கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 70

Wednesday, February 05, 2025

 

மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்..

1.


மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி  வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து  புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு.



இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன்.
முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு  வந்து பேசிக் கொண்டிருந்தார். மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன்.

அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பின்னர் அங்கிருந்த பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். 


இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் புலிகளை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஓர் இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது.  எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது.

மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலேயே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை அங்கிருந்தபடி தமிழுக்கு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது.
 

இறுதி யுத்தம் அவரை அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால்  மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது.



2.

ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவத் தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். 

 

ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஒரு முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதுதான். இத்தகைய ஓர் உண்மை கலந்த புனைவை ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது.


மலரவன் இதன் பிறகு இரண்டு வருடங்களில், அதாவது அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இறந்துவிடுகின்றார். அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக இருந்த சிலர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் அப்போது லியோ என்கின்ற மலரவன் இறந்தார் என்பதை அறிந்தவனில்லை.


இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே  அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது.
இந்த  போர் உலா என்கின்ற பிரதியை மலரவன் எழுதுகின்றபோது அவருக்கு 18 வயதேதான். நம்பவே முடியாதிருக்கின்றது அல்லவா?  அதன் பின் 20 வயதில் களத்தில் நின்றபோது விழுந்த ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்தாலும், அதற்கு முன்னரான ஒரு சமரில் காயமடைந்து அவரது சிறுநீரகம் ஒன்றையும் இழந்திருக்கின்றார்.

இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில்  களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு  நாவல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை  இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச்  சிலாவத்துறை சமரில் மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார்.

 

'புயல் பறவை' நூல், பின்னர் மலரவனின் தாயால்  வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்துக்குப் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது).

மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் இழந்தபோது) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளர் மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க: அறிவர். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது.


போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக்கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 



3.


மலரவன், மாங்குளம் முகாமில் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர். அவர் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளராக  அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிமாகாமலேயே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல  முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும்.


மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல் போன்ற பெரும் தளபதிக்காக நிகர்த்தவர். புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது. (முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைப்படத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது.

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை  முன்னின்று நடத்திய தளபதியாக பால்ராஜே இருந்தவர்.. 


பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த  இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை.



4.


மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, கப்டன் வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள்.

இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து  முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்கள் மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள்.  

ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

*****************

 

(நன்றி: உதயன் 'சஞ்சீவி')



0 comments: