கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொட்டியா

Monday, December 30, 2019


1.
அவ‌ர்க‌ள் அப்ப‌டி அவ‌னைப் பிடித்து எழுப்பிய‌போது அதிர்ச்சியாக‌ இருந்த‌து. அதிர்ச்சியை விட அருவ‌ருப்பாய் இருந்த‌து என‌த்தான் சொல்ல‌வேண்டும். அதிர்ச்சி அருவ‌ருப்பு இர‌ண்டும் திர‌ண்டு கோப‌மாய்ப் பொங்க‌த் தொட‌ங்கிய‌போது, அதை நேர‌டியாக‌க் காட்ட‌முடியாதத‌ற்கு அவர்க‌ளின் தோள்க‌ளில் தொங்கிய‌ துப்பாக்கிக‌ள் ஒரு கார‌ண‌மாய் இருந்த‌து. ச‌ருவ‌ச்ச‌ட்டியைக் க‌விழ்த்துப் போட்டாற்போல‌ இரும்புக் க‌வ‌ச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌லைக‌ளில் தொங்கிக்கொண்டிருந்த‌ன‌. இரு காதுக‌ளையும் இணைத்து நாடியைச் சுற்றியோடிய‌ க‌றுப்பு நாடா 'ச‌ருவ‌ச்ச‌ட்டி' த‌லையில் இருந்து விழாது தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த‌து. அந்த‌க் க‌றுப்பு நாடாவை அறுத்து, க‌ழுத்தில் இறுக்கி அவ‌ர்க‌ளைக் கொன்றால் என்ன‌ என்ற‌ எண்ண‌ம் அந்த‌ அப‌த்த‌மான‌ நேர‌த்திலும் அவ‌னுக்குள் ஓடிய‌து. அன்றைய‌ ச‌ம்ப‌வ‌த்தின்பின் தான் அவ‌னுக்கு க‌ரும் ப‌ச்சை நிற‌த்திலும், ஆண்க‌ள் அணியும் நீண்ட‌ கால‌ணிக‌ள் மீதும் வெறுப்பு வ‌ந்திருக்க‌ வேண்டும்.

கொழும்பில் எல்லா வீதிக‌ளுக்கும் த‌லையான‌ வீதி என‌ ந‌ம்ப‌ப்ப‌டும் காலி வீதியில் வெள்ள‌வ‌த்தையும் தெஹிவ‌ளையும் பிணைந்துகொள்ளும் விகாரை வீதிக்கு அருகில்தான் அவனது தற்காலிக வசிப்பிடம். காலி வீதியின் முக‌ப்பில் 'சிலோன் இன்' மெல்லிய‌ நீல‌ நிறத்தில் உய‌ர்ந்து நின்று எல்லாவற்றையும் விடுப்புப் பார்த்துக்கொண்டிருக்கும். இன்னும் துல்லிய‌மாக‌ச் சொல்வ‌தென்றால் அனுர‌த்த‌ ர‌த்வ‌த்த‌ யாப்பா ப‌ட்டுவாவில் சிங்க‌க் கொடியை ஏற்றஇன்னும் சில‌ மாத‌ங்க‌ளே இருந்த‌தான‌ கால‌ப் பொழுது அது.

'சிலோன் இன்' இலிருந்து உள்ளே ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினால் சில‌ ப‌ல‌ச‌ர‌க்குக் க‌டைக‌ளையும் பெட்டிக் க‌டைக‌ளையும் க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். அதைச் சற்றுத் தாண்டினால் பெரு நகரத்து நெரிச‌லுக்கும், ஆரவாரத்திற்கும் த‌ன‌க்கும் எவ்விதத் தொட‌ர்புமில்லையென‌ ஆழ்துயிலில் நிற்கும் வெள்ளைநிற‌ விகாரை வரும். அங்கே மாலையில் -சூரியன் மறைகிறதோ இல்லையோ- தாம‌ரையும் அரளியும் காவியபடி கூந்தல் நீர் விசுக்கிப் போவர், பெண்கள். பிறகு வருவது வ‌ல‌ப்புற‌த்தில் தைய‌ல்க‌டையும், எதிரே சிகை அல‌ங்கார‌க் க‌டையையும். ச‌லூனுக்குள் 'காத‌லன்' ந‌க்மாவும் 'வீரா' ரோஜாவும் வ‌ழுவ‌ழுப்பான‌ தாளில் இர‌ண்ட‌டி உய‌ர‌ச்சுவ‌ரில் -புத்த‌ர் ப‌ற்றிய‌ நினைவுக‌ளைக் க‌லைத்து விட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌வே- சிரித்துக்கொண்டிருப்பார்க‌ள். இனி வ‌ரும் பாதையினுள் முத‌ன்முத‌லாக‌ நுழையும் ஒருவ‌ராக‌ இருப்பின் அவ‌ர் த‌ன் மூக்கினைப் பொத்திக் கொள்பவ‌ராக‌ இருப்பார். ஏனெனில் இப்போது க‌ளுபோவிலையின் 'புக‌ழ்பெற்ற‌' கால்வாயைக் க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். உருக்கி ஊற்றும் தார்க்க‌லரிலேயே ஓடும் நீர் இருக்கிற‌தென்றால் அத‌ன் ந‌றும‌ண‌ம் ப‌ற்றி வித‌ந்துரைக்க‌த் தேவையில்லை.

பாலத்தைத்தாண்டினால் வருவது ஐந்து வீதிச்ச‌ந்தி. உட‌னேயே இட‌துப‌க்க‌ம் திரும்பிக் கால்வாயோடு ச‌மாந்த‌ர‌மாய் ந‌ட‌ந்தால் அவ‌னிருக்கும் வாட‌கை வீட்டை எளிதில் அடையாள‌ங் காண‌லாம். இஃதொரு விதானையின் பெரிய‌வீடு. அவ‌ர் சின்ன‌ வீட்டிலிருந்துகொண்டு இதை ப‌குதி ப‌குதியாய்ப் பிரித்து வாட‌கைக்குக் கொடுத்திருக்கிறார். 'ப‌' வ‌டிவ‌த்தில்தான் இவ்வீடு இருக்கிற‌து. ஆனால் இவ‌ன் குடியிருந்த‌து 'ப‌' வ‌டிவில் உள்ள‌ட‌க்கிய‌ ப‌குதியில் அல்ல‌. 'ப‌'னாவிற்குக் குற்றுப் போட்டு 'ப்' ஆக்கியிருந்த‌ க‌ராஜ் கொட்ட‌கைக்குள்தான் அவ‌னின் இருப்பு. ஏதாவ‌து ஏஜென்சியிட‌ம் காசைக் கொட்டிக் கொடுத்துவிட்டு வெளிநாடொன்றுக்கு ஓடுவ‌த‌ற்கு அவ‌னைக் குடும்ப‌ நிலவ‌ர‌மும் நாட்டு நிலைமைக‌ளும் த‌ள்ளிவிட்டிருந்த‌து. அவ‌ன் தனது ப‌தினைந்தாவ‌து வ‌ய‌தை ச‌ங்குப்பிட்டிப் ப‌ட‌குத்துறையில் கழித்துக் க‌ட‌ந்துவ‌ந்திருந்தான். அத‌ற்கு முத‌ல்நாள் ப‌க‌லில்தான் இர‌ண்டாந்த‌வ‌ணைக் க‌ணித‌ப் ப‌ரீட்சையை எழுதி, க‌டைசிவ‌ரை த‌ன் ப‌ய‌ண‌த்தை மிக‌ இர‌க‌சிய‌மாக‌ வைத்துக்கொண்டான். ப‌ரீட்சைத்தாளை வைத்து எழுதும் (பைல்)ம‌ட்டையில் பிள்ளையார் என்றும்போல‌ முக‌ம் ம‌ல‌ர‌ப் பிர‌காச‌மாக‌ இருந்தார். இட‌துப‌க்க‌த்தில் அவ‌னுக்குப் பிடித்த‌ பெண் த‌ன் இள‌முலை மேசையில் தொட‌ குனிந்து தீவிர‌மாய் ப‌ரீட்சையை எழுதிக்கொண்டிருந்ததாள். 'நான் கொழும்புக்குப் போகிறேன், இனி என்றென்றைக்குமாய் உங்க‌ளைக் காண‌முடியாது' என‌ப் பிரியாவிடை அவளிடம் பெறமுடியாப் புற‌ச்சூழ‌லின் துய‌ர‌ம் அவ‌னுக்குள் ஒரு க‌ருங்க‌ற்பாறையாக‌ க‌ன‌த்துக் கிடக்கிறது.

