கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்

Monday, June 22, 2015


அந்நியன்

மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை.

இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது.  அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண்ணைப் போல, பெருநகருக்குள் இருந்தாலும் அவ்வளவு சப்த்மில்லாத ஓரிடம்.

சிலர் நாய்களோடு நடந்துகொண்டிருக்கின்றார்கள்.  வேறு சிலர் இணைகளாய் கைகோர்த்து கதைபேசிக் கொண்டு செல்கின்றார்கள். சலிப்பான நாளாந்த வாழ்விலிருந்தும், பேரிரைச்சலிருந்தும் வெளியே இப்படிக் கொஞ்சநேரமேனும் தப்பிவிட்டவர்களைப் பார்க்கும்போது அந்நியனுக்கு ஏதோ நெருக்கமும் நெகிழ்வும் அவர்கள் மீது பெருகுகிறது.

வானம் சாம்பலாகிப் போகும்போது கடலும் அதே வர்ணம் பூசி மென் அலைகளோடு மிதந்துகொண்டிருக்கிறது. 'சாம்பல் வானத்தில் மறைந்த வைரவர்கள்' மீண்டும் தோன்றக்கூடிய தருணமாகக் கூட இது இருக்கக்கூடும். கடலையொட்டி நீண்ட நெடிய செம்மண் பாதை அருகிலியிருப்பதும் ஓர் அதிசயமென்றுதான் கூறவேண்டும். நீர் அரித்த சிறு மண்குன்றுகள் இன்னமும் நம்பிக்கையை இழ்ந்துவிடாத இயற்கையின் பெரும்சக்தி பற்றி எதையோ சொல்ல முயல்கின்றன. மனிதர்கள் அவ்வளவு ஏறாத ஒரு மலையில் யாரோ படுக்கையை மரங்களைக் கொண்டமைத்து தங்கி விட்டுப் போயிருப்பதை காணக்கூடியதாய் இருக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களிடமிருந்து தப்பியோடி, தம் மனச் சிலந்திகளின் வலைப்பின்னல்களிலிருந்தும் தப்பிக்க முயற்சித்ததன் ஒரு தடயமாக இது இருக்கவும் கூடும்.

அந்நியன் நடந்தபடி போய்க்கொண்டிருக்கின்றான், பாதையும் முடிவுறாது விரிந்துகொண்டேயிருக்கிறது. இதற்கு முன் பலமுறை வந்தபோது இருந்த பாதையைப் போல இதுவில்லையென அவனது காலடிகள் வியந்துகொள்கின்றன. காலமும் வெளியும் இல்லா இடத்தில் வாழ்வு என்பது சாத்தியமா என்பதைவிட, காலமும் வெளியும் நம் மனதிற்கேற்ப நீட்சியும் விரிவும் கொள்ளக்கூடியதா என்பதைப் பற்றி யோசிக்கின்றான்.

பறவைகள் வசந்தத்தின் முதற்பாடலை பனித்தூவல்களிடையே இசைத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் சிறகடிக்கின்றன. ஒருவகைப் புல்லினம் தன்னைவிட இரண்டு மடங்கு உயரத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து அந்நியன் திகைக்கின்றான். மெல்லியதாய்த் தட்டினாலே முறிந்துவிடக்கூடிய இந்தப் பொன்னிறப்புற்கள் இப்படி வளரமுடியுமென்பதும் இயற்கையின் விந்தைதான் என வியந்துகொள்கிறான். யாரோ ஒருவர் சமாதானக் குறியீடை நடக்கும் பாதையில் வரைந்து விட்டுப் போயிருக்கின்றார். வியட்னாமில் அமெரிக்கா போர் நடத்தியபோது போருக்கு எதிராக எழுந்தவர்கள் அமைதியிற்காய் முன்வைத்த ஓர் அடையாளம் அது. அந்நியனுக்கு அது எதையெதையோ நினைவுபடுத்துகிறது. வெளியுலகமும் அகவுலகமும் தளும்பாது அமைதியான ஓரு வாழ்வு முறையைக் கொண்டவர்கள் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களென நினைத்துக்கொள்கிறான். அந்த அடையாளத்திற்கு அருகிலேயே 'நான் அமைதியை நேசிக்கிறேன்' என மெல்லிய பனியோடு குழைந்துபோன மண்ணில் எழுதிவிட்டு நகர்கின்றான்.

தொடர்ந்து நீளநடக்கும் அந்நியன் யாரோ ஒருவர் சிறுபாறையில் வைத்துவிட்டுப் போயிருக்கும் அன்னை மேரியின் திருவுருவைக் காண்கிறான். மேரியின் முகத்தில் பரவும் சாந்தம் இயற்கையோடு  இரண்டறக் கலக்க முடிந்த ஒருவரினால் மட்டுமே சாத்தியமானது போலத் தோன்றுகின்றது. செய்த பாவங்களுக்கும், இனி செய்யப்போகும் பாவங்களுக்குமாய் என்னை மன்னித்துவிடுங்கனென, கடல்விரியும் பின்னணியில் நிற்கும் மேரியைப் பார்த்து வேண்டிக்கொள்கிறான். 'உன்னைப் போன்றவர்களின் பாவங்களை வாங்கிக்கொள்ளத்தானே என் மகனை அனுப்பி வைத்தேன்' என்பதை மேரி சொன்னாற்போல் தோன்றியது. அனுப்பப்பட்ட எல்லாக் கடவுள்களையும் கொன்றுவிட்டு,  கடவுளர்களும் கைவிடப்பட்ட ஒரு கழிவிரக்கக் காலத்தில் அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென அந்நியனின் உதடுகள் முணுமுணுத்துக்கொள்கின்றன.

மேனியில் பனி இலவம்பஞ்சாக மிதந்து வந்து தொடுகின்றன. பின்னர் அவை சொற்பக்கணத்தில் உருவமிழந்து நீராகக் கரைந்தும் போகின்றது. இரண்டு கரிய அணில்கள் பாதையின் குறுக்கே ஓடுகின்றன. ஒன்றையொன்று சீண்டி விளையாடுகின்றன. பல பத்தாண்டுகள் உயிர்த்திருக்கும் முதிய மரங்களின் அடிப்பாகங்களில் பசுமை வர்ணங்களைப் பூசி நிற்கின்றது. “April's air stirs in/willow-leaves.../a butterfly/floats and balances” என்கின்ற பாஷோவின் ஸென் படிமம் அந்நியனுக்கு நினைவில் வந்து தெறிக்கிறது.

நெடுந்தூரம் நடந்தாயிற்று சற்று இளைப்பாறுவோமென, ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்கிறான். சாம்பல் பூசிய வானமும் கடலும் விழிகளுக்குள்ளும் அதே வர்ணத்தைக் கொண்டு வந்துவிட்டாற்போல் தோன்றுகின்றது. இறுதியில் நாம் எதுவுமற்றவர்களாகப் போகும்போது எந்த வர்ணத்தில் இருப்போமென யோசிக்கின்றான் அந்நியன். 'காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்' என்ற பாடல் எங்கிருந்தோ ஒலிப்பதாய்த் தோன்றுகின்றது. தொலைவிலிருந்து அல்ல, தன் ஆழ்மனப் படிமம்தான் அதை இசைக்க விரும்புகிறது என்பதை அறிந்து உடலை உதறிப்பார்க்கின்றான்.

மனிதர்கள் அவனின் முதுகின் பின்னால் கதைத்துக்கொண்டும், உலாத்திக்கொண்டும் மறைந்து கொண்டிருக்கின்றார்கள்.யாரோ ஒருவர் ஓடி வருவதாய்க் காலடிச்சத்தங்கள்  நெருங்க, திரும்பிப்பார்க்கையில் மென் நீலநிற ஸ்வெட்டருடன்  ஒரு பெண் ஓடுவதைப் பார்த்து புன்னகைக்கின்றான்.

