கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 155

Tuesday, July 14, 2026

 

 ஈழம் பற்றிய உரையாடல்கள்!



ஈழம் சார்ந்த விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களால் கட்டியமைக்கப்பட்டிருப்பவை. தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு அதைத்தாண்டி பொதுவான வெளிக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்களை நகர்த்தவும் வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விவாதங்கள் இரண்டு தரப்பினரை முதன்மையான எதிரிகளாகக் கட்டமைக்கின்றன. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் நிமித்தம் அவர்கள் இலங்கையரசையோ அல்லது நீண்டகாலமாக போராட்ட களத்தில் இயங்கிய விடுதலைப்புலிகளையோ ஆதரிக்கவோ/எதிர்க்கவோ செய்வதாக விவாதங்கள் முடிந்து போகின்றன. ஆனால் அவ்வாறான ஒரு கறுப்பு வெள்ளைக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்கள் அமையமுடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.
 
 
ஆகவே ஈழம் சார்ந்த உரையாடல்களை எல்லாத் தரப்பினரும் பங்குபற்றும் பொதுவான தளத்துக்குள் நகர்த்த வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நகர்த்தினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கான சிந்தனைகளை முன்வைக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட அனுபவங்களினூடு கிடைக்கும் கசப்பான உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுபவர்களாக அனைத்துத் தரப்பினரும் இருந்தாக வேண்டும்.

அதற்கு ஓர் உதாரணமாக 'மாறிய நாட்களும் மாறாத சூரியனும்' என்ற வயிரமுத்து திவ்வியராஜன் எழுதிய நூலைச் சொல்லலாம்.

இந்த நூலில் கடந்தகால கசப்பான உண்மைகளை, தனிப்பட்ட ஒருவரின் அனுபவங்களினூடாகப் பார்க்கின்றோம். அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவங்களின் நீட்சியில் அதைப் பொதுத்துயரமாக ஆக்கி ஈழம் சார்ந்த உரையாடல்களை உருவாக்க முயல்கின்றதையும் இந்த நூலில் அவதானிக்க முடியும்.

*

திவ்வியராஜன் தனது சிறுவயது அனுபவத்தைச் சொல்லும்போது 1950களிலே இலங்கை இராணுவத்தால் 'ஊரடங்குச் சட்டம்' அமுல்படுத்தப்பட்டு மாலை ஆறுமணிக்குப் பிறகு வீட்டுக்குள் அடங்கிய தமிழ்ச் சமூகத்தின் சுவடுகளைப் பார்க்கின்றோம். அதன் பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தின் நிமித்தம் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குதல் நிகழ்ந்து, 1977 இல் 'இனக்கலவரம்' நிகழ்ந்தபோது ஒரு தமிழனாக கொழும்பில் அவர்பட்ட கஷ்டத்தின் அனுபவத்தை நாம் வாசிக்கின்றோம்.


கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்து ஓர் அரசாங்க உத்தியோகத்தராக கொழும்பில் வேலை செய்யும்போது 1977 இல் இனக்கலவரம் நிகழ்கின்றது. தமிழராக இருந்து வேலைக்குப் போவது ஆபத்து என்று வீட்டுக்குள் அடங்கி இருக்கும்போது, இவரைத் தேடி அலுவலகம் வந்த நண்பரொருவரை அங்கே வேலை செய்தவர்களின் ஒருபகுதியினர் அறைக்குள் புகுத்தி அடித்துத் துவைக்கின்றது. இந்நிகழ்வை அறிந்த திவ்வியராஜன் அடுத்தநாள் அங்கே போய் இப்படிச் செய்வது நியாயமானதா என்று கேட்கும்போது, அந்த 'காடையர்' கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதைக் கண்டு அதிர்கின்றார்.

இப்படி ஒரு சிங்கள கம்யூனிஸ்ட் இனவாதியாக மாறினாலும், திவ்யராஜனையும் அவரது சகோதரரையும் கவனமாக பம்பலப்பிட்டி பிள்ளையார்கோயில் அகதிமுகாமிற்கு அனுப்பி யாழ்ப்பாணம் போகும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்பவர்களாக சிங்களவர்களே இருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் வந்து வடமராட்சியில் வாழும் திவ்வியராஜனை, 1984இல் இலங்கை இராணுவம் பல இளைஞர்களோடு சேர்த்து கைதுசெய்து பலாலி இராணுவமுகாமிற்கு அனுப்பி வைக்கின்றது. அப்போதே திவ்யராஜனுக்கு திருமணமாகி மகளும் பிறந்துவிட்டார். அப்படியான ஒரு குடும்பஸ்தவன் எப்படி இயக்கக்காரனாக இருப்பான், மேலும் தானொரு அரச உத்தியோகத்தன் என்று அனைத்து வகைகளிலும் ஆதாரம் காட்டியபோதும், திவ்வியராஜன்  கைதுசெய்யப்படுகின்றார்.
அங்கே கைதியாக இருக்கும் காலத்தில் தப்பியோடும் முயற்சியைச் செய்ய விரும்பும்போதும்,  தப்பும்போது இறந்துவிட்டால் தன் மனைவி/பிள்ளைகள் நிலை என்னவாகும் என்கின்ற யோசனை அதைத் தடுக்கின்றது.  அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்களை விசாரணையின்றி பூஸா முகாமிற்கு அனுப்பி வைக்கும்போது, ஓர் இராணுவ அதிகாரியின் கருணையில் இவர் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்புகின்றார்.

ஆனால் அந்த வீடு திரும்புதலும் நிம்மதியாக திவ்வியராஜனுக்கு இருப்பதில்லை. அவரது சகோதரர் அப்போது கிழக்கு மாகாணத்தில் நிலஅளவையாளராக வேலை செய்துகொண்டிருக்கின்றார். அவர் அங்கே 'இனந்தெரியாத நபர்களால்' கைதுசெய்யப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் இரண்டு வாரங்களின் பின் திவ்வியராஜன் குடும்பத்தினருக்குக் கிடைக்கின்றது. தனது தம்பியைத் தேடி கிழக்கு மாகாணத்துக்குப் போகும் திவ்வியராஜன், அவரது தம்பியோடு பத்துப்பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றார். அப்படி 'காணாமல் போன' அந்தத் தம்பி பிறகு என்றென்றைக்குமாக திரும்பி வருவதில்லை என்பது அவ்வளவு துயரமானது.

*
இப்படியான துயரங்களோடு வாழும் திவ்வியராஜன் பிறகு 1987 'ஒபரேஷன் லிபரேஷன்' என்ற இலங்கை இராணுவத்தின் யாழ் தீபகற்பகத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையால் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றார். வடமராட்சியில் பெருமளவு ஆளணியுடன் முன்னேறி வந்த இராணுவத்தைக் கண்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கி ஓடிவிட, இவரைப் போன்ற பல இளைஞர்கள் இராணுவத்தால் பிடிபடுகின்றார்கள். அங்கிருந்து இளைஞர்கள் பலரை சிங்களப் பகுதியில் இருந்த சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க,  திவ்வியராஜனைக் கைதுசெய்து வைத்த இரண்டு இராணுவத்தின் கருணையாலும், திவ்வியராஜனுக்குத் தெரிந்திருந்த சிங்களத்தாலும் தப்பிச்செல்ல விடப்படுகின்றார் திவ்வியராஜன்.

பின்னர் இந்திய இராணுவத்தால் திவ்வியராஜனுக்கு ஏற்படும் துயரம் இன்னொருவகையானது.  இந்திய இராணுவத்தினர் தமக்கு மரியாதையைக் காவலரணில் தரவில்லை என்பதற்காக இவரது சைக்கிளைத் தோளின் மீது சுமந்துகொண்டு ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம்வரை போகச் சொன்ன சென்ற தண்டனைகள் எல்லாம் நடந்திருக்கின்றன.

இவ்வாறு ஒருபக்கம் இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் போன்றவற்றால் ஏற்பட்ட துயரத்தைச் சொல்கின்ற திவ்வியராஜன், இன்னொருபுறத்தில் நமது தமிழ் இயக்கங்கள் செய்த அட்டூழியங்களையும் அதே கசப்புடன் பதிவு செய்கின்றார். மாறி மாறி சகோதர இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றவை, போஸ்ட்கம்பங்களில் குற்றவாளிகள் என்று அறிவித்து மரண தண்டனை  கொடுப்பது...அதுவும் ஒரு இயக்க இளைஞன் தப்பியோடும்போது அவனின் தாயின் முன்னாலே இன்னொரு இயக்கம் சுட்டுக் கொல்கின்றமை எல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றது.

அதுபோல அவ்வளவு சித்திரவதைகொடுத்து 'துரோகி' என்று நாற்சந்தியில் எழுதி வைத்துவிட்டு, சரி இத்தோடு அந்த இளைஞனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்து முகம் திரும்பும்பொழுதில் நெற்றிப்பொட்டில் அந்த இளைஞனைச் சுட்டுக்கொல்ல, 'அய்யோ' என்று அருகிலிருந்த ஒரு பெண்  தரையில் விழுவதும், இந்தக் கொலையை ஒரு பத்துவயதுச் சிறுவன் பார்த்துக்கொண்டிருப்பதுமென எமது இயக்கங்களின் இரத்தம் தோய்ந்த கரங்களின் வரலாற்றையும்  இதில் திவ்வியராஜன் சொல்கின்றார்.

இந்திய இராணுவ காலங்களில் தெற்கில் எப்படி ஜேவிபியினர் ஒடுக்கப்பட்டனர் என்றும், சிங்களப் பேரினவாதம் தனது சொந்தமொழி பேசும்  சிங்கள இளைஞர்களைக் கூட சும்மா விடாது என்பதற்கான சாட்சியங்கள் இவை என்று சொல்லும் திவ்வியராஜன், எப்படி அதற்கு முன்னர் 1970களில் இதே ஜேவிபியினரை ஒடுக்க சிறிமா அரசுக்கும் இந்திய இந்திராகாந்தி அரசு உதவியது என்பதையும் நினைவூட்டுகின்றார்.

இப்படி தனது சொந்த நலன்கள் என்று வரும்போது தமது உரிமைகளுக்காகப் போராடுபவர்களை துச்சம் என நினைக்கின்ற வல்லரசான இந்தியாவிடந்தான் நமது இயக்கங்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கப் போயிருந்தார்கள், அதே இந்திய அரசு தீர்வைத் தருவார்கள் என்று எப்படி நம்பினார்கள் என்றும் திவ்வியராஜன் இடைநடுவில் கேள்விகளை எழுப்புகிறார்.

*

இலங்கையில் இந்திய இராணுவ வெளியேற்றத்தின்பின், பிரேமதாசா அரசுடன் மீண்டும் போர் தொடங்கியபின், திவ்வியராஜன் இனி இலங்கையில் இருப்பது சாத்தியமில்லை என்று தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குப் படகில் இரகசியமாக ஏறுகின்றார். சாதாரணமாக இரண்டு/மூன்று மணித்தியாலங்களில் முடிந்துவிடும் படகுப் பயணம்,  கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் கடலுக்குள் நீடித்து திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் எப்படியோ தப்பிப் பிழைத்து இந்தியாவின் கரைகளை அடைகின்றன்றனர்.

அங்கிருந்து தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த தக்கலை அகதிமுகாமில் இவர்கள் (1990களில்) தங்க வைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த அகதிமுகாமில் இருந்த அனுபவங்களை திவ்வியராஜன் விபரிக்கும்போது, இதற்காகவா இந்தியாவுக்கு இவர்கள் தப்பிவந்தார்கள் என்கின்ற மனோநிலையே வாசிப்பவர்க்கு வரும். பிறகு ஒருமாதிரியாக அகதிமுகாமில் இருந்து வெளியேறி, 1994இல் திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் கனடாவுக்கு வந்து சேர்கின்றனர்.

