ஹருகி முரகாமியின் 'Novelist as a Vocation' ஒரு சுவாரசியமான நூல். இதில் முரகாமி எவ்வாறு தான் எழுத வந்தேன் என்பதிலிருந்து எப்படி ஒரு முழுநேர எழுத்தாளனாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்க முடிகின்றது என்பதுவரை பேசுகின்றார். இது மட்டுமில்லாது எழுதும் பிரதியின் அசல்தன்மை, இலக்கியப் பரிசுகள், விமர்சனங்களுக்கு எப்படி முகங்கொடுப்பது, எதைப் பற்றி எழுதவேண்டும், எவ்வகையான பாத்திரங்களை ஒரு நாவலில் உள்ளடக்குவது, யாருக்காக நான் எழுதுகின்றேன் எனப் பல்வேறு தலைப்புக்களில் எழுதியிருக்கின்றார். இவற்றில் சில அவரின் வாசகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்களாகவும் அமைந்திருக்கின்றன.
முரகாமி பொதுவெளியில் பெரிதாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாதவர். அவ்வாறு உரையாட தனக்கு விருப்பமில்லை என்று அர்த்தமல்ல, என்னால் ஒழுங்காகப் பேசத்தெரியாது, அதனால்தான் நான் பொதுவாக வெளியில் வருவதில்லை என்கின்றார். அத்தோடு இந்த நூல் குறித்துக் கூட நான் இனி எங்கும் பேசப்போவதில்லை. வேண்டுமெனில் இன்னும் வயதாகட்டும், அப்போது ஒரளவு முதிர்ச்சி வந்து பொதுவெளியில் இதைப்பற்றி உரையாற்றுகிறேன் என்று இந்நூலின் முன்னுரையில் எழுதுகின்றார்.
முரகாமியை வாசித்தவர்க்கு அவரின் பின்புலம் ஒரளவு தெரிந்திருக்கும். முரகாமி ஒரு உணவகத்தை ஜாஸ் இசைப் பின்னணியில் அவரது மனைவியுடன் நடத்திக் கொண்டிருந்தவர். பேஸ்பால் மீது அதீத ஆர்வமுள்ள முரகாமி சுவாரசியமாக ஓர் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் ஒரு நாவல் எழுதுகின்றேன் என்று தீர்மானித்து, வீட்டுக்குப் போகும் வழியிலே எழுதும் பேப்பர்களை வாங்கிக்கொண்டு போய் எழுதத் தொடங்கியவர். ஓர் உணவகத்தை நடத்திக் கொண்டு அவர் எழுதி முடித்த நாவலே 'Hear and the wind sing'. அதுவரை எழுத்தாளராக வரும் எந்த எண்ணமும் இல்லாத முரகாமி எழுதிய இந்த நாவல் ஜப்பானில் இலக்கியத்துக்கான பரிசொன்றையும் பெற்றுவிடுகின்றது.
அஃதொரு குறுநாவல், பிறகு சிறுகதைத் தொகுப்பு என ஒன்றிரண்டு நூலகளை எழுதிய சில ஆண்டுகளில் ஒரு 'அதிர்ச்சிகரமான' முடிவை முரகாமி எடுக்கின்றார். நான் இனி முழுநேர எழுத்தாளராக ஆகப்போகின்றேன் என்று அவரது வாழ்வியல் செலவுகளை நிவர்த்தி செய்த உணவகத்தை விற்கின்றார். அவரது நண்பர்கள் 'ஒரளவு இலாபத்தோடு இருக்கும் இதை விற்காதீர்கள், வேண்டுமெனில் நீங்கள் நாவல் எழுதும் காலங்களில் வேறு ஒருவரை வைத்து இதை நடத்தலாம்' என்று ஆலோசனைகள் சொன்னபோதும், அவர் எழுதுவது மட்டுமே செய்யப்போகின்றேன் என்று உணவகத்தை விற்று, டோக்கியோவை விட்டு வேறொரு புறநகருக்கு மனைவியுடன் இடம்பெயர்கின்றார்.