கடலைப் பார்த்தபடிமெல்ல மெல்லத் தன்னை மறக்கின்றான், அந்நியன். சப்பணமிட்டு பாறையில் அமரும்போது ஏதோ ஒரு அமைதி வந்துவிடுகின்றது போலும். குதிரைச் சத்தங்கள் கேட்கின்றன. யாரோ காட்டுக்குள் விறகு வெட்டுவதாய்க் காட்சிகள் விரிகின்றன. எதுவெனச் சொல்லமுடியாத நறுமணம் கூட சூழ்ந்துகொள்கின்றது. மெல்ல மெல்ல தானில்லாத ஏதோ ஒன்றில் கரைந்துபோய்க்கொண்டிருக்கின்றான்.  ஒருபொழுது கடல் ஊழியாய் தன்னை உள்ளிழுத்துக்கொள்ளும்போது தான் உடலற்ற ஒருவனாய் ஆகுவதையும் பார்க்கின்றான்.

எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்திருந்தான், எதில் கரைந்திருந்தான், எங்கு தன்னைத் தொலைத்திருந்தான் என்பதன் 'காலமும் வெளியும்' உணராது விழிகளைத் திறந்தபோது, அருகிலொரு பெண் இருப்பதைக் காண்கின்றான். அவளுக்கு, முன்னர் பார்த்த ஓடிக்கொண்டிருந்தவளின் சாயல் இருப்பதைப் போலத் தெரிகிறது.

'உன்னைத் தொந்தரவு செய்துவிட்டேனா?' என்கிறாள் அவள்

'இல்லையே' என்கிறான் அந்நியன்.

'நான் சிலதடவைகள் இப்படியும் அப்படியுமாய் ஓடிக்கொண்டிருந்தேன். நீ இங்கேயே நீண்டநேரமாய் உட்கார்ந்திருந்தாய்'

'சும்மா கடலைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். ஆனால் மனம் எங்கெங்கோ இழுத்துச்சென்றிருக்கிறது'

'இப்படி ஒருவர் நீண்டநேரம் அமர்ந்திருந்தது வியப்பாகவும், ஆனால் அதேசமயம் பயமாகவும் இருந்தது; அதுதான் அருகில் வந்து உட்கார்ந்திருந்தேன்.'

'ஏன், கடல் என்னைக்கொண்டு போய்விடும் என யோசித்தாயா?'

'பலவிதமாய் யோசித்தேன். அவற்றில் ஒன்றில் நீ குறிப்பிடுவதுந்தான்.'

'பிரச்சினைகள் இருந்தால்தான் தனிமையில் இருக்கவேண்டும் என்றில்லைத்தானே?'

'உண்மைதான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது தனித்தே அதை அனுபவிக்க விரும்புகின்றவள். இல்லாவிட்டால் இப்படியும் கூறலாம். தனித்திருக்கும்போதே மகிழ்ச்சியின் உச்சத்தை உணரமுடிகிறது என்னால்.'

'நீ கதைப்பதைப்பார்த்தால், புத்தரை அறிந்து வைத்திருப்பது போலத் தோன்றுகின்றது'

'ஆமாம். நான் புத்தனைப் பின் தொடர்பவள்'

'புத்தரைத் தெருவில் கண்டால் கொன்றுவிடவேண்டும் என ஸென் கூறுகிறது, எப்படி நீ புத்தரைப் பின் தொடர்பவளாகச் சொல்லமுடியும்'

'நானுமொரு புத்தராக மாறும்போது புத்தரைக் கொன்றுவிடுகின்றேன். இப்போது புத்தரைப் பின் தொடர்வதைவிட வேறு வழியில்லை'

'விழிப்படைந்த மனதுக்கு புத்தரோ ஜீஸசோ பெயர்கள் மட்டுமே. அதற்கப்பால் எந்த வரலாற்றையோ எதிர்காலத்தையோ அடையாளப்படுத்துவதில்லை'

'நாங்கள் தேநீர் அருந்தப் போவாமா?'

'என்னைப் போன்ற அந்நியன் ஒருவனை எப்படி நம்பி அழைக்கின்றாய்?'

