கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நேசத்தை இசைத்த பறவை பற்றிய குறிப்புகள்

Tuesday, June 11, 2019

சிறகசைப்பு – 01

னியுறைந்து பாளங்களாய் மரங்களிலிருந்து விழுகின்ற பொழுதை வெறித்தபடி இருக்கின்றேன். காற்று ஊளையிட்டபடி சுழன்று சுழன்று அடித்தபடியிருக்க குளிர் கால்களின் நரம்புகளுக்குள்ளும் ஊடுருவுகிறது. உறைந்துகிடக்கும் பனித்திடலில் ஒரு மிருகத்தின் பாதங்கள் வளைந்து வளைந்து நீண்டபடி வந்துகொண்டேயிருக்கின்றன. ஏதோ ஒன்றிற்கான அழைப்பைப்போல நான் அவற்றை உருவகித்துக்கொள்கிறேன். இன்னமும் என் பின்வாசல் அறையை எட்டிவிடாத அந்தச் சுவடுகள், நானின்னும் வாழ்வதற்கான காலக்கடிகாரத்தின் விந்தை எண்ணிமங்களாக இருக்கவும்கூடும்.
உருவழித்து, உருவங்கள் அழித்து, சொற்களை இணைத்தும் பிளந்தும் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். நாம் நடந்துகொண்டிருக்கும் இருண்ட பாதையின் முடிவில் சிறு ஒளி எஞ்சுமென எம்மை நாமே உந்தித் தள்ளிக்கொண்டிருப்பதை, கேலி செய்வதுபோலத்தான் காற்று ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றதோ? கனவுகளுக்குள் எப்போதும் சுழன்றபடியிருக்கும் ஊதாநிறச் சுவாலைகள், அதன் உச்சியில் தலைவிரித்தபடி நாக்குச் சுழன்றியபடியிருக்கும் காளியின் உக்கிர கண்களைத் தாண்டிப் போகும்போது எஞ்சுவது எதுவாக இருக்கும்?
மரம்பட்டது நன்குதெரிந்தும், அடிவேரில் நீரூறிஞ்சி பச்சையம் விரிக்குமெனும் கானல் நம்பிக்கையைப்போல, எதன் வருகையிற்காய் நான் காத்திருக்கின்றேன். கருணையின் கடைசித் துளியை எதன்பொருட்டோ அல்லது எவர் பொருட்டோ கைவிடவேண்டியிருப்பது எவ்வளவு துயரமானது என்பதை நீங்கள் அறிதல் கூடுமோ?
னிப்பாளத்தின் தெறிப்புடன், புத்தரின் ஆழ்கடல் அமைதியுடன் நீ வந்துகொண்டிருந்தபோது, நான் எவருக்காகவோ, மீளவரக்கூடுமென கடைசிவரை பதுக்கி வைத்த பச்சையமும், கருணையின் பெருந்துளியும் விடைபெற்றுக்கொண்டுபோவதைப் பார்த்தேன். எவரெவராலோ எதன் எதனாலோ முதுகில் செருகப்பட்ட வன்மத்தின் ஆணிகள் துருப்பிடித்து என்னிலிருந்து உதிர்ந்து போகக்கண்டேன். கண்களுக்கு தென்படாத பிசாசுகளோடும், பிடரியின் பின் குசுகுசுக்கும் குரல்களோடும் போரிட்டு நான் தோற்றுக்கொண்டிருந்த எண்ணற்ற களங்கள் சூரிய ஒளியில் கரைந்துகொண்டிருந்தன.
இப்படி ஒருவரால் சிரிக்கவைக்கமுடியுமாவென, இவ்வளவு ஒருவரால் நேசிக்கமுடியுமாவென, இத்தனைக்கும் அப்பால் இன்னுமின்னும் பெருங்காதலின் பைத்தியக்காரத்திற்குள் நுழையமுடியுமாவென வியக்கவைத்துக்கொண்டிருக்கும் உன்னை ஒரு சொட்டு விசம்போல காயப்படுத்தும் திமிரின் கொடுக்குகள் என் வசத்தும் உரித்து. நீலம் பாரித்த கடலில் நீ நீந்திவந்து என்னை அரவணைக்கும்போதெல்லாம் இந்தத் திமிரின் கொடுக்குகள் என் உடலின் தசைகளை ஊடறுத்துச் சென்று எனக்கான மன்னிப்புக்களைக் கோரக்கூடாதோவென ஏங்கி நிற்கின்றேன்.
எல்லாவற்றையும் கைவிடவே விரும்புகின்றேன்; ஆனால் எதனையும் கைவிடாத துயரங்களுடன் தினமும் பாடுகளைச் சுமந்துகொண்டிருப்பவனாக அலைந்தபடியிருக்கின்றேன்.
இந்தப்பனிக்காலம் கடந்துபோகும்வரையாவது என் கொடுக்குகளை ஓர் ஓரத்தில் விட்டுவிட்டு அரவணைப்பின் கதகதப்பிற்குள் பதுங்கிக்கொள்ள விரும்புகிறேன். எண்ணற்ற வருடங்களின்பின் எதன்பொருட்டோ/எவர் பொருட்டோ தொலைத்துவிட்ட பேரமைதியை உன் மூச்சுக்காற்றில் நான் கண்டுகொள்கின்றேன்.