அதுவரை நள்ளிரவுகளில் பகுதி நேரமாக எழுதிக் கொண்டிருந்த முரகாமி, ஓர் ஒழுங்குக்குள் தன்னைக் கொண்டுவருகின்றார். இரவில் முன்னரே தூங்கி, விடிகாலையில் எழும்பி எழுதுவதும், பின்னர் உடல்நலத்துக்காக நீண்டதூரம் ஓடுவதுமென தினமும் தன்னைப் பழக்கிக் கொள்கின்றார். இந்தப் பழக்கம் தன்னை ஒவ்வொரு நாவலையும் எழுதத் தயார்ப்படுத்தும்போதும் பெரும் உதவியாக இருக்கின்றது என்கின்றார்.
முரகாமி தான் நாவலை எழுதத் தொடங்கும்போது, தினமும் எட்டு ஜப்பானியப் பக்கங்கள் (1600 ஆங்கில வார்த்தைகள்) எழுதுவேன் என்றும், அதற்காய் காலையில் நான்கைந்து மணித்தியாலங்கள் செலவழிப்பேன் என்றும் கூறுகின்றார். அதுபோலவே ஒருநாளில் நன்றாக எழுதும்போது நிறைய எழுதினாலும் பத்துப்பக்கங்களோடு தன் நாவலை நிறுத்திவிடுவேன் என்கின்றார். ஒருநாளிலேயே நிறைய எழுதிவிட்டால் சிலவேளைகளில் அடுத்துவரும் நாட்களில் ஒன்றும் எழுதமுடியாது போய்விடும். தொடர்ச்சியாக ஒரு நாவலை எழுதுபவர்க்கு இது நல்லதல்ல என்கின்றார்.
இவையெல்லாவற்றையும் சொல்லும்போது, இது தன் தனிப்பட்ட அனுபவங்கள் என்பதையும் அடிக்கடி நமக்கு முரகாமி நினைவுபடுத்துகின்றார். இப்படி 'அளவாக' தினம் எழுதுவதை ஹெமிங்வேயும் சொல்லியிருக்கின்றார். நல்லாய் எழுத்து ஊறிக்கொண்டு வருகின்றதென்பதற்காய் ஊற்றை ஒட்ட இறைத்து விடாதீர்கள். ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அடுத்தநாளுக்கும் அதே ஊற்றுப் பெருக அனுமதியுங்கள்' என ஹெமிங்வே நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.
முரகாமி தனது நாவல்களுக்காய் கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்கள் எழுதுவதற்கு உழைப்பேன் என்கின்றார். உதாரணத்திற்கு 'Kafka on the shore' இற்காய் தினமும் 10 பக்கங்கள் வீதம் மாதமொன்றுக்கு 300 பக்கங்களும், அதை ஆறுமாதங்களுக்கு எழுதி 1,800 பக்கங்கள் வரை தொடர்ந்து எழுதியதாகச் சொல்கின்றார். முதல் வரைவை முரகாமி எழுதிய பிறகு கொடுக்கும் உழைப்புத்தான் இன்னும் கவனிக்கத்தக்கது.