'புத்தர்கள் நமக்கு முன் சாட்சியமாய் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில்தான்'

'புத்தர் சாட்சியாய் இருக்க கொலைகள் புரிந்த வரலாறு நான் பிறந்த நாட்டில் நிகழ்ந்திருக்கின்றது'

'சிலுவைகளை எடுத்துக்கொண்டு கடல்கடந்து வந்தவர்கள் இங்கேயிருந்த ஆதிக்குடிகளை வதைத்த வரலாறுதான் இங்கேயும் நடந்திருக்கிறது'

'மானுடத்தால் நிகழ்ந்த பேரிடர்கள் இல்லாத ஒரு நிலப்பரப்பை இனிக் கண்டடைதல் சாத்தியமேயில்லை'

'உண்மைதான். ஆனால் இயற்கையிற்கு ஏதோ ஒருவகையில் எல்லாவற்றையும் ஆற்றும் சக்தியிருக்கிறது'

'வரலாற்றை எளிதாய்க் கடந்துவரச் சொல்கின்றாயா?'

'இல்லை, இயற்கையின் முன் நாமெல்லோரும் மிகச்சிறிய துளிகளே என்றுணரும்போது நமது அதிகாரத்தின் போலித்தனங்கள் தெரியும் எனச் சொல்ல வருகின்றேன்'

'சரி, நாம் தேநீர் அருந்தச் செல்லலாம்'


அவன்

என் பிரிய புத்தா,  இந்த மாலைவேளை மங்க மங்க, ஏன் என் மனதும் ஒளி குறைந்து போகின்றது? 'எதையாவது அறிவது என்றால் முதலில் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும்' என்ற உன் வார்த்தையைப் போல இதுவும் இருந்தால் நல்லதிற்கு என்று இருந்திருப்பேன். ஆனால் மனமேன் ஒரு பூனையைப் போலச் சோர்ந்து சுருண்டு படுத்திருக்கின்றது என்று விளங்கவில்லை. எல்லோரும் 'உனக்கு விடுதலை தருவது எப்படி' எனப் பேசித்திரிகையில், நீதானே முதன்முதலில் 'உன் சுயத்திலிருந்துதான் உனக்கு முதலில் விடுதலை  வேண்டும், அதைக் கவனி' என எல்லாவற்றையும் புரட்டிப்போட்டவனல்லவா?

உன்னோடு ஆறுதலாக அமர்ந்து அருந்துவதற்கெனத்தானே ஒரு பழமைவாய்ந்த வைன் போத்தலை நீண்டநாட்களாய் குளிர்பதனப்பெட்டியில் வைத்து காத்துக்கொண்டிருக்கின்றேன். சென்றமுறை வீட்டுக்கு வந்தபோது எப்போதும் மனம் உறுதியாய் முடிவுகளை எடுக்கமுடியாது சஞ்சலம் அடைகிறதே, நான் உறுதியானவாய் மாறும்வரை அருகில் இருக்கக்கூடாதா என்றல்லவா புத்தா உன்னிடம் கேட்டிருந்தேன். நீயோ புன்னகைத்தபடி, 'ஒரு மாணவர் எப்போது கற்றுக்கொள்ளத் தயாராகின்றாரோ அப்போதே அவருக்கான ஆசிரியர் முன்னால் தோன்றிவிடுகின்றார்' எனச் சொல்லி,  அப்படியே நீ வாழ்வில் எதையாவது கற்றுக்கொள்ளத் தயாராகும்போது நானும் உன் முன்னால் வந்துவிடுவேன் என்றல்லவா கூறிச் சென்றாய்.

நான் இந்த அறையில் தனிமையை நிரப்பியபடி வெளியில் சிறுகுன்றைப் போல விரியும் நிலத்தில் எழுந்த மரங்களையல்லவா விழியெறிந்தது பார்த்தபடியிருக்கின்றேன். இங்கே எந்நேரமும் பல்வேறு குருவிகளின் ஒலி காற்றில் கரைந்தபடியே இருக்கின்றது. இதுவரை இந்தப் பனிதேசத்திற்கு வந்தபின் கேட்டமுடியா சில்வண்டுகளின் ஒலியையும், காகங்களின் கரைதலையும் கேட்டிருக்கின்றேன் என்றால் நீயும் மகிழத்தான் செய்வாய்.

