கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 03

Sunday, August 14, 2022

 எழுத்து

.

ரொபர்த்தோ பொலானோவின் 'Savage Detectives'  நாவல் பதின்மங்களில் இருக்கும் இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். மெக்ஸிக்கோவில் இதுவரை இருந்த கவிதை முறையை மாற்றுகின்றோம் என்று தங்களுக்குள் அறைகூவல் விடுத்து ஒரு புதிய குழுவை (Visceral Realists) அமைத்து இவர்கள் இயங்கத் தொடங்குவார்கள். இந்த நாவல் கிட்டத்தட்ட பொலானோவின் இளமையில் நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டதென்றாலும், இந்த நாவலின் கதைசொல்லி பொலானோ அல்ல. 


Visceral Realists அமைப்பைச் சேர்ந்த கார்ஸியா மாதரோவினாலே சொல்லப்படுகின்றது. அவ்வாறு சொல்லப்படும் கதையில் பொலானோவின் Alter egoவான, Arturo Belano ஒரு பாத்திரமாக வருகின்றது. இவ்வாறே தான் சம்பந்தப்பட்ட இளமைக்காலக் கதையைச் சொல்லுகின்றபோதும், தன்னையொரு உபபாத்திரமாகக் கொண்டு ஹெமிங்வே  'A Moveable Feast'ஐ எழுதியிருப்பார்.


எனக்கு பொலானோவை ஹெமிங்வேயும், ப்யூகோவ்ஸ்கியும் இடைவெட்டும் புள்ளியில் வைத்துப் பார்ப்பது பிடிக்கும். பொலானோ தனது 15 வயதில் சிலியிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு புலம்பெயர்ந்தவர். பின்னர் ஒரு காதல் பிரிவின் நிமித்தம் மெக்ஸிக்கோவை விட்டு தனது இருபதுகளில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்தவர். பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் உணவகங்களில் கோப்பை கழுவுகின்றவராகவும், இரவுநேரக் காவலாளியாகவும் வேலை செய்து ஒரு நாடோடியாக அலைந்து திரிந்தவர். அந்தக் காலத்தில் குடிக்கும் போதைமருந்துக்கும் அடிமையாகி இருந்தவர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பலரால் வியந்து பாராட்டப்பட்ட மார்க்குவெஸ், பாப்லோ நெருடா, இஸபெல் அலண்டே போன்றவர்களை எள்ளலாக பல இடங்களில் விமர்சனம் செய்தவர். அதேவேளை போர்ஹேஸ்ஸையும், அக்டோவியா பாஸையும் தனக்குரிய ஆதர்சமாகக் கொண்டவர். ஆகவேதான் இந்த நாவலிலும் (Savage Detectives) ஒரு பாத்திரமாக அக்டோவியா பாஸை கொண்டுவருகின்றார்.


ளமை கொப்பளிக்கும்போது எழும் கனவுகள்தான் எத்தகை அழகானது. இந்த உலகையே புரட்ட பெரும் புரட்சி செய்யவும், கலை இலக்கியங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்றும், கற்பனை செய்யாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன? அவ்வாறு மாற்றங்களைக் கொண்டுவர புறப்பட்ட ஒரு குழு எப்படி சிதைவுண்டு போகின்றது என்பதை நாம் இந்த நாவலில் பார்க்கின்றோம். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான ஒன்று நிகாரகுவாவிற்கு புரட்சி செய்யப்போய், இறுதியில் வெறுமை சூழ, ஒரு பூங்காவில் அக்டோவியா பாஸை சந்திக்கும். 


அக்டோவியா பாஸ் இந்த இளைஞர்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தவர். ஆனால் அந்தக் குழு உடைந்து போனது மட்டுமின்றி, இந்தப் பாத்திரத்திற்குள் எந்த பெரும் நெருப்பும் கனன்று எரிவதில்லை. ஒரு இடத்தில் யூலிஸஸ் லிமா என்கின்ற இந்தப் பாத்திரம், 'ஒருவருக்கு இருப்பதற்கு ஓரிடமும், செய்வதற்கு ஒரு வேலையும் நிச்சயம் வேண்டும்' என்று சொல்லும். ஆனால் துயரம் என்னவென்றால் யூலிஸஸ் லிமா என்கின்ற இந்தப் பாத்திரம் இந்த இரண்டும் இல்லாது தத்தளிப்பில் அலைந்து கொண்டிருக்கும்.


எழுபதுகளின் நடுப்பகுதியில் தொடங்கும் இந்த நாவலை ரொபர்த்தொ பொலானோ 1998 எழுதி முடித்து வெளியிடுகின்றார். அந்த நாவல் வருகின்ற காலப்பகுதியில்தான் இந்த நாவலில் வருகின்ற யூலிஸஸ் லிமா என்கின்ற இளமையில் அவ்வளவு துடிப்புமிக்க இருந்த நண்பரை, கார் விபத்தில் இழக்கின்றார். அந்த நண்பரின் உடலம் எவரும் அனுமதி கோராது மூன்று நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் இருந்த கொடுமையும் நிகழ்ந்திருக்கின்றது. 


வாழ்க்கையெனும் பரம்பதத்தில் நாம் எங்கெங்கு எல்லாம் எடுத்துச் செல்லப்படுவோம் என்பது எவருக்கும் தெரிவதில்லை. ஆனால் இலக்கியம் அதை இன்னொருவகையில் இவ்வாறான உதிரிகளாக அடையாளமற்றுப் போகும் மனிதர்களை நினைவுகொள்ளும். ரொபர்த்தோ பொலானவை வாசிக்கும் என்னைப் போன்ற வாசகர்கள், நிஜவாழ்வில் எவருக்குமே தேவையற்று அநாதரவாய் இழந்து போன மனிதனை, யூலிஸஸ் லிமா என்ற பாத்திரத்தினூடாக உயிர்ப்புடன் வைத்துக் கொள்வோம். 


இந்த Visceral Realists இளைஞர்களுக்கு அக்டோவியா பாஸ் போல, இன்னொரு எழுத்தாளரான ஸிசாரோ டினாஜாரோ என்கின்றவரும் ஆதர்சனமானவர். அவரையே தங்கள் குழுவின் தாயைப் போன்றவர் என்கின்றனர். ஆனால் டினாஜாரோ இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படாதவர். அதேபோல அவரின் வாழ்வும் மர்மமானது. ஒரு பாலைவனத்தில் காணாமற்போனவர் எனச் சொல்லப்படுகின்றது.  அதன்பின் அவரைப் பற்றி எவருக்கும் தெரிவதில்லை. ஒருவகையில் இந்த நாவலின் முதற்பாகமே அந்தப் பெண்ணைத் தேடி இந்த இளைஞர்கள் அந்தப் பாலைவனத்துக்குப் போவதற்கான முயற்சிகளைப் பற்றியதுதான்.


ஆக, இந்த நாவல் வரலாற்றில் காணாமற்போனவர்களை, எளிய மனிதர்களாக காலத்தின் அபத்தத்தினால் விழுங்கப்பட்டவர்களை கண்டடைகின்ற ஒரு எத்தனம் எனக்கூடச் சொல்லலாம். இன்னொருவகையில் உலகின் ஒரு மூலையில், எவராலும் அதிகம் பேசப்படாத ஒரு குழு இளைஞர்களின் பெருங்கனவுகளை எழுபதுகளின் பின்னணியில்  நாம் வாசித்துப் பார்க்கின்றோம். போதைமருத்துக்குள் அகப்பட்ட பொலானோ அவரின் நாற்பதுகளில் பார்சிலோனாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்தபின் வேறொரு மனிதராக மாறுகின்றார். எவ்வாறு போதையிலிருந்து மீண்டேன் என்பதை ஒரு கட்டுரையாகக் கூட எழுதியிருக்கின்றார். ஆனால் இன்று அவை முக்கியமில்லை.

ஒருவர் எவற்றில் வீழ்ந்தார், மீண்டார், எழுந்தார் என்பதெல்லாம் ஒரு கலைஞனைக் குறித்து யோசிக்கும்போது வாசகர்கள் அவ்வளவு கவலைப்படுவதுமில்லை. ரொபர்தோ பொலானோ போன்ற எழுத்தாளர்கள் எவ்வகையான படைப்புக்களை நமக்குத் தந்திருக்கின்றார்கள் என்பதே நமக்கு முக்கியமானது. ஒருவகையில் தன் சமகாலத்து பெரும் எழுத்தாளர்களை எள்ளல் செய்து, நோபல் பரிசு போன்றவற்றை கடுமையாக விமர்சித்த பொலானோ இன்றைக்கு மார்க்குவெஸ், போர்ஹேஸ் போல இலத்தீன் அமெரிக்க உலகில் மிக முக்கியமான எழுத்தாளர். ஆனால் பொலானோ வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு உதிரி;  பலரால் அவ்வளவு கவனிக்கப்படாத ஒரு எளியபடைப்பாளி.


தனது கலைக்கு நேர்மையாக இருந்த பொலானோ அவரது ஐம்பதாவது வயதில் (2003) காலமாகிப் போனாலும், இன்றைக்கு அவரே கற்பனை செய்திராத எல்லைக்கு அப்பாலும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றார். 


அது காலம் அவருக்கு மனம் உவந்தளித்த சிறந்தவெகுமதியாகும்.


****************


நன்றி: 'அகநாழிகை' ‍- ஆடி, 2022

2 comments:

Anonymous said...

நன்றி இளங்கோ நன்றி நண்பரே பகிர்வுக்கு இந்த நூலை நான் வாங்கி படிக்கிறேன்

8/14/2022 06:30:00 PM
இளங்கோ-டிசே said...

நல்லது. நன்றி.

8/15/2022 07:38:00 PM