அப்போதும் இந்திய இமிக்கிரேஷன் அலுவலகர்கள் திமிர்த்தனமாகவே நடந்துகொள்கின்றார்கள். கனடாவுக்கு உரிய விஸாவுடன் (ஏற்கனவே அவரது தமக்கை முறையானர் கனடாவிலிருந்து ஸ்பான்ஸர் செய்கின்றார்) விமானநிலையம் போனபோதும், இது உரிய விஸாவல்ல என்று அந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். கிட்டத்தட சில வாரங்களுக்குப் பிறகே அது அசலான விஸா ஆவணம் என்று ஏற்றுக்கொண்டு இவர்களைக் கனடாவுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அந்தளவுக்கு அந்த அதிகாரிகள் ஈழத்தமிழர் மீது வெறுப்புற்றிருந்தாலும்,  தனது தாய்/தந்தையரைப் போல தமிழகத்தில் பேணிக்காத்த சில குடும்பத்தவர்களையும், திவ்வியராஜன் பங்குபற்றிய தமிழ்நாடு முற்போக்கு  சங்க கலையிரவுகள் பற்றியும், பல தமிழ்நாட்டு இனிய மனிதர்கள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

இறுதியில் கனடா 'வேற்றுமையில் ஒற்றுமை காணும்' தன்மை இருப்பது போலவோ, அல்லது யார் முதலில் வந்தோம் என்ற தூய இனக்கூச்சல் இல்லாது எல்லோரும் அமைதியாக வாழ முடிவதைப் போல, ஏன் மூன்று/நான்கு இனங்கள் மட்டும் வாழும் இலங்கையில் அது சாத்தியமில்லாது போய்க்கொண்டிருக்கின்றது என்றும் யோசிக்கின்றார்.

அதேவேளை நாம் எமது உரிமைகளைக் கேட்கின்றபோது, நம்மளவில் சரியானவர்களாக இருக்கின்றோமா என்ற கேள்விகளையும் இந்த நூலில் திவ்வியராஜன் சுட்டிக்காட்டுகின்றார். முக்கியமாக வடமாகாணத்தில் இருந்து 70,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களை ஒரே நாளில் நாம் அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியதையும், கோயில்களில் அகதிகளாக மக்கள் தங்கியபோது நுழைவாயில் கதவுகளைத் திறந்துவிட மறுத்ததையும், அகதிகளாக தங்கிய தங்கள் கிணறுகளில் வந்து தண்ணீர் குடித்துவிடக்கூடாது என்று சாதிவெறியுடன் குப்பைகளை அந்தக் கிணற்றுக்குள் நிரப்பிய நிகழ்வுகளையும் கவனப்படுத்துகின்றார். நாம் தமிழர்களாக சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதேவேளை இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களைத் துரத்துவதும், நமக்குள்ளே சாதிய அடிப்படையில் மற்றவர்களையும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றோம் என்றால், நாம் நம்மை நோக்கியும் பெருமளவான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது என்பதையும் இந்த நூல் கவனமாக பரிசீலனை செய்யச் சொல்கின்றது.

இந்த நூல் 2014இல் வெளிவந்திருக்கின்றது. இப்போது ஆயுதப்போராட்டம் முடிந்தே கிட்டத்தட்ட17 வருடங்கள் கடந்துவிட்டன. நாம் இத்தனை ஆண்டுகளுக்குள் புதிய உரையாடல்களை நிகழ்த்தி அரசியல்/சமூகம் சார்ந்து எங்கேயோ நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் பழைய கதைபேசி புகழ்ந்து அல்லது திட்டி கடந்தகாலத்தில் மட்டுமாக உறைந்துவிட்டிருக்கின்றோம். அப்படி ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தால், நாம் இப்போதும் அதேபழையபாணி அரசியல் சிந்தனைகளுக்குள்ளோ/ அரசியல் கட்சிகளுக்குள்ளோ அடைக்கலம் ஆகியிருக்கமாடோம்.

அதே பழைய கோஷம்! அதே பழைய பெருமிதம்! அதே பழைய இயக்கங்களின் 'ஒற்றை' அரசியல் பாதைகள்! ஆக நாம் அப்போதும் இப்போதும் ஏதோ ஓன்றுக்கான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே தவிர, ஒருபோதும் புதிய அரசியல் செல்நெறிகளை தொடங்கவோ, புதிய grass roots movements பற்றிச் சிந்திக்கவோ இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

ஆகக்குறைந்தது ஒற்றைக்கதையாடல்களினால் ஈழப்போராட்ட வரலாற்றைக் கட்டமைக்கும் ஆபத்தை, ஒருபக்க அரசியல் சார்பாக மட்டும் நின்று பேசுவதன் அபத்தத்தை, நமக்கு மென்குரலில் மறுத்து சொல்வதற்காகவேனும் இப்படி திவ்வியராஜன் போன்றோர் கடந்துவந்த அனுபவங்களினூடாக எழுதிய சில பனுவல்களாவது நம் கைகளில் இருக்கின்றன என்று இப்போதைக்கு நாம் கொஞ்சம் நிம்மதியடைய வேண்டியதுதான்.

****

நன்றி: 'யாவரும்'/ஆனி-ஆவணி மின்னிதழ்

 

கார்காலக் குறிப்புகள் - 154

Friday, July 10, 2026


Money Heist எனக்குப் பிடித்த ஒரு தொடராக இருப்பதற்கு எத்தனையோ 
காரணங்கள் இருந்தாலும் எனக்கு அது ஸ்பானியப் பின்புலத்தில் இருந்து வெளிவந்த ஒரு தொடர் என்பதுதான் முக்கிய காரணம். மேலும் Money Heist முதல் மூன்று சீஸன்களில் இருந்த சுவாரசியம் பின்னர் வந்த இரண்டு சீஸன்களில் இருக்கவில்லை. ஸ்பெயினுக்கு வெளியே வந்து சட்டென்று உலகக் கவனத்தை ஈர்த்த தொடராகியதால், பின்னர் மேலும் நீட்டிக்கப்பட்டதால் வந்த வினை  என நினைக்கின்றேன். அது  பல வெற்றிகரமான தொடர்களுக்கு இறுதியில் வழமையாக நிகழ்வதுதான்.
 



ஐந்து தொடர்களுடன் முடித்தாலும், அதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று Pre sequal எடுக்கத் தொடங்கினார்கள். அப்படியான முதல் வந்த தொடர்தான் Berlin and the jewel of Paris. பெயரிலே இருப்பதுபோல இதில் பேராசிரியர் அல்ல, பெர்லின் தான் முதன்மைப் பாத்திரம். பெர்லினும் இன்னொரு பேராசிரியரும், மூன்று முக்கிய பாத்திரங்களும் மட்டுமேயுள்ள தொடர் அது. இவர்களோடு எனக்குப் பிடித்த அழகியான கமரோன் பின்னர் இந்தத் திருட்டுக் கூட்டத்தில் வந்து சேர்வார்.

இந்தத் தொடர் மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்தது. இப்போது அடுத்த ஒரு Pre sequal ஆக, Berlin and the Lady With an Ermine வந்திருக்கின்றது. முதல் தொடர் பிரான்ஸில் என்றால் இந்தத் தொடர் ஸ்பெயினில். இன்னும் திருத்தமாகச் சொல்வதென்றால் Seville இல் நடப்பது. அதேவேளை போலந்தில் இருக்கும் லியானார்டோ டாவின்ஸியின் ஓவியத்தைத் திருடுவதற்கான திட்டம் (அல்லது பாசாங்கு) சமாந்திரமாக இந்தத் தொடரில் நடக்கின்றது.

இந்தத் தொடரில் அவ்வளவு அழகான செபியாவை (எஸ்பநோல் உச்சரிப்பு) காட்டுகின்றனர். இதற்கு முன்னர் வந்த Money Heist இன் மயிர்கூச்செரியும் சாகசம் இதில் அவ்வளவு இல்லை. காதல் மட்டும் கட்டுக்கடங்காமல் ஓடுகின்றது. அதிலும் பெர்லினுக்கும் அவரது புதிய காதலிக்கும் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு இரசிக்கத்தக்கவை. அதேபோன்று களவுக்குப் போவதைவிட தனிமனித உறவுகளுக்குள்தான் இதில் ஆழப் போகின்றார்கள்.

கடைசி எபிஸோட்டில்தான் கொஞ்சம் வீரசாகசம் இருக்கின்றது. அதையும் அவ்வளவு விரைவாக ஓடி முடித்து விடுகின்றார்கள். எனக்கென்னவோ  Money Heist திரைக்கதை ஆசிரியர்கள் நமது சாண்டியலினின் 'கடல்புறா'வை வாசித்திருப்பார்களோ என்று தோன்றுகின்றது. கடல்புறா மூன்று பகுதிகள் கொண்டது. எல்லாப் போர் சாகசங்களும் மூன்றாம் பகுதியில்தான் தெளிவாக வருகின்றது. முதலாம் இரண்டாம் பகுதியில் சண்டைகள் எல்லாம் கெரில்லாச் சண்டைகள் போலத்தான் இருக்கும். அதைத்தாண்டி இளையபல்லவன் முதலாம்பகுதியில் காஞ்சனாதேவியுடனும், இரண்டாம்பகுதியில் மஞ்சளகியுடனும் காதல் சரசங்கள் செய்வதுதான் பலாப்பழத்தை தேனில் நனைத்துப் பரிமாறுவது போல எழுதப்பட்டிருக்கும்.

Money Heistகாரர்,  Pre sequal இப்போது எடுத்துக் கொண்டிருப்பதே பலவேறு வகைக் காதலைப் பிழிந்து தருவதற்குத்தானோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது. இந்த வீரசாகசக் கதைகளை விட காதல் எவ்வளவோ மேன்மையானதுதானே? அதுவும் ஸ்பானியக்காரிகள் காதலிப்பதைப் பார்ப்பது என்னைப் போன்றவர்களுக்குத் திகட்டித்தான் போய்விடுமா என்ன?

இந்தத் தொடரில் ஒரேயொரு கவலை, எனக்குப் பிடித்த அழகியான கமரோனைக் கொன்றுவிட்டனர் என்பதுதான். எனினும் கமரோன் அடுத்த சீஸன் வந்தால் மீள உயிர்ப்பார் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.

***

 

டி.தருமராஜ்ஜின் 'ஜல்லிக்கட்டு' நூலை முன்வைத்து..

Wednesday, July 08, 2026

 

1.


சில நூல்களை வாசிக்கும்போது அவை அவ்வளவு எளிதில் முடிந்துவிடக்கூடாது என்று தோன்றும். அவ்வாறு இந்த ஆண்டில் வெளியான இரண்டு நூல்களை மிக நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய 'புத்தம்' மற்றது டி.தருமராஜ் எழுதிய 'ஜல்லிக்கட்டு'.

இவ்வளவு புதுமையும், சுவாரசியமுள்ள ஒரு நூலை அண்மையில் வாசித்ததில்லையென்ற வியப்பே ஜல்லிக்கட்டை வாசித்து முடித்தபோது தோன்றியது.