நாவலை எழுதி முடித்தபின் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களிலிருந்து ஒரு மாதம்வரை அதை அப்படியே டிராயருக்குள் போட்டு மூடிவிடுவேன். அதைப் பற்றி ஒரு துளியும் யோசிக்காது இருக்க அந்தக்காலங்களில் முயற்சிப்பேன் என்கின்றார். பின்னர் முதலாம் திருத்தத்தை சில வாரங்களுக்குச் செய்வார். அதன் பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு 2வது, 3வது திருத்தங்களும், மீள எழுதுதலும் செய்வாரென்று சொல்கிறார். இவை எல்லாம் செய்து ஒரளவு முழுமையான பின் தனது முதல் வாசகரான மனைவிக்கு வாசிக்கக் கொடுப்பேன் என்கின்றார். அவரின் மனைவி ஒரு தேர்ந்த எடிட்டரைப் போல மாற்றங்களைச் சொல்ல, அவரோடு சிலதை முரண்பட்டு, சிலதை ஏற்று பிறகு இன்னொருமுறை முரகாமி திருத்தங்களைச் செய்வார். அதன்பின்னரே அவரின் எடிட்டர்களின் கையில் பிரதி போகும். என்னதான் தனது எடிட்டர்கள் சிறப்பானவர்களாக இருந்தாலும், அவர்களோடு எப்போதும் சண்டையிட்டே மாற்றங்களைச் செய்வேன் என்கின்றார். இவ்வாறு பல படிமுறைகளுக்குப் பிறகுதான் நாம் வாசிக்கும் முரகாமியின் பிரதி நம் கைகளை வந்து சேர்கிறது.
அதேபோல ஒரு நாவலை எழுதத் தொடங்கும்போது, தான் வேறெந்த எழுத்து வேலையிலும் கவனம் செலுத்துவதில்லை என்கின்றார். அப்படி அந்தக் காலங்களில் செய்யும் ஒரேயொரு விடயம் மொழியாக்கங்கள் மட்டுமே என்கின்றார். அது புனைவில்லாததால், மூளையில் இன்னொரு பகுதியைச் செயற்படுத்த வைப்பதால் அப்படி மொழியாக்கங்களைச் செய்வது எளிதாக இருக்குமென்கின்றார்.
இவ்வாறு முரகாமி சொல்வதை வாசிக்கும்போது எனக்கு உடனே நினைவுக்கு வருபவர் சுகுமாரன். அவர் தனது முதலாவது நாவலான 'வெலிங்டனை' எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு தொய்வு வந்தபோது தான் மொழியாக்கம் செய்யத் தொடங்கியதாக எழுதியிருப்பார். அப்படி அந்தக் காலத்தில் அவர் மொழியாக்கம் செய்ததுதான் 'பட்டு'.
முரகாமி தனது நாவல்கள் எழுதும் அனுபவங்களையும், அவரின் பாத்திரங்கள் உருவாக்கப்படும் வழிமுறைகளையும் இங்கே எழுதிச் செல்வது சிலாகிக்கக் கூடியது. நாவலை ஒரு படைப்பாளி எழுதிக்கொண்டிருக்கும்போது, நாவலாசிரியரும் அந்தப் பிரதியால் உருவாக்கப்படுகின்றார் எனச் சொல்கின்றார் (While Novelist creating a novel he is simultaneously being created by the novel as well). அவ்வாறு தான் உருவாக்கும் பாத்திரங்களே வேறு பாத்திரங்களை உருவாக்க அவை நாவலாக உருவாகின என்று சொல்கின்றார். முரகாமி 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' ஐ முதலில் ஏழெட்டுப் பக்கக் கதையாக எழுதியிருக்கின்றார். அந்த நாவலை வாசித்த நமக்குத் தெரியும்,
டஸாக்கியின் நான்கு பாடசாலை நண்பர்கள் சட்டென்று ஒருநாள் எங்களோடு நீ பேசக்கூடாது என்று எந்தக் காரணமும் சொல்லாது விலகிப் போய்விடுகின்றார். இது நடந்து கிட்டத்தட்ட 18 வருடங்களின் பின், டஸாக்கி தனது முப்பத்தாறு வயதில் இருக்கும்போது ஏன் எனது நண்பர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என யோசிக்கின்றார். அப்போது டஸாக்கி டேட்டிங் செய்துகொண்டிருக்கும் பெண், இந்தக் கேள்வியை ஆழமாக அவரிடம் கேட்க வைக்கின்றார். இத்தனைக்கும் அந்தப் பெண் பாத்திரம் ஒரு முக்கிய பாத்திரமே அல்ல.