2.

அவ‌னோடு அந்த‌ க‌ராஜ் வீட்டை இன்னுமிர‌ண்டு பேர் ப‌கிர்ந்துகொண்டிருந்தன‌ர். ஒருவ‌ர் ப‌ம்ப‌ல‌ப்பிட்டியிலிருந்த‌ சாப்பாட்டுக்க‌டையில் வேலை செய்துகொண்டிருந்தார். ம‌ற்ற‌வ‌ர் மொற‌ட்டுவ‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு போய்க்கொண்டிருந்தார். சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்த‌வ‌ர் அவ‌னுக்கு உற‌வின‌ராய் இருந்த‌தால் இந்த‌ இட‌ம் எளிதாக‌ அவ‌னுக்குக் கிடைந்திருந்த‌து. இருந்த‌ க‌ராஜ் வீட்டிற்கு வெளிக்கதவுக்கு மட்டுந்தான் பூட்டு இருந்த‌து. உள்ளே ஒப்புக்கு இர‌ண்டு அறைக‌ளாய் ம‌ர‌ப்பல‌கைக‌ளை வைத்துப் பிரித்துவைத்திருந்தார்க‌ள், ஆனால் கதவுகளில்லை. ஆமி செக்கிங்கிற்காய் வ‌ருகின்றார்க‌ள் என்றால் ஒரே அம‌ளி தும‌ளியாக‌த்தான் இருக்கும். நிறைய‌க் குடும்ப‌ங்க‌ள் இந்த‌ 'ப்' வீட்டில் இருப்ப‌தால் ஒரு வீட்டில் ஆமி நுழைந்துவிட்டான் என்றால் எல்லா வீடுக‌ளும் ச‌ட‌ச‌ட‌வென்று விழித்துத் த‌யார் நிலைக்கு வ‌ந்துவிடும். ஆமி பூட்டிய‌ க‌த‌வை 'த‌ட‌த‌ட‌'வென‌ ஓங்கி அறைய‌முன்ன‌ரே கத‌வைத் திற‌ந்துவிட்டு -நிவார‌ண‌த்திற்கு வ‌ரிசையில் நிற்ப‌துபோல‌- ஆமியின் ப‌ரிசோத‌னைக‌ளுக்காய் த‌யாராகிவிடுவார்க‌ள். இப்ப‌டி அடிக்க‌டி இர‌வுக‌ளில் ஆமி சோதனைக்கு செய்வ‌தால் அவ‌ர்க‌ளுக்கு இது ப‌ழ‌க்க‌மாகி விட்டது.

இவன் கொழும்பில் இருந்தபோது, ஆமி முதன்முதலாய் செக்கிங்கிக்காய் வந்தது மறக்கமுடியாத ஓர் அனுபவம் எனத்தான் சொல்லவேண்டும். ஆமிக்காரர்கள் வருகின்றார்களென‌ அண்ணாக்கள் க‌ராஜ் வீட்டின் கதவைத் திறந்துவிட்டு ஆமியின் சோதனைக்குத் தயாராய் நிற்க‌ இவ‌னோ ஆழ்ந்த‌ நித்திரையில் இருந்தான். ப‌தினைந்து வ‌ய‌துக்கார‌ன் தானே, ப‌டுத்திருக்கின்றான் கிட‌க்க‌ட்டுமென‌ அந்த‌ அண்ணாக்க‌ளும் இவ‌னை எழுப்ப‌வில்லை. அறைக்குள் நுழைந்த‌ ஆமி இவ‌னை அப்ப‌டிப் பிடித்து எழுப்புவான் என்று இவன் நினைத்தே பார்க்கவேயில்லை. இடுப்பில் க‌ட்டியிருந்த‌ சார‌மும் அவிழ்ந்து கிட‌க்க‌, உட‌லில் எத்த‌னையோ இட‌மிருக்க‌ குறியில் கை வைத்து எழுப்பியதுதான் இவ‌னுக்கு அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஆமியையும் அவ‌ன் பிடித்திருந்த‌ இட‌த்தையும் க‌ண்டு திடுக்கிட்டு சார‌த்தை இறுக்கிக் க‌ட்ட‌ முய‌ன்ற‌போது 'செக்கிங் ப‌ண்ண‌வேண்டும் அப்ப‌டியே சுவ‌ரோடு போய் நில்' என்றான் ஆமிக்காரன். சார‌மும் இல்லாது உட‌ல் முழுதும் நிர்வாண‌மாக‌த் தெளிவாக‌த் தெரிய‌, இவ‌ன் என்ன‌ இத‌ற்குள் பூனாவையா தேட‌ப்போகிறான் என்ற‌ கோப‌ம் வ‌ர‌, ஆற்றாமையுடன் சுவ‌ரைப் பார்த்த‌ப‌டி போய் நின்றான். ஆமிக்கார‌ன் நாலைந்து நிமிட‌ங்கள் ஆறுத‌லாக‌ த‌ன் 'ப‌ரிசோத‌னை'யைத் த‌ட‌விச் தடவிச் செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போலப்போனான். பிற‌கு எல்லா வீடுகளையும் சோதனை செய்து விட்டுக் கடந்து போகும்போது ஏதோ ஆமிக்கார‌ன் சிங்க‌ள‌த்தில் சொன்னான். என்ன‌ சொல்கிறான் என்று கேட்ட‌போது, 'இப்ப‌டி புதிசாய் ஒரு பெடிய‌ன் இங்கே வ‌ந்திருக்கின்றான் என்று எங்க‌ளுக்குத் தெரியாதே; இனி அடிக்க‌டி வாறோம்' என்று சொல்லியிருக்கின்றான் எனச் சொன்னார்க‌ள். 'ஏன் அண்ணை, ஆமிக்கார‌ன் வாறான் என்று என்னை எழுப்பிவிட‌க்கூடாதே' என‌க் கோப‌த்துட‌ன் அண்ணாக்க‌ளைப் பார்த்து இவன் சொன்னான். அன்றைய இரவில், பிறகு இவனால் ஒழுங்காய் நித்திரை கொள்ளமுடியவில்லை. காமமோ சித்திர‌வ‌தையோ அவைய‌வை த‌ம் குறிக்கோள்க‌ளை குறியில் போய் இறுதியில் பூர்த்தி செய்கின்ற‌தென‌ இவன் த‌ன‌க்குள் நினைத்துக்கொண்டான்.

