கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 07 (Cuba)

Thursday, April 16, 2015

"Sometimes a lonely trip ends up pretty cool, like I met you."

தையும் எதிர்பார்க்காத வாழ்க்கை நிறைய அமைதியைத் தரும் என்பதைப் போல, எதையும் திட்டமிடாத பயணங்களும் எமக்கு நிறைவான அனுபவங்களைக் கொண்டு வரக்கூடும். பயணிப்பது என்பதே வாழ்வில் அரிதாக இருக்கும் எனக்கு, தனித்துப் பயணிப்பவரைப் பார்த்தால் வியப்பு ஏற்படுவதுண்டு. தனியே பயணிப்பதில் அச்சம் என்பதைவிட, அப்படிப் பயணிக்கும்போது வரும் தனிமையைப் பற்றியே மிகவும் அஞ்சியிருக்கின்றேன்.

நண்பரொருவரோடு திட்டமிட்ட பயணம் -நண்பனின் வேலை நிமித்தம்- தனித்துப் பயணிப்பதற்கான முதல் சந்தர்ப்பம் வாய்த்தபோது, செல்வதற்குத் தயக்கமாயிருந்தது. அப்போதுதான் எனக்குத் தெரிந்த ஒரு தோழி கோஸ்டா ரிக்காவிற்கு தனித்துப் போய்விட்டு வந்திருந்தார். விமானத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு backpacker யாய் புறப்பட்டிருந்தார். திரும்பி வந்து அவர் கூறிய அனுபவங்களோடு, என்னையும் தனியே போகச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

என்னதான் நடந்தாலும், வாசிப்பு எங்கும் கைவிடாது என்ற நம்பிக்கையில் பத்திற்கு மேற்பட்ட புத்தகங்களைக் கூட எடுத்துக்கொண்டு முதன்முதலில் தனித்துப் புறப்பட்டேன். அந்த அனுபவம்- ஏற்கனவே தெரிந்த நண்பர்களுடன் பயணிப்பதைப் போல- தனித்துப் பயணிப்பதிலும் இனிமை இருக்கிறதென நிறையக் கற்றுத் தந்திருந்தது.

இம்முறை எது வருகின்றதோ அதையெல்லாம் முழுமையாக -எதிர்க்காது- அனுபவிப்பது என்று மட்டும் நினைத்துப் பயணித்திருந்தேன். எவரும் முதலில் வந்து கதைக்கமுன்னர் அவர்களோடு பேசத் தயங்கும் ஒருவன், இம்முறை அந்தத் தயக்கத்தையும் சென்றிங்கியபோதே களைந்துவிட்டேன். சிலவேளைகளில் அந்த நண்பர் என்னைவிட தனிமையைக் கூட நேசிப்பவர் போலத் தோன்றியதால் என்பதால் என நினைக்கின்றேன்.

தற்கு முன்னர் தனித்துப் பயணித்தபோது ஒருவரை நண்பராக்கியது இன்னும் சுவாரசியமானது. கடலில் 'கானாய்' வலித்துச் சென்றபோதே இடைநடுவில் அவரைச் சந்தித்தேன். 'இப்படியே அடுத்த சிறுநகருக்குச் செல்வோமா'?' எனக் கேட்டார். அந்த நகருக்கு படகு வலித்துச் சென்றதும், கையில் காசில்லாதபோதும் அங்கே சந்தித்த உள்ளூர்வாசிகள் நமக்கு மது வாங்கி அருந்தத் தந்ததும், நாங்கள் அங்கேயே நிறையநேரம் கழித்ததால் எங்களைக் காணவில்லையென விடுதியில் பணிபுரிந்தவர்கள் தேடியதுமென ஒரு கதையாய் எழுதக்கூடிய சம்பவங்கள் அவை. அப்படித் தொடங்கிய நட்பு இன்னொரு பயணத்தைச் சேர்ந்து செய்யவேண்டுமெனக் கனவுகளை வளர்த்தபடி இப்போதும் அவருடன் தொடர்கிறது.

