அறிதலை அறிதலென்று அறியாது அறிதல்
திருவண்ணாமலையில் நின்ற சமயம் என்னைச் சந்திப்பதற்காய் வெவ்வேறு நகர்களிலிருந்து நண்பர்ள் சிலர் வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து வந்த ஒரு நண்பர் அடுத்தநாள் வேலை நிமித்தம் திரும்பவேண்டியிருந்ததால் வந்த அன்றே அவர் ஊர் திரும்பிவிட்டார். நானும் மற்றொரு நண்பரும் அடுத்தநாள் விடிகாலையில் கிரிவலப் பாதையைச் சுற்றுவது என்று முடிவு செய்தோம். விடிகாலையில் கிரிவலம் சுற்றுவது அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் விடிகாலை 4.30 மணிக்கு கிரிவலம் சுற்றுவதாய்த் தீர்மானித்திருந்தோம். என் 'விடிகாலைத் தவத்தை'ப் பற்றி கனடாவிலேயே நன்கு அறிந்த, கூடவேயிருந்த மற்ற நண்பர் 'இதெல்லாம் நடக்கிற காரியமா...' என நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். ஆனாலும் நண்பா, 'அப்போது பார்த்த அவனில்லை நான், நாளை விடிகாலைத் தவத்தைக் கலைத்துக் காட்டுகிறேன்' என மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டேன்.
கிரிவலம் சுற்றுவதற்கு வருவதாய்க் கூறிய தோழி, 4.30 மணியளவில் இருந்தே தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியதோடு அல்லாது, ஒவ்வொரு 1/2 மணித்தியாலத்திற்கு ஒருமுறை அலாரம் போலவும் விடாது அழைத்தும் பார்த்தார். ஒருமாதிரியாக 7.30யிற்கு போனால் போகட்டுமென தவத்தைக் கலைத்து அலைபேசியை எடுத்தேன். இனியும் நீ வரவில்லை என்றால் இப்படியே தான் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டுவிடுவேன் என்றார். தவத்தைக் கலைப்பதை விட பெண்களின் சாபத்தை வாங்கினால் வாழ்வு இன்னும் மோசமாகிவிடும் என்று அவரோடு 8.00 மணியளவில் இணைந்து கொண்டேன்.
நமது கிரிவல யாத்திரையை ரமணாச்சிரமத்திலிலிருந்து தொடங்கினோம். யாராவது முன்னே நடந்து போய்க்கொண்டிருந்தால் அவர்களின் பின்னால் போனால் எளிதாக நடந்து முடிக்கலாமென நினைத்தோம். அப்படியெவரும் முதலில் அகப்படவில்லை. இப்படி நன்கு விடிந்தாப்பிறகு யார் கிரிவலம் சுற்றப்போகின்றார்கள்? ஆனால் ஒரு சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் தான் ஷீரடி சாய்பாபா(?)வின் ஆச்சிரமத்திற்குப் போகப்போகின்றேன், கையால் சக்கரவண்டியைச் சுற்றி கை வலித்துப்போய்விட்டது எங்களைத் தள்ளிக்கொண்டு வரமுடியுமா எனக்கேட்டார். தோழியும் நானுமாய் அவரைத் தள்ளிக்கொண்டு கிரிவலத்தைச் சுற்றத்தொடங்கினோம்.
இவ்வாறு நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு நண்பரைச் சந்தித்தோம். அவர் சிறுகிராமங்களிலிருந்து வந்த மாணவர்களுக்கு திருவண்ணாமலையைக் காட்டிக்கொண்டிருந்தார். ஏழெட்டு மாணவர்களை ஒவ்வொருவரையும் இடைவெளி விட்டு தனியே கிரிவலப்பாதையிற்கு எதிர்ப்புறமாய நடக்கவிட்டு, பாதையில் தெரியும் எல்லாவற்றையும் அவதானிக்கச் சொல்லியிருந்தார். ஒரு பாழடைந்த கேணியின் (குளத்தின்) படிக்கட்டுக்களில் இருந்து அவர்கள் தமது அனுபவங்களை எழுதிக்கொண்டிருந்தார்கள். என்னையும், தோழியையும் பயணங்கள் பற்றி நம் அனுபவங்களை அந்த மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளச் சொன்னார். புதிய நிலப்பரப்புக்ளை, கலாசாரங்களை, வெவ்வேறுவகையான மனிதர்களைச் சந்திக்க வைக்கும் பயணங்கள் எப்போதும் எங்கள் மனதை விசாலமடையச் செய்யக்கூடியவை. மேலும், எமக்குள் நிகழும் மாற்றங்களை பயணிக்கும்போது சிலவேளை அறியமாட்டோம். ஆனால் பயணம் முடிந்தபின்னர் நமக்குள் நிறைய மாற்றங்களை உணர்வோம் எனச் சொன்னேன்.
