் ப‌டைப்புக்க‌ளை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் (என்னைப் போன்ற‌) ஒரு சில‌ராவ‌து அ.முத்துலிங்க‌த்தைப் போல‌ சொற் சிக்க‌ன‌மாக‌வும், எளிமையாக‌வும் அதே நேர‌த்தில் மெல்லிய‌ புன்ன‌கை வ‌ர‌ச்செய்வ‌துமாய் எழுதிவிட‌வேண்டுமென‌ மான‌சீக‌மாய் நினைக்க‌ச்செய்வார்க‌ள் என்ப‌தும் இயல்பே.

14 comments:

அருண்மொழிவர்மன் said...

//என‌க்கு சிறுவ‌ய‌தில் வாசித்த‌ முல்க்ராஜின்(?) பெற்றோரைத் தொலைத்த‌ குழ‌ந்தையொன்றின் க‌தையை நினைவுப‌டுத்தினாலும்//

அது எமது 8ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கதை. மூலக்கதை முல்க்ராஜ் ஆனந்த். அந்த கதையை இடையில் நிறுத்தி அதன் தொடர்ச்சியை எம்மை எழுத சொல்லியிருப்பர்.

காணாமல் போன குழந்தை என்று தலைப்பு

3/24/2009 05:56:00 PM
அருண்மொழிவர்மன் said...

//யாழ்ப்பாண‌த்தவ‌ர்க‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் முக்கிய‌ கூறாக‌ இருந்த‌ சாதி ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் கூட‌ இந்நாவ‌லில் இல்லை........//

இந்த வாக்கியத்தை தொடர்ந்த வசனக்களில் நீங்கள் சொல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. (இந்த புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. இங்கே கிடைக்கின்றதா...?, ஆனால் அப்படி எழுதப்படாமல் இருக்க அதிகம் சாத்தியம் உள்ளது என்று அறிவேன்). அண்மையில் யாழ்ப்பாணாத்தவரின் சாதித்திமிர் பற்றி ஒரு பதிவெழுதியபோது தான் யாழ்ப்பாணாத்தவரின் சாதித்துவம் சார்ந்த மனப்பாங்கை இன்னும் புரிந்துகொண்டேன். பின்னூட்டங்களிலும், நேரடியாக பேசியபோதும் கதைத்த பலரும் இயன்றவரை மழுப்பலான பதிலையே தந்தனர். அதிலும் முக்கியமாக சொல்லப்பட்ட குற்றாச்சாட்டு, இருக்குது ஆனால் குறைவாக. உண்மை என்னவென்றால், தாம் செய்யும் கொடுமைகளை உணரக்கூட முடியாத அளவுக்கு அவர்களை சாதித்திமிர் பீடித்துவைத்துள்ளது என்பதே. அன்றைய நாட்களை பற்றி எழுதும்போது இந்தச் சாதிக்கொடுமைகளை மெள்ளக்கடந்துபோக காரணமும் இதுவென்றுதான் நினைக்கின்றேன். தண்ணீர் என்று டானியல் எழுதிய ஒரு கதை, வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். எனது 10வது வயதில் அதை புரியாமல் வாசித்தேன். (அதை வாசித்துவிட்டு, வப்பாட்டி என்றால் என்ன என்று ஒரு ஆசிரியரிடம் கேட்க, அவர் எனது அப்பம்மாவிடம் போட்டுக்கொடுத்து திட்டுவாங்கியிருக்கின்றேன்). அப்போதே சலனங்களை ஏற்படுத்திய புத்தகம். பின்னர் கணேசலிங்கனும் சில புத்தகங்களில் ஆழமாக சொல்லியிருக்கின்றார். அதிகம் மொழி ஆளுமை கொண்ட அ.மு. இது பற்றி எழுதியிருந்தால் இன்னும் பரவலாக கவனிக்கப்பட்டிருக்கும்

3/24/2009 06:09:00 PM
Anonymous said...

நினைவுப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அருண். இப்போது அந்த‌க்க‌தை ப‌ற்றி இணைய‌த்தில் யாராவ‌து எழுதியிருக்கின்றார்க‌ளோ என்று தேடிய‌போது பாவண்ண‌ன், 'என‌க்குப் பிடித்த‌ க‌தைக‌ள்' தொட‌ரில் இது குறித்து எழுதியிருக்கின்றார் என்ப‌தை அறிய‌ முடிந்த‌து.

3/25/2009 09:22:00 AM
Anonymous said...

அருண், 'உண்மை க‌ல‌ந்து நாட்குறிப்புக‌ள்' கிடைக்குமா என்று முத‌லில் 'கால‌ம்' செல்வ‌த்திட‌ம் விசாரித்திருந்தேன். மே மாத‌ம‌ள‌வில்தான் த‌ன‌க்குக் கிடைக்கும் என்றார். த‌ற்செய‌லாய் வேறொரு ந‌ண்ப‌ர் கூறித்தான் முருக‌ன் புத்த‌க‌சாலையில் இருப்ப‌த‌றிந்து வாங்கினேன் (ஆனால் க‌டையில் இருப்ப‌வ‌ருக்கு இப்ப‌டியொரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரிய‌வில்லை; நானாக‌த் தேடித்தான் எடுக்க‌வேண்டியிருந்த‌து).