3.
அவ‌ருக்கு அழ‌கான‌ நீண்ட‌ த‌மிழ்ப் பெய‌ர் இருந்த‌து. ஆனால் 'குதிரை' என்ற‌ ப‌ட்ட‌ப்பெய‌ரே இய‌ற்பெய‌ர் போல‌ ஆகிவிட்டிருந்த‌து. மைதான‌த்தில் நூறு மீற்ற‌ரும், இருநூறு மீற்ற‌ரும் அவ‌ர் ஓடும்போது உண்மையில் பிட‌றி சிலிர்த்து ஓடும் குதிரையைப் போல‌த்தான் காட்சிய‌ளிப்பார். அவ்வ‌ள‌வு வேக‌ம். குதிரைதான் அவ‌னின் க‌ல்லூரியில் ப‌ல‌ புதிய‌வைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தினார். அவ‌ரின் காற்று வேக‌ ஓட்ட‌த்திற்காய் பாட‌சாலை நிர்வாக‌மே த‌லைவ‌ண‌ங்கி நின்ற‌தில் விய‌ப்பில்லைத்தான். அதேபோல் அவ‌ரைக் காத‌லிக்க‌ நின்ற‌ பெடிய‌ங்க‌ளின் வ‌ரிசையும் நூறு மீற்ற‌ர்க‌ளுக்கு அப்பாலும் நீள‌க்கூடிய‌து. அவ‌னும் மூன்று வ‌ருட‌ம் முந்திப்பிற‌ந்திருந்தால் அந்த‌ வ‌ரிசையில் முன்னே நிற்க‌ சண்டை பிடித்திருக்கக் கூடும். குதிரையின் ஓட்ட‌த் திற‌மை க‌ண்டு, அதை வ‌ள‌ர்க்க‌ ந‌ல்ல‌தொரு ப‌யிற்சியாள‌ர் இருந்தார். எல்லாப் பெண்க‌ளும் ஒற்றைச் ச‌டையில் அல்லது இர‌ட்டைச் சடையில் பின்னி வ‌ர‌வேண்டுமென்ற‌ பாட‌சாலை விதி கூட, குதிரையின் 'போனி ரெயிலுக்காய்' கொஞ்சக்காலம் த‌ள‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. முத‌ன் முத‌லாய் 'ஸ்ராட்டிங் ப்ள‌க்' வைத்து, ம‌ண்ணிற‌ க‌ல‌ர் ர‌ன்னிங் சோர்ட்சில் ப‌ளப‌ள‌ப்பான தொடை தெரிய‌ குதிரை ஓடிய‌போது அவ‌னுக்கு வ‌ந்த‌ க‌ன‌வு வித்தியாசமாக இருந்தது. த‌ன‌க்குத்தான் அந்த‌க் க‌ன‌வு முதலில் ப்ரஷாய் வ‌ந்த‌தா அல்லது அன்றைய‌ நாளில் நூறு மீற்ற‌ர் நீண்ட‌ வ‌ரிசையில் நின்ற எல்லாப் பெடிய‌ங்க‌ளுக்குள் நுழைந்து கடைசியாகத்தான் தனக்கு அந்த‌க் க‌ன‌வு நுழைந்த‌தா எனவும் இவன் குழம்பியிருக்கின்றான்.

ஒவ்வொரு நாள் மாலையிலும், க‌டிகார‌மும் கையுமாய் ஏன் ப‌யிற்சியாள‌ர் ஒரிரு ம‌ணித்தியால‌ங்க‌ள் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌யிற்சி கொடுக்கிறார் என்ப‌தை இவ‌னால் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள முடியவில்லை. ஓடுவ‌த‌ற்கு யாரும் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌யிற்சியெடுப்பார்களா என ஏள‌ன‌மாய்த்தான் இதை அவ‌ன் பார்ப்ப‌துண்டு. குதிரையும், ப‌யிற்சியாள‌ரும் சேர்ந்து திட்ட‌மிட்டு த‌ங்க‌ளைப் போன்றவ‌ர்க‌ளுக்கு பிலிம் காட்டுகின்றார்க‌ள் எனத்தான் இவன் முதலில் எண்ணிக்கொண்டான். ஓடுவ‌த‌ற்கு ப‌யிற்சி பெற‌வேண்டுமென்றால், இவனின் வீட்டு ஒழுங்கைக்குள் குதிரையை விட்டாலே ந‌ல்லாய்ப் ப‌யிற்சி எடுக்க‌லாமே. ஒழுங்கைக்குள் நாய்க‌ள் 'இந்தா பார் உன்ரை குண்டியைக் க‌டிக்கிறேன்' என‌ வாயை ஆவென்றுகொண்டு நீர் வ‌டிய‌த் துரத்த துர‌த்த, அந்தப் ப‌ய‌த்தில் ஓடி ஓடித்தானே இவ‌ன் நன்கு ஓட்ட‌ப்ப‌யிற்சி எடுக்கின்ற‌வ‌ன்.