இம்முறை சந்தித்த நண்பருக்கு சைக்கிள் ஓடுவதிலும் ஸ்நோர்கிளிங் (snorkelling) செய்வதிலும் மிகுந்த விருப்பு. அவருடன் கூடவே எடுத்து வந்த உபகரணங்களை எனக்கும் தந்து ஸ்நோர்கிளிங் கற்றுத்தந்தார். என்றாலும் அவரின் ஆழ்கடல் தேடல்களைத் தடுக்கக்கூடாதென அவரை தூரச் செல்லவிட்டு நான் கரைக்கருகில் நின்று 'முத்து'க்குளித்தேன். கடலின் 'உலகு' அவ்வளவு அழகானது. நிச்சயம் நீ தவறவிடக்கூடாதென்றார். அவர் ஆழம் சென்று புகைப்படங்களும், விடீயோக்களும் எடுத்துக்கொண்டு வந்து எனக்கு காட்டிக்கொண்டிருப்பார். புதிதாக பார்த்த மீன்களையும், தாவரங்களையும் மகிழ்ச்சியுடன் குழந்தையைப் போலச் சொல்லிக்கொண்டிருப்பார். 'பறவைகளைத் தேடிப் போய் பதிவு செய்கின்றவர்களைப் போல, நீங்கள் புதிதாய்க் காணும் மீன்களைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவு செய்யுங்கள், அது சுவாரசியமாக இருக்கும்' என்றேன்.

எமது இந்தப் பயணத்தில் கட்டுமரத்தில் சென்று 2 மணித்தியாலம் பார்ப்பதை இலவசமாகத் தந்திருந்தார்கள். நானும் நண்பரும் சேர்ந்து கட்டுமரத்தில் சென்றபோது, அவரிடம் இந்த catamaran என்ற வார்த்தை எனது தாய்மொழியான தமிழில் இருந்தே ஆங்கிலத்திற்கு வந்தது என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். நாங்கள் அவ்வளவு சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சும்மா விட்டுவிடமுடியுமா என்ன?

இந்த நண்பரோடு நள்ளிரவு தாண்டி மிக நெருக்கமாக உரையாடினேன். எவரோடும் அவ்வளவு எளிதாய் -நான் எழுதிக்கொண்டிருப்பவன்- என்பதைப் பகிர்வதில்லை. இவரோடு பகிர்ந்துகொண்டேன், அது போலவே கடந்துவந்த பல்வேறு கதைகளையும். சிலநாட்களுக்கு முன் நட்பாகிய ஒருவரோடு இவ்வளவு விடயங்களைப் பகிர முடியுமா என்று கூட சற்று வியப்பாயிருந்தது.

நண்பரும் தன் சிறுவயது நினைவுகள் உட்பட பலதைப் பகிர்ந்து கொண்டார். சிறுவயதுகளில் தனக்கு நீந்த ஆசையிருந்தாலும், தனது தந்தையார் வேலை முடிந்து வரும்வரை காத்திருப்பதையும், நீச்சல் குளத்திற்குச் சென்றாலும் தந்தையார் வேலையின் களைப்பின் நிமித்தம் நீருக்குள் இறங்காது வெளியில் இருப்பார் எனவும், யாரேனும் வேறு ஆட்கள் வரும்வரை தான் நீச்சலிற்காய் ஆவலாய்க் காத்திருந்ததையும் கூறினார். இப்போது, நீருக்குள் இறங்க ஆசையுள்ள காலத்தில் தானும் ஒரு குழந்தை பெற்று அந்தப் பிள்ளைக்கு நீரின் வற்றாத இரகசியங்களைக் கற்றுக்கொடுக்க ஆசைப்படுவதாகவும் சொன்னபோது அவருக்குள் இருந்த மென்மனதைக் கண்டுகொண்டேன்.

சைக்கிளோட்டுவதில் மிகுந்த விருப்புடைய அவர் எப்படி தனக்கான சைக்கிளை பல்வேறு நாடுகளிலிருந்து பாகங்களை வாங்கி வடிவமைத்தார் என விபரித்தார். ஒவ்வொருவரின் கைகளின் அளவைப் பொறுத்து சைக்கிள் வேறுபடுமெனவும், வேகம் கூட அதில் அடங்கியிருக்கிறதென நுட்பமான விடயங்களைச் சொல்லிக்கொண்டே போனார். ஒருகட்டத்தில் இதெல்லாம் விசர்த்தனமாய் ஏதோ உளறுவதுபோல உனக்குத் தெரியுமெனவும் சொன்னார். நான் அப்படியில்லை எனச் சிரித்துக்கொண்டு மறுத்தேன். Friesம் Burgerம் Beerம் சாப்பிட்டு/அருந்தி இரவுகளில் நீண்டு போய்கொண்டிருந்தன உரையாடல். ஆனால் நாமிருவரும் தனிமையை அதிகம் விரும்புபவர்கள் என்பதையும் கண்டுகொண்டோம். அதீத கொண்டாட்ட மனோநிலையில் இருப்பவர்களுடன் இணையாது அவர்களை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் இருந்தோம்.