சாதி என்ற‌ விட‌ய‌த்தைக் க்ட‌ந்துசெல்வ‌த‌ற்கு எந்த‌த் த‌த்துவ‌/அமைப்பு இன்ன‌பிற‌ என்ப‌வை எந்த‌க்கால‌த்திலும் உத‌வாது என்ப‌து நான் என்ன‌ள‌வில் க‌ண்ட‌றிந்த‌ விட‌ய‌ம். நாமாய் எம்ம‌ள‌வில் இதை உன்னிப்பாய் அவ‌தானித்தும் திற‌ந்த‌ ம‌ன‌த்தோடு உரையாட‌வும் முடியுமெனில் ஒர‌ள‌வு க‌ட‌ந்து செல்ல‌ முடியும். உங்க‌ள‌து 'வெண்ணிலா க‌ப‌டிக் குழு'வை முன்வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவு கூட‌, நீங்க‌ள் உங்க‌ள‌வில் எந்த‌த் த‌த்துவ‌த்தையோ/அமைப்பையோ சாராது எப்ப‌டிச் சாதியைக் க‌ட‌ப்ப‌து என்ற‌வ‌கையில் எழுதியிருந்த‌தாய் நினைவு. நீங்க‌ள் உட்ப‌ட‌ இப்ப‌டி சாதி என்ற‌ விட‌ய‌த்தை விம‌ர்ச‌ன‌ங்க‌ளோடு க‌ட‌க்க‌ விரும்பும் ந‌ண்ப‌ர்க‌ள் ஒரு ப‌த்துபேரையாவ‌து என‌க்குத் தெரியும் என்ப‌து என்ன‌ள‌வில் உவ‌ப்பான‌ ஒரு விட‌யமாக‌வே இருக்கிற‌து. இதை எழுதும்போது ஒரு விட‌ய‌ம் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகின்ற‌து. நாலைந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன், இங்குள்ள‌ எல்லாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் அமைப்புக்க‌ளும் இணைந்து ஒரு விழாவை ந‌ட‌த்தினார்க‌ள். க‌விதை என்ற‌ ஒன்றை வாசித்து பார்வையாள‌ர்க‌ளைக் கொடுமைப்ப‌டுத்த‌ என்னையும் அழைத்திருந்தார்க‌ள். அதில் ஒரு ந‌ண்ப‌ன் இய‌க்கிய‌ நாட‌க‌த்தில் நேரடியாக‌வே புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளின் சாதித்திமிரைச் சாடியிருந்தான். த‌ன‌து ஊர் ம‌க்க‌ளின் சாதித்திமிரைக் காட்டிய‌தால் ந‌ல்ல‌வேளையாக‌ ந‌ண்ப‌ன் த‌ப்பித்தான், இல்லாவிட்டால் எங்க‌டை ஊரைப் ப‌ற்றிக் க‌தைக்க‌ உன‌க்கு என்ன‌ த‌குதியிருக்கு என்று ஊர்சங்க‌ங்க‌ள் கிள‌ர்ந்து எழும்பியிருக்காதா என்ன‌? அந்நாடக‌த்தப் பார்த்த‌ ப‌ல‌ர் இருக்கைக‌ளில் இருந்து நெளிய‌த்தொட‌ங்கியிருந்தார்க‌ள், எத‌ற்கு இதையெல்லாம் இப்ப‌டி வெளிச்ச‌ம் போட்டுக்காட்ட‌வென்று. என‌க்கென்ன‌வோ அப்போது தோன்றிய‌து என்ன‌வென்றால், நாம் சாதி என்ற‌ விட‌ய‌த்தைத் தாண்டிவிட்டு வ‌ந்திருந்தால் இப்ப‌டி நெளிந்திருக்க‌வே தேவையில்லை. எம‌க்குத் தேவையில்லாத‌ ஒருவிட‌ய‌மென்று 'சும‌மா' பார்த்துவிட்டு வ‌ந்திருப்போம். ஆக‌ எவ‌ர் ம‌ன‌தினுள்ளே சாதி என்ற‌ பிரக்ஞை இருந்த‌தோ அவ‌ர்க‌ளின் முக‌மூடிக‌ள் விய‌ர்க்க‌த்தான் செய்திருக்கும். ப‌ல‌ர் நாட‌க‌த்தின் இடையில் அர‌ங்கை விட்டு வெளியே போய்விட்டார்க‌ள். ஆனால் இதே ஆசாமிக‌ள், த‌மிழ்த்திரைப்ப‌ட‌ங்க‌ளில் க‌தாநாய‌க‌ர்க‌ள் பெண்க‌ள் ஒடுங்கியிருத்த‌லே, த‌மிழ்ப்பெண்க‌ளின் க‌லாசார‌ம் என்று காட்டினால் விசில‌டித்து த‌ங்க‌ள் வீர‌த்தைக் காட்டுவார்க‌ளேய‌ன்றி, வெளிந‌ட‌ப்புச் செய்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கப்போவ‌தில்லை. சாதி வெறிய‌ர்க‌ள் சாதி குறித்துப் பேசுவ‌த‌ற்கும், சாதியைக் கார‌ண‌ங்காட்டி ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாதி குறித்துப் பேசுவ‌த‌ற்கும் வேறுபாடுக‌ள் இருக்கிற‌து. அதைப் புரிந்துகொண்டால் எவ‌ருடைய‌ குர‌ல்க‌ளைக் கேட்க‌வேண்டும்/ எவ‌ருடைய‌ குர‌ல்க‌ளைப் புற‌க்க‌ணிக்க‌வேண்டும் என்ற‌ புரித‌ல் இய‌ல்பாக‌வே வ‌ந்துவிடும் என‌ நினைக்கிறேன்.

டானிய‌ல், செ.க‌ணேச‌லிங்க‌ன் ப‌டைப்புக்க‌ளை உங்க‌ளைப் போல‌வே என்னுடைய‌ 12, 13 வ‌யதுக‌ளில் வாசித்திருக்கின்றேன். அப்போது அவ‌ற்றை வாசிக்கும்போது அந்த‌க்க‌தைக‌ள் எப்போதோ நெடுங்கால‌த்தின் முன் ந‌ட‌ந்த‌து என்று நினைக்கும்ப‌டியாக‌ போர் எங்க‌ளைச் ‍சாதி போன்ற‌ விட‌ய‌ங்க‌ள் குறித்து விரிவாக‌ யோசிக்க‌முடியாது‍ துர‌த்தத் தொட‌ங்கியிருந்த‌து. அண்மையில் 'அடையாளம்' சாதிக்கோடு உரையாடிய‌போது, டானிய‌லின் சிறுக‌தைக‌ள், க‌ட்டுரைக‌ள்(?) என்று புதுத் தொகுப்பு ஒன்று வ‌ந்திருப்ப‌தாய்க் கூறினார். செ.க‌ணேச‌லிங்க‌னை இன்னொருமுறை வாசிக்க‌வேண்டும். எவ‌ற்றை அவ‌ர் சொல்வ‌தில் இன்றைய‌ கால‌த்துக்கு எடுத்துக்கொள்ள‌லாம்/வில‌த்திக்கொள்ள‌லாம் என்ப‌த‌ற்காக‌வேனும் செ.க‌ணேச‌லிங்க‌னை இன்னொருமுறை வாசிக்க‌வேண்டும்.

3/26/2009 10:00:00 AM
Anonymous said...

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

உ.க.நா.குறிப்புக்கள் மீதான உங்கள் பார்வை சரியாகவே இருக்கிறது. இருந்தும் சிலவிஷயங்களில் சிலகோணங்கள் வேறுமாதியிருக்கக்கூடிய வாய்ப்புக்களையும் பகிர்வது என் நோக்கம். இதை நாவல் என்பதிலுள்ள தயக்கம். ஒரே நிலப்பரப்பில் நிகழ்வுறும் நிகழ்வுகளின் கோர்வையாக இருத்தல்வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டாலும் கதைசொல்லியின் இயற்கை பல்வேறு நாடுகளுக்கும் செல்வதாக இருப்பதால் ஒரு கதைசொல்லிக்குப்பல்வேறு நாடுகளில் ஏற்படும் அனுபவங்களின் தொகுப்பையும் இனிமேல் நாவல் என்போமே. என்னதான் குறைந்துவிடப்போகிறது?
இப்படிப்பார்த்தால் கி.ராஜநாராயணனின் கோபலகிராமத்தையையும், கோபல்லபுரத்து மக்களையும்கூட நாவலென்றுதானே சொல்கிறார்கள். அது ஒரே புலம் என்பதைத்தவிர அதில் வரும் பாத்திரங்களே ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வெவ்வேறு பேர்வழிகளாக இருப்பார்கள். அங்கே அவர்களுக்குள் ஒருவரையொருவருக்குத் தெரிந்திருக்குமென்று விவாதிக்கவும் முடியாது.
பாமாவின் ’கருக்கும்’ கூட அப்படித்தான். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தொடர்பில்லாத வெவ்வேறு சம்பவங்களின் குவிப்பு அது. ஆனாலும் பிறசமூகமக்களின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்ட/கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை கிறிஸ்தவ பறைச்சேரி மக்களின் அவலவாழ்வை தமிழில் விபரிப்பதால் முதல் பெண்-தலித்திய நாவல் என்று போற்றப்படுகிறது.
புவிக்கோளத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனமக்களோடு பணிபுரியும் வாய்ப்புக்களையும் அனுபவங்களைப் பெற்ற இன்னும் எத்தனையோ தமிழர்கள் நம்மிடையே இருக்கக்கூடும். ஆனாலும் அவற்றையெல்லாம் தொகுக்கவும் படிப்போரைப்புன்னகை ததும்பவைக்கும்படியான ஒரு நடையில் பதிவு செய்யவும் ஒரு அ.முத்துலிங்கத்தினால்தானே முடிந்திருக்கிறது? ஆகையால் இது தமிழுக்கு நல்வரவேதான்.