இதையே ஒருநாள் குதிரையிட‌ம் நேர‌டியாக‌ப் போய்ச் சொல்லியும் விட்டான். இர‌ண்டு மூன்று வ‌ய‌து குறைவாக‌ இருப்ப‌தும் ஒருவகையில் நல்லதுதான். குதிரையோடு நெருங்கிப் ப‌ழ‌க‌லாம், தூர‌த்தில் நூறுமீற்ற‌ர் வ‌ரிசையில் நின்று, குதிரைக்கு க‌டிவாள‌ம் போட‌ அலைகின்ற‌ பெடியங்களுக்கு, தான் இப்ப‌டி குதிரையோடு பேசித்திரிவ‌து வ‌யிற்றில் நெருப்பைப் பற்றி எரிக்க‌ச் செய்யும் என்ப‌தும் இவ‌னுக்கு ந‌ன்கு தெரியுந்தான். இப்ப‌டி தான் ஒழுங்கைக்குள் ஓடிப் ப‌யிற்சி பெறும் இர‌க‌சிய‌த்தை இவன் சொன்ன‌தும் குதிரைக்கு ஒரே சிரிப்பு. 'அப்ப‌டியா! அங்கே பார் சைக்கிளில் நான்கை பேர் எங்க‌ளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்க‌ள் அல்ல‌வா, அவ‌ங்க‌ளிட‌ம் போய்ச் சொல்லு! இப்ப‌டிச் சும்மா பொழுதைக் க‌ழிக்காது, உங்க‌டை ஒழுங்கை நாய்க‌ளோடு ரெயினிங் எடுத்து, ப‌ள்ளிக்கூட‌த்துக்கு மெட‌ல் வாங்கிக்கொடுக்க‌ச் சொல்' என்றார் குதிரை. இவ‌னும் ந‌ல்ல‌ பிள்ளையாக‌ குதிரை கூறிய‌தை அச்ச‌ர‌ம் பிசகாது அப்படியே போய் அவ‌ர்க‌ளிட‌ம் ஒப்புவிக்க ஒரே தூச‌ண‌ம‌ழை பொழிய‌ப்ப‌ட்ட‌து. இப்ப‌டியாக‌த்தான் அவ‌ன் த‌மிழிலிருந்த அனைத்துச் 'செந்த‌மிழ்' வார்த்தைக‌ளையும் க‌ற்றுக்கொண்டான். இத‌ற்காக‌வேனும் அவ‌ன் குதிரையை என்றும் ந‌ன்றியுட‌ன் நினைவுகூர‌த்தான் வேண்டும்.

இவ‌ன் நாய்க‌ளோடு ஓடி ப‌யிற்சி பெற்ற‌தைப் போல‌ அன்றி, ஒழுங்காய்ப் ப‌யிற்சி பெற்ற‌தாலோ என்னவோ குதிரை எல்லா இட‌ங்க‌ளிலும் ந‌ன்றாக‌ ஓடினார். பாட‌சாலை தாண்டி வ‌ல‌ய‌ம், வ‌ட்டார‌ம் என‌ உய‌ர‌ங்க‌ளைத்தாண்டி மாவ‌ட்ட‌த்திலும், எவ‌ரும் ஜெயிக்க‌ முடியாத‌ புரவியென குதிரை சாதித்துக் காட்டிய‌து. இனி அகில‌ இல‌ங்கைதான் மிச்சம். பயிற்சியாள‌ருக்கு ந‌ம்பிக்கை இருந்த‌து, பாட‌சாலை முழுவதற்கும் ந‌ம்பிக்கை இருந்த‌து. இவ‌ர்க‌ள் எல்லோரையும் விட‌ குதிரைக்கு இன்னும் த‌ன்னில் ந‌ம்பிக்கையிருந்த‌து. குதிரை அகில‌ இல‌ங்கையில் தம் ''ப‌ட்டிக்காட்டு'ப் பாட‌சாலையின் புக‌ழைப் ப‌ர‌ப்ப‌, ப‌த‌க்க‌ம் வெல்வார் என இவன் உட்பட எல்லோரும் ந‌ம்பிக் காத்திருக்க‌த் தொட‌ங்கினார்கள்.

4.

ஆமி அப்ப‌டி அவ‌னின் குறியைப் பிடித்த‌து, பிற‌கு சோத‌னை என்ற‌ பெய‌ரில் த‌ட‌விய‌து எல்லாம் பெரிய‌ விட‌ய‌ம‌ல்ல‌. ஏன் இவ‌னே தன் குறியைப் பிடித்து சுய‌மைத்துன‌ம் செய்ப‌வ‌ன் தான். ஆனால் அப‌த்த‌மான‌ சூழ‌லில் துவ‌க்கிருக்கும் துணிச்ச‌லில் இவ‌ன‌து ச‌ம்ம‌த‌ம் இன்றி அப்ப‌டி ஆமி த‌ட‌விய‌துதான் இவ‌னுக்குள் கோப‌த்தை விதைத்திருந்த‌து. ஓர் இத‌மான‌ சூழ‌லில், அதிகார‌த்தின் நிழ‌ல் ப‌டியாது, இதே ஆமி விரும்பிக் கேட்டிருப்பாயின் இவ‌ன் த‌ன் குறியை ஆமிக்குக் கொடுப்ப‌திலோ அல்ல‌து அவ‌னின‌து குறியைத் தான் த‌ட‌வி விடுவ‌தையோ மறுக்காது செய்திருக்க‌க் கூடும். பிறகு யோசித்தபோது, ஆமியும் என்ன‌வித‌மான‌ பாலிய‌ல் வ‌ற‌ட்சியில் இருந்திருப்பானோ தெரியாது என‌வும் நினைத்தான். இவ‌னுக்காவ‌து ஒரு ந‌டிகை அணிந்திருந்த‌ க‌றுப்பு லெத‌ர் ஆடைகளைப் பார்த்த‌ப‌டியாவ‌து தான் விரும்பிய‌தைச் செய்ய‌ முடிந்திருக்கிற‌து. ஆமிக்காரன் ஒருபுற‌த்தில் மேலே இருந்த‌ ஆட்சியாள‌ருக்குப் ப‌ய‌ந்தும், இன்னொரு புற‌த்தில் கொட்டியாவுக்கு அஞ்சியும் இதையெல்லாம் செய்ய‌ நேர‌மில்லாது இருந்திருக்க‌வும் கூடும். ஆனால் ஒரு வீட்டுக்குள் அந்நிய‌ன் ஒருவ‌ன் அத்துமீறி நுழைவ‌தைப்போல‌, ஆமிக்கார‌ன் த‌ன‌து ச‌ம்ம‌த‌ம் இல்லாது த‌ன் உட‌லைப் ப‌ரிசோத‌னைக்க‌ள‌மாய் ஆக்கிய‌தைத்தான் இவ‌ன் ம‌ன‌தார‌ வெறுத்தான். பின்ன‌ர் இந்த‌ வெறுப்பு என்றும் க‌ரைக்க‌முடியாக‌ காழ்ப்பாய் 'ஆமிக்கார‌ன் என்றாலே இப்ப‌டித்தான்' என்று உறுதியான‌ இட‌த்தில் ஒட்டிக்கொண்ட‌து.