சிறகசைப்பு - 02

நான் எடுத்த, உனது நெற்றியில் திலகமிட்ட புகைப்படத்தைப் பார்க்கின்றேன். எவ்வாறோ எப்போதோ நிகழ்பவைதானே அதிசயங்கள் எனப்படுகின்றன. அவ்வாறு ஒரு அரிய புகைப்படம் அது. அவ்வளவு அமைதி தவழும் முகம் உனது.  சடங்குகள் சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதபோதும் அவற்றிலிருக்கும் aesthetic எப்பவும் என்னைக் கவர்ந்தபடியிருக்கும். இவற்றை உதறித்தள்ளிய மிகச்சிக்கலான நவீன மனிதன் என என்னை நினைத்துக்கொண்டாலும் இவ்வாறான அழகியலில் மனம் அவ்வப்போது திளைத்தும்விடுகின்றது.

சிலவேளைகளில் இந்தக் கொண்டாட்டங்கள் என்பதே நமது நாளாந்த விடயங்களின் அலுப்பிலிருந்து நம்மை மீட்கத்தான் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையாக இருந்திருக்கலாம். நாம்தான் பிறகு சடங்கு சம்பிரதாயங்கள் என இறுக்கி, சக மனிதர்களைப் பிரிக்கும் இறுக்கமான விடயங்களாக மாற்றிவிட்டோம் போலும். தன் விருப்பின் நிமித்தம், ஒருவர் தன்னை அழகுபடுத்தும்போது அவருக்கு ஒரு விகசிப்பு வந்துவிடுகின்றது. அந்த ஒளி அருகில் இருப்பவர்களையும் பற்றிக்கொள்ள அஃதொரு இனிதான அனுபவமாய் ஆகிவிடுகின்றது. இப்போது நான் உன் அழகில் இலயித்து மனம் விரிந்து உணர்வுகள் கிளர்ந்து இப்படி எழுதுவதைப்போல.

நீ எவ்வளவு அழகு என இன்னமும் எவரும் உணர்த்தாத அளவிற்கு நீ பேரழகி. மிக நெருங்கி நின்று பார்த்தால் ஓவியங்கள் தம் அழகைக் காண்பிப்பதில்லை என்பதுபோல உன்னை விட்டு விலகி நிற்கும்போதே உனது வனப்பு இன்னும் விளங்குகின்றது. அதைவிட இந்த எழிலுக்குள் புதைந்துகிடக்கும் அன்பு பேரண்டமாய் விரிவதையும் கண்டிருக்கின்றேன். நேசம் எல்லோருக்குள்ளும் நிறைய இருந்தாலும், அரிதாகவே சிலரால்மட்டுமே அதை வெளிப்படுத்த முடிகின்றது. நீ அவ்வாறான ஒருத்தி. இந்த அன்பு சிலவேளைகளில் மூச்சுத்திணற வைத்தாலும், அதன் கதகதப்பில் நான் இதுவரை நுழைந்துவிடா உலகைக் காண்பதையும் மறைத்துவிடமுடியாது.