அடுத்தது இலங்கையில் வழக்கிலிலாத வார்த்தைகள் பற்றியது:
”மைசூர், பயத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, துவரம்பருப்புகளை எப்படிச்சமைப்பதென்று
வளைகாப்புக்கு நான் போகும்போது அம்மா படிப்பிப்பதாகச்சொல்லியிருக்கிறா.”
என்பது கதைசொல்லியின் வார்த்தையே அல்ல. அது அவர் மனைவி அடிக்கும் பகிடி வளைகாப்பு வழக்கம் அங்கு உண்டோ இல்லையோ அவருக்கு அது புரிகிறது.
இது இப்படி எழுதியதாய் வைப்போமே. அவர் மனைவி கேட்கிறார்...............
”என்ன்ப்பா... நான்கேட்ட வைரக்கல்லு அட்டியலை எனக்கு எப்பதான் வாங்கித்தரப்போறியள்?”
” எப்படியும் அறுபதாங்கல்யாணாத்துக்கு முன்னே தந்திடுவேன் கண்ணா”
என்று கதைசொல்லி பதிலிறுத்திருந்தால் ஒருவர் ” அவர் எப்படிச்சொல்லலாம்....... பார்ப்பனரும், செட்டிகளும், முதலிகளும், நம்பூதிரிகளும் தென்னிந்தியாவில் செய்யும் சஷ்டியப்ப்பூர்த்தி ஈழத்தமிழ்ப்பெண்ணுக்கு எப்படிபுரியுமென்று வாதிடுதல் சரியல்ல. வழக்கத்தில் இருப்பதுவும் அதைப்பற்றித்தெரிந்திருப்பதுவும் இருவேறு விடயங்கள். அவர்களிடையே அது புரிகிறது. அவ்வளவுதான்.
அதுபோலவே என்னுடையதம்பிதான் எங்கள்வீட்டுக்கோமாளி என்பதுவும்.
கோமாளி கந்தையா என்றுகூட ஒருவர் ஊரில் இருந்தார். எங்களூரின் அந்த வார்த்தையின் பிரயோகம் இன்னும் உண்டு. உங்களிடத்தில் ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். இலங்கையிலேயே இல்லையென்று சொல்வது சரியல்ல.

ஒரு சிறுசம்பவம். என்படைப்பொன்றில் ஒரு சிறுவன் குளிக்கவே மாட்டான். அவன் தாயார் (நிஜத்தில் என் அம்மாவேதான்) ”நரிக்குறவன் மாதிரிக்கிடக்குபோய் குளியண்டா நாயே” என்று சத்தம்போடுவார். அதை விமர்சித்த திரு.சிவசேகரம் இந்த இடத்தில் என்னை வெகுவாகப்பிடித்துக்கொண்டார். அவர் நரிக்குறவரை எங்கே பார்த்தார்?என்பது இவரின் வாதம். அம்மா ஒரு சினிமாவிலோ அல்லது அவர் படித்த கல்கி, கலைமகள், விகடனிலோ பார்த்திருக்கலாமல்லவா? எனவே சந்தர்ப்பங்கள் யாருக்கும் எவ்வாறும் அமையலாம்.
இது கேர்ணல் என்பதுக்கும் பொருந்தும். கேர்ணல் என்பது ஆங்கிலத்தில் விநோதமான அட்சரங்களைக்கொண்ட Colonel ஒரு வார்த்தை. காரணம் Colonello என்னும் பிரெஞ்சு வார்த்தையின் மருவல் இது. பாருங்களேன் தமிழக சிறு பத்திரிகைகளில் John என்பதை ழான் என்கிறார்கள். ஆனால் ஜூலியட்டை ழூலியட் என்பதில்லை. எங்கேபோய் முட்டுவதாம்?
சுவருடன்பேசும் மனிதர் “ ஒரு மொழியின் வளர்ச்சியென்பது அதைப்பேசும் மக்களின் எண்ணிக்கையில் தங்கியிருக்கவில்லை. உங்கள் நாட்டு சிங்களமொழியின் 50 வருட வளர்ச்சியுடன் தமிழின் வளர்ச்சியை ஒப்பிட்டுப்பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கே புரியும்” என்றபோதும்
(அப்படிப்பார்த்தால் சிங்களம்தான் ஓங்கி வளர்ந்திருக்கவேண்டும். இன்னும் எழுத்துச்சீர்திருத்தமே அங்கில்லை என்பதே அங்குள்ள நடைமுறை.)
ஜேசு பேசியதால் அமீனியமொழி சிறப்பானது என்கிற தொனியில் அவர் சொல்லும்போதும் எனக்கும் சற்றே நெருடல் ஏற்பட்டது. நீங்கள் அதைக்கண்டு கொள்ளவில்லை.
இன்னும் இறந்துபோனவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அடிக்க நேர்கையில் அவர்கள் இறந்தகணத்தைவிடவும் அதிக வலியால் நான் துடித்ததுண்டு. அதைப்படிக்கையில் இது நான் எழுதியிருக்கவேண்டிய வரிகள் என்றுதான் நினைத்தேன்.
கற்றுக்கொள்ள்வதில் என்றுமே சளைக்காதவர் என் நண்பர். இந்த அனுபவங்களையெல்லாம் ஒருங்குகுவித்துக்கொண்டு காடொன்றில் எல்லாக் கால‌நிலைக‌ளுட‌னும் போராடி ஆழ‌ வேர் ப‌ர‌ப்பி கிளை ப‌ர‌ப்புகின்ற‌ ஒரு ஆலம்விருட்ச‌த்தை நிச்சயம் அவர் த‌ருவார்.

Karunaharamoorthy, Berlin

3/30/2009 12:27:00 PM
Anonymous said...