ஜல்லிக்கட்டு ஒரு புள்ளியே தவிர இந்த நூல் அதைத் தாண்டி பல பல அற்புதமான  பக்கங்களைத் தொட்டுச் செல்கின்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு (2017) எதிராக நடந்த ஒரு 'வெகுசன'ப் போராட்டத்தை இது சமகாலத்தில் மட்டும் வைத்து  பேசுவதில்லை. தமிழின் சங்ககாலத்தில் இருந்து தொடங்கி  பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம்வரை  இந்த 'வெகுசன'ப் போராட்டத்தை  முன்வைத்து இந்நூல் மதிப்பீடு செய்கின்றது. இங்கே வெகுசனப் போராட்டம் என்று அடைப்புக்குறிக்குள் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இந்த நூலில் வெகுசனம் வேறானது, மக்கள் வேறானது என்று தொடர்ந்து டி.தருமராஜ் வலியுறுத்தியபடி வருகின்றார்.

Uploaded Image

இந்த நூலை ஒருவகையில் ஆய்வு நூலாகவும், இன்னொருபுறம் ஒரு புனைவாகவும் வாசிக்க முடிவதுதான் சுவாரயம் தருவது. இந்த நூலில் குறிப்புகளாக அல்லது சுருக்கமாகச் சொல்லப்படும் விடயங்கள் பற்றிய அடிக்குறிப்புகளே இருநூறுக்கும் மேலே வரக்கூடியது. பல்கலைக்கழக ஆய்வுகளின் அடிக்குறிப்புகள் போன்று வறண்டதன்மையில் இல்லாது, அந்த அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படும் நூல்களைத் தேடி வாசிக்கவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுமளவுக்கு இந்த நூல்களின் அடிச்சாரத்தை 'ஜல்லிக்கட்டு' நூலில் தருமராஜ் பாவித்திருப்பதுதான் கவனப்படுத்த வேண்டியதாகும்.

என்னைப் போன்ற தமிழின் சங்கப் பாடல்களை ஆழ வாசிக்கவேண்டும் என்று விரும்புபவர்க்கு (அதேவேளை சோம்பலுடன் இருப்பவர்க்கு), இங்கே தருமராஜ் எடுத்தாளும் சங்கப் பாடல்கள்,  அவ்வளவு ஈர்ப்புடன் பழந்தமிழ் இலக்கியம் நோக்கி இழுத்துச் செல்கின்றது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்தை, அங்கிருந்த வள்ளல்களை (பாரி, பேகன்) போன்றவர்களை மூவேந்தர்கள் எதற்காய் ஆக்கிரமித்தார்கள் என்றும், எப்படி யவனர்களின் வருகையுடன் அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்றும், அதனால் எப்படி அவர்கள் அதுவரைகாலமும் இருந்த செழுமையான வாழ்க்கையிலிருந்து அவர்கள் இழிசன மக்களாக ஆகினார்கள் என்ற ஒரு புது திணைக்கோட்பாட்டை டி.தருமராஜ் முன்வைக்கும்போது அவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது.

தமிழின் தொன்மையான நூல்களை மார்க்சிய/பின்னமைப்பியல் தளாங்களில் ஒப்பிட்டு தமிழவன் போன்ற அரிதானவர்களே மிக இயல்பாக எழுதியதை வாசித்திருக்கின்றேன். தமிழவனுக்குப் பிறகு, தமிழின் தொன்மையை பின்னமைப்பியல் புள்ளியில் வைத்து டி.தருமராஜ் எழுதியிருப்பது இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி தந்து கொண்டிருந்தது.
'மார்க்சியம் இந்த நூலின் அடிப்படையக் காரணியாக இருப்பதை வாசிக்கும் நீங்கள் அறியலாம்' என்று தருமராஜ் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டாலும், அதுவே பெரும்பாலான ஆய்வுகளுக்கு இயல்பு என்றாலும், என்னால் இந்த நூலை மார்க்சியம் தாண்டிய பின்னமைப்பியல்/பின நவீனத்துவ தளத்தில் அதிகம் வைத்தே வாசிக்க முடிந்தது. சிலவேளைகளில் என் வாசிப்பின் ஒரு சார்புநிலையாக இருக்கலாம். ஆனால் அப்படி வாசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்குச் சுவாரசியமாக இருந்தது.

2.

இந்த நூல் 'ஆடிப்பெருக்கு-கிளர்ச்சியின் சூத்திரம்', தற்செயலும் வரலாறும் - காளையின் வம்சாவழி', 'காளை அரசியல்', 'பண்பாட்டுப் பதற்றம்', 'முதலீட்டீயமும் நாட்டுப்புறவியலும்' என்ற ஐம்பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே ஒவ்வொரு நூலாக வைத்து உரையாடுவதற்கான பல புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.

ஜல்லிக்கட்டு என்பது கிராமப் புறங்களில் நடைபெறும் ஒரு விளையாட்டு. ஆனால் அது தடைசெய்யப்பட்டபோது எப்படி நகரத்தார் இதை ஒரு வெகுசனப்போராட்டமாக ஆக்கினார்கள், இப்படி முரணான புள்ளிகள் ஒருங்கிணைந்த (கிராமத்தார்/நகரத்தார்) போராட்டத்தை எப்படிப் எதிர்கொள்வது என்ற குழப்பத்தை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் கொடுத்தது, மதுரையில் அந்தப் போராட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த தனக்கு இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிந்தனையில் தோன்றியதே இந்த நூல் என்கின்றார் தருமராஜ். நாட்டுப்புறவியலில்  'வழக்காறு' என்பதே நிகழ்த்தப்படுவதுதானே, ஆனால் இங்கே 'நிகழ்த்தப்படாத வழக்காறை' எவ்வாறு எதிர்கொள்வது என்ற திகைப்பைத் தன்னைப் போன்ற நாட்டுப்புறவியலாளர்கள் சந்தித்தனர் என அவர் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மேலும் விஜய் (தற்போது தமிழக முதலமைச்சர்) 'தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது அது ஏற்படுத்திய ஆரவாரத்தையும், அவரது அரசியல் புள்ளியையும் பார்த்தபோது, 'அது அலங்காநல்லூர்/அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போன்று இருந்தது, அதாவது விஜய் தன்னை இரகசியம் போல பூட்டி பூட்டி வைத்துக் கொள்வதும், அவரது பிரசன்னம் சில மணித்துளிகளே இருப்பதுபோல அரசியல் கூட்டத்தை வடிவமைத்துக் கொள்வதும், அந்த சில மனித்துணிகளில் காணப்படும் பாய்ச்சலையும், அதைக்காணும் வெகுசனம் உச்சக்கட்ட எழுச்சியை அடைவதும் ஜல்லிக்காட்டு என்கின்ற வீரவிளையாட்டின் ஒழுங்கமைப்பை ஒத்திருந்தது' என்றும் தருமராஜ் முன்னுரையில் எழுதிச் செல்வது, இன்று அரசியல்/பண்பாட்டுக் களங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய புள்ளியாகும்.

ஜல்லிக்கட்டு வெகுசனப் போராட்டத்தில் கடைசிவரை ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாயவே இல்லை. ஆனால் அதே ஒழுங்கில் அறிந்தோ/அறியாமலோ வாடிவாசலில் இதோ பாய்கின்றேன் என்று உறுமிக் கொண்டிருந்த ஒரு காளை அரசியல் களத்தில்  சீறிப் பாய்ந்திருக்கின்றது. பாய்ந்தது மட்டுமில்லை பலரும் எதிர்பார்க்காத, யாராலும் அடக்கமுடியாத அரசியல் காளையாக நின்று வென்றும் காட்டியிருக்கின்றது. இந்த எதிர்பாராத விஜய் என்ற ஜல்லிக்காட்டுக் காளையின் வெற்றி எவராலும் கணிக்கமுடியாதது மட்டுமில்லை, எந்த வகைக்குள் வைத்து இதை மதிப்பீடு செய்வது என்ற குழப்பத்தையும் பல ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதைச் சரியாக 'வெகுசனப் போராட்டம்' என்றவகையில் கணித்தவராக மட்டுமின்றி அதற்கான பின்னணிச் சூழலோடு நுட்பமாக விளங்கிக் கொண்டவராகவும் தருமராஜ் இருந்திருக்கின்றார்.

இந்தப் பெரும் நூல் வெளிவந்ததும், இந்த வெகுசனத் திரளைச் சரியாக விளங்கி விஜய் தமிழக முதலமைச்சரானதும் நம் தமிழ்ச் சூழலில் அரிதாக நிகழும் ஓர் நிகழ்வென்றே சொல்லவேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பதே வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தபின்னே முடிவுகளைக் கண்டடைவதாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்வைத்து, அதற்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாதபோதும், வெகுசனம் திரண்ட பின்னணிச்சூழலை சரியாகப் புரிந்துகொண்டு (அல்லது புரியாமலே) அதேபாணியில் ஓர் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியது என்பது எவ்வளவு வியப்பானது.
Uploaded Image


இதேநேரத்தில் டி.தருமராஜ்ஜின் இந்த நூலை முன்வைத்து இலங்கையில், பங்களாதேஷில், நேபாளத்தில் நிகழ்ந்த ஸென் ஸீ போராட்டங்களைப் பார்க்க முடியும் என்கின்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துக்களோடு நான் சில புள்ளிகளில் முரண்படவும் செய்கின்றேன். இலங்கையிலோ இன்னபிற தென்கிழக்காசிய நாடுகளிலோ நடந்த போராட்டங்களில் ஒரு முதன்மையான எதிரி கண்முன்னே தெளிவாக இருந்தது. இலங்கையில் பொருளாதரத்தால் நாட்டைச் சீரழித்த (அவ்வாறே நேபாளத்தில்) ராஜபகஷே ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போதே இந்த வெகுசனப் போராட்டம் தொடங்கியது.

அங்கே ஏற்கனவே ஜல்லிக்காட்டுக் காளை களத்துக்குள்ளே பாய்ந்துவிட்டது. காளையை அடக்கவேண்டும் என்கின்ற உணர்வு போராட்டம் தொடங்கியபோது அந்த வெகுசனத் திரளுக்கு வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்காட்டு தடைப் போராட்டத்திலோ அல்லது விஜய் தமிழக முதலமைச்சரானபோதோ ஒரு தெளிவான எதிரி என்று வெகுசனத்துக்கு இருக்கவில்லை. அதாவது ஜல்லிக்கட்டுக்காளை களத்துக்குள் இறங்கவேயில்லை. அது அவிழ்த்துவிடாத ஒரு காளையாக மூசிக்கொண்டு வாடிவாசலை விட்டு இறங்காதிருந்தது என்பதே இவற்றுக்கு இடையிலான வித்தியாசமாகும்.

3.

எனக்கு இந்த ஜல்லிக்கட்டு நூலில் மிகப்பிடித்ததே தருமராஜ் எதையும் claim செய்யாத தன்மை. எனது நூலான 'பேயாய் உழலும் சிறுமனமே' அல்புனைவுத் தொகுப்பு வந்தபோது இடதுசாரிப் பின்னணியில் வந்த எனக்கு முன்னிலிருந்த தலைமுறையச் சேர்த்த ஒரு நண்பர், தங்கள் தலைமுறையில் ஒரு விடயம் குறித்து கறாரான முடிவெடுத்து உறுதியாக எழுதுவோம், ஆனால் இந்தத் தலைமுறை (என்னைப் போன்றவர்கள்) எல்லாவற்றையும் கேள்விகளுடன், சந்தேகங்களுடனும் அணுகின்றார்களே தவிர அறுதியான உறுதிகளை எடுக்கத் தயங்குகின்றார்கள்' என்று சொல்லியிருப்பார். அதை நேர்/எதிர்மறையாக துவிதங்களுக்குள் வைத்தெல்லம் பார்க்கத் தேவையில்லை.

