சுந்தர ராமசாமியின் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் அவர் எழுதிய 75 சிறுகதைகள் இருக்கின்றன. சுரா அவரின் 20ஆவது வயதில் முதல் சிறுகதையை எழுதியதிலிருந்து அவர் 74வது காலமாகியவரை கதைகளை எழுதியவர். இந்த 50 வருடங்களில் அவர் எழுபத்தைந்து கதைகளை மட்டுமேயாகும்.
ஒரு வருடத்துக்கு 2 கதைகளைக் கூட எழுதாத ஒருவர் தமிழ்ச்சூழலில் புனைவுகள் சார்ந்து ஆழமாகப் பாதிப்புச் செய்திருக்கின்றார் என்பது நமக்கு வியப்புத் தரக்கூடும். ஆனால் நம் தமிழ்ச்சூழல் என்பதே எழுதிக்குவிப்பவர்களில் மட்டும் கவனம் குவிப்பதில்லை என்பதற்கு இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.
தன் வாழ்நாளில் 24 சிறுகதைகளை விட வேறெதுவுமே எழுதாத மெளனி முக்கிய படைப்பாளியாகத்தான் தமிழில் கொண்டாடப்படுகின்றார். மெளனியை, தமிழின் இன்னொரு பெரும்படைப்பாளியான புதுமைப்பித்தன் 'தமிழ்ச்சிறுகதையின் திருமூலர்' எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இங்கே கூட புதுமைப்பித்தன் மாறுபட்டுத்தான் சிந்திக்கின்றார். வழமையாக திருமூலர், அவர் எழுதிய 3000 இற்கும் மேற்பட்ட செய்யுள்களால், நிறைய எழுதியவர் என்றுதான் பிறரால் உதாரணம் காட்டப்படுகின்றவர். அப்படிப்பார்த்தால் மெளனி நிறைய எழுதிய 'திருமூலர்' அல்ல. ஆனால் புதுமைப்பித்தன் ஏன் மெளனியை 'எழுத்துத் திருமூலர்' எனக்குறிப்பிடுகின்றார் என்றால், அவர் அகவுலகத்தில் நிறைய ஆழமாக திருமூலர் போல பயணப்பட்டதால் என்பதாலாகும்.
*

ஒருவகையில் சுந்தர ராமசாமி அவரின் கடைசிக் காலத்தில் தனது குழந்தைப் பருவங்களுக்குத் திரும்பியவர் என்று அவர் எழுதிய பிற்காலக் கதைகளைப் பார்க்கும்போது சொல்ல முடியும். மேலும் அந்தக் கதைகளில் வெளிப்படையாகவே சுராவின் சொந்த வாழ்வியல் அனுபவங்கள் தெரிகின்றது. அதுபோலவே அவரின் பேரக்குழந்தைகளினூடாக குழந்தைமைக்குத் திரும்புகின்ற ஒரு முதியவராகவும் தெரிகின்றார்.
இந்தக் கதைகளில் சிலவற்றில் அவரின் மகள்/மனைவி/பேரக்குழந்தைகள் சொந்தப் பெயர்களில் வருகின்றார்கள். 'தனுவும், நிஷாவும்' கதையில் அழகான அந்தப் பேரக்குழந்தைகளின் உலகம் காட்டப்படுகின்றது. அதுபோலவே 'களிப்பு' என்கின்ற கதையில் ஒரு பிள்ளை/பேரக்குழந்தைகளுடனான புராதன கிணற்றைப் பார்க்கும் பயணத்தில் அமெரிக்க முதியவர்களின் உலகை இன்னொரு முதியவராக இருந்து பார்க்கும் சுராவைப் பார்க்கின்றோம். அதில் சுரா தனக்கு இருக்கும் மனசோர்வு நோயைப் பற்றியும், அதற்கு எடுக்கும் மருந்துகளையும் விபரிக்கின்றார். ஒருவகையில் பிற்காலத்தைய சுராவை இந்த 'களிப்பு' கதையில் என்னால் நெருங்கிப் பார்க்க முடிகின்றது.