//தமிழக சிறு பத்திரிகைகளில் John என்பதை ழான் என்கிறார்கள். ஆனால் ஜூலியட்டை ழூலியட் என்பதில்லை. எங்கேபோய் முட்டுவதாம்?//

நண்பரே, எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது அது என அவதானிக்கமுடிந்தால் முட்டிக்கொள்ளத் தேவையில்லை. காப்பியை குழம்பி என்கிறார்கள் என்று வேடிக்கையாகச் சொல்வது போலிருக்கிறது இது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது ஜான் (John) என்றும் ஜூலியட் (Juliet) என்றும்தான் தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். ஃபிரெஞ்சு இலக்கியங்களிலிருந்து மொழிபெயர்க்கும்போது அவ்வுச்சரிப்புக்கு நெருக்கமாக ழான் (Jean) என்று மொழிபெயர்க்கிறார்கள் - அதே மாதிரி எனில் ஹூலியேத் (Juliet) என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும். சார்க்கோஸி (Sarkozy) என்று எழுதாமல் சாஹ்க்குஸீ என்றுதான் எழுதவேண்டும். Seamus Heaneyயிலுள்ளதை சீமஸ் என்று எழுதுவதற்கு பதில் சரியாக ஷேமஸ் என்றுதான் எழுதவேண்டும். பிரிட்டிஷ் தீவுகளுக்கு அப்பால் ஜெர்மானிய மொழிகள் தவிர ட் என்ற சப்தம் பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் கிடையாது. Fact என்பதை ஒரு ஸ்லாவியரை சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள் - ஃபக்த் என்பார் - ஆங்கில fucked போன்ற உச்சரிப்புடன். கருணாகரமூர்த்தி பெர்லின் என்று நீங்கள் எழுதுவதைக்கூட பெர்லினின் டொய்ச்சு உச்சரிப்பு வழக்கம் ப்யேலின் என்றுதான் சொல்ல வேண்டும் - வெர்னெர் (Werner) என்று தமிழில் எழுதுவது ஜெர்மானிய உச்சரிப்பில் வ்யேனெ, இஞ்செ அல்லது இங்கெ (Inge) என்றிருப்பது அசலில் இங்ங என்று இருப்பது போல என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஏதோவொரு கிராமத்திலிருந்தோ சிறு நகரத்திலிருந்தோ உலக இலக்கியம் குறித்து எழுதும் தமிழக சிறு பத்திரிகையாளர்கள் தங்களால் இயன்றளவு முயல்கிறார்கள் - இந்தப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்; காலப்போக்கில் சரியாகிவிடும்.

4/02/2009 02:41:00 PM
DJ said...

அன்பின் க‌ருணாக‌ர‌மூர்த்தி,
உ.க‌.குறிப்புக்கான‌ உங்க‌ளின் பார்வையை முன்வைத்த‌மைக்கு முத‌லில் ந‌ன்றி. எப்போதும் ஒரேமாதிரியான‌ ம‌னோநிலை இருப்ப‌தில்லை என்ப‌தால் தாம‌தமான‌ ப‌திலுக்கு ம‌ன்னிப்பும்.

/நாவல் என்பதிலுள்ள தயக்கம். ஒரே நிலப்பரப்பில் நிகழ்வுறும் நிகழ்வுகளின் கோர்வையாக இருத்தல்வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டாலும் கதைசொல்லியின் இயற்கை பல்வேறு நாடுகளுக்கும் செல்வதாக இருப்பதால் ஒரு கதைசொல்லிக்குப்பல்வேறு நாடுகளில் ஏற்படும் அனுபவங்களின் தொகுப்பையும் இனிமேல் நாவல் என்போமே. என்னதான் குறைந்துவிடப்போகிறது?
இப்படிப்பார்த்தால் கி.ராஜநாராயணனின் கோபலகிராமத்தையையும், கோபல்லபுரத்து மக்களையும்கூட நாவலென்றுதானே சொல்கிறார்கள். அது ஒரே புலம் என்பதைத்தவிர அதில் வரும் பாத்திரங்களே ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வெவ்வேறு பேர்வழிகளாக இருப்பார்கள். அங்கே அவர்களுக்குள் ஒருவரையொருவருக்குத் தெரிந்திருக்குமென்று விவாதிக்கவும் முடியாது.
பாமாவின் ’கருக்கும்’ கூட அப்படித்தான். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தொடர்பில்லாத வெவ்வேறு சம்பவங்களின் குவிப்பு அது. ஆனாலும் பிறசமூகமக்களின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்ட/கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை கிறிஸ்தவ பறைச்சேரி மக்களின் அவலவாழ்வை தமிழில் விபரிப்பதால் முதல் பெண்-தலித்திய நாவல் என்று போற்றப்படுகிறது.
புவிக்கோளத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனமக்களோடு பணிபுரியும் வாய்ப்புக்களையும் அனுபவங்களைப் பெற்ற இன்னும் எத்தனையோ தமிழர்கள் நம்மிடையே இருக்கக்கூடும். ஆனாலும் அவற்றையெல்லாம் தொகுக்கவும் படிப்போரைப்புன்னகை ததும்பவைக்கும்படியான ஒரு நடையில் பதிவு செய்யவும் ஒரு அ.முத்துலிங்கத்தினால்தானே முடிந்திருக்கிறது? ஆகையால் இது தமிழுக்கு நல்வரவேதான்./

நீங்க‌ள் மேலே குறிப்பிடுவ‌துபோல‌, நாவ‌ல் என்ப‌தை நிச்ச‌ய‌மான‌ ஒரு வ‌ரைய‌றைக்குள் அட‌க்கிவிட‌ முடியாது என்ப‌து உண்மையே. ப‌ல்வேறு வ‌டிவ‌ங்க‌ளில், ப‌ல்வேறு உத்திக‌ளுட‌ன் எத்த‌னையோ ப‌டைப்புக்க‌ள் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌ என்கின்ற‌போது இதை நாவ‌லென்று ஒருவ‌ர் எடுத்துக்கொண்டால் அவ‌ர‌து க‌ருத்தை ம‌றுக்க‌முடியாதுதான்., இந்நாவ‌லின் சில‌ ப‌குதிக‌ள் முற்றுமுழுதாக‌ க‌ட்டுரைத் த‌ன்மையுட‌ய‌தாக‌வும் இருக்கிற‌து. மைக்க‌ல் ஒண்டாச்சி போன்றோரின் நாவ‌ல்க‌ளில் இவ்வாறான‌ க‌ட்டுரைத்த‌ன்மை ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளில் நிறைந்து கிடக்கும். ஆக‌வே இவ்வாறான‌ கார‌ண‌ங்க‌ளை முன்வைத்து, நான் அ.முவின் உ.க‌.குறிப்புக‌ள் நாவ‌லா என்று கேள்வியை எழுப்ப‌வில்லை.

அ.மு ஏற்க‌ன‌வே எழுதிய‌ தொகுப்புக்க‌ளை வைத்தே என‌து வாசிப்பை முன்வைத்திருக்கின்றேன்.
நீங்க‌ள் அ.முவின், அ.முத்துலிங்க‌ம் க‌தைக‌ள் என்ற‌ தொகுப்பை ஏற்க‌ன‌வே வாசித்திருப்பீர்க‌ள். அது ஒரு சிறுக‌தைத் தொகுதி என‌க் கூற‌ப்ப‌ட்ட‌து. உ.க‌.குறிப்புக‌ள் ஒரு நாவ‌லென‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. உங்க‌ளால் இந்த‌ இர‌ண்டு தொகுப்புக்குமான‌ பாரிய‌ வித்தியாச‌ங்க‌ள் எத‌னையும் குறிப்பிட்டுச் சொல்ல‌ முடிகிற‌தா? அ.முவின் படைப்புக்க‌ளுக்கு வெளியில் சென்று எதையும் (நாவ‌லா/இல்லையாவென்று) தேட‌வில்லை. அவ‌ர் ஏற்க‌ன‌வே எழுதிய‌ பிர‌திக‌ளை முன்வைத்தே என‌து கேள்வியை எழுப்பியிருக்கின்றேன். ம‌ற்றும்ப‌டி என‌க்கொரு வாசிப்பு இருப்ப‌தைப் போல‌, உங்க‌ளுக்கொரு வாசிப்பு இருப்ப‌தையும் ம‌றுக்க‌ப்போவ‌தில்லை.