நாம் இன்றைய சூழலைப் பார்த்தால் அப்படி கறாரான முடிவுகளை எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு நாம் ஈரான் விடயத்தை எடுத்துக் கொண்டால், ஈரான் தனது ஆட்சிக்கெதிராகப் போராடும் மக்களை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கின்றது என்பதை அறிவோம் (அதற்கு ஈரானிய மக்களின் சாட்சியங்களே போதும்). அதேவேளை இப்போது ஈரான் என்கின்ற நாட்டை  அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கும்போது ஈரானுக்குச் சார்பாகத்தான் நாம் நிற்க வேண்டும். அப்படியொரு சார்பு நிலை எடுக்கும்போது ஈரானிய அரசு தன் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையை ஏற்றுக்கொள்கின்றோமா என்கின்ற கேள்விகளும் வரும். இவ்வாறான சூழ்நிலைகளால்தான் ஒரு விடயத்தை கேள்விகளோடும் சந்தேகங்களோடும் fragmentation ஆகத்தான் இவற்றை நாம் அணுகமுடியும் என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

அவ்வாறான ஓர் அணுகுமுறையை, நாம் இந்த ஜல்லிக்கட்டு நூல் நாட்டாரியலா அல்லது பின்னமைப்பியலா எந்த முறையியல் (methodology) மூலமாக  அணுகின்றது என்று சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக தருமராஜ் இதில் ஓரு விளக்கத்தைத் தருகின்றார். 'இந்தப் புத்தகம் வெகுஜனக் கிளர்ச்சிகளின் சூத்திரத்தைக் கண்டுபிடிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்வேன். அமைப்பியல் மானிடவியல் ஆய்வுகளில் இது போல் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கான சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சாகசமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அப்படியொரு கணித சூத்திரத்தையோ அல்லது கிளர்ச்சிகளின் ஒழுங்கமைப்பையோ கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கியம். இங்கே பயன்படுத்தப்பட்ட சூத்திரம் என்ற சொல், சூழ்திறம், சூழ்ச்சி என்று பொருள் தரும் வகையிலே கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று சொல்லியிருப்பதை வாசகர்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என நினைக்கின்றேன்.

பின்னமைப்பியல்/பின் நவீனத்துவத்தில் எல்லாவற்றையும் விளையாட்டாகப் பார்ப்பது என்று முக்கியமான ஒன்று.  அதாவது மிகத் தீவிரமாக எந்தவொன்றையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை (நமக்கு சமகால உதாரணம்  Slavoj Žižek). அதற்காக தருமராஜ் இங்கே பின்நவீனத்துவத்தை தனக்குரியதாக கொள்கின்றார் என்பதாக அர்த்தமல்ல. பின்னமைப்பியல் நிராகரிக்கும் பெருங்கதையாடலை (meta narratives), முக்கியமாக தத்துவத்தை நிராகரிக்கப் போவதில்லை என்று தருமராஜ் ஓரிடத்தில் உறுதியாகக் கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

மேலே 'இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று தருமராஜ் சொல்லியிருப்பதற்குதான் நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டாலும், அதன் ஒழுங்குகளை குலைத்து புதிய அடுக்குகளை தன் அறிவால் தருமராஜ் கட்டுகின்றார். இவ்வாறு ஒழுங்குகளைக் குலைத்தும் சிதைத்தும் புதிதாய் ஓன்றை உருவாக்குவதை ஒரு 'விளையாட்டாக'ச் செய்யமுடியுமென்று வேறு எந்தத் தத்துவத்தைவிடவும் பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ நிலவரங்கள் நமக்குத் துணைபுரிகின்றன. அதற்கான சுதந்திரத்தை அவை கொடுக்கவும் செய்கின்றன. அந்த மிகப்பெரும் சுதந்திரமே தருமராஜ் அவர்களையும் நாட்டாரியல் இருந்து தொடங்கி பின்னமைப்பியல்வரை கட்டற்ற சுதந்திரத்தோடு இந்த நூலில் இயங்க வைக்கின்றது. ஒருவகையில் அதையேதான் பண்டிதர் அயோத்திதாசரையும், அவருக்கிருந்த அன்றையகால நடைமுறை அறிவோடு, பல விடயங்களை கலைத்தும் சிதைத்தும் ஒழுங்குபடுத்தி 'பெளத்தவயமாதல்' என்கின்ற மிக முக்கியமான ஒரு தளத்தை வந்தடையச் செய்திருக்கின்றது என்பதையும் நாம் நினைவூட்டிக் கொள்லலாம்.

மிகச்சோர்வான காலகட்டத்துக்குள் தமிழ் ஆய்வுச்சூழலும் அல்புனைவு நூல்களும் இருக்கின்ற காலகட்டத்தில் அவ்வளவு சுவாரசியமாகவும், அதேவேளை நம்மை இன்னுமின்னும் சிந்திக்க வைக்கின்றதுமாகவும், ஜல்லிக்கட்டு என்கின்ற ஓர் அரிய நூல் நம் கைகளை வந்தடைந்திருக்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

****

(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2026)

 

கார்காலக் குறிப்புகள் - 153

Thursday, July 02, 2026

 

கால்பந்தாட்டக் குறிப்புகள் - 01

நாளை உலகக்கிண்ண உதைபந்தாட்டம் மெக்ஸிக்கோவில் தொடங்குகின்றது. எப்போதும் போல என் முதன்மையான ஆதரவு தென்னமெரிக்க, ஆபிரிக்க நாடுகளுக்குத்தான். பிரேசிலும் ஆர்ஜெண்டீனாவும் என்றும் என் பிரியத்துக்குரியவை. ஆனால் எனக்கு என் கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்கள் போகவேண்டும் என்று நினைக்குமளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு இருவரும் எதிரிகள். ஆகவேதான் பிரேசிலில் நடந்த (2014) அரையிறுதிப்போட்டியில் பிரேசில் படுபயங்கரமாக 7-1இல் ஜேர்மனியிடம் தோற்றபோதும், பிரேசில்காரர்கள் ஆர்ஜெண்டீனாவுக்கு ஒரு துளியும் ஆதரவு கொடுக்காதிருந்தனர். சிலவேளைகளில் அவர்கள் உற்சாகம் கொடுத்திருந்தால் மேலதிக நேரத்தில் ஒரு கோலைப் போட்டு ஜேர்மனி உலகக்கோப்பை அந்த வருடம் வென்றதற்குப் பதிலாக ஆர்ஜெண்டீனா வெற்றி வாகை சூடியிருக்கும் என்று நான் இப்போதும் நினைப்பதுண்டு.

Uploaded Image

பிரேசில் என் மனதுக்குவப்பான நாடென்றாலும், நமக்கு காதலி இருக்காமல் விடுவார்களா என்ன? காதலியை நேசிப்பது போல இரகசியமாக நான் நேசிப்பது ஆர்ஜெண்டீனாவை.

அதிக உலகக்கோப்பைகளை வென்றது பிரேசில்தான். ஐந்து தடவைகள் பிரேசிலும், அடுத்து ஜேர்மனியும், இத்தாலியும் 4 தடவைகள் வென்றிருக்கின்றன.  இவற்றுக்கு அடுத்து ஆர்ஜெண்டீனா 3 தடவைகள் வென்றிருக்கின்றன.

பிரேசில் பீலேயின் காலத்தில் உச்சம் தொட்டு இருந்தது என்பதை நாமறிவோம். பீலே 1958, 1962, 1970களில் பிரேசிலுக்கு கிண்ணத்தை வென்று கொடுத்திருக்கின்றார் அதுவும் 1966 போர்த்துக்கல்லிடம் படுதோல்வியடைந்து பீலே உதைபந்தாட்டத்திலிருந்து ஓய்வை அறிவித்தபோது, King is back என்கின்றமாதிரி 1970 மீளத்திரும்பி வந்து உலகக்கிண்ணத்தை தனது நாட்டுக்கு வென்று கொடுத்திருந்தார்.  பீலே 70களில் வென்ற காலத்தில் பிரேசிலில் சர்வாதிகார ஆட்சி இருந்தது. அரசியல் குழப்பம் மலிந்திருந்தது. இதற்கிடையில் பிரேசில் அந்த ஆண்டு தாங்களே கால்பந்தாட்டத்தில் மன்னர்கள் என்று நிரூபித்துக்காட்டினார்.

எவ்வளவு சிறப்பான ஆட்டக்காரராக இருந்தாலும் பீலேயைப் போல இனியொருவர் மூன்று உலகக்கிண்ணத்தை தனது நாட்டுக்காக வெல்லுவது இனியொருபொழுதும் அவ்வளவு எளிதாக நடக்காது. அதனால்தான் பீலே உதைபந்தாட்டத்தில் ஓர் அரசர். பீலேயின் இந்த மூன்றாவது வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அதன் முழுப்பின்னணியும் அறிய விரும்புகின்றவர்கள் வேண்டுமெனில் 'Brazil 70: The third star' என்கின்ற ஐந்து பாகங்களுள்ள சீரிஸைப் பார்க்கலாம்.

அப்படி பீலே உள்ளிட்ட வீரர்கள் இருந்த சிறந்த பிரேசில் அணி பிறகெப்போதும் இருந்ததா என்று யோசித்தபோது, அப்படி ஒரு அணி 1994, 1998, 2002, 2006 இருந்தது போலத் தோன்றியது.

பிரேசில் 1970இல் கிண்ணத்தை வென்றதன்பிறகு மீண்டும் 24 வருடங்களுக்குப் பிறகே 1994 நான்காவது தடவையாக வென்றது. 1998 இல் இறுதியாட்டத்துக்கு வந்து ஸிடானியின் பிரான்ஸ் அணியிடம் தோற்றது. எனினும் தோல்வியே வெற்றியின் படிக்கல் என எடுத்து மீண்டும் 2002இல்  ரொனால்டோ/ரொனாடினியோ/ கார்லோஸ்/ ரிவால்டோ/காஃபூ என்கின்ற அற்புத வீரர்களால் கிண்ணத்தைச் சுவீகரித்திருந்தது. 2006 இலும் மிகச் சிறந்த அணி (ரொனால்டோ/ரொனால்டினோ/கார்லோஸ்) இருந்தும் பிரான்சிடம் காலிறுதிப்போட்டியில் 1-0 இல் தோற்றிருந்தனர்.

ஆக 1994, 1998, 2002 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பிரேசில் இறுதிப்போட்டிகளுக்கு வந்திருந்தனர். அதில் 1998இல் மட்டும் தோற்றிந்தனர். சிலவேளை 1998 வென்றிருந்தால் ரொனால்டினோவுக்கு பீலே மாதிரி ஒரு சிறப்புக் கிடைத்திருக்கும். ஏனெனில் 1994இல் ரொனால்டோ அணியில் இருந்திருக்கின்றார். ஆனால் அவர் 17 வயதென்பதால் எந்த ஆட்டமும் விளையாடவில்லை என்பது வேறு விடயம்.

இம்முறை ஆர்ஜெண்டீனா மெஸ்ஸிக்காக இன்னொரு முறை வென்றாலும் மகிழ்வேன் அல்லது அவ்வப்போது களத்தில் 'நடிகர் திலகமாக' இருந்தாலும் வித்தியாசமான திறமை கொண்ட நெய்மாருக்கு முதல் கிண்ணத்தை பிரேசில் வென்று கூடக் கொடுக்கலாம். ஆனால் இப்படி கனவு கொண்டு இருக்கும்போது இந்த நாசமாய்ப்போன பிரான்சுக்காரரோ, ஸ்பெயின்காரர்களோ கிண்ணத்தை அள்ளிக்கொண்டு போய்விடுவார்களோ என்று இன்னொருபக்கம் பயமாக இருக்கிறது. அப்படி ஒரு ஐரோப்பா நாடுதான் வெல்லவேண்டும் என்று கடவுள் தீர்மானித்துவிட்டாரென்றால், பாவம் எங்கள் ரொனால்டோவுக்காக போர்த்துக்கல் வெல்வதற்கு என் முழு ஆதரவும் இருக்கிறது.