அதுபோலவே 'கூடிவந்த கணங்கள்' கதையில் அமெரிக்க நண்பரொருவரின் காட்டுக்கு நடுவில் கலைத்துவமாக இருக்கும் வீட்டில் கழிக்கும் பொழுதைப் பற்றியது. அதில் கதைசொல்லி முதன்முதலாக 'பேரமைதியை இப்போதுதான் முதல் தடவையாக உணர்கிறேன் என்று தோன்றிற்று. அமைதி என்று இதற்கு முன் நான் எண்ணியது எல்லாம் சத்தத்தைப் பயங்காட்டி அமுக்கி வைத்திருந்த வெருட்டல்கள்தான்' என்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. ஒருவகையில் நம்மில் பெரும்பாலானர்க்கு அமைதி என்பது சத்தத்தைப் பயங்காட்டி அமுக்கி வைத்திருந்த வெருட்டல்களாகத்தான் இளமையில் இருந்திருக்கின்றது என்று என் மனம் திரும்பிச் சொல்லிப் பார்த்தது. இந்தக் கதையில் இப்படியான அமைதியை கதைசொல்லி உணர்ந்தாலும், இறுதியில் அவருக்கு 'மனித வாழ்க்கையின் அற்ப அலைச்சல்களையும், சிறுமைகளையும் மனது நினைவுகொள்ளத் தொடங்கியதும் மிகுந்த வருத்தம் ஏற்படத்தான்' செய்கின்றது.
ஒருவகையில் நாம் இளமையில், நமக்கு அர்த்தம் தருவதாக நினைத்து பணம், புகழ், இன்னபிறவின் நிமித்தம் அலைவுறுவதுவும், பின்னர் முதுமையில் அவை எதற்கும் அர்த்தமில்லாது போவதை பலரின் வாழ்க்கைப் பாடங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் நாம் இளமையில் இவை எதையும் உணர்ந்து கொள்வது அரிதாகவே இருக்கும். இந்தக் கதையில் கதைசொல்லி தானுணர்ந்த தற்காலிக அமைதியான மனோநிலையை தனது நண்பரோடு பகிர்ந்து கொள்ள விரும்ப நினைப்பதுடன் இந்தக் கதை முடிகின்றது.
சுரா கடைசிக்காலங்களில்தான் ஜி.நாகராஜனை நினைவுகூரும் சிறந்த கதையான 'நண்பர் ஜி.எம்'மை எழுதியிருக்கின்றார். அறையினுள் அடைக்கப்பட்ட சிறுவர்கள் தெருவில் போகும் யானையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கதவை உடைத்து அவர்களை யானையைப் பார்க்க வைக்கும் 'நண்பர் ஜி.எம்' வேறொரு விசுவரூபத்தை சுராவின் இந்தக் கதையில் எடுத்துவிடுகின்றார்.
சுரா தனது கதைகளைத் தொடர்ந்து செதுக்கவும், அதன் நேர்த்தியின் பொருட்டு 'இதயத்தை விட்டு மூளையை அதிகம் நம்புபவர்' என்கின்ற விமர்சனம் அவரது கதைகளைப் பற்றி இருக்கின்றது. இன்றைய காலத்து மொழியில் சொல்வதென்றால் சுரா அவரது கதைகளை அதன்போக்கில் எழுதவிடாது, ஒரு கடிவாளத்தை கண்களுக்குத் தெரியாமல் அணிந்துவிடுகின்றவர் என்று சொல்லலாம். அதை முற்றிலும் மறுக்கின்றமாதிரியாக 'கொசு, மூட்டை, பேன்' என்கின்ற கதையைச் சொல்லலாம். இக்கதையில் சுராவின் வழமையான நேர்த்தி இருக்கிறது, ஆனால் அவ்வளவு நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கின்றது. சுராவினால் இந்தளவுக்கு வாசகரை சிரிக்க சிரிக்க வைக்க ஒரு கதை எழுத முடியுமா என்று நானே வியந்த கதை இக்கதை.