ருஞ்சாம்பல் வானத்தைப் பார்த்தபடி உன்னோடு பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இலையுதிர்காலத்திற்குரிய melancholy உணர்வுகள் உள்ளத்தில் உருகி வழிகின்றன.  வழமையாய் வரும் இந்தப் பருவத்திற்குரிய மன அழுத்தமாய் அது இல்லை. சங்ககாலத்தில் காதலன் தன்னருகில் இருக்கின்றான் என உணர்கின்ற மகிழ்ச்சியும் அதேசமயத்தில் அவன் தன்னைவிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரிந்துபோய்விடுவானே எனக் கவலையும் இணைந்த, பெண்னொருத்தி கொள்ளும் உணர்ச்சிக்குவியல்தானோ இது.

மலைகள் நிரம்பிய நகரம். அதே நீர்வீழ்ச்சி. சில வருடங்களின் முன் மனம் சோர இருட்டறையிலிருந்து மீட்டெடுத்து நண்பன் கூட்டிச்சென்ற இடம். ஒரு கணமும் நின்றுவிடாது கொட்டிக்கொண்டிருந்த நீரைப்போலத்தான் என் துயரமும் இனியொருபொழுதும் நிற்காதோ என உளம் வெம்பிய இலையுதிர்காலம் அது. எப்போதும் உணர்ச்சிகள் உருண்டுபிரண்டு அடம்பிடித்தாலும், அவற்றை மாற்றி இதமாக்கும் இயற்கை கூட கைவிட்டதொரு பருவம்.  முகத்தில் தெறித்த சாரல் கூட ஊசிகளைப் போல குத்துவதான பாவனையில் நின்றுகொண்டிருக்கின்றேன்.

நாம் யார்? நாடகம் ஒன்றில் நமக்குத் தரப்பட்ட கதாபாத்திரமொன்றில் நடித்துக்கொண்டிருப்பவர்கள்தானா? திரை விலகும்போதும் திரை மூடியபின்னும் ஏதோதோ உணர்ச்சிகள் உருட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நாம் எதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றோம். புதிய புதிய நாடகங்கள். புதிய புதிய கதாபாத்திரங்கள்.

இப்போது முகத்தில்படும் சாரல் இனிதாகத்தோன்றுகின்றது. ஊசிக் கூர்மை போய், மயிலிறகின் வருடல் போலத்தான் தோன்றுகின்றது. இந்த நீர்வீழ்ச்சி இரவும் பகலுமென ஒரேமாதிரியாகத்தான் வீழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் தான் எனக்கிருக்கும் மனோநிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி உணர்ந்துகொண்டிருக்கின்றேன் போலும். இதமோ, வலியோ இல்லாத எந்தவொரு உணர்நிலைக்கும் அப்பாற்பட்ட ஒரு எல்லைக்குப்போவதற்குத்தான் இந்தளவு பிரயத்தனப்பட்டிருக்கின்றேனோ தெரியாது.

இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இலைகள் அனைத்தும் உதிரும். பிறகு பச்சையாக துளிர்க்கும். இதுதான் இயற்கையெனில் இப்படித்தான் இல்லாதவற்றை யோசித்து யோசித்துக் குழம்புவதுதான் என் இயல்பும் போலும்,

இப்போது நீ இருக்கின்றாய். அணைத்துக்கொள்கின்றேன்.
………………………………………………………………….

(நன்றி: 'அம்ருதா' ‍ ஆனி 2019, ஓவியங்கள்: ரெனே & கிளிம்ட் )

0 comments: