கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புலம்பெயர் நாவல்கள்

Sunday, November 21, 2004

புலம்பெயர் நாவல்கள் பற்றிய சில குறிப்புக்கள்

ப.சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி', தமிழில் முக்கியமான நாவலென பலர் எழுதியுள்ளனர். இதன்ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு விதச் சலிப்புத்தட்டினாலும் (செட்டியார் வட்டிக்கடைப் பகுதி), பின்னர் ஒரே நீட்சியாக நாவலில் அமிழ்ந்து போகமுடிந்தது. ஆனால் செட்டியார் வட்டிக்கடைப் பகுதிகள் கூட ஒரு அத்தியாவசிய நோக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று நாவலை முழுதாய் வாசித்தபிறகு புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த நாவல், ஒரு சாகசக்கதை என்ற ரீதியில்தான் பார்க்கப்படும் என்றும் அதற்கான காரணங்களையும் ஜெயமோகன் இத்தொகுப்பின் பின்னுரையில் சொல்வதும் சரியானதே. என்னைக் கவர்ந்த பகுதிகள், நாவலின் முக்கிய கதாபாத்திரமான பாண்டியன், I.N.A தமிழர்களை பிரிட்டிஷ் இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்கும் சுந்தரத்தை மிகப்பொறுமையுடன் வஞ்சினம் தீர்த்துக்கொள்ளும் பகுதியும் (முக்கியமாய் சுந்தரத்துடன் நிகழும் உரையாடல்), மற்றது club ஒன்றில் மதுவருந்திக்கொண்டு பாண்டியன், கே.கே.ரேசன் போன்றவர்கள் பிரித்தானியரை நகைச்சுவையாய் கிண்டல் செய்யும் பகுதியும். கிண்டலின் உச்சியில் ஒரு பிரிட்டிஷ் கேர்னலுக்கு அடிப்பதும், எதிராளிகளின் துப்பாக்கிகள் உருவப்பட, அதற்குப் பயப்பிடாமல், பாண்டியன் போன்ற தமிழர்களும் துப்பாக்கிகளை எதிராய் உருவுவதும்... அதில் கூட அற்புதமான வரிகள் வந்துவிழுகின்றன..."பிஸ்டல்-கைகள் குறிபார்த்து இருந்தன. ஒரு விநாடி-ஒரு தோட்டா. பலரின் உயிர் ஒரு விநாடி-ஒரு தோட்டாவில் அடங்கி நின்று வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு தோட்டா வெடித்தால் போதும்..." .

வீரமாய் தமிழர்கள் நிமிர்ந்து நிற்கும்போது வீர வர்ணனைகள்தான் அனுபவமில்லாதவர்க்கு தொடர்ந்து வரும், அனுபவங்களிடையே வாழ்ந்த ப.சிங்காரத்திற்கு அது நிகழாதுதானே. இன்னும் பல நுட்பமான இடங்கள பலதைச்சொல்லிப்போகலாம். இந்த நாவல், 62ல் எழுதப்பட்டுவிட்டது என்று நினைக்கும்போது வியப்பாயிருந்தது. ஒரு நவீன நாவலிற்குரிய இயல்போடும், கிட்டத்தட்ட Non-linear வகையிலும் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.

'கடலுக்கு அப்பால்', போருக்கு பின்பான நாள்களைப் பற்றிப்பேசுகிறது. அந்த நாவல் நிச்சயம் ஒரு கழிவிரக்கத்தை வாசிப்பவரின் மனதில் படியவிடுகிறது. போர்க்களத்தில் சாகசங்களும், வீரதீரச்செயல்களும் செய்பவர்கள் போர் ஓய்ந்தபொழுதில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிர்ப்பதுவும் காலங்காலமாய் இருக்கும் போலத்தானிருக்கும். புயலிலே ஒரு தோணியில் அல்லாத வேறு பெயருடைய பாத்திரங்கள் இருந்தாலும், நுணுக்கமாய் பார்த்தால், இரண்டு நாவல்களின் பல பாத்திரங்கள் ஒன்றெனச்சொல்ல முடியும் (போருக்கு முன்/பின்). ஆனால் ஒரு நாவல் என்றவகையில் இது தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்பது பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட சம்பவங்களை புனைவதோடு ப.சிங்காரம் சோர்ந்துபோய்விடுகிறார். அதனால்தான் 'புயலிலே ஒரு தோணி'யளவிற்கு, இதைக்குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் போகிறது.