இவ‌னின் ஏஜென்சிக்கார‌ன் கொண்டு இற‌க்கும் ரூட்டுக்க‌ள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக‌ப் பிடிப‌ட, அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் எல்லாம் இடைநடுவில் அகப்பட்டு இலங்கைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். ம‌ற்ற‌ ஒரு ஏஜென்சிக்கார‌னோடு ஏற்ப‌ட்ட‌ ச‌ண்டையின் நிமித்த‌ம்தான் அந்த‌ ஏஜென்சிக்கார‌ன் 'உள‌வு' வைத்து இதைச் செய்துகொண்டிருக்கிறான் என்ற‌ ஒரு க‌தையும் அடிப‌ட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளினால் உண‌வில்லாது வாழ்ந்தாலும் உள‌வுப்ப‌டை இல்லாது வாழ‌முடியாது என்று இவ‌ன் நினைத்துக்கொண்டான் இப்ப‌டியே ஒன்றும் செய்யாது சும்மா இருந்தால் ஆமிக்கார‌ன் தன்னையும் புலியின் ஆளென‌ அள்ளிக்கொண்டு போய்விடுவான்  என‌ப் ப‌ய‌ந்து  ஒரு பாட‌சாலைக்குப் போக‌த் தொட‌ங்கினான். அது ஒரு சிங்க‌ள‌ப் பிர‌தேச‌த்தில் இருந்த‌ பாட‌சாலை. முன்னொருகாலத்தில் நன்கு இய‌ங்கி 83 க‌ல‌வ‌ர‌த்தில் எரிக்கப்பட்டு, பிறகு அதன் ஒரு சிறுப‌குதி ம‌ட்டும் பாடசாலையாக‌ இயங்கிவ‌ந்த‌து. இவ‌னைப் போன்று, எப்போது வெளிநாட்டுக்கு அந்த‌ர் ப‌ல்டி அடிக்கலாமென்று காத்துக்கொண்டிருந்த‌ பல‌ரே அங்கு ப‌டித்தார்க‌ள். மிச்ச‌ப் பெடிய‌ங்க‌ளில் அநேக‌ர் பாணந்துறைப் ப‌க்க‌ங்க‌ளிலிருந்து வ‌ந்துகொண்டிருந்த‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ள் மிக‌க் குறைந்த‌ ஊதிய‌த்திற்கு இற‌ப்ப‌ர்த்தோட்ட‌ங்க‌ளில் க‌டும் வேலை செய்துகொண்டிருப்பவ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். 

தான் மேலேயேற‌ ப‌க்க‌த்தில் இருப்ப‌வ‌னை கீழே உதைத்துத்த‌ள்ளும் த‌மிழ்ப்புத்தியின் சாய‌ல் கொஞ்சங்கூட‌ இல்லாது அந்த‌ப் பெடியங்கள் மிக‌ அருமையாக‌ இவ‌னோடு ப‌ழ‌கினார்க‌ள். அவர்களுக்குப் புலிக‌ளில் மிக‌ப்பெரும் ம‌திப்பும் ந‌ம்பிக்கையும் இருந்த‌து. புலிக‌ளை அருகில் பார்த்த‌ இவ‌னிட‌மிருந்து புலிக‌ளின் க‌தைக‌ளைக் கேட்க‌ ஆர்வ‌மாயிருந்தார்க‌ள். தாங்க‌ள் புலியில் சேரவிரும்பினால் த‌ங்க‌ளையும் இய‌க்க‌த்தில் சேர்ப்பார்க‌ளா என‌ அப்பாவியாய்க் கேட்டார்கள். அவர்களோடு ப‌ழ‌கி ப‌ழ‌கி யாரும் சிங்க‌ள‌த்தில் க‌தைத்தால் விள‌ங்கிக்கொள்ள‌வும், திரும்பிச் சிங்களத்தில் பதில் சொல்லவும் இவனால் முடிந்த‌து.

இவ்வாறாக‌ பாட‌சாலைக்குப் போய்க்கொண்டிருந்த‌ கால‌த்தில் அவ‌ள் ப‌ஸ்சினுள் அறிமுக‌மானாள். இவ‌னது பாட‌சாலைக்கு அருகிலிருந்த‌ சிங்க‌ள‌ப் பாட‌சாலைக்குச் சென்றுகொண்டிருப்பவளாக அவள் இருந்தாள். தொட‌க்க‌ நாட்க‌ளில் 'இவ‌னொரு கொட்டியா, இவ‌னுக்குப் புலிவால் எங்கிருந்து முளைக்கும்?' என‌ச் ச‌ந்தேக‌த்தோடு பார்ப்பவ‌ள் போல‌த்தான் தெரிந்தாள். பிற‌கு க‌தைக்க‌த் தொட‌ங்கிய‌ நாட்க‌ளில், 'கொட்டியா கொழும்பில் இருந்தால் எப்ப‌டிக் க‌ண்டுபிடிப்ப‌து?' என‌க் கொக்கி போட்டும் அவ‌ள் பார்த்தாள். 'கொட்டியா சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளல்ல‌, அவ‌ர்க‌ள் இராவ‌ண‌னின் ப‌ர‌ம்ப‌ரையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். ப‌த்துத் த‌லையோடு எவ‌ரையும் பார்த்தால் அது கொட்டியா என்ப‌து உறுதி' என‌ இவ‌னும் பெரிய‌ க‌ண்டுபிடிப்பாள‌ன் போலப் ப‌தில் சொன்னான். எப்போதும் போல ஒவ்வா முனைகளே கவர்வதைப் போல இவர்கள் இருவருக்கும் நெருக்கம் காலப் போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலைக்குப் போகும்போது பஸ்சில் என்றில்லாது வேறு பல இடங்களிலும் சந்திக்கத் தொடங்கினார்கள்.

கொங்கேர்ட்டில் அப்போது 'காதலன்' படம் ஓடத்தொடங்கியிருந்தது. அவளையும் கூட்டிக்கொண்டு பல்கணி சீற் வாங்கிப் படம் பார்த்தபோது முதன் முதலில் அவளை முத்தமிட்டான். அந்த முத்தம் ஜானகி 'கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா' என ஹஸ்கிக்குரலில் பாடிக்கொண்டிருந்த‌போது நிக‌ழ்ந்திருந்த‌து. அதே காலப்பகுதியில்தான் அவனது பாடசாலையில் ஓ/எல் பரீட்சை நடந்துகொண்டிருந்தது. வெளிநாட்டுக்குப் போகும் கனவில் பாடசாலைக்கு வேண்டா வெறுப்புக்கு போய்க்கொண்டிருந்தவன் ஓ/எல் பரீட்சையையும் பொழுதுபோக்காகவே எழுதினான். 'காதலன்' படத்திற்கும் தன் காதலுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கின்றதென யோசித்து, சைவசமய பரீட்சை நடந்தபோது அவளோடு மீண்டும் படத்தின் பகல்காட்சியிற்குப் போனான். குறைந்த சனம் இருந்த தியேட்டரில் அவன் நினைத்தவற்றைச் செய்யமுடிந்தது. அவளை முத்தமிட்டபோது அவனின் தோளை வளைத்த அவளின் கரங்களைப் பிடித்து தனது குறியைத் தடவச்செய்தான். ஒருவித அதிர்ச்சியுடன் விலத்தியவளை 'எனக்கு அப்படிச் செய்வது பிடிக்கும், செய்துவிடமாட்டாயா?' என்றான். அவள் இதமாக அங்கே தடவத்தொடங்கினான். தன் விருப்புக்கு எதிராக தன் குறியைத் தடவிய ஆமியின் நினைவு இடையிடையே அவனுக்குள் வந்துபோனது. தனக்குப் பிடிக்காததைச் செய்த அவனின் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் தன்மீது பிரியங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் வர அந்த ஆமியை மன்னிக்கத்தொடங்கினான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சம்பவத்தை மறக்கவும் விரும்பினான்.

