'Milk and Honey' மற்றும் 'The
Sun and Her Flowers'
நாம் இருக்கும் சூழ்நிலைகளுக்கும், சிலவேளைகளில் எமது வயதுகளுக்கும் ஏற்ப நமது தெரிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால் சில விடயங்கள் எந்த வயதிலும் எம்மைத் தீண்டித் தொந்தரவுபடுத்தியபடி இருக்கத்தான் செய்கின்றன. சில நாட்களுக்கு முன் எங்கள் எல்லோரின் அலைபேசிகளுக்கும் ஒரு பதினொரு வயது குழந்தையைக் காணவில்லையென Amber alert ரொறொண்டோவில் அனுப்பப்பட்டிருந்தது. ஒரு மணித்தியாலத்தில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது என அந்த எச்சரிக்கை பின்னர் எடுக்கப்பட்டிருந்தது. எல்லாம் சுமூகமான முடிந்துவிட்டது என நம்பியிருந்த எங்களுக்குக் குழந்தை அவரின் தகப்பனால் கொல்லப்பட்டிருக்கிறது என்ற செய்தி அடுத்தநாள் காலை தெரியவந்தது.
என்னோடு வேலை செய்யும், எப்போதும் நகைச்சுவையாகப் பேசும் நண்பரொருவர் காலை பஸ்சில் வந்துகொண்டிருந்தபோது இந்தச் செய்தியை அறிந்தபோது அந்தக் கணத்தில், அழவேண்டுமெனப் போலத் தோன்றியது என்றார். இதை எங்ளுடன் பகிர்ந்தபோதும் அவரது குரலில் நடுக்கம் ஊடாடிக் கொண்டிருந்தது. எந்த விடயத்தாலும் உணர்ச்சியால் அசைக்கமுடியாத, அவ்வளவு 'ஆண்மைத்தனமான' ஆண் என நான் நினைத்தவரும் எங்களைப் போல அன்று உடைந்து போயிருந்தார்.
இவ்வாறாகத்தான் இன்னொருவகையில் நான் ரூபி கெளரின் (Rupi Kaur) கவிதைகளை வாசித்தபோது உடைந்து போகின்றவனாக இருந்தேன். இத்தனைக்கும் அந்தக் கவிதைகள் அவ்வளவு நேரடித்தன்மையில் எழுதப்பட்டிருந்தும், எத்தனையோ காதல்களையும் அதன் பிரிவுச்சுவைகளையும் அனுபவித்ததவன் என்றபோதும் இந்தக் கவிதைகள் எங்கையோ என் ஆழ்மனதைத் தீண்டி, நிலைகுலையச் செய்தன.சிலவேளைகளில் பாலியல் வன்முறையில் பதின்மத்தைக் கழித்து, காதலில் விழுந்து, பிறகு அதன் பிரிவைக் கண்ட ஒரு பெண்ணை ரூபியின் கவிதைகளில் கண்டதால் வந்த நெருக்கமாகக் கூட அது இருக்கலாம்.
எளிய சொற்களால், நேரடியாக வாசகரை நோக்கிப் பேசும், சிலவேளைகளில் எழுதுபவருக்கும், வாசகருக்கும் ஒரு பிரிவினையே இல்லாது, 'நீ' என்பதை அதிகம் பாவித்தும் எழுதப்பட்ட கவிதைகளுக்குள் எப்படி தொலைந்தேன் என்று நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. ஆனால் தன் இருபதுகளின் தொடக்கத்தில் எழுதி ரூபி வெளியிட்ட இத்தொகுப்பு முழுதும் ஒரு அப்பாவித்தனம் மட்டுமில்லை, அதில் பாசாங்கு காட்டாது உள்ளார்ந்து உணர்ந்ததை அப்படியே எழுத்தில் கொண்டு வந்ததாலும் இருக்கலாம்.
ரூபி கெளர் பஞ்சாப்பில் பிறந்து அவரது நான்கு வயதில் கனடாவுக்கு வந்தவர். தொடக்ககாலத்தில் மொழிப் பிரச்சினையால் ஓவியங்களை வரைவதில் ஆர்வங்கொண்டு, பின்னர் கவிதையையும் தனக்குரியதாக ஆக்கிக்கொண்டவர். வாட்டலூ பல்கலைக்கழகத்திற்கு கற்கும்போது இருந்த காதலும் கைநழுவிப்போக, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி காதலும் கைநழுவிட்ட காலகட்டத்தில் கவிதைகளை பெருவிருப்புடன் எழுதுகின்றார்.