சிறுகதையில் அதற்கான காரணம் எதையும் சொல்லாது, ஒரு கற்பனையான முடிவாக எழுதி வைத்ததை, அந்தப் பெண் பாத்திரம் ஏன் என்று கேட்பதிலிருந்தே அது பெரு நாவலாக விரிந்தது என்கின்றார். அது டஸாக்கியை டோக்கியோ வரை கொண்டு சென்று இறுதியில் இந்த உண்மையை அறிவதற்காய் அவர் பின்லாந்துக்கு தனது நண்பரொருவரைத் தேடிப் போவதுவரை விரிவதை நாவலை வாசித்த நமக்குத் தெரியும். இவ்வாறு முரகாமி தான் எழுதிய சில நாவல்களின் பின்னணிகளையும், பாத்திரங்களின் சிக்கலான வார்ப்புகள் எவ்வாறு உருவாகின என்பதையும் இந்த நூலில் விரிவாக எழுதிச் செல்கின்றார்..
ஒருவர் எதை எழுதவேண்டும், எந்த வகையான பாத்திரங்களை நாவலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று முரகாமி தன் நாவல் எழுதும் அனுபவங்களிலிருந்து சில திறப்புக்களைச் செய்கின்றார். மேலும் உங்களுக்கு நம்புவதற்கு கடினமென்றாலும் பலர் சொல்லும் writer's block எனக்கு வந்ததில்லை என்றும் குறிப்பிடுகின்றார். ஏதோ எப்போதும் எனக்குள் சிருஷ்டி பாய்கின்றதாக நீங்கள் நினைக்கத் தேவையில்லை. நான் எழுத விரும்பும்போது மட்டுமே எழுதுவேன். ஆகவே அது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியான மனோநிலையைத் தந்துகொண்டிருக்கின்றது என்கின்றார்.
எந்த நாவலாயினும், தனக்குள் உருவாகி, உருவாகி ஒருகட்டத்தில் இதற்குமேலும் என்னால் தாங்கமுடியாது என்கின்றபோதே எழுதுவதற்கு சென்று அமர்வேன் என்று முரகாமி சொல்கின்றார். தன்னால் இன்னும் இந்தக் காலக்கோட்டுக்குள் எழுதித் தரவேண்டும் என்று சொல்லப்பட்டு நேரம் வரையறுக்கப்பட்டு எழுதுபவர்களை விளங்கிக் கொள்ளமுடியவில்லை என்கின்றார்.
மேலும் ரேமண்ட் கார்வர் கூறியதுபோல, ஒரு படைப்பை 'இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் இதைவிட மிகச் சிறப்பாக எழுதியிருப்பேன்' என்று சொல்வோரை என்னால் மன்னிக்கவே முடியாது என்கின்றார். எழுத்து என்பதே ஒரு அருமையான விடயம். உங்களுக்கு அதற்கு வேண்டிய நேரத்தைக் கொடுக்காது அவசரத்தில் எழுதுகின்றீர்கள் என்றால் நீங்கள் இதைவிட உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் வேறு தொழிலுக்குப் போகலாம். எழுத வந்தால் அதற்காய் உங்களை முழுதாய்க் கொடுக்கவேண்டும் என்கின்றார். முரகாமியே முதன்முதலில் ரேமண்ட் கார்வரை ஜப்பானுக்கு மொழிபெயர்த்து, கொண்டு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக முரகாமி எப்படி ஒரு ஜப்பானியராக இருந்து அமெரிக்கவுக்கு தனது நூல்களைப் பதிப்பிக்க கொண்டு போனார் என்கின்ற பகுதிகளை வாசித்துக் கற்றுக்கொள்வது என்பது நமது தமிழ்ப்படைப்புக்களை எவ்வாறு மேற்கிற்கு அறிமுகப்படுத்தலாம் என்பதற்கான சிறந்த படிப்பினைகளாக இருக்கின்றது. தனது நூல்களின் பிறமொழி அறிமுகத்தால் கிடைத்ததைவிட, 'முகமற்ற ஜப்பானியர்களாக' எல்லா ஜப்பானியர்களும் மேற்குலகில் நடமாடிக்கொண்டிருந்தபோது எமக்கென்றொரு அடையாளம் வேண்டும் என்கின்ற ஓர் உந்துதலும் அதற்கு முக்கிய காரணம் என்கின்றார் முரகாமி.