5.

ஏஜென்சிக்காரன் மீண்டும் ஆட்களை கொண்டிறக்கத் தொடங்கியிருந்தான். இந்த முறை எல்லாம் சரிவருமென இவனை அனுப்பிவைக்க இவன் மலேசியாவில் பிடிபட்டு திருப்பி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இனி வெளிநாட்டுக்குப் போவதென்றால் மீண்டும் காசு கட்டவேண்டும். ஏற்கனவே கொழும்பிலிருக்கும் செலவை நோர்வேயிலிருந்த சித்தப்பாதான் அனுப்பிக்கொண்டிருந்தார். யாரிடம் கையேந்துவது என்பதும் தெரியாது மனம் சிதறி அவன் அலைய‌த் தொட‌ங்கினான். 'என்னை விட்டுப் பிரியக்கூடாது என்றுதான் இதெல்லாம் நடக்கிறது' என அவள்தான் அவன் மனதை வேறுதிசைகளில் தேற்றினான். வெளிநாட்டுக்குபோனால் இவளைக் கைகழுவிவிடுவது என்ற யோசனையில்தான் இவன் இருந்தான் என்பதே உண்மை. ஆனால் அது விரைவில் நடக்காது போல இருக்கிறதே என மனதில் சலித்துக்கொள்ளவும் தவறவில்லை.

அவள் இப்போது உயர்தரத்தில் படித்துக்கொண்டிருந்தாள். இவன் ஓ/எல்லிலேயே குழப்பியதால் மேலே படிக்க முடியாதிருந்தது. சும்மா கொம்பியூட்டர் கிளாஸ்களுக்கு மட்டும் ஆமிப்பிரச்சினைகளில் இருந்து தப்புவதற்காய்ப் போகத் தொடங்கினான். ஒருநாள் மாலை அவளோடு கடற்கரைக்குப் போனபோதுதான் அங்கே இருந்த ஒரு சோடியில் தெரிந்த முகம் தெரிகிறதென உற்று உற்றுப்பார்த்தான். 'அட இது எங்களின் குதிரையல்லவா? குதிரை எப்படி கொழும்புக்குப் பாய்ந்து வந்தது?' என யோசித்தான். எனினும் ஒரு இளைஞனோடு பேசிக்கொண்டிருந்த குதிரையைக் குழப்ப அவன் விரும்பவில்லை; ஆனால் சற்றுத் தொலைவில் இருந்தபடி அவர்களை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தான். குதிரையோடு கதைத்த இளைஞன் ஒரு தொலைபேசி அழைப்பு வர, அங்கிருந்து வெளிக்கிட்டுப் போனான். இப்போது குதிரை இவனை நோக்கி நடந்து வந்து, 'நீ xxxx கொலிஜீல் படித்த xxx தானே?' என்றது. ஓமென்றான். குதிரை, இவனைக் கண்டு நான்கு வருடங்களுக்கு மேலிருக்கும். தானும் வெளிநாடு போகத்தான் கொழும்புக்கு வந்திருக்கின்றேன் என்றார். பக்கத்தில் இருந்து அவளை அறிமுகப்படுத்தியபோது, 'என்னடா... ஊரில் சிங்களவனால் இவ்வளவு வாங்கி அனுப‌வ‌ப்ப‌ட்ட‌ பின்னும், இப்ப‌டிச் சிங்களப் பெட்டையோடு திரிகிறாய்' எனச் சொன்னார். 'அக்கா, மெல்லமாகக் கதையுங்கோ, அவளுக்குக் கொஞ்சம் தமிழ் விளங்கும்' என‌ இவ‌ன் கிசுகிசுத்தான். ஒருநாள் ஆறுத‌லாய் தான் இருக்கும் இடத்துக்கு வா என்று முகவரியையும் தொலைபேசி நம்பரையும் குதிரை இவனுக்குக் கொடுத்தார்.

குதிரை இருந்த வீட்டிற்கு இவன் அவ்வப்போது பிறகு போகத் தொடங்கினான். அவர்கள் இருவருக்கும் த‌ம் ஊர் ப‌ற்றியும் பாட‌சாலை ப‌ற்றியும் க‌தைக்க‌ நிறைய‌ விட‌ய‌ங்க‌ள் இருந்த‌ன‌. இவனால் ந‌ன்கு சிங்களம் பேசமுடியும் என்பது குதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகான குதிரையுடனான சந்திப்புக்களில் அவளையும் கூட்டிக்கொண்டுபோனான். 'சிங்களத்தி' என்று தொடக்கத்தில் வெறுப்பு இருந்தாலும் போகப்போக குதிரைக்கும் அவளைப் பிடித்துப் போனது. எல்லோரும் சேர்ந்து அடிக்கடி வெளியே போய்வருபவர்களாக இருந்தார்கள். ஆமிக்காரன் வீதியில் நின்று சோதனைக்காய் மறித்தாலும் அவளின் சிங்கள தேசிய அடையாள அட்டை இவ‌னையும் குதிரையையும் எளிதாய்க் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒருநாள் விகாரைக்கு இவர்கள் எல்லோரும் போனபோது குதிரை, 'ஏன் எங்கடை சைவக்கோயில்கள் இப்படி அமைதியாய் இருப்பதில்லை?' என‌ அடிக்க‌டி சொல்லி விய‌ந்துகொண்டிருந்தார்.

மீண்டும் தேர்தல் வரத்தொடங்கியது. தேர்தல் பிரச்சாரங்கள் எல்லா இடத்திலும் அமளி துமளிப்பட்டது. கொஞ்ச நாட்களாய் குதிரையைத் தொடர்பு கொள்ளவில்லை. நேரில் போய் குதிரை இருந்த வாடகை அறையில் பார்த்தபோதும் அவர் எங்கோ கண்டிக்குச் சுற்றுலா போய்விட்டாரென வீட்டின் சொந்தக்காரர் கூறினார். தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்பட்டதால் கண்டபடிக்கு ரோட்டிலும் இவனால் திரியமுடியவில்லை. திடீரென்று கொழும்பின் சூழல் மாறத்தொடங்கியது. நிறைய இடங்களில் குண்டுகள் அங்குமிங்குமாய் வெடிக்கத் தொடங்கின. ஒருநாள் அவள் வெளிறிய முகத்தோடு இவனைக் காண வந்தாள். 'அஸ்வயா அக்கா செத்துப்போனா....அவதான் xxxx ஐ கொல்லப்போன தற்கொலைக் குண்டுதாரி என பொலிஸ் சொல்கிறது' என்றாள். இவனுக்கு அது அதிர்ச்சியாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது. இவன் 'குதிரை அப்படியிருக்க முடியாது, அவா தான் இயக்கத்தில் இருக்கிறேனென எனக்குச் சொல்லவே இல்லை' என்றான். 'என்னதான் என்றாலும், இனி அவவோடு தொடர்புடைய எங்களைத்தான் ஆமி தேடும், கெதியாய் எங்கையாவது போய் ப‌துங்கு' என்றாள் அவ‌ள். இவனுக்கு கொழும்பில் எங்கே போய் ஒளிவது என்றும் தெரியவில்லை. தனக்கு வாழ்க்கையே இனி பூசாவில்தான் என்ற அச்சம் இவனுக்குள் பரவத்தொடங்கியது. கடைசியில் அவள்தான் தங்களின் உறவுக்காரர் இருக்கும் இரத்தினபுரியில் கொண்டுபோய் தங்கவைத்தாள். 'என்ன காரணம் கொண்டும் வெளியில் திரியவேண்டாம், கதைப்பதென்றாலும் சிங்களத்தில் மட்டும் கதை, நான் வந்து அவ்வப்போது சந்திக்கின்றேன்' என்று சொல்லிவிட்டுப்போனாள். 'நீ ஏன் கொழும்புக்கு போகின்றாய்? உன்னையுமல்லவா விசாரிப்பார்கள்' என்று இவன் கேட்டதற்கு, 'நான் அதைச் சமாளிப்பேன். நீ கவனமாயிரு' என்றாள்.

