கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கஸ்தூரியின் ஆக்கங்கள்

Tuesday, November 16, 2004

ஓர் அறிமுகம்

கஸ்தூரி அவரது கவிதைகளினால் பரவலாக அறியப்படுகின்றவராயினும், நல்ல பல சிறுகதைகளையும் தனக்குரித்தான உலகினுள் நின்று படைத்துள்ளார். சிவரமணி, செல்வி போன்றோர் தீவிரமாய் இயங்கியபொழுதிலே இவரது பல ஆக்கங்களும் எழுதப்பட்டதாய் தெரிகிறது. சிவரமணியைப்போலவே மிக இளம்வயதில் (22 வயதில்) இவரும் அகால மரணமடைந்தவர். 'கஸ்தூரியின் ஆக்கங்கள்' எனத் தொகுப்பட்ட இவரது தொகுப்பிலே, ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழப்போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிப்பவையாய் இவரது அநேக கதைகள் அமைந்திருக்கின்றன. அமைதிப்படை என்ற பெயரில் வெண்புரவிகளின் மீதேறி வந்தவர்கள் திசைமாறிப்போனதையும், அவர்கள் விட்டுச்சென்ற அழியா வடுக்களுமே அதிகம் கஸ்தூரியின் கதைகளில் உள்ளுறைந்து கிடக்கின்றது.

'நிர்ப்பந்தங்கள்' என்று கிட்டத்தட்ட குறுங்கதையாக நீளும் கதை யாழ்ப்பாணத்து சராசரிப் பெண்கள் இருவரின் வாழ்வினைக் கூறுவதாய் அமைந்திருக்கின்றது. தன்னை, தனக்குள்ளும் சமுகத்திற்குள்ளும் ஒடுக்கியபடி இருக்கும் அக்காவினதும், எதையும் கேள்விக்குட்படுத்தி சுதந்திரமாய் திரிய விரும்பும் தங்கையினதும் வாழ்வின் பன்முகங்கள் பேசப்படுகின்றன. கதை அக்காவின் மரணத்தின் புதிரிலிருந்து தொடங்கி அக்காவின் இறுதிச்சடங்குகளுக்கான ஆயுத்தங்களுடன் முடிகின்றது. அதனிடையே, தனதும் அக்காவினதும் நினைவுகளை தங்கை அசைபோடுவதாய் கதை நீள்கிறது . எவருக்கும் தீங்கு செய்ய விரும்பாத, எல்லோரையும் அனுசரித்துப்போகும் அக்கா, இறுதியில் தான் மணந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு, வெளிநாட்டிலும் ஒரு குடும்பம் இருப்பதாய் அறிந்து தற்கொலை செய்து கொள்கிறார். அக்காவின் மீது அதீத பாசமும் விருப்பும் கொண்ட தங்கையிற்கு அக்காவின் அரளிக்காய் உண்ட மரணம் அவமானமாய்த் தெரிகிறது..."சீ...அக்கா எடுத்தது எவ்வளவு கோழைத்தனமான முடிவு! தவறு செய்தவன், தண்டிக்கப்படவேண்டியவன் என்ன மாதிரித் திரிகிறான். அவனுக்கென்ன இன்னொரு மனைவியோடு வாழுவான். இல்லாவிட்டால் அந்த வெளிநாட்டு மனைவியோடு வாழ்வான். ஆனால் அக்கா இத்தனை காலமும் தன் வாழ்வில் பயந்து என்ன சுகத்தைக் கண்டாள்? எல்லோருக்கும் பயந்து பயந்து வாழ்ந்ததுதான் மிச்சம்' என்கின்றதோடு கதை நிறைவுறுகிறது. பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்.

இன்னொரு கதையான 'மக்களைப் பிரிந்த துப்பாக்கிகள்', ஈழமண்ணில் இந்திய இராணுவம் மக்களிற்கு பெண்களிற்கும், சாதாரண மக்களிற்கும் ஏற்படுத்திய அழியா வடுக்களைப் பேசுகின்றது. சுமதி என்கின்ற கல்லூரியில் கற்கும் பெண்ணை தன்வசமாக்க விரும்பும் ஒரு இராணுவத்தினனின் கோரமுகம் சித்தரிக்கப்படுகின்றது. ஓர்நாள் ரீயுசனிற்கு சென்ற சுமதியை, பாதுகாப்பு பரிசோதனை என்ற பெயரில் நடுவீதியில் ந்¢றுத்துகிறான் ஒருவன் அவனைப்பார்த்து, 'உன்ரை லச்சணத்திற்கு நாங்கள் கதைக்காதது ஒன்றுதான் குறை. எளிய மூதேசி, நீயும் ஒரு தமிழனே' எனப்பேசுகிறாள். பலவந்தமாய் அந்த இராணுவத்தினன் சுமதியை மணக்கவும் ஆசையைத் தீர்க்கமும் முயல்கையில் தன்னை விடும்படி மன்றாடியவளை கைகளால் அறைந்து கெட்ட வார்த்தைகளால் பேசுகிறான். மக்கள் அதிகம் நடமாடும் வீதியாகையால் சுமதி ஒருவழியாக தப்பிக்கிறாள். ஆனால் பாலியல் வக்கிரம் பிடித்த மிருகம் தன் கூட்டாளிகளுடன் சுமதியின் வீடு நகரை ஒரு அந்தியில் செல்கிறது. அடுத்து என்ன நிகழும் என்ற அறிந்த சுமதி, வீட்டின் பின்வளவால் தப்பியோடுகிறாள். எனினும் கோபம் கொண்ட இராணுவத்தினன், அவளின் தந்தையை அடித்து வானில் ஏற்றிவிட்டு, சுமதியின் தாயிடம், 'உனக்குப் புருசன் வேணுமெண்டா நாளைக்கு மேளைக் கொண்டாந்து தந்திட்டு புருசனைக் கூட்டிக் கொண்டுபோ' என ஆண்மை பேசுகிறான். கெடு முடிகிறது, சுமதியின் தந்தை திரும்புகிறார் இறுதியில் பிணமாக. பிறகும் விடவில்லை, 'பிரேதத்தை அரை மணித்தியாலத்துகுள் எரிச்சுபோடோணும், அழுது ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது' என்றும் பயமுறுத்தியபடி, இன்னும் யாரைப்பலியெடுக்கலாம் என்று அந்தக்கொடியவர்களின் வாகனம் உறுமிக்கொண்டே செல்வதாய் கதை முடிகிறது. அந்த உறுமலும், அது தரும் பீதியும் வாசிப்பவர் அனைவரையும் திடுக்குறவே செய்யும்.