ஒருநாள் நண்பரும் நானும் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணைக் கண்டேன். திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் ஒருவித அழகு அவரிடம் இருந்ததை மறைக்காது சொல்லவேண்டும். அழகை இரசிப்பதற்கு நண்பர் சிலவேளை இடைஞ்சலாய் இருந்துவிடுவாரோ என்ற தயக்கத்தினால் நண்பரை 'இந்த வீதி இடதா வலதா திரும்புகின்றது?' எனப் பார்க்கச் சொல்லி முன்னே போகச் சொல்லிவிட்டு, நான் மரமொன்றின் நிழலில் நின்று -அழகை இரசிப்பதற்காய்- ஓய்வெடுப்பதாய்ப் பாசாங்கு செய்தேன். சில சந்தர்ப்பங்கள் இன்னொருமுறை கதவைத் தட்டாது அல்லவா?

மாலைவேளைகளில் உள்ளூர்மக்கள் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கொண்டிருப்போம். அவர்களோடு எப்போதும் ஏதாவது கதைக்க விரும்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் நாங்கள் சுற்றுலாப் பயணிகள் என்று நினைத்ததாலோ என்னவோ அவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரேவிதமான கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நண்பருக்கு ஒருகட்டத்தில் இதனால் அலுப்பு வந்துவிட்டது. ஆனால் அவரிடம், 'நான் கதைகளை எழுத விரும்புகின்றவன், இவர்களில் யாரேனும் ஒருவர் வித்தியாசமான கதையைச் சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் நான் ஒருபோதும் இவர்களின் கதைகளைக் கேட்கச் சலிக்கப் போவதில்லை' என்றேன்.

ஒருமுறை இப்படி ஒரு உள்ளூர் நண்பரொருவரோடு நாங்கள் மாலைவேளையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு பெண் எங்களை நிறுத்தி, ஸ்பானிஸ் ஏதோ கூறினார். அந்த உள்ளூர் நண்பர் கொஞ்சம் மொழிபெயர்த்தார்; 'இந்தப் பெண் உங்களை ஏற்கனவே தெரிந்தவர்' என்று கூறுகின்றார் என்றார். 'எனக்கு இப்படியான ஒரு பெண்ணைச் சந்தித்ததாய் நினைவினில்லை. எவரோடும் கதைக்கவும் இல்லை' என்றேன். நண்பரும் தனக்கு நினைவில்லை என்றார். அந்தப் பெண் இன்னும் துல்லியமாகச் சொன்னார்....'இவர்கள் இருவரும் சைக்கிள் ஓடிக்கொண்டு போனார்கள். இவர் சைக்கிளை நிறுத்தி என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்தது எனக்கு நன்கு தெரியும்' என்றார். பெண்கள் நுட்பமாய் அவதானிப்பவர்கள் என்பது தெரியும். ஆனால் இப்படி எங்களின் பலவீனங்களை எடுத்துச்சொன்னால் என்ன செய்வது? எனது நிலை இக்கட்டாகிப் போயிற்று. நான் பகல் வேளையொன்றில் சைக்கிளில் இரசித்த அதே பெண்.

'உங்களின் அழகு என்னை அப்படி அசரவைத்தது, அதுதான் இயற்கையை எதிர்க்க விரும்பாது உங்களைத் திரும்பி திரும்பிப் பார்த்தேன்' என உண்மையைச் சொல்ல முடியுமா என்ன? 'ஓ நீங்களா அவர். இப்போது மாலையில் பார்க்கும்போது வேறுவிதமாய் இருக்கின்றீர்கள். அதுதான் அடையாளங்காண முடியாது இருக்கிறதென'ச் சொல்லி மழுப்பினேன். இப்போது நண்பருக்கும் விளங்கியிருக்கும், ஏன் தன்னை இவன் முன்னே போகச் சொல்லி அந்த மரநிழலில் தரித்து நின்றான் என்பதும். அதற்காகவெல்லாம் கவலைப்படமுடியுமா என்ன? ஆக, சந்தர்ப்பம் இரண்டாவது முறையாக மீண்டும் தட்டியது என்க.

இப்போது Holguin னில் சந்தித்த நண்பர் ஒரு மின்னஞ்சல் இப்படியாக அனுப்பியிருந்தார்.

This is because most of the time I ride a bike and a snowboard alone - friends always have something better to do: shopping, they are tired, etc. Sometimes a lonely trip ends up pretty cool, like I met you.
........
.............
Now it is cold outside so you will have more time to finish your book, especially that you have a lot of new experiences from Cuba :-)

ஆம், நண்பரே...ஒருநாள் அதையும் எழுதுவேன்.
நடந்ததை நடக்காதமாதிரியும், நடக்காததை நடந்தமாதிரியும்!

0 comments: