மரணமில்லாது விட்டால் நமது
வாழ்க்கை எவ்வாறிருக்கும் என்றேனும் கற்பனை செய்து பார்த்திருக்கின்றோமா? அவ்வாறு மரணத்தை இன்னுஞ் சந்திக்காது நூற்றாண்டுகளாக வாழும் இரு பாத்திரங்களினூடாக
மொழியின் விளையாட்டைச் செய்துபார்க்கும் புதினமாக ஐந்தவித்தானை ரமேஷ் பிரேதன் எழுதியிருக்கின்றார்.
நாவல் 'மனநோயின் தோற்றமும் வளர்ச்சியும்' என்றும், 'மனநோயின் வளர்சிதை மாற்றம்' என்றும் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.
பகுதி ஒன்றில் மாதவன் என்பவனின் கதை சொல்லப்படுகின்றது.
மாதவனின் மன/உடல் சிதைந்த தமக்கையின் மரணம், வீட்டை விட்டு
வெளியேறிவிட்ட தகப்பன், அவ்வப்போது 'ஆட்டோக்காரர்' ஒருவரோடு
உறவுகொள்ளும் தாய் எனப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அக்காவின் மரணம் இயல்பானதல்ல, அவர் வன்புணர்ந்ததைப் பார்த்த சாட்சி
மாதவன் என்பதை அறியும் தாய், அப்படி வன்புணர்ந்தவனை கொடூரமான
முறையில் பழிவாங்குகின்றார். தகப்பனின் தேவையான அன்பும், தாயின்
அரவணைப்பும் கிடைக்காத மாதவன் தனது தனிமைக்குள் சிக்குப்பட்டு அலைகின்றார்.
பிறகான காலங்களில் தகப்பனோடும், தாயோடும் ஒரு சுமூகமான வாழ்வு கிடைக்கும் என மாதவனின் நம்பிக்கை கொள்ளும்போது, மாதவனின் தாயார் எவரோ ஒருவருடன் ஓடிப்போய்
விடுகின்றார். அதனோடு, தாயைப் பற்றி நினைக்கும் பொழுதுகளை மறந்து வளரும் மாதவன் வாழ்வில் இரண்டு பெண்களைச்
சந்திக்கின்றார். ஒரு பெண் 'வர்க்கத்திற்கும்' மற்றப்பெண் 'சாதி'யிற்கும் தன்னைத்
தாரைவார்க்க பெண் வாசனையில்லாது மிகுதிக்காலத்தைக் கழிக்கின்றார்.
ஒருபொழுது தனக்கான வீட்டைக் கட்டும்போது, தன் சகோதரி உயிர்விட்ட இடத்தில் தாழியொன்றைக் காண்கின்றார். அந்தத் தாழியிற்குள்
இருக்கும் பனிக்குடத்திலிருந்து அவருடைய மகளான பூமிதா பிறக்கின்றாள். தனித்து பூமிதாவுடன்
வாழும் மாதவனோடு, அவரின் முன்னாள் காதலியான தேவகி தன் குடும்பத்தினருடன்
அருகில் வந்து சேர்கின்றார். பிள்ளையே இல்லாத தேவகியிற்கு, ழகரி
என்னும் மகள் பிறக்கின்றார். மாதவன், கொஞ்சம் கொஞ்சமாய் தனிமைக்கு
அல்லது மனநோயின் வளர்ச்சியிற்குள் போகின்றார். பூமிதாவும் வளர்ந்து, தகப்பனின் இருப்பு அச்சுறுத்த அவரை விட்டு விலகி இன்னொரு நகருக்குப் போகின்றார்.
தனது வீட்டிற்கு எவரும் வருவதைத் தடுக்கும் மாதவன், பூனைகளோடும்,
எலிகளோடும், பாம்புகளோடும், கறையான் புற்றுக்களோடும் வாழத்தொடங்குகின்றார்.
'நான்
உனது மரணத்தை எதிர்பார்த்திருக்கின்றேன். வலிகளிலெல்லாம் தலையாய வலி இதுதான்' என மகள் பூமிதா சொல்வதைக் கேட்கின்ற மாதவன், மரணம் பற்றிய
உரையாடலின் நீட்சியில் 'மகளே, மரணத்தைத்
தொடும் வயதில் நீ இல்லை. மரணத்திற்குப் பிறகு ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாததற்குப் பெயர்
மரணம். நீ பிறந்ததும் உனக்குப் பெயரிடுவது என்பது உனது மரணத்திற்குப் பெயரிடுவதுதான்.
உடம்பின் ஒவ்வொரு செயலும் மரணத்தை ஒத்திப்போடுவதே. வாழ்தல் என்பது மரணத்தைக் கொண்டாடுவது.
வாழ்தலின் போதாமையுடன் மரணத்தைத் தொடுகிறோம். தொட்டதும், குழந்தையின்
கையிலிருந்து வெடித்த பலூனுக்குள்ளிருந்த காற்று நீ' என்கின்றார்.
மகளிடம் விடைபெறும் மாதவன் ஒருநாள் தன் வீட்டிலிருந்து முற்றுமுழுதாக நீங்கிச் செல்வதுடன்
இப்புதினத்தின் முதல்பகுதி முடிவுறுகிறது.
இரண்டாவது பகுதியில் தேவகியும், மாதவனும் தாங்கள் 'நாடக அரங்கில்' இருப்பது மாதிரியான பாவனையுடன் தங்களினதும், தாங்கள்
அல்லாததுமான பல்வேறு கதைகளைச் சொல்கின்றார்கள். இருவரும் தாம் நூற்றாண்டுகளாக இறக்காது
இருப்பதையும், பல்வேறு காலங்களில் பல்வேறு நிலப்பரப்புக்களில்
வாழ்ந்த அனுபவங்களையும் எண்ணற்ற கதைகளினூடாக நம் முன் விரித்து வைக்கின்றனர். பல்வேறு
கதையாடல்களினூடாக முதல் பகுதில் குறிப்பிடப்படும் ழகரியும், பூமிதாவும்
இந்தப் பகுதியிற்கும் வந்து சேர்கின்றனர். ழகரியை இவர்கள் இருவரும் தத்தெடுகின்றனர்.
இந்தப் பகுதி முழுவதும் உலகின் வரலாறு, தமிழ் மனங்களின் இயங்குநிலை, பல்வேறு புனைவுகள்/தொன்மங்கள்,
அவை எங்கு தொடங்குகின்றன, எங்கு முடிகின்றன என்று
தெளிவான பிரிப்புக்கள் இல்லாது பல்கிப்பெருகின்றன. வாசிக்கும் நமக்கு இது சுவாரசியமாகவும்,
சிலவேளைகளில் திகைக்க வைக்கின்றதாகவும், அவ்வப்போது
சில விடயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றபோது அலுப்பாகவும் (முக்கியமான இரண்டு
ஆண்களோடு ஒரு பெண் பகிரும் வாழ்க்கை முறைமை) இருக்கின்றன.
ரமேஷ் பிரேதனின் மொழியின்
வசீகரமென்பதே பல்வேறு கதையாடல்களினால் தன் புனைவை நெய்துகொண்டு போவதைச் சொல்லலாம்.
அத்தோடு தன் மொழியால் கட்டிய சிகரங்களைக் கூட, பிறகு தயவுதாட்சண்யமில்லாது
நொறுக்கிக்கொண்டும் போகின்றார். உணவில்லாது கூட சில நாட்கள் உயிர்வாழக்கூடிய மனிதர்களால்,
கதைகளில்லாது ஒருநாள் கூட வாழமுடியாது. கதைகளால் ஆனவர்களே மனிதர்கள்.