................

/அடுத்தது இலங்கையில் வழக்கிலிலாத வார்த்தைகள் பற்றியது:
”மைசூர், பயத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, துவரம்பருப்புகளை எப்படிச்சமைப்பதென்று
வளைகாப்புக்கு நான் போகும்போது அம்மா படிப்பிப்பதாகச்சொல்லியிருக்கிறா.”
என்பது கதைசொல்லியின் வார்த்தையே அல்ல. அது அவர் மனைவி அடிக்கும் பகிடி வளைகாப்பு வழக்கம் அங்கு உண்டோ இல்லையோ அவருக்கு அது புரிகிறது.
இது இப்படி எழுதியதாய் வைப்போமே. அவர் மனைவி கேட்கிறார்...............
”என்ன்ப்பா... நான்கேட்ட வைரக்கல்லு அட்டியலை எனக்கு எப்பதான் வாங்கித்தரப்போறியள்?”
” எப்படியும் அறுபதாங்கல்யாணாத்துக்கு முன்னே தந்திடுவேன் கண்ணா”
என்று கதைசொல்லி பதிலிறுத்திருந்தால் ஒருவர் ” அவர் எப்படிச்சொல்லலாம்....... பார்ப்பனரும், செட்டிகளும், முதலிகளும், நம்பூதிரிகளும் தென்னிந்தியாவில் செய்யும் சஷ்டியப்ப்பூர்த்தி ஈழத்தமிழ்ப்பெண்ணுக்கு எப்படிபுரியுமென்று வாதிடுதல் சரியல்ல. வழக்கத்தில் இருப்பதுவும் அதைப்பற்றித்தெரிந்திருப்பதுவும் இருவேறு விடயங்கள். அவர்களிடையே அது புரிகிறது. அவ்வளவுதான்.
அதுபோலவே என்னுடையதம்பிதான் எங்கள்வீட்டுக்கோமாளி என்பதுவும்.
கோமாளி கந்தையா என்றுகூட ஒருவர் ஊரில் இருந்தார். எங்களூரின் அந்த வார்த்தையின் பிரயோகம் இன்னும் உண்டு. உங்களிடத்தில் ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். இலங்கையிலேயே இல்லையென்று சொல்வது சரியல்ல./

நீங்க‌ள் இந்த‌ப்பகுதியில் வைத்திருக்கும் குறிப்புக‌ளை ஏற்றுக்கொள்கின்றேன். உங்க‌ளை மாதிரியே இந்த‌ப் ப‌திவை எழுதுவ‌த‌ற்கு முன் ஒரு ந‌ண்ப‌ரோடு உரையாடிக்கொண்டிருந்த‌போதும், இது (வ‌ளைகாப்பு விட‌ய‌ம்) க‌தை சொல்லியின் கூற்றாக‌ வ‌ர‌வில்லையென‌க் குறிப்பிட்டிருந்தார். உங்க‌ள‌தும், (ந‌ண்ப‌ர‌தும்) க‌ருத்துக்க‌ளை ஏற்றுக்கொள்கின்றேன்.

நிற்க‌, இந்த‌ நாவ‌லை வாசிக்க‌ முன்ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ளுடான‌ ஒரு சுவார‌சியமான‌ விவாத‌த்தில், யாழ்ப்பாண‌த்தில் திரும‌ண‌த்தின்பின் அதிக‌மாய், ஆண்க‌ள் (த‌மிழ‌க‌ம் போல‌ல்லாது)மண‌ம்க‌ள் வீட்டிலேயே த‌ங்குவ‌தாக‌வும், ம‌ண‌மாகும் பெண் அவ்வாறு தாய் வீட்டிலேயே த‌ங்குவ‌தால் மாமியார்Xம‌ரும‌கள் பிர‌ச்சினைக‌ள் குறைவாக‌ இருந்திருக்க‌லாமென்றும் விவாதித்திருந்தோம். ப‌தின்ம‌த்திலேயே யாழை விட்டு வெளியேறிய‌தால் இதுப‌ற்றிய‌ என‌து அறித‌ல் மிக‌க்குறைவே. உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் இவைப‌ற்றி அறிந்திருந்தால் ப‌கிர‌த்தாருங்க‌ள்.
.......

ஒரு மொழி வாழ்வ‌த‌ற்கு த‌னிநாடு அவ‌சியமா என்ப‌து உரையாட‌லுக்குரிய‌ ஒரு விட‌ய‌ம். இல‌ங்கையின் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளில் (முக்கியமாய் க‌லைத்துறையில்) ப‌ல்வேறு புதிய‌ பாட‌த்திட்ட‌ங்க‌ள் ஆங்கில‌த்திலும், சிங்க‌ள‌த்திலும் க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அவ்வாறு சில‌ க‌லைப்பாட‌ங்க‌ள் சில‌வேளைக‌ளில் ஆங்கில‌த்தில் க‌ற்பிக்க‌ப்ப‌டாது த‌னியே சிங்க‌ள‌த்தில் க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. என‌க்குத் தெரிந்த‌ ந‌ண்ப‌ருக்கு சிங்க‌ள‌ம் தெரிந்த‌தால் அவ‌ர் அந்த‌ சிங்க‌ள‌ வ‌குப்புக‌ளுக்கு சென்று க‌ற்க‌க்கூடிய‌தாக‌விருக்கிற‌து. சிங்க‌ள‌ம் தெரியாத‌ ஒரு த‌மிழ் மாண‌வ‌ருக்கு என்ன‌ நிக‌ழும் என்றும் யோசித்துப் பார்க்க‌லாம். ம‌ற்ற‌து யாழ் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் போன்ற‌வ‌ற்றில் ப‌ல‌ புதிய‌ துறைக‌ள் (சிங்க‌ள‌ மொழியில்) ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போன்று தொட‌ங்காம‌லே இருக்கின்ற‌ன‌). மொழி த‌ன‌க்குரிய‌ கால‌த்தோடு புதிய‌ பாய்ச்ச‌ல்க‌ளை நிக‌ழ்த்தாவிட்டால் தேங்கிப் போய்விடும் ஆப‌த்து உண்ட‌ல்ல‌வா?

மொழிபெய‌ர்ப்புக‌ள் குறித்து அநாம‌தேய‌மாக‌ வ‌ந்து க‌ருத்துக்கூறிய‌ ந‌ண்ப‌ரின் க‌ருத்துக்க‌ள் என‌க்கு உட‌ன்ப‌டான‌வை.

ம‌ற்ற‌ப‌டி, உங்க‌ளைப் போல‌வே, நானும் ஒரு 'ஆல‌ம‌ர‌த்தை' அ.முத்துலிங்க‌த்திட‌மிருந்து எதிர்பார்க்கின்றேன்.