தொகுப்பாக கவிதைகளை வெளியிட எந்தப் பதிப்பகம் கிடைக்காத காரணத்தால், தானே வெளியிட இன்று கிட்டத்தட்ட அவரது முதல் தொகுப்பு 2 மில்லியன் பிரதிகள் விற்று, கவிதைத் தொகுப்பால் இது சாத்தியமா என்று பலரை வியப்பில் ஆழத்தியுள்ளது. ஒரு மண்ணிறக்காரியாக இந்தப் புலம்பெயர் மண்ணில் இருந்துகொண்டு அவர் அடைந்த உயரம் நாம் எல்லோரும் பெருமை கொள்ளக் கூடியதுதான். இருபத்து நான்கு வயதில் இந்தத் தொகுப்பு வெளிவந்தபின், ஒரு நேர்காணலைக் கொடுக்கும்போது, அதை ரொறொண்டோவின் மிக விலையுயர்ந்த உணவகத்தில் வைத்துப் பேசுவோம் என்கின்றார். ஏன் என்கின்றபோது, மில்லியனர்கள் வந்து போகின்ற இடத்தில் ஒரு மண்ணிறக்கார பெண்ணுக்கும் இங்கே இடமிருக்கின்றதென்று நாங்கள் வெளிப்படுத்தவேண்டும்' என்றிருக்கின்றார்.
ரூபியின் முதலாவது தொகுப்பான ‘பாலும், தேனும்’ தொகுப்பு வலித்தல், காதலித்தல், பிரிதல், ஆற்றுப்படுத்தல் (hurting, loving, breaking, healing) என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கவிதைகளுக்கிடையில் ரூபியின் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தனது பஞ்சாபி வேர்களை விடமாட்டேன் என அனைத்துக் கவிதைகளும் small lettersல் எழுதப்பட்டிருப்பதோடு, எவ்வித ஆங்கில இலக்கணத் தரித்தற்குறிகளும் கவிதை வரிகளுக்கிடையில் கொடுக்கப்படவும் இல்லை.
மில்லேனிய தலைமுறையை (அல்லது generation Y) அதற்கு முன்னருள்ள தலைமுறைகளாகிய என்னைப் போன்றவர்கள் பொறுமையாலின்றி வேறொன்றாலும் விளங்கிக்கொள்ளவும் முடியாது போலத் தோன்றுகின்றது. ரூபி தனது கவிதைகள் மரபானமுறையில் அச்சுப்பிரதிகளிலோ இன்னபிற இணையச் சஞ்சிகைகளிலோ பிரசுரிக்கவில்லை. நேரடியாகத் தனது instagramல் பதிந்து வந்திருக்கின்றார். முதலாவது தொகுப்பு இப்படி பிரபல்யம் அடைந்தபின்னரும், இரண்டாவது தொகுப்பான the sun and her flower வெளியிட்டபோதும் இப்பவும் அவர் தனது வாசகர்களிடம் instagram மூலமே கவிதைகளைப் பிரசுரித்து ஊடாடிக்கொள்கின்றார்.
முதலாவது தொகுப்பின் வெற்றியின் பின், பெரும் பதிப்பாளர்கள் அடுத்தத் தொகுப்பைத் தயாரித்து வெளியிடத்தாருங்கள் என முண்டியடித்தபோது, நான் stop என, உங்களுக்காய் அல்ல, எனக்கு எப்போது எழுதத்தோன்றுகின்றதோ அப்போது எழுதுவேன் என அவர்களுக்காய் ஒரு கவிதை எழுதினேனென ரூபி ஒரு நிகழ்வில் குறிப்பிடுகின்றார்.
ரூபியின் இரண்டாவது தொகுப்பான ‘சூரியனும் அவளின் மலர்களும்’ ஏற்கனவே முதல் தொகுப்பில் தொட்ட சில விடயங்களை இன்னும் ஆழமாகத் தொடுகின்றது. அதைவிட புலம்பெயர் வாழ்வு, படகில் எல்லை கடத்தல், புதிய நிலத்தில் வேரூன்றல் என்பவற்றை வட அமெரிக்காவிற்கு வந்த இரண்டாந்தலைமுறையின் பார்வையில் பேசுகிறது. படகுகளில்/கப்பல்களில் எல்லை கடத்தல் இன்றும் நடந்துகொண்டிருந்தாலும், அது ரூபியின் தனிப்பட்ட அனுபவமாக இல்லாவிட்டாலும், படகுகளின் மூலம் நிகழும் எல்லை கடத்தல்களைப் பற்றி வெளிப்படையாக ரூபி பேசுகின்றார். அவர்களைப் பரிவுடன் புரிந்துகொள்ள வாசிப்பவரைக் கோருகின்றார்.