சுராவின் இறுதிக்காலத்தில் அவரது ஒரு கதை மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது. அன்று 2004 காலப்பகுதியில் இந்தக் கதை 'காலச்சுவடில்' வெளிவந்த பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. எனக்கிருந்த இளமைக்கொந்தளிப்புக்கேற்ப இந்தக் கதையை அன்று விமர்சித்த தரப்பின் பக்கமே அப்போது நின்றேன் என்றாலும், இப்போது அதை மீளவாசிக்கும்போது அந்தளவுக்கு எதிர்நிலை எடுக்க அதுவொன்றும் மோசமான கதையல்ல என்றேபடுகின்றது. அது தொடர்பாக வெளிவந்த ஆதரவு/மறுப்பு கட்டுரைகளைச் சேர்த்து நூறுபக்கங்களில் ஒரு நூலும் அந்தக் காலங்களில் வெளிவந்ததாக ஞாபகம். அந்தக் கதைதான் 'பிள்ளை கெடுத்தாள் வினை'.
ஆனால் என்னை அதிகம் கவராத அவரது இறுதிக்கால கதைகளில் ஒன்று, 'மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்'. இது கிட்டத்தட்ட 70 பக்கங்களுக்கு மேலான நீள்கதை. இவ்வளவு நீளமாக அந்தக் கதையைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றே எனக்குப்படுகிறது. ஆனால் சுரா அந்தக் கதையின் தலைப்போடே தனது கடைசி சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருகின்றார் என்றால் அவருக்கு அதை எழுத ஏதேனும் நெருக்கமான காரணம் இருந்திருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்கிறேன்.
*
எந்த ஒரு கலைஞருக்கும் அவருக்குப் பிடித்தமான கலையில் கடைசிவரை இயங்கிக் கொண்டிருப்பது ஒருவருக்கு அளிக்கப்படும் ஆசிர்வாதமென நான் நினைப்பதுண்டு. அப்படி அவர்கள் விரும்பிய கலை இறுதிக்காலத்தில் கைவிலகிப் போனதால் குடியில் அழிந்தவர்களும், தற்கொலைக்குப் போனவர்களும் நிறையப் பேர் இருக்கின்றார்கள். இப்போது சமூகவலைத்தளங்கள் வந்தபின் நமக்குப் பிடித்த பல படைப்பாளிகள் முதுமையில் வாழ்க்கையின் விரக்தி குறித்து சலித்து எழுதுவதை அதிகம் பார்க்கின்றோம் அல்லவா?
அவ்வாறில்லாது தமது கடைசிக்காலம்வரை எழுத்தின் வழி வாழ்வின் நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு இருந்தவர்கள் என அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் தாம் காலமாகும் கடைசிக்காலம்வரை எழுத மட்டுமில்லை, கதைகளில் நீர்த்துப் போகாமலும் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இன்னும் முக்கியமானது. வாழ்க்கை அவர்கள் மீது எவ்வளவு சலிப்பைக் கொட்டினாலும், அவர்கள் கலையின் மீது கொண்ட தீராத விருப்பால் மட்டும் அது நிகழ்ந்திருக்கச் சாத்தியம் இருக்கின்றது.
ஒருவர் தனது இறுதிக்காலங்களில், இந்த வாழ்க்கையினால் என்ன பயன் என்று கேட்பதைப் போல, ஒரு படைப்பாளி நான் இவ்வளவு காலம் எழுதி என்ன பயன் என்று விரக்தியடைந்தார் என்றால், அதைப் போன்ற ஒரு மோசமான நிலை ஒரு எழுத்தாளருக்கு ஏற்பட முடியாது. அந்த வகையில் குழந்தைப் பருவத்தில் ஒரு நோயுற்ற சிறுவனாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்து, பாடசாலையில் தமிழே படிக்காத சுந்தர ராமசாமி தன் விருப்பில் தமிழைப் பிற்காலத்தில் கற்று தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியம் வாய்ந்த ஒருவராக மாறியது ஓர் அரிய நிகழ்வென்றுதான் சொல்லவேண்டும்.
***