இயற்கையை உற்றுப் பார்க்க பார்க்க, உள்மனதின் ஆழங்களுக்குப் போவது ஒரளவிற்கு சாத்தியமாகின்றது. உள்ளே பார்த்தலும், பிறகு எதுவுமில்லையெனத் தெளிதலிலுந்தான், எவரும் பிறப்பதுமில்லை எவரும் மறைவதில்லை என்ற உன் சூத்திரங்கள் உருவாகின்றனவோ தெரியாது.

எதைத்தான் நான் சரியாகக் கற்றிருக்கின்றேன்? நீ கூட என்னைப்போன்றவர்களுக்கு முதன்முதலில் வெறுப்பின் அரசியல் திருவுருவாக அல்லவா அறிமுகமாகினாய். உன் பீடங்களில் அரளிப்பூக்களையும் தாமரைப்பூக்களையும் பரப்பவேண்டியவர்கள்,  வேறு மொழிபேசுகின்றார்கள் என்ற ஒரேகாரணத்திற்காய், என் இனத்தவர்களின் இரத்தத்தையல்லவா ஊற்றி உனக்குப் புது உருவம் கொடுத்திருந்தார்கள்.

இப்போது மட்டுமென்ன, 'நீ வேண்டாம் வேண்டாம் என கதறக் கதற இரவோடு இரவாகத் தூக்கிக்கொண்டு, அரசமரங்களின் முன் வைத்துவிட்டு இந்தத் தலைமுறைக்கும் வெறுப்பின் அரசியலை அவர்கள் புகட்டவில்லையா? எதைத் திணிக்கின்றார்களோ, அதற்கான எதிர்ப்பு விசை இன்னும் வீரியமாய் மேலெழும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? இல்லை,  இன்னொரு மொழியைப் பேசினாலும் முன்னொரு காலத்தில் உன்னையும் தங்களின் வழிகாட்டியாகக் கொண்டு வழிபட்டவர்கள் தமிழர்கள் என்கின்ற உன் மெல்லிய குரலை, புத்தா, யார்தான் கேட்கப்போகின்றார்கள்?

உறவு, நட்பு, காதல் என எல்லாவற்றையும் தப்பும் தவறுமாய்க் கற்றுக்கொள்கின்ற ஒருவன், உன்னையும் நீ கூறிச்சென்றவைகளையும் ஒழுங்காய்க் கற்றுவிடுவான் என்பதை நீ நம்பப்போவதில்லைதான். ஆனாலும் புத்தா, ஏனிந்த தளும்புகின்ற மாணவனைத் தேடித் தேடி  நீ அடிக்கடி வருகின்றாய்? இவனது இந்தத் தனிமை உன்னையும் அச்சுறுத்துகின்றதா? குறித்த நேரத்தில் வருவேன் என்ற புத்தன் வரவில்லை, ஆதனால் என்னை மாய்த்துக்கொள்கின்றேன், இந்த முடிவுக்குக் காரணம் புத்தன்தான் காரணம் என்றொரு குறிப்பை எழுதிவிட்டு போய்விடுவேன் என்ற அச்சத்திலா, எத்தனையோ அவசர வேலைகளிருக்க என்னைத் தேடி வருகின்றாய்?

அப்படியிருக்கவும் சாத்தியமில்லை. எத்தனை அரிய மனிதர்கள் இந்த உலகில் வந்தமாதிரியே சட்டென்று போய்விடுகின்றார்களே. நான் யார் என்றும், இந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்றும் தேடித் தேடிக் களைப்புறும்போது ஒவ்வொருபொழுதுமல்லவா நீ என் முன்னால் தோன்றுகின்றாய். நீ என்பதே எவரும்/எதுவும் இல்லையெனத் தெளிய இன்னும் கொஞ்சத் தூரந்தான் இருக்கிறதென - அது எவ்வளவு நீண்ட பயணமாய் இருந்தாலும்- என்னை உற்சாகப்படுத்தத்தானே  இந்தப் பனிக்குள்ளும், சுழன்றாடும் காற்றுக்குள்ளும் மெல்லிய ஆடையையை அணிந்தபடி வருகின்றாய்.