4/03/2009 11:47:00 AM
தமிழன்-கறுப்பி... said...

நான் இன்னமும் இவருடைய கதைகள் வாசிக்கவில்லை என்றல்லவா நினைத்தேன் சில சிறுகதைகளை வாசித்திருக்கிறென் என்று இப்பொழுது நினைவுக்கு வருகிறது...

நீங்கள் சொன்ன அந்த களவு பற்றிய கதை எனக்கு நினைவில் இருக்கிறது ஆகவே நான் முத்துலிங்கம் சிறுகதைகள் படித்திருக்கிறேன்..

பகிர்வுக்கு நன்றி அண்ணன்...!

4/13/2009 04:45:00 PM
DJ said...

த‌மிழ‌ன்-க‌றுப்பி,
இந்த‌ 'நாவ‌லில்'வ‌ரும் ஆக‌க்குறைந்த‌து ப‌த்து அத்தியாய‌ங்க‌ளாவ‌து சிறுக‌தைக‌ள் என்ற‌ள‌வில் ஏற்க‌ன‌வே ப‌ல்வேறு ச‌ஞ்சிகைக‌ளில் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

ம‌ற்ற‌து, அ.முத்துலிங்க‌த்தின் பிற‌ ப‌டைப்புக்க‌ளை வாசிக்க‌வேண்டுமென்றால் நூல‌க‌ம் நெற்றுக்குச் சென்று வாசிக்க‌லாம்.
http://noolaham.net/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

4/14/2009 08:49:00 AM
தமிழன்-கறுப்பி... said...

சாதியக்கூறுகளை வியாக்கியானங்கள் இல்லாமல் கடந்து போக முடிவதில்லை அண்ணன், நான் கடைசியாக ஊரில் இருந்த நாட்களிலும் முன்பைப்போல தொட்டதுக்கெல்லாம் என்றில்லாவிட்டாலும் அது இருக்கத்தான் செய்கிறது.

யாழ்ப்பாணத்து ஆண்களுடைய என்பதிலும் வடமராட்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்ததாக நானறிந்திருக்கிறேன் எங்கள் காலத்தில் அது இல்லாமல் அல்லது குறைந்து போயிருந்தது எனலாம்.

இது பற்றிய சில சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்...

சிறுகதைகள் பற்றிய தகவலுக்கு நன்றி.

4/14/2009 09:56:00 AM
Karunaharamoorthy said...

அன்பு டி.ஜே,
இன்னும் சில விஷயங்கள் சொல்ல விருப்பம். பனுவல்களாக நானும் இராமாயணத்தைப் படித்ததில்லை.(ஆனால் ஆசையுண்டு) ஆற்றுப்படலம் பற்றிப்பேச எனக்கும் இலக்கியத்தகுதி போதாது. அவரே சொல்வதைத் தருகிறேன்.
/அதுபோல ஆற்றுப்படலம் வேறு, ஆற்றுப்படை வேறு. கம்பராமாயணத்தை திறந்தால் முதல் வருவது ஆற்றுப் படலம். சரயு நதியை கம்பர் ஆசைதீர வர்ணிக்கிறார்.
ஆங்கில டிக்சனரியில் colonel உச்சரிப்பு கேர்ணல் என்றுதான் இருக்கும். நாட்டூக்கூத்தில் கோமாளிப்பாத்திரம் உண்டு. அம்மா டேய் கோமாளி என்றுகூப்பிடுவார். இந்த வழக்கு எல்லாம் வீட்டுக்கு வீடு மாறுபடும். அம்மா வட்டணை என்று ஒரூ சோல்லு பாவிப்பா. அடுத்த வீட்டில்கூட அது விளங்காது. ஆகவே இதுதான் சரி என்று ஒரூவர் சொல்லமுடியாது./

எஸ்.பொவின் ’சடங்கு’ யாழ்ப்பாணத்துப் பெண்களின் சுய இன்பத்தைப் பற்றிப்பேசுகிறது என்று நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என் ஞாபகம் இருக்கும் வரையில் மனைவியைப்பிரிந்து கொழும்பில் வாழநேரும் ஒருவர் (வேணுமென்றால்) காமத்தால் உந்தப்பட்டு யாழ்ப்பாணம் செல்கிறார். ஆனால் அவருக்கு மனைவியுடன் காமம் துய்க்கவேண்டிய ’பிறைவேசி’ அயலில் நடைபெறும் ஒரு சமத்தியச்சடங்கால் கிடையாமையால் போக மிகுந்த ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்புகிறார்.
இது ஒரு சிறுகதைக்கேயுரிய ஒரு சிறிய தீம். ஆனால் எஸ்.பொ தன் சாமர்த்தியத்தால் அதை ஒரு நாவலாக நீட்டியிருந்தார். இன்னும் தலைமைப்பாத்திரத்தின் சொந்த மகளே சடங்காகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென்று சுமார் 20 வருஷங்களுக்கு முன் நான் படித்தபோது நினைத்ததாக ஒரு ஞாபகம் இன்னும் இருக்கிறது. தவிர சத்தியமாக எந்தப் பெண்ணாவது அதில் சுயவின்பம் துய்ப்பதாக சத்தியமாக எனக்கு ஞாபகம்
இல்லை.
15 வருஷங்களாக தொரண்டோவில் வாழும் அ. முத்துலிங்கத்துடன் கூடப்படித்த அவரது ஊரவர் ஒருவருக்கு அ.முவும் அங்கேதான் வாழுகிறார் என்னும் விஷயம்
போன கிழமை நான் சொல்லித்தான் தெரியவந்தது.
’கறுப்பி’ சமகால இலக்கியத்தில் இவ்வளவுகாலம் குப்பை கொட்டிக்கொண்டிருந்தும் அ. முவை நான் வாசித்திருக்கிறேனோ/ இல்லையோ/ வாசித்திருக்கிறேன் என்றவிதங்களில் அபிநயத்திருப்பது கொஞ்சம் மிகை.
பொ.கருணாகரமூர்த்தி. பெர்லின்

4/22/2009 11:07:00 AM
DJ said...

அன்பின் க‌ருணாக‌ர‌மூர்த்தி,
தொட‌ர்ச்சியான‌ உரையாட‌லுக்கு முத‌லில் ந‌ன்றி.

/***/ என்ப‌த‌ற்குள் வ‌ருவ‌து அ.முத்துலிங்க‌ம் உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்டு கூறிய‌து/எழுதிய‌து என்றே ந‌ம்புகின்றேன். அத‌ன‌டிப்ப‌டையில் சில‌தைச் சொல்ல‌ப் பிரிய‌ப்ப‌டுகின்றேன்.