நாம் எல்லோருமே -ஏன் ஒரு புறநகரிலிருந்து பெருநகருக்கு வருகின்றவர்களாக இருந்தால் கூட- புலம்பெயர்ந்தவர்களே எனச் சொல்லி எல்லோரையும் அந்தத் துயரை விளங்கிக்கொள்ள வேண்டும் எனச் சொல்கின்றார். ரூபி இந்தக் கவிதைகளை எழுதிய காலங்களில்தான் ஈழத்தமிழர்கள் இரண்டு கப்பல்களில் தென்கிழக்காசியாவிலிருந்து கனடாவுக்கு வந்ததும் நிகழ்ந்திருக்கின்றது. அந்த நிகழ்வு முக்கிய பேசுபொருளாக மாறி, அன்றைய வலதுசாரி கனடிய அரசு எல்லை கடக்கும் அகதிகளை தன் நாட்டுக்குள் ஏற்றுக்கொள்வதில் சட்டத்தில் திருத்தங்களையும் செய்திருந்ததும் கவனிக்கத்தது.
இதே போன்று அகதிகளாக பஞ்சாபி மக்கள், பஞ்சாப்பில் இருந்து முதலாம் உலகமகாயுத்தத்தின்போது கனடாவிற்கு வந்தபோது, திரும்பி அனுப்பப்பட்ட துயரமான வரலாறும் இருக்கிறது. எனவே ரூபி தற்சமயம் படகுகளில் எல்லை கடக்கும் மக்களுக்காக மட்டுமின்றி, தனது மூதாதையருக்குமாக இந்தக் கவிதைகளில் பேசுகின்றார் என நாம் புரிந்துகொள்ளலாம். அதேபோன்று அநேக குடிவரவாளப் பெற்றோர்கள் ஒழுங்கான ஆங்கிலம் பேசாது இருந்ததை அஃதொரு வெட்கப்படவேண்டிய விடயமில்லை எனத் தன் பெற்றோரை முன்வைத்துப் பேசுகின்றார். இன்று தனக்கான வாழ்வைத் தெரிந்தெடுக்கும் சுதந்திரம் தனக்கு இருக்கின்றதென்றாலும், இது தனது பேத்திகளினதும், தாய்களினதும், சகோதரிகளினதும் போராட்டகளினூடாகத் தரப்பட்டதென அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார். ஆகவே தானொரு அழகான துணியாகத் தனித்துத் தெரிந்தாலும், அந்தத் துணி ஆக்கப்பட்டிருக்கும் நெருக்கமான இழைகளில் தனது தாய்களும், பாட்டிகளும் பின்னிப்பிணைந்திருக்கின்றனர் என்கின்றார்.
முதலாவது தொகுப்பில் ‘வலித்தல்’ என்ற பகுதியிலும், இரண்டாவது தொகுப்பில் ‘வீழ்தல்’ என்ற பகுதியிலும் காதல் பிரிவு பற்றி நிறைய ரூபி எழுதியிருந்தாலும், வாசிக்கும் நமக்கு அவை ஈர்ப்பதற்கு அவர் காதலன் மீதோ அல்லது காதல் மீதோ காழ்ப்புணர்வைக் காட்டாது எழுதியிருப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. இன்னொரு பெண்ணைத் தேடிப் போன தன் காதலனிடம் என்னிடம் இல்லாத எதை அவளிடம் கண்டாய் எனவும், அதை நீ குறிப்பிட்டால் கற்றுக்கொள்வேன் எனவும் பிரிவுத்துயரில் உழற்றும் ஒரு பேதைப் பெண்ணைப் பார்க்கின்றோம். பின்னர் யதார்த்தம் உணர்ந்து பிரிவை அதன் ஆழம் வரைச் சென்று பார்த்து, தன் சுயத்திற்குத் திரும்பும் துணிவுள்ள வேறொரு பெண்ணையும் காண்கின்றோம். தான் நீண்டகாலம் வாழமாட்டேன் என்று தெரிந்தும், அதுகுறித்து கவலைப்படாது சூரிய காந்திப் பூ தன் பிரகாசமான வர்ணங்களுடன் மலர்வதைப் போல நாங்களும் எமது வாழ்வை வாழ்ந்தாகவேண்டும் என, எல்லாத் துயரங்களின் பின்னும் நம்பிக்கையுடன் வாழச் சொல்கின்றன ரூபியின் கவிதைகள்.
இனிவருங்காலங்களில் ரூபி சிக்கலான மொழிநடைக்குள் தனது கவிதைகளுக்கான தேடலைக் கொண்டுபோகலாம் அல்லது இந்தவகையான எளிய நடையோடு தேங்கியும் விடலாம். ஆனால் இன்றைய காலத்தில் ஒரு மண்ணிறக்காரியாக அவர் பல தடைகளை உடைத்து, இனி வரும் பலருக்கான வழியைத் திறந்துவிட்டிருக்கின்றார் என்பதைத்தான் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டும்.
நன்றி: 'அம்ருதா' சித்திரை, 2019
0 comments:
Post a Comment