காதலிலும் கால்பந்தாட்டத்திலும் எப்போது நான் விருப்பப்பட்டது அப்படியே நடந்திருக்கிறது?

எதற்கும் நாளைக்கு இங்குள்ள உடுப்புக்கடைக்குப் போய் வெல்ல சாத்தியமுள்ள நாடுகளில் ஜேர்ஸிகளை ஒவ்வொன்றாக அணிந்து படம் எடுத்து வைக்க வேண்டும். பிறகு எந்த நாடு உலகக்கிண்ணத்தை வெல்கின்றதோ, நான் ஆதரவளித்த நாடு வென்றுவிட்டது என்று படங்காட்ட அது மிகவும் உதவியாக  இருக்கும்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 152

Tuesday, June 23, 2026

 

இன்று ஓரு சுவாரசியமான செய்தியை வாசித்தேன்.

டிரம்பின் செல்வாக்கால் கனடாவில் மத்திய மாகாணங்களில் ஒன்றான அல்பேர்ட்டா கனடாவில்  இருந்து பிரிந்து போவதற்கான 'தில்லுமுல்லு'களைச் செய்து கொண்டிருக்கின்றது. இன்னொருவகையில் கனடாவில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் ஒரு மாநிலமாக (annex) மாறுவது அவர்களின் விருப்பு எனச் சொல்லலாம். ஏற்கனவே டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக அறிவித்து அவ்வப்போது அதகளம் செய்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த விடயத்தை வைத்து, எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் கணக்காய் கனடாவில் வசிக்காத, பலர் முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பணம் சம்பாதிக்கின்றனர் எனச் சொல்கின்றார்கள். அதாவது இந்த தனிநாட்டுப் பிரச்சினையில் முன்னணியில் நிற்கும் சமூகவலைத்தளங்களில் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருப்பவர்கள் தங்களைக் கனடியர்களாகக் காட்டிக் கொண்டு இந்த 'எரிகிற விடயங்களில்' தாங்களும் பங்கேற்பதாகச் சொல்லி பணம் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

Uploaded Image


இந்தச் செய்தியில் இந்தோனேசியாவில் நூடில்ஸ் விற்கின்ற ஒரு பெண்மணி, கனடாவில் இருப்பதாகவும், அல்பேர்டாவின் பிரிவினைக்காக தெருவில் நின்று பிரச்சாரம் செய்தபோது தனக்கு கல்லெறியப்பட்டதாகவும் அல்பேர்டாவில் நடந்த  ஓர் சம்பவத்தை இன்னும் தீவிரமாக்கி சமூகவலைத்தளத்தில் போட, அவருக்கு ஆயிரக்கணக்கில் 'லைக்கிட்டு' ஆதரவளிக்கின்றனர் என்பதை ஆதாரத்தோடு இந்தச் செய்தி நிரூபிக்கின்றது.

கனடாவில், முகநூல் பக்கங்களில் செய்தி நிறுவங்களின் செய்திகளைப் பகிர முடியாத தடை இருப்பதால், இங்கே அந்தச் செய்தியைப் பகிர முடியவில்லை. இதன் முழுச்செய்தி அறிய விரும்புவர்கள் 'Facebook is paying people overseas promoting Alberta separatism' என்ற தலைப்பில் கூகிளிட்டுத் தேடினால் அதை வாசிக்கலாம். அதன் உபதலைப்பு இது CBC uncovers 14 accounts from India, Pakistan, Indonesia posting on popular Alberta separatist groups.

ஆக, இன்று செய்திகளின் உண்மைத்தன்மை என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்பதோடு, ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை உலகில் எங்கோ தொலைவில் இருப்பவர் கூட தீர்மானிக்க முடியும் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இது ஒரு சாதாரண மனிதரைப் பற்றிய செய்தி. இவர்களைப் போன்றோர் முகநூல் கொடுக்கும் சிறுதொகைப் பணத்துக்காக இந்த விடயங்களைச் செய்கின்றார்கள். ஆகையால் இஃதொரு பெரிய விடயமில்லை.

ஆனால் இப்படி ஒரு சாதாரண மனிதரே ஒரு செய்தியின் narrativeஐ மாற்றமுடியுமென்றால், அரசுக்கள்/பெருநிறுவனங்கள் உள்ளிட்ட அதிகாரம் மிகுந்தவர்கள் எதையெல்லாம் சமகாலத்தில் செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கத்தான் அதிக அச்சம் வருகின்றது.

***

 

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் - ரதன்

Tuesday, June 16, 2026

 

பொதுவாகவே நூல் விமர்சனங்கள்-அறிமுகங்கள் மிக முக்கியமானவை. இவை படைப்பாளிக்கும் நுகர்வோருக்கும் (வாசகர்-வாசிப்பவர்) இடையில் ஒரு நெருக்கத்தை உண்டாக்குகின்றன. நுகர்வோரின் கருத்துக்களை மீள் பரிசீலிக்கின்றன. நுகர்வோருக்கான தேடலை அதிகரிக்கின்றது. அதே சமயம் விமர்சகரின் அனுபவங்கள், அறிந்தவை, கருத்தியல் என்பன விமர்சனத்தினூடாக வெளிப்படுகின்றன. இது நுகர்வோருக்கு விமர்சகர்களை விமர்சன கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றது.

இளங்கோவின் “இருத்தலின் மீது கவியும் இன்மைகள்” நூலையும் அறிமுகப்படுத்தவதின் அவசியம் உள்ளது. எழுநாவின் வெளியீடான இந் நூலை எழுநா எனக்கனுப்பிய நூல்களுள் ஒன்றாகவே பெற்றுக்கொண்டேன்.

Uploaded Image

இளங்கோ கடந்த பல வருடங்களாக எழுதிவருகின்றார். இவர் டி.செ தமிழன் என்ற பெயரிலும் அறியப்படுகின்றார். இவர் சீரிய இலக்கியம், நூல் விமர்சனங்கள், தீவிர சினிமா, நாடக விமர்சனம், அரசியல் ஆய்வு, மொழிபெயர்ப்பு போன்றவற்றுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுடன் இவர் ஒரு பயணி. பல நாடுகளுக்கு பிரதேசங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு பதிவு செய்கின்றார்.

தான் பார்ப்பதை, கேற்பதை, வாசிப்பதனை, நுகர்வதனை தனது எழுத்துக்களில் கொண்டுவருகின்றார். இவரது மனச்சாட்சியின் ஒரு குரலாக இவர் எழுத்துக்கள ஒளிர்கின்றன, ஒலிக்கின்றன. இதுவரை சுமார் 500 ஆக்கங்களுக்கு மேலாக இணையம், இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள், சஞ்சிகைள் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இளங்கோ பல நூல்களின் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். 2018ம் ஆண்டு அம்ருதாவில் வெளிவந்த பிள்ளையானின் “வேட்கை” நூலைப் பற்றிய விமர்சனம் இவரது நூல் விமர்சனங்களுள் முக்கியமானது. அதிலிருந்து சில பகுதிகள் இவை:

“முஸ்லீம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் என்றாலும் அதை மீறி கிழக்கு மாகாணத்து தமிழ் மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டு முஸ்லீம்கள் மீது ஒருவகையான வெறுப்பு உமிழப்படுகின்றது”.
நூலில் இலங்கை அரசாங்கம் மீது ஒரு துளி விமர்சனமும் இல்லை என்றும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். போராளியாகவிருந்தவர் அரசியல் தளத்துக்கு வரும் பொழுது தன்னைப் பற்றிய சுய விமர்சனம் அவசியம் எனச் சுட்டிக்காட்டும் இளங்கோ, தனது இளமையை தான் நம்பிய கொள்கைக்காக இழந்தவர்கள் அரசியல் செய்வதற்கு பல மடங்கு நியாயங்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார். (முழுமையான கட்டுரையை இளங்கோ சமூகவலைத் தளத்தில் வெளியிடுவார் என நம்புகின்றேன் - இது கருத்துபிறழ்வுகளை தவிர்க்க உதவும்). இது மிக நேர்மையான ஆழமான விமர்சனம் - வேட்கை பற்றிய விமர்சனம். பலர் எனது கருத்துடன் முரண்படலாம்.

யூன் 2026 அம்ருதா இதழில் இளங்கோ எழுதியுள்ள டி.தருமராஜ்ன் “ஜல்லிக்கட்டு” நூல் விமர்சனமும் இளங்கோவின் நூல் விமர்சனங்களுள் முக்கியமானது.

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் என்ற கவித்துவ தலைப்பைக் கொண்ட நூலில் 13 நூல்களைப் பற்றிய விமர்சனம் பதிவாகியுள்ளது. இந்த 13 நூல்களின் முக்கியத்துவம், நூலாசரியர் தவறவிட்ட விடயங்கள், அவரது பலவீனம் என பன்முகத் தன்மையுடன் விமர்னத்தை இளங்கோ முன்வைக்கின்றார். இந் நூலில் உள்ள அனைத்து நூல்களையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் இளங்கோவின் விமர்சனங்களை நுகர்ந்த பின்னர் மீண்டும் ஒரு தடவை நூல்களை முழுமையாகவோ பகுதியாகவோ வாசிக்க வேண்;டும் என்ற அவசியம் எழுந்துள்ளது.

நூலின் அட்டை இளங்கோ சிறிய வயதில் வாழந்த வீட்டின் படம். நூலின் உள்ளிருக்கையை எதிரொலிக்கின்றது. நூலின் சமர்ப்பணம் என்பது படையல் என்ற தலைப்பில் பின்வருமாறு உள்ளது “ ஈழ யுத்தத்தில் அநியாமாக பலியான அனைவர்க்கும்”: என்றுள்ளது. இளங்கோவின் கருத்துடன் முரண்பட்டாலும், அவர் கூறிய கருத்தின் பின்னால் உள்ள விடயம் ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்தியுள்ளது. 

எந்தவொரு போரும் ஒரு காரணத்துடனேயே தொடங்கப்படும். போர் வெற்றி பெற்றால் பலியானவர்களை “தேசத்துக்காக” என்று கூறுகின்றோம். தோல்வியடைந்தால் அநியாமாக என்கின்றோம்.

நிரோமி டி சொய்சாவின் தமிழ்ப் பெண்புலி என்ற ஆங்கில நூலின் விமர்சனத்தில் தமிழ்ப் பெண்புலி நூலின் கடைசி அத்தியாயம் விடுதலைப் புலி ஆதரவாளர்களை கோபப்படுத்தும் என்று எழுதும் இளங்கோ, புலி ஆதரவாளர்களை எரிச்சல்படுத்தும் என்கின்றார். “போராட்டத்தின் பெயரால் எல்லாச் சுமைகளையும் சுமந்த மக்கள் என்ற மூன்றாவது தரப்பும் இருக்கின்றது” அத்தரப்பைப் பற்றியே நாமின்றி நிறைய கவலைப்படவேண்டியிருக்கின்றது. அந்த அக்கறை இந்த நூலை எழுதிய நிரோமியிடம் ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது என இளங்கோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம் என்ற மார்க் ஸ்-ரீபனின் நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இளங்கோ குறிப்பிட்டுள்ளார். இந்திய சமாதானப்படையின் கொலைகளைப் பற்றி ஸ்-ரீபன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தமீழ் ஈழக் கோரிக்கையை கைவிடாதபடியால் தான் மூர்க்கமாக அழிக்கப்பட்டனர் என ஸ்-ரீபன் எழுதியதையும் இளங்கோ பதிவு செய்துள்ளார்.

சக எழுத்தாளராக விடுதலைப் புலியின் போராளி மலரவனின் “போர் உலா” நூலைப் பற்றியும் விரிவாக இளங்கோ எழுதியுள்ளார்.

இளங்கோ இந் நூலின் ஊடாக இளங்கோவிற்கு போர் ஏற்படுத்தியுள்ள வெறுமையை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் போரில் இறந்தவர்களை நினைத்து வருத்தப்படுகின்றார். இளங்கோ தனக்கு ஏற்பட்டுள்ள குற்றயுணர்வினை இந்த நூல்களினூடாக வெளிப்படுத்துகின்றார். போருடன் தான் முரண்பட்டு நிற்பதனை இளங்கோ வெளிப்படுத்த தயங்கவில்லை. போரினால் உடைக்கப்பட்டுள்ள சமூகக் கட்டமைப்புக்கள், சமூகக்கட்டமைப்பினால் கட்டுடைக்க முடியாமல் போன போர், உடைக்கப்படவேண்டிய சமூகக்கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு என இளங்கோ விமர்சிக்கின்றார். போர் “மகிழ்ச்சி” என்ற வார்த்தையையே மனிதர்களிடம் அழித்துவிட்டது என்பது இளங்கோவின் விமர்சனம். ஒவ்வொரு நூலுடனும் இளங்கோ உரையாடியுள்ளார். அதுவே இந்த நூலின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.

போர் இளங்கோவிற்கு ஏற்படுத்தியுள்ள இருண்மையை நேர்மையாக குற்றவுணர்வுடன் பதிவு செய்துள்ளார். இளங்கோவின் பல கருத்துக்களுடன் முரண்பட்டாலும், அவர் கருத்துக்கள் ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்தியுள்ளது.

இது இந்த நூலுக்கான விமர்சனமல்ல. நூலை அனைவரும் வாசிக்க வேண்டியதன் அவசியத்தையே கூறியுள்ளேன். பிறிதொரு தளத்தில் விரிவான விமர்சனம் வெளியாகவுள்ளது.

நூலில் உள்ள நூல்கள் பற்றிய விபரங்கள் இவை:
A Passage to North - Anuk Arudpragasam
Brotherless Night - V.V. Ganeshananthan
Tamil Tigress  - Niromi de Soyza
The Story of a Brief Marriage - Anuk Arudpragasam
The Hungry Ghosts – Shyam Selvadurai
The Boat People – Sharon Bala
Prisoner No 1056 – Roy Ratnavel
The Sadness of Geography: My Life as a Tamil Exile - Logathasan Tharmathurai
Love Marriage - V.V. Ganeshananthan
போர் உலா – மலரவன்
Tea Time With Terrorists - Mark Stephen Meadows
Song of the sun god - Shankari Chandran
Vanni: A Family's Struggle through the Sri Lankan Conflict - Benjamin Dix  and  Lindsay Pollock

***
ரதனின் முகநூல் பக்கம்

 

கார்காலக் குறிப்புகள் - 151

Saturday, June 13, 2026

 

மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சனைப் பற்றி ஒரு கட்டுரை 'அம்ருதா' இதழில் வெளிவந்திருக்கின்றது. மைக்கல் ஜாக்சனின் பாடல்களையும், ஆடல்களையும் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமுடியுமா என்ன? நாம் அனைவருமே அவரின் பாடல்களைத் தாண்டாமல் வந்திருக்கவே மாட்டோம். மேலும் அவரின் நிறம், குடும்பச்சூழல், அன்றையகால அமெரிக்கா போன்ற பின்னணியில் இருந்து ஒருவர் இந்தளவு உயரத்துக்கு எழுந்து வருவது என்பது நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாதது. ஆனால் அதற்காய் அவர் மீதான குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களையும் எழுந்தமானமாகத் தாண்டிப் போய்விடமுடியாது.

'அம்ருதா'வில் வெளிவந்த கட்டுரை மைக்கலின் மீதான பேரன்பினால் அதை முற்றாக நிராகரிக்க முயல்கின்றது. அந்தக் குற்றச்சாட்டுகள் 'சதிக்கோட்பாடு'களால் கட்டமைக்கப்பட்டது என்று சொல்லுவது, ஒரு கறுப்பு-வெள்ளைப் பார்வையில் பார்ப்பது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

மைக்கல் ஒரு கறுப்பினத்தவராகவும், அவர் மீது குழந்தைத் துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன்வைத்தவர்களில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாக இருப்பினும், நாம் அதை எளிதாக இனவெறிப் பார்வையில் வைக்கவும் முடியாது. மேலும் மைக்கலுக்கு ஆதரவாக 90களில் (அப்போதுதான் முதன்முதலில் குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது) சாட்சி சொன்ன சிலர் பின்னாட்களில் பொய்ச்சாட்சியம் சொன்னோம் என்று உண்மையைப் பின்னர் சொல்லவும் செய்திருக்கின்றார்கள். இது குறித்த உள்வீட்டு விபரங்களை நாம் அவ்வளவு அறியாவிட்டாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் கொஞ்சமேனும் உண்மையில்லாவிட்டால் இந்தளவுக்கு இந்த விடயம் தீவிரமாகச் சென்றிருக்காது என்பது எளிதான உண்மையாகும்.

மைக்கல் ஏன் இப்படி குழந்தைகள் மீது பித்தானார் என்பதற்கும், எப்படி குழந்தைகளை (அக்குழந்தைகளின் பெற்றோர்) மைக்கலோடு படுக்கையைப் பகிர அனுமதித்தனர் என்பதெல்லாம் நிறைய கேள்விகளுக்குரியது. இன்னொருபுறம் மைக்கல்  வித்தியாசமான குழந்தையாக/பதின்மனாக வளர்ந்தார் என்பதெல்லாம் அவரின் உளவியலை வைத்து அலசிப் பார்க்க வேண்டியதே. ஆனால் அதேவேளை குழந்தைகளாக இருந்தபோது மைக்கலால பாதிப்புற்றவர்களின் குரல்களில், பல ஆவணப்படங்கள் வந்திருப்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.  அவற்றையெல்லாம் நாம் எளிதாகப் புறக்கணித்து மைக்கலைப் புனிதராக ஆக்கவும் முடியாது.

அண்மையில் வெளிவந்த மைக்கலைப் பற்றிய படம் (Michael) வசூலிலும் பெரும் சாதனை படைத்திருக்கின்றது. இறந்தாலும் யானை ஆயிரம் பொன் என்பதற்கிணங்க மைக்கல் தனது அதிசயத்தக்க திறமைகளால் நெடுங்காலத்துக்கு வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மைக்கலை இந்தக் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து வெள்ளையடித்துத்தான் நாம்  அவரைக் கொண்டாட வேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை. இப்போது வந்திருக்கும் மைக்கலின் திரைப்படம் கூட மைக்கலில் வெற்றியின் முதல்படிக்கட்டுடன் முடிந்தாலும், மைக்கல் பற்றிய குற்றச்சாட்டுக்களை காட்சிப்படுத்தாது மைக்கலைத் திருவுருவாக்கும் முயற்சியென கடும் விமர்சனமும் இன்னொருபக்கம் வைக்கப்பட்டிருக்கின்றன.

நான் இத்திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தக் குற்றச்சாட்டுக்களும் உறுத்தத்தான் பார்த்தேன்.  எமக்கு ஒருவரின் கலைத்திறமைகள் பிடிக்கின்றன என்பதற்காக அவர்களைப் புனிதர்களாக்கித்தான் அந்தத் திறமைகளை இரசிக்கவேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இப்படியான விமர்சனங்களோடுதான் மைக்கலை மட்டுமில்லை, பாப்லோ நெரூடா, வூடி அலன் போன்ற எண்ணற்ற படைப்பாளிகளையும்  நான் பார்க்க விரும்புகின்றேன்.

இவர்களைப் பற்றி ஒருவர் வியந்து ஒரு ஆக்கம் எழுதுகின்றார் எனின், அதில் இந்தக் குற்றச்சாட்டுகளையும் தொட்டுச் செல்லவேண்டும் என எதிர்பார்ப்பேன். இந்தப் புனிதங்களால் நாம் எமக்குப் பிடித்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற முடியாது என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவர்களால் பாதிப்புற்றவர்களின் குரல்களை அமைதியாக்கி அநீதி இழைப்பவர்களாகவும் நாம் ஆகிவிடுகின்றோம்.

என்னைப் போன்றவர்களுக்கு ஆங்கிலப்பாடல்களே மைக்கல் ஜாக்சனால்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. என் பதின்மத்தின் முகிழ்ந்த முதல் காதலின் காதலி ஒரு காஸெட் முழுதும் மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு செய்து எனக்காகத் தந்திருந்தார். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு அப்பாவிடம் இதிலென்ன இருக்கின்றது என திட்டுவாங்கியதும், நான் என் வாழ்வில் (அப்பாவுக்கு எதிராக) முதன்முதலாக அச்சம் களைந்து எதிர்த்துப் பேசியதும் (எல்லாம் காதலும் மைக்கலும் தந்த 'தில்'தான்) இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது.

இவ்வாறு என் முதல் காதலிலும், குடும்பத்துக்கு எதிரான முதல் குரலிலும் முக்கிய பங்காற்றிய மைக்கலை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் அந்த மைக்கலையும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களோடுதான் ஏற்றுக்கொள்வேன்.

கடவுளரை வேண்டுவோர்க்குத்தான் புனிதர்கள் தேவைப்படுவார்கள்; கலைஞரை நேசிப்போர்க்கு, கலைஞர்கள் அவர்களின் பலவீனங்களோடோ போதும்.

மேலும் எந்த ஒரு கலைஞரையும் அவரின் இருண்டபக்கத்தை மட்டும் வைத்து, படைப்புத் திறமைகளைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் வரலாற்றில் மிக அரிதே என்பேன்.

***

 

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு

Tuesday, June 09, 2026

 

– திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம் 

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் - திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது.


Uploaded Image


திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை வழங்கினர்.
 
 



நிகழ்வின் தொடர்ச்சியாக, நூலினை திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வெளியிட்டு வைக்க, திரு. சோ. பத்மநாதன் மற்றும் திரு. அ. யேசுராசா ஆகியோர் கெளரவப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், நூலாசிரியர் இளங்கோ சார்பில் வடகோவை வரதராஜனால் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள், வாசகர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நன்றி: எழுநா


 

இளங்கோவின் "இருத்தலின் மீது கவியும் இன்மைகள்"

 

டெ. க. அரவிந்தறாஜ்
***

நூலாசிரியர் இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள்,  சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம்.

ஈழயுத்தத்தில் அநியாயமாக பலியான அனைவரிற்குமாக படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

 



நூலின் அட்டைப்படம் இளங்கோவின் யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியின் புகைப்படமாகவும் அதைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களுமாக காட்டப்பட்டுள்ளது. வீடு என்பது இருத்தலின் ஒரு குறியீடு. ஆனால் இங்கு அதன்நிலை இல்லாமையையும் அதேவேளை பூக்கள் நம்பிக்கையையும் தருவதுபோல தலைப்பிற்கு வலுச்சேர்க்கின்றது.

எழுநா சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த 13 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஈழப்போராட்டத்துடன் தொடர்புடைய ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களை ஆசிரியர் தன்னுடைய பார்வையில் ஆராய்கிறார். அவற்றின் சார்பு நிலை, வரலாற்று உண்மைகள், எழுதப்பட்ட நோக்கம், அதற்கு நியாயம் செய்யப்பட்டுள்ளதா என விரிகின்றது இக் கட்டுரைகள்.