அதேபோல ஜப்பானைப் போல ஒரு நாவலை எழுதிவிட்டு அது பரவலாக வாசிக்கப்பட்டும் என்று அமெரிக்காவில் சும்மா இருக்கமுடியாது. தான் தனது நாவல்களுக்காய் அது செல்லக்கூடிய எல்லாப் பாதைகளுக்கும் சென்று அமெரிக்காவில் பதிப்பிக்க முயற்சித்தேன் என்கின்றார். உங்களுக்கு ஓர் எடிட்டர்/பதிப்பகம் இருந்தால் கூட, ஒரு எழுத்தாளராக உங்களின் விடாமுயற்சியும், அவர்களை உந்தித்தள்ளுதலும் -ஜப்பானில் இல்லாதது- தான் அமெரிக்காவில் கற்றுக் கொண்டது என்கின்றார். அதேபோல ஆசியாவுக்கு அப்பால் முதலில் இரஷ்யாவில்தான் தனது அரைவாசிக்கு மேற்பட்ட நாவல்கள் விற்பனையில் முன்னணியில் நின்றது என்பதையும் குறிப்பிடுகின்றார்.
அமெரிக்கப் பதிப்பகங்களை நாடும்போது, நீங்கள் உங்கள் நாட்டில் மில்லியன்கணக்கில் நாவல்களை (அவரது 'நோர்வேஜியின வூட்' ஜப்பானில் 2 மில்லியன் விற்றது) விற்கப்பட்டது என்பதோ, இத்தனை விருதுகளைப் பெற்றது என்பதோ ஆங்கில வாசகர்களுக்கு முக்கியமில்லை. அவர்களுக்குரிய வாசிப்புத் தளங்களில் நீங்கள் முக்கியமானவராக இருக்கவேண்டும். அந்தவகையில் தனது சிறுகதைகள் 'நியூ யார்க்கரில்' வந்ததே தனது நாவல்களை பெருமளவில் அமெரிக்க வாசகர்களிடையே கொண்டு சென்றதற்கு முக்கிய காரணம் என்கின்றார். இன்றைக்கு முரகாமியின் நாவல்கள் 50 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. உலகளவில் அவரின் புதிய நாவல்களுக்காய்க் காத்திருக்கும் வாசகர்களும் கூடிக்கொண்டே இருப்பதையும் பார்க்கலாம்.
இவ்வளவு பிரபல்யமும், புகழும் பெற்றபோதும் முரகாமி மிகவும் தாழ்மையுடனேயே பேசிக் கொண்டிருக்கின்றார். எழுத்து என்ற ஒன்று இல்லாதுவிட்டால் என்னை நீங்கள் தெருவில் கண்டால் கூட அடையாளங் கண்டிருக்கமாட்டீர்கள். நான் இப்போதும் ஒரு சாதாரண மனிதனே, என்ன எனக்கு கொஞ்சம் எழுதத் தெரியும், அந்த ஒரு நம்பிக்கையில் இப்படி 35 வருடங்களுக்கு மேலாக ஒரு முழுநேர எழுத்தாளனாக இருக்கின்றேன் என்றே எழுதுகின்றார்.