விசாரித்து விசாரித்து கடைசியில் ஆமி அவளையும் கண்டுபிடித்துவிட்டது. விசாரணைக்கு என்று இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைத்து அவளை 'எல்லாவித'மாயும் விசாரித்திருக்கின்றார்கள். அவள் தனக்கு இவனைத்தான் நன்கு தெரியும், குதிரையும் இவனும் ஒரே ஊர் என்றபடியால்தான் குதிரையோடு பழக்கம் என்றிருக்கிறாள். 'இவன் எங்கே?' என்று கேட்டபோது 'குதிரை இப்படிச் செய்துவிட்டதால், ஆமி தன்னைப் பிடித்துவிடும் என்பதால் புலியின் பகுதியிற்குள் தப்பி ஓடிவிட்டான்' என்றும் அவள் சொல்லியிருக்கின்றாள். இவன் கொழும்பில் வாடகைக்கு இருந்த இடத்துக்கு அவளையும் கூட்டிக்கொண்டு போய், இவனுக்கும் புலிக்கும் தொடர்பிருக்கிறதா எனத் தேடியிருக்கின்றனர். அங்கே அவன் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களையும், 'வயது வந்தவர்களுக்கான' சஞ்சிகைகளையும் தவிர வேறு எதுவும் தேடப்போனவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவளை விடுதலை செய்தபோது, எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வரச்சொல்லி அனுப்பி வைத்திருந்தார்க‌ள்.

இதெல்லாம் நடந்து மூன்று கிழமைக்குப் பிறகு அவள் இவனைத் தேடி இரத்தினபுரிக்கு வந்தாள். 'இப்படியே இங்கே ஒன்றுமே செய்யாமல் ஒளிந்துகொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும், கொழும்புக்கு வந்தாலும் ஆமி அப்பிக்கொண்டு போய்விடுவான், எதையாவது செய்யவேண்டும்' என இவன் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். வெளிநாட்டுக்கு என்ன விலை கொடுத்தாலும் தப்பிப்போவதே ஒரேயொரு வழியெனத் தெரிந்தது. நோர்வேச் சித்தப்பாவும் தன்னால் கொஞ்சப் பணமே தரமுடியுமெனச் சொன்னார். என்ன செய்வதென குழம்பியபோது தான் மிச்சக் காசைக் கொண்டுவருகின்றேன். நீ பொறுமையாக இரு என‌க் கூறிவிட்டு அவள் கொழும்புக்குப் போனாள்.

6.

இரண்டு வாரத்தில் உரிய பணத்தை அவள் கொண்டுவர, ஏஜென்சிக்காரனை எல்லாம் தயார் செய்யச் சொல்லி, நேரடியாக இரத்தினபுரியில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குவதாய் இவன் சொன்னான். கொழும்பில் கொஞ்ச நேரம் இருப்பதைக் கூட சூழலின் தீவிரம் காரணமாய்த் தவிர்க்கவே விரும்பினான். அவளிடம் இவனுக்கு அவசியமான மிச்ச ஆவணங்களை காசு கொடுத்து கள்ளமாகச் செய்து தரச் சொன்னான். மூன்றாம் முறை எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு அவள் அவனைச் சந்தித்தபோது 'அஸ்வயா அக்கா நேரடியான தற்கொலைக் குண்டுதாரி இல்லையாம். ஆனால் அதற்கான வழியைக் கிளியர் செய்து கொடுத்த ஒருவராம்' என்றாள். எப்படியெல்லாம் இவளுக்கு நுட்பமான தகவல்கள் கிடைக்கிறதென இவனுக்கு வியப்பாயிருந்தது. நூறு மீற்றரை மின்னலாய்க் கடக்கும் குதிரை, தாக்குதலுக்கான‌ வழியைக் காட்டிவிட்டு ஏன் த‌ப்பிப் போய்விடவில்லை என இவன் யோசித்தான். சுகதாசா அரங்கில் எல்லோரும் வியக்க ஓடியிருக்கவேண்டிய குதிரை இறுதியில் ஓர் அரசியல் மேடையில் எவரும் உரிமை கோராத உடலமாகச் சிதைந்துபோனதை இவனால் க‌ற்ப‌னை செய்துபார்க்கவே முடியாதிருந்தது. தனது கனவைப் போரின் மூலம் சிதைத்தவர்களைப் பழிவாங்கத்தான் குதிரை இயக்கத்தில் சேர்ந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் குதிரைக்கு மாலைசூட நூறுமீற்றருக்கும் அப்பால் நீண்ட வரிசையில் நின்ற ஆண்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டுப்போக குதிரைக்கு பைத்திய‌மா என்ன?

இவனது, வெளிநாடு போவதற்கான இரண்டாவதான முயற்சி வெற்றிகரமாய் நிகழ்ந்துவிட்டது. இடையில் பிடிபட்டு இலங்கைக்குத் திருப்பியனுபினால் பூசா முகாமும் நாலாம் மாடியும்தான் வாழ்வு என்ற பயமே எல்லாக் கள்ளவிடயத்தையும் கவனமாகக் கடந்துவரச் செய்திருந்தது. அந்தப் பயணமே ஒருவன் மாடியுயரத்தில் ஒற்றைக் கயிற்றில் நடந்துபோவது போலத்தான் இருந்தது. எங்கேயும்... ஓரிடத்தில் பிசகினால் எல்லாமே முடிவுக்கு வ‌ந்துவிடும். மரண பயத்திற்குத்தான் எவ்வளவு வலிமை, வாழ்வில் செய்யமுடியாச் செயல்களையும் எல்லாம் அது செய்யத் தூண்டிவிடுகின்றது. முழுப் பயணமுமே ஒரு கொடுங்கனவாய்த்தான் இருந்தது. அதை ஒரு ஆறுதலான பொழுதில் இருந்து கூட ஒவ்வொரு பகுதிகளாய் மீண்டும் நினைத்துப் பார்க்க அவன் விரும்பவில்லை. இயக்கங்களில் இருந்து ஆட்களைச் சுட்டுவிட்டு வெளிநாடுகளில் வேறு சூழல்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் போலும்.

முதல் வெளிநாட்டு முயற்சியின் போது அவளைக் கைகழுவி விட்டுப் போகவேண்டும் என்றிருந்தவனுக்கு அவள் பிறகு செய்த உதவிகள் எல்லாம் மனதை மாற்றிவிட்டது. இன்னும் திருத்தமாய் தமிழ் செண்டிமெண்டலில் சொல்லவேண்டுமென்றால், 'இபோதைய வாழ்வு அவள் இட்ட பிச்சைதான்'. அவள் அன்றைய பொழுதில் அருகில் இருந்திருக்காவிட்டால் எல்லாமே சூன்யமாகத்தான் முடிந்திருக்கும். அவளையும் சில வருடங்களுக்குப் பிறகு அவன் ஸ்பொன்சர் செய்து வெளிநாட்டுக்குக் கூப்பிட்டான். 'இலங்கையில்தான் கொட்டியாவோடு காலம் தள்ளவேண்டியிருக்கிறதென்றால் நீ வெளிநாட்டுக்குப் போயும் கொட்டியாவோடு வாழ‌ப் போகின்றாயா?' எனத் தலையிலடித்து அவளது குடும்பம் அவளை அனுப்பி வைத்திருந்தது. குதிரை, கொட்டியாவாக இருந்ததால் அவனும் கொட்டியாதான் என்பதில் அவளது குடும்பத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அவர்களாவது பரவாயில்லை, வேறு சில சிங்களவருக்கு முழுத்தமிழருமே 'ப‌த்துத்த‌லை' கொட்டியா போல‌வே தெரிந்தார்கள்.

7.

கட்டுநாய‌க்கா விமான‌த்த‌ள‌த்தைப் புலிகள் அடித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகள் எல்லாத் திசைகளிலும் சுடச்சுடப் பரவிக்கொண்டிருந்தது. இதையறிந்த அவள், 'ஏன் இரத்மலானைக்கு அடிக்காமல் கொட்டியா கட்டுநாயக்காவிற்கு அடிக்கிறது?' எனத் தீவிரமான யோசனையுடன் கேட்டாள். 'உனது கேள்வியைப் பார்த்தால் இங்கே ரேடியாவில் அரசியல் ஆய்வாளராகும் தகுதி தெரிகிறது. தமிழைக் கொல்லாது கதைத்தால் அதற்கு முயற்சிக்கலாம்' என்றான் இவன் நக்கலுடன். அவளுக்கு இப்படிச்சொன்னது சுட்டுவிட்டது போலும், 'உனக்கு பிசுதா...உன்னை வெளிநாட்டுக்கு அனுப்ப எப்படிக் காசு வந்தது எனத் தெரியுமா?' என்றாள். 'நீதானே உங்களுக்கிருந்த ஏதோ ஒரு காணியை விற்றுத்தான் அந்தக்காசு வந்தது எனச் சொன்னாய்' எனக் கூறவும், 'இப்பவும் உன்னைக் கொட்டியா என நம்புகிற எங்களின் குடும்பம் அப்படிக் காணியை விற்க விட்டிருப்பார்களா?' என்றாள். 'சா....ஏன் நான் இந்த‌த் திசையில் யோசித்துப் பார்க்க‌வில்லை' என்று அவனுக்கு அவமானமாய் இருந்தது. 'இந்தச் சிங்களப் பெட்டையோடு திரிந்து திரிந்து தன் குறுக்குத்தனமான த‌மிழ்ப்புத்தி மழுங்கிவிட்டதாக்கும்' என நினைத்தான். 'அப்படியெனில் உனக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது?' தோற்றுவிட்ட தொனியில் கேட்டான் அவன்.  'சொல்கிறேன், ஆனால் பிறகு கோபப்படக் கூடாது சரியா?'  அறிவு மழுங்கி ஏற்கனவே அவமானப்பட்டவன் இனி கோபப்படவா முடியும்?  'ம்... ' என்றான்.

'அஸ்வயா அக்காவோடு நான் நல்ல நெருக்கமல்லவா? நான் சிங்களத்தி என்பதால் அக்காதான் கேட்டா, இரத்மலானை விமான நிலையம் பற்றி தகவல் சேகரித்து தரச்சொல்லி....அத்தோடு அங்கே எங்கள் மாமா ஒருவரும் வேலை செய்துகொண்டிருந்தார்.  அஸ்வ‌யா அக்கா சிங்களம் தெரிந்த அண்ணா ஒருவரையும் என்னோடு தொடர்புபடுத்தியிருந்தார். நான் தான் முடியாது முடியாது என மறுத்துக்கொண்டிருந்தேன். பிறகு அஸ்வயா அக்காவின் பிரச்சினையில் நீ மாட்டுப்பட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களிடம் சம்மதம் சொல்லி அந்த வேலைக்காய் காசை வாங்கிக்கொண்டேன்' என்றாள்.  இவனுக்கு தானோர் சூறாவளிக்குள் அகப்பட்டதுபோல எல்லாம் குழப்பமாய்த் தெரிந்த‌து. தமிழாக்கள் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் உளவு பார்க்காமல் உயிர் வாழமாட்டார்கள் என்ற கலாசாரத்தை சிங்களவர்களுக்கும் தொற்ற வைத்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. 'நாசமாய்ப் போச்சு வேண்டாம் வேண்டாம் என்று தப்பியோடினாலும் என்னைச் சுற்றி எப்போதும் கொட்டியா வந்துகொண்டேயிருக்கிறது. இதுகூடத் தெரியாம‌ல் நான் என்ன‌ மயிரா புடுங்கிக்கொண்டிருக்கின்றேன்' என்று தன் இயலாமையைப் பெருங்குரலில் கத்திக் காண்பித்தான். பிறகு எல்லா அதிர்வெண்ணும் அடக்கி அக்கம் பக்கம் பார்த்து மெல்லியகுரலில் 'நீயும் புலியா?' என‌க் குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌ளைப் பார்த்துக் கேட்டான். 'இன்ன‌மும் இல்லை. மிச்ச‌முள்ள‌ ஒன்ப‌து த‌லைக‌ளும் முளைத்தால்தானே உண்மையான‌ கொட்டியா, இல்லையா?' என‌க் க‌ண்ணைச் சிமிட்டிய‌ப‌டி ப‌டுக்கைய‌றைக்குள் போனாள் அவ‌ள்.
----------------------

*யாப்பா பட்டுவா - யாழ்ப்பாணப் பட்டின‌ம்
*கொட்டியா - புலி
*அஸ்வயா - குதிரை

(2011)

(அம்ருதா ஆடி 2012)

0 comments: