கனடாவில் வசிக்கும் எழுத்தாள நண்பர் இளங்கோ  தனது சிறுகதை தொகுப்பான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூலை நண்பர் வடகோவை வரதராஜன் ஊடாக என்னிடம் சேர்ப்பித்திருந்தார். அவருக்கு முதலில் எனது அன்பும் நன்றியும்.

10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. அதில் உள்ள 'Mr.K' என்ற சிறுகதை குறித்த பதிவாக இது அமைகிறது.

தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர்களை பாத்திரமாகக் கொண்ட பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு வசதிக்காக அவற்றை நான்கு வகையாக வகைப்படுத்தி நோக்கலாம் எனத் தோன்றுகிறது.

Uploaded Image

1. எழுத்தாளர்களின் குணநலன்களை  விதந்தோதி அவர்களின் சொந்தப் பெயர்களையே பாத்திரமாகச் சித்திரித்து எழுதப்பட்டவை.
2. எழுத்தாளர்களின் குணவியல்புகளை உள்வாங்கி வேறு பெயர்களில் பாத்திரமாக்கி எழுதப்பட்டவை.
3. எழுத்தாளர்களை வசை பாடியோ அல்லது அவர்களது நடத்தைக் கோலங்களை எதிர்மறையாகச் சித்திரித்தோ புனைவுப் பாத்திரமாக எழுதப்பட்டவை.
4. தாம் வாசித்த எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களை தாம் எழுதும் படைப்புக்களில் வரும் பாத்திரங்களோடு ஒப்புநோக்கி எழுதப் பட்டவை.

மேற்படி முதல் இரு வகைகளுக்கும் உதாரணமாக பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய கட்டுரை ஒன்றின் சிறுபகுதியை  எடுத்துக் காட்டலாம்.

Uploaded Image


"எல்லா மனிதர்களையும்போலத் தன் குடும்பம், தன்மனைவி, தன் அடையாளம் என வாழ்க்கையை நடத்தாமல் / நடத்த விரும்பாமல் விலகிய பயணத்தைத் தேர்ந்தெடுத்த ஜி.நாகராஜனின் கடைசிக்கால வாழ்க்கை முறை பலருக்கும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. கதையாக ஆக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆக்கியிருக்கிறார்கள். சி.மோகனின் 'விலகிய கால்கள்' கதைக்கும் முன்பே நான்கைந்து கதைகளை வாசித்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் வெளியூர்வாசிகள். பாண்டிச்சேரிக்குப் போன ஜி.நாகராஜனைத் தற்செயலாகப் பார்த்துப் பிரபஞ்சன் தனது கதைக்குள் எழுதிக் காட்டியிருக்கிறார். தன்னைப் பார்ப்பதற்காகவே  நாகர்கோவில் வந்தவரை சுந்தரராமசாமி தனது கதையில் எழுதியிருக்கிறார்.

சென்னைக்கு வந்தவரை அசோகமித்திரனும் திலீப்குமாரும் எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனும்கூடக் கொஞ்சம் விலகலோடு தான் எழுதிக் காட்டுகிறார். ஆனால் திலீப்குமாரின் கதைக்குள் அவரை முழுமையாகப் புரிந்துகொண்ட ஓர் இளைஞனின் பார்வையில் நிறுத்தப்படுவார் ஜி. நாகராஜன். இவர்களெல்லோருமே கதைக்குள் தங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொண்டு கதையைச் சொல்லியிருப்பார்கள்.  அவர்களெல்லாம் அவரது வாழ்க்கையைப் போன்றதொரு வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைத்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள் என்று வாசகர்களுக்கும் முன்வைக்கவில்லை.

ஜி. நாகராஜன் என்றொரு எழுத்தாளர் இருந்தார்; அவர் மற்றவர்களைப் போன்ற எழுத்தாளர் அல்லர்; என்னைப்போலவும்கூட அல்ல என்ற தொனி அவற்றில் உண்டு என்று கூறும் கதைகளையே எழுதிக்காட்டி இருக்கிறார்கள். ஆம் அவை கதைகள் தான்; வரலாறல்ல. அக்கதைகளில் எல்லாம் அவர் மட்டுமே உண்மைப் பாத்திரங்கள்.  அல்லது மையப்பாத்திரங்கள். கதைசொல்லிகளாக வரும் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் காட்டிக் கொள்ளாத முன்னிலைப் பாத்திரங்கள் மட்டுமே. அந்தக் கதைகளை வாசிக்கும்போது ஏற்படுவது இரக்க உணர்வு. இன்னும் சில காலம் அவர்  இருந்திருக்கலாம் என்பதான இரக்க உணர்வு"

இதே போன்று புதுமைப்பித்தன், ஆத்மாநாம், ஆதவன் ஆகியோர்களை கதாபாத்திரமாகக் கொண்ட சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாவது வகை கதைகளுக்கு  ஈழத்திலேயே நிறைய உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். 2011ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு' அரங்கில் நண்பர்  தேவ முகுந்தன் 'இலக்கியவாதிகளை பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு கட்டுரை வாசித்ததும்  நினைவில் வருகிறது.

Uploaded Image

நான்காவது வகைக்கு உதாரணமாக குந்தவை எழுதிய இரண்டு சிறுகதைகளை எடுத்துக் காட்டலாம்.

"இப்படியான 'ஆண்கள்' எல்லாருமே நீலபத்மனாபனின் 'திரவி' போன்றவர்கள் தானோ என அவள் அடிக்கடி யோசித்திருக்கிறாள்"
( 'வீடு நோக்கி' சிறுகதையில்...)

"காசிற்குத்தேவை, எப்பொழுதுமே இருந்து வந்தது. அவன் அந்தக் கலையில் தீவிரமாக முன்னேறி விட்டிருந்தான். தான் ஒரு சாதாரணமானவன். உலக இயல்புகளுக்கு உட்பட்டவன். 'தகழி'யின் கேசவப்பிள்ளை மாதிரி. இயற்கையைத் தானே 'தகழி'யும் எழுதியிருக்கிறார்"
( 'யோகம் இருக்கிறது' சிறுகதையில்...)

இந்த நான்கு வகையான சித்திரிப்புகளைத் தாண்டி 'Mr.K' சிறுகதையில் இளங்கோ செக் நாட்டு எழுத்தாளரான காஃப்காவையும் தமிழ் எழுத்தாளரான கோபி கிருஷ்ணனையும் சிறுகதைக்குள் கொண்டு வந்து நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்துள்ளார்.

Mr.K கதையில் வரும் கதைசொல்லி  காதலினால் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இருவேறு சூழ்நிலைகளில் ஆளாகித் தடுமாறும் போது அந்த மனநிலைக்குப் பொருந்தக்கூடிய பிரதிபலிப்புகளை காஃப்காவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடும் அவரின் படைப்புகளின் வாயிலாகவும் ஒப்புநோக்கிச் சித்திரித்து, காஃப்காவை புரிந்து கொள்வதில் ஏற்படும்  விலகலையும் ஏற்பையும் விபரித்து,  நம் இருத்தலிய வாழ்வில் காஃப்கா ஒரு போதும் விலத்திப் போக முடியாதவர் என்றும் காட்டுகின்றார்.

அதற்கு காஃப்காவின் 'பெர்லின் பொம்மை' கதையையும் 'மழை' சிற்றிதழுக்காய் கோபி கிருஷ்ணனை,  யூமா வாசுகி எடுத்த நேர்காணலின் சில பகுதிகளையும் இந்தக் கதையில் பொருத்தமுறக் கையாண்டுள்ளார்.

இந்தக் கதையைப் படித்ததும்  எப்போதோ வாங்கிய சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்த "உலகப் புகழ் பெற்ற கலைஞன் : காஃப்காவின் கடிதங்கள்,கதைகள், கட்டுரைகள்" நூலையும் 'புது எழுத்து' சிற்றிதழ் வெளியிட்ட 'கோபி கிருஷ்ணன்' சிறப்பிதழையும் வாசிக்கத் தூண்டி உள்ளது.

***
 
(Oct, 2025)