அவர்களின் மரணத்தின்பின் பல்கிப்பெரும் கதைகளினாலேயே ஒருவர் மரணமற்றவராகின்றார் என்று
ரமேஷ் வார்த்தைகளில் செய்யும் வித்தைகள் தமிழ்ச்சூழலில் சிலாகித்துப் பேசப்படவேண்டியவை.
ஒரேவகையான நொய்ந்துபோன வார்தைகளால்/கதையாடல்களால், உணர்ச்சிகரமான சாம்பாரை மட்டும் விட்டு இலக்கியச் சோற்றில் ஒரேசுவையுடன் மட்டும்
சாப்பிட விரும்புவர்க்கு, இந்த நடை அவ்வளவு உவப்பில்லாதிருக்கும்.
அத்துடன் விரிந்த தத்துவ, வரலாற்று வாசிப்புக் கொண்ட ஒருவரால்தான், இவ்வாறு அதனூடாக
தனக்கான மாய யாந்தீரிக உலகை விரிக்க முடியும். மற்றவர்களால் போலி செய்யதான் முடியும்,
அசலைப் படைக்கமுடியாது.
ரமேஷ்(-பிரேம்) மொழியில் செய்யும் புதுமையின் திகைப்பு, எனக்கு இப்போதல்ல பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஒருபோதும்
அதுவரை பழகியிராத மொழியில் ரமேஷ்-பிரேமின் 'சொல் என்றொரு சொல்'
வாசித்தபோதும் வந்திருந்தது. கிட்டத்த அதே பாணியாக இருந்தாலும்,
இப்போது ஐந்தவித்தானையும் அலுப்பில்லாதும் அதேவேளை வியப்போடும் வாசிக்க
முடிகின்றதென்றால் அது ரமேஷ் கண்டடைந்திருக்கின்ற 'மொழியின் மர்மம்'
எனத்தான் சொல்லவேண்டும்.
இதே மொழியின் வளத்தோடு கோணங்கி தன் பயணத்தை உற்சாகமாய்த்
தொடங்கி, பிறகு அதற்குள் தொலைத்து/தொலைந்துபோனது போலின்றி, ரமேஷ் அதன் வசீகரமான
மாயச்சூழலிற்குத் தன்னை அவ்வப்போது தாரை வார்த்தாலும் அதிலிருந்து மீளும் சூட்சூமமும்
தெரிந்த கதைசொல்லியாக இருப்பதுதான் நாம் கவனிக்கவேண்டியது.
"கொல்லப்பட்ட
புரட்சியாளர்கள் மூன்றாம் நாளில் உயிர்த்தெழவேண்டும் என்ற ஏக்கம் எல்லாக் காலத்திலும்
மக்களுக்குள் சுரக்கிறது. விடுதலை பற்றிய கதைகளிலிருந்தே, அக்கதைகள் தரும் மரண பயத்திலிருந்தே இனத்தொடர்ச்சி மீதான அக்கறை பிறக்கிறது.
இனக்குழுவில் தனியொருவர் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை. சமூக மரணம் என்பது சாத்தியமில்லை.
யாரொருவரின் கதைகூறலுக்குள்ளிருந்து நீ வெளிப்படுகிறாயோ அக்கணம் மீண்டும் உயிர்க்கிறாய்.
புரட்சியாளருக்கு நிரந்தர இறப்புமில்லை இருப்புமில்லை. தான் கடவுளாகவும் இச்சையிலிருந்து
யாரும் தப்பியதில்லை. கடவுள், அரசன் என யாரையும் சார்ந்திராத
விடுதலை சாத்தியமா? விடுதலை என்ற கருத்துரு சமூக விளைவு. சமூகத்திலிருந்து
வெளியேறிய தன்னிலையே தடையற்ற விடுதலையே நுகரமுடியும் (ப.135)."
------------------
நன்றி: 'அம்ருதா', ஐப்பசி, 2018
0 comments:
Post a Comment