(1) ஆற்றுப்ப‌ட‌ல‌ம், ஆற்றுப்ப‌டை என்ப‌வை வேறுவித‌மான‌வை என்ப‌து குறித்த‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி. ப‌த்தாம் வ‌குப்பு த‌மிழ் இல‌க்கிய‌ புத்த‌க‌த்தில் க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌ற்றி சில‌ க‌ட்டுரைக‌ளைப் ப‌டித்திருக்கின்றேன். அதில் ச‌ர‌யு ந‌தி குறித்தொரு க‌ட்டுரை உண்டு (இப்போதும் ஈழ‌த்திலுள்ள‌ பாட‌த்திட்ட‌த்தில் இவையுண்டா என்ப‌தை நான‌றியேன்). திருமுருகாற்றுப்படை என்ப‌வை கூட‌ ஆற்றுப்ப‌டுத்த‌ எழுத‌ப்ப‌ட்ட‌வையா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருகின்ற‌து :-).

(2) கேண‌ல்/க‌ர்ன‌லுக்கு, அ.மு(?) அக‌ராதி பார்த்து புதுவித‌ விள‌க்க‌ந்த‌ருவ‌து ந‌ன்றாக‌த்தான் இருக்கிற‌து. இப்போது முத‌லில் உள்ள‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால் நாம் அக‌ராதியிலுள்ள‌தைப் ப‌ற்றி ப‌டைப்பில் எழுத‌ப்போகின்றோமா அல்ல‌து பேச்சுவ‌ழ‌க்கிலுள்ள‌தை எழுத‌ப்போகின்றோமா என்ப‌து ப‌ற்றி. நானும் வேண்டுமென்றால் அக‌ராதியை விரித்துவைத்துக்கொண்டு, 'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்பையும்' ப‌க்க‌த்தில் வைத்துக்கொண்டு, அக‌ராதியில் உச்ச‌ரிப்பு இப்ப‌டியிப்ப‌டி இருக்கிற‌து அ.மு இப்ப‌டியிப்ப‌டியெழுதியிருக்கின்றார் என்றும் விதாண்ட‌வாத‌ம் செய்ய‌லாம். இப்போதுதான் நினைவுக்கு வ‌ருகின்ற‌து, கேண‌ல் கிட்டுவின் குர‌ங்கு என்றொரு சிறுக‌தையோ/க‌ட்டுரையோ அ.மு எழுதியிருக்கின்றார். அங்கே அவ‌ர் "கேர்ண‌ல்" என்று பாவித்து எழுதிய‌தாய் என‌க்கு நினைவில்லை (பிழையாயிருந்தால் திருத்த‌வும்). ஆக இப்போது அ.மு கேண‌லுக்கு புது உச்ச‌ரிப்பு த‌ருகிறார் என்றால், அந்த‌ச் சிறுக‌தையை எழுதிய‌போது அக‌ராதியை புர‌ட்டியிருக்க‌ அ.மு ம‌ற‌ந்துவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ள‌வேண்டும்.

(3) 'கோமாளி' என்ற‌ சொல்லில் நான் சொல்ல‌வ‌ந்த‌து வேறுவிட‌ய‌ம். ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு ப‌ட்ட‌ப்பெய‌ர்/அடைபெய‌ர்க‌ளால் ஒவ்வொருத்த‌ரும் அழைக்க‌ப்ப‌டுவ‌து சாதார‌ண‌மான‌து. என்ன‌தான் இப்ப‌டி ப‌ட்ட‌/செல்ல‌ப்பெய‌ர்க‌ளால் அழைக்க‌ப்ப‌ட்டாலும் குடும்ப‌த்துக்கு வெளியில் இவ்வாறான‌ பெய‌ர்க‌ள் பிற‌ருக்கு அவ்வ‌ள‌வாய் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌தில்லை. என்னுடைய‌ ஞாப‌க‌ம் ச‌ரியானால் (த‌ற்ச‌ம‌ய‌ம் உ.க‌.நா என்வ்ச‌மில்லை; ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌க்கொடுத்துவிட்டேன்), க‌தைசொல்லியின் த‌ம்பி 'இவ‌ன் எங்க‌ள் வீட்டு கோமாளி' என்று பிற‌த்தியார் ஒருவ‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தாய் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌தென‌ நினைக்கிறேன். அதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். குடும்ப‌த்திலுள்ள‌ ஒருவ‌ரை 'கோமாளி' என்று பிற‌த்தியாளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்துவ‌து அ.முவின் குடும்ப‌த்தில் ந‌டைமுறையாயிருக்க‌லாம். என்னைப் பொறுத்தவ‌ரை அது விநோத‌மான‌தே.

(4) க‌ருணாக‌ர‌மூர்த்தி, ச‌ட‌ங்கின் முக்கிய‌ பேசுபொருள் நீங்க‌ள் குறிப்பிடுவ‌தேதான். அதைத்தான் நானும் குறிப்பிட்டு, அதில் ஒரிட‌த்தில் யாழ்ப்பாண‌ப்பெண்க‌ளின் சுய‌ இன்ப‌ம் காணுத‌ல் குறித்து வ‌ருவ‌தாக‌க் குறிப்பிட்டிருந்தேன். எஸ்.பொவின் ப‌டைப்பில் ஏதோவொன்றில் பெண்ணின் சுய‌ இன்ப‌ம் குறித்த‌ சித்த‌ரிப்பு வ‌ருவ‌தாய் வாசித்த‌து நினைவு. சில‌வேளைக‌ளில் அது ச‌ட‌ங்கில் இல்லாது வேறு ப‌டைப்பில் இருக்க‌லாம். 2000 ஆண்டில் வாசித்த‌ன் பின் எஸ்.பொவின் ப‌டைப்புக்க‌ளை திருப்ப‌ வாசிக்க‌வில்லை. ஒருமுறை ச‌ரிபார்க்கின்றேன்.

(5) பாருங்க‌ள் மேலே ப‌திவில் நான் விம‌ர்சித்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அ.முவிட‌ம் விள‌க்க‌ம் கேட்டு அதை இங்கேயும் ப‌திந்திருக்கின்றீர்க‌ள். ந‌ல்ல‌தொரு விட‌ய‌மே. ஆனால் முக்கிய‌மான‌ விட‌ய‌மாய் நான் குறிப்பிட்ட‌ யாழ்ப்பாண‌த்த‌வ‌ர்க‌ளின் சாதி ப‌ற்றி இப்புதின‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌டாது குறித்து இருவ‌ருமே ஒன்றும் கூற‌வில்லையே. அது ஏன் என்றுதான் இன்ன‌மும் யோசிக்கின்றேன்.

--------------------
ம‌ற்ற‌து க‌ருணாக‌ர‌மூர்த்தி,
'க‌றுப்பி' என்ப‌வ‌ரும் 'த‌மிழ‌ன்- க‌றுப்பி' என்ப‌வ‌ரும் இர‌ண்டு வெவ்வேறு ந‌ப‌ர்க‌ள். நீங்க‌ள் இருவ‌ரையும் ஒன்றாக‌க் குழ‌ப்பிக்கொள்வ‌தாய் நினைக்கின்றேன். க‌றுப்பி ரொறொன்டோவிலும், த‌மிழ‌ன்-க‌றுப்பி‍ இன்னோரிட‌த்திலும் வ‌சிக்கின்றார்க‌ள்.

4/28/2009 03:46:00 PM
DJ said...

சுமார் 20 வருஷங்களுக்கு முன் நான் படித்தபோது நினைத்ததாக ஒரு ஞாபகம் இன்னும் இருக்கிறது. தவிர சத்தியமாக எந்தப் பெண்ணாவது அதில் சுயவின்பம் துய்ப்பதாக சத்தியமாக எனக்கு ஞாபகம் இல்லை. /

இந்தா பிடியுங்கள் சாட்சியை...