இதற்கான களத்தை  ‘எழுநா’ வழங்கி உள்ளது. அதாவது ஈழக்கற்கைகள் என்ற எண்ணக்கருவின் கீழ் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், அபவிருத்தி, சட்டம், பொருண்மியம் என்று பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிவு பரம்பலை அல்லது கருத்தாடலை அல்லது வெவ்வேறு பார்வை கோணங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு ‘எழுநா’ செயற்படுகின்றது. அந்த வகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகங்கள் தொடர்பான உரையாடலை உருவாக்குவதில் எழுநாவும் இளங்கோவும் வெற்றி பெற்றுள்ளார்கள் எனலாம்.

பதினொரு எழுத்தாளர்களின் 13 நூல்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் பேசுகின்றன. அதாவது அனுக் அருட்பிரகாசத்தின் "வடக்கிற்கான பயணம்" மற்றும் ஒரு குறுகிய திருமணத்தின் கதை" ஆகிய இரு நூல்களும் வாசுகி கணேசானந்தனின் "சகோதரனற்ற இரவு" மற்றும் "Love Marriage" ஆகிய  இரு நூல்களும், நிரோமி டீ ஸொய்ஷாவின் "தமிழ்ப் பெண் புலி", ஷியாம் செல்லத்துரையின் "பசித்த பேய்கள்", சாரோன் பாலாவின் "படகு மக்கள்",  ரோய் ரத்னவேலின் "கைதி # 1056", லோகதாசன் தர்மதுரையின் "The Sadness of Geography" , மலரவனின் போர் உலா, மார்க்ஸ் ஸ்டீபனின் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்", சங்கரி சந்திரனின்"சூரியக்கடவுளின் பாடல்", மற்றும் பெஞ்சமினின் "வன்னி: கிரபிக் நாவல்" என்பவையாகும்.

மலரவன் அவர்களின் போர் உலா தவிர்ந்த ஏனையவை யாவும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. போர் உலா தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல்களின் எழுத்தாளர்களை எடுத்து நோக்கினால் இருவர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பத்துப்பேர் புலம் பெயர்ந்தவர்கள். மலரவன் ஈழ விடுதலைப் போராளி. நிரோமி போராளியாய் இருந்து விலகி பின்னர் புலம்பெயர்ந்தவர்.

இந்நூல்கள் தொடர்பான தனது பார்வையை இளங்கோ முன் வைக்கும்போது ஒரு தெளிவான வடிவத்தை கையாளுகின்றார். அதாவது முதலில் நூலை அறிமுகம் செய்து அதனுடைய கதை, அதை எழுதியவரின் பின்புலம், கதை எழுதப்பட்ட சூழல் என்பவற்றை குறிப்பிட்டு அதன் பின்னர் அந்த பிரதி ஊடாகவும் அந்த பிரதிக்கு வெளியேயும் அந்நூல் எதைப்பற்றி பேசுகிறது என்பதை  தெரிவிப்பதன் ஊடாக வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகின்றார்.

இது இலக்கியத்தில் ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ஒரு படைப்பை புரிந்து கொள்ள படைப்பு மாத்திரம் போதுமா அல்லது அதன் பின்னணி,  எழுத்தாளரின் நோக்கம் போன்றவற்றையும் கொண்டு அதனை மதிப்பிட வேண்டுமா? அத்துடன் இலக்கியம் என்றால் என்ன? அதன் சார்பு நிலைகள் என்ன? வாசகர்களுக்கு இலக்கியத்தின் ஊடாக என்ன வழங்கப்பட வேண்டும்? போன்ற கேள்விகள் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கின்ற போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.

உதாரணமாக அண்மையிலே வெளிவந்த டிலுக்ஸன் மோகனின் ‘படுபட்சி’ நாவல் தன்வரலாறு என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் பல்வேறு காரணங்களுக்காக  உண்மைக்கு முரணான பல தகவல்களை கொண்டிருந்ததாக சர்ச்சைக்கு உள்ளானது.

அத்துடன் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்" என்ற நூல் தொடர்பாக இளங்கோ குறிப்பிடும்போது அதன் நூலாசிரியரான மார்க்ஸ் ஸ்டீபன் தீவிரவாதிகள் பற்றி ஆராயும் ஆசையில் அவர்களை சந்திக்க முயல்கிறார். வேறு நாடுகளைவிட இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற காலமாகையால் அது அவருக்கு இலகுவாக அமைகின்றது. எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் மதுபானங்களுடன் சூதாடும் போராளிகளை காணுதல் என குறிப்பிடுவது முற்று முழுதாக தவறானது என்கிறார்.

அதேபோல மார்க்ஸ் ஸ்டீபனின்  தீவிரவாதிகளை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணத்தை அமெரிக்க மனநிலை என்று அவருடைய காதலியே சொல்வதாக இப்புத்தகம் குறிப்பிடுகின்றது. இக்கட்டுரையை முடிக்கும்போது இளங்கோ ஈழப் போராட்டம் பற்றி அறிய இப்புத்தகம் ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் ஆனதல்ல என்கிறார்.

அனுக் அருட்பிரகாசம் போர்ச் சூழலிற்குள் எப்போதும் இருக்காதவர். அதை வெளிப்படையாகத் தெரிவித்தே தனது கதைகளை எழுதுகிறார். அதேபோல ஏனையோரும் நேர்மையாக செயற்படுவது அவர்களது புத்தகங்களை புரிந்துகொள்ள உதவும் என்கிறார்.

பெரும்பாலான புத்தகங்கள் எண்பதுகளில் இடம்பெற்ற இனக் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக  "வடக்கிற்கான ஒரு பயணம்" , "படகு மக்கள்" , கைதி # 1056, "நிலவியலின் துயரம்"  1983 ஜூலை  இனக்கொலையுடன் தொடர்புபடுகின்றது.  இந்நூல் ஆசிரியர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ எண்பதுகளில் புலம்பெயர்ந்த நடுத்தர அல்லது உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறார் இளங்கோ. 




வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரன் அற்ற இரவு’ நாவலானது 1980 களில் ஆரம்பித்தாலும் இடையில் 20 ஆண்டுகளை விட்டுவிட்டு 2009 ற்கு தாவுவதை குறிப்பிட்டு இடையில் நடந்த யுத்தத்தாலான பாதிப்புகள் தொடர்பாக மௌனம் காப்பதுடன் போராட்டத்தின் அடிப்படை காரணத்தை மறைத்து யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் குற்றம் செய்தாக பொதுவாக கூறுவது பொருத்தமற்றது என்கிறார். ஒரு புலம்பெயர்ந்தவராக  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பின் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

படகு மக்கள் நாவல் தொடர்பாக குறிப்பிடும்போது சாரோன் பாலா யுத்தத்தோடு தொடர்புபடாதவர். அத்துடன் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இருந்தும் அவரால் ஈழப் போராட்டத்தின் நியாயப்பாட்டை புரிந்து கொள்ள முடிகின்றது என்கிறார். சிக்கலான, அபாயம் நிறைந்த, உயிரைப் பறிக்கக்கூடிய படகுப் பயணத்தை ஏன்  இவ் அகதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் அவரால் நியாயப்படுத்த முடிகிறது.

அதேபோல சூரிய கடவுளின் பாடல் நாவலில் சங்கரி சந்திரனால் 1930 இலிருந்து 2010 வரையான மூன்று தலைமுறைகளின் கதைகளை யுத்தத்தை நேரடியாக சொல்லாமல் குடும்பங்களின் ஊடாக சொல்லப்படுகின்றது.

வாசுகி கணேசானந்தன், சாரோன் பாலா, சங்கரி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் 70,  80களில் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். தமிழைச் சரியான முறையில் வாசித்து விளங்குவதற்கான திறமை குறைவாக உள்ளவர்கள். இருந்தாலும் அவர்களால் ஈழப் பிரச்சனையின் வரலாற்று ஒழுங்கை எழுத முடிகிறது. அதிலும் சாரோன் பாலா மற்றும் சங்கரி சந்திரன் ஆகியோர் ஈழப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு உண்மைக்கு நெருக்கமாக எழுதுகிறார்கள் என்கிறார் இளங்கோ.

அதேபோல ரோய் ரத்தனவேல் மற்றும் லோகதாசன் தர்மதுரையின் சுயசரிதைகள் போரின் பாதிப்புகளையும் புலம்பெயர்வின் அவலங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. போரால் ஏற்பட்ட உளவடுக்களில் இருந்து விடுபட இவர்களுக்கு நீண்ட காலம் சென்றுள்ளது. ரோயிற்கு ஒரு இராணுவ அதிகாரி உதவ, லோகதாசனுக்கு புகையிரதத்தில் சந்திக்கும் ஒரு பெண்ணும் ஒரு இஸ்லாமிய குடும்பமும் உதவுகின்றது. இது மனிதர்கள் தனித்தனியாக நல்லவர்களாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

போர் உலாவை பற்றி  இளங்கோ குறிப்பிடும்போது ஈழப் போராட்டத்தைப் பற்றி ஒரு போராளியால் எழுதப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான போர் இலக்கியம் என்கிறார். எனினும் அதை எழுதிய மலரவன் சிறிய வயதிலேயே இறந்து விடுவதை குறிப்பிட்டு அவர் இன்று இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பான படைப்புகளை தந்திருப்பார் என்று கேட்பதன் ஊடாக போரினால் என்ன நன்மை விளைந்துவிடக் கூடும் என கேள்வி எழுப்புகிறார்.

ஈழப் போராட்டம் தொடர்பில் வெளிவந்த ஆங்கில நூல்களில்  எவை சரியான வரலாற்று புரிதலுடன் எழுதப்பட்டுள்ளன மற்றும்  எவை வேண்டுமென்றே திரிவுபடுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளன  என்பதை எடுத்துக்காட்டுவதன் ஊடாக ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’
தமிழில் வாசிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. அத்துடன் ஆங்கிலத்தில் ஈழப் போராட்டம் தொடர்பான நூல்களில் எவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு முன்வைக்கின்றது.

எனினும் தமிழ் வாசகர்கள் ஈழப் போராட்டம் தொடர்பாக ஓரளவுக்கு தெளிவான பார்வை உடையவர்கள். புலம்பெயர்ந்த இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களே ஆங்கிலத்தில் வாசிக்கும்போது எது உண்மை எது பொய் என்று தெரியாது ஒரு பிழையான வரலாற்றை நோக்கி இழுத்துச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உடையவர்கள். எனவே இளங்கோவின் இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அவர்களுக்கும் ஒரு சரியான வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

***

(‘எழுநா’வினால் 2025 இன் இறுதியில் வெளியிடப்பட்ட ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் தொடர்பாக கடந்த 28/02/2026 அன்று திருமறைக்கலாமன்ற கலைத்தூது மணி மண்டபத்தில் ஆற்றப்பட்ட மதிப்பீட்டுரை.)

நன்றி: 'அம்ருதா' - சித்திரை இதழ் 2026

 

அகதி என்பது சிலருக்கு நிரந்தர அடையாளம்!