அந்த மாணவர்களை கிரிவல அனுபவங்களைக் கூறச்சொன்னபோது, அவர்கள் எவ்வளவு நுட்பமாக கிரிவலப்பாதையைக் கவனித்திருக்கின்றார்கள் என்பது புரிந்தது. சூரிய ஒளியில் துலக்கம் பெறும் காட்சிகளிலிருந்து, சிறு சிறு ஒலிகள் நினைவுபடுத்தும் ஞாபகங்கள், பெண்கள் தனியாகவும், எதிர்ப்புறமாகவும் நடக்கும்போது தென்பட்டவர்களின் முகக்கோணங்கள், பசியோடு வெறுமையான வயிற்றில் நடக்கும்போது உணவகங்களின் சாப்பாட்டு வாசனையின் அருமை எனப் பலதை விவரித்துச் சொன்னபோது, நாங்கள் இதுவரையில் கிரிவலப்பாதையில் நடந்தபோது எதை அனுபவித்தோம் என நினைத்து வெட்கமே வந்தது. நிறைய எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாய் அலைய அதனோடுதான் நிறையநேரம் போராடிக்கொண்டிருந்திருக்கின்றேன் என்பது ஞாபகம் வர ஒருவகை சோர்வே எனக்குள் எஞ்சியது. ஆனபோதும், எங்களின் நடைக்கு அந்த மாணவர்கள் அழகான வர்ணங்களை அள்ளிவீசினர் என்று அவர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.
கிரிவலப்பாதையில் நடக்கும்பொது காலணி அணிந்தோ, ஓய்வெடுத்தோ நடக்கக் கூடாதென நினைக்கின்றேன். நாங்கள் இதையெல்லாம் செய்ததோடு, ஒரு தெருக்கடையில் இட்லி,தோசை சாப்பிட்டு, இன்னொரு கடையில் பழச்சாறு அருந்தித்தான் உலாவை நிகழ்த்திக் கொண்டிருந்தோம். இடையில் இலங்கை அரசியல் பற்றியும் பேசிக்கொண்டு போனோம். இப்போது நான் நேரடியாக அரசியல் பேசுகின்ற செய்திகளை/ஆக்கங்களை விரிவாக வாசிப்பதில்லையெனவும், ஆயுதபோராட்டங்களின் மீது நம்பிக்கையற்றும் போய்விட்டதெனவும் கூறினேன். நண்பரோ, ஒடுக்குமுறை கொடூரமாய் இருக்கும்போது ஆயுதம் ஏந்துவது தவிர்க்கமுடியாதல்லவா? என்றார். உண்மைதான், இன்னமும் எல்லாவித நெருக்கடிகளும் அப்படியேயிருக்கும், இலங்கை போன்ற நாட்டில் எதுவும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் ஆயுதங்கள் எவ்வளவு பேரழிவைத்தரும் என்ற தலைமுறையின் சாட்சியங்களான இருந்த என்னால் இன்னொரு ஆயுதப்போராட்டம் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை என்றேன்.
தொடர்ச்சியில், இப்போது எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழப்போராட்டம் பற்றிய நூற்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். 'வன்னி யுத்தம்', 'ஊழிக்காலம்', 'கொலம்பஸ்சின் வரைப்படம்' போன்றவற்றில் இருக்கும் நம்மை உள்ளே ஈர்த்துக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பது அண்மையில் வெளியான 'ஆயுதஎழுத்தில்' இல்லையெனவும், அப்புனைவின்(?) பெரும் பலவீனமே அதுதான் எனவும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
மேலும், ஈழப்போராட்டம் என்பது தன்னளவில் மிகச்சிக்கலானது. அதை ஒற்றைப்பாதைகளாலும், உறுதியான முடிவுகளாலும் உரையாடிக்கொண்டிருப்பவர்கள் இன்னும் அச்சத்தைத் தருகின்றார்கள் என்று அதற்கு உதாரணமாக தமிழகத்தின் ஒரு ஊரில் சந்தித்த ஒரு தோழியின் அனுபவத்தைச் சொன்னேன். புலிகள் இயக்கத்தில் அவரது சகோதரர்கள் இயங்கிக்கொண்டிருந்தார்கள். புலிகளின் கட்டாய ஆட்பிடிப்பில் இந்தத் தோழியும் பிடிக்கப்பட்டார். புலிகள் கடைசிநேரத்தில் செய்த பல விடயங்களை அவர் நேரில் பார்த்திருக்கின்றார். அவ்வாறிருந்தும், கடந்த கார்த்திகை மாதத்தில் அவரிருந்த இடத்தில் கோலமாய் நினைவுச்சின்னங்கள் வரைந்து மாவீரர் தினத்தை இங்கே அனுஷ்டித்திருக்கின்றார். அந்தப் புகைப்படங்களை அவரே காட்டியுமிருந்தார். இவ்வாறுதான் நமது அரசியல் மிகச் சிக்கலானது. இதைப் போன்ற பலரின் அனுபவங்களை எப்படிப் புரிந்துகொள்வதென்று தெரியாது, நேரடி அரசியல் பேசிக்கொண்டிருக்கும் எல்லாத்தரப்பும் எனக்குச் சோர்வையே தரக்கூடியவர்கள் எனச்சொன்னேன்.
இப்படி ஒருமாதிரியாக கிரிவலப்பாதை நடையையும் அரசியலைக் கலந்து முடித்தோம். ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இன்னொரு நண்பரைச் சந்தித்தேன். நான் ரமணாச்சிரமத்தில் தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, உள்ளே நெருக்கமாய்ப் போயும் படமெடுக்கமுடியுமெனச் சொன்னபோதுதான் அவரோடான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.அவரை மீண்டும் ஆறுதலாய்ச் சந்திக்க முடிந்தது நல்லதொரு அனுபவம்.
அவர், தன்னை தென்னாபிரிக்காவிற்கு காந்தி சென்றசமயம், தமிழகத்திலிருந்து போன ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழரின் சந்ததியில் வந்த ஒருவர் என்றார். தாயும், தகப்பனும் வெவ்வேறு மதத்தவர் என்பதால் இரண்டு மதத்திற்குள்ளும் வளர்ந்திருக்கின்றார் போலும். அவ்வவ்ப்போது இந்தியாவிற்கு வருகை தந்தபோது, திருவண்ணாமலை அந்தளவு ஈர்த்துவிட, தென்னாபிரிக்காவில் இருந்த எல்லாவற்றையும் துறந்துவிட்டு, கடந்த 2 வருடங்களாக திருவண்ணாமலையிலேயே வசித்துவருகின்றார்.
தமிழ்ப்பெயர் இருந்தாலும் தமிழில் அவரால் பேசமுடியவில்லை. இங்கேயே இருப்பதால் விரைவில் தமிழ் கற்றுவிடுவீர்கள் எனச் சொன்னேன். நேரமிருக்கும்போது தனது இருப்பிடத்திற்கு தேநீர் அருந்த வாருங்களென அன்புடன் அழைததார். திருவண்ணாமலை ஆலயத்திற்குள் சென்று பார்த்தீர்களா என அவர் கேட்கத்தான், மூன்று நாட்களுக்கு மேலாய் திருவண்ணாமலையில் நின்றும் ஆலயத்திற்குள் போகவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவர் இப்படி சிவன் மீது அளவிறந்த பற்றுள்ளவர் என்று ஏற்கனவே அறிந்திருந்தாலும், பின்னாளில் அவரொரு பாதரெனவும் தெரிந்துகொண்டேன். வெவ்வேறு மத நம்பிக்கைகள் கலக்கின்ற இடத்தில் தோன்றிய அபூர்வப்பூ அவராய் இருக்கவும்கூடும்.
இந்தப் பயணந்தான் எத்தனை ஆச்சரியங்களைத் தந்துகொண்டிருக்கின்றது
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நம்பிக்கைகள் பல மதம் கடந்ததுதான்! அருமையான பகிர்வு சகோ!
5/11/2015 01:57:00 PMPost a Comment