"...ஒவ்வொரு சதைத் துணுக்கிலும் சடைத்துப் பரவியுள்ள உணர்ச்சியை எப்படியும் தணித்துக் கொள்ளல் வேண்டுமென்ற அசுரம் அவளுள் ஜனனித்தது. எல்லோரும் தூங்கி விட்டதினாலும், மாலுக்குள் ஊமை ஒளி பரவியிருந்ததினாலும், ஆசை சகல வெட்கங்களையுங் களைந்து அம்மணமாக்கின்றது. சேலையும் உள்பாவடையும் முழங்கால்களுக்கு மேலாக அலங்கோலமாகக் கிடந்தன. தொடைகளைச் சொறியும் லாவகத்தில் வலக்கையை உட்புகுத்தி... வேட்கை திமிர்த்து முதிர... இவ்வுணர்ச்சியின் உற்பத்தி நிலையத்தை அதன் பிடிக்குள் நெருக்கி, ஆட்காட்டி விரலுக்கு செந்தில்நாதனின் உருவம் கற்பித்து... கண்களை மூடிய கற்பனை நிலையிலும், கையின் கிரியை முனைப்பிலும், ஏதோ ஸ்கலிதமாகவே தன் உணர்ச்சிகள் இற்றுச் சுகானுபவம் கிட்டுவதான திருப்தி குதிருகின்றது." (சடங்கு, பக்கம் 154)
.....
எழுதியவற்றை எல்லாம் எழுந்தமானமாய் எழுதிவிட்டேனோ என்பதற்காய் இன்னொரு முறை சடங்கை வாசித்து, இதைக் கண்டுபிடித்தாயிற்று. 70களில் நூலாக்கப்பட்ட 'சடங்கு' என்னைப் பொறுத்தவரை முக்கிய ஒரு படைப்பே.

4/28/2009 07:13:00 PM
Anonymous said...

அன்பு டி.ஜே;

எனது முந்திய கருத்திடுகையில் அநாமதேயமாக வந்து விளக்கம் தந்த நண்பரை மறந்துவிட்டேன். அவர் பொறுத்தாற்றுக. அவர்கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அவர் பிரெஞ்சு உச்சரிப்புடன் நின்றுவிடாமல் உற்சாகத்தில் பெர்லின் எப்படி உச்சரிக்கப்படும் என்றும் சொல்ல வந்தது கொஞ்சம் திருநெல்வேலிக்கே எதையோ கொடுத்த வகையாப்போச்சு. ஆனாலும் பாதகமில்லை........ சபாஸ் !

இன்னும் நான் ’சடங்கு’ நாவலைப் படித்தது 20 வருஷங்களுக்கு முதல் என்று முதலில் போகிறபோக்கில் சொல்லிவிட்டேன். உட்கார்ந்து சுருளிராஜன் பாணியில் யோசிக்கையில்தான் அது குறைந்த பட்ஷம் 35 ஆண்டுகளுக்கு முன்னான எனது பள்ளிசெல்லும் காலத்தைய வாசிப்பென்று தெளிகிறது. அப்படி எஸ்.பொ எழுதவில்லையென்று விவாதிப்பது எனது நோக்கமல்ல, எனக்கு சத்தியமாக ஞாபகமில்லையென்றுதான் சொன்னேன். இருந்தும் நீங்கள் அந்தப்பகுதியையே தந்துவிட்டீர்கள். உங்கள் ஆர்வத்துக்கும் நன்றி.

//பாருங்க‌ள் மேலே ப‌திவில் நான் விம‌ர்சித்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அ.முவிட‌ம் விள‌க்க‌ம் கேட்டு அதை இங்கேயும் ப‌திந்திருக்கின்றீர்க‌ள். ந‌ல்ல‌தொரு விட‌ய‌மே. ஆனால் முக்கிய‌மான‌ விட‌ய‌மாய் நான் குறிப்பிட்ட‌ யாழ்ப்பாண‌த்த‌வ‌ர்க‌ளின் சாதி ப‌ற்றி இப்புதின‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌டாது குறித்து இருவ‌ருமே ஒன்றும் கூற‌வில்லையே. அது ஏன் என்றுதான் இன்ன‌மும் யோசிக்கின்றேன்.//
யாழ்ப்பாணத்தவர்களின் சாதி பற்றி அப்புதினத்தில் எதுவும் சொல்லப்படாமைபற்றி அ.முத்துலிங்கம் கருத்துக்கூறுவதே பொருத்தமானது.

மீண்டும் அந்தநாள் ஞாபகம்.

த.ஜெயகாந்தன் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவரை வெங்கட் சுவாமிநாதனோ , க.நா.சு.வோ ஒரு விமர்சகர் அநேகமாக பிராமணீயம்-அபிராமணீயம் அல்லது சுயமரியாதை பற்றியாயிருக்கலாம் (என் நினைவு இங்கும் சதிசெய்கிறது) இவர் ஒன்றுமே எழுதாமலிருக்கிறார் என்றொரு குற்றச்சாட்டை ஓங்கிப் பத்திரிகைகளில் வைத்துக்கொண்டிருந்தார். இயல்பில் ஜெயகாந்தன் கோபக்காரர் இருந்தும் வெகு அமைதியாகப் பதில் சொன்னார்: ”நான் எழுதாத ஒருவிஷயத்தை வைத்து என்னை விமர்சிப்பது சரியல்ல. ஒருவர் எழுதியதை/பதிவுசெய்ததைக்கொண்டே ஒருவரை விமர்சனத்துக்குட்படுத்தலாம்.
எழுதாத விஷயம்பற்றியோ ஏன் எழுதவில்லை என்று விசனப்படுவதிலோ அர்த்தமில்லை. எழுதிய விஷயங்களின் எல்லைக்குள்ளேயே எழுதியவர் விமர்சிக்கப்படுவாரென்பதை எழுத்தாளரும் அறியவே செய்வர்?
Arthur Charles Clark என்கிற பிரிட்டிஷ் எழுத்தாளரை நாம் அறிவோம்.1925 இலேயே மனிதன் ஒருநாள் ஒரு பிளாட்ஃபோம் அமைத்துக்கொண்டு நிலவில்போய் இறங்குவான் என்று கற்பனையாக எழுதியவர். இவர் தன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பகுதியை 50 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்து கழித்தவர். இருந்தும் அங்குள்ள இன-மொழிச்சிக்கல்கள்/ இன ஒடுக்குமுறை/ இனக்கலவரங்கள் பற்றியோ ஒரு வரியைக்கூட எந்த இடத்திலும் பதிவு செய்ததில்லை. எவர் என்ன செய்யலாம்?

கறுப்பியையும் கறுப்பி-தமிழனையும் ஒருவராக எண்ணியதால் விளைந்த குழப்பமது.
Stand Corrected ! அப்பிடி என்னதான் சொல்லிப்பிட்டேன். கறுப்பி கண்டுக்கமாட்டார்.

P.Karunaharamoorthy , Berlin. 30.04.2009

4/30/2009 03:34:00 AM