புத்தா, உன் திருவடிக்கு நான் மீண்டும் ஒரு தாமரைப் பூவோடு எனக்குப் பிரியமான ஒருவரோடு  மலையேறுவதற்குள் ஒருமுறை என்னைச் சந்திக்க வந்துவிடு. உனக்காய்த் தயாரித்து ஆறிப்போன தேநீரைத் திரும்பத் திரும்ப சூடாக்கிக்கொண்டு இருப்பதும் கஷ்டமாயிருக்கிறது. இது புத்தனுக்குத் தயாரித்த தேநீர் என்பதால் எவராலும் அருந்தமுடியாது. 'எதைப் பற்றி நினைக்கின்றாயோ, அதுவாக நீ ஆகின்றாய்' என்று மென்மையாப் போதித்தவன் நீ. இந்தக் கணத்தில் என் நினைப்பெல்லாம் என்னிலிருந்து எனது 'நானை' எப்படி விடுவிடுப்பது என்பதே.


அந்நியனும், அவளும்

அந்நியர்களை நேசிப்பவர்கள் சிலவேளைகளில் கைவிட்டாலும் நேசம் கைவிடுவதில்லை. தாம் கிறுக்குத்தனமாய் இருப்பதால்தான் எவரும் நெருங்குவதில்லையென அந்நியர்கள் நினைத்துக்கொண்டாலும், அவர்களின் கிறுக்குத்தனத்தின் மீது அபரிதமான நேசத்தையுடையவர்கள் இந்த உலகில் இருக்கின்றார்கள்.

அலைவரிசைகள் வெவ்வேறு வெளியில் மிதந்துகொண்டிருந்தாலும், அவை தமக்கான காலத்தையெடுத்து எப்படியோ நெருங்கிவந்துவிடத்தான் செய்கின்றன. இயற்கை ஒரு காலத்தில் மரங்களில் இலைகளை உதிர்க்கச் செய்வதும், பின்னர் துளிர்க்கச் செய்வதும் போன்ற  விந்தையைப் போன்றதுதான் இது.

தேநீர் குடிப்பதுடன் மென்நீலப்பெண்ணுடன் தொடங்கிய சந்திப்பு மேலும் மேலும் நீளத்தொடங்கின.  அந்நியனுக்கும் அவளுக்கும் பிடித்த மலையேற்றம் செய்வதும், சைக்கிள் ஓடுவதும் என சேர்ந்து பொழுதுகள் கழியத்தொடங்கின.  காடுகளையும் வாவிகளையும் அவர்கள் தேடியலைந்தனர். அடிக்கடி, செல்லவேண்டிய இடங்களுக்குப் போகாது தொலைந்துபோய்க்கொண்டிருந்தாலும் அதுவும் அவர்களுக்குச் சுவாரசியமாக இருந்தன. இலக்குகளை விட இலக்குகளற்ற அலைதல்களிலேயே விடுதலையும், மிகப்பெரும் வியப்புக்களும் இருப்பதையும் உணர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

ஒருமுறை மலையேற்றம் செய்தபோது, எங்கேனும் ஓரிடத்தில் காம்பிங் அமைத்து ஓரு சில நாட்கள் தங்குவதென தீர்மானித்திருந்தனர். இயன்றளவு இயற்கையிடமிருந்தே எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்து பார்ப்பதன் ஒரு முயற்சியாக அதைத் தீர்மானித்திருந்தனர். நான்கைந்து மணித்தியாலங்கள் மலையேறிப் போய் தமது கூடாரத்தை அமைத்துக்கொண்டார்கள். எவரும் பயிரிடாமலே முளைத்திருந்த காளான்களையும், ரெட்டிஷ்களையும் சேகரிக்க முடிந்திருந்தது. ஏற்கனவே வரும்வழியில் சோளப்பொத்திகளை எடுத்தும் வந்திருந்தனர். சிறு அடுப்பில் நீரைக் கொதிக்க வைத்த சோளத்தை மணிகளாய் உதிரச்செய்து சூப் செய்தார்கள். காளான்களையும் ரெட்டிஷ்களையும் வெந்தும் வேகாமலும் அவியவிட்டு சாப்பிட்டார்கள்.