மற்ற ஒரு கதையான, ' அவர்களுக்குதான் எமக்கு விடிவதில் விருப்பமில்லையே' யில் ஒரு தாய், தனது மகளை இராணுவ டாங்கி ஏறிமிதித்துச் சென்ற ஐம்பது அப்பாவி மக்களில் ஒருவராய் இழக்கிறாள். அவளது சோகம் முடியவில்லை. பிறகொருபொழுதில் செல்விழுந்து தனது மகனையும் காவுகொடுக்கிறாள். இழப்பே வாழ்வாகிப்போன தாயின் வாழ்வு முழுதும் கொடுங்கனவுகள் துரத்துகின்றன. ஒருநாள், நினைவுகளின் பெருங்கடலில் அலைவுற்று, தாகம் நீள தன் பிள்ளைகளின் பாதங்களைப் போய்சேருவதாய் கதை முடிகிறது. இதைபோன்ற பல தாய்மார்களின் கதைகள் நம் மண்ணில் புதைந்து போயும், மிதந்தபடியும் இருப்பதான பிரமையை கஸ்தூரியின் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன.
'இடம்மாறியுள்ள துப்பாக்கிகளால்...' கதை போராளிகளுக்கு உதவும் இரண்டு பிள்ளைகளின் தாயை, இந்திய இராணுவமும் அதனோடும் இயங்கும் உள்ளூர் இராணுவமும் செய்யும் சித்திரவதைகளையும், இறுதியில் அவரின் உயிரினைப் பறிக்கும் கொடூரத்தையும் சித்தரிக்கிறது. இறுதியில் தன் முடிவை முன்னமே அறிந்துவிட்ட தாய், தன் குழந்தைகள் குறித்து எண்ணுகிறாள், ' போகட்டும்... இன்று எத்தனை தமிழ்க்குழந்தைகள் அநாதைகளாகிவிட்டனர். அவர்களோடு இவர்களும் சேர்த்து கொள்ளட்டும். அடிமைகளாக வாழ்கின்றவரை நாட்டின் அகதிகளும், அநாதைகளும் தானே நிரம்பி வாழ்வார்கள்'. ஒரு தாய் சொல்லக்கூடிய வார்த்தைகளா இதுவென அந்தச் சூழலிற்கு வெளியிலிருக்கும் நமக்கு வியப்பு ஏற்படுதல் இயல்பு. ஆனால் அதைவிட யதார்த்தம் மோசமாய் இருக்கிறதாய் கதாசிரியர் வார்த்தைகள் சோகத்துடன் கசிகின்றன.

கஸ்தூரியின் கதைகளில் அநேகமானவை எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாய் தோன்றுகின்றன. ஒரு போராளி அமைப்புக்குள்ளிருந்து, தீவிரமான யுத்தகளம், தலைமறைவு வாழ்வு என்கின்ற நிலைகளை மீறி படைப்புக்கள் எழுத்தாக்கம் பெற்றிருக்கின்றன. அதீத பிரச்சாரத் தன்மையோ அல்லது தான் சேர்ந்த அமைப்பைத் தேவையின்றி புகழாமலே எழுதியிருப்பது இன்னுமொரு சிறப்பு. போராடும் கரங்கள் சிலவேளைகளில் கறைகள்பட்டாலும் அவையும் மானிடத்தின் விடுதலையை நோக்கியே நகரத்துடிக்கின்றன என்பதற்கு கஸ்தூரியின் யதார்த்தப்பாணியிலான இந்தக் கதைகள் முக்கிய எடுத்துக்காட்டாகும். மண்ணையும் மக்களையும் ஒருசேர நேசித்த ஒரு படைப்பாளி இளவயதில் நம்மை விட்டகன்றது ஈழத்து இலக்கியத்தின் துரதிஸ்டம்.

நன்றி: பதிவுகள் ஈழத்துச் சிறப்பிதழ்

0 comments: