ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால் போய் அவரோடு கதைத்திருக்கலாம் எனச் சொன்னேன். ஆகக்குறைந்தது எப்போதும் படை, பரிவட்டம், பல்லக்குச் சூழச்செல்கின்றவர் என எண்ணியிருந்த எனக்கு இப்படித் தனித்துப்போனதை ஒரு படமாவது எடுத்திருக்கலாமெனத் தோன்றியது. பிறகு சாரு பற்றியே நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் அருகில் நிறுத்தியிருந்த காருக்குள் ஒருவர் ஏறியதும் எங்களைப் பார்த்து மெல்லச் சிரித்து கைகாட்டுவதும் தெரிந்தது. அது எஸ்.ராமகிருஷ்ணன். சரி அவருக்கு நாங்கள் யாரெனத் தெரியவா போகின்றது, சும்மா இரண்டு மூன்று பேர் இலக்கியம் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என எழுந்தமானமாய் கைகாட்டியிருப்பார் என நினைத்துக்கொண்டேன்.
அடுத்தநாள் உயிர்மை 'ஸ்டாலுக்கு'ப் போனபோது எஸ்.ராமகிருஷ்ணன் இருந்தார். அவரிடம் கனடாவிலிருந்து வந்திருக்கின்றேனென வணக்கம் சொன்னேன் (அவரை ஏற்கனவே கனடாவில் நேரில் சந்தித்திருக்கின்றேன்). நீங்கள் நேற்று புல்வெளியில் இருந்தது கதைத்துக்கொண்டிருந்ததைக் கண்டேன் என்றார். முதல்நாள் நாங்கள் சாருவைப் பற்றிக் கதைத்ததும் அவரின் காதில் விழுந்திருக்குமா என யோசனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
எஸ்.ரா எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளராய் ஒருகாலத்தில் இருந்தார். எனது வளாக காலத்தில் வாசித்த அவரின் உபபாண்டவமும், பால்யநதியும் எனக்குள் அன்றைய காலத்தில் கவிழ்ந்திருந்த பெருந்தனிமையை விலத்தத் துணையாயிருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். அவரின் யாமமும், துயிலும் பற்றி விரிவாக எனது வாசிப்பை எழுதியுமிருக்கின்றேன். இப்போதும் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரா என்று அன்றுபோல துணிந்து கூற முடியுமா என்று தெரியவில்லை.
அவரின் 'நிமித்தம்' வாசிக்கத் தொடங்கியபோது, பின்னட்டை பதிப்பாளர் குறிப்பு மட்டுமின்றி எஸ்.ராவின் முன்னுரையும் முழுக்கதையையும் சொல்லிவிட்டாற்போல உணர்ந்து கொஞ்சப் பக்கங்களுக்கு அப்பாலே அந்த நாவலைத் தொடரமுடியாது போனது. ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் 'சஞ்சாரம்' நாவலிற்குள் -முன்னுரை எதையும் வாசிக்காது- நேரடியாகவே நுழைந்திருந்தேன். சிறு சிறு கதைகளாக அவ்வப்போது அருமையான தெறிப்புக்கள் இருந்தாலும் ஒரு முழுநாவலாகப் பார்க்கும்போது அது அவ்வளவாய் என்னைக் கவரவில்லை. ஒவ்வொரு எழுத்தாளரையும் அவர் முன்னே எழுதிய படைப்புக்களோடு ஒப்பிடுவது நல்லதா அல்லதா என்று தெரியாவிட்டாலும், இவ்வளவு காலமும் இத்தனை புத்தகங்கள் எழுதிய ஒருவரிடம் ஏதோ வித்தியாசமான ஒன்றையே வாசிப்பு மனோநிலை கேட்கின்றது.
ஆனால், சஞ்சாரத்தின் பின், நான் வாங்கி வந்திருந்த எஸ்.ராவின் ''காஃப்கா எழுதாத கடிதம்' என்ற அபுனைவுத்தொகுதியை வாசித்தபோது, பழைய எஸ்.ராவைக் கண்டுபிடித்தாற்போல சிறு நிம்மதி வந்தது. அதிலும் அவர் இயற்கையையும் தனிமையையும் எழுதிக்கொண்டு போகும் கட்டுரைகளிலெல்லாம், ஒவ்வொரு படைப்பாளியையும் அறிமுகப்படுத்தும்போது, அந்த எழுத்தாளரின் படைப்புக்களோடு தொடர்புடைய/சமாந்தரமாய் வாசிக்கக்கூடிய பிறரையும் குறிப்பிடும்போது தேடலுடைய வாசகர்களை அவர் கவனத்தில் கொள்கின்றார் என்பதில் மகிழ்ச்சி வந்தது. புத்தரையும், ஸென்னையும், இயற்கையையும் நெருக்கமாய்ப் பார்க்கும் ஒருவருக்கு, அதே அலைவரிசையிலே நின்று பேசும் இந்தத் தொகுப்பு இன்னும் பிடிக்கவும்கூடும்.
அ-புனைவுகளை அநேகமாய் எங்கிருந்தோ இடையில் தொடங்கி நேரமெடுத்து ஆறுதலாகவே வாசித்து முடிப்பேன். 'காஃப்கா எழுதாத கடிதம்' ஐ ஒரு ஒழுங்கில் வாசித்ததும், அதை ஒரேதடவையில் வாசித்ததும் சற்று விதிவிலக்காய் இருந்தது. ஏற்கனவே பெரும்பாலான கட்டுரைகளை எஸ்.ராவின் இணையதளத்தில் வாசித்திருந்தாலும், சோர்வின்றி திரும்பவும் அவற்றை மீண்டும் பயணிக்க முடிந்திருந்தது. நீண்டகாலத்தின்பின் எஸ்.ரா என்னோடு நெருக்கமாய் கூடவே நடந்து வந்த அழகிய சிறுபயணம் இது.
'தொடர்ந்த வாசிப்பின் வழியேதான் என்னைப் புத்துருவாக்கம் செய்துகொள்கின்றேன். பயணமும் புத்தகங்களும்தான் எனது இரண்டு சிறகுகள்' எனச் சொல்கின்ற எஸ்.ராவிற்கு, தொடர்ச்சியாக எழுதாமல் அவ்வப்போது சற்று இடைவெளிவிடுவதும் கூட உங்களைப் புத்துணர்ச்சி செய்யக்கூடுமென -அவர் மீது இன்னமும் நம்பிக்கையிழக்காத- ஒரு வாசகராய்ச் சொல்லிக்கொள்ளவும் விரும்புகின்றேன்.
0 comments:
Post a Comment