ஒரு எழுத்தாளருக்கு அவர் ஒரு படைப்பை எழுதும்போது இருக்கவேண்டிய (தனக்குத் தெரிந்த) மூன்று விடயங்களைச் சொல்கின்றார். ஒன்று ஓர் எழுத்தாளர் தனக்குரிய நடையை (style) அவசியம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். எப்படி ஒரு பாடகருக்கு தனித்துவமான குரலும், ஓர் ஒவியருக்கும் குறிப்பிட்ட சில வர்ணங்களும் அவர்களுக்குரியதாகின்றதோ அதுபோல எழுதுபவர்க்கு ஒரு தனித்த நடை அவசியம். இரண்டாவது அந்த நடை உருவாகியபின் அப்படியே தேங்கிவிடாது காலத்தோடு அதுவும் இன்னும் வளர்ந்தபடியே இருக்கவேண்டும். மூன்றாவது இந்த தனித்துவமான நடை வாசகரிடையே நுழைந்திருக்கவேண்டும். வாசகர்களும் அதன் ஒரு பகுதியாக மாறியிருக்கக்க்கூடியதாக ஒரு படைப்பாளியின் எழுத்து நடை மாறி அந்தப் படைப்பின் அடிப்படைகள் அவர்களுக்குப் பரிட்சயமாயிருக்கவேண்டும். இவை தனது தனிப்பட்ட கருத்துக்களென முரகாமி சொல்கின்றபோதும், அவரின் நாவல்களை தொடர்ச்சியாக வாசிக்கும் நம்மைப் போன்றவர்களால் இவற்றை நன்கு தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும் என்றே நினைக்கின்றேன்.
அவ்வாறே இலக்கிய விருதுகளால் பெரும் நன்மைகள் விளையப்போவதில்லை என்பதைச் சொல்லவே ஓர் அத்தியாயத்தையே உருவாக்கி இருக்கின்றார். மேலும் முதலாவதாக எழுதும் படைப்புக்கு கிடைக்கும் விருதை விட விமர்சனங்களே ஒருவகையில் நல்லது என்கின்றார். முதல் சில படைப்புக்களினால் மிகவும் உயர்ந்தேந்தப்பட்ட எத்தனை படைப்பாளிகள் 20/30 வருடங்களில் அடையாளமே இல்லாது போயிருக்கின்றனர் என்பதை அவர் பார்க்கச் சொல்கின்றார். மேலும் வான்கோவும், பிகாஸோவும் அவர்கள் வாழ்ந்த காலத்தைவிடவும் அவர்களின் மரணத்தின் பின்னே பெரிதாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றனர், அவர்களின் புதுமுயற்சிகள் பின்னாட்களிலே அதிகம் போற்றப்பட்டன என்பதையும் குறிப்பிடுகின்றார்.
முரகாமியின் படைப்புக்களில் ஈர்ப்புள்ளவர்களை மட்டுமில்லை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எவரையும் இந்த நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன். தமிழில் எண்ணற்ற புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்படும் பொற்காலமாக இருக்கின்ற இக்காலத்தில், விரைவில் யாரேனும் இந்த நூலை தமிழாக்கம் செய்யவேண்டும் எனவும் விரும்புகின்றேன். அதேவேளை இது எழுதுபவர்க்கான கையேடோ, எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தும் 'முன்னேற்ற' வகை நூலோ அல்ல.
எதற்காக அல்லது யாருக்காக எழுதுகின்றீர்கள் என தன்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு என்று சொல்லும் முரகாமி, எனக்காகத்தான் முதலில் எழுதுகின்றேன்; என்னைப் பரவசப்படுத்த மட்டுமில்லை, எனது அகம் சார்ந்த பல சிக்கல்களையும் எழுத்து முடிச்சவிழ்த்து என்னைஆற்றுப்படுத்துகின்றது என்கின்றார்.
அநேகரின் எழுத்துக்கள் இவ்வாறுதான் தொடங்குகின்றன போலும்.
****************
(நன்றி: 'அம்ருதா' - 2025 பங்குனி இதழ்)
0 comments:
Post a Comment