Thursday, May 21, 2026

 

-தொ.பத்தினாதனின் 'நாளையும் நாளையே' என்ற தொகுப்பை முன்வைத்து-


இலங்கையில் யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. போரின் நிமித்தம் அமைக்கப்பட்ட அகதி முகாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டிருக்கின்றன. அதே போன்று போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் பெரும்பான்மையானோருக்கு அந்த நாடுகள் தமது குடியுரிமையையோ/நிரந்தர வசிப்பிடத்தையோ கொடுத்திருக்கின்றனது. ஆனால் உலகில் மிகப் பெரும் ஜனநாயக நாடு எனச் சொல்லப்படுகின்ற இந்தியாவில், இலங்கையிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் இன்னும் அகதிகள் என்ற அடையாளத்தோடோ இருக்கின்றார்கள். இப்படி அகதியாக அவர்கள் இருப்பது ஐந்தோ, பத்தோ ஆண்டுகள் அல்ல. கிட்டத்தட்ட 20/30 வருடங்களாக அகதிகளாக, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அகதி முகாங்களிலே விளிம்புநிலை மனிதர்களாய்த் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
 
அந்த அகதி முகாங்களில் அனைத்துத் தரப்பாலும் கைவிடப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பதிவு செய்பவர்களில் முதன்மையான ஒருவராக தொ.பத்தினாதன் இருக்கின்றார். பத்தினாதன் அவரது 16வயதில், 1990இல் ஓர் அகதியாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கிட்டத்தட்ட இலங்கையில் வாழ்ந்ததை விட இரண்டு மடங்கு இந்தியாவில் வாழ்ந்திருந்தபோதும், அவர் அங்கே நிரந்தரமான அகதியாகவே வாழவேண்டிய துர்ப்பாக்கியமே நிகழ்ந்திருக்கின்றது.

பத்தினாதன் ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்கின்ற தன்வரலாற்று நூலையும், 'அந்தரம்' என்கின்ற நாவலையும் எழுதியிருக்கின்றார். இப்போது அவர் கடந்த பத்தாண்டுகளாக எழுதிய 12 கதைகளை உள்ளடக்கி 'நாளையும் நாளையே' என்கின்ற சிறுகதைத் தொகுப்பை  வெளியிட்டிருக்கின்றார்.

*

பத்தினாதன் இதுவரை எழுதியவற்றை வாசித்தவர்களுக்கு, இது அவர் ஏற்கனவே எழுதியவற்றவைகளின் ஒரு தொடர்ச்சியென எளிதில் அடையாளங் கண்டுகொள்ள முடியும். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை அகதி முகாங்களில் நடக்கின்றன அல்லது அகதி என்கின்ற அடையாளத்தோடு புறச்சூழலில் நடக்கின்றவையாக இருக்கின்றன.

 'அகதி' என்கின்ற கதை, நட்சத்திர விடுதியில் திருமணக் கொண்டாட்டங்களில் உதவியாளராக வேலை செய்கின்ற ஒருவனின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்கிறதாக நீள்கின்றது. இந்தக் கதையில் வருகின்றவனுக்கு ஏற்கனவே நிறைய யோசனைகள் பீறிட்டுக் கிளம்பி, தனக்கு மனநலப் பிரச்சினை இருக்கின்றது என்று நம்புகின்றான். அதற்காக மருத்துவரைக் கூடப் பார்க்கின்றான்.

அப்படியான உளவியல் சிக்கலோடு நட்சத்திர விடுதியில் வேலை பார்க்கும்போது அங்கே ஏற்படுகின்ற அனுபவங்களை அவன் விபரிக்கின்றான். இத்தனைக்கு நடுவிலும் இலங்கையிலிருந்து வந்த அகதி  தானென்கின்ற அடையாளத்தை மறைத்தே அங்கே வேலை பார்க்கின்றான். இறுதியில் ஒரு சிக்கல் வந்து அவன் வெஞ்சினத்தில் வெடித்துச் சிதறும்போது, அவனை 'நீ மதுரக்காரனா?' என்று இன்னொருவன் அணைத்தலுடன் அந்த கோப நெருப்பு அணைந்து ஓர் அமைதி அவனுக்குக் கிடைத்து விடுகின்றது.

இதில் முக்கியமான கதைகளில் ஒன்றாக 'நோஞ்சானை'ச் சொல்லலாம். இக்கதையில் ஒரு நாடகம் நடக்கின்றது. அதை ஒருவர் எப்படி இலங்கையில் யுத்தம் இருந்தது, தமிழகத்தில் எப்படி அகதி வாழ்க்கை இருக்கின்றது என்று நடித்துக் காட்டுகின்றார். அப்படி நடித்துக் காட்டுபவரே சட்டென்று முழுநாடகத்தையும் முடிக்காமல் அமைதியாக ஒதுங்கி ஒளித்துக் கொள்கிறார். அதற்கு பார்வையாளர் மத்தியில் வாட்டசாட்டமாக ஒரு கியூ பிராஞ்ச் அதிகாரி உட்கார்ந்திருந்தமையே காரணம். இந்த உண்மையான காரணத்தை இதில் நடித்துக் கொண்டிருந்த பெரியசாமிக்கும், இந்த நாடகத்தை நிகழ்த்த இடம் கொடுத்த பேராசிரியர் பிரபாகருக்கு மட்டுமே தெரியும் என்று கதை முடியும். ஆக கலை இலக்கியங்களில் கூட முழுமையான சுதந்திரமாகப் பேச, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு இடமில்லை என்பதை அந்தக் கதை சொல்லாமல் சொல்லிச் செல்வதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதுபோல 'தேசியகீதம்' கதை, இந்திய ஜனாதிபதி மதுரைக்கு வருவதையிட்டு அகதிகள் அனைவரையும் அகதி முகாங்களுக்குள் அடங்கியிருக்கும்படி கட்டளையிடப்படுகின்றது. இந்த 'ஊரடங்கில்' பாடசாலைக்குப் போகும் குழந்தைகளுக்குக் கூட விதிவிலக்கு கிடைப்பதில்லை. அவர்களும் பாடசாலைக்குப் போகாமல் முகாங்களுக்குள் அடைந்து கிடக்கின்றார்கள். அப்படி இரண்டு நாள் பாடசாலைக்குப் போகாத குயின்ரனை, அவனது புதிய ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்டு அதட்டுகிறார். அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் தானொரு இலங்கை அகதி, எங்களை இவ்வாறான நாட்களில் அகதி முகாமை விட்டு வெளியே விடுவதில்லை என்று சொல்லத் தயக்கமாக இருக்கின்றது. ஆனால் அவனோடு பத்தாம் வகுப்பு கூடப்படிக்கும் ரோஸ்மேரிக்கு இந்தப் பிரச்சினையில்லை. அவள் நெஞ்சுரத்துடன் 'நாங்கள் அகதி முகாமில் இருப்பவர்கள். இவ்வாறு முக்கிய அரசியல்வாதிகள் இங்கு வரும்போது எமக்கு பாடசாலைக்கு வர அனுமதியில்லை' எனச் சொல்லி குயின்ரனைக் காப்பாற்றுகிறாள்.

பாடசாலை அசெம்பிளியில் தேசியகீதம் பாடப்படுகின்றபோது, அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடும்போது, குயின்ரன் அதைப் பாடவில்லை என்பதைக் கண்டுபிடித்து ஏன் என அந்த ஆசிரியர் கேட்கிறார். அவன் மெளனமாக இருக்கின்றான். ஆனால் ஆசிரியர் உறுக்கிக் கேட்ட்கும்போது குயின்ரன் கேட்கிறான், 'நான் ஏன் தேசிய கீதம் பாட வேண்டும்?'. அத்துடன் இந்தக் கதை, அவனை நோக்கி ஆசிரியரின் தண்டனை அவனுக்குப் பிடிக்காத பல்லியைப் போல ஆவேசமாக நாக்கைச் சுழற்றியபடி வருவதுடன் முடிகின்றது. ஓர் அகதியாக/நாடற்றவனாக குயின்ரன் இருக்கும்போது, அவனுக்குரிய தேசம் எது, தேசிய கீதம் எதுவென்பது அவ்வளவு அழுத்தமாக இந்தக் கதையினூடாகச் சொல்லப்படுகின்றது.

*

பத்தினாதனின் கதைகளினூடாக பல்வேறு விதமான அகதி முகாம் வீடுகளைப் பார்க்கின்றோம். எல்லா வீடுகளும் மழையின்போது அடிக்கடி  ஒழுகுகின்றன, கதவுகள் உடைந்து சாட்டுக்கு கதவுகள் போல காட்சியளிக்கின்றன, சேலையை கட்டி அறைகளாக்கி மனிதர்கள் எவ்வித அந்தரங்கமுமில்லாது படுத்துறங்குகின்றார்கள். அப்படிப்பட்ட அகதி முகாமில் தன்பாட்டில் வளர்ந்து வரும் காய்க்காத புடலங்காய் கொடியால் பாம்பு வந்துவிட்டதென்று, இனி புடலங்காய் செடியைக் கூட அகதிமுகாமில் வளர்க்கக் கூடாதென்று சட்டமொன்று கொண்டுவரப்படுவதை 'புடலங்காய்' கதை சொல்கின்றது.

அதுபோலவே அகதிமுகாமில் வாழும் பெண்கள் மீது நிகழும் பாலியல் துஷ்பிரயோகத்தை 'நாளையும் நாளேயே' சொல்கின்றது. அகதி முகாமில் கொடுக்கப்படும் சம்பளக் காசின் நிமித்தம் நடந்த பாலியல் சேட்டையைத் தனது கணவரிடம் சொன்னாலும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத அவல நிலையே அந்தக் கணவர்க்கு இருக்கின்றது. ஒருகட்டத்தில் இப்படியான துஷ்பிரயோகங்கள் தாளாது, இங்கே இருக்கவேண்டாம், இலங்கைக்குத் திரும்பப் போகப் பதிவு செய்துவிடுங்கள் என்று அந்தப் பெண் மன்றாடுகின்றார். எனினும் அடுத்தநாள் எதுவுமே நடக்காதமாதிரி கணவனான கணேஷ் பெயிண்ட் டப்பாவுடன் வேலைக்கு நடந்துகொண்டிருப்பதாக இந்த கதை அவ்வளவு அவலச்சுவையுடன் முடிவதை வாசகராக நாம் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

'பசிப்பாடல்' என்பது ஒரு அகதியின் ஒருநாள் பட்டினியை அவ்வளவு நெகிழ்ச்சியுடன் விபரிக்கின்றதென்றால், இன்னொரு கதையான   'அ(க)திகாரம்' கதை, மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சை பெறும் மகனின் நிலையை ஆவணங்களாகக் காட்டியும் ஏற்றுக்கொள்ளாது, அகதிகளுக்கான உதவிப்பணத்தைக் கொடுக்காத அதிகாரியின் அதிகாரத்தால் நொந்த ஓர் அகதி மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்கின்ற துயரக்கதையைச் சொல்கின்றது. ஒரு மனிதன் உயிரைத் தக்க வைப்பதற்காக நாடு கடந்து அகதியாக வந்து, அந்த இன்னொரு நாட்டில் கொடுக்கப்படும் நிர்ப்பந்தத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எவ்வளவு அவலமானது.

இத்தொகுப்பிலிருக்கும் துயரமும், கொந்தளிப்புமான கதைகளை முன்வைத்து, அண்மையில் வெளிவந்த நூல்களில் கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்பென்று இதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேலும் அகதிகளின் கதைகளை வைத்து அனுதாபமோ கழிவிரக்கவோ வேண்டி நிற்காமல், அதை புனைவின் இயல்பான மொழியில் பத்தினாதன் சொல்வதைக் கவனித்தாக வேண்டும். இதில் 'பயம்' மற்றும் 'வடக்கத்தையான்' பத்தினாதனின் வழமையான மொழியை விட்டு விலகி நிற்பதால் அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட, அவரின் ஏனைய பத்துக் கதைகள் முக்கியமானவை என உறுதியாகச் சொல்ல முடியும்.

பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய தொகுப்புக்களும் எனச் சொல்வேன்.

பத்தினாதனின் அகதி முகாம் கதைகளை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனில், 'என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்' என்று மாண்டோ சொன்னதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வதே சரியான வழியாக இருக்கும்..

***

(நன்றி: 'கலைமுகம்' - 81)