மற்றுமொரு நாவல், ஹெசிப்பா ஜேசுதாசன் எழுதிய, 'மா-னீ' என்ற நாவல். இது பர்மாவின் பின்புலத்தில் ஆரம்பித்து இறுதியில் இரண்டாம் உலகயுத்த ஜப்பானிய ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டிற்கு திரும்புவதான கதை. தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து(பெயர் ஞாபகமில்லை) பர்மாவில் வனத்துறையதிகாரியாக பணியாற்றப்போகும் தகப்பனுடன் குடிபெயரும் ஒரு குடும்பத்தின் கதை. நாவல் முழுவதும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதப்பட்டுள்ளது. அதீத sentiment அல்லது அடிபணிதலோ இல்லாமல் சாதாரணபோக்கில் கதை சொல்லப்படுகிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பர்மிய பெயர்கள், பேச்சு வழக்குகள் என்று நிரம்பியிருக்க கதையில் நுழைய சற்று கடினமாயிருந்தாலும், உள்ளே சற்று நுழைந்தால் ஒரு சுவாரசியமான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும். கதையின் முக்கியபாத்திரமான ராணிக்கு இரண்டு மூத்த அண்ணாமார்கள் இருக்கிறார்கள். இருவரின் வாழ்வுமே இறுதியில் அலங்கோலமாய் போகிறது. யுத்தம் போரிட்டுக்கொண்டிருப்பவரை மட்டுமல்ல, அதனோடு சம்பந்தப்படாதவர்களையும் எப்படி பாதிக்கச்செய்கிறது என்பதற்கு இந்த நாவல் நல்ல உதாரணம். 80களின் ஆரம்பத்தில் இந்தக்கதை பதிப்பாக்கம் செய்யப்பட்டதாய் நினைக்கிறேன். எழுதிய ஆண்டு எப்போது என்று தெரியவில்லை. ஆனால் நானறிந்தவரை இந்த நாவல் குறித்து எவரும் எந்தக்குறிப்பும் எழுதியதாய் காணோம்.

புலம்பெயர்வு வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல்கள் என்றவகையில், ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', 'கடலிற்கு அப்பால்', ஹெசிப்பா ஜேசுதாசனின் 'மா-னீ' போன்ற படைப்புக்களை விலக்கிவிட்டு புலம்பெயர்நாவல்களை பற்றி எந்தக்குறிப்புக்களும் எழுத முடியாது என்றே நினைக்கிறேன்.

பி.கு: தற்சமயம் இந்த நாவல்கள் எதுவும் என் வசம் இல்லாததால், ஞாபகத்தில் உள்ளதைக் கொண்டும், முன்பொருமுறை பதிவுகளில் ஒரு குறிப்பாய் உள்ளிட்டதையும் வைத்தும் இதை எழுதியிருக்கிறேன். பிழைகள் காண்பின் சுட்டிக்காட்டுவீராக!

3 comments:

Anonymous said...

பதிந்தது:Garunyan konfizius

பொ.கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம், வாழ்க்கை வசப்படும் மற்றும் பார்த்திபனின் ஆண்கள் விற்பனைக்கு, ஜெர்மனியிலிருந்தும் ; ஷோபா சக்தியின் கொறில்லா ·பிரன்ஸிலிருந்தும் வெளிவந்த முக்கியமான நாவல்கள். தவற விட்டு ட்டியே கண்ணா!

27.6.2005

6/27/2005 05:30:00 PM
இளங்கோ-டிசே said...

காருண்யன் நீங்கள் கூறுவது சரி. இந்தச் சிறுபதிவை ஆரம்பகால புலம்பெயர் நாவல்கள் என்றரீதியில்தான் எழுத முனைந்தேன். ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைத்தான் முதலாவது புலம்பெயர் நாவல் என்று கொள்கின்றனர் என்று நினைக்கின்றேன். தகவல் சரியா?

6/27/2005 11:54:00 PM
WordsBeyondBorders said...

புலன் பெயர் வாழ்வு என்பதை இந்தியா மாதிரி பல மொழி/பழக்கம் உள்ள நாட்டிற்குள்ளேயும் இருக்கும் என்று கொள்ளலாமா? அவ்வாறெனில் சுப்ரபாரதி மணியன் 'மற்றும் சிலர்' எழுதி உள்ளார். நெஞ்சில் நாடனின் மிதவை, சதுரங்க குதிரையும் இந்த வகையில் வரும்.
அஜய்

1/29/2011 01:57:00 AM