அன்றைய மாலைதான் அவர்கள் இருவரும் தம் உடல்களின் வர்ணங்களை, இயற்கையைச் சாட்சியாக வைத்து அறிந்துகொண்டார்கள். கனவுகள் நுரைத்துப் பெருகும் கலயங்களை, மொழிகள் தாண்டிய வரைபடங்களை உடல்கள் தமக்குள் ஒளித்து வைத்திருந்த இரகசியங்களை வியப்புடன் உள்ளெடுத்துக்கொண்டனர்.

மரங்கள் சூழ்ந்த ஏகாந்தம் எல்லா தளைகளையும் அறுக்கச் செய்தன. ஆடைகள் எல்லாம் உதறியெறிந்து சூரியனுக்கு தம் நிர்வாணங்களை படையிலிட்டார்கள். இனி மலையேறிக் கீழே போகும்வரை ஆடைகள் எதுவும் அணிவதில்லையெனவும் மகிழ்ச்சியின் எல்லையில் நின்று உரத்துச் சொல்லிக்கொண்டார்கள்.

சூரியன் மறைந்து, இருள் மெல்ல மெல்ல அடர்ந்துவந்தபோதும் தம்மை மறந்திருந்தார்கள். எப்போதுமே தன்னை வெறி பிடித்த நாய்போலத் துரத்திக்கொண்டிருக்கும் காமம், அருகில் ஒருத்தி நிர்வாணமாய் இருந்தபோதும், வாலைச் சுருட்டி அமைதியாக இருந்ததைக் கண்டு அந்நியனுக்கு வியப்பாக இருந்தது. காமத்தைத் தாண்டிப்போய் காமத்தை இரசிக்க முடிகின்ற கணத்தில் எல்லையற்ற பேரின்பத்தின் தெறிப்பு இருக்கிறதென அந்நியன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

அவளே,  தான் எதுவுமின்றி உதிரும் பெரும் பயணத்தின் முதல் ஒளியைக் காட்டியவளென விபரிக்கமுடியாப் பேரன்புடன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

மயிர்கள் அடர்ந்த அல்குலிலிருந்து, யாரோ ஒருவன் தேநீருடன் காத்துக்கொண்டிருப்பதும், புத்தர்  அவன் வீடு தேடிச் செல்வதும்  காட்சிகளாய் விரியத்தொடங்கின.  இது எப்படி இவளின் உடலிற்குள்ளிருந்து சாத்தியமென வியப்பும் திகைப்பும் கலந்து அவதானிக்கையில்,  அந்த 'அவனும்' புத்தரும் தாமரை இதழ்களாய் மாறி எண்ணற்ற வட்டங்களாய் விரிந்து எதுவுமற்றவர்களாய் ஆகிக்கொண்டிருப்பது நிகழத்தொடங்கியது.

சட்டென்று, 'நீதான் எனது புத்தர், சந்தேகமேயில்லை' என அவளின் காதுக்குள் முணுமுணுத்தான்.

விழிகள் மூடிக் கிறங்கிக்கிடந்த தருணத்திலும், 'பாதையில் புத்தரைக் கண்டால் கொல்லவேண்டும் எனச் சொன்னவன் நீ 'என்றாள் அவள்.

'நீயும், நானும் வேறுவேறானவர்கள் இல்லை என்று தெரிந்தபின், இப்பிரபஞ்சத்தில் எவரும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்பதையும் அறிந்தேன்' எனச் சொல்லி அவளின் விழிகளிரண்டிலும் மெல்ல முத்தமிட்டான்.

அவள் தீராக் காதலுடன் இன்னும் இறுக்கி அணைத்தபோது, அந்நியன் ஒரு முயல்குட்டியாய் உருமாறியிருந்தான்.


(நன்றி: 'உரையாடல்' - இதழ் 03)

2 comments:

Athisaya said...

nan muluthumai unarum padaopu than anniyan...Arumai

6/22/2015 09:15:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி அதிஷயா.

6/23/2015 12:11:00 PM